| 1 | எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கு அப்பால் சிறகடித்து ஒலியெழுப்பும் உயிரினங்கள் உடையதோர் நாடு உள்ளது. |
| 2 | அது நாணல் படகுகளில் நீரின்மேலே கடல் வழியாகத் தூதரை அனுப்புகிறது: விரைவாய்ச் செல்லும் தூதர்களே, உயர்ந்து வளர்ந்து, பளபளப்பான தோலுடைய இனத்தாரிடம் செல்லுங்கள்: அருகிலும் தொலைவிலும் உள்ளோரை அச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள்: ஆற்றல் வாய்ந்தவர்கள், பகைவரை மிதித்து வெற்றிகொள்பவர்கள் அந்த நாட்டினர்: ஆறுகள் குறுக்காகப் பாய்ந்தோடும் நாடும் அது. |
| 3 | உலகில் குடியிருக்கும் அனைத்து மக்களே, மண்ணுலகில் வாழ்வோரே, மலைகளின்மேல் கொடியேற்றும்போது உற்று நோக்குங்கள்: எக்காளம் ஊதும்போது செவி கொடுங்கள்: |
| 4 | ஏனெனில், ஆண்டவர் என்னிடம் இவ்வாறு சொன்னார்: “பகலில் அடிக்கும் வெப்பம் குறைந்த வெயில் போலும், அறுவடைக்கால வெயிலால் உண்டாகும் பனிமேகம் போன்றும் என் இருப்பிடத்தில் அமைதியாய் இருந்து நான் கவனித்துப் பார்ப்பேன்” |
| 5 | ஏனெனில், அறுவடைக்கு முன் பூக்கள் பூத்துக் காய்த்து, கனிதரும் பருவம் எய்தும்போது, தழைகளை எதிரி அரிவாள்களால் அறுத்தெறிவான்: படரும் கொடிகளை அரிந்து அகற்றிவிடுவான். |
| 6 | அவை அனைத்தும், மலைகளில் பிணந்தின்னும் பறவைகளுக்கும் தரையில் வாழுகின்ற விலங்குகளுக்கும் விடப்படும். பிணந்தின்னும் பறவைகள் கோடைக் காலத்திலும் தரை வாழும் விலங்குகள் குளிர்காலத்திலும் அவற்றின் மேல் தங்கியிருக்கும். |
| 7 | உயர்ந்து வளர்ந்து பளபளப்பான தோலுடைய இனத்தாரின் நாட்டிலிருந்து அந்நேரத்தில் படைகளின் ஆண்டவருக்குக் காணிக்கைப் பொருள்கள் கொண்டு வரப்படும். அருகிலும் தொலையிலும் உள்ளோரை அச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள். அந்நாட்டினர் ஆற்றல் வாய்ந்தோர்: பகைவர்மீது வெற்றிகொள்வோர். ஆறுகள்குறுக்காகப் பாய்ந்தோடும் அந்த நாட்டிலிருந்து படைகளின் ஆண்டவரது பெயர் தங்கியுள்ள சீயோன் மலைக்கு அக்காணிக்கைகள் கொண்டு வரப்படும். |