“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது." (சங்கீதம் 136:23)

“நம்மை நினைத்தவர்” என்பது நாம் அவரை மறப்பதற்கு எதிரான குறிப்பிடத்தக்க மற்றும் ஆசீர்வாதமான வேறுபாடாகும். நமது மற்ற திறன்களைப் போலவே, நமது நினைவும் பாவத்தினால் பாதிக்கப்பட்டு, கேட்டின் அடையாளங்களைச் சுமக்கிறது. பயனுள்ள விக்ஷயங்களை மறந்துவிட்டு நன்மையானவைகளை நினைவில் வைக்க முடியாத நமது திறனே இதற்குச் சான்றாகும். மனிதன் சிறு வயதில் பாடிய அல்லது கேட்ட ஒரு பாலர் பள்ளிப் பாடலைத் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துக்கொள்கிறான். ஆனால் பயனள்ள பிரசங்கத்தையோ 24 மணி நேரத்திற்குள் மறந்துவிடுகிறான். இதைவிட மிகவும் வருத்தமான மற்றும் ஆழமான காரியம் என்னவென்றால் தேவனையும், அவர் நமக்கு காட்டிய எண்ணற்ற கருணைகளையும் சுலபமாக மறந்துவிடுகிறோம். ஆனால் தேவனுக்கு என்றும் மகிமை உண்டாகட்டும். அவர் என்றும் நம்மை மறப்பதில்லை. அவர் உண்மையாய் நினைவுகூறுகிற தேவனாக இருக்கிறார்.

நாம் வேதாகம ஒத்துவாக்கியத்தில் பார்க்கும்போது,  “நினைவு கூறுதல்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்ட முதல் ஐந்து முறையும் தேவனுடன் தொடர்புடைய நிலையில்  பயன்படுத்தப் பட்டதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். “தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்” (ஆதியாகமம் 8:1). “அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்" (ஆதியாகமம் 9:16). “தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிட்டார்” (ஆதியாகமம் 19:29). இதுபோல தேவனுடைய நினைவித் தாங்கி வசனங்கள் வரும்போது, முதன் முதலில் இந்த வார்த்தை மனிதனைக் குறிக்கும் வகையில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பாருங்கள்: “ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்" (ஆதியாகமம் 40:23)!

நமது கவனத்தில் எடுத்துக்கொண்ட வேதபகுதியின் வரலாற்று சூழல் எகிப்தின் செங்கல் சூளைகளில் இஸ்ரேல் மக்கள் பட்ட பாடுகளைப் பற்றியது. அவர்கள் உண்மையாகவே அங்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தனர். தேவனை அறியாத கடின இதயம் கொண்ட அரசனால் ஒடுக்கப்பட்டும், இரக்கமற்ற அதிகாரிகளின் சவுக்கு அடிகளின் கீழ் அவர்கள் புலம்பித் தவிக்கும் அடிமை நிலையில் இருந்தனர். அவர்களுக்கு இரக்கம் காட்ட யாரும் இல்லாத நிலையில் யெகோவா தேவன் அவர்களின் கூக்குரலைக் கேட்டு அவர்களுக்கு இரங்கும்படி கண்ணோக்கமானார். அவர்களுடைய “தாழ்ந்த நிலையில்" அவர்களை நினைவு கூர்ந்தார். இதற்குக் காரணம் என்ன? யாத்திராகமம் 2:24-25 சொல்லுகிறது: “தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார். தேவன் அவர்களை நினைத்தருளினார்.” (யாத்திராகாமம் 2:24,25)

மேலும் வரலாறு மீண்டும் திரும்புகிறது. இஸ்ரவேலரின் தாழ்ந்த நிலை இன்னமும் உச்சத்திற்கு வரவில்லை. அவர்களுடைய அனுபவங்கள் கடந்த 19 நூற்றாண்டுகளில் அதிக அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இருந்திருந்தாலும், மிகவும் மோசமான காரிருளின் இரவு இன்னமும் அவர்களுக்கு முன்பதாக வர வேண்டியதாய் இருக்கிறது. இந்தக் கிருபையின் காலம் முடிவுக்கு வரும்போது, இதுவரை இல்லாத நியாயத்தீர்ப்புகள் யூதர்கள் மீது இறங்கும். அது அவர்கள் அடிமைத்தனக் காலத்தில் இருந்தவைகளைவிட மோசமானதாக இருக்கும். “மகா உபத்திரவ காலத்தில்” தான் அவர்கள் மிக மோசமான துன்பங்களை அனுபவிப்பார்கள். “ஐயோ! அந்த நாள் பெரியது. அதைப் போன்ற நாளில்லை. அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம். ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்” (எரேமியா 30:7)  என்று எழுதப்பட்டிருப்பது போல நடக்கும். தேவன் அவர்களுடைய முன்னோர்களுடன் செய்த உடன்படிக்கையை நினைவுகூருவார்.

ஆனால், நமது வேதபகுதி இஸ்ரவேலர்களான ஆபிரகாமின் நேரடி சந்ததியினருக்கு மட்டுமே என்று சுருக்கிவிடக்கூடாது. இது “தேவனுடைய இஸ்ரவேல்" (கலாத்தியர் 6:16) ஆகிய யாவருக்குமானது. தேவன் அளிக்கும் இரட்சிப்பில் பங்குகொள்ளும் இன்றைய விசுவாசிகளும் சங்கீதக்காரனுடன் இணைந்து, “நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்" என்று சொல்லலாம். நமது விழுந்துபோன சிருக்ஷ்டிகளாக, நம்மை நாமே இரட்சித்துக் கொள்ள முடியாத அளவுக்கு மோசமான நிலையிலும் அக்கிரமத்திலும் இருக்கிறோம். ஆனால் அவரது அற்புதமான கிருபையால் தேவன் நம்மீது பரிதாபம் கொண்டார். நாம் விழுந்து கிடந்த இடத்தில் அவர் வந்து, நம்மைப் பார்த்து நம்மீது மனதுருகினார் (லூக்கா 10:33). எனவே ஒவ்வொரு கிறிஸ்தவனும், “பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தினார்" (சங்கீதம் 40:2) என்று கூறலாம்.

அவர் ஏன் நம்மை நினைவு கூர்ந்தார்? “நினைவுபடுத்துதல்" என்ற சொல், ஏற்கனவே இருந்த நம்மீதான அன்பு மற்றும் இரக்கத்தின் சிந்தைகளைச் சொல்கிறது. எகிப்தில் இருந்த இஸ்ரவேலர்களைப் போலவே, அவர் நம்முடைய இயல்பிலேயே பாழாய்ப்போன நிலையில் கிடந்த நம்மையும் நினைவு கூர்ந்தார். அவர் நித்தியகாலமாய் நமது உறுதியான மீட்பிற்காக ஏற்படுத்திய தம்முடைய உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். நாம் தீத்து 1:2ல் வாசிப்பதுபோல “பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி” இருக்கிறார். கிறிஸ்து யாருக்காக தம்முடைய ஜீவனைக் கொடுத்தாரோ அவர்களுக்கு நித்திய ஜீவன் வழங்கப்படும் என்று வாக்களித்துள்ளார். ஆம், தேவன் “உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டதை" (எபேசியர் 1:4) நினைவு கூர்ந்தார். எனவே ஏற்ற காலத்தில் அவர் நம்மை மரணத்திலிருந்து ஜீவனுக்குள் நம்மை கொண்டுவந்தார்.

ஆயினும், இந்த ஆசீர்வாதமான வார்த்தை தேவ இரட்சிப்பின் கிருபை நாம் பெற்றுக்கொண்ட ஆரம்ப அனுபவத்துக்கும் அப்பால் கடந்து செல்கிறது. சரித்திர அடிப்படையில் நமது வசனப்பகுதி எகிப்தில் இருந்தபோது மட்டுமே தேவன் தம்மக்களை நினைவு கூர்ந்தார் என்று கூறவில்லை, ஆனால் இந்த வசன சூழமைவின்படியே, அவர்கள் வாக்காளிக்கப்பட்ட தேசத்திற்கு வனாந்த வழியாய்ப் பயணம் செய்த காலமுழுவதும் தேவன் நினைவு கூர்ந்தார் என்று சொல்ல முடியும். இஸ்ரவேலின் வனாந்தர அனுபவங்கள் அனைத்தும், இன்று எதிர்மறையான உலகத்தில் வாழும் பரிசுத்தவான்களுக்கான முன் அடையாளங்களே. ஒவ்வொரு நாளும் கர்த்தர் அவர்களை நினைவுகூர்ந்து அவர்களின் தேவைகளையும், பசியையும் தீர்த்து அவர்கள் மீது காட்டிய அக்கறை நம்முடைய பரலோக வீட்டை நோக்கிய பயணத்தில் நமக்கான அனைத்து தேவைகளைச் சந்திப்பதிலும் வெளிப்படும் என்பதை நமக்கு விளக்குகிறது. பூமியில் நமது தற்போதைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. ஏனென்றால் நாம் இப்போது அரசர்களாய் ஆளுகை செய்கிறவர்கள் அல்ல. ஆனாலும் நம்முடைய தேவன் எப்போதும் நம்மை அவருடைய நினைவில் கொண்டு, அனைத்து சமயத்திலும் நமக்கு ஒத்தாசையாக செயல்படுகிறார்.

“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்". எப்பொழுதும் நாம் சாதகமான சூழ்நிலைகளில் இருக்க நமக்கு அனுமதி இல்லை. இந்த இயற்கை உலகைப் போலவே நம் வாழ்வும் இருக்கிறது. வெளிச்சமும் பிரகாசமான நாட்களைத் தொடர்ந்து மேகம் மூட்டத்துடன் கூடிய இருண்ட நாட்களும் வரும். கோடை காலத்தைத் தொடர்ந்து குளிர்காலமும் வரும். ஏமாற்றங்கள், இழப்புகள், துன்பங்கள் மற்றும் மரணத்தால் வரும் துக்கங்கள் நம் வழியே வந்து நம்மை தாழ்ச்சி அடையச் செய்கின்றன. மேலும் பல வேளைகளில் நம் நண்பர்களின் ஆதரவு நமக்கு அதிகமாகத் தேவைப்படும் போது அவர்களும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். நமக்கு உதவி செய்வார்கள் என்று நாம் நினைத்தவர்கள் கூட நம்மைத் கைவிட்டனர். ஆனால், அப்போதும், நம்மை “நினைத்தவர்" தம்மை நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் (எபிரெயர் 13:8) என்பதை விளங்கப்பண்ணியதால், மீண்டும் நம் வாழ்வில், “அவர் கிருபை என்றுமுள்ளது" என்ற உண்மை மறுபடியும் நிரூபிக்கப்பட்டது.

“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்". இந்த வார்த்தைகளை வாசிக்கும் ஒருசிலர் இந்த வார்த்தைகளை மற்றொரு விதத்தில் நடைமுறைப்படுத்த நினைக்கலாம்: அதாவது நீங்கள் ஆதியில் கொண்டிருந்த அன்பில் இருந்து விலகியிருக்கும் வேளையாக, உங்கள் இதயம் தணிந்து போய், உங்கள் வாழ்க்கை இந்த உலகத்திற்குள் ஈர்க்கப்பட்டதாகவும். நீங்கள் பின்வாங்கிப்போன நிலைக்குத் தள்ளப்பட நிலையில் இருக்கலாம். அது வாஸ்தவத்தில் மிகவும் பரிதாபமான தாழ்ச்சி நிலை தான். அப்படி இருந்தும் நம்முடைய உண்மையுள்ள தேவன் உங்களை நினைவு கூர்ந்தார். ஆம், நாம் ஒவ்வொருவரும சங்கீதக்காரனுடன்;; சேர்ந்து, “அவர் என் ஆத்துமாவைத் தேற்றி (மறுபடியும் புதுப்பித்து என்று மூல மொழியில் வருகிறது), தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்" (சங்கீதம் 23:4) என்று சொல்ல நிறைய காரணங்கள் உள்ளன.

“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்". இந்த வார்த்தைகளை விசுவாசியின் வாழ்க்கையில் மற்றொரு சூழ்நிலையிலும் பயன்படுத்தலாம். அது என்னவென்றால் பரிசுத்தவானின் வாழ்வின் கடைசிப் பெரும் நெருக்கடியாகிய இவ்வுலகை விட்டுச் செல்லும் நேரம் தான். உடலில் உள்ள அனைத்து உயிர்ச்சக்திகளும் மந்தமாகி, தன் சுபாவமான சக்திகள் அனைத்தையும் இழந்து நிற்கும் நிலையில், அவனில் தாழ்வு நிலை உருவாகிறது. ஆனால் அப்போதும் கர்த்தர் நம்மை நினைக்கிறார், ஏனெனில் “அவர் கிருபை என்றுமுள்ளது.” மனிதனின் உட்சபட்ச நெருக்கடி தேவன் கிரியை செய்கிற வாய்ப்பே அல்லாமல் வேறில்லை. நம்முடைய பெலவீனத்தில் அவருடைய பெலம் பூரணமாய் விளங்கும். இந்த நிலையில் தான் அவர் நம்மை நினைத்து “பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன். நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன். என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” (ஏசாயா 41:10) என்ற வாக்குத்தத்தம் நிறைவேறும்படி செய்து நமக்கு மிகப்பெரிய ஆறுதலைத் தருகிறார்.

“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்." உண்மையில் இந்த வசனம் நாம் நித்திய வாசஸ்தலத்தில் கர்த்தரோடு இருக்கும்போது தேவனைத் துதிப்பதற்கு பொருத்தமான வார்த்தைகளை நமக்கு வழங்குகிறது. நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்த அவருடைய உடன்படிக்கையின் உண்மைக்காகவும், அவருடைய ஒப்பற்ற கிருபைக்காகவும், அவருடைய இரக்கத்திற்காகவும், நாம் எவ்வளவாய் அவரைப் புகழப் போகிறோம்! அப்போது நாம் அவரால் முழுவதும் அறியப்பட்டபடியே நிறைவாக அறிந்துகொள்வோம். நமது நினைவுகளும்கூட புதுப்பிக்கப்பட்டு, பூரணப்படுத்தப்பட்டவர்களாய், தேவன் நம்மை நடத்திய அனைத்து வழிகளையும் நினைவில் கொண்டு வருவோம் (உபாகமம் 8:2). அந்த நினைவைக்கொண்டு நன்றியுடனும் சந்தோக்ஷமுடனும் “அவருடைய கிருபை என்றென்றும் உள்ளது” என்று நாம் ஆமோதித்து அவரை ஆராதிக்கிறோம்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.