வேதாகமத்தை வாசி

ஆபகூக் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம்.
2கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டானது; கர்த்தாவே, வருடங்களின் நடுவிலே உம்முடைய செயலை உயிர்ப்பியும், வருடங்களின் நடுவிலே அதை விளங்கச்செய்யும்; கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.
3தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் மலையிலிருந்தும் வந்தார்; (சேலா.) அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.
4அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது.
5அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் அடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.
6அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்து அந்நிய மக்களைக் கரையச்செய்தார்; முந்தின மலைகள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.
7கூஷானின் கூடாரங்கள் வருத்தத்தில் அகப்பட்டிருக்கக்கண்டேன்; மீதியான் தேசத்தின் கூடாரங்கள் நடுங்கின.
8கர்த்தர் நதிகளின்மேல் கோபமாயிருந்தாரோ? தேவரீர் உம்முடைய குதிரைகளின்மேலும் காப்பாற்றுகிற உம்முடைய இரதங்களின்மேலும் ஏறிவருகிறபோது, உமது கோபம் நதிகளுக்கும் உமது சினம் சமுத்திரத்திற்கும் விரோதமாயிருந்ததோ?
9கோத்திரங்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த வாக்கின்படியே உம்முடைய வில் நாணேற்றப்பட்டதாக விளங்கினது; (சேலா.) நீரே பூமியைப் பிளந்து ஆறுகளை உண்டாக்கினீர்.
10மலைகள் உம்மைக்கண்டு நடுங்கின; தண்ணீர் திரண்டு கடந்துபோனது; கடல் இரைந்தது, அதின் கைகளை உயர எடுத்தது.
11சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் வெளிச்சத்திலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன.
12நீர் கோபத்துடன் பூமியில் நடந்தீர், உக்கிரத்துடன் மக்களைப் போரடித்தீர்.
13உமது மக்களின் பாதுகாப்பிற்காகவும் நீர் அபிஷேகம்செய்தவனின் பாதுகாப்பிற்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, தீயவனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; (சேலா)
14என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்; சிறுமையானவனை மறைவிடத்திலே அழிப்பது அவர்களுக்குச் சந்தோஷமாயிருந்தது; நீர் அவனுடைய ஈட்டிகளினாலேயே அவனுடைய கிராமத்து அதிபதிகளை உருவக் குத்தினீர்.
15திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்திற்குள் உமது குதிரைகளுடன் நடந்துபோனீர்.
16நான் கேட்டபோது என் குடல் குழம்பியது; அந்தச் சத்தத்திற்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் பெலவீனம் உண்டானது; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடு எதிர்க்கும் மக்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.
17அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் இல்லாமல் போனாலும், வயல்கள் தானியத்தை விளைவிக்காமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடுகள் இல்லாமற்போனாலும்
18நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
19ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான இடங்களில் என்னை நடக்கச்செய்வார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டப் பாடல்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.