| 1 | யாக்கோபு தன் மகன்களை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்குச் சம்பவிக்கும் காரியங்களை அறிவிப்பேன். |
| 2 | யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள். |
| 3 | ரூபனே, நீ என் முதற்பிறந்தவன்; நீ என் திறமையும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன். |
| 4 | தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய படுக்கையின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே. |
| 5 | சிமியோனும், லேவியும் சகோதரர்கள்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். |
| 6 | என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு மனிதனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை அழித்தார்களே. |
| 7 | அவர்களுடைய கடுமையான கோபமும், கொடுமையான மூர்க்கமும் சபிக்கப்படுவதாக; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் செய்வேன். |
| 8 | யூதாவே, சகோதரர்களால் புகழப்படுபவன் நீயே; உன் கை உன் எதிரிகளுடைய கழுத்தின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய மகன்கள் உன்னைப் பணிவார்கள். |
| 9 | யூதா பாலசிங்கம், நீ இரையை விரும்பி ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப்படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்? |
| 10 | சமாதானக் கர்த்தர் வரும்வரைக்கும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, ஆளுகை அவனுடைய பாதங்களைவிட்டு ஒழிவதும் இல்லை; மக்கள் அவரிடத்தில் சேருவார்கள். |
| 11 | அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சைச்செடியிலும், தன் பெண்கழுதையின் குட்டியை உயர்தர திராட்சைச்செடியிலும் கட்டுவான்; திராட்சைரசத்திலே தன் ஆடையையும், திராட்சைப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் வெளுப்பான். |
| 12 | அவனுடைய கண்கள் திராட்சைரசத்தினால் சிவப்பாகவும், அவனுடைய பற்கள் பாலினால் வெண்மையாகவும் இருக்கும். |
| 13 | செபுலோன் கடற்கரை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாக இருப்பான்; அவனுடைய எல்லை சீதோன்வரைக்கும் இருக்கும். |
| 14 | இசக்கார் இரண்டு சுமைகளின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை. |
| 15 | அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, கூலிவேலை செய்கிறவனானான். |
| 16 | தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான். |
| 17 | தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாக அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற பாம்பைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான். |
| 18 | கர்த்தாவே, உம்மாலே விடுவிக்கப்படக் காத்திருக்கிறேன். |
| 19 | காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான். |
| 20 | ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிகரமானவைகளை அவன் தருவான். |
| 21 | நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான். |
| 22 | யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீரூற்றின் அருகில் உள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும். |
| 23 | வில்வீரர்கள் அவனை மனவருத்தமாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள். |
| 24 | ஆனாலும், அவனுடைய வில் உறுதியாக நின்றது; அவனுடைய புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கைகளால் பலமடைந்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான். |
| 25 | உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், மார்பகங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார். |
| 26 | உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுவரைக்கும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய தலையின் மேலும், தன் சகோதரர்களில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக. |
| 27 | பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையை அழிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான். |
| 28 | இவர்கள் எல்லோரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான். |
| 29 | பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடு சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களருகில் அடக்கம் செய்யுங்கள் என்று கட்டளையிட்டு; |
| 30 | அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா எனப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாக இருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனான எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார். |
| 31 | அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்செய்தார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்செய்தார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்செய்தேன். |
| 32 | அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் மகன்களிடமிருந்து வாங்கப்பட்டது என்றான். |
| 33 | யாக்கோபு தன் மகன்களுக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு உயிர்போய், தன் மக்களோடு சேர்க்கப்பட்டான். |