| 1 | அக்காலத்திலே யூதா தன் சகோதரர்களை விட்டு, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச் சேர்ந்தான். |
| 2 | அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய மகளைக் கண்டு, அவளைத் திருமணம்செய்து, அவளோடு உறவுகொண்டான். |
| 3 | அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; அவனுக்கு ஏர் என்று பெயரிட்டான். |
| 4 | அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பெயரிட்டாள். |
| 5 | அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு சேலா என்று பெயரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான். |
| 6 | யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைத்தான். |
| 7 | யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாக இருந்ததால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார். |
| 8 | அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் அண்ணன் மனைவியைச் சேர்ந்து, அவளுக்கு மைத்துனனுக்குரிய கடமையைச் செய்து, உன் அண்ணனுக்கு சந்ததியை உண்டாக்கு என்றான். |
| 9 | அந்த சந்ததி தன் சந்ததியாக இருக்காதென்று ஓனான் அறிந்ததால், அவன் தன் அண்ணனுடைய மனைவியைச் சேரும்போது, தன் அண்ணனுக்கு சந்ததி உண்டாகாதபடித் தன் விந்தைத் தரையிலே விழவிட்டான். |
| 10 | அவன் செய்தது கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாததாக இருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார். |
| 11 | அப்பொழுது யூதா, தன் மகனாகிய சேலாவும் அவனுடைய சகோதரர்கள் இறந்ததுபோல இறப்பான் என்று பயந்து, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் மகனாகிய சேலா பெரியவனாகும்வரைக்கும், நீ உன் தகப்பன் வீட்டில் விதவையாகத் தங்கியிரு என்று சொன்னான்; அதன்படியே தாமார் போய்த் தன் தகப்பனுடைய வீட்டிலே தங்கியிருந்தாள். |
| 12 | அநேகநாட்கள் சென்றபின், சூவாவின் மகளாகிய யூதாவின் மனைவி இறந்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க் கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான். |
| 13 | அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்குத் தெரிவிக்கப்பட்டது. |
| 14 | சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டதால், தன் விதவைக்குரிய ஆடைகளை மாற்றி, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். |
| 15 | யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்ததால், அவள் ஒரு விலைமாது என்று நினைத்து |
| 16 | அந்த வழியாக அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேர வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேருவதற்கு, எனக்கு என்ன தருவீர் என்றாள். |
| 17 | அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்பும்வரைக்கும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். |
| 18 | அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும், அதனுடைய கயிறும், உம்முடைய கைத்தடியையும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி |
| 19 | எழுந்துபோய், தன் முக்காட்டை மாற்றி, தன் விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டாள். |
| 20 | யூதா அந்த பெண்ணிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டுவர அதுல்லாம் ஊரானாகிய தன் நண்பனிடம் ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல் |
| 21 | அந்த இடத்தின் மனிதர்களை நோக்கி: வழியிலே நீரூற்றுகள் அருகே இருந்த விலைமாது எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே விலைமாது இல்லை என்றார்கள். |
| 22 | அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணவில்லை, அங்கே விலைமாது இல்லையென்று அந்த இடத்து மனிதர்களும் சொல்லுகிறார்கள் என்றான். |
| 23 | அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு வெட்கம் உண்டாகாதபடி, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான். |
| 24 | ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்செய்தாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான். |
| 25 | அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்திற்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும், கயிறும், இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். |
| 26 | யூதா அவைகளை அடையாளம்கண்டு: என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் மகனாகிய சேலாவுக்குக் கொடுக்காமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. |
| 27 | அவளுக்குப் பிரசவநேரம் வந்தபோது, அவளுடைய கர்ப்பத்தில் இரட்டைப்பிள்ளைகள் இருந்தன. |
| 28 | அவள் பிரசவிக்கும்போது, ஒரு குழந்தை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதன் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள். |
| 29 | அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்தது என்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதனால் அவனுக்குப் பாரேஸ் என்று பெயரிடப்பட்டது. |
| 30 | பின்பு கையில் சிவப்புநூல் கட்டப்பட்டிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பெயரிடப்பட்டது. |