“அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." (ரோமர் 8:28).
பல நூற்றாண்டுகளாக தேவனை நேசிக்கின்ற அனைவரும் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தையால் ஆறுதல் அடைந்து பலப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களுடைய உபத்திரவத்திலும், சோதனைகளிலும் மற்றும் குழப்பங்களிலும், இந்த வசனம் அவர்களின் காலடியில் பலமான பாறையைப் போல இருந்திருக்கிறது. வெளிப்புறச் சூழ்நிலைகள் அவர்களுக்கு எதிராகத் தோன்றினாலும், அவர்களின் இயல்பான சிந்தனை எல்லாமே அவர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகத் தோன்றினாலும், அவர்களுடைய விசுவாசம் அதற்கு எதிராக செயல்பட்டது. மேலும், இந்த தெய்வீக வாக்குத்தத்தத்தில் நம்பிக்கை வைக்கத் தவறியவர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி தேவையற்ற பயத்துக்கு ஆளானார்கள்.
“சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது." இங்கே முதலில் நம்முடைய சிந்தனைக்கு வருவது சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக நடப்பிக்கும் தேவன் எவ்வளவு பெரியவர் என்பதுதான்! இடைவிடாமல் செயல்படும் அக்கிரமம் எவ்வளவு பயங்கரமானது? இந்த படைப்பில் எண்ணிலடங்காத உயிரினங்கள் எத்தனை உள்ளன? தடைகளை ஏற்படுத்தும் சுயநல ஆசைகள் எவ்வளவு அதிகமாக உள்ளன? தேவனோடு போரிடும் எதிரிகளின் எண்ணிக்கை எத்தனை? தேவனின் செயல்களைத் தொடர்ந்து எதிர்க்கும் எத்தனையோ வான மண்டல சேனைகள் உள்ளன. ஆயினும், எல்லாவற்றின் மீதும் சர்வ வல்லமை கொண்ட தேவன், எல்லா சூழ்நிலைகளிலும் அசைக்க முடியாதவராகவும் ஆளுகை உடையவராகவும் இருக்கிறார். அவருடைய மகிமையான சிங்காசனத்திலிருந்து எல்லாவற்றையும் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே செய்கிறார் (எபேசியர் 1:11). இந்த தேவனுக்கு முன்பாக பயபக்தியுடன் நிற்போம். ஏனெனில் "சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள்” (ஏசாயா 40:17). நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் முன்பாக பயபக்தியுடன் வணங்குவோம் (ஏசாயா 57:15). உங்கள் சத்தத்தை உயர்த்தி அவருக்குத் துதியைச் செலுத்துங்கள். ஏனெனில் நேரடியான தீமையில் இருந்தும் அவர் மிகப்பெரிய நன்மையை வெளிக்கொண்டு வர வல்லவர்.
“சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது." படைப்பில் வெற்றிடம் என்று எதுவும் இல்லை. மேலும் படைக்கப்பட்ட விஷயங்கள் கூட அவற்றுக்காக நியமிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதில் தோல்வி அடைவதில்லை. எதுவும் வெறுமையாய் இருப்பதில்லை. ஒவ்வொன்றும் அதற்கு நியமிக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற தேவனால் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொன்றும் அதன் படைப்பாளியான தேவனின் பார்வைக்கு விருப்பமான ஒரு முடிவை நோக்கி நிரந்தரமாக உழைக்கின்றன. அவருடைய கட்டளையின் படியே அனைத்தும் நடக்கின்றன,
“சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது.” அவை அவ்வாறு நடப்பது மட்டுமல்ல, அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. அனைவரும் நேர்த்தியாய் ஒருங்கிணைந்து செயல்படுவதால், அவைகளில் இருக்கும் அழுத்தங்களை அபிஷேகம்பெற்ற காதுகளால் மட்டுமே பிரித்தறிய முடியும். எல்லாம் நன்மைக்கு ஏதுவாக நடப்பது என்பது வெறுமனே அல்ல, அவை துணைக் காரணிகளாகவும் பரஸ்பர சகாயகர்களாகவும் இணைந்தே அனைத்தும் ஒன்றாக வேலை செய்கின்றன. அதனால் தான் துன்பங்கள் அரிதாகவே தனியாக வரும். மேகத்திற்கு மேல் மேகம், புயலுக்கு மேல் புயல் என அவை எழும்புகின்றன. யோபுவுக்கு நடந்தது போலவே, துர் செய்திகளைத் தொடர்ந்து மிகவும் வேதனையான கெட்ட செய்திகள் வரும். ஆயினும் இங்கேயும் விசுவாசம் தேவனுடைய ஞானத்தையும் அவருடைய அன்பையும் கண்டறியத் துடிக்கும். ஒரு உணவின் மதிப்பு அதில் சேர்க்கப்படும் பொருட்களின் கலவையால் தீர்மானிக்கப்படுகிறது. தேவனின் செயல்கள் இவ்விதமாகவே இருக்கும். அவரது திட்டத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் வெறுமனே நடக்கவில்லை, ஒன்றாக நடக்கும். இதை உணர்ந்த இஸ்ரேலின் மெல்லிசைப் பாடகர், “உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்” (சங்கீதம் 18:16) என்று தேவனைப் புகழ்கிறார்.
“சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது.” விசுவாசிகள் எத்தனை அல்லது எப்பேர்ப்பட்ட துன்பங்களில் இருந்தாலும், அவை எல்லாம் அவர்களின் நன்மைக்காக பணி செய்கின்றன என்றும், அவைகள் நாம் பரலோகத்தில் நித்திய சுதந்தரத்தைப் பெறுவதற்கு ஏதுவாகப் பங்களிப்பு செய்கின்றன என்றும் இந்த வசனங்கள் நமக்கு கற்பிக்கின்றன. மிகவும் ஆபத்தான காரியங்களில் இருந்தும் மிகப் பெரிய நன்மையை நமக்குக் கொண்டு வரும் தேவனின் ஏற்பாடு எவ்வளவு அற்புதமானது என்று பாருங்கள்! வானத்தின் கோள்களை தங்களின் சுற்றுவட்டப்பாதையில் கட்டுப்படுத்தும் அவருடைய மாபெரும் சக்தியைக் கண்டு நாம் வியப்படையலாம். தொடர்ந்து வரும் பருவங்களும், பூமி புதுப்பிக்கப்படுகிறதும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. ஆனால் இவைகளிலும் மேலான ஆச்சரியம் என்னவென்றால் மனித வாழ்வின் குழப்பமான நிகழ்வுகளின் தீமையினின்று நன்மையை வெளிக்கொண்டு வந்து, சாத்தானின் வல்லமை, வெறுப்பு மற்றும் அவனது அழிக்கும் சூழ்ச்சிகளிலிருந்து அவருடைய பிள்ளைகளுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் செயல் தான் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும்.
“சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது” இவ்விதமாக நடப்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவதாக, படைப்பில் உள்ள அனைத்தும் அதன் நிர்வாகியின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால், இரண்டாவதாக, தேவன் நம்முடைய நன்மையை நாடுவதால், மேலும் நமது நன்மையை மட்டுமே நாடுவதால், மூன்றாவதாக, சாத்தான் தேவனின் அனுமதியின்றி நம்முடைய தலையில் ஒரு முடியை கூட தொட முடியாது; ஒருவேளை அது சாத்தனுக்கு தேவன் அனுமதித்தால் அதையும் நம் நன்மைக்காகவே அவர் அனுமதித்திருப்பார், அவை அனைத்தும் இயல்பாகவே நல்லவை அல்ல, ஆனால் அவை அனைத்தையும் நம் நன்மைக்கு ஏதுவாக தேவன் மாற்றுகிறார். நம்முடைய வாழ்வில் எதுவும் நோக்கம் இல்லாமல் நடப்பதில்லை, ஓவ்வொன்றும் நமது நன்மைக்காக தேவனின் நோக்கத்தின்படியே நடக்கின்றன. அனைத்தும் தேவனின் நித்திய நோக்கத்திற்கான ஒரு வழிமுறையாகும், மேலும் அவை தேவனுடைய குமாரனின் சாயலுக்குள் நாம் வருவதற்கென குறிக்கப்பட்ட ஆசீர்வாதம் தான், நம்முடைய பரலோக பிதா தாம் தெரிந்துக்கொண்டவர்களின் நன்மைக்காக கிறிஸ்துவின் துன்பம், இழப்பு மற்றும் பாடுகள் அனைத்தையும் பயன்படுத்துகிறார்.
“தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு" இது ஒரு உண்மையான கிறிஸ்தவனின் தனித்துவமான அடையாளம். அதற்கு எதிரிடையான அடையாளம் மறுபிறப்பு அடையாதவரின் வாழ்க்கை. ஆனால் எல்லா பரிசுத்தவான்களும் தேவனை நேசிப்பார்கள். அவர்களின் விசுவாச அறிக்கைகளில் சிறிய வேறுபாடுகள் இருக்கலாம். அவர்களின் திருச்சபைகளின் ஒழுங்கு முறைகளில் சில வேறுபாடுகள் இருக்கலாம், அவர்களின் ஆவிக்குரிய நலன்கள் சமமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த ஒரு விஷயத்தில் அவர்கள் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்கள் மற்றும் அவர்கள் தேவனை நேசிக்கிறார்கள். நமக்கு மீட்பரை ஈவாக கொடுத்தமைக்காக அவர்கள் தேவனை நேசிக்கிறார்கள். தேவன் தங்களைப் பாதுகாக்கும் பிதாவாக உரிமையுடன் நேசிக்கிறார்கள். அவருடைய மகத்துவத்தினாலும், பரிசுத்தத்தினாலும், ஞானத்தினாலும், விசுவாசத்தினாலும் அவர்கள் அவரை நேசிக்கிறார்கள். இவர்களை அவர் நடத்தும் விதத்திற்காக அவரை நேசிக்கிறார்கள். அவர் எதைக் கொடுக்கிறார், எதைக் கொடுக்க மறுக்கிறார், எதை அங்கீகரிக்கிறார், எதைக் கண்டிக்கிறார் என்பதைப் பொறுத்து அவர்கள் அவரை நேசிக்கிறார்கள். அவர் எல்லாவற்றையும் நன்றாகச் செய்கிறார் என்று தெரிந்திருப்பதுடன், ஒழுக்கத்திற்காக அவர் பயன்படுத்தும் சிட்சைக்காகவும்கூட அவரை நேசிக்கிறார்கள். அவரில் உள்ள எதுவும், அவரிடமிருந்து வரும் எதுவும், அவரை நேசிக்காதபடி செய்ய முடியாது. “அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்." (1 யோவான் 4:19) இது தேவனைப்பற்றி அவர்களுக்கு இருக்கும் உறுதி.
“தேவனை நேசிப்பவர்களுக்கு". ஐயோ! என் தேவனை நான் எவ்வளவு குறைவாக நேசிக்கிறேன். என் அன்பின்மையால் நான் வருந்துகிறேன். என் அன்பு குறைந்ததினால் என்னை நானே துன்புறுத்திக் கொண்டிருக்கிறேன். ஆம், நான் என்னையும், என் சுயத்தையும், உலகையும் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் 'நான் உண்மையில் என் தேவனை நேசிக்கிறேனா?” என்ற கேள்வி என்னை ஆட்டிப்படைக்கிறது. அப்படியானால், தேவனை நேசிக்க ஆசைப்படுவது ஒரு நல்ல அறிகுறி அல்லவா? தேவனை நான் எவ்வளவு குறைவாக நேசிக்கிறேன் என்பதே நான் அவரை வெறுக்கவில்லை என்பதற்கு நிச்சயமான சான்றாக உள்ளது. அவர்களின் இதயத்தின் கடினத்தன்மையின் காரணமாக, அவர்களின் நன்றியின்மை காரணமாக, ஒவ்வொரு தலைமுறையிலும் பரிசுத்தவான்கள் இவ்வாறு புலம்பியிருக்கிறார்கள். “தேவனை நேசிப்பது என்பது பரலோகத்தின் மீது நமக்கு இருக்கும் அன்பு.” ஆனால் பூமிக்குரிய ஈர்ப்புகளும் அழுத்தங்களும் இதற்குத் தடையாக நிற்கின்றன. ஆத்துமா இந்த பலவீனமான உடலின் நிர்பந்தத்திலிருந்து தப்பித்து அந்த பிரகாசமான மற்றும் சுதந்திரமான பரலோகத்தை அடையும் வரை அந்த நிலையில் இருந்து நாம் விடுபட முடியாது” (டாக்டர் சால்மர்ஸ்).
"அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு". புதிய ஏற்பாட்டில் அழைக்கப்பட்டவர்கள் என்ற வார்த்தை வெறும் சுவிசேஷத்தை விசுவாசிப்பதற்கு வெளிப்புறமாக “அழைக்கப்பட்டவர்" என்று எங்கும் பயன்படுத்தப்படவில்லை. இந்த வார்த்தை எப்போதும் இரட்சிப்புக்கு ஏதுவான, உள்ளான அழைப்பையே குறிக்கும். இந்த அழைப்பை உருவாக்குவதா அல்லது அவமதிப்பதா என்பதில் நமக்கு எந்தவிதமான அதிகாரமில்லை, ரோமர் மற்றும் பல வேதபகுதிகளிலும் சொல்லப்படவதுபோல, “அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசு கிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும், தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்” (ரோமர் 1:6,7).
அன்புள்ள வாசகரே! இந்த அழைப்பு உங்களிடம் வந்தடைந்திருக்கிறதா? நீ ஊழியர்களின் அழைப்பைக் கேட்டிருக்கிறாய், சுவிசேஷத்தின் அழைப்பைக் கேட்டிருக்கிறாய், மனசாட்சியின் அழைப்பைக் கேட்டிருக்கிறாய், ஆனால் உள்ளான நிலையிலும் மறுக்கவும் முடியாததுமான பரிசுத்த ஆவியானவரின் அழைப்பை கேட்டிருக்கிறாயா? நீ இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், மரணத்திலிருந்து ஜீவனுக்கும், உலகத்திலிருந்து கிறிஸ்துவுக்கும், சுயத்திலிருந்து தேவனிடத்திற்கும் அழைக்கப்பட்டிருக்கிறாயா? நீ தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறாயோ என்பதை உறுதிப்படுத்துவது உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். அந்த அழைப்பின் மகிழ்ச்சியான, ஜீவனை கொடுக்கும் இன்னிசை உன் இதயத்தில் எதிரொலித்ததா? ஆனால் எனக்கு அத்தகைய அனுபவம் இருப்பதை நான் எப்படி உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்? இதை உறுதி செய்வதற்கான ஒரு திட்டவட்டமான அளவுகோல் நாம் வாசிக்கும் இந்த தலைப்பின் உரையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. யார் இரட்சிக்கப்படுவதற்கு ஏற்ற அழைப்பினை தேவனால் பெற்றுக்கொண்டார்களோ அவர்கள் தேவனை அதிகமாக நேசிக்கிறார்கள். தேவனை வெறுப்பதற்குப் பதிலாக, அவரை மகிமைப்படுத்துவார்கள். அவருடைய சந்நிதிலிருந்து பயந்து ஓடுவதற்குப் பதிலாக, அவர்கள் தேவனைத் தேடுவார்கள். அவருடைய மகத்துவத்தைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, அவர்கள் தேவனை திருப்திப்படுத்தவும், மகிமைப்படுத்தவும் மட்டுமே விரும்புவார்கள்.
"அவருடைய தீர்மானத்தின்படி". இந்த அழைப்பு மனித தகுதிகள் அடிப்படையிலானது அல்ல. மாறாக இது தேவனின் சித்தத்தின்படி உண்டான ஒரு அழைப்பு. “அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்” (2 தீமோத்தேயு 1:9). அந்த வசனத்தில் “அவருடைய தீர்மானத்தின்படியும்" என்ற சொற்றொடரைச் சேர்ப்பதன் மூலம், சிலர் தேவனை நேசிப்பதற்கும் மற்றவர்கள் விரும்பாததற்கும் தேவனின் இறையாண்மை தான் காரணம் என்பதை பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துகிறார். அவர்களில் இருக்கும் எந்த ஒரு மகத்துவத்தால் அல்ல, மாறாக அவரது விலையேறப்பெற்ற கிருபையின் காரணமாகவே இருக்கிறது.
இந்த வார்த்தையில் நடைமுறை மதிப்பும் உள்ளது. கிருபையின் கோட்பாடுகள் வெறும் ஒரு விசுவாசப்பிரமாணத்தை உருவாக்குவதற்காக மட்டும் கொடுக்கப்படவில்லை. அவை அருளப்பட்டதின் முக்கிய நோக்கங்களில் ஒன்று பயத்தால் நசுக்கப்பட்ட இதயங்களை தேவனின் அன்பினால் தேற்றுவதே! இந்த அன்பு நம் இதயங்களில் எப்போதும் தொடர்ச்சியாகப் பாய்வதுடன், அதில் வளர்க்கக்கூடிய வகையில் நாம் இடைவிடாமல் அந்த அன்பினால் ஊக்கம் பெறுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். ஒரு அழகான காட்சி அல்லது படத்தைப் பற்றிய நமது இரசனையைப்போலவே, நீங்கள் மறுபடியும் அந்த அன்பின் அழகைப் பார்க்கத் திரும்புவீர்கள். இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் நாம் நம்பியிருக்கும் சத்தியத்தை நம் மனதில் கொண்டுவரும்படியாக வேத வசனத்தின் மீது அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. “நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்” (1 கொரிந்தியர் 15:2). “நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன்" (2 பேதுரு 3:1,2) என்கிறார் அப்போஸ்தலன். “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று ஆண்டவர் சொன்னார் (லூக்கா 22:19). ஆகவே, நாம் பொல்லாதவர்களாகவும், ஆயோக்கியமானவர்களாகவும் இருக்கும்போது, அவருடைய கிருபையால் அவர் நம்மை அழைத்த அந்த மணிப் பொழுதை நாம் நினைவுகூரும் போது, அவருடைய அன்பு நம் இருதயங்களில் புதுப்பிக்கப்படுகிறது. நரக நெருப்பிலிருந்து உங்களை வெளியே கொண்டு வந்த கிருபையை நினைத்து உங்கள் இதயம் நன்றியுணர்வுடன் பொங்குகிறது. மேலும் மற்ற அநேகர் புறம் தள்ளப்பட்டபோதும் உங்களைத் தமது சர்வவல்ல மற்றும் நித்தியமான சித்தத்தின் வழியாக மட்டுமே உங்களை அழைத்தார் என்பதைக் கண்டு பிடிப்பதால் தேவன் மீதான உங்கள் அன்பு இன்னமும் அதிக ஆழமாகும்.
நமது வேத பகுதியின் கடைசிப்பகுதியில் (ஆங்கில மொழிபெயர்ப்பில் முதல் பகுதியில் வருகிறது) “சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” என்பதை ஒவ்வொரு விசுவாசியும் அறிந்திருப்பதை அப்போஸ்தலன் இங்கு பேசுகிறார். இந்த அறிதல் என்பது கற்பனையை காட்டிலும் ஞானமானது. சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்பது ஒரு ஆழமான ஆசையைப் பார்க்கிலும் மேலானது. எல்லாம் நன்றாக நடக்கும் என்கிற ஒரு சாதாரண நம்பிக்கையை நாம் வெளிப்படுத்துவதாக சொல்வதில்லை. மாறாக சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது என்பதை நாம் அதிக உறுதியாக நம்புகிறோம். இந்த அறிதல் என்ற வார்த்தையின் பொருள் ஆவிக்குரிய அறிவு என்பதே அல்லாமல் மேலோட்டமான புத்திக்கூர்மையின் அறிவல்ல. இது முடிவில்லாத ஞானமுள்ளவரின் கரங்களில் இருந்து நாம் அனைத்தையும் பெற்றுக்கொள்கிறோம் என்ற விசுவாசித்தினால் வரும் அறிவு. தேவனுடன் உள்ள உறவில் இருந்து நாம் விலகி நிற்கும்போது இந்த ஞானத்தில் இருந்து நாம் அதிக ஆறுதல் அடைய முடியாது என்பது சத்தியமே. மேலும் விசுவாசம் நம்மில் இல்லாத பட்சத்தில் இந்த அறிவில் தொடரவும் முடியாது. ஆனால் நாம் கர்த்தருடன் ஐக்கியப்பட்டிருக்கும்போதும், நமது பெலவீனங்களில் அவரை முற்றிலும் சார்ந்து கொள்ளும் போதும், இந்தப் பாக்கியமுள்ள உறுதி நம்முடையதாகிறது. “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதை உடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசாயா 26:3).
நமது வேதபகுதிக்கு மிகவும் நெருக்கமான வாழ்வியல் உதாரணமாக, யாக்கோபின்; வாழ்க்கைச் சம்பவம் திகழ்கிறது. இது பல வழிகளில் நம் அனைவரின் வாழ்க்கைக்கும் ஏற்ற ஒரு உதாரணம் தான். ஒரு இருண்டதும், கனத்ததுமான மேகம் அவரைச் சூழ்ந்தது. கடுமையான சோதனை அவரது விசுவாசத்தை உலுக்கியது. அவரது பாதங்கள் நழுவியது என்றே சொல்லும் அளவிற்குச் சென்றது. அவரது புலம்பலின் வார்த்தைகளைக் கேளுங்கள். “அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: ‘என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள். யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை, பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள். இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது" (ஆதியாகமம் 42:36) என்றார். ஆனாலும் அந்த சந்தர்ப்ப சூழல்கள் அவருடைய மங்கிய விசுவாசப்பார்வையில் இருள் போலத் தோன்றினாலும் அதே வேளையில் இந்தச் சூழல்கள் தான் அவருடைய வாழ்வின் இறுதிப்பகுதியை மகிமை நிறைந்த இருளற்ற அஸ்தமனத்திற்கு நேராக வழிநடத்தியது. சகலமும் அவருடைய நன்மைக்காக நடந்தேறியது! ஆகவே, கலங்கி நிற்கும் ஆத்துமாவே, அதிக இக்கட்டான சூழ்நிலைகள் சீக்கிரமாக முடிந்துவிடும். மேலும் நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்கையில் நீங்கள் இப்போது கண்ணாடியில் பார்ப்பதுபோல இல்லாமல், எந்தவித நிழலும் இல்லாத தெய்வீகப் பிரசன்னத்தின் பிரகாசத்தைக் கண்டு, சகலமும் உங்களுடைய தனிப்பட்ட மற்றும் நித்திய நன்மைக்கே நடந்தது என்று உணர்வீர்கள்.