1 | விலையுயர்ந்த நறுமணத் தைலத்தைவிட நற்புகழே மேல். பிறந்த நாளைவிட இறக்கும் நாளே சிறந்தது. |
2 | விருந்து நடக்கும் வீட்டிற்குச் செல்வதைவிடத் துக்க வீட்டிற்குச் செல்வதே நல்லது. ஏனெனில், அனைவருக்கும் முடிவு என்பதை உயிருடன் இருப்போர் அங்கே உணர்ந்துகொள்வர். |
3 | சிரிப்பைவிடத் துயரமே நல்லது. துயரத்தால் முகத்தில் வருத்தம் தோன்றலாம்: ஆனால், அது உள்ளத்தைப் பண்படுத்தும். |
4 | ஞானமுள்ளவரின் உள்ளத்தில் துக்க வீட்டின் நினைவே இருக்கும்: மூடரின் உள்ளத்திலோ சிற்றின்ப வீட்டின் நினைவே இருக்கும். |
5 | மூடர் புகழ்ந்துரைப்பதைக் கேட்பதினும் ஞானி இடித்துரைப்பதைக் கேட்பதே நன்று. |
6 | மூடரின் சிரிப்பு, பானையின்கீழ் எரியும் முட்செடி படபடவென்று வெடிப்பதைப் போன்றது: அதனால் பயன் ஒன்றுமில்லை. |
7 | இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்: கைக்கூலி உள்ளத்தைக் கறைப்படுத்தும். |
8 | ஒன்றின் தொடக்கமல்ல, அதன் முடிவே கவனிக்கத் தக்கது: உள்ளத்தில் பெருமைகொள்வதைவிடப் பொறுமையோடு இருப்பதே மேல். |
9 | உள்ளத்தில் வன்மத்திற்கு இடங் கொடாதே: மூடரின் நெஞ்சமே வன்மத்திற்கு உறைவிடம். |
10 | “இக்காலத்தைவிட முற்காலம் நற்காலமாயிருந்ததேன்?” என்று கேட்காதே: இது அறிவுடையோர் கேட்கும் கேள்வியல்ல. |
11 | மரபுரிமைச் சொத்தோடு ஞானம் சேர்ந்திருத்தல் வேண்டும்: இதுவே உலகில் வாழும் மக்களுக்கு நல்லது. |
12 | பணம் நிழல் தருவதுபோல் ஞானமும் நிழல் தரும்: ஞானம் உள்ளவருக்கு அதனால் வாழ்வு கிடைக்கும்: அறிவினால் கிடைக்கும் பயன் இதுவே. |
13 | கடவுளின் செயலைச் சிந்தித்துப்பார். அவர் கோணலாக்கினதை நேராக்க யாரால் இயலும்? |
14 | வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு: துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது: “அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்”. |
15 | என் பயனற்ற வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். நேர்மையானவர் நேர்மையுள்ளவராய் இருந்தும் மாண்டழிகிறார். தீயவரோ தீமை செய்கிறவராய் இருந்தும் நெடுங்காலம் வாழ்கிறார். |
16 | நேர்மையாய் நடப்பதிலும் ஞானத்தைப் பெறுவதிலும் வெறி கொண்டவராய் இராதீர். அந்த வெறியால் உம்மையே அழித்துக் கொள்வானேன்? |
17 | தீமை செய்வதிலும் மூடராயிருப்பதிலும் வெறி கொண்டவராய் இராதீர். காலம் வருமுன் நீவிர் ஏன் சாகவேண்டும்? |
18 | ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும்போது, அதற்கு மாறானதைக் கைவிட்டுவிடாதீர். நீவிர் கடவுளுக்கு அஞ்சி நடப்பீரானால் அனைத்திலும் வெற்றி பெறுவீர். |
19 | ஒரு நகருக்குப் பத்து ஆட்சியாளர் தரும் வலிமையைவிட, ஞானமுள்ளவருக்கு ஞானம் மிகுதியான வலிமை தரும். |
20 | குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை. |
21 | பிறர் கூறுவதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்காதீர். அவ்வாறு செய்தால் உம் வேலைக்காரர் உம்மை இகழ்ந்ததையும் நீவிர் கேட்க நேரிடும். |
22 | நீவிர் எத்தனைமுறை பிறரை இகழ்ந்தீர் என்பது உமக்கே நன்றாய்த் தெரியும். |
23 | இவற்றையெல்லாம் என் ஞானத்தால் சீர்தூக்கிப் பார்த்தேன். நான் ஞானியாகிவிடுவேன் என்று நினைத்தேன். |
24 | ஆனால், என்னால் இயலாமற் போயிற்று. ஞானம் நெடுந் தொலையில் உள்ளது: மிக மிக ஆழமானது. அதை யாரால் கண்டுபிடிக்க முடியும்? |
25 | நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்: ஞானத்தையும் காரண காரியத்தையும் பற்றிய விவரத்தை ஆராய்ந்து காண்பதில் சிந்தனையைச் செலுத்தினேன். கொடியவராயிருத்தல் மூடத்தனம் என்பதையும், மதிகேடரைப்போலச் செயல்புரிதல் அறிவுகெட்ட நடத்தை என்பதையும் தெரிந்துகொண்டேன். |
26 | சாவைவிடக் கசப்பானதொன்றைக் கண்டேன். அதுதான் பெண். அவள் உனக்குக் காட்டும் அன்பு ஒரு கண்ணியைப் போல அல்லது ஒரு வலையைப் போல உன்னைச் சிக்க வைக்கும்: உன்னைச் சுற்றிப் பிடிக்கும். அவளின் கைகள் சங்கிலியைப்போல உன்னை இறுக்கும். கடவுளுக்கு உகந்தவனே அவளிடமிருந்து தப்புவான். பாவியோ அவளின் கையில் அகப்படுவான். |
27 | “ஆம், நான் ஒன்றன்பின் ஒன்றாய் ஆராய்ந்து இதைக் கண்டுபிடித்தேன்” என்கிறார் சபை உரையாளர். வேறு ஆராய்ச்சிகளும் செய்தேன்: அவற்றால் மிகுந்த பயன் அடையவில்லை. |
28 | ஆனால் ஒன்று தெரிந்தது. மனிதன் எனத் தக்கவன் ஆயிரத்தில் ஒருவனே என்று கண்டேன். பெண் எனத் தக்கவள் யாரையுமே நான் கண்டதில்லை. |
29 | நான் தெரிந்துகொண்டதெல்லாம் இதுவே. கடவுள் மனிதரை நேர்மையுள்ளவராகவே படைத்தார். ஆனால் வாழ்க்கைச் சிக்கல்கள் அனைத்தும் மனிதர் தேடிக்கொண்டவையே. |