வேதாகமத்தை வாசி

ஏசாயா 17

                   
புத்தகங்களைக் காட்டு
1தமஸ்கு நகரைப் பற்றிய திருவாக்கு: “நகர் என்ற பெயரை தமஸ்கு இழந்துவிடும்: அது பாழடைந்த மண்மேடாக மாறிவிடும்.
2அதன் அருகிலுள்ள நகரங்கள் பாழடைந்து ஆடுமாடுகள் திரியும் இடமாகும்: அவை அங்கே படுத்துக் கிடக்கும்: அவற்றை அச்சுறுத்த எவருமே இரார்.
3எப்ராயிம் நாட்டின் அரண் தரைமட்டமாகும்: தமஸ்கின் அரசு இல்லாதொழியும்: இஸ்ரயேல் மக்களின் மேன்மைக்கு நேர்ந்தது சிரியாவில் எஞ்சியிருப்போரின் நிலைமையாகும், என்கிறார் படைகளின் ஆண்டவர்.
4அந்நாளில், யாக்கோபின் மேன்மை தாழ்வடையும்: அவனது கொழுத்த உடல் மெலிந்து போகும்.
5அறுவடைசெய்வோன் நிமிர்ந்து நிற்கும் கதிர்களைச் சேர்த்த பின்னும் அவனது கை அவற்றை அறுவடை செய்தபின்னும் சிந்திய கதிர்களைப் பொறுக்கி எடுக்கும் பொழுதும் இரபாயிம் பள்ளத்தாக்கு இருப்பது போல யாக்கோபின் நிலைமை இருக்கும்.
6ஒலிவ மரத்தை உலுக்கும்போது அதன் உச்சிக்கிளை நுனியில் இரண்டு மூன்று காய்களும், பழமிருக்கும் கிளைகளில் நாலைந்து பழங்களும் விடப்பட்டிருப்பதுபோல், அவர்களிடையேயும் பின்னால் பறிக்கப்படுவதற்கெனச் சிலர் விடப்பட்டிருப்பர்,” என்கிறார் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்.
7அன்றுதான், மனிதர் தம்மைப் படைத்தவரை நோக்குவர்: இஸ்ரயேலின் தூயவரைக் காண அவர்கள் கண்கள் விழையும்:
8தங்கள் கைவேலைப்பாடுகளான பலிபீடங்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள்: தாங்கள் கைப்படச் செய்த அசேராக் கம்பங்களையும் மரச் சிலைகளையும் நோக்கமாட்டார்கள்.
9இவ்வியர், எமோரியர் என்பவர்களின் நகரங்கள் இஸ்ரயேல் மக்கள் வந்தபோது பாழடைந்ததுபோல, அந்நாளில் உன் வலிமைமிகு நகர்களும் கைவிடப்பட்டுப் பாழ்வெளி ஆகி விடும்.
10இஸ்ரயேலே, உனக்கு விடுதலை அளித்த கடவுளை நீ மறந்துவிட்டாய்: உன் அடைக்கலமான கற்பாறையை நீ நினைவு கூரவில்லை: ஆதலால், கண்ணுக்கினிய நாற்றுகளை நீ நட்டுவைத்தாலும், வேற்றுத் தெய்வத்திற்கு இளம் கன்றுகளை நாட்டினாலும்,
11நீ அவற்றை நட்ட நாளிலேயே பெரிதாக வளரச் செய்தாலும், விதைத்த காலையிலேயே மலரச் செய்தாலும், துயரத்தின் நாளில் தீராத வேதனையும் நோயுமே உன் விளைச்சலாய் இருக்கும்.
12ஐயோ! மக்களினங்கள் பலவற்றின் ஆரவாரம் கேட்கிறது: கடல் கொந்தளிப்பதுபோல் அவர்கள் கொந்தளிக்கிறார்கள்: இதோ, மக்கள் கூட்டத்தின் கர்ச்சனைக்குரல் கேட்கிறது: வெள்ளப்பெருக்கின் இரைச்சலைப் போல் அவர்கள் முழங்குகிறார்கள்.
13பெருவெள்ளம்போல் மக்கள் கூட்டத்தினர் கர்ச்சிக்கிறார்கள்: அவர்களை ஆண்டவர் அதட்டுவார்: அவர்களும் வெகுதொலைவிற்கு ஓடிப் போவார்கள்: மலைகளில் காற்றின் முன் அகப்பட்ட பதர் போன்றும், புயல்காற்று முன் சிக்குண்ட புழுதி போன்றும் துரத்தப்படுவார்கள்.
14மாலைவேளையில், இதோ! எங்கும் திகில்: விடிவதற்குள் அவர்கள் இல்லாதொழிவார்கள்: இதுவன்றோ நம்மைக் கொள்ளையடிப்பவர்கள் பங்கு! இதுவன்றோ நம்மைச் சூறையாடுவோரின் நிலைமை.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.