வேதாகமத்தை வாசி

Click to Subscribe

உன்னதப்பாட்டு 8

                   
புத்தகங்களைக் காட்டு
1நீர் என் உடன்பிறப்பாக இருக்கக் கூடாதா! என் அன்னையிடம் பால் குடித்தவராய் இருக்கலாகாதா! தெருவில் கண்டாலும் நான் உம்மை முத்தமிடுவேனே! அப்போது எவருமே என்னை இகழமாட்டார்.
2உம்மை என் தாய் வீட்டுக்குக் கூட்டி வருவேன்: எனக்குக் கற்றுத் தந்தவளின் மனைக்குள் கொணர்ந்திடுவேன்: மணமூட்டிய திராட்சை இரசத்தை உமக்குக் குடிக்கக் கொடுப்பேன்: என் மாதுளம் பழச்சாற்றைப் பருகத் தருவேன்.
3இடக்கையால் அவர் என் தலையைத் தாங்கிக் கொள்வார்: வலக்கையால் அவர் என்னைத் தழுவிக் கொள்வார்.
4எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுக் கேட்கின்றேன்: காதலை ஏன் தட்டி எழுப்புகின்றீர்? தானே விரும்பும்வரை அதை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?
5“யார் இவள்! பாலைவெளியினின்று எழுந்து வருபவள்: தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு வருபவள் யார் இவள்?” கிச்சிலி மரத்தடியில் நான் உம்மை எழுப்பினேன்: அங்கேதான் உம்தாய் பேறுகால வேதனையுற்றாள்.
6உம் நெஞ்சத்தில் இலச்சினைபோல் என்னைப் பொறித்திடுக: இலச்சினைப்போல் உம் கையில் பதித்திடுக: ஆம், அன்பு சாவைப்போல் வலிமைமிக்கது: அன்பு வெறி பாதாளம்போல் பொறாதது: அதன் பொறி, எரிக்கும் நெருப்புப் பொறி: அதன் கொழுந்து பொசுக்கும் தீக்கொழுந்து.
7பெருங்கடலும் அன்பை அணைக்க முடியாது: வெள்ளப்பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது: அன்புக்காக ஒருவன் தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம் வாரியிறைக்கலாம்: ஆயினும், அவன் ஏளனம் செய்யப்படுவது உறுதி.
8நம்முடைய தங்கை சிறியவள்: அவளுக்கு முலைகள் முகிழ்க்கவில்லை: அவளைப் பெண்பேச வரும்நாளில் நம் தங்கைக்காக என் செய்வோம்?
9அவள் ஒரு மதிலானால் அதன்மேல் வெள்ளியரண் கட்டிடுவோம்: அவள் ஒரு கதவானால் அதனை கேதுருப் பலகையால் மூடிடுவோம்.
10நான் மதில்தான்: என் முலைகள் அதன் கோபுரங்கள் போல்வன: அவர்தம் பார்வையில் நான் நல்வாழ்வு தருபவள் ஆவேன்.
11பாகால்-ஆமோன் என்னுமிடத்தில் சாலமோனுக்கு இருந்தது ஒரு திராட்சைத் தோட்டம், திராட்சைத் தோட்டத்தை அவர் காவலரிடம் ஒப்படைத்தார்: அதன் கனிகளுக்காக எவரும் ஆயிரம் வெள்ளிக் காசுகூடத் தருவார்.
12எனக்குரிய திராட்சைத் தோட்டம் என்முன்னே உளது: சாலமோனே, அந்த ஆயிரம் வெள்ளிக்காசு உம்மிடமே இருக்கட்டும்: இருநூறு காசும் பழங்களைக் காப்போர்க்கே சேரட்டும்.
13“தோட்டங்களில் வாழ்பவளே! தோழர் கூர்ந்து கேட்கின்றனர்: உன் குரலை யான் கேட்கலாகாதோ!”
14“என் காதலரே! விரைந்து ஓடிடுக: கலைமான் அல்லது மரைமான் குட்டிபோல நறுமணம் நிறைந்த மலைகளுக்கு விரைந்திடுக!”
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.