“பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார். அவனை நடத்தினார். அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்” (உபாகமம் 32:10).
தலைப்பு வசனத்திற்கு முன் உள்ள வசனம், “கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு. யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம்" என்று கூறுகிறது. இந்த உண்மை தவறாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது என்பதற்காக அடுத்த வசனத்தில் வேறு விதமாகக் கூறப்பட்டிருக்கிறது. “யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம்" இந்த வேதபகுதியில், தேவன் தம்முடைய சுதந்திரத்தைத் தனதாக்குவதற்காக எடுத்த முயற்சியைப் பற்றி நாம் கற்றுக்கொள்கிறோம். இதில் நாம் கவனித்து, ஆனந்தப்படக் கூடிய நான்கு விக்ஷயங்கள் இருக்கிறது.
- கர்த்தர் தம் மக்களைக் கண்டறிதல்
“அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார்” “கண்டுபிடித்தார்" என்ற வார்த்தையில், தேடுதல் என்ற அர்த்தம் இருக்கிறது என்று சொல்ல தேவையில்லை, இங்கே நமது கண்களுக்கு முன்பாக நம்மைத் தேடுகிற தேவனைக் குறித்த ஆச்சரியமான காட்சியை சமர்ப்பிக்கிறோம். படைத்தவருக்கும் மனிதனுக்கும் இடையில் வந்த பாவம் பிரிவினையையும் தூரமாகுதலையும் கொண்டு வந்தது. வீழ்ச்சியின் விளைவாக, உலகில் நுழையும் ஒவ்வொரு மனிதனும் “தேவனுக்கு எதிரான பகை" உள்ள மனநிலையில் இருக்கிறான். இதன் விளைவாக தேவனை தேடுபவர்கள் இல்லை. எனவே தேவன் அதிசயமான முறையில் தம்மைத் தாழ்த்தி, தம்முடைய தனித்துவமான அன்பினாலும் கிருபையினாலும் மனிதனைத் தேடுகிறவராகிறார்.
“கண்டறிதல்" என்ற சொல் தேடுவதை மட்டுமல்ல, தேடப்பட்டவரின் தகுதியற்ற தன்மையையும் பாவத்தையும் கருத்தில் கொண்டு, தேடுபவரின் அன்பையும் குறிக்கிறது, மாபெரும் தேவன் தனது மகாமேன்மையான தயவுக்கு முன்குறிக்கப்பட்டவர்கள் அவரது கிருபையைப் பெற வேண்டும் என்பதற்காக அவர்களைத் தேடும்படி தனது மனதைச் செலுத்தி, அவர்களைத் தேடுபவரானார். தேவன் ஆபிரகாமின் மீது தனது மனதை வைத்தார், ஆகையால் தான் ஊர் என்ற கல்தேயரின் தேசத்தில் விக்கிரக ஆராதனை செய்யும் மக்களிடையே அவரை கண்டறிந்தார். தேவன் யாக்கோபின் மீது தனது மனதை வைத்தார். யாக்கோபு தனது சகோதரனுக்கு பயந்து போகையில் நிலத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது யாக்கோபைக் கண்டார். அதுபோலவே மோசேயை நித்திய அன்பால் நேசித்தபடியால் மீதியான் வனாந்தரத்தில், மோசேயைக் கண்டறிந்தார் (யாத்திராகமம் 3:1). இதே விதமாக உலகில் உள்ள ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனையும் அந்த அன்பு தேடி கண்டுக்கொள்கிறது. “என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன்" (ரோமர் 10:20).
தேவன் உன்னை கண்டுபிடித்தாரா? இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நமது வேதபகுதியின் முதல் பகுதியில் சொல்லப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். “பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார்" உனக்கு இந்த உலகம் அவ்விதமாக தோன்றுகிறதா? சூரியனுக்கு கீழே அனைத்தும் வருத்தத்தை தரக்கூடியதாக இருக்கிறதா? ஒவ்வொரு நாளும், இந்த உலகம் உங்களுக்குப் பாரமானதாகத் தோன்றுகிறதா? உலகத்தில் உங்கள் இருதயங்களைத் திருப்தி செய்யும் காரியம் ஒன்றுமில்லை, உங்களுக்குப் பயனுள்ள சேவை செய்ய ஒன்றுமில்லை என்று கண்டிருக்கிறீர்களா? இந்த உலகம் உங்களுக்கு உண்மையாகவே பாழான நிலத்தை போலவும் வெறுமையான வனாந்தர வெளியாகவும் தோன்றுகிறதா?
இந்த இரண்டாவது சோதனையையும் பார்ப்போம். தேவன் தான் முன்குறித்தவர்களைச் சந்திக்கும் போது அந்த நபருக்கு தன்னை குறித்து வெளிப்படுத்துகிறார். தேவன் அவர்களுக்கு அவருடைய சர்வ வல்லமையுள்ள இறையான்மையைம், அவருடைய மாபெரும் பலத்தையும், கற்பனைக்கு எட்டாத பரிசுத்தத்தையும், அவருடைய கருணையையும், வெளிப்படுத்துகிறார். அவ்விதமாக உனக்கு தேவன் வெளிப்படுத்தினாரா? அவருடைய சர்வ வல்லமையுள்ள இறையான்மையைம், அவருடைய மாபெரும் பலத்தையும், கற்பனைக்கு எட்டாத பரிசுத்தத்தையும், அவருடைய கருணையையும், எவ்வளவேனும் வெளிப்படுத்தினாரா? “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” (யோவான் 17:3).
இந்த மூன்றாவது சோதனையையும் பயன்படுத்துவோம்: தேவன் தன்னை உங்களுக்கு வெளிப்படுத்தி இருந்தால், அவர் உங்களைக்குரித்தும் வெளிப்படுத்துவார். ஏனெனில் அவருடைய வெளிசத்தில் தான் நாம் ஒளியைக் காண்கிறோம். உங்கள் நிலையைக் குறித்து வெளிப்படுத்துவது மிகவும் வேதனையான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அபிராகமுக்கு தேவன் தரிசனத்தின் மூலமாக தோன்றியபோது ஆபிரகாம் தேவனிடம் பேசிய வார்த்தைகளைக் கவனியுங்கள்: “இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன்." (ஆதியாகமம் 18:27). அவர் ஏசாயா தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தியபோது அவர், “ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுக்ஷன்” என்று சொன்னார். (ஏசாயா 6:5). தேவன் யோபுவுக்குத் தன்னை வெளிப்படுத்திய போது, “நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்” என்றார் (யோபு 42:6). குறிப்பு! இங்கு யோபு நான் என் அக்கிரம வழிகளை வெறுக்கிறேன் என்று சொல்லவில்லை, மாறாக அவர் "நான் என்னை வெறுக்கிறேன்" என்று சொல்லுகிறார். அன்புள்ள வாசகரே! உங்களுக்கு இந்த அனுபவம் உள்ளதா? நீங்கள் காணாமல் போன, வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ளீர்கள் என்பதை உங்களால் உணர முடிகிறதா? உங்களில் எந்தவித நன்மையும் இல்லை என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள முடிகிறதா? நீங்கள் நரகத்திற்கு மட்டுமே தகுதியானவர் என்பதை உங்களால் உணரமுடிகிறதா? உங்களுக்கு இதுபோன்ற அனுபவம் உண்டா? அப்படியென்றால் அதுவே சரியான ஆதாரம், ஆம், தேவன் உங்களைக் கண்டுபிடித்தார் என்பதற்கு இதுவே நேர்மறை சான்றாக இருக்கிறது.
- கர்த்தர் தம்முடைய மக்களை வழி நடத்துகிறார்
“அவனை நடத்தினார்” கண்டுபிடித்தார் என்பது தேவன் தனது மக்களிடம் இடைபடும் விதத்தின் முடிவல்ல, அவரது செயல்பாடுகளின் ஆரம்பம் மட்டுமே! அவர்களைக் கண்டறிந்த தேவன் அவர்களை என்றும் கைவிடுவதில்லை. காணாமல் போய் அலைந்து கொண்டிருக்கும் தன்னுடைய பிள்ளையை கண்டறிந்த தேவன், தற்போது அவர்களை இடுக்கமான பாதையில் வழிநடத்துகிறார். தேவனுடைய வழிநடத்துதல் குறித்து ஓசியாவின் புத்தகத்தில் அழகான காரியத்தை வாசிக்கிறோம். “நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்” (ஓசியா 11:3). அன்பு நிறைந்த தாய் தன் சிறு பிள்ளையின் கால்கள் பலவீனமாயும் நடக்கப் பழக்கமும் இல்லாத போது, கைப்பிடித்து நடக்கப்பழக்குவதுபோல, தேவனும் தம்முடைய மக்களைக் கரம்பிடித்து தம்முடைய நாமத்தினிமித்தம் நீதியின் பாதைகளில் நடத்துகிறார். அப்படிப்பட்டது தான் தேவனுடைய வாக்குத்தத்தம்: “அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்” (1 சாமுவேல் 2:9). தேவனின் வழிநடத்தலில் மூன்று பரிமாணங்கள் உள்ளன.
அ. சுவிசேக்ஷத்தின் நடத்துதல். - இயேசு சொல்லுகிறார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” (யோவான் 14:6). ஆனால், அவர் இவ்விதமாகவும் சொல்லுகிறார், “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்" (யோவான் 6:44). இதுதான் தேவன் வழிநடத்தும் பாதை. அவர் பாவியை இயேசு கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்கிறார். அன்புள்ள வாசகரே! நீங்கள் இந்த பாதையில் இரட்சகரிடம் வழி நடத்தப்பட்டிருக்கிறீர்களா? கிறிஸ்துவே உங்களுடைய நம்பிக்கையாக இருக்கிறாரா? அவருடைய விலைமதிப்பற்ற இரத்தம் மட்டுமே உங்களுக்கு போதுமானது என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியானால், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடம் உங்களை வழிநடத்தியதற்காக பிதாவாகிய தேவனை துதிப்பதற்கு எவ்வளவு பெரிய காரணம் இருக்கிறது!
ஆ. போதித்து நடத்துதல். – “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;" (யோவான் 16:13) என்று இயேசு கூறினார். நம்மால் சத்தியத்தை கண்டுபிடித்து, அதில் நடக்கும் திறன் நம்மிடம் இல்லை, எனவே நம்மை சத்தியத்தை நோக்கி வழிநடத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. “மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்" (ரோமர் 8:14). அவரே நம்மை வேத வசனம் என்னும் புல்லுள்ள இடங்களில் மேய்த்து அவருடைய வாக்குத்தத்தமாகிய அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் நம்மைக்கொண்டு போய் விடுகிறார் (சங்கீதம் 23:2)! அவருடைய வார்த்தையிலிருந்து பிரகாசிக்கும் ஒவ்வொரு ஒளிக்கதிர்க்கும் நாம் எவ்வளவு நன்றியுடன் இருக்க வேண்டும்!
இ. அன்றாட வாழ்வியல் நடத்துதல். - “நீர் உம்முடைய மிகுந்த மனஉருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை. அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினிஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை" (நெகேமியா 9:19). அன்றைக்கு கர்த்தர் இஸ்ரவேலர்களை எப்படி வழி நடத்தினாரோ, அதே வகையில் இன்றும் இந்த வனாந்தரம் என்னும் உலகில் ஒவ்வொரு அடியிலும் நம்மை வழிநடத்துகிறார். இது எவ்வளவு பெரிய கருணை! “நல்ல மனுக்ஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும். அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்" (சங்கீதம் 37:23). ஆம், நம் வாழ்வில் உள்ள அனைத்தும் உன்னதமான தேவனால் நடத்தப்படுகிறது. என் காலங்கள் அனைத்தும் உம் கையில், எல்லா நிகழ்வுகளும் உம் கட்டளையால் நடக்கின்றன. எல்லாம் வந்து, நிலைத்து முடிய வேண்டும், நமது பரம நண்பரின் விருப்பப்படியே.
- தேவன் தனது மக்களுக்கு அறிவுறுத்துகிறார்
“அவனை உணர்த்தினார்” தேவன் நமக்கும் அதையே செய்கிறார்; தேவன் நமக்கு ஆலோசனை தரும்படியாகவே தம்முடைய இரக்கத்தின்படியே, வேதத்தை நமக்கு கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறார், அவர் நம்மை இருளில் தடவித் திரியாதபடி நம் கால்களுக்கு ஒரு தீபத்தையும், நம் பாதைக்கு வெளிச்சத்தையும் கொடுத்தார். மேலும், அவருடைய வார்த்தையை நாம் புரிந்துகொள்ளும் பணியை போதிய திறனற்ற நமது சுய அறிவுக்கே விட்டுவிடவில்லை. நமக்கு போதிப்பதற்காகத் தடுமாற்றம் இல்லாத போதகர் கொடுக்கப்பட்டிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நமது போதகர். “நீங்கள் பரிசுத்தராலே அபிக்ஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் அவராலே பெற்ற அபிக்ஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை” (1 யோவான் 2:20,27).
தேவனுடைய வார்த்தையைப் பற்றிய சரியான புரிதல் என்பது மனித புத்திசாலித்தனத்தால் அடையக்கூடிய ஒன்றல்ல, அது தேவனால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஈவு. இதைப் பற்றி இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது: “பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்" (யோவான் 3:27). வார்த்தைகள் எவ்வளவு தெளிவாக எழுதப்பட்டிருந்தாலும், நீங்கள் பார்வையற்றவனாக இருந்தால் என்ன பயன்? ஆகவே “ஜென்மசுபாவமான மனுக்ஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்” (1 கொரிந்தியர் 2:14) என்று எழுதப்பட்டுள்ளது. ஆவிக்குரிய பகுத்தறிவு பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே வழங்கப்படுகிறது.
“அவனை உணர்த்தினார்" நமது பலவீனத்தை தேவன் எவ்வளவு பொறுமையாக தாங்குகிறார்! எவ்வளவு கிருபை உள்ளவராய் நமக்கு திரும்பவும் கொஞ்சம் கொஞ்சமாக கற்பனையின் மேல் கற்பனையையும், பிரமாணத்தின் மேல் பிரமாணத்தையும் நமக்குச் சொல்லித்தருகிறார் (ஏசாயா 28:10). நாம் எவ்வளவு மந்தமாக இருந்தாலும், அவர் நம்மைப் போதிக்கிறதில் பொறுமை காக்கிறார். ஏனெனில் கர்த்தர் நமக்காக யாவையும் செய்து முடிப்பார் (சங்கீதம் 138:8) என்று வாக்குறுதி அளித்துள்ளார். அவர் உங்களை உணர்த்தியுள்ளாரா? மனிதன் முழுமையான வீழ்ந்துவிட்டான் என்றும், பாவத்திலிருந்து தன்னை தானே விடுவித்துக்கொள்ள அவன் சக்தியற்றவன் என்றும் போதித்திருக்கிறாரா? நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் (யோவான் 3:7) என்கிற நம்மைத் தாழ்த்த வேண்டிய சத்தியத்தையும், மறுபிறப்பின் அனுபவம் தேவனால் மட்டுமே சாத்தியம் என்றும், அதில் மனித பங்கு எதுவும் இல்லை (யோவான் 1:13) உங்களுக்கு உணர்த்தி இருக்கிறாரா? எல்லா பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்க அவருடைய இரத்தம் போதுமானது (1 யோவான் 1:7) என்றும் தேவனுடைய குமாரனின் பரிகார பலியின் சிறப்பை அவர் உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறாரா? அப்படியானால், அப்படிப்பட்ட தெய்வீக உணர்த்துதலுக்காக நீங்கள் அவருக்கு நன்றி சொல்ல எவ்வளவு பெரிய காரணம் இருக்கிறது பாருங்கள்!
- தேவன் தம் மக்களைக் காப்பாற்றுகிறார்:
“அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்." கிறிஸ்தவம் ஒரு நிபந்தனை சார்ந்த மதமோ, ஏதேச்சையானதும் நிச்சயமற்றதுமான மதமோ அல்ல. அத்தகைய மதத்திற்கு பொருத்தமான பெயர் அர்மீனியனிசம். இந்த ஆர்மினியனிசம் என்ற பிரிவு ரோமன் கத்தோலிக்க அமைப்பின் குமாரத்தி ஆகும். அது தேவனை அவமதிக்கிறதும், வேதத்தை எதிர்க்கிறதும், ஆத்துமாக்களை அழிவுக்கு நேராய் கூட்டிச் செல்வதுமான இந்த ரோமன் கத்தோலிக்க மதம். அதன் தந்தை பிசாசாகிய சாத்தான் என்பதால், அது மனிதனுடைய சுய நீதியையும் சுய மேன்மையையும் ஊக்குவிக்கிறது, மனிதனுக்கு இரட்சிக்கப்படும் திறன் உள்ளது என்று போதிக்கிறது, மேலும் பல உண்மையற்ற கூறுகள் மூலம் நிச்சயமற்ற தன்மையையும் கவலையையும் உருவாக்குகிறது. ஆனால் கிறிஸ்தவம் உறுதியைக் கொண்டுவருகிறது. அந்த உறுதியானது தேவனின் மாறாத அன்பிலிருந்தும் திட்டத்திலிருந்தும் எழுகிறது. நற்கிரியையைத் துவங்கியவராகியே தேவனே அதை நிறைவேற்றவும் செய்வார்.
“கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர். அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை. அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்" (சங்கீதம் 37:28). இது எவ்வளவு பாக்கியம்! நோவா குடிபோதையில் இருந்தபோது கர்த்தர் அவரைக் கைவிட்டாரா? நிச்சயமாக இல்லை. அபிமலேக்கிடம் பொய் சொன்ன போது தேவன் ஆபிரகாமைக் கைவிட்டாரா? இல்லையே. மோசே பாறையை அடித்ததால் அவரைக் கைவிட்டாரா? நிச்சயமாக இல்லை என்பதை இயேசு கிறிஸ்துவின் மறுரூபமலைக் காட்சி நிரூபிக்கிறது. அதேபோல தாவீது தன் பாவத்தால் கர்த்தருடைய எதிரிகள் தேவனுடைய நாமத்தைத் தூக்ஷிக்க இடங்கொடுத்த பாவங்களினிமித்தம் அவனைக் கைவிட்டாரா? நிச்சயமாக இல்லை. அதற்குப் பதிலாக அவனை மனந்திரும்புதலுக்கு வழி நடத்தி, தன்னுடைய பாவத்தை ஒப்புக்கொள்ளச் செய்து, தன்னுடைய தாசரில் ஒருவரை அனுப்பி, “நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்” (2 சாமுவேல் 12:13) என்று சொல்லக் கட்டளையிட்டார்.
“கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். (சங்கீதம் 121: 5 – 8). இவைகள் நமது உண்மையுள்ள தேவனின் உறுதியான உடன்படிக்கையின் சான்றுகள். இவை மூவொரு தேவனான கர்த்தரின் மாறாத வாக்குறுதிகள். பொய் சொல்லாத தேவனின் சத்தியத்தின் வாக்குறுதிகள் இவை. தேவனின் வாக்குறுதியில் எந்த நிபந்தனையும் இல்லை. ‘ஒருவேளை’ என்ற வார்த்தைக்கு இங்கு இடமில்லை. விசுவாசியின் மீது தேவனின் பாதுகாப்பிற்கு எந்த சூழ்நிலையும் தடையாக இல்லை. எந்த மாற்றமும் அந்த தெய்வீக ஸ்திரத்தன்மையை மாற்றவோ பாதிக்கவோ முடியாது. ஐஸ்வரியம் வலையில் அகப்படுத்தினாலும், வறுமை இடறச் செய்ய முயற்சித்தாலும்;, சாத்தான் நம்மை சோதித்தாலும், உள்ளான பாவங்கள் எரிச்சலூட்டினாலும், இவையெல்லாம் கிறிஸ்துவின் ஆடுகளாகிய நம்மில் ஒருவரைக் கூட அழிக்க முடியாது. மறுபுறம், இதுபோன்ற அனுபவங்கள் அனைத்தும் நம் தேவனின் இரட்சிப்பின் கரத்தை இன்னும் நேரடியாகவும் மகிமையாகவும் வெளிப்படுத்த உதவுகின்றன.
“கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே” நாம் காக்கப்பட்டிருக்கிறோம் (1 பேதுரு 1:5). கோபமடைந்த புறஜாதி பேரரசர்களின் சிங்கக் கூண்டுகளும், நெருப்புக் குழிகளும் முன்குறிக்கப்பட்டவர்களின் விசுவாசத்தைச் சோதிக்க முயற்சிக்கும், ஆனால் அவைகள் இவர்களின் விசுவாசத்தைக் காயப்படுத்தவோ அழிக்கவோ முடியாது. கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே, நம்மை கண்டறிந்து, வழிநடத்தி, போதித்து, இரட்சிக்கும் திருத்துவ தேவனுக்கு நன்றி செலுத்த முடியும் எவ்வளவு பெரிய காரணம் இருக்கிறது பாருங்கள்!