| 1 | யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான். |
| 2 | யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரர்களுடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் மகன்களோடு இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான். |
| 3 | இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் மகன்கள் எல்லோரையும்விட அவனை அதிகமாக நேசித்து, அவனுக்குப் பலவர்ண அங்கியைச் செய்வித்தான். |
| 4 | அவனுடைய சகோதரர்கள் எல்லோரையும்விட அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாக நேசிக்கிறதை அவனுடைய சகோதரர்கள் கண்டபோது, அவனோடு ஆதரவாகப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள். |
| 5 | யோசேப்பு ஒரு கனவு கண்டு, அதைத் தன் சகோதரர்களுக்குத் தெரிவித்தான்; அதனால் அவனை இன்னும் அதிகமாகப் பகைத்தார்கள். |
| 6 | அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட கனவைக் கேளுங்கள்: |
| 7 | நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்களுடைய அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான். |
| 8 | அப்பொழுது அவனுடைய சகோதரர்கள் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் ஆளுகை செய்வாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவனுடைய கனவுகளினாலும், அவனுடைய வார்த்தைகளினாலும் இன்னும் அதிகமாகப் பகைத்தார்கள். |
| 9 | அவன் வேறொரு கனவு கண்டு, தன் சகோதரர்களை நோக்கி: நான் இன்னும் ஒரு கனவைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான். |
| 10 | இதை அவன் தன்னுடைய தகப்பனுக்கும், சகோதரர்களுக்கும் சொன்னபோது, அவனுடைய தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தக் கனவு என்ன? நானும் உன்னுடைய தாயாரும், சகோதரர்களும் தரைவரைக்கும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ என்று அவனைக் கடிந்துகொண்டான். |
| 11 | அவனுடைய சகோதரர்கள் அவன்மேல் பொறாமைகொண்டார்கள்; அவனுடைய தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான். |
| 12 | பின்பு, அவனுடைய சகோதரர்கள் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள். |
| 13 | அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர்கள் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்திற்கு அனுப்பப் போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான். |
| 14 | அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான். |
| 15 | அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே அலைந்து திரிவதைக் கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான். |
| 16 | அதற்கு அவன்: என் சகோதரர்களைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான். |
| 17 | அந்த மனிதன்: அவர்கள் இந்த இடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்வதைக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரர்களைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான். |
| 18 | அவன் தூரத்தில் வருவதை அவர்கள் கண்டு, அவன் தங்களுக்கு அருகில் வருவதற்குமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைசெய்து |
| 19 | ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, கனவுகாண்கிறவன் வருகிறான் |
| 20 | நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு கொடியமிருகம் அவனைக் கொன்றது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய கனவுகள் எப்படி நிறைவேறுமென்று பார்ப்போம் என்றார்கள். |
| 21 | ரூபன் அதைக்கேட்டு, அவனை அவர்களுடைய கைக்குத் தப்புவித்து, அவனை அவனுடைய தகப்பனிடத்திற்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாகி |
| 22 | அவர்களை நோக்கி: அவனைக் கொல்லவேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தக்கூடாது; நீங்கள் அவன்மேல் கைகளை வைக்காமல், அவனை வனாந்திரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இந்த விதமாக ரூபன் அவனை அவர்களிடமிருந்து தப்புவித்தான். |
| 23 | யோசேப்பு தன் சகோதரர்களிடத்தில் சேர்ந்தபோது யோசேப்பு அணிந்துகொண்டிருந்த பலவர்ண அங்கியை அவர்கள் கழற்றி |
| 24 | அவனைத் தூக்கி, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது. |
| 25 | பின்பு, அவர்கள் சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்திற்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள். |
| 26 | அப்பொழுது யூதா தன் சகோதரர்களை நோக்கி: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவனுடைய இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன? |
| 27 | அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாமலிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய சரீரமாக இருக்கிறானே என்றான். அவனுடைய சகோதரர்கள் அவன் சொல்லுக்கு சம்மதித்தார்கள். |
| 28 | அந்த வியாபாரிகளான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள். |
| 29 | பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்திற்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு |
| 30 | தன் சகோதரரிடத்திற்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான். |
| 31 | அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே நனைத்து |
| 32 | அதைத் தங்கள் தகப்பனிடத்திற்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய மகனின் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள். |
| 33 | யாக்கோபு அதைக் கண்டு, இது என் மகனுடைய அங்கிதான், ஒரு கொடியமிருகம் அவனைக் கொன்றுபோட்டது, யோசேப்பு கிழிக்கப்பட்டுப் போனான் என்று புலம்பி |
| 34 | தன் ஆடைகளைக் கிழித்து, தன் இடுப்பில் சணல் ஆடையைக் கட்டிக்கொண்டு, அநேகநாட்கள் தன் மகனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். |
| 35 | அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடம்கொடாமல், நான் துக்கத்தோடு என் மகனிடத்திற்கு பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இந்த விதமாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான். |
| 36 | அந்த மீதியானியர்கள் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் அதிகாரியும் மெய்க்காப்பாளர்களுக்கு தலைவனுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள். |