1 | ஆண்டவர் யாக்கோபின் மீது இரக்கம் காட்டி இஸ்ரயேலை மீண்டும் தேர்ந்துகொள்வார்: அவர்களை அவர்களுடைய நாட்டில் அமைதியுடன் வாழச் செய்வார். வேற்று நாட்டவரும் அவர்களை நாடி வந்து யாக்கோபின் குடும்பத்தாரோடு சேர்ந்து கொள்வார்கள். |
2 | மக்களினங்களை அவர்களை அழைத்து வந்து, அவர்களது சொந்த இடத்திற்கு அவர்களை இட்டுச் செல்வார்கள். அவ் வேற்றுநாட்டாரை ஆண்டவரின் நாட்டில் இஸ்ரயேல் குடும்பத்தார் அடிமைகளாகவும், அடிமைப் பெண்களாகவும் உரிமையாக்கிக் கொள்வர்: தங்களை அடிமைப்படுத்தியவர்களை அடிமையாக்குவார்கள்: அவர்களை ஒடுக்கியவர்கள் மேல் ஆட்சி செலுத்துவார்கள். |
3 | ஆண்டவர் உன்மேல் சுமத்திய துயரையும் இடரையும் கடுமையான அடிமை வாழ்வையும் அகற்றி, அமைதி வாழ்வை உனக்குத் தரும் நாளில், |
4 | பாபிலோன் மன்னனுக்கு எதிராக இந்த ஏளனப் பாடலை எடுத்துக் கூறு: “ஒடுக்கியவன் ஒழிந்தானே! அவன் ஆணவமும் ஓய்ந்ததே! |
5 | தீயோரின் கோலையும் ஆட்சியாளரின் செங்கோலையும் ஆண்டவர் முறித்துப் போட்டார். |
6 | அவர்கள் கோபத்தால் வெகுண்டு அடிமேல் அடியாக மக்களினங்களை அடித்து நொறுக்கினார்கள்: பிற நாட்டினரைத் தொடர்ந்து கொடுமைப்படுத்திக் கடுமையாய் ஆண்டார்கள். |
7 | மண்ணுலகம் முழுவதும் இளைப்பாறி அமைதியில் மூழ்கியிருக்கின்றது: மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்கின்றது. |
8 | தேவதாரு மரங்களும் லெபனோனின் கேதுரு மரங்களும் உன் வீழ்ச்சியால் களிப்படைகின்றன: 'நீ வீழ்ந்து கிடக்கும் இந்நேரமுதல் எமை வெட்டி வீழ்த்த எமக்கெதிராய் எழுபவர் எவருமில்லை' எனப் பாடுகின்றன. |
9 | நீ வரும்போது உன்னை எதிர்கொள்ளக் கீழுள்ள பாதாளம் மகிழ்ச்சியால் பரபரக்கின்றது: உலகின் இறந்த தலைவர்கள் அனைவரும் உன்னை வரவேற்குமாறு அவர்களை எழுப்புகிறது. வேற்றினத்தாரின் அரசர்கள் அனைவரையும் அவர்தம் அரியணையை விட்டு எழச் செய்கிறது.” |
10 | அவர்கள் அனைவரும் உன்னை நோக்கி, “நீயும் எங்களைப்போல் வலுவிழந்து போனாயே! எங்களின் கதியை நீயும் அடைந்தாயே! |
11 | உன் இறுமாப்பும் உன் வீணைகளின் இசையொலியும் பாதாளம்வரை தாழ்த்தப்பட்டன: புழுக்கள் உனக்குக் கீழ்ப் படுக்கையாகும்! பூச்சிகள் உன் போர்வையாகும்! |
12 | வைகறைப் புதல்வனாகிய விடி வெள்ளியே! வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே! மக்களினங்களை வலிமை குன்றச் செய்தவனே, வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தாயே! |
13 | 'நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்: இறைவனுடைய விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில் என் அரியணையை ஏற்படுத்துவேன்: வடபுறத்து எல்லைப்பகுதியிலுள்ள பேரவை மலைமேல் வீற்றிருப்பேன். |
14 | மேகத்திரள்மேல் ஏறி, உன்னதற்கு ஒப்பாவேன்' என்று உன் உள்ளத்தில் உரைத்தாயே! |
15 | ஆனால் நீ பாதாளம் வரை தாழ்த்தப்பட்டாய்: படுகுழியின் அடிமட்டத்திற்குள் தள்ளப்பட்டாயே! |
16 | உன்னைக் காண்போர், உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்து, 'மண்ணுலகை நடுநடுங்கச் செய்தவனும், அரசுகளை நிலைகுலையச் செய்தவனும், |
17 | பூவுலகைப் பாலைநிலமாய் ஆக்கி, அதன் நகரங்களை அழித்தவனும், தன்னிடம் சிறைப்பட்டவர் வீடு திரும்ப விடுதலை அளிக்காதிருப்பவனும் இவன் தானோ?' என்பர். |
18 | மக்களின மன்னர்கள் அனைவரும் அவரவர் உறைவிடங்களில் மாட்சியுடன் படுத்திருக்கின்றனர். |
19 | நீயோ, அருவருப்பான அழுகிய இலைபோல, உன் கல்லறையிலிருந்து வெளியே வீசப்பட்டிருக்கிறாய்: வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டு, நாற்றமெடுத்த பிணம்போலக் கிடக்கின்றாய். |
20 | கல்லறையில் அவர்களோடு நீ இடம் பெறமாட்டாய்: ஏனெனில், உன் நாட்டை நீ அழித்து விட்டாய்: உன் மக்களைக் கொன்று போட்டாய்: தீங்கிழைப்போரின் வழிமரபு என்றுமே பெயரற்றுப் போகும். |
21 | மூதாதையரின் தீச்செயல்களை முன்னிட்டு அவர்கள் புதல்வர்களுக்குக் கொலைக் களத்தைத் தயார்ப்படுத்துங்கள்: நாட்டை உரிமையாக்க இனி அவர்கள் தலையெடுக்கக்கூடாது: பூவுலகின் பரப்பை அவர்கள் நகரங்களால் நிரப்பக்கூடாது.” |
22 | “அவர்களுக்கு எதிராக நான் கிளர்ந்தெழுவேன்” என்கிறார் படைகளின் ஆண்டவர், “பாபிலோனின் பெயரையும் அங்கே எஞ்சியிருப்போரையும், வழி மரபினரையும் வழித்தோன்றல்களையும் இல்லாதொழிப்பேன்,” என்கிறார் ஆண்டவர். |
23 | “அந்நாட்டை முள்ளம்பன்றிகளின் இடமாக்குவேன்: சேறும் சகதியும் நிறைந்த நீர்நிலையாக்குவேன்: அழிவு என்னும் துடைப்பத்தால் முற்றிலும் துடைத்துவிடுவேன்” என்கிறார் படைகளின் ஆண்டவர். |
24 | படைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறுகின்றார்: “நான் எண்ணியவாறு யாவும் நடந்தேறும்: நான் தீட்டிய திட்டமே நிலைத்து நிற்கும். |
25 | என் நாட்டில் அசீரியனை முறியடிப்பேன்: என் மலைகளின் மேல் அவனை மிதித்துப் போடுவேன்: அப்பொழுது அவனது நுகத்தடி அவர்களைவிட்டு அகலும்: அவன் வைத்த சுமை அவர்கள் தோளிலிருந்து இறங்கும். |
26 | மண்ணுலகம் முழுவதையும்பற்றி நான் தீட்டிய திட்டம் இதுவே: பிறஇனத்தார் அனைவருக்கும் எதிராக நான் ஓங்கியுள்ள கையும் இதுவே. |
27 | படைகளின் ஆண்டவர் தீட்டிய திட்டத்தைச் சீர்குலைக்க வல்லவன் எவன்? அவர் தம் கையை ஓங்கியிருக்க அதை மடக்கக்கூடியவன் எவன்?” |
28 | ஆகாசு அரசன் இறந்த ஆண்டில் இந்தத் திருவாக்கு அருளப்பட்டது. |
29 | பெலிஸ்திய நாட்டின் அனைத்து மக்களே, உங்களை அடித்த கோல் முறிந்து விட்டதற்காக அக்களிக்காதீர்: ஏனெனில் பாம்பின் வேரினின்று கட்டுவிரியன் புறப்பட்டு வரும்: அதன் கனியாகப் பறவைநாகம் வெளிப்படும். |
30 | ஏழைகளின் தலைப்பிள்ளைகள் உணவு பெறுவார்கள்: வறியவர்கள் அச்சமின்றி இளைப்பாறுவார்கள்: உன் வழிமரபைப் பஞ்சத்தால் நான் மடியச் செய்வேன், உன்னில் எஞ்சியிருப்போரை நான் கொன்றொழிப்பேன். |
31 | வாயிலே, வீறிட்டு அழு: நகரே, கதறியழு: எல்லாப் பெலிஸ்திய மக்களே: மனம் பதறுங்கள், ஏனெனில் வடபுறத்திலிருந்து புகையெனப் படை வருகின்றது. அதன் போர்வீரருள் கோழை எவனும் இல்லை. |
32 | அந்த நாட்டுத் தூதருக்கு என்ன மறுமொழி கூறப்படும்? “சீயோனுக்கு அடித்தளமிட்டவர் ஆண்டவர்: அவர்தம் மக்களுள் துயருறுவோர் அங்கேயே புகலிடம் பெறுவர் என்பதே.” |