“கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு. யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம்." (உபாகமம் 32:9).

இந்த வசனம் மிகவும் ஆச்சரியமான சத்தியத்தை நம் முன் வைக்கிறது. அது எவ்வளவு ஆச்சரியமானது என்றால், இது எந்த மனித சிந்தனையிலிருந்தும் தோன்றாத விதமாக இருக்கிறது. சர்வவல்லமையுள்ள தேவனுக்கு ஒரு சந்ததி உள்ளது என்றும், அந்த சந்ததி அவருடைய மக்கள் என்றும் இந்த வசனம் நமக்கு தெரியப்படுத்துகிறது. அவர் இந்த உலகத்தை தனது சுதந்திரமாக்கிக்கொள்ள மறுத்துவிட்டார் - அது ஒரு நாளில்  எரிந்து சாம்பலாகும். தேவ தூதர்களின் கூட்டங்களைக் கொண்ட பரலோகம் கூட அவரது இதயத்தைத் திருப்திப்படுத்தவில்லை. நித்தியத்தில் கர்த்தராகிய தேவன் எதிர்பார்ப்புடன் பேசிய வார்த்தைகள் “மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன்" என்பதே (நீதிமொழிகள் 8:31).

அவருடைய பரிசுத்தவான்கள் அவருடைய சுதந்தரம் என்று இந்த ஒரு வசனம் மட்டும் சொல்லவில்லை. “கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்." (சங்கீதம் 135:4) என்பதாக சங்கீதத்தில் வாசிக்கிறோம். தேவனாகிய கர்த்தர் தனக்காக யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார். அவர் இஸ்ரேலை தனது சொந்தப் பொக்கிக்ஷமாக நிறுவினார். மல்கியா 3:17ல் அவர்களைத் தன்னுடைய சம்பத்து என்று அழைக்கிறார். அவர்கள் தேவனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதால் அவருடைய உன்னதமான அன்பு அவர்களுக்கு அருளப்படுவதுடன், அவர்களுக்காக பரலோகத்தில் தங்குமிடங்கள்கூடத் தயாராகி வருகின்றன!

இந்த அற்புதமான சத்தியம் புதிய ஏற்பாட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எபேசியர் 1:18 ஐப் பார்க்கவும் “தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்; தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்” என்று அவர்களுக்காக வேண்டுவதை அப்போஸ்தலன் அறிவிக்கிறார். பரிசுத்தவான்கள் தேவனிடம் சுதந்திரம் பெறுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கான அந்தச் சுதந்தரத்தை அவரே உருவாக்கிப் பாதுகாக்கிறார். இது என்ன ஒரு ஆச்சரியமான வார்த்தை! அவர் எவ்வளவு மகத்தான தேவனாக இருந்தும் நம்முடைய விசுவாசம், அன்பு மற்றும் ஆராதனையின் மூலம் தம்மை மேலும் செல்வந்தராக கருதுவதற்குத் தேர்ந்தெடுக்கிறார். இது என்ன ஒரு அற்புதமான சிந்தனை! வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட மிக அற்புதமான சத்தியத்தில் ஒன்று, ஒன்றுக்கும் வழியில்லாத பாவிகளைத் தெரிந்தெடுத்து அவர்களைத் தமக்குச் சுதந்தரமாக்குகிறார் நம் தேவன்!

ஆனால் தேவனுக்கு நம்முடைய தேவை என்ன இருக்கிறது? நாம் எவ்விதமாக அவரை செல்வந்தராக்க முடியும்? ஞானம், வல்லமை, கிருபை, மகத்துவம் இவை அனைத்தும் தேவனிடம் இருக்கிறது அல்லவா? ஆம் அது உண்மைதான் ஆனால் அவருக்கு தேவையானது வேறு ஒன்று இருக்கிறது. அவர் விரும்பும் பாத்திரங்கள். அதாவது சூரியன் பிரகாசிக்க பூமி தேவைப்படுவது போல, தேவனுக்கும் நிரப்பப்பட பாத்திரங்கள் தேவை. அவருடைய மகிமையைப் பிரதிபலிக்கும் பாத்திரங்கள், அவருடைய கிருபையின் ஐஸ்வரியத்தை ஊற்றக்கூடிய பாத்திரங்கள் அவருக்குத் தேவை.

தேவனுடைய மக்கள் அவருடைய “பங்கு", அவரது சிறப்பு “சொந்த பொக்கிக்ஷம்", அவரது “சொத்து" என்று அழைக்கப்படுவதைக் கவனியுங்கள். இது மூன்று காரியங்களைக் குறிக்கிறது. முதலாவதாக, சுதந்தரமானது மரணத்தின் வழியாகக் கிடைக்கிறது. அதுபோல தேவனுடைய சுதந்தரம் அவருடைய ஒரேபேறான குமாரனின் மரணத்தின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. இரண்டாவதாக, சுதந்திரம் ஒரு நபருக்கும் அவரது வாரிசுகளுக்கும் நிரந்தரமாக கிடைக்கிறது. மூன்றாவதாக, சுதந்திரம் ஒரு தனிநபருக்கு சொந்தமானது. அதில் பங்கு பெறவும், பயன்படுத்தவும், அனுபவிக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு. இப்போது தேவனின் சுதரந்தத்தைப் பற்றி ஐந்து விக்ஷயங்களைச் சிந்திப்போம்.

  1. தேவன் தனக்கு ஒரு சுதந்தரம் வேண்டும் என்று எண்ணினார்: “கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது." (சங்கீதம் 33:12) இங்கு பயன்படுத்தப்படுகிற “ஜனம்”; (1 பேதுரு 2:9) - ல் “தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி ... ராஜரீகமான ஆசாரியக்கூட்டம்... பரிசுத்த ஜாதி... அவருக்குச் சொந்தமான ஜனம்" என்ற வார்த்தைகளுக்கு ஒத்திருக்கிறது. பாக்கியமுள்ள இந்த ஜனமே அவருடைய சுதந்திரமாக இருப்பதற்காகத் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள். இது அவருக்கு பிறகு தோன்றிய யோசனை அல்ல, நித்தியத்தில் தனக்கு சொந்தமாக்கி கொள்ள வேண்டுமென்று அவர் முடிவு செய்தார்.
  2. தேவன் தன்னுடைய சொந்த மக்கைளை கிரயத்திற்கு வாங்கினார். “அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்” (எபேசியர் 1:14). அதேப்போல “தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபை” என்று (அப்போஸ்தலர் 20:28) வாசிக்கிறோம். தேவன் தம்முடைய மக்களை மரணம் மற்றும் அடிமைத்தனம் இதிலிருந்து விடுவிக்க மட்டுமல்ல, அவர்கள் தன்னுடையவர்களாக இருப்பதற்காகவும் இரட்சித்தார்.
  3. தேவன் தம்முடைய சுதந்தரத்தின் மத்தியில் வந்து வாசம் பண்ணுகிறார். “கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்." (சங்கீதம் 94:14). தேவனுடைய சுதந்திரம் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமல்ல என்பதிற்கு உறுதியான ஆதாரம் என்னவென்றால் அன்று விடுவிக்கப்பட்ட இஸ்ரவேலர்களிடையே வாசம் இருந்ததுபோல இன்றும் திருச்சபையின் மத்தியில் பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு விசுவாசியிலும் தனித்தனியாக வாசம் செய்கிறார். “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? (1 கொரிந்தியர் 3:16). “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" (1 கொரிந்தியர் 6:19)
  4. தேவன் தன் சுதந்திரத்தை அழகுபடுத்துகிறார்: ஒரு மனிதன் தன்னுடைய வீட்டையோ, சொத்தையோ வாங்கி, அதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டு, அதை மேம்படுத்தி, அழகுபடுத்துவது போல, தேவனும் தம் மக்களைத் தமக்குத் தகுதியானவர்களாக வடிவமைக்க அவர்களில் செயல்படுகிறார். “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி," (பிலிப்பியர் 1:5) இப்போது தேவன் நம்மை தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சாயலாக மாற்றும் செயலில் உள்ளார். கிறிஸ்துவைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு நபரும் சங்கீதக்காரனுடன் இவ்விதமாக சொல்லலாம்: “கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்" (சங்கீதம் 138:8). நாம் மகிமையடையும் வரையிலும் தேவன் திருப்தி அடையமாட்டார். “அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்” (பிலிப்பியர் 3:21). “அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்" (1 யோவான் 3:12).
  5. எதிர்காலம் என்ன? தேவன் தவறாமல் தன் உடைமையைச் சொந்தமாக்கி, அதில் வாசம்செய்து, அதில் ஆனந்தப்பட்டு, மகிழ்கிறார். வரவிருக்கும் நித்தியத்தில், “தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய்" இருக்கிறார் (ரோமர் 9:23). தேவன் என்றென்றும் வாசமாயிருக்கும் மகிமையான சுதந்திரம் அவருடைய மக்களிடமிருந்து வருகிறது. எபேசியர் 2-ம் அதிகாரத்தின் முடிவில் வரும் இந்த அறிக்கை எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது. “அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது. அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்." (எபேசியர் 2:22).

வெளிப்படுத்துதல் 21-ம் அதிகாரத்தில் நமக்கு முன் இருக்கும் பரலோகத்தின் காட்சி அற்புதமானது மற்றும் மகிமை வாய்ந்தது. “பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன். முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின. சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருக்ஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுக்ஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார். அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்” (வெளிப்படுத்தல் 21:1-3).

செப்பனியா 3:17-ல் உள்ள இந்த வார்த்தை ஆச்சரியமாக இருக்கிறது, “உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார், அவர் உன்னை மிகுந்த மகிழ்ச்சியுடன் இரட்சித்து, தம்முடைய அன்பினால் உன்னில் இளைப்பாறுவார். உன் மகிழ்ச்சியில் களிகூருகிறார்." “நான் திருப்தியாக இருக்கிறேன். இங்கே நான் என்றென்றும் வாழ்வேன், என் சந்ததியோடு நான் என்றென்றும் வாசம் செய்வேன். நான் இரட்சித்து மீட்டுக்கொண்ட பாவிகளின் மேல் என் மகிமையை ஊற்றுவேன்” என்று மாபெரும் தேவன் அறிவிக்கிறார். எனவே, சங்கீதக்காரனுடன் நாமும் இணைந்து “இந்த புரிதல் எனக்கு அப்பாற்பட்டது, இது எனக்குப் புலப்படாதது" என்று பாடலாம் (சங்கீதம் 139:6). தேவனுடைய கிருபை நாம் பெற்ற அழைப்புக்கு ஏற்ற விதமாக நடக்க நமக்கு உதவி செய்வதாக.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.