வேதாகமத்தை வாசி

சகரியா 13

                   
புத்தகங்களைக் காட்டு
1“அந்நாளின் பாவத்தையும் தீட்டையும் நீக்கித் தூய்மையாக்கும் நீரூற்று தாவீதின் குடும்பத்தாருக்கெனவும் எருசலேமில் குடியிருப்போருக்கெனவும் தோன்றும்.
2அந்நாளிலே நான் சிலைகளின் பெயர்கள் நாட்டில் இல்லாதவாறு அறவே ஒழித்துவிடுவேன்: அதன்பின் அவற்றைப் பற்றிய நினைவு யாருக்கும் இராது: மேலும் போலி இறைவாக்கினரையும் அசுத்த ஆவியையும் நாட்டிலிருந்து விரட்டி விடுவேன்” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
3எவனாவது மீண்டும் இறைவாக்கினனாகத் தோன்றுவானாகில் அவனைப் பெற்றெடுத்த தந்தையும் தாயும், “ஆண்டவரின் பெயரால் பொய் பேசுவதால் நீ உயிர்வாழக்கூடாது” என்று அவனிடம் சொல்வார்கள். அவன் இறைவாக்கு உரைக்கும்போதே அவனைப் பெற்றெடுத்த தாய் தந்தையர் அவனைக் குத்திக் கொன்று போடுவார்கள்.
4அந்நாளில் இறைவாக்கினருள் ஒவ்வொருவனும் இறைவாக்கு உரைக்கும் போது தான் கண்ட காட்சியைக் குறித்து வெட்கமடைவான்: ஏமாற்றுவதற்காகக் கம்பளி மேலாடையைப் போர்த்திக் கொள்ளமாட்டான்.
5ஆனால், “நான் இறைவாக்கினன் அல்ல: நிலத்தைப் பயிரிடுகிற உழவன்: என் இளமை முதல் நிலத்தை உழுது பயிர் செய்பவன்” என்று சொல்வான்.
6“உன் மார்பில் இந்த வடுக்கள் எவ்வாறு ஏற்பட்டன?” என ஒருவன் வினவினால், “என் நண்பர் இல்லத்தில் காயமுற்றபோது இவை ஏற்பட்டன” என மறுமொழி பகர்வான்.
7“வாளே எழுந்திடு, என் ஆயனுக்கும் நெருங்கிய நண்பனுக்கும் எதிராகக்கிளர்ந்தெழு என்கிறார் படைகளின் ஆண்டவர். 'ஆயனை வெட்டு: அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்: சிறியோர்க்கு எதிராக என் கையை ஓங்குவேன்.
8நாட்டு மக்களுள் மூன்றில் இரு பங்கினர் வெட்டுண்டு மாள்வர்: மூன்றில் ஒரு பங்கினரே எஞ்சியிருப்பர்', என்கிறார் ஆண்டவர்.
9இந்த மூன்றில் ஒரு பங்கினரையும் வெள்ளியை நெருப்பில் இட்டுத் தூய்மைப்படுத்துவது போல் தூய்மைப்படுத்துவேன்: பொன்னைப் புடமிடுவதுபோல் புடமிடுவேன்: அவர்கள் என் பெயரை நினைத்து மன்றாடுவார்கள்: நானும் அவர்கள் மன்றாட்டிற்குச் செவி கொடுப்பேன்: 'இவர்கள் என் மக்கள்' என்பேன் நான், 'ஆண்டவர் எங்கள் கடவுள்' என்பார்கள் அவர்கள்.”

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.