பாக்கியவான்களைக் குறித்த நம்முடைய சிந்தனை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆளுமைக்கு நம்மை வழிநடத்தவில்லை என்றால், நமது தியானம் முழுமையடையாது. பாக்கியவான்களின் பண்புகள் வரிசையை விளக்குவதற்கு நாம் ஏற்கனவே சிரத்தை எடுத்துள்ளோம். ஆனால் உண்மையில் கிறிஸ்தவனின் குணாதிசயங்கள் எந்த மாறுபாடும் இல்லாமல் கிறிஸ்துவின் குணாதிசயத்துடன் மிகவும் ஒத்ததாக இருக்க வேண்டும், இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனின் சரியான உதாரணத்தை நாம் கிறிஸ்துவில் காணலாம். இந்த தெய்வீகப் பண்புகள் கிறிஸ்துவில் மிகவும் பிரமாதமாக வெளிப்பட்டு, மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கின்றன, மேலும் அவை அவரைப் பின்பற்றுபவர்களிடம் மங்கலாக மட்டுமே பிரதிபலிக்கின்றன. ஒன்றிரண்டு மட்டுமல்ல, இந்த அருட்கொடைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தெய்வீக பரிபூரணங்களும் அவரில் பரிபூரணமாக உள்ளன. என்னைப் பொறுத்தவரை அவர் “சிறந்தவர்" மட்டுமல்ல, “மிகவும் சிறந்தவர்". கிறிஸ்துவை மகிமைப்படுத்த அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்துவின் காரியங்களை நம் ஆத்துமாக்களுக்கு வெளிப்படுத்துவாராக!

முதலாவதாக, “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்;", “அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே." அவரைக் குறித்து சொல்லிய இந்த வேத வார்த்தை எவ்வளவு பாக்கியமானது! ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தன்னுடைய வாழ்வை மாட்டுத் தொழுவத்தில் தொடங்கினார். அவர் தனது குழந்தைப் பருவத்திலும் இளமைப் பருவத்திலும் தச்சுப் பணியைச் செய்து பாடுப்பட்டார். மேலும் அவரது ஊழியத்தின் தொடக்கத்திற்குப் பிறகு, “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுக்ஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.” சங்கீதத்தில்  மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனமாக எழுதப்பட்ட பகுதிகளில் தனது ஆவியின் எளிமையைப் பற்றி பலமுறை ஒப்புக்கொண்டதை பார்க்க முடியும். “நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்." (சங்கீதம் 69:29). “கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும். நான் சிறுமையும் எளிமையுமானவன்." (சங்கீதம் 86:1). “நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது.” (சங்கீதம் 109:22).

இரண்டாவதாக, “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்". கிறிஸ்து உண்மையாகவே துயரப்படுபவர்களில் முதன்மையானவர். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் அவரை “துக்கம் நிறைந்தவராகவும் பாடு அனுபவித்தவராகவும்" சித்தரிக்கிறது (ஏசாயா 53:3). “அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்படுவதை,” பாருங்கள் (மாற்கு 3:5). ஊமையும் செவிடுமான மனிதனை விடுதலையாக்கும்போது அவர் பெருமூச்சு விட்டதைப் பாருங்கள் (மாற்கு 7:34). லாசருவின் கல்லறையில் எப்படி அழுதார் என்பதைக் கவனியுங்கள். எருசலேமைப் பற்றி அவர் புலம்புவதைக் கேளுங்கள். “எருசலேமே, எருசலேமே, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்" (மத்தேயு 23:37). கெத்செமனே தோட்டத்தில் அவர் செய்த கண்ணீருடன் கூடிய ஜெபங்களையும் மன்றாட்டுகளையும் பயபக்தியுடன் பாருங்கள் (எபிரேயர் 5:7). சிலுவையில் தொங்கும்போது, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" (மாற்கு 15:34) என்று கதறியதை பணிவுடன் பாருங்கள். அவருடைய விண்ணப்பத்தைக் கேளுங்கள். “வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்." (புலம்பல் 1:12)

மூன்றாவதாக, “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்". மகிமை நிறைந்த தேவன் மனிதனாக ஊழியம் செய்த போது காண்பித்த சாந்தகுணத்திற்கு சுவிசேக்ஷத்தில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அவருடன் இருக்கும்படி தெரிந்துகொண்ட சீக்ஷர்கள் விவரத்தில் இதை நாம் பார்க்க முடிகிறது. அவர் தெரிந்தெடுத்தது ஞானிகளையும், கல்விமான்களையும், பெரிதும், மேன்மையுமானவர்களையும் அல்ல, மாறாக அவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள் தான்.  அவருடன் தொடர்பில் இருந்த மக்களின் நிலையைப் பாருங்கள். அவர் ஐசுவரியவான்களையும் புகழ்பெற்றர்களையும் நாடாமல், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதனாய் இருந்தார் (மத்தேயு 11:19). அவர் செய்த அற்புதங்களில் இதை கவனியுங்கள். அவரால் குணமடைந்தவர்களிடம் தங்களுக்கு நேர்ந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்வதை நாம் பார்க்கலாம். அவருடைய ஊழியத்தில், பணிவானதாக இருப்பதைக் கவனியுங்கள். மாயக்காரர் செய்வதைப்போல தாரை ஊதுவியாமல், விளம்பரத்தைத் தவிர்த்து, புகழைத் துறந்து, ஊழியம் செய்து எளிமையாக வாழ்ந்தார். மக்கள் அவரை புகழ்ந்தப்போது அவர்களிடமிருந்து விலகி சென்றார். (மாற்கு 1:45, 7:17). அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்தபோது, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்." (யோவான் 6:15). அவருடைய சகோதரர்கள் தன்னை உலகுக்குக் காண்பிக்கச் சொன்ன போது, அதை மறுத்து இரகசியமாய்ப் போனார் (யோவான் 7:4-10). வேத வாக்கியங்களை நிறைவேற்றும்படி, இயேசு தம்மை இஸ்ரவேலுக்கு அறிமுகம் செய்த போதும், அவர் எருசலேமில் “தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாய்” வெளிப்படுத்தினார் (சகரியா 9:9).

நான்காவதாக, “நீதியின் மீது பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்", மனுக்ஷ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் உள்ளார்ந்த வாழ்க்கையைப் பற்றிய இந்த சுருக்கம் எவ்வளவு ஆச்சரியமானது, “நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.” (ஏசாயா 11:5) அவர் இந்த உலகத்தில் பிரவேசிக்கும் முன் பரிசுத்த ஆவியானவர் கொடுத்த சாட்சி அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், (எபிரெயர் 10:7) பன்னிரெண்டு வயது சிறுவனாக இருந்தபோது இயேசு, “என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்” (லூக்கா 2:49). அவருடைய ஊழியத்தின் தொடக்கத்தில், "நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்." (மத்தேயு 5:17) என்று அவர் தனது சீஷர்களிடம் கூறினார். என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது." (யோவான் 4:34) தம் சீக்ஷரிடம் பகிர்ந்தார். பரிசுத்த ஆவியானவர் அவரைப் பற்றி சாட்சியாளிக்கிறார், “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிக்ஷேகம் பண்ணினார்" (சங்கீதம் 45:7). எனவே “ஆண்டவரே நமது நீதி” என்று கூறுவது பொருத்தமானது.

ஐந்தாவதாக, “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்". கிறிஸ்து இரக்கத்தின் உருவமாய் உள்ளவர். அவருடைய இரக்கமே தொலைந்துபோன பாவிகளை பரலோக மகிமையாக மாற்றியது. அவருடைய அற்புதமான, தனித்துவமான இரக்கமே, அவருடைய ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி அவர்களுக்காக சாபமாக ஒப்புக்கொடுக்கும்படி சிலுவைக்கு அழைத்துச் சென்றது அந்த இரக்கமே! எனவே, “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்" (தீத்து 3:5). அவர் இன்றும் நமக்கான பிரதான ஆசாரியராய் நம்மீது இரக்கத்தை வெளிப்படுத்துகிறார் (எபிரேயர் 2:17). மேலும் நாம் நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகி இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்கிறோம் (யூதா 21). அவர் தம் மக்களுக்கு இன்னும் இரக்கம் காட்டுகிறவரார் இருக்கிறார், ஏனெனில் “அந்த நாளில் கர்த்தர் நமக்கு இரக்கம் அளிப்பார்" (2 தீமோத்தேயு 1:18).

ஆறாவது, “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்" இந்த வசனம் கூட கிறிஸ்துவில் முழுமை பெறுகிறது. அவர் “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து” (1 பேதுரு 1:19). அவர் மனிதனானபோது, அவர் மனித அசுத்தங்களால் தீட்டுப்படவில்லை. அவருடைய மனித வாழ்வு பரிசுத்தமானதாக இருந்தது (லூக்கா 1:36). அவர் “பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும்” ஆகவே இருந்தார் (எபிரேயர் 7:26). "அவரிடத்தில் பாவமில்லை" (1 யோவான் 3:5). எனவே, "அவர் பாவஞ்செய்யவில்லை (1 பேதுரு 2:22) அவர் பாவம் அறியாதவராக இருந்தார்  (2 கொரிந்தியர் 5:21). அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறார்" (1 யோவான் 3:3). பரிபூரணமான பரிசுத்த சுபாவத்தை அவர் கொண்டிருப்பதால் அவருடைய செயல்கள் அனைத்தும் பரிசுத்மானவை. “நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை” (யோவான் 8:50) என்ற வேத வார்த்தைகளில் அவருடைய வாழ்க்கையின் முழு சாராம்சமும் அடங்கியுள்ளது.

ஏழாவது, “சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்", அவருடைய சிலுவையின் இரத்தத்தால் நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணிவர் என்பது நமது இரட்சகருக்கு மிகவும் பொருத்தமானது. தேவன் அவரை நம் பாவம் போக்கும் “கிருபாதாரபலியாக” ஏற்படுத்தினார். அதாவது அவர் தேவனுடைய கோபத்தைச் சாந்தப்படுத்தி, உடைத்துப்போடப்பட்ட நியாயப்பிரமாணத்தின் நீதியை முழுமையாக நிறைவேற்றவும், தேவனுடைய நீதியை மகிமைப்படுத்தவும் நியமிக்கப்பட்டார், அவர் இதுவரை பிரிந்திருந்த யூதர்களையும் புறஜாதிகளையும் ஒன்றிணைத்தார் (எபேசியர் 2:11 ஐப் பார்க்கவும்). இனிவரும் நாட்களில் இந்த சபிக்கப்பட்டதும் யுத்தங்களால் சிதைந்ததுமான பூமியில் சமாதானத்தை ஏற்படுத்துவார்.  அவர் தனது தந்தையாகிய தாவீதின் சிம்மாசனத்தில் அமர்வார். அப்போது, “அவருடைய கர்த்தத்துவத்திற்கும் அதன் சமாதானத்துக்கும் முடிவு இல்லை" என்ற வாக்குத்தத்தம் நிறைவேறும் (ஏசாயா 9:7).

எட்டாவது,  “நீதியினிமித்தம் துன்புறுத்தப்பட்டவர்கள் பாக்கியவான்கள்" இயேசுவைப்போல ஒருவரும் நீதிக்காகத் துன்பப்பட்டிருக்க முடியாது. வெளிப்படுத்துதல் 12:4 எவ்வளவு அற்புதமாகன வார்த்தை பாருங்கள்! தீர்க்கதரிசனத்தின் ஆவியால் அவர் முன்னறிவித்தது, “சிறுவயது முதல் நான் சிறுமைப்பட்டவனும், மாண்டுபோகிறவனுமாய் இருக்கிறேன்” (சங்கீதம் 88:15). அவருடைய ஊழியத்தின் ஆரம்ப கட்டத்தில், இயேசுவுக்கு நேர்ந்ததை வாசிக்கிறோம். “எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர்கட்டப்பட்ட செங்குத்தான மலைசிகரத்தில் இருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளி விடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டு போனார்கள்” (லூக்கா 4:29). தேவாலய வளாகங்களிலும் அவர் மீது கல்லெறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டனர் (யோவான் 8:59). அவர் தனது ஊழியத்தின் ஒவ்வொரு அடியிலும் எதிரிகளை எதிர்கொண்டார். சுயநீதியுள்ள யூதர்கள் அவரைப் பேய் பிடித்தவன் என்று குற்றம் சாட்டினார்கள் (யோவான் 8:48). நகர வாசலில் அமர்ந்திருந்தவர்களும் அவருக்கு விரோதமாய்ப் பேசினார்கள். மதுபானம் பண்ணுகிறவர்களின் பாடலும் ஆனார் (சங்கீதம் 69:12). அவரை விசாரிக்கையில் அவருடைய தலை முடியைப் பிடுங்கினார்கள் (ஏசாயா 50:6), முகத்தில் துப்பி, ஏளனம் செய்து, தங்கள் கைகளால் அவரைத் தாக்கினார்கள் (மத்தேயு 26:67). அவர் (இயேசு) கசையடியால் அடிக்கப்பட்டு, முட்களால் முடிசூட்டப்பட்டு, தனது சொந்த சிலுவையை கல்வாரிக்கு எடுத்துச் சென்றார், அங்கு அவர் சிலுவையில் அறையப்பட்டார். இறக்கும் தருணத்தில் கூட, அவர் அவரை அமைதியாக விடவில்லை. அவர்கள் அவரை பல வழிகளில் வன்முறைக்கு உட்படுத்தி, கேலிகளால்; துன்புறுத்தினர். இதையெல்லாம் ஒப்பிடுகையில், அவருக்காக நாம் அனுபவிக்கும் துன்புறுத்தல் எந்த வகையிலும் மிகவும் இலகுவானதே!

இவ்வாறே இந்த பாக்கியப்பண்புகளுடன் இணைக்கப்பட்ட வாக்குறுதிகள் கிறிஸ்துவில் முழுமையாக நிறைவேற்றப்படுகின்றன. அவர் ஆவியில் எளிமையானவராக இருந்தார், ஆனால் பரலோக ராஜ்யம் முதன்மையாக அவருக்கு சொந்தமானது. அவர் புலம்பினார்,  ஆனால் அவர் தனது துன்பத்தின் பலனைக் கண்டு ஆறுதல் அடைவார். அவர் சாந்தத்தின் மொத்த உருவம், ஆனால் மகிமையின் சிங்காசனத்தில் அமர்வார். அவர் நீதிக்காகப் பசிதாகம் உடையவராய் இருந்தார்;, ஆனால் இப்போது அவர் தம்முடைய ஜனங்களுக்காக ஆயத்தம்; செய்திருக்கும் நீதியில் மக்கள் பயனடைவதைக் கண்டு திருப்தியடைகிறார். அவர் இதயத்தில் தூய்மையானவர், அதனால் கடவுளை யாரும் பார்க்காத வகையில் பார்க்கிறார் (மத்தேயு 11:27). அவர் சமாதானம் பண்ணுகிறவர் என்பதால்;, அவருடைய இரத்தத்தால் வாங்கப்பட்ட அனைவரும் அவரைக் கடவுளின் மகன் என்று சொந்தங் கொண்டாடுகிறார்கள். பாடுசகிக்கிறவராக, அவர் பெற்ற வெகுமதி தனித்துவமானது. எல்லா நாமங்களுக்கும் மேலாக அவருடைய நாமம் உயர்த்தப்பட்டது. பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்க்கையை மனுபுத்திரரில் மிகவும் அழகானவராகிய தேவகுமாரன் குறித்த சிந்தையால்; அதிகமதிகமாக நிரப்புவாராக!

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.