| 1 | அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தம்செய்தான். |
| 2 | பின்பு, தன் தகப்பனுடைய உடலைப் பதப்படுத்தும்படி யோசேப்பு தன் வேலைக்காரர்களாகிய வைத்தியர்களுக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர்கள் இஸ்ரவேலைப் பதப்படுத்தினார்கள். |
| 3 | பதப்படுத்த நாற்பது நாட்கள் ஆகும்; அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர்கள் அவனுக்காக எழுபது நாட்கள் துக்கம்அனுசரித்தார்கள். |
| 4 | துக்கம்அனுசரிக்கும் நாட்கள் முடிந்தபின், யோசேப்பு பார்வோனின் குடும்பத்தாரை நோக்கி: உங்கள் கண்களில் எனக்கு தயவுகிடைத்ததானால், நீங்கள் பார்வோனுடைய காது கேட்க அவருக்கு தெரிவிக்கவேண்டியது என்னவென்றால் |
| 5 | என் தகப்பனார் என்னை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; கானான் தேசத்திலே நான் எனக்காக வெட்டிவைத்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கம் செய்யவேண்டும் என்று என்னிடத்தில் சொல்லி, உறுதிமொழி வாங்கிக்கொண்டார்; நான் அங்கே போய், என் தகப்பனை அடக்கம்செய்து வருவதற்கு அனுமதிகொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான். |
| 6 | அதற்குப் பார்வோன்: உன் தகப்பன் உன்னிடத்தில் உறுதிமொழி வாங்கிக்கொண்டபடியே, நீ போய், அவரை அடக்கம்செய்து வா என்றான். |
| 7 | அப்படியே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்செய்யப் போனான். பார்வோனுடைய அரண்மனையிலிருந்த பெரியவர்களாகிய அவனுடைய அனைத்து உயர்அதிகாரிகளும் எகிப்துதேசத்திலுள்ள அனைத்து பெரியோரும் |
| 8 | யோசேப்பின் வீட்டார் அனைவரும், அவனுடைய சகோதரர்களும், தகப்பன் வீட்டாரும் அவனோடுகூடப் போனார்கள். தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும்மாத்திரம் கோசேன் நாட்டிலே விட்டுப் போனார்கள். |
| 9 | இரதங்களும் குதிரைவீரரும் அவனோடு போனதினால், மக்கள்கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தது. |
| 10 | அவர்கள் யோர்தானுக்கு மறுகரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்திற்கு வந்தபோது, அந்த இடத்திலே பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள். அங்கே தன் தகப்பனுக்காக ஏழுநாட்கள் துக்கம்அனுசரித்தான். |
| 11 | ஆத்தாத்தின் களத்திலே துக்கம்அனுசரிக்கிறதை அந்த தேசத்தின் குடிமக்களாகிய கானானியர்கள் கண்டு: இது எகிப்தியருக்குப் பெரிய துக்கம்அனுசரித்தல் என்றார்கள். அதனால் யோர்தானுக்கு அப்பால் இருக்கிற அந்த இடத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பெயர் உண்டானது. |
| 12 | யாக்கோபின் மகன்கள், தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே, |
| 13 | அவனைக் கானான் தேசத்திற்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாக ஏத்தியனான எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்செய்தார்கள். |
| 14 | யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்செய்தபின்பு, அவனும் அவனுடைய சகோதரர்களும், அவனுடைய தகப்பனை அடக்கம்செய்வதற்கு அவனோடுகூடப் போனவர்கள் அனைவரும் எகிப்திற்குத் திரும்பினார்கள். |
| 15 | தங்களுடைய தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர்கள் கண்டு: ஒரு வேளை யோசேப்பு நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நம்மை பழிவாங்குவான் என்று சொல்லி, யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி |
| 16 | உம்முடைய சகோதரர்கள் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார். |
| 17 | ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான். |
| 18 | பின்பு, அவனுடைய சகோதரர்களும் போய், அவனுக்கு முன்பாகத் தாழவிழுந்து: இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள். |
| 19 | யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா; |
| 20 | நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, திரளான மக்களை உயிரோடு காக்கும்படி, அதை நன்மையாக முடியச்செய்தார். |
| 21 | ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடு ஆதரவாகப் பேசினான். |
| 22 | யோசேப்பும் அவனுடைய தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு நூற்றுப்பத்து வருடங்கள் உயிரோடிருந்தான். |
| 23 | யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் மகனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள். |
| 24 | யோசேப்பு தன் சகோதரர்களை நோக்கி: நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாகச் சந்தித்து, நீங்கள் இந்த தேசத்தைவிட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்திற்குப் போகச்செய்வார் என்று சொன்னதுமல்லாமல்; |
| 25 | தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இந்த இடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் வம்சத்தாரிடத்தில் உறுதிமொழி வாங்கிக்கொண்டான். |
| 26 | யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாக இறந்தான். அவனுடைய உடலைப் பதப்படுத்தி, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள். |