"விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்." (எபிரெயர் 11:31)
ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் நீங்கள் பயணம் செய்தால், பலவிதமான வெற்றி வளைவுகளையும் ஜெயஸ்தம்பங்களையும் காண முடியும். அவற்றில் அந்த தேசத்தின் வீரர்களும், ராஜாக்களும், இராணுவத் தலைவர்களும் ஆற்றிய வீரதீரச் செயல்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு தூணில் நெப்போலியன் சந்தித்த ஆயிரம் யுத்தங்களின் விவரங்களைக் காணலாம்; வேறொரு இடத்தில் நெல்சன் அடைந்த வெற்றி சித்திரமாகத் தீட்டப்பட்டிருப்பதைக் காண முடியும். அப்படியிருக்க, மிகுந்த வல்லமை பொருந்திய விசுவாசத்திற்கென ஒரு ஜெயஸ்தம்பம் எழுப்பப்பட வேண்டியது மிகவும் அவசியமல்லவா? அதன் மீது விசுவாச வீரர்களின் மகிமையான பிரதாபங்களைப் பொறிக்க வேண்டியது இன்றியமையாதது.
அப்போஸ்தலனாகிய பவுல், அவ்விதமான ஒரு ஜெயஸ்தம்பத்தை எழுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் பிரம்மாண்டமானதொரு தூணை அவர் நிறுவியிருக்கிறார். அது விசுவாசத்தின் வெற்றிகளைப் பட்டியலிட்டுக் காண்பிக்கிறது. மரணத்தையே வென்றதான ஒரு விசுவாசத்தை அங்கே காண்கிறோம். ஏனோக்கு என்பவர், மனிதர்கள் வழக்கமாகச் செல்லும் மரணத்தின் வழியாகச் செல்லாமல், விசுவாசத்தினால் பரலோகத்தை அடைந்ததை அங்கு பார்க்கிறோம். காலத்தோடு போராடிய நோவாவின் விசுவாசத்தைக் காண்கிறோம்; 120 ஆண்டுகளுக்குப் பின்பு நடக்கப்போகிற ஒரு சம்பவத்தைக் குறித்து தேவ எச்சரிப்பைப் பெற்று, பேழையைக் கட்டி மனித சிந்தனைகளின் மீதும் காலத்தின் மீதும் அவர் வெற்றி சிறந்தார்.
அதேபோல, வயோதிபத்தை வென்ற ஆபிரகாமின் விசுவாசம், இயற்கையான பாசத்தை வென்று தன் ஒரே குமாரனை பலியிடத் துணிந்த விசுவாசம், முதிர்வயதின் பலவீனத்திலும் கோலின் முனையில் சாய்ந்து தொழுதுகொண்ட யாக்கோபின் விசுவாசம், ராஜரீக கவர்ச்சிகளைப் புறக்கணித்த மோசேயின் விசுவாசம், கடல்களைப் பிளந்த விசுவாசம் என பல விசுவாச வீரர்களைப் பவுல் பட்டியலிடுகிறார்.
இந்தப் பட்டியலின் இறுதிக்கட்டத்தில், மிகப் பெரிய வெற்றியை முத்தாய்ப்பாக வைப்பது போல, பாவத்தை வென்றதானதொரு விசுவாசத்தை முடிவில் காண்கிறோம். அதுவே ராகாபின் விசுவாசம். அவள் வேவுகாரரை உபசரித்தவள் மாத்திரமல்ல; வேதாகமம் அவளை 'வேசி' என்று வெளிப்படையாகவே அழைக்கிறது. இதை மறைக்காமல் கூறுவதற்குக் காரணம், தேவனின் இலவசமான கிருபையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே. பாவ வாழ்க்கையையும் மேற்கொண்ட இந்த விசுவாசம், மற்ற எந்த விசுவாசத்திற்கும் சற்றும் குறைவானதல்ல. விசுவாசமே, மனித இருதயத்தின் காம விகாரங்களோடும் அசுத்தங்களோடும் போராடி ஜெயிக்குமா? அசுத்தமானவர்களைத் தொட்டு குணமாக்குமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம், "ஆம், நான் பாவத்தின் அகோரத்தைச் சந்தித்து, அருவருப்பான சேற்றிலிருந்து இந்த பெண்ணை விடுவித்தேன்" என்று விசுவாசம் புன்னகையோடு பதிலளிக்கிறது.
ராகாபின் விசுவாசம் மிகவும் கவனிக்கத்தக்கது. பல்வேறு பரிமாணங்களில் வெளிப்பட்ட அவளது விசுவாசத்தை ஆறு பகுதிகளாகப் பிரிக்கலாம்:
அ) இரட்சிக்கும் விசுவாசம்
எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் உள்ள மற்றவர்கள் அனைவரும் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ராகாபைக் குறித்துச் சொல்லும்போது, "விசுவாசத்தினாலே அவள் சேதமாகாதிருந்தாள்" (அழிக்கப்படாமல் காக்கப்பட்டாள்) எனக் கூறப்பட்டுள்ளது. எரிகோ பட்டணம் பிடிபட்டு அனைவரும் அழிக்கப்படும் தறுவாயில், இவள் மாத்திரம் தனது விசுவாசத்தினிமித்தம் பாதுகாக்கப்பட்டாள். அந்தப் பாதுகாப்பு தற்காலிகமானது அல்ல; சரீரப் பாதுகாப்பைத் தாண்டி, அவளுடைய ஆத்துமாவும் நரகத்திற்கு நீங்கலாக விடுவிக்கப்பட்டது.
பாவம் என்னும் சுழலில் சிக்கி, அதல பாதாளத்தை நோக்கி அடித்துச் செல்லப்படுகிற மனிதனைத் தூக்கியெடுக்க தெய்வீகக் கரங்களைத் தவிர வேறு எதாலும் முடியாது. அவளது வீட்டின் பலகணியில் கட்டப்பட்டிருந்த சிவப்பு நூல், அவளுடைய விசுவாசத்தைப் பறைசாற்றியது; அது மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை விசுவாசிப்பதை அடையாளப்படுத்துகிறது.
பாவிகளே, நீங்களும் ஆறுதல் அடையலாம். ராகாபை இரட்சித்த அதே விசுவாசம் உங்களையும் இரட்சிக்கும். உங்களை நீங்களே அருவருக்கிறீர்களா? பரிசுத்தவான்கள் மத்தியில் இருக்க தகுதியில்லையே என்று கலங்குகிறீர்களா? வெளியே சென்றுவிடாதீர்கள். இரக்கத்தின் சிங்காசனத்தருகே வர உங்களுக்கு உரிமை உண்டு. கிறிஸ்து உங்களை முழுமையாகக் குணமாக்க வல்லவர். இயேசு கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரம் நிர்வாணிகளுக்காக நெய்யப்பட்டுள்ளது; கல்வாரியின் தைலம் நோயுள்ளவர்களைக் குணமாக்கத் தயாராக உள்ளது.
ஆ) தனித்து நின்ற விசுவாசம்
ராகாபின் விசுவாசம் தனித்து நின்ற விசுவாசமாகும். எரிகோ பட்டணம் தாக்கப்படப் போகிறது என்பது அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். ஆனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்த அந்தப் பட்டணத்தில் ஒருவர்கூட தங்கள் பாவத்தைக் குறித்து மனம் வருந்தவில்லை; தேவனிடம் இரக்கம் வேண்டி கெஞ்சவில்லை. இந்தப் பெண் மாத்திரமே தனித்து நின்று இரக்கத்தைப் பெற்றாள்.
உலகம் நம்புவதை நாமும் நம்புவது எளிது; ஆனால், யாருமே நம்பாத ஒன்றை நாம் மாத்திரம் தனித்து நின்று நம்புவது கடினமானது. சத்தியத்திற்காக ஆயிரக்கணக்கானோரை எதிர்த்து தனித்து நிற்பது மாபெரும் சவால். அந்தப் பட்டணத்தில் அவள் தனித்து நின்றாள். கிறிஸ்தவர்கள் நீரோட்டத்தை எதிர்த்து நீந்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும். செத்த மீன்தான் நீரோட்டம் செல்லும் பாதையில் அடித்துச் செல்லப்படும்; உயிருள்ள மீன் நீரோட்டத்தை எதிர்த்து நீந்தும். "நான் ஒருவன் மாத்திரமே மீதியாயிருக்கிறேன்" என்று தனித்து நின்ற எலியா தீர்க்கதரிசியைப் போல, மெய்யான விசுவாசிகள் தனித்து நிற்கப் பயப்பட மாட்டார்கள். அநேகர் நாகரீகம் என்னும் பெயரில் உலகத்தோடு ஒத்துப்போகத் துடிக்கிறார்கள். ஆனால், துணிச்சலுள்ள மனிதன் சத்தியத்திற்காகத் தனித்து நிற்பான். அத்தகைய தனித்துவமான விசுவாசத்தை ராகாப் கொண்டிருந்தாள்.
இ) நிலையான விசுவாசம்
பிரச்சனைகளின் மத்தியிலும் அசையாமல் உறுதியாக நின்ற விசுவாசம் அவளுடையது. ஒருமுறை ஒரு சபைப் போதகரிடம் விசுவாசி ஒருவர், "ஐயா, வறட்சியாக இருக்கிறது, மழைக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்" என்றார். அதற்குப் போதகர், "ஜெபிக்கிறேன், ஆனால் இப்போது மேகமே இல்லையே, கோடை காலமாயிற்றே, மழை வருமா?" என்றாராம். அநேகரின் விசுவாசம் இப்படித்தான் இருக்கிறது. சூழல் சாதகமாக இருந்தால் நம்புவார்கள்; இல்லாவிட்டால் வாக்குத்தத்தங்களை மறந்துவிடுவார்கள்.
ஆனால், உண்மையான விசுவாசம், சூழ்நிலைகள் முற்றிலும் முரணாகத் தெரிந்தாலும் தேவனை நம்பும். அவிசுவாசம் ராகாபிடம் வந்து, "இஸ்ரவேலர்கள் யோர்தானைக் கடந்து வருவார்களா? மதிலைத் தகர்ப்பார்களா? இது முட்டாள்தனம்" என்று சொல்லியிருக்கலாம். ஆறு நாட்கள் இஸ்ரவேலர்கள் எக்காளம் ஊதிக்கொண்டு பட்டணத்தைச் சுற்றி வந்தபோது அவளது அண்டை வீட்டார் அவளைப் பார்த்து சிரித்திருக்கலாம். "எக்காள சத்தத்தினால் மதில் இடியுமா?" என்று கேலி செய்திருக்கலாம். ஆனாலும், ஏழு நாட்களும் அவள் சிவப்பு நூலை ஜன்னலிலேயே கட்டியிருந்தாள். தன் குடும்பத்தாரை வீட்டிற்குள் வைத்துப் பாதுகாத்தாள். ஏழாம் நாள் மதில் இடிந்து விழுந்தபோது, அலங்கத்தின் மீதிருந்த அவளது வீடு மட்டும் எவ்வித சேதமுமின்றி நின்றது. விசுவாசம் அவளது இயல்பான பயத்தை மேற்கொண்டது. சேற்றிலும் செந்தாமரையை மலரச் செய்யும் தேவன், பிரதான பாவியின் இருதயத்திலும்கூட இத்தகைய உறுதியான விசுவாசத்தை எழும்பச் செய்ய வல்லவர்.
ஈ) தன்னைத்தானே வெறுக்கும் விசுவாசம்
அந்த வேவுகாரர்களுக்காகத் தன் உயிரையே பணயம் வைக்க ராகாப் துணிந்தாள். வேவுகாரரை மறைத்து வைப்பது தேசத் துரோகம் என்று தெரிந்தும், தேவனுடைய சித்தத்திற்காகத் தன்னைத்தானே வெறுத்து ஆபத்தைச் சந்தித்தாள்.
சிலர் தங்களை விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்வார்கள்; ஆனால், கர்த்தருக்காக ஒரு பைசாவைக் கூட செலவழிக்க மாட்டார்கள். "இயேசுவுக்காய் யாவையும் தாராளமாய் ஒப்புவித்தேன்" என்று பாடுவார்கள்; ஆனால் நடைமுறையில் எதையும் இழக்கத் தயாராக இருக்க மாட்டார்கள். கிறிஸ்துவுக்காக நாம் எதையாவது தியாகம் செய்யாவிட்டால், நம்மை நாமே வெறுக்காவிட்டால், நம்முடைய விசுவாசத்தில் ஏதோ குறை இருக்கிறது என்று அர்த்தம். விசுவாசமும், தன்னைத்தானே வெறுத்தலும் இரட்டைக் குழந்தைகளைப் போன்றன. விலையேறப்பெற்ற தைலத்தை உடைத்து இயேசுவின் பாதத்தில் ஊற்றிய பெண்ணைப் போல, ராகாபும் தன் சுயநலத்தை வெறுத்து ஜீவனைப் பெற்றுக்கொண்டாள்.
உ) கருணையுள்ள விசுவாசம்
ராகாபின் விசுவாசம் தன்னலம் கருதாதது. தான் இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்பிய அவள், தன் தகப்பன், தாய், சகோதர சகோதரிகளும் காக்கப்பட வேண்டும் என்று வாஞ்சித்தாள். தனக்குக் கிடைத்த இரட்சிப்பு தன் குடும்பத்தாருக்கும் கிடைக்க வேண்டும் என்று அக்கறை கொண்டாள்.
நாம் நம்புகிற மிகச் சிறந்த ஒரு காரியத்தை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதுதான் மனித இயல்பு. இரட்சிப்பின் விலையை உணர்ந்தவன், தன் நேசத்துக்குரியவர்களும் அதைப் பெற வேண்டும் என்று துடிப்பான். ஜார்ஜ் விட்ஃபீல்ட் (George Whitefield) என்ற பிரசங்கியார் கூறினார்: "நான் இரட்சிப்பைப் பெற்றவுடனே, என்னோடு சேர்ந்து சீட்டு விளையாடிய நண்பர்களும், பாவ வழியில் நடந்தவர்களும் இந்த இரட்சிப்பின் இன்பத்தை அறிய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவர்களைச் சந்தித்து இரட்சகரிடம் அழைத்து வரும்வரை என்னால் ஓய்திருக்க முடியவில்லை." இதுதான் உண்மையான கிறிஸ்தவனின் இயல்பு.
இதை வாசிக்கும் வாலிபப் பிள்ளைகளே, உங்கள் குடும்பத்தில் இயேசுவை அறியாத பெற்றோர் இருந்தால் அவர்களுக்காகக் கண்ணீரோடு ஜெபியுங்கள். பெற்றோர்களே, தேவனை விட்டு விலகியிருக்கும் உங்கள் பிள்ளைகளுக்காகப் பாரத்தோடு ஜெபியுங்கள். ஒரு தாயின் ஜெபம் வீண்போகாது. முதிர்வயதிலும் தேவ அன்பை ருசித்து, தன் குடும்பத்தை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தும் கருவியாக மாற ஒவ்வொருவராலும் முடியும்.
ஊ) பரிசுத்தப்படுத்துகின்ற விசுவாசம்
ராகாபின் விசுவாசம் அவளைப் பரிசுத்தப்படுத்தியது. விசுவாசத்தைப் பெற்றுக்கொண்ட பின் அவள் தொடர்ந்து வேசியாக வாழவில்லை. யூதா கோத்திரத்து இளவரசனாகிய சல்மோன் அவளைத் திருமணம் செய்துகொண்டான். இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றிலும் அவளுக்கு இடம் கிடைத்தது (மத்தேயு 1:5). அவள் ஒரு பக்தியுள்ள பெண்மணியாகத் தன் வாழ்நாளைத் தொடர்ந்தாள்.
உயிருள்ள விசுவாசம் உங்களைப் பரிசுத்தத்திற்கு நேராக நடத்தும்; செத்த விசுவாசமோ ஆத்துமாவை அழித்துவிடும். "நான் இயேசுவை நேசிக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே தொடர்ந்து குடிப்பழக்கத்திலோ, அசுத்தமான வார்த்தைகளைப் பேசுவதிலோ, பழைய பாவங்களிலோ ஒருவன் நிலைத்திருந்தால் அவனுடைய விசுவாசம் போலியானது. உண்மையான விசுவாசம் உள்ளவன், "கர்த்தாவே, நீர் என் பாவங்களை மன்னித்தீர்; நான் இனிப் பாவம் செய்ய மாட்டேன். என் வாழ்நாள் முழுவதும் உமக்கே ஊழியம் செய்வேன்" என்று ஜெபிப்பான். கிருபை பெருகும்படி பாவத்தில் நிலைத்திருக்க முடியாது.
உலகம் மனிதர்களைச் சீர்ப்படுத்த பல்வேறு சட்டங்களையும் தத்துவங்களையும் முயன்று வருகிறது. ஆனால், மனிதனை நிரந்தரமாக மாற்றுவது தேவ வார்த்தையும் சுவிசேஷமும் மட்டுமே. வாசிப்பதல்ல பிரசங்கம்; இருதயத்தை உருவக் குத்தி, சத்தியத்தைக் கலப்படமின்றிச் சொல்வதே மெய்யான பிரசங்கம்.
சுவிசேஷம் என்னும் கடவுளுடைய வார்த்தைதான் வேசிகளைப் பரிசுத்தவாட்டிகளாகவும், திருடர்களை நேர்மையாளர்களாகவும் மாற்றுகிறது. உலகத்திலேயே மிகப் பெரிய பாவியாக நீங்கள் இருந்தாலும், கிறிஸ்து உங்களை அன்போடு அழைக்கிறார். "விலையுமின்றிப் பணமுமின்றி இயேசுவிடம் வாருங்கள்." அவர் உங்கள் பாவங்களை மன்னிப்பார்; உங்களைப் புதுப்பித்து, கடைசிவரை வழுவாமல் காப்பார்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!