“கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே” (எபிரெயர் 12:5).

தேவனுடைய சிட்சைக்கும் தண்டனைக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்வது மிக அவசியம். இந்த வேறுபாட்டை உணர்ந்துகொள்வது தேவமகிமையையும், கனத்தையும் நிலைநிறுத்துவதற்கும், கிறிஸ்தவனின் உள்ளான சமாதானத்திற்கும் இன்றியமையாதது. இந்த வேற்றுமை மிகவும் எளியது என்றாலும் அது நம் கண்களுக்கு மறைவாகி விடுகிறது. தேவனுடைய மக்கள் தங்கள் பாவத்திற்காக தண்டிக்கப்படுவது ஒருபோதும் சாத்தியமில்லை. ஏனெனில் அவர்களின் பாவங்கள் ஏற்கனவே சிலுவையில் தண்டிக்கப்பட்டுள்ளன. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய இடத்தில் நம்முடைய பாவங்களுக்கான முழு தண்டனையையும் ஏற்றுக்கொண்டார். அதனால்தான், “அவருடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்" (1யோவான் 1:7) என்று எழுதப்பட்டுள்ளது. தேவனின் நீதியும், அன்பும், கிறிஸ்து செலுத்திய முழு விலையையும் மீண்டும் நம் மீது விதிக்க அனுமதிக்காது. ஆனால் தண்டனைக்கும் சிட்சைக்கும் உள்ள வித்தியாசம ஒருவர் அனுபவிக்கும் துன்பங்களின் இயல்பில் இருப்பதில்லை. இதை நினைவில் கொள்வது மிகவும் அவசியம். இவை இரண்டுக்கும் மூன்று வித்தியாசங்கள் உள்ளன. முதலில் தேவன் செயல்படும் அடிப்படைகள். முதலாவதில், தேவன் நியாயாதிபதியாகச் செயல்படுகிறார். ஆனால் இரண்டாவதில் தந்தையாகவே செயல்படுகிறார். குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு, தண்டனைத் தீர்ப்பை அறிவிப்பது நீதிபதியின் வேலை. தேவனுடைய பிள்ளைகள் மீது அத்தகைய தண்டனைக்கு உரிய தீர்ப்புக்கு உட்படமாட்டார்கள். ஏனெனில் அவர்களுடைய பாவம் கிறிஸ்துவின் மீது சுமத்தப்பட்டது. “அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்” (1 பேதுரு 2:24).

எனவே, ஒரு விசுவாசி தன் பாவத்திற்காக தண்டிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான் என்றாலும், ஒரு கிறிஸ்தவனுக்கு மேலும் தண்டனை இல்லை (ரோமர் 8:3) என்பது உண்மைதான் என்றாலும் அவன் தேவனால் கண்டிக்கப் படுகிறான். கிறிஸ்தவன் கிறிஸ்தவன் அல்லாதவனிலிருந்து முற்றிலும் மாறான நிலையில் இருக்கிறான். அவன் தேவனின் குடும்பத்தைச் சேர்ந்தவன். தேவனுக்கும் அவனுக்கும் உள்ள உறவு தந்தைக்கும் குமாரனுக்கும் உள்ள உறவைப் போன்றது. எனவே குமாரன் என்ற முறையில் ஒழுங்கில்லாமல் நடக்கும்போது அவன் சிட்சிக்கப்பட வேண்டும். தேவனின் ஒவ்வொரு பிள்ளைகளின் இருதயங்களுக்குள்ளும் மதியீனம் ஒட்டிக்கொண்டிருக்கும், அவைகளை சரிசெய்யும்படி கண்டிப்பதும், கீழ்ப்படுத்துவதும் தாழ்மைப்படுத்துவதும் மிகவும் அவசியமாகிறது.

இரண்டாவதாக, தண்டனைக்கும், ஒழுங்குபடுத்துதலுக்கும் உள்ள வேறுபாடு, அவற்றை யார் பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்தது. தண்டனையைப் பெறுகிறவர்கள் தேவனுடைய எதிராளிகள். சிட்சையைப் பெறுவது அவருடைய பிள்ளைகள். முழு உலகத்தின் நியாயாதிபதியாக, தேவன் இனி வருங்காலத்தில் தம் எதிரிகள் மேல் பழிவாங்குவார். தமது குடும்பத்தின் தகப்பனாக, தேவன் தம் பிள்ளைகளின் ஒழுக்கத்தைப் பராமரிக்கிறார். ஒன்று தீர்ப்புக்குரிய சட்டம் சார்ந்தது, மற்றொன்று தகப்பன் தன் பிள்ளைகளை வளர்ப்பதின் காண்பிக்கும் ஒழுக்கம் சார்ந்தது.

மூன்றாவதாக, இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு அவற்றின் நோக்கத்தில் காணப்படுகிறது. ஒன்று பழிவாங்குதல் மற்றொன்று சரிசெய்தல். ஒன்று தேவனின் கோபத்தால் உண்டானது. மற்றொன்று அவருடைய அளவற்ற அன்பினால் உண்டாகிறது. தேவனின் தண்டனை என்பது பாவிகளின் நன்மைக்காக ஒருபோதும் விதிக்கப்படவில்லை, ஆனால் தேவனின் நியாயபிரமாணத்தை மகிமைப்படுத்தவும் அவரது ஆளுகையை நியாயப்படுத்தவும் அனுப்பப்படுகிறது. ஆனால் தேவனின் சிட்சை அல்லது கண்டிப்பு, அவரது பிள்ளைகளின் நலனுக்காக அனுப்பப்படுகிறது. “அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள். இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்." (எபிரேயர் 12:9,10).

மேலே காட்டப்பட்டுள்ள வேறுபாடுகள், தெய்வீக தண்டனை மற்றும் தெய்வீக ஒழுக்கத்தை ஒன்றாகக் கருதும் கிறிஸ்தவர்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை உணர எச்சரிப்பதாகும். ஒரு விசுவாசி தெய்வீக ஒழுக்கத்தினால் நடத்தப்படும்போது, தன்னை தேவன் தன்னை தண்டிக்கிறார் என்று நினைப்பது தவறு. அப்படி நினைப்பது இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தை அவமதிப்பதாகும். தேவன் தம்முடைய அன்பினால் உங்களைத் ஒழுங்குப்படுத்துகிறார், கோபத்தால் உங்களை அழித்துவிடவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்தக் கிறிஸ்தவனும் இந்தச் சிட்சையைத் தவிர்க்க முடியாத தீமையாக, சுமக்க வேண்டிய சுமையாகக் கருதலாகாது. மாறாக தேவனுடைய நன்மையிலும் உண்மையிலும் இருந்து இது வருவதால், இந்தப் பெரிய ஆசீர்வாதத்திற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். தேவனால் ஒழுக்கத்துடனும், கண்டிப்புடனும் நடத்தப்படுவது நாம் அவருடைய பிள்ளைகள் என்பதற்கு சான்றாகும். எந்தத் தந்தையும் தன் குடும்பத்தவர் அல்லாத ஒருவரைக் கண்டிப்பதில்லை. அவர் தனது வீட்டாரை நேர்மையான பாதையில் நடப்பதற்கே ஒழுங்குபடுத்துகிறார். தெய்வீக ஒழுக்கம் நம் நன்மைக்காகவும் நமக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கவே அனுமதிக்கப்படுகிறது. எனவே, ஒழுங்குபடுத்தும் தடியைத் தாண்டி, அதைக் கையாளும் சர்வஞானியாகிய தேவனுடைய கரத்தைப் பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த நிருபத்தைப் பெற்றுக்கொண்ட அந்த எபிரெயக் கிறிஸ்தவர்கள் அந்த நேரத்தில் பெரும் சோதனைகளையும், இன்னல்களையும் அனுபவித்தனர். அவர்கள் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் போதும், பின்னர் அப்போஸ்தலர்களின் ஊழியத்தின் மூலமாகவும்; மேசியாவை விசுவாசிக்க யூதர்கள் மத்தியில் இருந்து வழிநடத்தப்பட்ட மீதியானவர்களான சிறுகூட்டத்தார்;. அந்த நேரத்தில் மேசியாவின் இராஜ்ஜியம் விரைவில் ஸ்தாபிக்கப்பட்டு இந்த பூமியின் மீது ஆட்சி அமைக்கப்படும் என்றும் அவர்கள் அந்த ராஜ்யத்தின் மிக உயர்ந்த பதவிகளை வகிக்க முடியும் என்றும் நினைத்திருக்கலாம். ஆனால் ஆயிர வருட அரசாட்சி இன்னமும் வரவில்லை. மேலும் அவர்கள் பல கசப்பான அனுபவங்களைச் சந்திக்க நேரிட்டது. இவர்கள் புறஜாதிகளால் வெறுக்கப்பட்டது மட்டுமல்லாமல், விசுவாசிக்காத தங்களுடைய சொந்த மக்களாலும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். இதனால் அவர்கள் இயல்பு வாழ்க்கை நடத்துவது கூட மிக கடினமாகிவிட்டது. தேவனுடைய திட்டம் அகோர முகமுடையதாய்த் தோன்றியது. கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட அநேகர் யூதமார்க்கத்திற்குத் திரும்பச் செல்ல விழைந்து, அதில் கொஞ்சக்காலம் செழிப்பையும் அனுபவித்தனர். விசுவாசமுள்ள யூதர்களின் உபத்திரவம் அதிகமடையத் துவங்கியபோது, அவர்களும் விசுவாசத்தை விட்டுப் பின்வாங்க சோதிக்கப்பட்டார்கள். கிறிஸ்தவத்தைத் தழுவியது அவர்களுடைய தவறா? நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவைப் பற்றிக்கொண்டதால் அவர்கள் மீது பரலோகம் கோபப்பட்டதா? அவர்கள் துன்பம் தேவன் அவர்கள் மீது தயவுள்ளவராக இல்லை என்பதின் அறிகுறியாகத் தெரிகிறது அல்லவா?

தங்கள் அவிசுவாசமுள்ள இருதயங்களின் சிந்தை உடையவர்களாகிய மக்களை அப்போஸ்தலன் கையாண்டவிதம் நமக்கு போதனை தரக்கூடியதாகவும்,  ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றாகவும் உள்ளது. அவர்களுடைய வேதங்களிலிருந்து அவர்களுக்குப் பதிலைக் கொண்டு வருகிறார். நீதிமொழிகளில் வரும் எச்சரிப்பை அவர்களுக்கு ஞாபகப்படுத்தி, அவர்களுடைய சூழலுக்குள் பொருத்துகிறார். முதலில் நாம் குறிப்பிடும் வசனத்தைக் கவனியுங்கள்: “உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்” (எபிரெயர் 12:5). பழைய ஏற்பாடில் உள்ள புத்திமதிகள் பழைய உடன்படிக்கைக் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே சுருக்கலாகாது என்பதை இது நமக்குக் காட்டுகிறது: அவை புதிய உடன்படிக்கையின் காலத்தில் வாழ்கிற நமக்கும் அதே வலிமையுடனும் நேரடியாகவும் பொருந்துகின்றன. “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. அது நமக்குப் பிரயோஜனமுள்ளது” (2 தீமோத்தேயு 3:16) என்பதை நாம் மறந்து விடாதிருப்போமாக. பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடு போலவே நமது போதனைக்காகவும்;, எச்சரிப்புக்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, நமது வேதபகுதியில் உள்ள வார்த்தையின் காலத்தைக் கவனியுங்கள்  “உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.” அப்போஸ்தலர் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட தேவனின் வார்த்தையைப் பற்றி பேசுகிறார். என்றாலும் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று எழுதாமல், இவ்வாறு பேசுகிறார் என்று எழுதுகிறார். இதே நியமம் ஏழு முறை வெளிப்படுத்தல் இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகாரத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது: “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.” இந்த வசனங்களில் ஆவியானவர் சொல்லிய வார்த்தை என்று இல்லாமல், சொல்லுகிற வார்த்தை என்று பயன்படுத்தியிருப்பதைக் கவனியுங்கள். பரிசுத்த வேத வார்த்தைகள் இன்றும் பேசுகிற தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தையாக இருக்கிறது.

இப்போது நம் வேதபகுதியில் உள்ள “மறந்தீர்கள்" என்ற வார்த்தையைக் கவனிப்போம். நீதிமொழிகள் 3:11,12 வசனங்களில் உள்ள எச்சரிப்பை அன்றைய எபிரேய கிறிஸ்தவர்கள் அறியவில்லை என்று அர்த்தமல்ல, மாறாக அவர்கள் அதை தங்கள் கவனத்தில் இருந்து வழுவிப்போக விட்டுவிட்டார்கள். அவர்கள் தேவனுடைய தகப்பன் பண்பையும், பிள்ளைகளாக அவருடன் இருந்த உறவையும் மறந்துவிட்டார்கள். அதன் விளைவாக தேவன் அவர்களை நடத்தும் முறையையும், நோக்கத்தையும் தவறாகப் புரிந்துகொண்டார்கள். தங்களை வழிநடத்தும் விதத்தில் தேவனுடைய அன்பைப் பாராமல், தங்கள் வாழ்வுச் சூழல்கள் தேவனுக்கு அவர்கள்மீது வெறுப்பு இருப்பதையே காண்பிக்கிறது என்று தப்பெண்ணம் கொண்டார்கள். இதன் காரணமாக, அவர்கள் தங்களைத் தாங்களே மகிழ்ச்சியுடன் தேவனுக்கு அர்ப்பணிப்பதற்குப் பதிலாக, விரக்தியையும் நம்பிக்கையற்ற தன்மையையும் காட்டினார்கள். இங்கே நமக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை உள்ளது. தேவன் தமது திட்டப்படி நம்முடன் இடைப்படும் வழிகளை நம்முடைய சொந்த அறிவால் உற்று நோக்காமல், தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும். “என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே” (நீதி 3:11) என்று பிள்ளைகளிடம் பேசுவது போல நம்மிடம் பேசும் இந்த எச்சரிக்கையை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம் அல்லவா!

இந்த வேதபகுதியில் ‘சிட்சை’ என்கிற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் “பைடியா’ என்கிற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் வரும் “பைடியோன்” என்கிற வார்த்தை இளம் பிள்ளைகளைக் குறிக்கிறதாக உள்ளது. இது போன்ற வார்த்தை உபயோகத்தை யோவான் 21:5 மற்றும் எபிரேயர் 2:13 ஆகிய பகுதிகளிலும் காணமுடிகிறது. இந்த வார்த்தை பிள்ளைகளுடன் கையாளும் ஒரு மென்மையான வழிமுறையைக் குறிக்கிறது. சீடனையும் நீதிநெறிக் கல்வியையும் பிரித்துப்பார்க்க முடியாததுபோல, கிரேக்க மொழியில் “ஒழுக்கம் மற்றும் குமாரன்கள்" என்ற வார்த்தைகள் பிரிக்க முடியாதவை. அதே வேளையில் பிள்ளை வளர்ப்பு என்பது மென்மையான ஒன்று. எனவே இங்கே பயன்படுத்தும் வார்த்தை தம் மக்களுக்குத் தேவன் தரும் படிப்பினை, வளர்ப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. எனவே இங்கு பயிற்சி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது மிகவும் நியாயமானது. இது ஒரு தந்தை தனது பிள்ளைகளை அன்புடனும் ஞர்னமுடனும் திருத்துவது போன்ற காட்சியை வெளிப்படுத்துகிறது.

பெரும்பாலும் குமாரனை திருத்தம் செய்ய கையில் ஒரு பெரம்பு தேவைப்படும். ஆனால் நம் எண்ணங்களை இந்த அம்சத்திற்குள் மட்டுப்படுத்துவது மிகப்பெரிய தவறு. ஒவ்வொரு முறையும் ஒழுக்கம் என்பது தவறு செய்த தனது பிள்ளைகளுக்கு தேவன் திருத்துவதற்காக கொடுக்கும் அடியாக பார்க்கக்கூடாது. தேவனின் பரிசுத்தமான மக்களும், தேவனுக்கு மிகவும் கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகளும் கூட பல முறை துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள், இன்னும் அனுபவிக்கிறார்கள், பல நேரங்களில் தேவன் நம்மைத் திருத்துவதற்காக துன்பத்தை நாம் வாழ்வில் அனுமதிக்கிறார், தண்டிக்கும்படியாக அல்ல. சுயநீதி மற்றும் தன்னிறைவு ஆகியவற்றிலிருந்து நம்மை வெறுமையாக்குவதற்கும், நமது மீறல்களையும், நம் இதயத்தின் கொடிய நோயையும் வெளிப்படுத்தவும் அவை அனுப்பப்படுகின்றன. சில சமயங்களில் நம்மை ஆவிக்குரிய ரீதியில் பலப்படுத்துவதற்காக இப்படிப்பட்ட துன்பங்கள் அனுப்பப்படுகின்றன. அனுபவத்தில், வளர்வதற்கும் பயனுள்ள நிலைக்கு வளரவும் அவை நமக்கு உதவுகின்றன. அதுமட்டுமின்றி, நாம் செய்யும் சேவையில் வரும் வெற்றியால் நாம் கர்வப்படாமல் இருக்க நமது வாழ்வில் வீழ்ச்சியைத் தடுக்கும் விதமாக இந்தச் சிட்சை உதவுகிறது. இங்கே நான்கு உதாரணங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

  1. தாவீது. தாவீதின் காரியத்தில், தேவனுடைய ஒழுக்கத்தின் தடி அவருடைய பாவத்தின் தீமையினிமித்தம், வெளிப்படையான துன்மார்க்கத்தனத்தைத் திருத்த பயன்படுத்தப்பட்டது. அவனுடைய வீழ்ச்சிக்குக் காரணம் அவனுடைய தன்னம்பிக்கை மற்றும் சுயநீதியும் தான். 2 சாமுவேல் 22 மற்றும் 23 அதிகரங்களில் தாவீது பாடின இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முதலாவது தன்னுடைய வாழ்க்கையின் ஆரம்பம் மற்றும் இரண்டாவது தன்னுடைய வாழ்க்கையின் முடிவுவிலும் இயற்றப்பட்டது. இதை கவனமாகப் படித்தால், வாசகர்கள் இரண்டிற்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பார்கள். 2 சாமுவேல் 22:22-25 வசனத்தை வாசிக்கும்போது, தாவீது வீழ்ச்சியை தேவன் அனுமதித்ததில் எந்தவித ஆச்சரியமில்லை என்று அறிவீர்கள். ஆனால் 23 ஆம் அதிகாரத்தில் உள்ள ஆசீர்வாதமான மாற்றத்தைக் கவனியுங்கள். 5-ம் வசனத்தில் தாவீதுனுடைய தோல்வியின் இதயப்பூர்வமான வாக்குமூலத்தை நாம் காண்கிறோம். வசனங்கள் 10 முதல் 12 வரை, தேவனை மகிமைப்படுத்தி அவருக்கே ஜெயத்தை செலுத்தும் அறிக்கையினையும் நாம் காண்கிறோம். தாவீதை தேவன் கண்டித்தது வீண் போகவில்லை.
  2. யோபு. ஒருவேளை மனிதர்களுக்கு வரும் எல்லாவிதமான துன்பங்களையும் அவர் சகித்திருப்பார். குடும்பத்தினர் இழப்பு, சொத்துக்கள் இழப்பு, சரீர பலவீனம் போன்றவை ஒன்றுக்கு பின் மற்றொன்று நிகழ்ந்தன. ஆனால் அந்த இழப்புகளிலிருந்து யோபு அதிகமான நன்மையை பெற்று, அதிகமாக பரிசுத்தத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்பதே தேவனின் நோக்கமாக இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே, யோபு தன்னை நீதிமான் என்று சொல்லிக்கொள்கிறார். ஆனால் யோபு இறுதியாக மூன்று மடங்கு பரிசுத்தத்துடன் இருக்கும் தேவனை நேருக்கு நேர் பார்த்தபோது, அவர் தன்னை தான் வெறுத்து மனந்திரும்புவதாக ஒப்புக்கொண்டார். “ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.” (யோபு 42:6). தேவன் தாவீதின் காரியத்தில் உண்டான துன்பம் அவனைத் திருத்துவதற்காகத் தரப்பட்டது. ஆனால் யோபுக்கு ஏற்ப்பட்ட துன்பங்களோ அவருக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடுக்க அனுமதிக்கப்பட்டது.
  3. ஆபிரகாம். இவருடைய விக்ஷயத்தில் முற்றிலும் மாறுபட்ட நோக்கத்திற்காக துன்பங்கள் அனுமதிக்கப்படுவதை நாம் காண்கிறோம். அவருக்கு நேரிட்ட சோதனைகள், துன்பங்கள் அவரது பாவங்களின் விளைவாகவோ அல்லது அவரது தனிப்பட்ட குறைகளைத் திருத்தவோ அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அவரது ஆவிக்குரிய வளர்ச்சிக்காக அனுமதிக்கப்பட்டது. ஆபிரகாம் பலவழிகளில் அதிகம் சோதிக்கப்பட்டது, அவருடைய விசுவாசத்தில் பலப்படவும், அவரில் பொறுமை பூரண கிரியை செய்யவும் வேண்டும் என்பதற்காகவே. இவ்வுலக ஆசையில் இருந்து விடுபட்டவனாக ஆபிரகாம் இருக்கும்படியாகவும், தேவனுடன் உள்ள உறவை அவர் நெருக்கமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவும் தேவன் அவரைப் பிரித்தெடுத்து, தம்முடைய சிநேகிதனாக்கிக் கொண்டார் (யாக்கோபு 2:23)
  4. பவுல். “அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது” (2கொரிந்தியர் 12:7). இந்த “முள்" சோதனைக்காகவும், பாவத்திற்காகவும் அனுப்பப்பட்டாமல், பெருமை வராமல் தடுக்கும் முகமாகக் கொடுக்கப்பட்டது. இந்த வசனத்தில் “உயர்த்தாதபடிக்கு” என்ற வார்த்தை இரண்டு முறை பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த “முள்ளை" அனுப்பியதன் விளைவாக பிரியமான அப்போஸ்தலன் தனது பலவீனங்களைப் பற்றிய அதிகமான உணர்வை உடையவராய் இருந்தார். எனவே நம்முடைய சுயத்தை வெறுமையாக்கி நம்முடைய மேன்மை ஒன்றுமில்லை என்பதற்காக துன்பங்கள் அனுப்பப்படுகிறது.

மேற்கண்ட சிட்சைகளின் வித்தியாசமான நோக்கங்களுக்காக, அதாவது அவை ஒழுக்கத்திற்காகவும், சீர்திருத்துதலுக்காகவும், கற்றுக்கொள்வதற்காகவும், நமது தற்காப்பிற்காகவும் தரப்படுவதை நாம் விளங்குவது அவசியம். நாம் துன்பத்திற்கான காரணத்தைக் கண்டறிவதிலும், பிறருடைய துன்பங்களைக் குறித்து தீர்ப்பிடுவதிலும் எத்துனை பலவீனராகவும், மதிகேடராகவும் செயல்பட்டு விடுகிறோம் பாருங்கள்! நம்முடைய சக கிறிஸ்தவன் தெய்வீகப் பிரம்பின் கீழ் இருக்கும்போது அவருடைய பாவங்களுக்காகவே; தண்டிக்கப்படுகிறார் என்று முடிவு கட்டாதிருப்போமாக. அடுத்த அத்தியாயத்தில் தேவசிட்சையை எந்த மனப்பாண்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சிந்திப்போம்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.