வேதாகமத்தை வாசி

எஸ்தர் 4

                   
புத்தகங்களைக் காட்டு
1இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் அறிந்த மொர்தக்காய் தம் ஆடைகளைக் கிழித்து, சாக்கு உடை அணிந்து, சாம்பல் பூசிக்கொண்டு, வெளியே நகரின் மையத்திற்குச் சென்று ஓலமிட்டு, மனங்கசிந்து அழுதார்.
2அரச வாயிலுள் சாக்கு உடை அணிந்து எவரும் நுழையக்கூடாது என்பதால் அவர் வாயில் வரை சென்றார்.
3மன்னரின் வார்த்தையும் நியமமும் எந்தெந்த மாநிலங்களை அடைந்தனவோ, அங்கெல்லாம் இருந்த யூதரிடையே பெரும் புலம்பலும், நோன்பும், கண்ணீரும், அழுகையும் விளங்க, அனைவரும் சாக்கு உடை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டனர்.
4எஸ்தரின் செவிலியரும் அண்ணகர்களும் வந்து இவற்றை அவரிடம் சொல்ல, அரசி பெரிதும் வாடித் துடித்தார். மொர்தக்காய் சாக்கு உடை களைந்து, நல்லாடை அணிந்து கொள்ளும்படி ஆடைகளை அவர் அனுப்பி வைத்தார். அவரோ அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.
5எஸ்தருக்குப் பணிபுரியும்படி மன்னரால் நியமிக்கப்பட்டிருந்த அண்ணகர் அத்தாக்கை அவர் அழைத்து, மொர்தக்காயின் அவலநிலைக்குக் காரணம் யாதென அறிந்து வருமாறு அனுப்பினார்.
6அத்தாக்கு அரச வாயிலுக்கு எதிரே நகர்ச் சந்தியில் இருந்த மொர்தக்காயிடம் சென்றார்.
7மொர்தக்காய் தமக்கு நேரிட்ட அனைத்தைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி அரச கருவூலத்தில் சேர்ப்பதற்காக ஆமான் வாக்களித்த வெள்ளி பற்றியும் அவருக்குத் தெரிவித்தார்.
8மேலும், சூசானில் பிறப்பிக்கப்பட்ட நியமத்தின் ஒரு நகலை எஸ்தரிடம் காட்டும்படி கொடுத்து, அலர் மன்னரிடம் சென்று மன்றாடி, அவர் முன்னிலையில் தம் மக்களுக்காகப் பரிந்து பேசுமாறு வேண்டினார்.
9அத்தாக்கு அவ்வாறே சென்று, எஸ்தரிடம் மொர்தக்காயின் வார்த்தைகளை எடுத்துரைத்தார்.
10எஸ்தர் மறுபடியும் அத்தாக்கு வழியாய் மொர்தக்காய்க்குச் சொல்லி அனுப்பியது:
11“மன்னரால் அழைப்புப் பெறாத ஆண், பெண் எவரும் மன்னரின் உள்முற்றத்திற்குச் சென்றால் கொல்லப்படுவர் என்பதும், யாருக்கு மன்னர் தம் பொற்செங்கோலை நீட்டுகிறாரோ அவரே பிழைப்பார் என்பதும் அரச நியமம்: இதனை மன்னரின் அனைத்து ஊழியர்களும், மாநில மக்கள் அனைவரும் அறிவர்.”
12அவரும் எஸ்தரின் வார்த்தைகளை மொர்தக்காயிடம் அறிவித்தார்.
13அதற்கு மொர்தக்காய் எஸ்தரிடம் அறிவிக்கும்படியாகக் கூறியது: “அனைத்து யூதருள்ளும் அரச மாளிகையில் உள்ள நீ மட்டும் காப்பாற்றப் பெறுவாய் என உனக்குள் கற்பனை செய்ய வேண்டாம்.
14ஏனெனில், இவ்வமயம் நீ மௌனமாய் வாளாவிருப்பின், விடுதலையும் பாதுகாப்பும் யூதருக்குப் பிறிதொரு இடத்தினின்று தோன்றும். ஆனால் நீயும் உன் தந்தையின் வீட்டாரும் அழிவீர். யார் அறிவார்? ஒருவேளை இதுபோன்ற நேரத்திற்கெனவே நீ அரசியாகி உள்ளாய் போலும்!”.
15இது கேட்ட எஸ்தர் மொர்தக்காயிடம் சொல்லும்படியாகக் கூறியது:
16“சூசானில் காணப்படும் அனைத்து யூதரையும் ஒன்று சேர்ப்பீராக! எனக்காக நோன்பிருந்து, மூன்றுநாள் இரவு பகல் உண்ணாமலும், குடியாமலும் இருப்பீராக! நானும் என் செவிலியரும் அவ்வாறே நோன்பிருப்போம். சட்டத்திற்குப் புறம்பே எனினும் நான் மன்னரிடம் செல்வேன்! அழிவதாயின் அழிகின்றேன்.”
17மொர்தக்காய் அவ்வாறே சென்று, எஸ்தரின் வாக்கின்படியே அனைத்தையும் செய்தார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.