| 1 | ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்சவரலாறு: |
| 2 | ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் மகளாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமாகிய அகோலிபாமாளையும் |
| 3 | இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் திருமணம் செய்திருந்தான். |
| 4 | ஆதாள் ஏசாவுக்கு எலிப்பாசைப் பெற்றெடுத்தாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றெடுத்தாள். |
| 5 | அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றெடுத்தாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான் தேசத்திலே பிறந்த மகன்கள். |
| 6 | ஏசா தன்னுடைய மனைவிகளையும், மகன்களையும், மகள்களையும், வீட்டிலுள்ள அனைவரையும், ஆடுமாடுகளையும், மற்ற உயிரினங்கள் அனைத்தையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த சொத்து முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபைவிட்டுப் பிரிந்து வேறு தேசத்திற்குப் போனான். |
| 7 | அவர்களுடைய சம்பத்து அதிகமாக இருந்ததால் அவர்கள் ஒன்றாக இணைந்து குடியிருக்க முடியாமற்போனது; அவர்களுடைய மந்தைகளின் காரணமாக அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்க முடியாததாயிருந்தது. |
| 8 | ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பெயர். |
| 9 | சேயீர்மலையில் இருக்கிற ஏதோமியர்களுடைய தகப்பனாகிய ஏசாவின் சந்ததிகளும் |
| 10 | ஏசாவின் மகன்களுடைய பெயர்களாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய மகனுக்கு எலிப்பாஸ் என்று பெயர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய மகனுக்கு ரெகுவேல் என்று பெயர். |
| 11 | எலிப்பாசின் மகன்கள் தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள். |
| 12 | திம்னாள் ஏசாவின் மகனாகிய எலிப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றெடுத்தாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய மகன்கள். |
| 13 | ரெகுவேலுடைய மகன்கள், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகன்கள். |
| 14 | சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் மகன்களையும் ஏசாவுக்குப் பெற்றெடுத்தாள். |
| 15 | ஏசாவின் மகன்களில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்த மகனாகிய எலிப்பாசுடைய மகன்களில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு |
| 16 | கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் எலிப்பாசின் சந்ததியும் ஆதாளின் மகன்களுமாயிருந்த பிரபுக்கள். |
| 17 | ஏசாவின் மகனாகிய ரெகுவேலின் மகன்களில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகன்களுமாயிருந்த பிரபுக்கள். |
| 18 | ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் மகன்கள் எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் மகளும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள். |
| 19 | இவர்களே ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி; இவர்களே அவர்களிலிருந்த பிரபுக்கள். |
| 20 | அந்த தேசத்தின் குடிகளாகிய ஓரியனான சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு |
| 21 | திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் மகன்களுமாகிய ஓரியர்களுடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள். |
| 22 | லோத்தானுடைய மகன்கள் ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள். |
| 23 | சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள். |
| 24 | சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்திரத்திலே தன் தகப்பனாகிய சீபெயோனின் கழுதைகளை மேய்க்கும்போது, கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்த ஆனாகு இவன்தான். |
| 25 | ஆனாகின் பிள்ளைகள் திஷோன், அகோலிபாமாள் என்பவர்கள்; இந்த அகோலிபாமாள் ஆனாகின் மகள். |
| 26 | திஷோனுடைய மகன்கள் எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள். |
| 27 | ஏத்சேருடைய மகன்கள் பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள். |
| 28 | திஷானுடைய மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள். |
| 29 | ஓரியரின் சந்ததியில் தோன்றிய பிரபுக்கள் லோத்தான் பிரபு, சோபால் பிரபு, சிபியோன் பிரபு, ஆனாகு பிரபு |
| 30 | திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள். |
| 31 | இஸ்ரவேல் வம்சத்தார்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களாவன: |
| 32 | பேயோருடைய மகனாகிய பேலா ஏதோமிலே ஆட்சிசெய்தான்; அவனுடைய பட்டணத்திற்குத் தின்காபா என்று பெயர். |
| 33 | பேலா இறந்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய மகனாகிய யோபாப் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். |
| 34 | யோபாப் இறந்தபின், தேமானிய தேசத்தானாகிய ஊஷாம் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். |
| 35 | ஊஷாம் இறந்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியர்களை முறியடித்த பேதாதின் மகனாகிய ஆதாத் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்திற்கு ஆவீத் என்று பெயர். |
| 36 | ஆதாத் இறந்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான். |
| 37 | சம்லா இறந்தபின், அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். |
| 38 | சவுல் இறந்தபின், அக்போருடைய மகனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். |
| 39 | அக்போருடைய மகனாகிய பாகால்கானான் இறந்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். அவனுடைய பட்டணத்திற்குப் பாகு என்று பெயர்; அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய மகளும் மேசகாவின் மகளுமாக இருந்தாள். |
| 40 | தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும், குடியிருப்புகளின்படியேயும், பெயர்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய பெயர்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, ஏதேத் பிரபு |
| 41 | அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு |
| 42 | கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு |
| 43 | மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா. |