துக்கம் பெருகுகிறது
கடைசியாக நீங்கள் ஜெபிக்கிறீர்களா? என்று கேட்கிறேன். ஏனெனில் ஜெபமே மகிழ்ச்சியையும், மனநிறைவையும் பெற்று கொள்வதற்கு சிறந்த வழியாக இருக்கிறது.
நாம் துக்கம் நிறைந்த உலகில் வாழ்கிறோம். பாவம் உலகத்தில் பிரவேசித்ததில் இருந்து உலகம் இந்த நிலைமையில்தான் இருக்கிறது. பாவம் எப்போதும் துக்கத்தோடுதான் இருக்கும். பாவம் இந்த உலகத்தில் இருந்து வெளியேற்றப்படும் வரைக்கும் எந்த ஒரு மனிதனும் துக்கத்திலிருந்து தப்பிக்கமுடியாது. துக்கத்தில் இருந்து தப்பிக்க நினைப்பது ஏமாற்றத்தில்தான் போய் முடியும்.
சந்தேகமின்றி சிலர் மற்றவர்களைவிட அதிகமான கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். ஆனால் சிலர் எந்தவித கவலையுமின்றி அநேக நாட்கள் வாழ்கிறார்கள். நமது சரீரம், சொத்து, குடும்பம், குழந்தைகள், உறவினர்கள், வேலைக்காரர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், மேலும் நமக்கு இவ்வுலகத்தில் கிடைத்த வேலைகள் என இவையனைத்தும் நம்மை பாதுகாக்கும் நீருற்றுகளாய் இருக்கின்றன. இருந்தாலும் வியாதிகள், மரணங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள், பிரிவினைகள், நன்றிகெட்டதனங்கள், அவதூறு போன்ற காரியங்களையும் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. இவைகள் இல்லாமல் நாம் வாழ்க்கைப் பயணத்தை கடக்க முடியாது. இன்றோ அல்லது என்றோ நாம் நிச்சயம் இந்த காரியங்களை சந்தித்தே ஆக வேண்டும். நம்முடைய விருப்பங்கள் அதிகமாகும்போது நமக்கு துன்பங்களும் அதிகமாகிறது. எந்தளவிற்கு நேசிக்கிறோமோ அந்த அளவிற்கு அழவும் வேண்டியிருக்கிறது.
துக்கத்திற்கு பதில்
இதுபோன்ற உலகில் மகிழ்ச்சிக்கு சிறந்த வழி எது? நாம் எப்படி இந்தக் கண்ணீர்ப் பள்ளத்தாக்கை எளிதாக கடக்க முடியும்? எல்லாவற்றையும் தேவனிடம் ஜெபத்தில் எடுத்து செல்லும் பழக்கத்தை தவிர வேறு எந்த வழிமுறையும் எனக்கு தெரியாது.
இதுவே பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் வேதம் தருகிற எளிமையான ஆலோசனை. சங்கீதக்காரன் என்ன சொல்லுகிறார் என்று தெரியுமா? "ஆபத்து காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு. நான்உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமைபடுத்துவாய்." (சங்கீதம் 50:15). "கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்." (சங்கீதம் 55:22). அப். பவுல் என்ன சொல்லுகிறார் என்று பாருங்கள். "நீங்கள் ஒன்றுக்குங் கவலைப் படாமல் எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக காத்துக்கொள்ளும்." (பிலி 4:6,7). அப். யாக்கோபு என்ன சொல்லுகிறார் என்று பாருங்கள். "உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்." (யாக் 5:13).
வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பரிசுத்தவான்களின் வாழ்க்கையிலும் தனிஜெபம் இருந்தது. யாக்கோபு தன்னுடைய சகோதரனாகிய ஏசாவிற்கு பயந்தபோது ஜெபம் செய்தான். வனாந்தரத்திலே இஸ்ரவேல் மக்கள் மோசேக்கு எதிராக கல்லெறிய தயாராக இருந்தபோது, மோசே ஜெபம் செய்தான். இஸ்ரவேல் மக்கள் ஆயியின் மனிதர்களுக்கு முன்பாக முறியடிக்கப்பட்ட போது யோசுவா ஜெபம் செய்தான். கேகிலாவில் தனக்கு பொல்லாப்பு இருக்கிறது என்று அறிந்தபோது தாவீது ஜெபம் செய்தான். சனகெரிப்பிடம் இருந்து கடிதம் வந்தபோது எசேக்கியா ஜெபம் செய்தான். பேதுரு சிறையில் போடப்பட்டபோது சபை இதைத்தான் செய்தது. பிலிப்பி சிறைச்சாலையில் பவுல் அடைக்கப்பட்டபோது செய்ததும் ஜெபம்தான்.
இயேசு நம் நண்பன்
உண்மையாக இதுபோன்ற பாடுகள் நிறைந்த உலகத்தில் சந்தோஷமாக வாழ ஒரே வழி நம்முடைய அனைத்து கவலைகளையும் கர்த்தர் மீது வைத்து விடுவதுதான். விசுவாசிகள் அவர்களின் சுமைகளை அவர்களே சுமக்கும்போது நிச்சயம் வருத்தம் மட்டுமே அடைவார்கள். ஆனால் தேவனிடம் அவர்களின் பிரச்சனையை சொல்லும்போது பிரச்சனையை எளிதாக வெற்றிகொள்ளமுடியும். சிம்சோன் காசாவில் செய்ததுபோல். மாறாக தங்கள் சுமையை தாங்களே சுமப்போம் என்பார்களாகில் நிச்சயம் ஒருநாள் வெட்டுக்கிளியும் அவர்களுக்கு பாரமாக தெரியும்.
நம்முடைய மனதில் இருந்து நம்முடைய துக்கங்களை சொல்லும் போது நமக்கு உதவி செய்வதற்கு ஒரு நண்பர் எப்போதுமே ஆயத்தமாயிருக்கிறார். அந்த நண்பர் இந்த உலகத்தில் இருந்தபோது ஏழைகள் மீதும், வியாதியுள்ளவர்கள் மீதும், துக்கமுள்ளவர்களின் மீதும் இரக்கம் காட்டினார். அவர் முப்பத்து மூன்று வருடங்கள் மனிதர்கள் மத்தியில் வாழ்ந்ததால், அவருக்கு மனிதனுடைய இருதயத்ததை பற்றி நன்றாக தெரியும். அந்த நண்பர் அழுகிறவர்கள் கூட அழுதார். அவர் துக்கமும் பாடும் நிறைந்த வராயிருந்தார். அந்த நண்பரால் நமக்கு உதவி செய்யமுடியும். அவரால் சரியாக்கப்பட முடியாத எந்தவித உலக வலிகளும் கிடையாது. அந்த நண்பர் இயேசு கிறிஸ்து. சந்தோஷமாக இருப்பதற்கான ஒரேவழி எப்போதுமே நம்முடைய இருதயத்தை அவருக்கு திறந்து காட்டுவதுதான். நாம் அனைவரும் ஒரு கிறிஸ்துவின் அடிமையைப் போல நமக்கு பிரச்சனை நேரிடும் போதெல்லாம் தேவனிடம் கண்டிப்பாகசொல்லவேண்டும்.
மனிதர்கள் வெளிப்பிரகாரமாக எந்த நிலைமையில் இருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் இயேசுவை நம்பி அவரை நோக்கி கூப்பிடும்போது அவர் அவர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறார். சிறையில் மன அமைதியையும், வறுமையின் மத்தியில் மனநிறைவையும், துயரங்களின் மத்தியில் ஆறுதலையும், கல்லறையின் விளிம்பில் மகிழ்ச்சியையும் அவரால் கொடுக்க முடியும். அவரிடம் ஜெபத்தில் கேட்கிற ஒவ்வொருவனுக்கும் நிறைவான சமாதானம் ஊற்றப்பட ஆயத்தமாயிருக்கிறது. மனிதர்களே சந்தோஷம் வெளிப்புறமான காரியங்களை பொறுத்து அமைவதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது இருதயத்தின் நம்பிக்கையை பொறுத்து அமைகிறது.
ஜெபத்தின் விளைவு
நம்முடைய சிலுவை எவ்வளவு பாரமாக இருந்தாலும், ஜெபம் நமக்காக அதன் சுமைகளை குறைக்கும். அது அவற்றைத் தாங்க உதவும் கிறிஸ்துவை நம் பக்கம் கொண்டு வரக்கூடும். நமது பாதைகள் மூடப்படும்போது ஜெபம் நமக்கு கதவை திறந்து வைக்கிறது. இதுதான் வழி இதில் செல் என்று சொல்லுகிற இயேசுவை நமக்கு காட்டுகிறது. நமது அனைத்து உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களும் நம்மை விட்டு அகலும்போதும் “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, நான் உன்னை கைவிடுவதுமில்லை” என்று சொல்லும் ஒரு நபரை நமது அருகில் கொண்டு வருகிறது. உலகத்தாரின் அன்பு நம்மிடம் இருந்து எடுபடும் போதும், உலகம் நமக்கு வெறுமையாய் இருக்கும் போதும் ஜெபம் நமக்கு ஆறுதலை தருகிறது. ஜெபம் நம்முடைய இருதயத்தின் வெற்றிடத்தை நிரப்பி, இருதயத்தில் எழும்புகிற அலைகளை அமைதிபடுத்துகிறது. இயேசு கிறிஸ்துவை நம்மிடம் கொண்டுவருகிறது ஜெபம். ஆனால் கஷ்டமென்னவெனில் அநேக மக்கள் வனாந்தரத்தில் தண்ணீருக்காக அலைந்த ஆகாரைப் போல, அவர்களுக்கு அருகில் உள்ள ஜீவத்தண்ணீரின் கிணற்றைக் காணாதவர்கள் போல குருடராய் இருக்கிறார்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அதற்காக இதை விட பயனுள்ள ஒரு கேள்வியை நான் உங்களிடம் கேட்க முடியாது என்பது எனக்குத் தெரியும்: நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா?
இந்த ஆக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு இதுவே சரியான நேரம். நான் மிக முக்கியமான விஷயங்களை உங்கள் முன்பாக காட்டியிருக்கிறேன் என நம்புகிறேன். இந்த முக்கியமான காரியம் உங்கள் ஆத்துமாவிற்கு பிரயோஜனமாயிருக்கும்படி என்னுடைய இருதயத்தில் இருந்து ஜெபிக்கிறேன்.