வேதாகமத்தை வாசி

சகரியா 7

                   
புத்தகங்களைக் காட்டு
1அரசன் தாரியுவின் நான்காம் ஆட்சியாண்டில் கிஸ்லேவு என்னும் ஒன்பதாம் மாதத்தின் நான்காம் நாளன்று ஆண்டவரின் வாக்கு செக்கரியாவுக்கு அருளப்பட்டது.
2பெத்தேலில் வாழ்வோர் சரேட்சரையும் இரகேம்மெலக்கையும் மற்றும் அவனுடைய ஆள்களையும் ஆண்டவரின் அருளைப் பெற மன்றாடுமாறு அனுப்பினார்கள். மேலும்
3படைகளின் ஆண்டவரது கோவிலில் இருக்கும் குருக்களையும் இறைவாக்கினர்களையும் கண்டு, “நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் செய்துவந்தது போல் ஐந்தாம் மாதத்தில் நோன்பிருந்து புலம்ப வேண்டுமா?” என்று கேட்டு வரவும் இவர்களை அனுப்பினார்கள்.
4அப்போது படைகளின் ஆண்டவரது வாக்கு எனக்கு அருளப்பட்டது:
5நாட்டின் எல்லா மக்களுக்கும் குருக்களுக்கும் நீ கூறவேண்டியது: “இந்த எழுபது ஆண்டுகளாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் நோன்பிருந்து ஓலமிட்டு அழுதீர்களே, எனக்காகவா நோன்பிருந்தீர்கள்?
6நீங்கள் உணவருந்தியபோதும் குடித்தபோதும் உங்களுக்காகத்தானே உணவருந்தினீர்கள்? உங்களுக்காகத்தானே குடித்தீர்கள்?
7எருசலேமில் மக்கள் குடியேறிய போதும், அந்நகர் சீரும் சிறப்புமாய் இருந்தபோதும், அதைச் சூழ்ந்திருந்த நகர்கள் தென்நாடு, சமவெளி நிலம் ஆகியவற்றில் மக்கள் குடியேறிய போதும், முன்னாளைய இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் முழங்கிய சொற்கள் இவை அல்லவா?”
8மீண்டும் ஆண்டவரின் வாக்கு செக்கரியாவுக்கு அருளப்பட்டது.
9“படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நேர்மையுடன் நீதி வழங்குங்கள்: ஒருவர்க்கொருவர் அன்பும் கருணையும் காட்டுங்கள்:
10கைம்பெண்ணையோ, அனாதையையோ, அன்னியரையோ, ஏழைகளையோ ஒடுக்க வேண்டாம்: உங்களுக்குள் எவரும் தம் சகோதரனுக்கு எதிராகத் தீமை செய்ய மனத்தாலும் நினைக்கவேண்டாம்.”
11ஆனால் அவர்களோ அதற்குச் செவிகொடுக்க மறுத்தார்கள்: இறுகிய மனத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். தங்கள் காதுகளைப் பொத்திக்கொண்டார்கள்.
12படைகளின் ஆண்டவர் தம் ஆவியால் முன்னாளைய இறைவாக்கினர்கள் வாயிலாக அனுப்பித்தந்த திருச்சட்டத்தையையும் வாக்குகளையும் கேட்டுவிடாதபடி பாறையைப்போல் தங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக் கொண்டார்கள்: ஆதலால் படைகளின் ஆண்டவர் கடுஞ்சினமுற்றார்.
13“நான் கூப்பிட்டபோது அவர்கள் கேளாதிருந்தது போல, அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேட்கவில்லை, “ என்கிறார் படைகளின் ஆண்டவர்.
14“ஆகவே முன்பின் அறியாத வேற்றினத்தார் நடுவிலும் அவர்களைச் சிதறடித்தேன்: இவ்வாறு அவர்கள் விட்டுச்சென்ற நாடு பாழடைந்து போயிற்று: போவார் வருவார் எவருமே அங்கில்லை: இனிய நாட்டைப் பாழாக்கிவிட்டார்கள்.”

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.