முடிவின் வார்த்தைகளாக ஜெபிக்கிற வாசகர்களுக்கு நான் சொல்லுவது:
இந்த ஆக்கத்தை வாசிக்கிற அனைவரும் ஜெபிக்கிற மக்களாக இருப்பீர்கள் என்பதை நான் நம்பவில்லை. ஒருவேளை நீங்கள் ஜெபிக்காத மக்களாக இருந்தால் நான் தேவனின் சார்பாக இன்று உங்களுக்கு சொல்லும் அறிவுரையை பொறுத்துக் கொள்ளுங்கள். ஜெபிக்காத வாசகர்களே நான் மிகுந்த வேதனையுடன் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் பயங்கரமான ஆபத்தில் இருக்கிறீர்கள் என எச்சரிக்கிறேன். ஒருவேளை நீங்கள் இப்போது இருக்கிற நிலையில் இருந்தீர்களானால் உங்கள் ஆத்துமாவை இழந்துவிடுவீர்கள். நீங்கள் மரணத்திற்கு பின்பு எழுந்திருக்கும்போது நித்தியத்திற்கும் பரிதாபமான நிலையில் இருப்பீர்கள். தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொள்ளுகிற அனைவரையும் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் முழுமையாக எச்சரிக்கிறேன். நீங்கள் ஜெபிக்காமல் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு நல்ல காரியத்தை கூட காட்டமுடியாது. எப்படி ஜெபிப்பது என்று தெரியாது என சொல்லுவது ஏற்று கொள்ளமுடியாதது. ஏனெனில் ஜெபம் என்பது சமயத்தில் மிகவும் எளிமையான ஒரு செயல். ஜெபம் செய்வதற்கு நமக்கு புத்தக அறிவோ, பெரிய ஞானமோ அல்லது எதையாவது கற்றுக்கொள்வதோ அவசியம் அல்ல. நம்முடைய இருதயத்தின் விருப்பத்தை தவிர வேறு எதுவும் அவசியம் இல்லை. ஒரு பலவீனமான குழந்தை தான் பசியில் இருக்கும்போது அழும். வறுமையில் வாடும் பிச்சைக்காரன் பிச்சையை கையேந்தி கேட்பான். அதுபோல் மிகவும் அறியாமையில் இருக்கும் மனிதன் கூட தேவனிடம் ஏதாவது சொல்ல விரும்பினால் நிச்சயம் அதை தன் மனதில் இருந்து சொல்லமுடியும். நான் ஜெபிப்பதற்கு ஏற்ற இடம் இல்லை என நீங்கள் சொல்லுகிற சாக்கும் ஏற்று கொள்ள முடியாதது. யார் வேண்டுமானாலும் தேடினால் தனிமையான இடத்தை கண்டுபிடிக்க முடியும். நமது ஆண்டவர் மலைகளில் சென்று ஜெபம் செய்தார். பேதுரு வீட்டின் மேல்மாடியில் ஜெபம் செய்தார். ஈசாக்கு நிலத்திலே ஜெபம் செய்தார். நாத்தான்வேல் அத்திமரத்தின் அடியில் நின்று ஜெபம் செய்தார். யோனா திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து ஜெபம் செய்தார். ஜெபிக்கிறவனுக்கு எந்த ஒரு மறைவான இடமும் ஒரு ஜெபக்கூடமாகவும், ஒரு பெத்தேலாகவும், தேவனின் பிரசன்னம் இரக்கும் இடமாகவும் இருக்கும். எனக்கு ஜெபிப்பதற்கு நேரம் இல்லை என சொல்லுவதும் ஏற்க தகுந்தது அல்ல. நேரத்தை முறையாக செலவிடும்போது நமக்கு நிறைய நேரங்கள் கிடைக்கிறது. காலம் மிகவும் குறுகியதுதான். ஆனால் நமக்கு ஜெபிப்பதற்கு நேரம் இல்லாமல் இல்லை. தானியேலின் கையில் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் அனைத்து விவகாரங்களையும் கையாளும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் ஒருநாளுக்கு மூன்றுவேளை ஜெபம் செய்தார். தாவீது ஒரு பெரிய ஜனக்கூட்டத்தின் ராஜாவாக இருந்தபோதும் அவர் சொல்லுகிறார்: "அந்திசந்தி (காலை, மாலை) மத்தியான வேளையிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்." (சங்கீதம் 55:11). உண்மையாகவே நீங்கள் நேரத்தை கண்டுபிடிக்க விரும்பினால் அது நிச்சயம் கிடைக்கும். எனக்கு விசுவாசமும், புது இருதயமும் கிடைக்காதவரை நான் எப்படி ஜெபிப்பது என்று நீங்கள் சொல்வதும் ஏற்க தகுந்த காரணம் அல்ல. ஏனெனில் விசுவாசத்தையும், புது இருதயத்தையும் காத்திருந்துதான் பெற்றுகொள்ள முடியும். இப்படி ஜெபிக்காமல் இருப்பது பாவத்தின்மேல் பாவத்தை சேர்ப்பது போல் ஆகும். அது மனந்திரும்பாமல் இருந்து நரகத்திற்கு போவது போல மிகவும் கொடுமையானது. இதைக்காட்டிலும் மிகவும் மோசமானது எனக்கு இவையெல்லாம் தெரியும் ஆனால் தேவனின் இரக்கத்திற்காக நான் அழுது கெஞ்சமாட்டேன் என்று சொல்லுவதாகும். வேதத்தில் ஒருசில வசனங்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏசாயா சொல்லுகிறார் “கர்த்தரை கண்டடையத்தக்க சமயத்தில் அவரை தேடுங்கள். அவர் சமீபமாய் இருக்கையில் அவரை நோக்கி கூப்பிடுங்கள்." (ஏசாயா 55:6). ஓசியா சொல்லுகிறார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு. நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்" (ஓசியா 14:1). பேதுரு மாயவித்தைக்காரனாகிய சீமோனிடம் சொல்லுகிறார்: “உன் துர்குணத்தைவிட்டு மனந்திரும்பி தேவனிடம் வேண்டிகொள்" (அப்போஸ்தலர் 8:22). உங்களுக்கு விசுவாசமும் புது இருதயமும் வேண்டுமென்றால் அதற்காக தேவனிடம் சென்று அழுகையோடு வேண்டுதல் செய்யுங்கள். ஜெபிப்பதற்காக செய்யும் முயற்சியே பல நேரங்களில் செத்த ஆத்துமாவை உயிரடைய செய்கிறது. ஜெபிக்காத வாசகர்களே, நீங்கள் தேவனிடம் எதையுமே கேட்கிறதில்லை. நீங்கள் நரகத்தோடும், மரணத்தோடும் உடன்படிக்கை செய்து கொண்டுவிட்டீர்களா? அவியாத அக்கினியிலும், புழுவின் மத்தியிலும் சமாதானத்தை கண்டுகொண்டீர்களா? உங்களின் எந்த பாவங்களும் மன்னிப்படைய தேவையில்லையா? நித்திய அழிவை குறித்த ஏதாவது பயம் உங்களுக்குள் இருக்கிறதா? ஏன் உங்களுக்கு பரலோகத்தின் மீது பசிதாகம் இல்லை? தயவுசெய்து உங்களுடைய இந்த நிலையில் இருந்து இன்றே விழித்து கொள்ளுங்கள். இன்றே உங்களுடைய முடிவை பற்றி சிந்தியுங்கள். இன்றே விழித்திருந்து தேவனை நோக்கி ஜெபியுங்கள். அநேகர், கர்த்தாவே! கர்த்தாவே! எங்களுக்கு திறவும் என்று கதறி அழப்போகிற நாள் வரப்போகிறது. ஆனால் அந்த கதறுதல் காலதாமதமானதால் மதிப்பில்லாமல் போகப்போகிறது. அநேகர் அந்நாட்களில் பாறைகளே எங்கள் மீது விழுங்கள், மலைகளே எங்களை மறைத்து கொள்ளுங்கள் என்று கதறி அழுவார்கள். நான் மிகுந்த பாசத்துடன் இன்றே உங்களை எச்சரிக்கிறேன். இது உங்களுடைய ஆத்துமாவினுடைய முடிவாய் இருந்துவிட வேண்டாம். இரட்சிப்பு மிக அருகில் இருக்கிறது. இவற்றையெல்லாம் கேட்டுவிட்டு முடிவில் பரலோகத்தை இழந்து போய்விடாதீர்கள். உண்மையாகவே இரட்சிக்கப்பட வேண்டும் என ஆசைக் கொண்டு, அதற்காக என்ன செய்ய வேண்டும் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று தெரியாதவர்களுக்கு நான் சொல்லுவது. அநேகர் இந்த நிலையில் இருக்கமாட்டார்கள். ஒருசிலர் இந்த நிலைமையில் இருப்பார்கள். அவர்களுக்கு நான் இந்த நேசமான அறிவுரைகளை வழங்குகிறேன். ஒரு பயணத்தை ஆரம்பிக்கும்போது நிச்சயமாக அதில் முதல்படி இருக்கும். அமைதியாக இருப்பதிலிருந்து முன்னோக்கி போகுதலில் நிச்சயமாக ஒரு மாற்றம் இருக்கிறது. இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானான் தேசம் சென்ற பயணம் மிகவும் நீண்டதும், இடைவிடாத பயணமாக இருந்தது. அவர்கள் யோர்தானை கடப்பதற்கு 40 வருடங்கள் ஆயிற்று. அந்த பயணத்தை ஆரம்பித்தவுடன் அவர்கள் ராமசேஸிலிருந்து சுக்கோத்திற்கு பயணம் செய்ய வேண்டியிருந்தது. எப்போது ஒரு மனிதன் பாவத்திலிருந்தும், உலகத்திலிருந்தும் வெளிவந்து முதல்படி எடுத்து வைக்கிறான்? எப்போது அவன் இருதயத்திலிருந்து ஜெபத்தை ஏறெடுக்கிறானோ அப்போதுதான். ஒவ்வொரு கட்டிடமும் கட்டப்படுவதற்கு முன்பு முதலில் அடிக்கல் நாட்டப்படவேண்டும். பின்பு அதின்மேல் அஸ்திபாரம் போடப்பட வேண்டும். நோவாவின் பேழை கட்டிமுடிக்கப்பட 120 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் ஒருநாளில் நோவா தனது கோடாரியை கொண்டு முதலில் மரத்தை வெட்ட ஆரம்பித்தார். சாலோமோன் கட்டின தேவாலயம் மிகவும் புகழ்பெற்றது. ஆனால் அதற்காக ஒரு பெரிய கல் மோரியா மலையின் மீது ஆழமாக நாட்டப்பட்டது. எப்போது ஆவியானவரின் தேவாலயத்தை ஒரு மனிதனின் இருதயத்தில் பார்க்க முடிகிறது? எப்போது மனிதன் தனது இருதயத்தை ஜெபத்தின் மூலமாக தேவனிடம் ஊற்றுகிறானோ? அப்போதுதான் என நாம் தீர்மானிக்கலாம். உண்மையாக இரட்சிப்பை பெற்றுக்கொள்ள விரும்பினால் நான் சொல்வதை செய்யுங்கள். இன்றே தனிமையான ஒரு இடத்திலிருந்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை முழுமனதோடும் ஆர்வத்தோடும் உங்களுடைய ஆத்துமா இரட்சிக்கப்பட வேண்டும் என ஜெபம் செய்யுங்கள். நீர் பாவிகளை ஏற்று கொள்ளுகிறீர் என்று நான் கேள்விபட்டதாலும், என்னிடம் வருபவர்களை நான் ஒருபோதும் புறம்பேதள்ளுவதில்லை என்று நீரே சொல்லியிருக்கிறீர் அதினால் நான் உம்மிடம் வருகிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள். நான் மிகவும் கீழ்த்தரமான பாவி என்றும், நான் உம்முடைய அழைப்பை ஏற்று விசுவாசத்தினால் உம்மிடம் வருகிறேன் என்றும் அவரிடம் சொல்லுங்கள். நான் நித்திய காலமாக என்னை முழுவதுமாக உம்முடைய கைகளில் அர்ப்பணிக்கிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள். நீங்கள் உங்களில் ஆதரவற்றவர்களாயும், நம்பிக்கையற்றவர்களாயும் உள்ளீர்கள் என அவரிடம் சொல்லுங்கள். அவர் உங்களை ஏற்று கொள்ளவில்லை என்றால் நீங்கள் அழிந்துபோவீர்கள் என்றும் அவரிடம் சொல்லுங்கள். பாவத்திலிருந்தும், அதின் குற்ற உணரவிலிருந்தும் உங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜெபியுங்கள். உங்களை மன்னிக்கும்படியாகவும், உங்களுடைய பாவங்களை அவருடைய இரத்தத்தில் கழுவும்படியாகவும் அவரிடம் வேண்டுதல் செய்யுங்கள். உங்களுக்கு புது இருதயத்தை கொடுக்கும்படியாகவும், உங்களுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரை அருளும்படியாகவும் அவரிடம் வேண்டுதல் செய்யுங்கள். இதுமுதல் அவருடைய சீஷனாயும் வேலைக்காரராயும் இருப்பதற்கு வேண்டிய விசுவாசத்தையும், கிருபையையும், நற்கிரியை செய்ய வல்லமையையும் கொடுக்கும்படியாக அவரிடம் வேண்டுதல் செய்யுங்கள். வாசகர்களே இன்றே அவரிடம் செல்லுங்கள். உங்கள் சொந்த நடையில், சொந்த வார்த்தைகளில் அவரிடம் சொல்லுங்கள். ஒருவேளை வியாதியில் இருக்கும்போது மருத்துவர் உங்களிடம் வந்தால் அவரிடம் எங்கே வலிக்கிறது என்று நிச்சயம் சொல்லுவீர்கள். அதுபோல உங்கள் ஆத்துமா நிச்சயம் உங்கள் பாவத்தை உணர்ந்தால் இயேசுவிடம் சொல்வதற்கு காரியங்கள் இருக்கும். நீங்கள் பாவியாக இருப்பதினால் அவருடைய அழைப்பின் மீது சந்தேகப்படாதிருங்கள். பாவிகளை ஏற்று கொள்வது அவருடைய பணி. அவர் சொல்லியிருக்கிறார்: "நீதிமான்களையல்ல பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்." லூக்கா (5:32). நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று நினைத்து அவரிடம் செல்வதற்கு தயங்காதீர்கள். எதற்காகவும் காத்திருக்காதீர்கள், யாருக்காகவும் காத்திருக்காதீர்கள். காத்திருத்தல் சாத்தானிடமிருந்து வருகிறது. நீங்கள் எந்த நிலைமையில் இருக்கிறீர்களோ? அதே நிலைமையில் அவரிடம் செல்லுங்கள். உங்கள் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறதோ, அவ்வளவு வேகமாக நீங்கள் அவரிடம் வருவது அவசியமாயிருக்கிறது. நீங்கள் சரியாக்கப்பட முடியாதபடிக்கு அவரிடம் இருந்து விலகி விடாதீர்கள். உங்களுடைய ஜெபங்கள் திக்கி திக்கி இருப்பதற்காகவும், அதில் வார்த்தைகள் வலிமையில்லாமல் இருப்பதற்காகவும், ஜெபத்தில் உங்கள் மொழிநடை எளிமையாக இருப்பதற்காகவும் பயப்படாதேயுங்கள். இயேசுகிறிஸ்துவால் உங்களை புரிந்து கொள்ள முடியும். எப்படி குழந்தையின் முதல் அழுகையை தாயால் புரிந்து கொள்ளமுடிகிறதோ, அதேபோல இரட்சகரும் பாவிகளின் வேண்டுதல்களை புரிந்து கொள்ளுகிறார். உங்களின் பெருமூச்சுகளையும், உங்களின் புலம்பல்களையும் அவரால் புரிந்து கொள்ளமுடியும். உங்களுக்கு உடனே பதில் கிடைக்கவில்லை என்று நினைத்து அவநம்பிக்கை கொள்ளாதீர்கள். நீங்கள் பேசுகிறபோது இயேசு கேட்கிறார். அவரிடம் இருந்து பதில் தாமதப்படும்போது அது நிச்சயமாக ஏதோ நல்ல நோக்கத்திற்குதான். நீங்கள் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் அவரிடம் வேண்டுதல் செய்யுங்கள். நிச்சயம் பதில் கிடைக்கும். ஒருவேளை தாமதமானால் அதற்காக காத்திருங்கள் நிச்சயம் பதில் கிடைக்கும். வாசகர்களே நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற ஆசை இருந்தால் நான் உங்களுக்கு மேலே கொடுத்த அறிவுரைகளை ஞாபகபடுத்தி கொள்ளுங்கள். இதை முழுமனதுடனம் நேர்மையாகவும் செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் இரட்சிப்பை பெற்றுகொள்வீர்கள்.