“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” (மத்தேயு 5:8).
இது நம் ஆண்டவரின் எதிரிகளின் கைகளால் சிதைக்கப்பட்ட மற்றொரு ஆசீர்வாதம். தங்கள் மூதாதையர்களான பரிசேயர்களைப் போலவே, தாங்கள் மட்டுமே சத்தியத்தில் உயர்ந்தவர்கள் என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள், மெய்யான தேவனுடைய மக்களிடம் இருக்கும் பரிசுத்தம் தங்களிடம் மட்டுமே இருப்பதாக பெருமை பேசுகிறார்கள். தங்களில் இருந்த பழைய பாவ சுபாவம் முழுவதுமாக பரிசுத்தமாகிவிட்டதாகவோ, அல்லது அவர்களிலுள்ள சரீர சுபாவம் முற்றாக தேவன் அழித்துவிட்டதாகவும் அதினால், அவர்கள் ஒருபோதும் பாவம் செய்யவில்லை என்றும், குறைந்த பட்சம் எந்த பாவ இச்சைகளும் எண்ணங்களும் அவர்களுக்குள் நுழையவில்லை என்றும். நினைத்து ஏமாற்றப்பட்ட துரதிக்ஷ்டசாலிகள் கிறிஸ்தவ வரலாற்றில் உண்டு. ஆனால் தேவனுடைய வார்த்தை இப்படியாக சொல்கிறது. “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது” (1 யோவான் 1:8).
சந்தேகத்திற்கு இடமின்றி, அத்தகைய மக்கள், தங்கள் வஞ்சகமான மற்றும் வீண் கருத்துக்களை நியாயப்படுத்த, வேதத்தை சுட்டிக்காட்டி, வசனப் பகுதிகளை மேற்கோள் காட்டி, பாவ பரிகார விக்ஷயத்தில் தேவனுடைய நீதியின் வார்த்தைகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” என்பது நமது இருதயங்கள் தீமையான அசுத்தங்களில் இருந்து கழுவப்பட்டது என்று அர்த்தம் அல்ல, மாறாக கிறிஸ்துவின் தியாகபலி நமது பாவங்களுக்கான தண்டனையை முற்றிலும் அகற்றி இருக்கிறது என்பது தான். “பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17) என்ற வசனப்பகுதி இந்த உலகத்தில் நாம் இருக்கும் நிலையை குறித்ததல்ல, தேவனுக்கு முன்பாக நிற்கும் கிறிஸ்தவனின் நிலையைக் குறிக்கிறது.
இருதயத்தில் சுத்தம் என்பது பாவமே இல்லாத வாழ்க்கை என்ற அர்த்தமுடையது அல்ல என்பதை ஆவியானவரால் எழுதப்பட்ட தேவனின் பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாற்றை நாம் ஆராயும்போது தெளிவாகிறது, நோவா ஒரு சமயத்தில் குடிபோதையில் இருந்தார். ஆபிரகாமும் தெளிவற்றவராகவும் திசைதிருப்புகிறவராகவும் நடந்து கொண்ட உதாரணங்கள் உள்ளன. மோசே கீழ்ப்படியாதவராக ஆனார். யோபு தான் பிறந்த நாளைச் சபித்தார். எலியா யேசபேலின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் ஓடிப்போனார். பேதுரு கிறிஸ்துவை அவர் எனக்கு யாரென்று தெரியாது என்று மறுத்தார். உண்மைதான்! இருப்பினும், இவை அனைத்தும் கிறிஸ்தவம் நிறுவப்படுவதற்கு முன்பே நடந்தது என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஆம், ஆனால் அதன் பிறகும் அவ்வாறுதான் நடந்தது. அப். பவுலை விட கிறிஸ்துவைப் பின்பற்றிய ஒருவரை நாம் எங்கே போய்க் கண்டுபிடிக்க முடியும்? அவருடைய அனுபவம் எப்படி இருக்கிறது? ரோமர் நிருபத்தின் 7வது அதிகாரத்தைப் வாசித்துப் பாருங்கள். “ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். உள்ளான மனுக்ஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது." (ரோமர் 7:21,22,23) என்று எழுதுகிறார். இங்கு அப். பவுல் மனதளவில் நான் தேவனுக்கும் சரீர காரியத்தில் பாவத்திற்கும் அடிமையாய் இருக்கிறேன் என்கிறார். ஓ..! கிறிஸ்தவ வாசகரே! உண்மையில் நம்முடைய பழைய மனிதனின் அசுத்தமும் அவருடைய இருதயத்தில் இருந்துகொண்டு தான் இருக்கிறது என்பதைப் பற்றி அறிவும் உணர்வும் தான் நமக்கு சுத்தமான இருதயம் இருக்கிறது என்பதற்கான முடிவான சான்று. நமது வேதபகுதியை இன்னும் நெருக்கமாகப் பார்க்க முயலுவோம்.
“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்". மலைப் பிரசங்கத்தின் எந்த அம்சத்தைப் பற்றி கருத்துத் தெரிவிப்பதற்கு முன், கர்த்தராகிய இயேசு யூத சமயத்தில் பிறந்து வளர்ந்தவர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆவியால் போதிக்கப்பட்ட ஒருவர் இவ்விதமாக கூறினார், 'இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம், யூதர்கள் கடைப்பிடிக்கும் வெளிப்புற சுத்திகரிப்பு அல்லது பரிசுத்தம் மற்றும் தேவனுடனான இந்த பரிசுத்தத்தின் தொடர்பை நமது தேவன் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று நான் நினைக்காமல் இருக்க முடியாது. சிலை வழிபாட்டால் தீட்டுப்படுத்தப்பட்ட புறஜாதியாரிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தேவனுடைய மக்கள் என்று அழைக்கப்படும் இந்த யூதர்கள், கர்த்தருக்குப் பரிசுத்த மக்களாக ஏற்;படுத்தப் பட்டனர். பரிசுத்த ஜனங்களாக, ஜீவனுள்ள மெய்யான தேவனை ஆராதனை முறைகளின் மூலம் தேவனிடம் செல்லும் பாக்கியம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இத்தகைய பரிசுத்தம் மற்றும் தேவனுடன் தொடர்பு கொள்ளும் பாக்கியத்தைப் அடைந்த இவர்களில் வீண் பெருமை வந்தது.
ஆனால் மேசியா இராஜ்யத்தின் வாரிசுகளுக்கு இதைவிட ஒரு உன்னதமான தன்மையும், அதிக பாக்கியமும் இருக்கும். அவர்கள் வெளிப்புறமாக மட்டும் பரிசுத்தமாக இருப்பதுடன் நில்லாமல், “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்". தேவனின் மகிமை தங்கும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவது மட்டுமல்லாமல், தேவனைப் தரிசிக்கவும், அவருடன் நெருங்கிய உறவுக்குள் நுழையவும் வேண்டும். யூதர்களின் வெளிப்புற சட்டங்கள் மற்றும் கடமைகளுக்கு மாறாக, மேசியாவின் ஊழியர்கள் என்கிற வகையில் நமக்கான உறவு உள்ளான ஆவிக்குரிய நிலையில் வெளிப்படுகிறது. நமக்கு முன்பாக உள்ள இந்த வசனப்பகுதி மிகவும் முக்கியமானதும், பூரிப்படையச்செய்யும் சத்தியமாயும் இருக்கிறது. (டாக்டர்: ஜான் புரௌண்)
“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்". இயேசு சொல்லிய இந்த வார்த்தைகள் அதே நேரடி அர்த்தம் உடையதா, அல்லது உருவகமானதா? என்கிற கேள்வியில் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. ஒரு நபர் மறுபடியும் பிறக்கும்போது கிடைக்கும் புதிய இதயத்தை அது குறிக்கிறதா? அல்லது தேவ ஆவியால் பரிசுத்தப்படுத்தப்படுவதால் அவனுக்குள் நிகழும் மாற்றத்தின் தினசரி செயல்முறையைக் குறிக்கிறதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளன. ஒருவேளை இவை இரண்டும் ஒன்றாக வருகிறதாக இருக்கலாம். ஆசீர்வாதங்களின் வரிசையில் இந்த ஆசீர்வாதம் பிந்தி வருவதால் நமது இரட்சகர் ஆசீர்வதித்த புதிய இருதய சுத்தம் என்பது நமது மறுபிறப்பின் அனுபவத்தில் தொடங்கி வளர்ந்தேறுகிற ஒன்று தான் என்று நாம் விளங்கிக்கொள்ளலாம். இருப்பினும், ஒரு இரட்சிக்கப்படாத நபரில் இதய சுத்தம் இல்லாததால், இங்கு குறிப்பிட்ட இதய சுத்தத்திற்கு மூலம் மறுபிறப்பு என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.
சங்கீதக்காரன் சொன்னார், “இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர். அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்” (சங்கீதம் 51:6). இன்றைய கிறிஸ்தவ வெளிப்புற மறுமலர்ச்சி மற்றும் சீர்திருத்தத்தை விட இது எவ்வளவு ஆழமானது! இங்கே வெளிப்புறப் பிரயாசங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இன்று நாம் நம்மைச் சுற்றி இருக்கும் பெரும்பாலான கிறிஸ்தவம், செயல்களினால் மூலம் இரட்சிப்பைத் தேடும் ஒரு மதமாக அல்லது சரியான விசுவாச சட்டத்திற்கு அறிவுப்பூர்வமாக இசைந்திருப்பதை மட்டும் முக்கியப்படுத்துகிற மதமாக இருக்கிறது. ஆனால் தேவன் இதயத்தைப் பார்க்கிறார். இங்கே இருதயம் என்ற வார்த்தை மனம், ஆசைகள், சித்தம் போன்ற மனதின் உள்ளே இருக்கும் அனைத்தையும் உள்ளடக்கியது. தேவன் அந்தரங்கத்தை பார்ப்பவராக இருப்பதால், அவர் தனது மக்களுக்கு ஒரு புதிய இதயத்தைத் தருகிறார் (எசேக்கியேல் 36:26). இந்த சுத்த இதயத்தைப் பெற்றவர்கள் அனைவருமே பாக்கியவான்கள் தான்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த ஆறாவது பாக்கியமான பண்பு நமது மறுபிறப்பில் நமக்குக் கொடுக்கப்பட்ட புதிய இதயம் மற்றும் சுபாவத்தின் அடுத்தடுத்த மாற்றம், ஆகிய இரண்டையுமே குறிக்கின்றன என்று நான் நம்புகிறேன். முதலில் மறுஜென்ம முழுக்கு (தீத்து 3:5) வழியாக நமது ஆசாபாசங்கள் சுத்திகரிக்கப்பட்டு, நமது விருப்பங்கள் பூமிக்குரியவைகளாக இல்லாமல், பரத்துக்குரியவைகளாக மாற்றப்படுகின்றன. இதற்கு இணையாக “விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி” (அப்போஸ்தலர் 15:9) என்னும் வசனத்தைக் குறிப்பிடலாம். இத்துடன் சேர வேண்டியது மனசாட்சியின் சுத்திகரிப்பு - “துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.” (எபிரேயர் 10:22).
இந்த வசனங்கள் அனைத்தும் மனசாட்சியிலிருந்து பாவத்தின் சுமையை அகற்றுவதையும், விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக்கப்படுவதையும் தேவனோடு சமாதனப்படுவதையும் குறிக்கிறது (ரோமர் 5:1).
ஆனால் இங்கே கிறிஸ்துவால் புதுப்பிக்கபட்ட இதயத்தின் சுத்தம் இதோடு நின்று விடாமல் முன்னோக்கி செல்கிறது. சுத்திகரிப்பு என்றால் என்ன? அசுத்தத்திலிருந்து விடுதலை, பிரிக்கப்படாத அன்பு, விசுவாசம் மற்றும் நேர்மையான தன்மை ஆகியவை. ஒரு கிறிஸ்தவப் பண்பாக நாம் அதை தெய்வீக வெளிப்படைத்தன்மை என்று விவரிக்கிறோம். இது கபடம் மற்றும் போலித்தனத்திற்கு எதிரானது. உண்மையான கிறிஸ்தவம் பொறாமை, வெறுப்பு, வஞ்சகம் மற்றும் கள்ளத்தனம் ஆகியவற்றை வெறுக்கிறது. வார்த்தைகளிலும், வெளிப்புற நடத்தையிலும் பரிசுத்தமாக நடந்துகொள்வது மட்டும் போதாது. மெய்யான தேவனுடைய பிள்ளைகள் தனது ஆசைகள், எண்ணங்கள் மற்றும் நோக்கங்களில் பரிசுத்தமாக இருக்க வேண்டும்;. இதுவே கிறிஸ்தவனின் பண்பு. ஒவ்வொரு விசுவாசியும் சந்திக்க கூடிய பரிசோதனையின் கேள்விகள் இவை தான்: பரத்துக்குரிய காரியங்களில் எனது கவனம் இருக்கின்றதா? எனது நோக்கங்கள் பரிசுத்தமானதா? நான் ஏன் தேவனுடைய பிள்ளைகளுடன் சபைகூடி வருகிறேன்? மனிதகள் பார்க்க வேண்டும் என்றா? அல்லது தேவனைச் சந்தித்து அவருடைய உறவை அனுபவிக்கும்படியாகவா?
“அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." இந்த ஆசீர்வாதங்களுடன் இணைக்கப்பட்ட வாக்குதத்தங்களின் நிறைவேற்றம் இப்போதும் எதிர்காலத்திலும் எவ்வாறு நடைபெறும் என்பதை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் ஆத்மீக விவேகத்தோடு இருப்பார்கள். அவர்கள் மன கண்கள்; திறக்கப்பட்டு, தேவனின் பரிசுத்தத்தைப் பார்த்து, அவருடைய குணாதிசயங்களின் மேன்மையை உணர்வார்கள். உங்கள் கண் பிரகாசமாக இருந்தால், உங்கள் சரீரம் முழுவதும் பிரகாசமாக இருக்கும். சத்தியத்தின் மீதுள்ள விசுவாசம் இதயத்தை பரிசுத்தப்படுத்துகிறது, அதனால் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள். சத்தியம் என்பது இயேசு கிறிஸ்துவின் முகத்தில் காணப்படுகிற தேவனின் வெளிப்பாடே அல்லாமல் வேறென்னவாக இருக்கமுடியும்! அதில் தேவனின் பரிசுத்தமும் பரிபூரண கிருபையும் இணைந்துள்ளன. விசுவாசிகள் தெய்வீக சுபாவத்தை தெளிவாகவும் திருப்திகரமாகவும் காண்பது மட்டுமல்லாமல், ஒரு நெருக்கமான, ஆனந்தமான தெய்வீக இருப்பு மற்றும் தேவனோடு உறவு ஆகியவற்றை அனுபவிக்கிறார். அவர்கள் தேவனுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள். தேவனுடைய சித்தம் இப்போது தன்னுடைய சித்தமாகிறது, அவர்களுடைய ஐக்கியம் பிதாவுடனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுடனும் உள்ளது.
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் இவ்விதமாக தேவனை தரிசிப்பார்கள். கடந்த காலங்களைவிட வருங்காலங்களில் தேவனைப் பற்றிய அவர்களின் புரிதல் மேலும் வளர்ச்சியடையும், மேலும் தேவனுடனான அவர்களின் ஐக்கியம் இன்னும் பெருகும். “நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருக்ஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.” (1 கொரிந்தியர் 13:9-12) அல்லது சங்கீதக்காரனின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், “நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன். நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.” (சங்கீதம் 17:15) எனலாம். அதுவரையில், அது வரும்போது மட்டுமே, “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்” என்ற இந்த வார்த்தைகளின் முழுமையான அர்த்தமும் நமக்குத் தெளிவாகப் புரியும் (முனைவர் ஜான் பிரவுன்).