“அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது." (2 கொரிந்தியர் 4:17)

உபவத்திரத்தினால் மனம் தளராமல் இருப்பதற்கும், துன்பங்களில் மனம் தளராமல் இருப்பதற்கும் இந்த வசனம் ஒரு பெரிய காரணத்தைத் தருகிறது. குறுகிய கால உபவத்திரத்தை நித்தியத்தின் வெளிச்சத்தில் பார்ப்பதற்கு நம்மை இந்த வசனம் ஊக்குவிக்கிறது. இப்போதைய உபவத்திரங்கள் உள்ளான மனிதனின் மீது நன்மையான விளைவை ஏற்படுத்தும் என்பதை இந்த வசனம் குறிக்கிறது. இந்த சத்தியத்தை நீங்கள் உறுதியாக விசுவாசித்தால், வலிமிகுந்த நிகழ்கால அனுபவங்களை நீங்கள் எளிதாக சமாளிக்க முடியும். இந்த கொஞ்சக்கால உபவத்திரம் நமக்கு மேலும் மேலும் நித்திய மகிமையைக் கொண்டு வரும். நம்முடைய உபவத்திரம் இலகுவானது. அது குறுகிய காலம் மட்டுமே இருக்கும். ஆனால் வரப்போகும் மகிமையோ பெரியதும், நித்தியமானதும் ஆகும். இந்த வேறுபாட்டின் முக்கியத்துவத்தைத் தெளிவாக புரிந்து கொள்ள இந்த வசனத்தின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக பகுப்பாய்வு செய்ய வேண்டும். ஆனால் இந்த வசனப்பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளை கடைசியில் இருந்து பார்ப்போம்.

  1. ஒரு மிகவும் அதிகமான நித்திய கனமகிமை

இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், “மகிமை" என்பதற்கு “கபோத்" என்ற எபிரேய வார்த்தைக்கு “கனம்" என்றும் அர்த்தம் உண்டு. தங்கம் மற்றும் விலையுயர்ந்த இரத்தினங்களின் எடை அதிகரிக்கும் போது அவற்றின் மதிப்பும் அதிகரிக்கிறது. பரலோகம் சமப்ந்தமான பேரானந்தத்தை உலக சம்ந்தமான புரிதலுக்குள் விவரிக்க இயலாது. அடையாளத்தால் தரப்படும் விளக்கங்கள் முழுமையற்றது. இந்த வசனத்தில் விரிவான விளக்கங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு விசுவாசிக்கு நித்தியத்தில் மகிமை காத்திருக்கிறது. நாம் மகிமையானது என்று சொல்லும்போது மிகவும் சிறப்பானதையும் பூரணமானதையும் விளக்கும் மனித மொழி வர்ணனையின் உட்சபட்ச எல்லையை அடைந்து விடுகிறோம். ஆனால் விசுவாசிக்குக் காத்திருக்கும் மகிமையானது அந்த எல்லைகளைவிட மிகவும் கனமானது, பூமிக்குரியவைகள் வேறு எதுவும் அதனுடன் ஒப்பிட முடியாதது, அதன் மதிப்பீடு மதிப்பீடுகளின் அளவுகளுக்கும் அப்பால் செல்கிறது. அதன் மகத்தான மதிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இந்த அற்புதமான மகிமை நிலையற்றதாகவும் அல்லது தற்காலிகமானதாகவும் இல்லாமல், தெய்வீகமானதும் மற்றும் நித்தியமானதுமாக இருக்கிறது. அது தெய்வீகமனதாக இல்லாவிட்டால் அது நித்தியமாக இருக்க முடியாது. ஆம், நம்முடைய மகிமையான தேவன் அவருக்குத் தகுதியானதையும், அவரைப் போன்றதையும், அதாவது அவரைப் போலவே முடிவில்லாத மற்றும் நித்தியமானதை நமக்குக் கொடுக்கப்போகிறார்.

  1. அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம்.

(அ) "உபவத்திரம்" என்பது மனிதனுக்கு வருகிற இயல்பான ஒன்று தான். “அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுக்ஷன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்" (யோபு 5:7). இது பாவத்தின் விளைவுகளின் ஒரு பகுதியாகும். வீழ்ந்த மனிதன் தன் பாவ நிலையில் இருந்துக்கொண்டே மகிழ்ச்சியை அனுபவிப்பது தகுதியாக இருக்க முடியாது. தேவனுடைய பிள்ளைகளும் இதற்கு விதிவிலக்கல்ல, “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்" (அப்போஸ்தலர் 14:22). மகிமையான மற்றும் அழியாமைக்குக் கொண்டு செல்வதற்கு, தேவன் நம்மை இடுக்கமான பாதையில் வழிநடத்துகிறார்.

(ஆ) நம்முடைய உபவத்திரம் இலகுவானது. உபவத்திரம் என்றாலே இலகுவாக இருக்காது. பெரும்பாலும் அவை சுமையாகவும், வருத்தமாகவும் இருக்கும். இருப்பினும், பொதுவாக அவை இலகுவானவை. நாம் எதற்கு பாத்திரவான்கள் என்பதை ஒப்பிடும்போது அவை இலகுவானவை தான். நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பாடுகளுடன் ஒப்பிடும்போது அவை இலகுவானவை. ஆனால், நாம் பெறப்போகும் மகிமையின் ஸ்தானத்தை ஒப்பிடும் போது, நமது உபத்திரவம் உண்மையாகவே இலகுவானது எனபது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. இதே அப்போஸ்தலனாகிய பவுல் வேறொரு இடத்தில் இவ்விதமாக கூறுகிறார், “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்" (ரோமர் 8:18).

(இ) உபத்திரவம் தற்காலிகமானவை. நம்முடைய உபத்திரவம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தாலும், அத்தகைய வாழ்க்கை மெத்தூசலாவைப்போல நீடிய ஆயுளாகப் போனாலும்;, நமக்கு கிடைக்போகும் நித்தியத்துடன் ஒப்பிடும்போது இதுவும் லேசானதே! நம்முடைய உபத்திரவம் சிறிது காலம் தோன்றி மறைந்து போகும் நீராவி போன்றது. நம்முடைய உபவத்திரத்தை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க தேவன் நமக்கு ஞானத்தை தருவாராக.

  1. இந்த இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கவனிப்போம்:

சிறிது காலம் மட்டும் இருக்கும் நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. நிகழ்காலம் எதிர்காலத்தைப் பாதிக்கிறது. இதைப் பற்றி நாம் தத்துவ ரீதியில் தர்க்கம் செய்வது சரியல்ல. தேவனுடைய வார்த்தையை அவர் சொன்ன விதமாக விசுவாசிப்பது நமக்கு மிகவும் முக்கியம். மற்றவர்களின் அனுபவம், மற்றும் அவர்களுடைய உணர்வு இதிலிருந்து வேறுபட்டிருக்கலாம். பல சமயங்களில் உபத்திரவங்கள் நம்மை சோர்வடையச் செய்யவும், எதிர்த்து நிற்கிறவர்களாக மாற்றவும், திருப்தி அற்றவர்களாக்கவும் வருவது போல நமக்கு தோன்றுகிறது. நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மற்றும் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த உபத்திரவங்கள் நமது மாம்ச இயல்பை பரிசுத்தப்படுத்த அனுப்பப்படவில்லை. அவை நம்மில் உள்ள “புதிய மனிதனின்" நன்மைக்காகவே உள்ளன. அது மட்டுமல்ல, வரப்போகும் மகிமைக்கு நம்மை தயார்படுத்த இந்த உபத்திரம் உதவுகிறது. உபத்திரவம் நம்மை உலகத்தின் மீதான ஆர்வத்திலிருந்து பிரித்து விடுகிறது. இந்தப் பாவமும்; துக்கமும் நிறைந்த உலகத்திலிருந்து நாம் விடுவிக்கப்படும் சமயத்தை அதிகம் அதிகமாக எதிர்நோக்கும்படி செய்கின்றது. தேவன் தம்மை நேசிப்பவர்களுக்காக ஏற்படுத்தியிருக்கிறவைகளைப் புரிந்துகொள்ள இவை நமக்கு உதவுகின்றன.

ஆனால் விசுவாசி செய்ய வேண்டியது இதுதான். தராசின் ஒருபுறத்தில் உபத்திரங்களையும், மறுபுறம் வரவிருக்கின்ற மகிமையையும் வைத்துப் பாருங்கள். நாம் அவற்றை ஒப்பிட முடியுமா? அதை ஒப்பிடவே முடியாது. மகிமையின் ஒரு கணம் வாழ்நாள் முழுவதும் பட்ட உபவத்திரத்தை விட அதிகமாக உள்ளது. தேவனின் வலது பாரிசத்தில் நித்திய மகிழ்ச்சியோடு இருப்பதை ஒப்பிடுகையில் இந்த வருடங்கள் ஏற்படும் உபத்திரம், நோய், வறுமை, இக்கட்டுகள் மற்றும் இரத்த சாட்சியாக மரிப்பது ஆகியவை பரலோகத்தில் தேவனுடைய வலதுகரத்தில் நாம் எப்போதும் அனுபவிக்கப்போகும் இன்பங்களுடன் ஒப்பிடும்போது, நாம் பரத்தில் சுவாசிக்கும் ஒரு மூச்சு காற்று இந்த உலகின் அனைத்துவித எதிர்மறையான அனைத்தையும் இது அணைத்துப் போடும்;. பிதாவின் வீட்டில் நாம் கழிக்கும் ஒரு நாள் இந்த பயங்கரமான வனாந்தர வாழ்க்கையைவிட அதிக மகிழ்ச்சியைத் தரப்போகிறது. வரப்போகும் மகிமையில் நமக்காக ஆயத்தம் செய்யப்பட்டுள்ளதை இப்போதும் நாம் எதிர்பார்ப்புடன் அனுபவித்து ஆனந்தப்பட வேண்டிய விசுவாசத்தையும் பெலத்தையும் தேவன் நமக்குத் தந்தருள்வாராக!

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.