“துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்" (மத்தேயு 5:4)
துக்கம் என்பதை விரும்பத்தகாததும், வேதனை நிறைந்ததுமான மனித இயல்பு எனலாம். நமது மனம் துன்பத்தினாலும் கவலையினாலும் உடனடியாகவே சுருங்கி விடுகிறது. இயல்பாகவே நாம் மகிழ்ச்சியான சமுதாயத்தை விரும்புகிறோம். நமது தியான வசனம் மீண்டும் பிறவாதவர்களுக்கு விநோதமாய்த் தோன்றலாம், ஆனால் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு இது இனிமையானதகவும், மன நிறைவான இசையாகவும் தோன்றுகிறது. ஒருவேளை பாக்கியவானாய் இருந்தால், ஏன் துயரப்பட வேண்டும்? நீங்கள் துயரப்படுகிறவர்களாய் இருந்தால் எப்படி பாக்கியவான்கள் ஆவீர்கள்? இந்த வார்த்தைகளை நாம் சிந்திக்கும்போது, ‘அந்த மனிதன் பேசியது போல் ஒருவரும் ஒருபோதும் பேசவில்லை' என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்" என்பது உலக வாழ்க்கைக்கு நேர் எதிரானது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு தலைமுறையிலும் மனிதர்கள் செல்ந்தவர்களையும் மகிழ்ச்சியோடு வாழ்கிறவர்களையும் பாக்கியவான்களாகக் கருதுகிறார்கள். ஆனால் கிறிஸ்து மட்டுமே ஆவியில் தாழ்மை உள்ளவர்களை, துயரப்படுகிறவர்களை பாக்கியவான்கள் என்கிறார். எல்லாவிதமான துன்பங்களையும் அவர் இந்த இடத்தில் குறிப்பிடவில்லை என்பதே உண்மை. மரணத்திற்கு ஏதுவான துக்கமும் உள்ளது. “லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது” (2 கொரிந்தியர் 7:10). ஆனால் இங்கு வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதம் ஆவிக்குரிய துயரத்திற்கு மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. ஆசீர்வதிக்கப்பட்ட துயரம் என்பது தேவனின் பரிசுத்தம், நன்மை மற்றும் நமது சொந்த துன்மார்க்கம், நமது வீழ்ச்சியான இயல்பு, நமது நடத்தையில் இருக்கும் புரட்டுத்தனம் போன்றவற்றை அங்கீகரிப்பதால் வரும் துயரம்.
சுவிசேக்ஷ பகுதியில் வரும் பாக்கியவான்கள் குறித்த எட்டு குறிப்புகள் நான்கு ஜோடிகளாக அமைக்கப்பட்ட வகையில் தியானிப்பது நலமாக இருக்கும். இந்தப் புரிதல் நியாயமானது என்பதை நாம் இந்த தியானத்தில் தொடரும்போது புரிந்து கொள்ளலாம். இந்த எட்டில் முதல் ஆசீர்வாதம் ஆவியில் எளிமையுள்ளவர்களுக்கு என்பதை தங்களில் ஒன்றும் இல்லை, வெறுமையே உள்ளது என்கிற சத்தியத்தை உணர்பவர்கள் என்று நாம் அர்த்தம் கொள்கிறோம். அப்படியான ஏழ்மையில் இருந்து துயரத்திற்குக் கடந்து செல்வது புரிந்து கொள்ள மிகவும் இலகுவானதே. உண்மையில் இவை இரண்டும் தோழர்கள் என்றே கருதும் அளவிற்கு ஒன்றுடன் மற்றொன்று மிகவும் நெருக்கமாகப்; பின்தொடர்கின்றது.
இங்கே “துயரம்" என்ற வார்த்தையின் அர்த்தம் பலவீனம், துன்பம், இழப்பு போன்ற உணர்வுகளை விட அதிகம். இது பாவத்திற்காக வரும் துயரம். “இங்கு துக்கப்படுவது என்பது நமது ஆவியில் உணரும் கைவிடப்பட்ட நிலை, நமக்கும் தேவனுக்கும் பிரிவினையை ஏற்படுத்திய நம் அக்கிரமங்கள் நிமித்தம் வரும் துயரம், நம்மிடம் உள்ள அறச்செயல்களைப் போற்றியதின் விளைவாக வந்த துயரம், நமது சுய-நீதியைச் சார்ந்துகொண்டதால் வந்த துயரம், தேவனை எதிர்த்து, தேவனின் சித்தத்திற்கு விரோதமாக இருந்ததற்கான கவலை. இது போன்ற துயரம் ஆவியின் எளிமையுடன் எப்போதும் இணைந்தே பயணிக்கிறது” (டாக்டர். பெர்ஸன்).
நம்முடைய இரட்சகர் எப்படிப்பட்ட நபரை பாக்கியவான் என்று அழைத்தார் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை லூக்கா 18 -ல் நாம் பார்க்கிறோம். அங்கு சொல்லப்பட்ட ஜெபம் கவனிக்கதக்கது. முதலாவதாக ஒரு சுயநீதி உள்ளவன் தேவாலயத்தில் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். (லூக்கா 18:11,12). அவன் சொன்னவை உண்மையாக இருந்திருக்கலாம், ஆனால் அந்த பரிசேயன் ஆக்கினைக்குள்ளானவானகவே தன் வீட்டுக்குப்போனான். அவனுடைய சிறந்த ஆடை அழுக்கான கந்தைதான் என்றும், அவனது அங்கி கலங்கமுள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளாமல் போனான். அதன்பிறகு ஆயக்காரனைக்குறித்து நாம் வாசிக்கிறோம். “எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்து பிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கக்கூடாதிருக்கிறது” (சங்கீதம் 40:12) என்று சங்கீதக்காரனைப் போல, புலம்புகிறவனாக ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவன் நீதிமானாக தன்னுடைய வீட்டுக்கு சென்றான் (லூக்கா 18:13). ஏனெனில் அவன் ஆவியில் எளிமையுள்ளவனாகவும், தன் பாவத்திற்காகப் புலம்பியவனாகவும் இருந்தான்.
தேவனால் பிறந்த பிள்ளைகளின் பிறப்பின் முதல்வகை அடையாளங்கள் இவை தான். தாங்கள் ஆவிக்குரிய ரீதியில் துயரப்படுகிறவர்கள் என்பதை உணர்ந்து, அதற்காக வருத்தப்படாதவர்கள், அவர்கள் திருச்சபையின் உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, அந்த திருச்சபையில் பணியாற்றுபவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவோ பார்க்கவோ முடியாது. நொறுங்குணடு பணிந்த இருதயத்தில் வாசம்பண்ணும்படி மகா தேவன் இறங்கி வருவதைக் குறித்து கிறிஸ்தவ வாசகர் எத்துணை நன்றியாக இருக்க வேண்டும். பழைய ஏற்பாடில் இதிலும் மகத்துவமான ஒன்றை வேறு எங்கு நாம் காணமுடியும். தேவனுடைய பார்வையில் வானங்கள் கூட சுத்தமில்லாதிருக்குமானால், மனிதன் அவருக்கு ஏற்ற ஆலயத்தை எந்த மனிதனால் கட்டி எழுப்ப முடியும்? அது எவ்வளவு அழகானதாகவே, மேன்மையானதாகவோ இருந்தாலும் அது தேவன் வாழ உகந்த இடமாகாது என்பதை ஏசாயா 66:2 மற்றும் ஏசாயா 57:15 உணர்த்துகின்றன.
“துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்.” துயரப்படுவது என்பது ஒருவன் தனது பாவங்களினால் வேதனைப்படும் போது உணரும் உணர்வு. ஆனால் அந்த எல்லைக்குள் மட்டுமே மட்டுப்படுவதில்லை. இப்படிப்பட்ட துயரம் கிறிஸ்தவ நிலைக்கு இயல்பான குணம். விசுவாசியை வருத்தமடையச் செய்து, அவன் இருதயத்தில் “நான் நிர்ப்பந்தமான மனுக்ஷன்” (ரோமர் 7:24) என்று கதறப் பண்ணும் அநேக காரியங்கள் உள்ளன. நாம் எளிதில் பின்நோக்கி இழுக்கும்படி நம்முடைய அவிசுவாசம் செயல்படுகிறது, நம்முடைய பாவங்கள் நம் தலைமுடியை விட அதிகமாகி, நம்மை வருத்தமடையச் செய்கிறது. நமது பயனற்ற, வாழ்க்கை நம்மில் தொடர்ச்சியான பெருமூச்சுக்கு உட்படுத்திவிடுகிறது. கிறிஸ்துவின் சந்நிதிலிருந்து இலகுவாக விலகிச் செல்லும் நமது மனநிலை, அவருடன் நெருக்கம் இல்லாத நிலைமை, அவர் மீதான பூரணமற்ற அன்பு ஆகியவை அனைத்தும் நம்மை மிகவும் வருத்தப்படுத்துகின்றன. இது மட்டுமல்ல. வெளிதோற்றத்தால் தங்களை பக்தி உள்ளவர்களாக காண்பித்துக்கொண்டு அதன் பலத்தை மறுதலிக்கும் நிலை எப்பக்கத்திலும் அதிகரித்திருக்கிறது (2 தீமோத்தேயு 3:5). தேவனின் சத்தியத்தை அவமதிக்கும் ஆயிரக்கணக்கான தளங்களிலிருந்து வெளிவரும் பொய்யான உபதேசங்கள், தேவ மக்களிடையே பிளவுகள், சகோதரர்களிடையே ஏற்படும் சச்சரவுகள், இவை அனைத்தும் பெரும் வேதனையை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல், உலகில் நடக்கும் கொடூரமான துன்மார்க்கநிலை, கிறிஸ்துவை அவமதிக்கும் மனிதர்கள், சொல்லொணாத் துன்பங்கள் சூழ்ந்திருப்பது போன்றவைகளை நினைக்கும்போது நமக்குள்ளேயே நாம் பெருமூச்சு விடுகிறோம். ஒரு கிறிஸ்தவன் தேவனுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாரோ, அவ்வளவு அதிகமாக ஆண்டவரைப் புண்படுத்தும் அனைத்தும் அவரையும் துக்கப்படுத்துகிறது. அவனுடைய மனப்பான்மை சங்கீதகரானோடும் (சங்கீதம் 119:53), எரேமியாவோடும் (எரேமியா 13:17) மற்றும் எசேக்கியேலிடமும் (எசேக்கியேல் 9:4) ஒத்துப்போகிறது.
“அவர்கள் ஆறுதலடைவார்கள்". இந்த ஆறுதல் முதன்மையாக குற்றஞ்சாட்டும் மனசாட்சியை அகற்றுவதிலிருந்து வருகிறது. இந்த ஆறுதல் பரிசுத்த ஆவியானவர் கிருபையின் சுவிசேக்ஷத்தை பாவ உணர்வு பெற்று இரட்சகரின் தேவையை உணர்ந்த நபரில் அப்பியாசப்படுத்துவதன் மூலம் நிறைவடைகிறது. பாவத்திற்காகப் பிராயச்சித்தம் செய்த இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வழியாக இந்த மன்னிப்பு இலவசமாகவும், முழுமையாகவும் கிடைக்கிறது என்கிற உணர்வை உண்டாக்குகிறது. பிரியமானவருக்குள் அங்கிகரிக்கப்பட்ட (எபேசியர் 1:6) ஒவ்வொரு இருதயத்தையும் நிரப்பும் எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தினால் இந்த ஆறுதல் உண்டாகிறது. தேவன் ஆரோக்கியம் வரப்பண்ணுவதற்கு முன்னர் காயப்படுத்துகிறார். அவர் உயர்த்துவதற்கு முன்பு தழ்மைப்படுத்துவார். முதலில் அவர் நீதியையும் பரிசுத்தத்தையும் வெளிப்படுத்துகிறார், பின்னர் அவர் தம் இரக்கத்தையும் கிருபையையும் வெளிப்படப் பண்ணுகிறார்.
“அவர்கள் ஆறுதலடைவார்கள்" என்ற சொல்லாடல் கிறிஸ்தவர்களின் வாழ்வில் தொடர்ந்து நிறைவேறி வருவது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. போக்குச்சொல்ல முடியாத தன்னுடைய தோல்விக்காக துக்கத்துடன் தன் பாவங்களையெல்லாம் ஒப்புக்கொண்ட பிறகு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் தான் பரிசுத்தப்படுத்தப்படுவேன் என்ற பதிலையும் ஆறுதலையும் பெறுகிறான் (1 யோவான் 1:7). தன்னைச் சுற்றி கிறிஸ்துவிற்கு நடக்கும் அவமானத்தைக் கண்டு அவர் புலம்பினாலும், சாத்தான் முற்றிலுமாக அகற்றப்பட்டு, கிறிஸ்து ராஜா தனது கிருபையின் சிம்மாசனத்தில் அமர்ந்து நீதியின் ராஜ்யத்தை நிறுவுவார் என்ற அறிவு அவருக்கு ஆறுதலாக இருக்கிறது. கர்த்தரின் கடிந்துகொள்ளும் கரம் அவன் மீது தங்கியிருந்தாலும், தற்போது விதிக்கப்படும் தண்டனைகள் அனைத்தும் அவனுக்கு துக்கமாகத் தோன்றினாலும், ஆனந்தம் என்பது இல்லை என்றாலும், வரப்போகும் மகத்தான நித்திய மகிமைக்கு அவனைத் தயார்படுத்துவதற்காகவே (2 கொரிந்தியர் 4:17) இவையனைத்தும் இருப்பதை உணர்ந்துகொள்வது அவனுக்கு ஒரு பெரிய ஆறுதல். தன் தேவனுடன் ஐக்கியம் கொண்ட ஒரு விசுவாசி அப்போஸ்தலனுடன் சேர்ந்து, “துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோக்ஷப்படுகிறவர்களாகவும்" (2 கொரிந்தியர் 6:10) இருக்கிறோம் என்று கூறலாம். ஆனால் பலமுறை மாரா என்ற கசப்பான தண்ணீரை குடிக்க நேரிட்டாலும், தேவன் அதன் அருகிலே கசப்பை முறிக்கும் ஒரு செடியை அதன் பக்கத்திலே நட்டிருப்பதைக் காண்பார். ஆம், இப்போதும் துயரப்படுகிற கிறிஸ்தவர்கள் தெய்வீக ஆறுதல் தருகிறவரால் ஆறுதல் அடைகிறார்கள். அவருடைய ஊழியர்கள் ஊழியத்தின் வழியாகவும், சக கிறிஸ்தவர்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகளினாலும் ஆறுதல் அடைகிறார்கள். இது போன்ற வாய்ப்புகள் இல்லாதபோது, தேவனுடைய வார்த்தையின் வாக்குறுதிகள் அவர்களின் நினைவில் கொண்டு வரப்பட்டு ஆறுதல் பெறுகிறார்கள். நல்ல ரசம் கடைசிவரைக்கும் வைத்து வைக்கப்பட்டிருக்கிறது. சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்" (சங்கீதம் 30:5). அவர் இல்லாதது போன்ற இந்த நீண்ட இரவில், துக்கம் அனுபவித்தவராகிய மனுக்ஷகுமாரனுடன் ஐக்கியம்கொள்ள பரிசுத்தவான்கள் அழைக்கப்படுகின்றனர். ஆனால் தேவனுக்கே மகிமை, "நாம் அவருடன் பாடுசகித்தால், அவரோடே கூட ஆளுகையும் செய்வோம்" என்று எழுதப்பட்டுள்ளது (ரோமர் 8:17). அந்த மேகமற்ற விடியலைக் காணும்போது அது எவ்வளவு ஆறுதலையும் சந்தோக்ஷத்தையும் நமக்குத் தரும்! அப்போது ஏசாயா 35:10-ல் சொல்லப்பட்ட வார்த்தை நிறைவேறும்: “துக்கமும் பெருமூச்சும் பறந்துபோகும்." அது மட்டுமல்லாமல் வெளிப்படுத்துதல் 21:3-4ல் சொல்லப்பட்ட வார்த்தையும் நிறைவேறும்.