“ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை." (ரோமர் 8:1).
“இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது”. இந்த அற்புதமான ரோமர் நிருபத்தின் முதல் பாதியின் முடிவாக வருகிறது. அதனால்தான் இந்த அதிகாரம் “ஆனபடியால்” என்ற வார்த்தையுடன் தொடங்குகிறது. இதை இரண்டு விதங்களில் காணலாம். முதலில் இந்த வசனம் ரோமர் 3:21–ம் வசனத்தில் இருந்து சொல்லப்படும் அனைத்துடனும் தொடர்பு உடையதாய் இருக்கிறது. முந்தைய பகுதியில் இருந்து பெறப்பட்ட அனுமானம் இங்கே தரப்பட்டுள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல் ஆரம்பித்த வாதத்தின் முடிவாகவே இந்த அனுமானம் வருகிறது. ஏனெனில் இந்தப் பகுதி முழுவதிலும் உள்ள வாதத்தின் துவக்கத்திலிருந்தே அவர் இந்த முடிவை நோக்கி தனது வாதத்தைக் கட்டமைத்தார். கிறிஸ்து இயேசு “தம்முடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக” ஏற்படுத்தப்பட்டதாலும் (ரோமர் 3:26), “அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும்” இருப்பதாலும் (ரோமர் 4:25), ஒருவருடைய (கிறிஸ்து) கீழ்ப்படிதலினாலே அநேகர் (எல்லாக் காலத்து விசுவாசிகளும் சட்டப்பூர்வமாக) நீதிமான்களாக்கப்படுவதாலும் (ரோமர் 5:19), விசுவாசிகள் (சட்டப்படி) பாவத்துக்கு மரித்ததாலும் (ரோமர் 6:2), அவர்கள் நியாயப்பிரமாணத்தின் ஆக்கினைத்தீர்ப்பின் வல்லமைக்கு மரித்தவர்கள் ஆனதாலும் (ரோமர் 7:4) “இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது”.
“ஆனபடியால்" என்ற வார்த்தை முந்தைய வாதங்களுக்கு ஒரு முடிவு என்று மட்டும் பார்க்காமல், இது முந்தைய அதிகாரத்தின் கடைசிப் பகுதியுடன் தொடர்புடையது என்பதையும் நம் கவனித்தில் கொள்ள வேண்டியது. ரோமர் 7-ம் அதிகாரத்தின் இரண்டாம் பாகத்தில், மறுபிறப்பு அடைந்த ஒரு நபருக்குள் எதிர்மறையான சுபாவங்களால் வரும்; வலிமிகுந்த மற்றும் இடைவிடாத போராட்டத்தை அப்போஸ்தலன் தனது சொந்த கிறிஸ்தவ அனுபவத்தைப் பயன்படுத்தி விவரிக்கிறார். ஒரு தேறிய குருவின் பேனா முனை கொண்டு தன்னையே சித்திரத்தில் சேர்த்த பவுல் தேவனுடைய பிள்ளை எதிர்கொள்ளும் ஆவிக்குரிய போராட்டங்களை விவரித்த அவர், இப்போது அத்தகைய வேதனையான மற்றும் பரிதாபகரமான நிலைக்குத் தேவைப்படும் தெய்வீக தயவின் மீது தனது கவனத்தைத் திருப்புகிறார். ரோமர் 7–ம் அதிகாரம் புலம்பலுடன் முடித்து, 8–ம் அதிகாரம் வெற்றி தொனியுடன் தொடங்குவது ஆச்சரியமாகவும் வியப்பாகவும் தோன்றலாம், ஆனால் அது தர்க்கரீதியான மற்றும் இயல்பான ஒன்று தான். ஒருவேளை விசுவாசிகள் பாவத்தின் மரணத்துடன் போராடுவதும் அதன் விளைவுகளால் புலம்புவதும் உண்மையாக இருந்தால், அவர்கள் சாபத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் விடுதலை அடைந்து வெற்றியின் மகிழ்ச்சி காண்கிறார்கள் என்பதும் உண்மை. இந்த இரண்டு வெவ்வேறு அனுபவங்களை நாம் இங்கு விளக்குவதைக் காணலாம். 7–ம் அதிகராத்தின் இரண்டாவது பாதியில், இந்த உலகில் தங்கள் வாழ்நாள் முழுவதும் விசுவாசிகள் மீது பாவத்தின் விளைவை குறித்து அப்போஸ்தலன் விவரிக்கிறார். ஆனால் 8–ம் அதிகராத்தின் தொடக்க வசனத்தில், கிறிஸ்துவுடன் ஐக்கியப்பட்டபோது பாவ தோஷத்திலிருந்து அவர்கள் பெறும் முழுமையான விடுதலையைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். எனவே 7:24-ல் அப்போஸ்தலன் கேட்கிறார், “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” ஆனால் 8:2-ல் "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." என்று அப்போஸ்தலானகிய பவுல் அறிவிக்கிறார்.
அதனால் இப்போது ஆக்கினைத் தீர்ப்புமில்லை. இங்கே (1 யோவான் 3:21ல் வருவது போல) நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்கிறதைப்பற்றிய கேள்வி இல்லை. அல்லது நம்மில் தண்டனைக்குரியது எதுவுமில்லை என்றும் நாம் உணர்வதையும் இங்கே குறிப்பிடவில்லை. மாறாக தங்கள் இரட்சிப்பிற்காகக் கிறிஸ்துவில் விசுவாசமுள்ளவர்களை தேவன் தண்டிக்க மாட்டார் என்ற ஆசீர்வதிக்கப்பட்ட சத்தியத்தை இது வெளிப்படுத்துகிறது. நாம் நமது அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கும் சத்தியத்திற்கும் புறநிலையில் உள்ள உண்மையான சத்தியத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வது மிக அவசியம். இல்லையெனில், இப்போது நமக்கு முன் உள்ள வசனம் தருகிற ஆதரவையும், சமாதானத்தையும் பெறத் தவறி விடுவோம். “கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை". இது கிறிஸ்து இயேசுவில் தேவனுக்கு முன்பாக இருக்கும் ஒரு விசுவாசியின் ஸ்தானத்தை இது குறிக்கிறது. இது அவரது மாம்சீகத்தின் நிலையைக் குறிக்கவில்லை. ஆதாமில் நான் தண்டனைக்கு உள்ளானேன் (ரோமர் 5:21). ஆனால் கிறிஸ்துவில் நான் எப்போதும் எல்லா ஆக்கினைகளிலிருந்தும் முற்றிலும் விடுவிக்கப்பட்டேன்.
“ஆனபடியால் இப்போது எந்தவித ஆக்கினைத் தீர்ப்பில்லை" “இப்போது" என்ற வார்த்தை, கிறிஸ்தவர்கள் ஒரு காலத்தில், அவர்கள் விசுவாசிகளாக மாறுவதற்கு முன்பு, ஆக்கினைத் தீர்ப்புக்குக் கீழாக இருந்ததைக் குறிக்கிறது. இது அவர்கள் கிறிஸ்துவுடன் மரிப்பதற்கு முன்னாக (கலாத்தியர் 2:20) இருந்த நிலையைக் குறிக்கிறது. கிறிஸ்துவின் மரணத்திற்குள்ளாகும்போது அவர்கள் சட்டப்பூர்வமான நீதியுள்ள பிரமாணத்தின் தண்டனைக்கு மரித்தார்கள். எனவே இந்த “இப்பொழுது” என்கிற பதம் அவர்களுடைய இரண்டு நிலைகளை அல்லது சூழல்களைக் காண்பிக்கிறது. சுபாவத்தின்படி நாம் பிரமாணத்தின் தண்டனைக்கு உட்பட்டவர்களாய் இருந்தோம், இப்போது கிருபைக்குக் கீழ்ப்பட்டவர்களாய் இருக்கிறோம். (ரோமர் 6:14). சுபாவத்தினாலே நாம் “மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்” (எபேசியர் 2:3). ஆனால் இப்போது தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, அவருக்குச் சொந்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டோம் (எபேசியர் 1:6). முதல் உடன்படிக்கையின்படி நாம் ஆதாமுக்குள் இருந்தோம் (1 கொரிந்தியர் 15:22). ஆனால் இப்போது நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம் (ரோமர் 8:1). கிறிஸ்துவின் விசுவாசிகளான நம் அனைவருக்கும் நித்திய ஜீவன் உள்ளது. மேலும் இந்தக் காரணத்தினால் நாம் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவதில்லை (யோவான் 5:24).
“தண்டனை" என்பது ஒரு தீவிரமான விடயம். அதை எந்த அளவு புரிந்து கொள்கிறோமோ அவ்வளவு சிறப்பாய் அதன் வல்லமையில் இருந்து நம்மை விடுவித்த ஆச்சரியமான கிருபையை நாம் மெச்சிக்கொள்வோம். மனித நீதிமன்ற வளாகங்களில் ‘ஆக்கினைத்தீர்ப்பு’ என்ற வார்த்தை ஒரு குற்றவாளியின் மீது பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, பார்ப்பவர்களுக்கு அது துக்கத்தையும், பயத்தையும் உண்டாக்குகிறது. ஆனால் தேவனுடைய நியாயசனத்தில் அந்த வார்த்தை விவரிக்க முடியாத அளவிற்கு தீவரமானதும் பிரமிக்கத்தக்குதுமாக இருக்கும். அந்த நியாயசனத்திற்கு முன் விழுந்துபோன ஆதாமின் சந்ததியினர் அனைவரும் நிற்க வேண்டும். அனைவரும் “பாவத்தில் கருத்தரிக்கப்பட்டு” பாவத்தில் உருவானவர்களாக, குற்றவாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, அவமதிப்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, பாவத்தால் சிறைபிடிக்கப்பட்ட கைதிகளாக இந்த உலகில் பிரவேசிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க ஒரே வழி பயங்கரமான தண்டனையை ஏற்படுத்திய பாவத்தைத் தவிர்ப்பதுதான். குற்றம் ஒழிக்கப்படட்டும், அதற்குப் பின்னர் தண்டனைத் தீர்ப்பு இல்லை.
ஆனால் பாவம் நீக்கப்பட்டதா? அதாவது விசுவாசிக்கும் பாவியிடம் இருந்து பாவம் நீங்கிவிடப்பட்டது என்று அர்த்தம் கொள்கிறோமா? இதற்கான பதிலை வேதவசனங்களே நமக்குத் தரட்டும்: “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்." (சங்கீதம் 103:12). “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்" (ஏசாயா 43:25). “இதோ, என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்” (ஏசாயா 38:17). “அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்” (எபிசியர் 10:17).
ஆனால் பாவம் எப்படி நீக்கப்படுகிறது? பாவத்தை இடமாற்றம் செய்யப்படுவதன் மூலம் மட்டுமே சாத்தியம். தேவனின் பரிசுத்தம் பாவத்தை புறக்கணிக்க முடியாது, ஆனால் அவருடைய கிருபை அவ்வாறு செய்து, பாவத்தை இடமாற்றம் செய்தது. விசுவாசிகளின் பாவங்கள் கிறிஸ்துவின் மீது சுமத்தப்பட்டது. “கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்." (ஏசாயா 53:6). “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை (கிறிஸ்துவை) நமக்காகப் பாவமாக்கினார்." (2 கொரிந்தியர் 5:21).
எனவே, இப்போது ஆக்கினைத் தீர்ப்பில்லை. இங்கே ‘இல்லை’ என்ற வார்த்தை வலியுறுத்திச் சொல்லப்பட்டது. அதற்கு மேல் ஆக்கினைத் தீர்ப்பில்லை என்பது உறுதியானது. நியாயப்பிரமாண சட்டத்திலிருந்தோ, உள்ளார்ந்த அக்கிரமத்திலிருந்தோ, சாத்தானின் குற்றச்சாட்டிலிருந்தோ அல்லது வேறு எந்த காரணத்திலிருந்தோ இனி ஒருபோதும் இருந்ததில்லை, இருக்கப்போவதுமில்லை. ஏனெனில் இனி ஆக்கினை தீர்ப்பில்லை. “இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோமர் 8:33) இனி எந்த தண்டனையும் இல்லை; கர்த்தரால் விடுவிக்கப்பட்டதால் “எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.” (ரோமர் 4:8) இதற்கு மேல் எந்தக் கண்டனமும் இருக்க முடியாது.
“ஆகையால் இப்போது கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை". ஒரு விசுவாசி தனது பழைய சுபாவத்துக்கும் மற்றும் புதிய சுபாவத்துக்கும் இடையே உள்ள போராட்டத்தை விவரிக்கும் போது, முந்தைய அதிகாரத்தில் தனது சொந்த அனுபவத்தால் எடுத்துக்காட்டப்பட்டபடி, அவர் கிருபையில் வளர்ந்திருந்தாலும், அத்தகைய ஆவிக்குரியப் போராட்டத்திலிருந்து யாருக்கும் விதிவிலக்கல்ல என்பதை அப்போஸ்தலன் தெளிவுபடுத்துகிறார். ஆனால் ரோமர் 8:1 –ம் வசனத்தில் ‘எனக்கு’ என்ற ஒருமைப் பயன்பாட்டிற்குப் பதிலாக அப்போஸ்தலன் அந்த விளக்கம் முழுவதும் பன்மையாகப் பயன்படுத்துகிறார் என்பது கவனிக்கத்தக்கது. அதாவது “கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிற எனக்கு" என்று சொல்லாமல் "கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறவர்களுக்கு" என்று சொல்லுகிறார். இப்படி எழுதுவது கூட பரிசுத்த ஆவியின் கிருபையே. அப்போஸ்தலனாகிய பவுல் இங்கும் ஒருமையான வார்த்தையை பயன்படுத்தி இருந்தால், பவுலைப் போன்ற மாபெரும் தேவ மனிதருக்கு மட்டுமே இவ்வளவு பெரிய ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும், அது நமக்குப் பொருந்தாது என்றும் நினைக்க வாய்ப்பு இருந்திருக்கும். அதனால் தான், இந்த மாபெரும் ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் என்பதை தெளிவுபடுத்துவதற்காக, பரிசுத்த ஆவியானவர் பவுலை இங்கு பன்மையான வார்த்தையை பயன்படுத்துவதற்கு தூண்டுதல் செய்தார்.
“ஆகையால் இப்போது கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை". “கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பது” என்பது, தேவனின் அனைத்து நீதியான பார்வையிலும் நடவடிக்கைகளிலும் நாம் விசுவாசத்தினால் கிறிஸ்துவுடனேகூட ஒன்றாக அடையாளப்படுத்தப்படுகிறோம் என்று பொருளாகும். தண்டனைத் தீர்ப்பில் இருந்து விடுதலையைப் பெறுவது நமது நடக்கையில் எவ்வளவு சார்ந்து இருக்கவில்லை, மாறாக கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பதையே சார்ந்துள்ளது. “கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கிறவன், பேழைக்குள் நோவாவைப் போல, பாதுகாப்பாக இருப்பான். மேலே கருத்த மேகத்தில் மழை பொழிந்தாலும், தண்ணீரால் பேழை தத்தளித்தாலும் அவன் பேழைக்குள் ஒரு துளி தண்ணீர் கூட நுழையாமல், புறம்பே கொந்தளிக்கும் புயலால் அவனுடைய ஆவியின் சமாதானத்தைக் குலைப்பதில்லை. ஈசாக்கு யாக்கோபை முத்தமிட்டு ஆசீர்வதித்தபோது அவன் தன் மூத்த சகோதரனுடைய உடையை அணிந்து கொண்டு இருந்ததுபோல விசுவாசியும் கிறிஸ்துவில் இருக்கிறான். இரத்தப்பழி வாங்குகிறவன் அடைக்கலப்பட்டணத்தில் இருக்கும் கொலைகாரனைப் பின்தொடர்ந்து அவனைக் கொல்லக்கூடாதபடி இருப்பதுபோல கிறிஸ்துவில் இருக்கும் விசுவாசியும் இருக்கிறார்” (மறைதிரு. வின்ஸ்லோ, 1857). ஆம், அவன் கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறான் என்பதால், இனி அவனுக்குத் தண்டனைத் தீர்ப்பு இல்லை. அல்லேலூயா!