“ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." (ரோமர் 8:18).

இந்த வார்த்தைகளை எழுதியவர் இன்னல்களுக்கு முற்றிலும் அந்நியராகவும், அல்லது சிறிய துன்பங்களைத் தவிர வேறு எந்த பெரிய சோதனையையும் அவர் அனுபவித்திருக்க வாய்ப்பில்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகள் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டது. மிகவும் கடினமான சூழ்நிலைகளில் மூழ்கி பல்வேறு சோதனைகள், கக்ஷ்டங்கள் மற்றும் துன்புறுத்தல்களை ஏராளமாக அனுபவித்த ஒருவரால் எழுதப்பட்ட வரிகள் தான் இவைகள். அவருடைய (அப். பவுல்) சொந்த சாட்சியைக் கேளுங்கள். “யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன். மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன். ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும், பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.” (2 கொரி. 11:24-27).

“ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." (ரோமர் 8:18). இது வாழ்க்கைப் பயணத்தில், மகிழ்ச்சியில் திருப்தியடைந்து, ரோஜாப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சொகுசு நடையின் அனுபவத்தில் இருந்து இந்த வார்த்தைகள் வரவில்லை. மாறாக, தன் சொந்த மக்களால் வெறுக்கப்பட்டு, கண்ணீர் வடிக்கும் அளவிற்கு காயப்பட்டு, வாழ்வின் அடிப்படை வசதிகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டவரிடம் இருந்து வரும் வார்த்தைகள்தான் அவை. இப்படிப்பட்ட அனுபவங்களைச் சந்தித்தவர் வெளிப்படுத்தும் இவ்வளவு மகிழ்ச்சியுள்ள எதிர்பார்ப்பை எப்படி விளக்குவது? தனக்கு நேரிட்ட இந்த சோதனைகள், இன்னல்களுக்கு மேலாக அவர் உயர்ந்து நிற்பதன்  இரகசியம் என்னவாக இருக்க முடியும்?

முதலாவதாக, இவ்வளவு துன்பங்களை அனுபவித்த இந்த அப்போஸ்தலன், கிறிஸ்தவருக்கு இருக்கும் இன்னல்கள் தற்காலிகமானவை என்று தன்னைத்தானே ஆறுதல்படுத்திக்கொண்டார். அவை ‘தற்போதைய காலத்திற்கு’ மட்டுமே உரியவை. கிறிஸ்துவை வெறுப்பவரின் துன்பங்களுக்கு முற்றிலும் மாறான மற்றும் உன்னதமான அனுபவம் இது. கிறிஸ்துவை நிராகரிப்பவர்களுடைய உபத்திரவம் நித்திய காலமாக இருக்கும். அவர்கள் நித்திய நரகத்தில் வேதனைப்படுவார்கள். ஆனால் விசுவாசிகளுக்கு ஏற்படும் உபத்திரவங்கள் அதற்கு முற்றிலும் வேறானது. அது காலையில் பூத்து மாலையில் உதிரும் பூக்களைப் போன்றதும், காணப்பட்டு காணாமல் போகும் நிழலைப்போன்றது. மொத்தத்தில் இன்னும் சில வருடங்கள் மட்டுமே இந்த உபத்திரவங்கள் வழியாகக் கடந்து போய், கண்ணீரும் பெருமூச்சுகளும் இல்லாத பாக்கிய நாட்டை சென்றடைவோம்.

இரண்டாவதாக, இனி வெளிப்படவிருந்த “மகிமையை” விசுவாசக் கண்களால் அப்போஸ்தலன் கண்டார். பவுலுக்கு இந்த “மகிமை" ஒரு இனிமையான கனவை விட அதிக மேலானதாக இருந்தது. இது அவருக்கு நடைமுறைச் சத்தியமாக, அவரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் அவருக்கு ஆறுதல் அளித்தது. இது விசுவாசத்தின் மீதான உண்மையான சோதனைகளில் ஒன்று. கிறிஸ்துவை உடையவர்களுக்கு உபத்திரவத்தில் பெரும் ஆதரவு இருக்கிறது. ஆனால் அவிசுவாசிக்கு அது கிடைக்காது. தேவனின் பிள்ளைகள் தங்கள் பிதாவின் முன்னிலையில் “பரிபூரண மகிழ்ச்சி” இருப்பதை அறிவார்கள். அவருடைய வலது கரத்தில் “நித்தியப் பேரின்பம்” உண்டு என்பதை அவர்கள் அறிவார்கள் (சங். 16:11). மேலும் விசுவாசம் அவைகளைப் பற்றிக்கொண்டு, தனிப்பட்ட வாழ்வில் சொந்தமாக்கி, அவைகள் தரப்போகும் ஆறுதலான சந்தோக்ஷங்களை எண்ணி நிகழ்காலத்தில் நம்பிக்கையோடே வாழ்கிறது. இஸ்ரவேலர் வனாந்தரத்தில் நடந்தாலும் தங்களுக்கு  வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பு அவர்களுக்கு ஊக்கம் தந்தது போல (எண்ணாகமம் 13:23, 26), இன்றும் விசுவாசி தரிசித்து நடவாமல் விசுவாசத்துடன் நடக்கிறார். தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தி இருக்கிறார் (1 கொரிந்தியர் 2:9,10) என்பதை அவர் விசுவாசித்து நடக்கிறார்.

மூன்றாவதாக, அப்போஸ்தலன் “இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமை” குறித்து மகிழ்ச்சியடைகிறார். இதன் முழு அர்த்தம் என்னவென்றால் நமக்கு இப்போது புரியும் திறன் இல்லை. ஆனார் இதைக்குறித்து வேதம் அதிக விளக்கத்தை நமக்குத் தருகிறது. அந்த நாளில் நாம்:

  1. பரிபூரானமான மகிமையுள்ள சரீரத்தை உடையவர்களகாக இருப்போம். அந்நாளிலே இந்த அழிவுக்குரியது அழியாமையைத் தரித்துக்கொள்ளும். மரணத்திற்குரிய சரீரம் சாவாமையைத் தரித்துக்கொள்ளும். கனவீனமாக விதைக்கப்பட்ட சரீரம் கனமானதாக எழுப்பப்படும். பலவீனமானதாக விதைக்கப்பட்ட சரீரம் பலமுள்ளதாக எழுப்பப்படும். “மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்." (1 கொரிந்தியர் 15:49). இந்த சத்தியங்களின் சுருக்கமும் விவரமுமான வர்ணனை பிலிப்பியர் 3:20 – 21ல் தரப்பட்டுள்ளது. “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.”
  2. மறுரூபமாக்கப்பட்ட மனதின் மகிமை உடையவர்களாக இருப்போம். “இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.” (1 கொரிந்தியர் 13:12). ஆஹா! அந்த மகிமையான ஞானம் எவ்வளவு வியப்பாகவும், பிரகாசமாகவும் இருக்கிறது! அது எப்பேர்ப்பட்ட ஒரு ஒளியை வீசுகிறது! அது எப்பேர்ப்பட்ட புரிதலின் திறனை அனுபவிக்கிறது! அதன் பின்னர் அனைத்து இரகசியங்களும் வெளிப்படும், எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும், எல்லா மேடு பள்ளங்கள் சரி செய்யப்படும். அப்போது, தேவனின் வேதத்தில் உள்ள ஒவ்வொரு சத்தியத்தையும், அவருடைய ஏற்பாட்டின் ஒவ்வொரு நிகழ்வையும், அவருடைய அரசாங்கத்தின் ஒவ்வொரு முடிவையும், தெளிவாகவும், பிரகாசமாகவும், சூரியனின் பிரகாசத்தை விட அதிக மகிமையுடன் நாம் காணலாம். இப்போது நீங்கள் உங்கள் ஆவிக்குரிய இருளை நினைத்தும், உங்கள் நினைவாற்றலின் பலவீனத்தைக் குறித்தும், உங்கள் குறைவான அறிவாற்றல் திறன் குறித்தும் கவலைப்படுகிறீர்களா? அப்படியானால் உங்களில் வெளிப்பட இருக்கும் அந்த மகிமையை எதிர்பார்த்து சந்தோக்ஷப்படுங்கள். அந்நாளில் உங்களின் அனைத்து அறிவுத் திறன்களும் புதுப்பிக்கப்பட்டு, அது வளர்ச்சியடைந்து, முழுமையடையும். அதன் விளைவாக நீங்கள் அறியப்பட்டிருக்கிறதுபோல அறிந்துகொள்வீர்கள்.
  3. எல்லாவற்றிலும் மிகச் சிறப்பாக பரிபூரணமான பரிசுத்தத்தின் மகிமையைப் உடையவர்களாக இருப்போம். அதன் பின்னர் நம்மில் உள்ள தேவனுடைய கிருபையின் செயல் முழுமையடைகிறது. கர்த்தர் நமக்காக “யாவையும் செய்து முடிப்பதாக” (சங்கீதம் 138:8) வாக்குப்பண்ணியிருக்கிறார். அதன்பின் பரிசுத்தத்தின் முழுமை உண்டாகும். தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு நாம் முன்குறிக்கப்பட்டிருக்கிறோம் (ரோமர் 8:29). அதன்பின் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போம்" (1 யோவான் 3:2). அப்போது, நம் இருதயங்கள் இனித் தீய எண்ணங்களால் தீட்டுப்படாது. இனி ஒருபோதும் நம் மனசாட்சி குற்ற உணர்வால் மாசுபடாது. தகுதியற்ற பொருள்களால் நமது லட்சியங்கள் இனி ஒருபோதும் சிக்கிக்கொள்ளாது.

என்ன ஒரு அற்புதமான ஆசீர்வாதம் இது! தற்போது எந்த ஒளிக்கதிரையும் காணமுடியாத என்னில் எப்பேர்ப்பட்ட மகிமை வெளிப்படப்போகிறது! என்னில் - மிகவும் வழிதவறிய, மிகவும் தகுதி அற்ற, அதிக பாவமுள்ள என்னில் வெளிப்படப்போகிறது. ஜோதிகளின்; பிதாவுடன் மிகவும் சிறிய அளவில் மட்டுமே ஐக்கியப்பட்டிருக்கிறேன்! இப்படிப்பட்ட என்னில் பிதாவின் இந்த மகிமை; வெளிப்படுவது சாத்தியமா? சாத்தியமே என்று தவறில்லாத தேவனுடைய வார்த்தை உறுதிப்படுத்துகிறது. தேவனின் மகிமையின் பிரதிபலிப்பான அவரிடம் நான் வசிப்பதன் மூலம் ஒளியின் குழந்தையாக இருந்தால், நான் இப்போது உலகின் இருண்ட நிழல்களுக்கு மத்தியில் வசித்தாலும், ஒரு நாளில் வானத்தின் ஒளிகளைக் காட்டிலும் நான் பிரகாசிப்பேன். நம்முடைய கர்த்தராகிய இயேசு இந்த பூமிக்கு திரும்பி வரும்போது, அவரை “விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராய்” இருப்பார் (2தெசலோனிக்கேயர் 1:9).

இறுதியாக, அப்போஸ்தலன் நிகழ்காலப் “பாடுகளை” இனி நம்மில் வெளிப்படும் “மகிமையுடன்" ஒப்பீட்டளவில் நிறுத்துப் பார்த்து, முதலானது இரண்டாவதுடன் ஒப்பிடவும் தகுதியானது அல்ல என்று உரக்கச்சொல்கிறார். இக்காலப் பாடு நிலையற்றது, இனிவரப்போவது நித்தியமானது. எல்லைக்குட்பட்ட ஒன்றிற்கும் எல்லைக்கு அப்பாற்பட்ட ஒன்றிக்கும் எந்த சம்பந்த விகிதமும் இல்லை என்பது போல, பூமிக்குரிய துன்பங்களுக்கும் பரலோக மகிமைக்கும் எந்தவித ஒப்பீடும் இல்லை.

மகிமையின் ஒரு இமைப்பொழுது என்பது வாழ்நாள் முழுவதும் பாடுகளை விட அதிக கணமானது. இம்மானுவேலின் தேசத்தின் மகிமையுடன் ஒப்பிடும்போது நம்முடைய வருடக்கணக்கான பிரயாசம், வியாதி, வறுமையின் போராட்டம், அல்லது எல்லாவிதமான துக்கங்களை; என்னவென்று சொல்வது! தேவனின் வலது கரத்தில் நித்திய பேரின்ப நதியில் அனுபவிக்கும் ஒரு துளி, பரலோகத்தில் ஒருமுறை சுவாசிக்கும் மூச்சுகாற்று, இரத்தத்தால் கழுவப்பட்டவர்களுடன் சேர்ந்து சிம்மாசனத்தைச் சூழ்ந்திருக்கும் ஒரு மணிநேரம், உலகின் எல்லாக் கண்ணீருக்கும் துயரங்களுக்கும் மேலான இழப்பீடாகிறது. “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." வாசகரும் எழுத்தாளரும் இந்த வார்த்தைகளை விசுவாசத்துடன் ஏற்றுக்கொண்டு, தற்போதைய சூழ்நிலைகளுக்கு அவற்றைப் பயன்படுத்தவும், அதன் விளைவாக தேவனுடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, அவை கொண்டு வரும் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் பரிசுத்த ஆவியானவர் உதவுவாராக!

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.