ஜெபிப்பவர்கள்
மறுபடியும் நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? என்று கேட்கிறேன். ஏனெனில் ஜெபம் செய்வதின் பழக்கமே மெய்யான கிறிஸ்தவனின் ஒரு உறுதியான அடையாளமாய் இருக்கிறது.
பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் ஜெபத்திற்கு மரியாதை கொடுக்கிறார்கள். எப்போது ஜீவனைபெற்று, கிறிஸ்தவ சத்தியத்தை அறிந்துகொள்ள ஆரம்பிக்கிறார்களோ அந்த நிமிடமே அவர்கள் ஜெபிக்கிறார்கள். ஒரு குழந்தை இந்த உலகத்தில் பிறக்கும்போது அது உயிரோடுயிருப்பதற்கான முதல் அறிகுறி சுவாசிப்பது. அதுபோல் மறுபிறப்படைந்தவர்களின் முதல் செய்கை ஜெபமாய் இருக்கிறது.
கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒவ்வொரு மனிதனிலும் காணப்படும் பொதுவான அம்சம் ஜெபம். "அவர்கள் இரவும் பகலும் அவரை நோக்கி கூப்பிடுகிறார்கள்" (லூக் 18:1). பரிசுத்த ஆவியானவர் அவர்களை புதுசிருஷ்டியாக மாற்றி, தத்தெடுக்கப்பட்டவர்கள் என்ற உணர்வை அவர்களுக்கு தந்து, அவர்களை 'அப்பா பிதாவே' என்று கூப்பிட வைக்கிறார். (ரோம 8:15) கர்த்தராகிய இயேசு அவர்களை எழுப்பி, அவர்களுக்கு நாவையும் பேச்சையும் கொடுத்து, இனி ஊமையாய் இருக்கமாட்டாய் என்கிறார். தேவனுக்கு ஊமையான பிள்ளைகள் கிடையாது. எப்படி பிறந்த குழந்தை அழுகிறதோ அதேபோல், ஜெபிப்பது புது சிருஷ்டியின் ஒரு பகுதியாய் இருக்கிறது. அவர்கள் அவர்களுக்கு தேவையான கிருபையின் அவசியத்தை பார்க்கிறார்கள். அவர்களுடைய வெறுமையையும், பெலவீனத்தையும் உணர்கிறார்கள். இதைக்காட்டிலும் ஞானமான காரியத்தை அவர்கள் அவர்களுக்கு செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் ஜெபிக்க வேண்டும்.
நான் வேதத்தில் உள்ள பரிசுத்தர்களின் வாழ்க்கையை கவனித்து பார்க்கிறேன். ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை உள்ள முழு வரலாற்றிலும் எந்த ஒரு மனிதனையும் ஜெபம் செய்யாதவனாக நான் பார்க்கவில்லை. இரட்சிக்கப்பட்டவர்களைக் குறித்து, அவர்கள் கர்த்தரை நோக்கி கூப்பிட்டார்கள் (1பேது 1:17) அல்லது அவர்கள் இயேசு கிறிஸ்துவை நோக்கி கூப்பிட்டார்கள் (1கொரி 1:2) என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் கெட்டுப்போகிறவர்களைக் குறித்து, ‘அவர்கள் கர்த்தரை நோக்கி தொழுகிறதில்லை’ (சங் 14:4) வேதம் சொல்லுகிறது.
வேதத்தின் நாட்களிலிருந்து வரலாற்றில் மேம்பட்ட வாழ்க்கை வாழ்ந்த அநேக கிறிஸ்தவர்களின் வாழ்க்கையை நான் படித்திருக்கிறேன். அவர்களில் சிலர் செல்வந்தர்கள், சிலர் ஏழைகள், சிலர் நன்கு படித்திருப்பார்கள், ஒரு சிலர் படிப்பறிவு இல்லாதவர்களாய் இருந்திருக்கிறார்கள். சிலர் எப்பிஸ்கோப்பியர் (Episcopalians), சிலர் கிறிஸ்தவ பெயர்களை கொண்டவர்கள், சிலர் கல்வினிச போதனையை பின்பற்றுபவர்கள், சிலர் ஆர்மினீச போதனையை பின்பற்றுபவர்கள், சிலர் கர்த்தருடைய திருபந்தியை விருப்பத்துடன் அனுசரிப்பார்கள். ஆனால் இவர்கள் அனைவரிடமும் காணப்பட்ட ஒரு பொதுவான பண்பு அனைவரும் ஜெபிக்கிற மக்களாய் இருந்திருக்கிறார்கள்.
நம்முடைய காலத்தில் மிஷனரி சங்கங்களின் அறிக்கைகளை நான் வாசித்திருக்கிறேன். உலகத்தில் உள்ள அநேக ஆண்களும் பெண்களும் சுவிசேஷத்தை பெற்றுக்கொள்ளுகிறதை நான் சந்தோஷத்தோடு பார்க்கிறேன். ஆப்பிரிக்காவிலும், நியூசிலாந்திலும், இந்தியாவிலும், சீனாவிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மனந்திரும்புகிற ஒவ்வொரு மக்களும் மற்றவர்களுடன் எல்லா காரியத்திலும் வித்தியாசப்படுகிறார்கள். ஆனால் எல்லா மிஷனரி இயக்கங்களின் மூலமாக நான் அறிந்து கொண்ட வியக்கத்தக்க விஷயம்: மனந்திரும்புகிற மக்கள் ஜெபிக்கிறார்கள் என்பதே!
ஜெபிக்காமல் இருப்பது
ஒரு நபர் ஜெபத்திலே கருத்தின்றி, நேர்மையின்றி ஜெபிக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை. ஒரு மனிதன் ஜெபிப்பதை பொறுத்தே அவனுடைய ஆத்தும நிலை இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. ஏனென்றால் எப்படி கிறிஸ்தவத்தின் அனைத்து காரியங்களிலும் மாய்மாலமும், பாசாங்குதனமும் இருக்கிறதோ அதேபோல் ஜெபத்திலும் இருக்கிறது. ஆனால், நான் சொல்லவருவது என்னவென்றால்: ஜெபிக்காமல் இருப்பது, ஒரு மனிதன் இன்னும் உண்மையான கிறிஸ்தவன் அல்ல என்பதின் தெளிவான அடையாளம். அவர்கள் உண்மையாகவே பாவத்தை இன்னும் உணரவில்லை. அவர்கள் தேவனை நேசிக்கவில்லை. அவர்கள் கிறிஸ்துவுக்கு கடன்பட்டிருக்கிறார்கள் என்பதை உணரவில்லை. அவர்கள் பரிசுத்தமாகுதலின் பாதையில் ஓடவில்லை. அவர்கள் பரலோகத்தை விரும்பவில்லை. அவர்கள் இன்னும் மறுபிறப்பை அடையவில்லை. அவர்கள் இன்னும் புது சிருஷ்டியாக மாற்றம் அடையவில்லை. ஒருவேளை அவர்கள் தெரிந்துகொள்ளுதலை பற்றியும், கிருபையை பற்றியும், விசுவாசத்தை பற்றியும், கிறிஸ்தவனுக்கு இருக்க வேண்டிய நம்பிக்கையை பற்றியும், வேதத்தை பற்றியும் பெருமையாக பேசி மக்களை ஏமாற்றலாம். ஆனால் அவர்கள் ஜெபிக்கவில்லை என்றால் இவை எல்லாமே வீண்தான்.
உண்மையான ஆதாரம்
நான் இன்னும் ஒருசில காரியங்களை சொல்லுகிறேன். பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனில் உண்மையாகவே செயல்படுகிறார் என்பதற்கு போதுமான சாட்சி ஒருமனிதன் தன்னுடைய இருதயத்திலிருந்து ஏறெடுக்கும் ஜெபமாகும். ஒரு மனிதன் நன்றாக பிரசங்கிகலாம், புத்தகம் எழுதலாம், அழகாக பேசலாம், நல்ல காரியங்களை செய்வதில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளலாம். ஆனால் இது எல்லாம் செய்தாலும் அவன் யூதாசை போலவும் இருக்கமுடியும். ஒரு மனிதனுக்கு அக்கறை வரும்போது அவன் தனியறைக்கு சென்று தன்னுடைய ஆத்துமாவை தேவனுக்கு முன்பாக ஜெபத்தில் ஊற்றிவிடுகிறான். ஜெபிப்பதை தேவன் மனந்திரும்புகிற மனிதனுக்கு அடையாளமாக சொல்லுகிறார். தேவன் அனனியாவை தமஸ்குவில் உள்ள யூதாவின் வீட்டிற்கு அனுப்பும்போது சவுல் மனந்திரும்பியதற்கான ஒரே ஒரு அடையாளத்தை மட்டுமே சொல்லி அனுப்புகிறார் "அவன் இப்போது ஜெபிக்கிறான்." (அப் 9:11).
ஒரு மனிதன் ஜெபத்தில் வருவதற்கு முன்பாக அநேக எண்ணங்கள் அவனுடைய சிந்தையில் ஓடும் என்பது எனக்கு தெரியும். அவர்களுக்கு அநேக பிரச்சனைகள், விருப்பங்கள், உணர்ச்சிவசமான காரியங்கள், வாழ்த்துக்கள், நம்பிக்கைகள், தீர்மானங்கள், பயங்கள் என பல விஷயங்கள் அவர்கள் சிந்தனையில் ஓடும். இந்த பிரச்சனைகள் எல்லாருக்கும் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதே மனதோடு ஜெபிப்பவர்கள் முடிவில் தேவனை தேடாத மக்களோடுதான் இருக்கப்போகிறார்கள். அநேக நேரங்களில் மனிதர்களின் ஜெபங்கள் காலையில் பெய்யும் பனி சூரியன் உதித்தவுடன் மறைவது போல இருக்கிறது. உண்மையான இருதயத்தில் இருந்தும், நொறுங்குண்ட ஆவியில் இருந்தும் ஆரம்பமாகும் ஜெபத்தின் மதிப்போ எல்லாவற்றைக்காட்டிலும் மிகவும் உயர்ந்தது.
பரிசுத்த ஆவியானவர் ஒரு பாவியை அவனுடைய பாவ வழியில் இருந்து அழைக்கிறதற்கு அநேக சந்தர்பங்களை பயன்படுத்தி மெதுவாக அவனை கிறிஸ்துவை பின்பற்ற செய்கிறார் என்பதை அறிவேன். ஆனால் என்னுடைய கண்கள் எதை காண்கிறதோ அதை வைத்துதான் என்னால் தீர்ப்பு செய்யமுடியும். நான் எந்த ஒரு மனிதனையும் அவன் விசுவாசிக்க ஆரம்பிக்காத வரை நீதிமான் என்று சொல்லமாட்டேன். அதேபோல் எந்த ஒரு மனிதனையும் அவன் ஜெபிக்க ஆரம்பிக்காதவரை விசுவாசி என்று சொல்ல மாட்டேன். ஊமையான விசுவாசத்தை பற்றி என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விசுவாசத்தின் முதல் செய்கை தேவனுடன் பேசுவது. எப்படி சரீரத்திற்கு உயிர் முக்கியமாக இருக்கிறதோ அதேபோல் ஆத்துமாவிற்கு விசுவாசம் முக்கியமாக இருக்கிறது. எப்படி நம் சரீரத்திற்கு மூச்சு அவசியமாய் இருக்கிறதோ அதேபோல் நமது விசுவாசத்திற்கு ஜெபம் அவசியமாய் இருக்கிறது. எப்படி ஒரு மனிதன் மூச்சு விடாமல் உயிர் வாழமுடியும் என்பது என் அறிவுக்கு எட்டவில்லையோ அதேபோல் ஒரு மனிதன் விசுவாசிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஜெபிக்காமல் இருப்பதும் என் அறிவுக்கு எட்டாத காரியமாயிருக்கிறது.
ஒரு சுவிசேஷ பிரசங்கி ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசங்கிக்கும் போது அதை பார்த்து ஆச்சரியப்படாதீர்கள். ஏனென்றால் இந்த காரியத்தை உங்களுக்கு விளக்கப்படுத்துவதே அவர்கள் நோக்கமாய் இருக்கிறது. நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்பதே அவர்கள் விருப்பமாய் இருக்கிறது. கிறிஸ்தவ கோட்பாடுகளை குறித்த உங்கள் பார்வை சரியானதாக இருக்கலாம். புராட்டஸ்டன்டு சீர்திருத்தத்தின் மீது உங்கள் அன்பு சரியானதாக இருக்கலாம். ஆனாலும் இவையெல்லாம் உங்கள் தலை அறிவுடனும், உங்களின் திருச்சபையுடனும் நின்று விடலாம். ஆனால், பிரசங்கியாகிய எங்களுக்கு உண்மையாகவே நீங்கள் தேவ கிருபையின் சிங்காசனத்தின் முன்பு போகிறீர்களா என்பதும், எப்படி தேவனைப் பற்றி மற்றவர்களுடன் பேசுகிறீரகளோ அதேபோல் நீங்களும் தேவனுடன் பேசுகிறீர்களா என்பதை அறிவதும் தான் முக்கியமாய் இருக்கிறது.
நீங்கள் உண்மையான விசுவாசி என்பதை அறிய விரும்புகிறீர்களா? அப்படியானால் என் கேள்வி மிக முக்கியமானது என்பதை உறுதியாக நினைவில் வையுங்கள் - நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா?