1 | ஆமோட்சின் மகன் எசாயா பாபிலோனைக் குறித்துக் கண்ட காட்சியில் அருளப்பட்ட திருவாக்கு: |
2 | வறண்ட மலை ஒன்றில் போர்க்கொடி ஏற்றுங்கள்: போர்வீரர்களை உரக்கக் கூவி அழையுங்கள்: உயர்குடி மக்கள் வாழும் நகர வாயில்களுக்குள் நுழையும்படி, அவர்களுக்குக் கையசைத்துச் சைகை காட்டுங்கள். |
3 | போருக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள என் வீரர்களுக்கு, நானே ஆணை பிறப்பித்துள்ளேன்: நான் சினமடைந்து பிறப்பித்துள்ள என் கட்டளையை நிறைவேற்றிட, தங்கள் வலிமையால் பெருமிதம் கொள்ளும் என் வீரர்களை அழைத்துள்ளேன். |
4 | மலைகளின் மேல் எழும் பேரிரைச்சலைக் கேளுங்கள்: அது பெருங்கூட்டமாய் வரும் மக்களின் ஆரவராம்: அரசுகளின் ஆர்ப்பாட்டக் குரலைக் கேளுங்கள், பிற இனத்தார் ஒருங்கே திரண்டு விட்டனர்: |
5 | தொலைநாட்டிலிருந்தும் தொடுவானத்து எல்லைகளிலிருந்தும் அவர்கள் வருகின்றார்கள்: ஆண்டவர் தம் கடும்சினத்தின் போர்க் கலன்களோடு உலகம் முழுவதையும் அழிக்க வருகின்றார். |
6 | அழுது புலம்புங்கள், ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது: எல்லாம் வல்லவரிடமிருந்து அழிவு வடிவத்தில் அது வருகின்றது: |
7 | ஆதலால், கைகள் யாவும் தளர்ந்து விடும்: மானிட நெஞ்சம் அனைத்தும் உருகி நிற்கும். |
8 | அவர்கள் திகிலடைவார்கள்: துன்ப துயரங்கள் அவர்களைக் கவ்விக்கொள்ளும்: பேறுகாலப் பெண்ணைப்போல வேதனையடைவார்கள்: ஒருவர் மற்றவரைப் பார்த்துத் திகைத்து நிற்பர்: கோபத் தீயால் அவர்கள் முகம் கனன்று கொண்டிருக்கும். |
9 | இதோ, ஆண்டவரின் நாள் வருகின்றது, கொடுமையும் கோபமும் கடும் சீற்றமும் நிறைந்த நாள் அது: மண்ணுலகைப் பாழ்நிலமாக்கும் நாள் அது: அதிலிருக்கும் பாவிகளை முற்றிலும் அழித்துவிடும் நாள் அது. |
10 | வானத்து விண்மீன்களும் இராசிக் கூட்டங்களும் ஒளி வீசமாட்டா: தோன்றும்போதே கதிரவன் இருண்டு போவான்: வெண்ணிலாவும் தண்ணொளியைத் தந்திடாது. |
11 | உலகை அதன் தீச்செயலுக்காகவும் தீயோரை அவர்தம் கொடுஞ் செயலுக்காகவும் நான் தண்டிப்பேன்: ஆணவக்காரரின் அகந்தையை அழிப்பேன்: அச்சுறுத்துவோரின் இறுமாப்பை அடக்குவேன். |
12 | மானிடரைப் பசும் பொன்னைவிடவும் மனிதர்களை ஓபீரின் தங்கத்தைவிடவும் அரிதாக்குவேன். |
13 | ஆதலால், வானத்தை நடுங்கச் செய்வேன்: மண்ணுலகம் தன் இருப்பிடத்திலிருந்து ஆட்டங் கொடுக்கும்: படைகளின் ஆண்டவரது கோபத்தால் அவரது கடும்சினத்தின் நாளில் இது நடக்கும். |
14 | துரத்தப்பட்ட புள்ளிமான் போலவும், ஒன்று சேர்ப்பாரின்றிச் சிதறுண்டு ஆடுகளைப் போலவும், எல்லாரும் தம் மக்களிடம் திரும்பிச் செல்வர்: எல்லாரும் தம் சொந்த நாட்டுக்குத் தப்பியோடுவர். |
15 | அகப்பட்ட ஒவ்வொருவரும் பிடிபட்ட ஒவ்வொருவரும் வாளால் மடிவர். |
16 | அவர்கள் பச்சிளம் குழந்தைகள் அவர்கள் கண்ணெதிரே மோதியடிக்கப்படுவர். அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும், அவர்கள் துணைவியர் மானபங்கப்படுத்தப்படுவர். |
17 | இதோ, அவர்களுக்கு எதிராக நான் மேதியரைக் கிளர்ந்தெழச் செய்கின்றேன், அவர்கள் வெள்ளியைப் பெரிதாக எண்ணாதவர்கள்: பொன்னை அடைவதற்கு ஆவல் கொள்ளாதவர்கள். |
18 | அவர்கள் வில்வீரர் இளைஞரை மோதியடிப்பார்கள், பச்சிளங் குழந்தைகளுக்கு அவர்கள் கருணை காட்டமாட்டார்கள்: சிறுவர்களுக்கு அவர்கள் கண்களில் இரக்கம் இராது. |
19 | அரசுகளில் சிறப்புமிகு கல்தேயரின் மேன்மையும் பெருமையுமான பாபிலோன் கடவுள் அழித்த சோதோம் கொமோராவைப்போல ஆகிவிடும். |
20 | இனி எவரும் அதில் ஒருபோதும் குடியிருக்க மாட்டார்: அதுவும் தலைமுறை தலைமுறையாகக் குடியற்று இருக்கும்: அரேபியர் அங்கே கூடாரம் அமைக்கமாட்டார்: ஆயர்கள் தம் மந்தையை அங்கே இளைப்பாற விடுவதில்லை. |
21 | ஆனால், காட்டு விலங்குகள் அங்கே படுத்துக் கிடக்கும்: ஊளையிடும் குள்ளநரிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும்: தீக்கோழிகள் அங்கே தங்கியிருக்கும்: வெள்ளாட்டுக் கிடாய்கள் அங்கே துள்ளித் திரியும். |
22 | அவர்கள் கோட்டைகளில் ஓநாய்கள் அலறும்: அரண்மனைகளில் குள்ளநரிகள் ஊளையிடும்: அதற்குரிய நேரம் நெருங்கிவிட்டது: அதற்குரிய நாள்கள் அண்மையில் உள்ளன. |