“தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" (ரோமர் 8:32).
மேலே குறிப்பிட்ட வசனம் தெய்வீக தர்க்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது ஒரு முன்மாதிரியில் இருந்து ஒரு முடிவை உள்ளடக்கி வருகிறது. அந்த முன்மாதிரி தேவன் தம் மக்களுக்காக கிறிஸ்துவை ஒப்புக்கொடுத்தார். ஆகவே அவர்களுக்கு வேண்டிய அனைத்தும் நிச்சயம் அவர்களுக்குத் தரப்படும் என்பது தான். இதுபோன்ற உறுதியான சத்தியத்திற்கு வேதத்தில் பல எடுத்துக்காட்டுகள் இருப்பதைக் காண்கிறோம். “இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? (மத்தேயு 6:30). “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே" (ரோமர் 5:10). “ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" (மத்தேயு 7:11). ஆகவே இங்கே நமது வசனப்பகுதியில் வரும் இந்த சத்திய சிந்தனை எதிர்பேச முடியாததாகவும், நேரடியாக நம் மனதிலும் உள்ளத்திலும் ஊடுவுகிறதாகவும் இருக்கிறது.
நம்முடைய அன்பான தேவன் தம்முடைய குமாரனை நமக்குக் கொடுப்பதில் எவ்வளவு கிருபையாக இருக்கிறார் என்பதை இந்த வசனம் நமக்கு வெளிப்படுத்துகிறது. இது நம் மனதிற்கு அறிவுறுத்துவதற்காக மட்டுமல்ல, நம் இதயங்களை ஆறுதலடையச் செய்யவும், பாதுகாப்பு கொடுக்கவும் எழுதப்பட்டது. தம்முடைய குமாரனை நமக்குப் பரிசாகக் கொடுத்த தேவசெயல், தம்முடைய மக்களுக்குத் தேவையான அனைத்து ஆசீர்வாதங்களையும் பெறுவதற்கான தேவனுடைய உறுதிமொழியாக இருக்கிறது. பெரிதான ஒன்று சிறிதானதை உள்ளடக்கி வருகிறது. அவருடைய சொல்லிமுடியாத ஆவிக்குரிய வரம் நமக்கு வேண்டிய அனைத்துவித தற்காலிக இரக்கங்களுக்குமான உத்தரவாதமாகும். நமது வேதபகுதியில் உள்ள நான்கு பகுதிகளைக் கவனியுங்கள்:
- பிதாவின் விலையேறப்பெற்ற தியாகம்
இது நாம் அரிதாக தியானிக்கும் சத்தியத்தின் ஒரு முக்கிய அம்சத்தை நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவருகிறது. கிறிஸ்துவின் தியாகத்தை அடிக்கடி தியானிப்பதன் மூலம், அவருடைய அன்பு மரணத்தை விட வலிமையானது என்றும், தம்முடைய மக்களுக்காக எந்த துன்பத்தை விடவும் அவருடைய இரக்கம் பெரியது என்று நாம் அவரை போற்றுகிறோம். ஆனால், தம்முடைய நேச குமாரன் பரலோக வீட்டை விட்டுப் பிரிந்தது தேவனுக்கு எவ்வளவு வருத்தமாக இருந்திருக்கும்! தேவன் அன்பானவர். அன்பை விட மென்மையானது எதுவும் இல்லை. தேவன் உணர்ச்சியற்றவர் என்று சொல்லும் 'ஸ்டோயிக்ஸ்” எனப்படும் மத்தியகாலங்களில் வாழ்ந்த கிரேக்க தத்துவவாதிகளின் வாதத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை. தேவன் தனது நேச குமாரனை அனுப்பியது பிதாவின் மாபெரும் தியாகம்.
இந்த வசனத்தில் உள்ள வாக்குறுதி மொழியின் அடிப்படையிலான கம்பீரமான உண்மையை கவனமாக சிந்தியுங்கள். தேவன் தனது சொந்த குமரானை கொடுப்பதற்கு யோசிக்கவில்லை. இந்த வார்த்தைகள் புனிதமானவை, தெளிவானவை மற்றும் உருகச் செய்பவை. மீட்பதற்கு என்ன தேவை என்பது தேவனுக்கு மட்டுமே தெளிவாகத் தெரியும், வேறு யாருக்கும் தெரியாது. நியாயப்பிரமாணம் கடுமையானதும், வளைந்து கொடுக்காததும் மட்டுமல்லாமல், பரிபூரணமான கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறது. நியாயம் கண்டிப்பானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்து, குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல் முழுைமான திருப்தியைத் தரும் தீர்ப்பை எதிர்பார்க்கிறது. ஆனாலும் மீட்பிற்கான ஒரே வழியாக தேவன் தனது குமரானை இந்த பூமிக்கு அனுப்பத் தயங்கவில்லை.
பெத்லகேமின் மாட்டு தொழுவத்தின் தாழ்ச்சியையும், இழிநிலையையும், மனிதர்களின் நன்றியின்மையையும், தலை சாய்க்க இடமில்லாத அவலத்தையும், தேவபக்தி இல்லாதவர்களின் வெறுப்பையும், எதிர்ப்பையும், சாத்தானின் பகையையும் மற்றும் அவன் இழைக்கும் துன்பங்கள் ஆகிய அனைத்தையும் அவர் சந்திக்க நேரிடும் என்பதைத் தெரிந்தும் தேவன் “தம்முடைய சொந்த குமாரன் என்றும் பாராமல்” அவரைத் தந்தருளினார். தேவன் தனது பரிசுத்த நீதியை நிறைவேற்றுவதற்கு எந்தவித சமரசம் செய்யவில்லை, பாவத்திற்கான தண்டனையை நிறைவேற்றினார். அவரது நேச குமாரனை அனுப்புவதற்கு எந்தவித தயக்கமும் காட்டவில்லை, துன்மார்க்கரின் கைகள் அவரை சிலுவையில் அறைந்தபோதும், அவரின் இரத்தம் கடைசி துளி வரை செலுத்த வேண்டியிருந்தது. தேவகோபாக்கினையின் பாத்திரத்தின் கடைசிச் சொட்டுவரை உறிஞ்சப்பட வேண்டியதாய் இருந்தது. பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று இயேசு தோட்டத்தில் கதறினாலும்;, தேவன் அவரை ஒப்புக்கொடுக்கத் தயங்கவில்லை. துன்மார்க்கமான கரங்கள் அவரை மரத்தில் ஆணியடித்தபோதும், தேவன் “பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருக்ஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்” என்று கதறினார் (சகரியா 13:7).
- பிதாவின் கிருபையுள்ள திட்டம்:
'நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர்.” இங்கே பிதாவானவர் ஏன் இவ்வளவு விலைமதிப்பு மிக்க தியாத்தைச் செய்தார் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. நம் அனைவரையும் தப்புவிக்கும்படியாகவே அவர் கிறிஸ்துவை ஒப்புக்கொடுத்தார். கிறிஸ்துவின் மீது அவருக்கு அன்பு இல்லை என்பதால் இதை அவர் செய்யவில்லை, மாறாக அவர் நம்மீது அற்புதமான, ஒப்பற்ற, விவரிக்க முடியாத அன்பினால் இதைச் செய்தார்! மகா உன்னதரின் அற்புதமான இந்தத் திட்டத்தைக் கண்டு ஆச்சரியப்படுங்கள். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16). உண்மையாகவே இந்த அன்பு கற்பனைக்கு எட்டாதது. அவர் செய்த இந்த விலைமதிப்பற்ற தியாகத்தை, முணுமுணுப்பு இல்லாமல், தயக்கமின்றி, அவர் தனது மிகுந்த அன்பினால் அவைகளை சுதந்திரமாக செய்தார்.
ஒருமுறை கலகம் செய்த இஸ்ரவேல் மக்களிடம் தேவன், “எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? (ஓசியா 11:8) என்று கேட்டார். நிச்சயமாக அவர் தமது பரிசுத்த நேச குமாரனைப் பற்றி இதைச் சொல்வதற்கு இன்னும் எண்ணில்லாத காரணம் இருக்கிறது. இருப்பினும், அவமானம் மற்றும் வெட்கம், வெறுப்பு மற்றும் துன்பங்களைச் சகிக்க அவர் தனது குமாரானை ஒப்புக்கொடுக்க அவர் தயங்கவில்லை. ஆதாமின் கீழ்ப்படியாமையால், சீரழிந்து தீட்டுப்பட்டுப்போனதும், பொல்லாததும் பாவிகளுமான, தீயதும் பயனற்றதுமான சந்ததியாராகிய நமக்காகவே அதைச் செய்தார். தேவனிடம் இருந்து விலகி “தூர தேசத்திற்குப் புறப்பட்டுப் போய்” துன்மார்க்கமான வாழ்க்கைமுறையால் ஆஸ்திகளை அழித்துப்போட்ட நமக்காக அவரை ஒப்புக்கொடுத்தார் (லூக்கா 15:13). ஆம், “ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து அவனவன் தன்தன் வழியிலே” போனவர்களான நமக்காகவே அதைச் செய்தார் (ஏசாயா 53:6). பிறரைப் போலவே நாமும் சுபாவமாகவே தேவ கோபத்திற்கு உரியவர்களாய் இருந்த நமக்காக (எபேசியர் 2:3), நன்மையான எதுவும் வாசம்பண்ணாத நமக்காக தேவன் இந்த தியாகத்தைச் செய்தார் (ரோமர் 7:18). அவருடைய பரிசுத்தத்தை வெறுத்து, அவருடைய வார்த்தையைப் புறக்கணித்து, அவருடைய கட்டளைகளை மீறி, அவருடைய பரிசுத்த ஆவியை எதிர்த்த நமக்காக தேவன் அவரை ஒப்புக்கொடுத்தார். நித்திய நரக நெருப்புக்கு விதிக்கப்பட்டவர்களும், நம்முடைய பாவங்களின் முழு ஊதியத்திற்கும் தகுதியானவர்களுமாகிய நமக்காக அவரைத் தந்தருளினார்.
ஆம்! சக விசுவாசியே, சில சமயங்களில் நீங்கள் துன்பங்களைச் சந்திக்க நேரிடும் போது, தேவனைக் கடுமையானவராகச் சித்தரிக்க சோதிக்கப்படும் உங்களுக்காகத்தான் தேவன் இதைச் செய்தார். உங்கள் வறுமையை தேவனுடைய அலட்சியம் என்றும், இருண்ட சூழ்நிலையில் நடக்கும் போது கர்த்தர் கைவிட்டதாகவும் நினைக்கிற உனக்காகவே அவர் ஒப்புகொடுக்கப்பட்டார். ஓ, தேவனை அவமதிக்கும் இத்தகைய சந்தேகங்களின் குற்றத்தை உடனடியாக அவரிடம் அறிக்கை செய்யுங்கள், மேலும் தம் சொந்த குமாரன் என்றும் பாராமால் அவரைத் தந்தருளின தேவனின் அன்பை இனி மீண்டும் ஒருபோதும் கேள்வி கேட்காதீர்கள் (ரோமர் 8:32).
இந்த வசனப்பகுதியில் உள்ள 'அனைவருக்கும்” என்ற சொல்லை நான் விளக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை உண்மையின் எதிர்பார்ப்பாகக் காண்கிறேன். தேவன் எல்லாருக்காகவும் தம்மை ஒப்புக்கொடுத்தார் என்பதல்ல, மாறாக நம் அனைவருககாகவும் ஒப்புக்கொடுத்தார். இது இந்த வேதபகுதிக்கு முந்தய வசனங்களில் நிச்சயமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. 31வது வசனத்தில் ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது, “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” 30வது வசனத்தில் வரும் “நம்” என்ற வார்த்தை தேவன் முன்குறித்து, அழைத்து, நீதிமானாக்கி, மற்றும் மகிமைப்படுத்தியவர்களைக் குறிக்கிறது என்பது நமக்கு தெளிவாகிறது, எனவே 'நம்” என்பவர்கள் பரலோகத்தின் விருப்பத்திற்கு உரியவர்கள், தேவனுடைய சர்வவல்ல கிருபையின் பாத்திரங்கள் மற்றும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் ஆவர். ஆனால் அவர்கள் தங்களில் தாங்களே அவர்களுடைய செயல் மற்றும் இயல்பில் கோபாக்கினையத் தவிர வேறெதற்கும் தகுதியானவர்கள் இல்லை. ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம். நம் எல்லாருக்காகவும் - நம்மில் மோசனமானவர்கள் மற்றும் சிறப்பானவர்கள் அனைவருக்காகவும், ஐந்து கோடி கடனாளிக்கும், ஐந்து ரூபாய் கடனாளிக்கும் இந்த வாக்குறுதி பொருந்தக் கூடியதாக இருக்கிறது.
- பரிசுத்த ஆவியானவர் தரும் ஆசீர்வதமான முடிவு:
தலைப்பு உரையின் முதல் பகுதியின் அடிப்படையில், பரிசுத்த ஆவியானவர் இங்கு ஏற்படுத்துகின்ற “முடிவுரை”யைக் கவனமாக சிந்தியுங்கள். “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” தேவ ஆவியனவரால் எழுதப்பட்ட அப்போஸ்தலின் இந்த வார்த்தை நமக்கு எவ்வளவு அறுதலான வார்த்தை. உயர்வில் இருந்து சிறயதைப் பற்றிய வாதத்தைப் பின்பற்றி தேவன் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இருக்கிறார் என்று விசுவாசிக்கு உறுதியளிக்கிறார். தேவன் விருப்பத்தோடும் தாராளமாகவும் தம்முடைய சொந்த குமாரனை நமக்குக் கொடுத்தார் என்பது மற்ற அனைத்து அவசியமான இரக்கத்தையும் பெறுவதற்கான உத்தரவாதமாகும்.
பல துன்பங்களினால் சோர்ந்துபோயிருக்கும் ஒரு விசுவாசிக்கு, இந்தச் செய்தி தேவனின் நித்திய நம்பிக்கையின் மாறாத கண்காணிப்பாகும். பெரிதானவற்றைச் செய்த தேவனால் சிறியவற்றைச் செய்யாமல் விட்டுவிடுவாரோ? நித்திய அன்பு என்றும் மாறாது. கிறிஸ்துவே அருளிய அன்பு மற்ற ஆசீர்வாதங்களை வழங்கத் தயங்காத அன்பு. கிறிஸ்துவை ஒப்புக்கொடுக்கத் தயங்காத அன்பு அதன் நோக்கங்களையும் தரத் தவறுவதும் இல்லை. தேவையான ஆசீர்வாதங்களைத் தர வருத்தப்படுவதும் இல்லை. வருத்தமான விக்ஷயம் என்னவென்றால், நம்மிடம் இருப்பதை விட நம்மிடம் இல்லாததைப் பற்றி நம் இதயம் அதிகம் கவலைப்படுகிறது. ஆகவே, கடவுளின் அன்பையும், அதிலிருந்து வரும் ஆசீர்வாதங்களையும் தொடர்ந்து நினைவுகூருவதன் மூலம், தேவனின் ஆவி நம் சோர்வுற்ற இதயங்களின் எண்ணங்களைத் தணித்து, நம்முடைய அதிருப்தியுள்ள ஆத்துமாக்களை சத்தியத்தின் அறிவால் திருப்திப்படுத்துகிறது.
இந்த வசனத்தில் உள்ள எண்ண ஓட்டத்தைக் கவனமாக ஆராயுங்கள். முதலில், பெரிய பரிசு கேட்காமலேயே கொடுக்கப்பட்டது. கேட்டால் மற்ற ஈவுகளைத் தராதிருப்பாரோ? நம்மில் யாரும் தேவனுடைய அன்புக் குமாரனைக் கொடுக்குமாறு கேட்கவில்லை. ஆனாலும் தேவன் அவரை அனுப்பினார்! இப்போது, நாம் கிருபையுள்ள சிங்காசனத்திற்கு வந்து நம்முடைய விண்ணப்பங்களை ஏறெடுப்பதற்கான சிறந்த வாய்ப்பு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தினாலே நமக்குக் கிடைத்துள்ளது.
இரண்டாவதாக, அந்த ஒரு மாபெரும் பரிசு (கிறிஸ்து) அவருக்கு மிகப்பெரிய விலைகொடுக்க வேண்டியதாய் இருந்தது. ஆதைவிடச் சிறிய பரிசுகளை அவர் தராமல் போவாரோ? அது அவருக்குப் பெரிய இழப்பைத் தரப்போவதில்லை, மாறாக கொடுப்பதின் சந்தோக்ஷத்தையே தரப்போகிறது. ஒரு நண்பர் எனக்கு ஒரு வரைப்படத்தை பரிசாகக் கொடுத்தால், அதை வர்ணத் தாளால் போர்த்திக் கொடுப்பதற்கான செலவைச் செய்ய வருத்தப்படுவாரோ? அல்லது ஒரு அன்பானவர் எனக்கு ஒரு நகையைப் பரிசாகக் கொடுத்தால், அதை வைக்க உதவும் சிறிய பெட்டியை தரமாட்டாரா? அப்படியானால், தன் சொந்த குமாரனைக் கொடுக்கத் தயங்காத பரலோக பிதா, உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு எந்த நன்மையையும் எப்படி நிறுத்தி வைப்பார் என்று சிந்தித்துப்பாருங்கள் (சங்கீதம் 84:11).
மூன்றாவதாக, தேவன் இந்த மகிமையான வரத்தை (கிறிஸ்து) நாம் தேவனுக்கு எதிரிகளாக இருக்கும் போதே வழங்கினார். இப்போது, நாம் அவருடன் சமாதானம் செய்து, அவருடைய கிருபைக்குள் வந்த பிறகு அவருடையவர்களாக இருக்கிற நமக்கு மற்றதைக் கொடுக்காமல் இருப்பது எப்படி? நாம் பாவத்தில் இருந்தபோதே, நம்மீது சிறந்த அன்பைக் கொண்டிருந்த தேவன், இப்போது அவருடைய குமாரனின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் கழுவப்பட்ட நமக்கு இன்னும் பெரிய நன்மையைச் செய்ய அவர் விரும்புவார் என்பதைப் பாருங்கள்!
- பாதுகப்பான வாக்குறுதி
இந்த வேதபகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள காலத்தை கவனியுங்கள். “அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்குத் தாராளம் அருளாதிருந்ததெப்படி?” என்று அல்ல, ஆனால் இதுவும் மெய் தான். ஏனெனில் இப்போது நாம் தேவனுடைய சுதந்தரராய் இருக்கிறோம். நமது வேதபகுதி இன்னும் அதிகம் செல்கிறது: “அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பது எப்படி?” இவ்வசனத்தில் இரண்டாவது பகுதி தேவன் ஏற்கனவே செய்த நல்ல விக்ஷயங்களைக் கணக்கிடுவது மட்டுமல்லாமல், இப்போதும் இனி எப்போதும் நமக்குத் தேவையான ஆறுதலான நம்பிக்கையையும் அளிக்கிறது. அருளாதிருப்பதெப்படி? என்ற இந்த வார்த்தைக்கு எந்தவித கால அளவு எதுவும் இல்லை. நிகழ்காலத்திலும் இனி வருங்காலத்திலும் எப்போதும் தேவன் தம்மை மிகப்பெரிய கொடையாளராகவே வெளிப்படுத்துகிறார். நம் எல்லாருக்காவும் கிறிஸ்துவை ஒப்புக்கொடுத்த தேவனிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலும் இல்லை (யாக்கோபு 1:17).
தேவன் கொடுக்கும் முறையைக் கவனியுங்கள். “அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” தேவனிடம் தேனொழுகப் பேசி அவரிடம் பெற வேண்டியதில்லை. அவரிடம் கொடுக்க விருப்பம் இல்லாத நிலையைக் கண்டு அதை நாம் மேற்கொண்டு தான் பெற வேண்டும் என்பதில்லை. நாம் பெற்றுக்கொள்வதைவிட இன்னும் அதிகம் நமக்குத் தர மேன்மேலும் அவர் ஆவலாய் இருக்கிறார். உண்மையில், அவர் நமக்கு நன்மை செய்வதற்கு எதுவும் கடன்பட்டிருக்கவில்லை. அப்படி இருந்தால், தாராளமாகத் தராமல், கொடுக்க வேண்டுமே என்கிற கட்டாயத்தில் இருந்து தந்திருப்பார். தம்முடையவர்களுக்கு தம் விருப்பப்படிச் செய்ய அவருக்கு பூரண அதிகாரம் இருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அவர் விரும்பியபடி யாருக்கும் கொடுக்கும் சுதந்திரம் அவருக்கு இருக்கிறது.
இலவசம் என்ற சொல் தேவன் எந்தவித தடையுமின்றி இலவசமாகத் தருகிறார் என்ற கருத்தைத் தருவது மட்டுமின்றி, தான் கொடுக்கும் ஈவுகளுக்கு எந்த விலையும் வைப்பதில்லை, அவருடைய ஆசீர்வாதங்களுக்கு அவர் எந்த விலையும் நிர்ணயிப்பதில்லை என்ற அர்த்தத்தையும் தருகிறது. அவர் இரக்கங்களை விற்கும் சில்லரை வியாபாரியோ, நல்ல ஈவுகளை பண்டமாற்று செய்கிறவரோ அல்லர். அவ்வாறு இருந்திருந்தால் அவர் அருளும் ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்குமான சரியான விலை கொடுக்க வேண்டியதாய் இருந்திருக்கும். அப்படி இருந்திருந்தால் ஆதாமின் சந்ததியில் யாரால் அந்த விலையைக் கொடுக்கும் வசதி இருந்திருக்கும்? இல்லை, கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம், தேவனுடைய பரிசுகள் “பணமும் இன்றி, விலையும் இன்றி” (ஏசாயா 55:1) நமக்குக் கிடைக்கின்றன – நமது தகுதியின் அடிப்படையிலோ அல்லது சம்பாத்தியத்தின் அடிப்படையிலோ வருவதில்லை.
இறுதியாக, இந்த வாக்குறுதியின் பரந்த தன்மையில் மகிழ்ச்சி அடையுங்கள்: “அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” என்ற அந்த வார்த்தையில் தேவனின் வாக்குறுதி எவ்வளவு பெரியது என்பதை பரிசுத்த ஆவியானவர் இங்கே நமக்கு வெளிப்படுத்துகிறார். சக கிறிஸ்தவனே! உனக்கு என்ன வேண்டும்? மன்னிப்பு வேண்டுமா? ஆனால், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." (1 யோவான் 1:9) என்று தேவன் சொல்லவில்லையா? உங்களுக்கு கிருபை வேண்டுமா? “நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாகி, சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகத்தக்கவர்களாய் இருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராய் இருக்கிறார்" என்று அவர் வாக்குக் கொடுக்கவில்லையா (2 கொரிந்தியர் 9:8)? ஒருவேளை உங்கள் சரீரத்தில் முள் உள்ளதா? அதுவும் வழங்கப்படுகிறது. “என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது” (2 கொரிந்தியர் 12:7). உங்களுக்கு ஓய்வு வேண்டுமா? அப்படியானால் நம்முடைய இரட்சகரின் அழைப்புக்கு செவிகொடுங்கள். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." (மத்தேயு 11:28). உங்களுக்கு ஆறுதல் வேண்டுமா? அவர் “சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவர்" அல்லவா? (2 கொரிந்தியர் 1:3).
“அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” அன்பானவர்களே! நீங்கள் விரும்புவது பூமிக்குரிய தேவை என்றால்? உன்னுடைய பாத்திரத்தில் உணவும், பானையில் எண்ணெயும் சீக்கிரமே தீர்ந்து விடும், எதுவும் இல்லாமல் போய்விடுமோ என்று நீ கவலைப்படுகிறீர்களா? அப்படியானால், உங்கள் தேவையை தேவனுக்கு முன் வைத்து, ஒரு சிறுபிள்ளையைப் போல அவர்மேல் விசுவாசத்தை வையுங்கள். தேவன் உங்களுக்கு மேன்மையான ஆசீர்வாதங்களைத் தந்து விட்டு, வாழ்வுக்கான சிறிய தேவைகளைப் புறக்கணிப்பார் என்று நினைக்கிறீர்களா? அப்படி அல்ல. “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்." (பிலிப்பியர் 4:19).
நிச்சயமாக, நீங்கள் கேட்கும் அனைத்தையும் தருவதாக அவர் வாக்குறுதி அளிக்கவில்லை. ஏனென்றால், நாம் அநேக வேளைகளில் தகாதவிதமாய் விண்ணப்பம் செய்கிறோம் (யாக்கோபு 4:3). நம் வசனப்பகுதியில் உள்ள வாக்குறுதியின் வரம்பைக் கவனமாகப் பாருங்கள், “அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” நாம் பல நேரங்களில் விரும்பும் விண்ணப்பத்திற்கான பதில் கிடைத்து விடுமானால் அதுவே நமக்கும் கிறிஸ்துவுக்கும் நமக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும். ஆகவே இது போன்ற நேரங்களில், தேவன் தம்முடைய உத்தமத்தின் நிலையில் அவற்றை நமக்குக் கொடாமல் நிறுத்தி விடுகிறார்.
புதுப்பிக்கப்பட்ட ஒவ்வொரு இதயத்திற்கும் ஆறுதலைத் தரும் நான்கு விக்ஷயங்களை நாம் இதுவரை சிந்தித்துள்ளோம். 1) பிதாவின் விலையேறப்பெற்ற தியாகம். நம்முடைய தேவன் மாபெரும் ஈவுகளைத் தரும் தேவன். உண்மையோடும், உத்தமத்தோடும் நடந்துகொள்பவர்களுக்கு அவர் எந்த நன்மையும் செய்யமால் இருப்பதில்லை. 2) பிதாவின் கிருபையுள்ள திட்டம். நமக்காகவே கிறிஸ்து கைவிடப்பட்டார். நம்முடைய மேன்மையான, நித்தியமான நலனே அவருடைய உள்ளத்தில் நிறைந்திருந்தது. 3) பரிசுத்த ஆவியின் மூலமாக ஆசீர்வதிக்கப்பட்ட விளைவு. விலையுயர்ந்ததை கொடுக்கத் தயங்காத தேவன், சிறிதானதைக் கொடுப்பதற்கும் தயாராகவே இருக்கிறார். அவர் தம்முடைய சொந்த குமாரனை நமக்காக கொடுத்தார் என்ற சத்தியமே நமது மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்யவர் என்பதற்கான முழு உத்தரவாதம். 4) ஆறுதல் தரும் வாக்குறுதி. இந்த வாக்குறுதி நிகழ்காலத்திற்கும், வரப்போகும் காலத்திற்கும், நம் இதயங்களுக்கு நம்பிக்கையையும், நம் மனதில் அமைதியையும் கொண்டுவரும் ஒரு ஆசீர்வாதமாகும். இந்தச் சிறிய தியானத்தின் மேல் தேவன் தனது ஆசீர்வாதத்தை அருளுவாராக!