“அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.” (எபிரெயர் 12:5).

தேவனுடைய சிட்சை எல்லாருக்கும் பரிசுத்தமானதாகத் தோன்றுவதில்லை. அவைகளால் சிலர் கடினப்படுகிறார்கள். மற்றவர்கள் அதன் கீழ் நொறுக்கப்படுகிறார்கள்.  துன்பங்களை நாம் எதிர்கொள்ளும் மனப்பான்மையைப் பொறுத்தே அதன் விளைவு செயல்படுகிறது. சோதனைகளிலும் துன்பங்களிலும் உள்ளார்ந்த நன்மை எதுவும் இல்லை. அவைகள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதால் மட்டுமே நாம் பயனடைய முடிகிறது. எபிரெயர் 12:11 தெளிவுபடுத்துவது போல், “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோக்ஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.” நமக்குத் தேவையானது மென்மையான மனசாட்சியும் மென்மையான இதயமும் மட்டுமே.

இந்த வேதபகுதியில் கிறிஸ்தவன் இரண்டு ஆபத்துகளைக் குறித்து எச்சரிக்கப்படுகிறான். இந்த இரண்டு ஆபத்தான மனோபாவங்களில் மிகவும் கவனமாக இருங்கள். அவைகள் “அற்பமாக எண்ணாதே" மற்றும் “சோர்ந்து போகாதே" என்பதே. இந்த இரண்டு உச்சங்களையும் தவிர்த்து சமநிலையோடிருக்க வேண்டியது அவசியம். வேதத்தில் உள்ள ஒவ்வொரு சத்தியத்தையும் அதை சமநிலைப்படுத்தும் வெவ்வேறு பக்கங்களைக் கொண்டிருப்பது போல, ஒவ்வொரு தீமைக்கும் எதிர்வினையும் இருக்கிறது. ஒருபுறம், ஒழுக்கத்தின் தடியை இழிவுபடுத்தும் அகந்தையுள்ள இதயத்தால் உங்களைத் தாழ்த்திக் கொள்ள விருப்பமில்லாத மனநிலை. மறுபக்கம் முற்றிலும் மூழ்கடிக்கச் செய்கிற சோர்புக்குள்ளாக்கி விரக்தியடையச் செய்யும் மனநிலை. “நீதியின் பாதை இரண்டு பிழையான மலைகளுக்கு இடையே உள்ள ஒரு குறுகிய பாதை, இந்த குறுகிய பள்ளத்தாக்கு வழியாக நடந்து அதன் இலக்கை அடைவதே கிறிஸ்தவ வாழ்வின் இரகசியம்” என்கிறார் சார்லஸ் ஸ்பர்ஜன்.

  1. பிரம்பை இகழ்வது:

கிறிஸ்தவர்கள் பல வழிகளில் தேவனின் சிட்சையை “வெறுக்கிறார்கள்". அவைகளில் நான்கை நாம் குறிப்பிடுவோம்:

அ) அக்கறையின்மை. அக்கறையின்மை என்பது மனுக்ஷீக ஞானத்தின் கொள்கை – மோசமான வேலையைச் சிறப்பாக்கும் தன்மை. உலக மனிதன் தன் சுயபெலத்தைச் சார்ந்து துணிச்சலுடன் முன்னேற விரும்புகிறான். அவன் தெய்வீக தேற்றளவாளர், ஆலோசனை கர்த்தர், மற்றும் பரம வைத்தியனாகிய கர்த்தருடைய உதவியின்றி, தனக்கு இருக்கும் அற்பமான வளங்களையே சாரவேண்டி உள்ளது. தேவனுடைய பிள்ளைகளும் சாத்தானின் பிள்ளைகள் போல் நடந்துகொள்வது சொல்ல முடியாத வருத்தத்தை தருகிறது. பாதகமான சூழ்நிலைகளில் விலகிச் செல்லும் ஒரு கிறிஸ்தவன் தேவனின் கண்டிப்பை வெறுக்கிறவனாக இருக்கிறான். இருதயத்தை கடினப்படுத்துவதை விட நொறுங்குண்ட நருங்குண்ட இருதயத்தை உடையவானாக இருப்பது மேன்மை.

ஆ) புகார் செய்வதன் மூலம். எபிரேயர்கள் வனாந்தரத்தில் செய்தது இதுதான். இன்றும் இவ்வாறு செய்பவர்கள் விசுவாச சமூகத்தில் பலர் இருக்கிறார்கள். நம்மில் சிலருக்கு உடல்நல குறைவு ஏற்ப்பட்டால் நம்முடைய நண்பர்கள் கூட நெருங்கி வருவதைத் தவிர்க்கும் அளவிற்கு அவர்களுக்குத் தொந்தரவாக மாறிவிடுகிறோம். சில நாட்களாக உடல்நல குறைவு ஏற்பட்டதும், நுகத்துக்குப் பழக்கப்படாத காளையைப் போல முணுமுணுக்கிறோம். நம்மை விட குறைவான பாரத்தை சுமப்பவர்களை பொறாமையுடன் பார்த்து விரக்தியடைகிறோம், இவையெல்லாம் அனுபவிக்க நான் என்ன பாவம் செய்தேன்? என்பதான கேள்வியை கேட்ப்போம். வாசகரே! எச்சரிக்கை! முறுமுறுப்பவர்களுக்கு ஐயோ! முதல்முறை நாம் நம்மை தாழ்த்திக் கொள்ளாவிட்டால், இரண்டாவது முறை தேவன் நம்மை கண்டித்து ஒழுங்குபடுத்துவார். ஆபரணத்தில் இன்னும் எவ்வளவு அழுக்கு உள்ளது என்பதை உனக்கு நீயே நினைவூட்டிக்கொள். உன் இருதயத்தின் அக்கிரமத்தைக் கண்டு, தேவன் உன்னை இரட்டிப்பாக தண்டியாமல் போனதைக் குறித்து ஆச்சரியப்படு. “என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே"

இ) விமர்சனங்களின் மூலம். நாம் அடிக்கடி கடிந்துகொள்ளுதலின் பலனைக் கேள்வி கேட்கிறோம். நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதால் நாம் இரட்சிக்கப்படாத காலத்தில் இருந்ததைவிட இப்போது அதிக ஞானமுடன் செயல்படும் திறன் நமக்கு இருக்கிறது. சிறு குழந்தைகளாக இருந்தபோது வீட்டில் பிரம்பு தேவையில்லாத ஒன்றாக நினைக்கிறோம். தேவனின் பிள்ளைகள் அடிக்கடி இப்படித்தான் நினைக்கிறார்கள். எல்லாம் அனுகூலமாக நடக்கும்போது, எதிர்பாராத சில ஆசீர்வாதங்கள் நம்மீது பொழியும் போது, அவற்றைக் தேவனின் கருணை என்று சொல்லுவதில் நமக்குச் சிரமம் இல்லை, ஆனால் நம்முடைய எண்ணங்கள் முறியடிக்கப்படும் போதோ அல்லது நட்டத்தை சந்திக்க நேரிடும்போதோ, நம் சிந்தனை முற்றிலும் மாறுபடுகிறது. ஆனால், “ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்துத் தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே. கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்” (ஏசாயா 45:7) என்று எழுதப்படவில்லையா?

படைப்பாளியிடம் “என்னை ஏன் இப்படி படைத்தாய்?" என்று எத்துனை முறை படைப்பு கேள்விகேட்கிறது? இது என் ஆத்துமாவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று பார்க்க முடியவில்லையே என்று நாம் கேட்கிறோம். ஒருவேளை நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால், நான் அடிக்கடி ஜெப ஆலயத்திற்குச் சென்றிருப்பேன் வியாபாரத்தில் நக்ஷ்டம் ஏற்படாமல் இருந்தால், தேவனுடைய ஊழியத்திற்குக் கொடுக்கும்படி அதிக பணம் இருந்திருக்கும்! இந்த இக்கட்டினால் எனக்கு என்ன நன்மை நடக்கப்போகிறது என்கிறோம். யாக்கோப்பை போல அனைத்தும் நமக்கு விரோதமாக இருக்கிறது என்று ஆச்சரியப்படுகிறோம் (ஆதியாகமம் 42:36). இது தேவனின் கண்டித்தலை அலட்சியப்படுத்துதே அல்லாமல் வேறில்லை. உன்னுடைய அறியாமை தேவனுக்கு சவால் விடலாமா? உன்னுடைய குறுகிய பார்வையால் தேவனுடைய அநந்த ஞானத்தைக் கேள்வி கேட்கலாமா?

ஈ) கவனக்குறைவு மூலம் பலர் தங்களுடைய வழிகளை சரிசெய்துகொள்ள விரும்புவதில்லை. நமது வேதபகுதி தரும் எச்சரிக்கை நம் அனைவருக்கும் தேவை. தேவனின் கண்டிப்பை இகழ்வோர் பலர் உள்ளனர். அதனால் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. எத்தனையோ கிறிஸ்தவர்கள் தேவனால் திருத்தப்பட்டாலும் அது வீணாகி விடுகிறது. நோய்கள், தீமைகள் மற்றும் இழப்புகள் பலவற்றை நடந்தாலும் ஜெபத்தோடு சுயபரிசோதனை செய்ய அவர்கள் முன்வருவதில்லை. சகோதரியே, சகோதரனே, கவனமாய் இருங்கள்! தேவன் உங்களைக் கடிந்துகொண்டால், “உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்" (ஆகாய் 1:5), “உங்கள் கால்நடையைச் சீர்தூக்கிப்பாருங்கள்" (நீதிமொழிகள் 4:26). தேவன் கடிந்துகொள்வதற்கு தக்க காரணம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். பல கிறிஸ்தவர்கள் தங்கள் கண்டிக்கபடுவதிற்கான காரணத்தை கவனமாக ஆராய்ந்திருந்தால், தங்கள் துன்பங்களில் பாதி அளவு தீவிரத்தைத் தவிர்த்திருப்பார்கள்.

  1. சோர்ந்து விடுவது

தேவனின் கண்டிப்பை வெறுக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்ட பிறகு, தேவனின் கடிந்து கொள்ளுதலைக் குறித்து விரக்தியடைய வேண்டாம் என்று நாம் இப்போது புத்திமதி பெறுகிறோம். குறைந்தபட்சம் மூன்று வழிகளில் தேவனின் கடிந்துகொள்ளுதலால் கிறிஸ்தவன் சோர்வடைகிறான்.

அ) தன் எல்லா முயற்சிகளையும் கைவிடும்போது. விரக்தியில் மூழ்கும்போது இது நடக்கிறது. இது தன்னால் தாங்கிக்கொள்ள முடியாதது என்று அதில் சிக்கியவர் அடிக்கடி உணர்கிறார். அவர் இருதயம் கலங்குகிறது, இருள் அவரைச் சூழ்ந்துள்ளது. எதிர்பார்ப்யின் சூரியன் மறையும்போது, நன்றிக் குரல் மௌனமாகிறது. 'மனச்சோர்வு' என்பது நம் கடமையைச் செய்ய நம்மைச் சக்தியற்றவர்களாக ஆக்குவதற்குச் சமமாகும். ஒரு நபர் மயங்கிவிட்டால் அசைவற்று இருப்பார். எத்தனை கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வில் போராட்டம் வரும்போது மனச்சோர்வடைந்து தங்கள் போராட்டத்தை முற்றிலுமாக கைவிடுகிறார்கள்? துன்பப்படும் போது தேவனுடைய கரம் என் மீது பாரமாக இருக்கிறது, அதை எதிர்க்கொள்ள என்னால் எதுவும் செய்ய முடியாது என்று எத்தனை பேர் உணர்கிறார்கள்? பிரியமானவர்களே, நம்பிக்கையில்லாத மற்றவர்களைப்போல துக்கப்படாதிருங்கள் (1 தெசலோனிக்கேயர் 4:13). “அவரால் கடிந்துக் கொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே" (எபிரெயர் 12:5). தேவனிடம் அதை எடுத்துச் செல்லுங்கள்: அவருடைய கரத்தை அதில காண முயலுங்கள். உங்கள் துன்பங்களும்கூட உங்கள் நன்மைக்காகவே நடப்பதன் ஒரு பகுதிதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆ) அவருடைய குமாரத்துவத்தை கேள்விக்குட்படுத்தும் போது. தேவனுடைய பிரம்பு தங்கள் மீது வரும் போது தாங்கள் தேவனுடைய குமாரர்கள் அல்ல என்று முடிவுக்கு வருபவர்கள் கிறிஸ்தவர்களிடையே அதிகம் உள்ளனர். “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்." (சங்கீதம் 34:19), “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்" (அப்போஸ்தலர் 14:22) என்று எழுதப்பட்டிருப்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள், நான் தேவனுடைய பிள்ளை என்றால் எனக்கு ஏழ்மையும், துன்பங்களும் ஏன் வர வேண்டும் ஒருவர் கேட்கலாம்;. எபிரெயர் 12:8 சொல்வதைக் கவனியுங்கள்: “எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.” ஆகவே பரீட்சைகள் உங்களைச் சுத்தப்படுத்தி, தேவையற்றவைகளைக் களைந்து, தூய்ைமாக்கும் தேவனுடைய அன்பின் அச்சாரமாகப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். குடும்பத்தின் தந்தை தனது வீட்டிற்கு வெளியே உள்ளவர்களைப் பற்றி அதிகம் கவலைகொள்வதில்லை: மாறாக வீட்டில் உள்ளவர்களையே காப்பாற்றுவதிலும், நடத்துவதிலும், பராமரிக்கிறதிலும், தன் விருப்பத்தின்படி சரியாக வாழ்வதை உறுதிசெய்வதிலும் அக்கறையாக இருக்கிறார். தேவனும் அவ்வாறே கிரியை செய்கிறார்.

இ) அவர் ஏமாற்றமடையும் போது. சிலர் தங்கள் துன்பங்களிலிருந்து ஒருபோதும் வெளியே வர முடியாது என்று நினைக்கிறார்கள். நான் எவ்வளவுதான் ஜெபித்தாலும் எனக்கு நேரிடும் துன்பங்கள் என் வாழ்வில் இருந்து மறையவில்லை என்று சொல்கிறார்கள். விடியலுக்கு முன் அதிக இருளின் நேரம் இருக்கும் என்பதை அறிந்து நாம் ஆறுதல் அடைய வேண்டும். எனவே, தேவனின் கடிந்துகொள்ளுதலில் சோர்ந்து போகாதீர்கள். வேறு சிலர், அவருடைய வாக்கைப் பற்றிக்கொண்டு கெஞ்சினேன். ஆனாலும் இன்னும் என் நிலை சரியாகவில்லை. தம்மை நோக்கிப்பார்க்கிறவர்களை அவர் விடுவித்தார் என்று எண்ணினேன். ஆனால் நான் அழைத்தும் அவர் பதில் தரவில்லை. இனி எனக்குப் பதிலே கிடைக்காது என்றும் பயப்படுகிறேன் என்கிறார்கள். தேவனுடைய பிள்ளையே, உன் பிதாவைக் குறித்து இப்படிப் பேசுவதா! இவ்வளவு காலமாக என்னை தண்டித்துள்ளார் எனவே தேவன் என்னைத் தண்டிப்பதை நிறுத்தமாட்டார் என்கிறீர்கள். ஆனால் தேவன் என்னை நீண்ட காலம் கண்டிப்பதன் காரணம் நான் சீக்கிரத்தில் விடுதலையடைய வேண்டும் என்பதற்காகத் தான் என்று நீங்கள் சொல்ல வேண்டும். அலட்சியம் வேண்டாம், சோர்வும் வேண்டாம். தேவனுடைய கிருபை இந்த இரண்டு எதிர்துருவங்களில் இருந்து எழுத்தாளரையும், வாசகர்களையும் பாதுகாப்பாராக!

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.