வேதாகமத்தை வாசி

Click to Subscribe

ஏசாயா 16

                   
புத்தகங்களைக் காட்டு
1சீயோன் மகளின் மலையில் நாட்டை ஆள்பவனுக்குச் சேலா நகரிலிருந்து பாலைநிலம் வழியாகச் செம்மறியாடு அனுப்புங்கள்.
2சிறகடித்து அலையும் பறவை போலும் கூடு இழந்த குஞ்சுபோலும் மோவாபிய மகளிர் அர்னோன் துறைகளில் காணப்படுவர்.
3வாருங்கள்: அறிவுரை கூறுங்கள்: நடுநிலையோடு நடந்துகொள்ளுங்கள்: நண்பகலில் உங்கள் நிழலை இரவு போலாக்கி, விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கு மறைத்து வையுங்கள்: தப்பி ஓடுகிறவர்களைக் காட்டிக் கொடுக்காதீர்கள்.
4மோவாபிலிருந்து துரத்தப்பட்டவர்கள் உங்களிடமே தங்கியிருக்கட்டும்: அழிக்க வருபவனின் பார்வையிலிருந்து தப்ப அவர்களுக்கு அடைக்கலமாய் இருங்கள்: ஒடுக்குபவன் ஒழிந்து போவான்: அழிவு ஓய்ந்து போகும்: மிதிக்கிறவர்கள் நாட்டில் இல்லாது போவர்.
5அப்பொழுது, ஆண்டவர் தம் பேரன்பால் ஓர் அரியணையை அமைப்பார்: அதன்மேல் தாவீதின் கூடாரத்தைச் சார்ந்த ஒருவர் வீற்றிருப்பார்: அவர் உண்மையுடன் ஆள்பவர்: நீதியை நிலைநாட்டுபவர்: நேர்மையானதைச் செய்ய விரைபவர்.
6மோவாபின் இறுமாப்பைப்பற்றி நாங்கள் கேள்வியுற்றோம்: அவன் ஆணவம் பெரிதே: அவன் இறுமாப்பையும் ஆணவத்தையும் செருக்கையும் குறித்துக் கேள்விப்பட்டோம். அவன் தற்புகழ்ச்சிகள் யாவும் பொய்யுரையே.
7ஆதலால் மோவாபு அழுது புலம்பட்டும்: மோவாபுக்காக யாவரும் கதறியழட்டும்: கீர் அரசேத்தின் திராட்சை அடைகளை நினைந்து, நெஞ்சம் தளர்ந்து விம்மியழுங்கள்.
8எஸ்போனின் வயல்வெளி நிலங்கள் வாடுகின்றன, மக்களினங்களின் தலைவர்களை விழத் தள்ளிய சிபிமானின் திராட்சைத் தோட்டத்துக் கிளைகள் அழிந்துவிட்டன. அவை ஒருபுறம் யாசேரைத் தொட்டன: பாலை நிலம்வரை படர்ந்திருந்தன: அவற்றின் தளிர்கள் செழிப்புடன் வளர்ந்து கடல்கடந்து படர்ந்து சென்றன.
9ஆதலால் யாசேருக்காக அழுததுபோல் நான் சிபிமாவின் திராட்சைத் தோட்டத்திற்காகக் கண்ணீர் விடுகின்றேன்: எஸ்போன்! எலயாரே! உங்களை என் கண்ணீரால் நனைக்கின்றேன்: ஏனெனில் உங்கள் கோடைக் கனிக்காகவும் அறுவடைக்காகவும் எழும் மகிழ்ச்சி ஆரவாரம் அடங்கி விட்டது.
10வளமான வயல் நிலங்களிலிருந்து அக்களிப்பும் மகிழ்ச்சியும் அகற்றப்பட்டன. திராட்சைத் தோட்டங்களில் பாடல்கள் பாடுவார் யாருமில்லை: ஆரவாரம் எழுப்புவார் எவருமில்லை. இரசம் எடுப்பதற்கு ஆலையில் திராட்சைக்கனி பிழிவாருமில்லை: பழம் பிழிவாரின் பூரிப்பும் இல்லாதொழிந்தது:
11ஆதலால், மோவாபுக்காக என் நெஞ்சமும், கீர்கேரசிற்காக என் இதயமும் வீணையின் நரம்புபோல் துடிக்கின்றது:
12மோவாபியர் உயரமான தொழுகை மேடுகளில் வழிபாடு செய்து களைத்தும், திருத்தலங்களுக்குச் சென்று மன்றாடியும் அவர்களுக்கு ஒன்றும் இயலாமற் போயிற்று.
13இதுவே கடந்த காலத்தில் மோவாபைக் குறித்து ஆண்டவர் கூறிய திருவாக்கு.
14ஆனால், இப்பொழுது ஆண்டவர் கூறுவது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒப்ப, மூன்று ஆண்டுகளில், மோவாபு நாட்டில் திரளான மக்கள் கூட்டம் இருப்பினும், அதன் மேன்மை அழிவுறும்: ஒருசிலரே நாட்டில் எஞ்சியிருப்பர்: அவர்களும் வலிமை இழந்திருப்பர்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.