இந்த ஆக்கத்தை வாசிக்கிற சில வாசகர்களுக்கு ஜெபம் என்றால் என்ன என்பது தெளிவாக தெரிந்திருக்கும். தேவனால் தத்தெடுக்கப்பட்ட ஆவியை பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் ஒருசில வார்த்தைகளை ஆலோசனையாகவும், உங்களை உற்சாகப்படுத்தும்படியாகவும் கூறுகிறேன்.
ஆசாரிப்பு கூடாரத்தில் தூபம் செய்யப்படுவதற்கென்று சில விதிமுறைகள் இருக்கிறது. எல்லாவித தூபத்தையும் அங்கே காட்டமுடியாது. இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஜெபத்தை பற்றியும், அது ஏறெடுக்கப்பட வேண்டிய விதத்தை பற்றியும் மிகவும் கவனமாயிருங்கள்.
ஜெபிக்கிற சகோதரர்களே உங்களின் கிறிஸ்தவ வாழ்க்கை சிறப்பாக இல்லையென்றால் நிச்சயமாக உங்களின் ஜெபம் நோய்வாய்பட்டதாகத்தான் இருக்கும். அப்போஸ்தலர் பின்வருமாறு சொல்வதுபோல உங்களால் சொல்லமுடியாது. "அதாவது நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தை காண்கிறேன்." (ரோமர் 7:21) ஒரு சில சமயங்களில் நீங்கள் முழங்காலில் நின்று ஜெபிக்கும் போது உங்களுக்கு தாவீதின் வார்த்தைகள் புரியும். அதாவது "வீண்சிந்தனைகளை நான் வெறுக்கிறேன்." (சங்கீதம் 119:113) ஒரு ஏழை விசுவாசியின் பின்வரும் வார்த்தைகளை சற்று சிந்தித்துபாருங்கள். "தேவனே என்னை எல்லா சத்துருக்களினின்றும் விலக்கிகாரும். எல்லாரைப் பார்க்கிலும் பொல்லாத மனிதனாகிய என்னிடமிருந்தும் என்னை விலக்கிகாரும்." ஆனால் ஒரு சில தேவனுடைய பிள்ளைகள் எப்போதும் ஜெபத்தில் போராடுபவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் முழங்காலில் நின்று ஜெபிக்கும் போது பிசாசு அவர்கள் மீது அதிகமாக கோபப்படுகிறான். நம்முடைய ஜெபத்தினால் நமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென்றால் நிச்சயம் அந்த ஜெபத்தை சந்தேகிக்க வேண்டும். நம்முடைய ஜெபத்தைபற்றிய காரியங்களில் நாம் மிகவும் மோசமான நீதிபதியாயிருக்கிறோம். நம்முடைய ஜெபங்கள் நமக்கு பிரியமாய் அல்ல, அது தேவனுக்கு பிரியமானதாய் இருக்க வேண்டும். உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையின் நலனுக்காக நான் சற்று கடினமாக அறிவுரை தரும்போது என்னை கோபித்து கொள்ளாதீர்கள். கடைசியாக ஒரு விஷயம் நாம் அனைவரும் இதை உணர வேண்டும். நாம் அனைவரும் கண்டிப்பாக ஜெபிக்க வேண்டும். ஜெபத்தை விட்டு கொடுக்க கூடாது. நாம் கண்டிப்பாக முன்னேறிபோக வேண்டும்.
ஜெபத்தை மிகவும் பணிவுடனும் மரியாதையுடனும் செய்ய வேண்டும் என உங்களை அறிவுறுத்துகிறேன். நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். நம்முடைய நிலையில் இருந்து கடவுளிடம் நாம் பேசவேண்டுமென்றால் அது எவ்வளவு பெரிய காரியம். அவருடைய சமூகத்தில் அஜாக்கிரதையுடனோ அல்லது கவனமில்லாமலோ சென்றுவிடாமல் மிகவும் ஜாக்கிரதையுடன் செல்லுங்கள். நான் நிற்கிற இடம் மிகவும் பரிசுத்தமானது இது வானத்தின் வாசலே அல்லாமல் வேறல்ல. நான் என்ன பேசுகிறேன் என்பதை அறியாமல் பேசிக்கொண்டிருந்தால் நான் தேவனை அலட்சியப்படுத்துகிறேன். என்னுடைய இருதயத்தில் அக்கிரமம் இருந்தால் தேவன் என்னுடைய வார்த்தைகளை கேட்கமாட்டார் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்வோம். சாலோமோன் சொன்ன வார்த்தைகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். "தேவசமூகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும் மனம்பதறி ஒரு வார்த்தையும் சொல்லாமலும் இரு. தேவன் வானத்திலிருக்கிறார். நீ பூமியிலிருக்கிறாய்." (பிரசங்கி 5:2). ஆபிரகாம் ஆண்டவரிடம் பேசும்போது தூளிலும் சாம்பலிலும் இருந்து அடியேன் பேசுகிறேன் என்றார். யோபு ஆண்டவரிடம் பேசும்போது நான் நீசன் என்கிறார். நாமும் இந்த மனநிலையில்தான் இருக்க வேண்டும்.
ஜெபிக்கும் போது ஆவியில் நிறைந்து ஜெபிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறேன். நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் நம்முடைய ஜெபங்கள் வெறும் சடங்காச்சாரமாக இல்லாமல் அதில் ஆவியானவரின் உதவியை தொடர்ச்சியாக நாடவேண்டும் என்பதே. சடங்காச்சாரம் என்று வருகிறபோது அங்கே பரிசுத்த ஆவியானவருக்கு இடமே இருக்காது. இந்த உண்மை தனிஜெபத்திற்கு மிகவும் பொருந்தும். ஒருவேளை நம்முடைய ஜெபங்கள் உணர்ச்சிகள் அற்று, தொடர்ச்சியாக நம்முடைய வாயில் இருந்து வரும் வார்த்தைகளின் தொகுப்பாகவோ அல்லது உணராமலே ஆவிக்குரிய உதவிகளை கேட்பதாகவோ அல்லது மிகவும் முக்கியமான வேர்போன்று இருக்கிற காரியங்களை உணராமலோ கேட்பதாகவோ அல்லது அனுதினமும் சொல்லுகிற மனப்பாட ஜெபமாகவோ இருக்கலாம். நான் இந்த காரியங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என விரும்புகிறேன். நமக்கு அனுதினமும் ஒருசில தேவைகள் இருக்கிறது என எனக்கு நன்றாக தெரியும். ஆனால் அதற்காக அவை எல்லாவற்றையும் ஒரேமாதிரி வார்த்தைகளைதான் பயன்படுத்தி கேட்க வேண்டும் என்று இல்லை. இந்த உலகமும், பிசாசும் நமது இருதயமும் எல்லாநாளும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆனால் நாம் அனுதினமும் ஒரேமாதிரி நம்முடைய வேண்டுதல்களை ஏறெடுப்பதால் அங்கே பழக்கத்தினால் வார்த்தைகள் மனப்பாடமாகிவிடுகிறது. ஆதினால்தான் இந்த காரியங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லுகிறேன். நம்முடைய ஜெபங்களின் நடையும், வார்த்தைகளும் ஆவியினால் வழிநடத்தப்பட்டதாக இருக்கவேண்டும். தனிப்பட்ட ஜெபங்களில் நம்முடைய பொது ஆராதனை ஜெபப்புத்தகத்தை (அன்றைய ஆங்கில ஆராதனையின்போது பயன்படுத்தப்பட்ட ஜெபப்புத்தகம்) பயன்படுத்துவதை நான் நன்மையாக கருதமாட்டேன். எந்தவித புத்தகத்தையும் படிக்காமல் நம்மால் மருத்துவரிடம் நம்முடைய வியாதியை விளக்ககூடுமானால், நிச்சயமாக நம்முடைய ஆத்துமாவின் நிலைமையையும் ஆண்டவரிடம் எடுத்து சொல்லமுடியும். ஒருமனிதன் உடைந்த காலில் இருக்கும்போது அவன் ஊன்றுகோலை பயன்படுத்தினால் அதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதே மனிதன் தொடர்ச்சியாக ஊன்றுகோலை பயன்படுத்த விரும்பினால் அது பாராட்டதக்க காரியம் அல்ல. நான் அந்த மனிதன் சீக்கிரமே வலிமையடைந்து, அவனது ஊன்றுகோலை தூக்கி எறிவதை பார்க்க விரும்புகிறேன்.
ஜெபிப்பதை உங்களுடைய வாழ்க்கையின் தொடர்ச்சியான வேலையாக வைத்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறேன். தொடர்ச்சியாக ஜெபிப்பதால் வருகிற ஒருசில நன்மைகளை நான் விளக்கப் போகிறேன். நம்முடைய தேவன் ஒழுங்கின் தேவனாய் இருக்கிறார். யூதர்களின் தேவாலயத்தில் காலையிலும், மாலையிலும் பலியிடும் செயல் காரணமில்லாமல் வைக்கப்படவில்லை. ஒழுக்கமின்மை என்பது பாவத்தின் கனியாகும். ஒருநாளின் இருபத்து நான்கு மணிநேரத்தில் ஜெபத்திற்கான நேரங்களை ஒதுக்குவது உங்களின் ஆத்துமாவுக்கு மிகுந்த பயனை தரும். எப்படி உண்ணுவதற்கென்றும், வேலை செய்வதற்கென்றும் நேரத்தை ஒதுக்கியுள்ளீர்களோ அதுபோல் ஜெபிப்பதற்கென்றும் நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். அதற்காக எந்த நேரங்களை ஒதுக்கவேண்டும் என்பது உங்களின் சொந்த விருப்பம். கடைசியாக இந்த உலகத்திடம் பேச ஆரம்பிப்பதற்கு முன்பாக காலையில் தேவனிடம் பேசிவிடுங்கள். அதேபோல் அனைத்து வேலையும் செய்து முடித்தபிறகு உறங்குவதற்கு முன் தேவனிடம் பேசுங்கள். நான் சொல்லுகிற இந்த காரியத்தை உங்கள் மனதில் ஆழமாக பதித்து கொள்ளுங்கள். அனுதினமும் ஜெபிப்பது என்பது மிகவும் சிறப்பான செயலாகும். ஜெபிப்பதை ஓரமாக தள்ளிவைத்து விடாதீர்கள். அலட்சியமாகவோ அல்லது ஏனோதானோவென்றோ ஜெபத்தை செய்யாதீர்கள். நீங்கள் உலக வேலைகளை செய்தாலும், செய்யாவிட்டாலும் ஜெபத்தை அனுதினமும் செய்யுங்கள்.
ஜெபிப்பதை விடாமுயற்சியுடன் செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறேன். தனிஜெபத்தை சரியாக செய்ய பழகிகொள்ளுங்கள். அந்த பழக்கத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதீர்கள். ஒருசில சமயங்களில் நாம்தான் குடும்ப ஜெபம் செய்யப்போகிறோமோ தனிஜெபம் செய்யவில்லையென்றால் என்ன ஆகப்போகிறது என உங்கள் இருதயம் சொல்லும். சில சமயங்களில் உடல் சரியில்லை, சோர்வாக இருக்கிறது என உங்கள் சரீரம் சொல்லும். சில சமயங்களில் இன்று மிகவும் முக்கியமான ஒருவேலை இருக்கிறது அதனால் ஜெபத்தை சுருக்கமாக செய் என உங்கள் மனது சொல்லும். இவ்விதமான அனைத்து எண்ணங்களும் சாத்தானிடமிருந்து வருகிறது. இவையனைத்தும் உங்கள் ஆத்துமாவை புறக்கணிக்கும் செயல்கள். உங்கள் ஜெபங்கள் எப்போதும் நீண்ட நேரத்திற்கு இருக்கவேண்டும் என நான் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் ஜெபம் செய்யாமல் பின்வாங்குவதற்கு எந்தவித காரணத்தையும் முன்கொண்டுவராதீர்கள். அப்போஸ்தனாகிய பவுல் சொல்லுகிறார்: இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். அவர் மக்கள் எப்போதும் முழங்காலில் நின்று ஜெபித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற அர்த்த்தில் சொல்லவில்லை. அவர் சொல்லவருவது நம்முடைய ஜெபங்கள் நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்க தகனபலிபோல தொடர்ச்சியாக அனுதினமும் செய்யப்படவேண்டும். எப்படி விதைப்பும், அறுப்பும், குளிர்காலமும், வெயில்காலமும் தொடர்ந்து வருகிறதோ அதேபோல் தொடர்ச்சியாக செய்யப்பட வேண்டும். பலிபீடத்தில் இருக்கும் அக்கினி பலியை தகனிக்க எப்போதும் அவியாமல் எரிந்து கொண்டிருந்ததுபோல ஜெபம் இருக்கவேண்டும். காலையிலும் இரவிலும் ஜெபம் செய்தல் என்ற இரண்டு பக்கங்களுக்கு நடுவாக நாள்முழுவதும் ஜெபம் செய்யவேண்டும் என்ற சங்கிலியால் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் அலுவலகத்தில் இருந்தாலோ அல்லது தெருமுனையில் இருந்தாலோ அமைதியாக ஜெபத்தை ஏறெடுக்கலாம். நெகேமியா அர்தசஷ்டா முன்பாக செய்தது போல். தேவனுக்கு கொடுக்கிற நேரம் பிரயோஜனமற்றது என்று ஒருபோதும் என்னிவிடாதீர்கள். ஓய்வுநாளுக்கு என்று ஞாயிறு தினத்தில் விடுமுறை அளிக்கிறதால் எந்த ஒரு தேசமும் ஏழ்மையாய் போனதில்லை. தனிஜெபத்தை தொடர்ந்து செய்வதினால் முடிவில் எந்த ஒரு கிறிஸ்தவனும் இழப்பை சந்திக்கமாட்டான்.
ஜெபிக்கும்போது முக்கியமாக ஊக்கமாக ஜெபிக்கவேண்டும் என்று அறிவுரையாக சொல்லுகிறேன். ஊக்கமாக ஜெபிக்கிறேன் என்பதை காண்பிப்பதற்கு கத்தியோ அல்லது மிக அதிகமாக சத்தம் போட்டோ ஜெபிக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஜெபத்தை உண்மையுடனும், ஆர்வத்துடனும், அக்கறையுடனும், விருப்பத்துடனும் செய்யவேண்டும். உண்மையாகவே ஒரு காரியத்தில் அக்கறை இருக்கும்போது அதன்மீது எந்தவிதம் கவனம் செலுத்துவோமோ அதுபோல் ஜெபத்தை செய்யவேண்டும். ஊக்கமுள்ள ஜெபம் அநேக காரியங்களை சாதிக்கும். ஜெபிப்பதை வேதம் அநேக ஒப்புமைகளை பயன்படுத்தி விளக்குகிறது. தட்டுதல், மல்யுத்தம் செய்தல், கடினமாக உழைத்தல், முயற்சி செய்தல் போன்றவை வேதத்தில் ஜெபத்திற்கு ஒப்புமையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக யாக்கோபுவை பாருங்கள். அவர் பெனியேலில் இருந்தபோது “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை போகவிடேன்." (ஆதியாகமம் 32:26) என்று பொழுது விடியுமளவும் அந்த தேவதூதனுடன் போராடுகிறார். தானியேல் மற்றொரு உதாரணம் அவர் எப்படி கெஞ்சுகிறார் என்று பாருங்கள். "ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும் என் தேவனே உம்முடைய நிமித்தமாக அதை தாமதியாமல் செய்யும்." (தானியேல் 9:19). நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மற்றொரு உதாரணம் அவரைப்பற்றி எபிரேயர் 5:7 -ல் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது. "அவர் மாம்சத்திலிருந்த நாட்களில் தம்மை தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து,...". ஐயோ நம்முடைய அநேக விண்ணப்பங்கள் இப்படி இல்லையே. இப்படிப்பட்ட ஜெபங்களை நம்முடைய ஜெபங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் நாம் எவ்வளவு மந்தமாக உணர்ச்சியற்று இருக்கிறோம்.
நீ எதற்காக ஜெபிக்கிறாயோ அதை உன் மனது விரும்பவில்லை என தேவன் நம்மை பார்த்து சொன்னால் அந்த வார்த்தை எவ்வளவு உண்மையாயிருக்கும். நாம் இந்த தவறில் இருந்து திருந்துவோமாக. மோட்சப் பயணம் புத்தகத்தில் இரக்கம் என்ற பெண்மணி குறுகிய வாசலை ஓங்கி தட்டியதுபோல நாமும் கர்த்தரின் கிருபைக்காக கெஞ்சுவோமாக. நீர் திறக்கவில்லை என்றால் நான் அழிந்துபோவேன் என்று இரக்கம் என்ற பெண்மணியைபோல சொல்வோமாக. குளிர்ந்த நிலையில் நெருப்பில்லாமல் ஏறெடுக்கப்படும் பலியை நினைவில் கொள்ளுங்கள். அந்தப்பலி தகனிக்கப்படாது. டிமாஸ்தனீஸ் என்ற சிறந்த பேச்சாளரின் கதையை எப்போதும் ஞாபகத்தில் கொள்ளுங்கள். ஒருநாள் ஒரு மனிதன் அவரிடத்தில் வந்து தன்னுடைய நிலைமையை சொல்லும்போது டிமாஸ்தனிஸ் எந்தவித அக்கறையும் இல்லாமல் அதை கேட்டார். அதே மனிதன் அந்த நிலைமையை கண்ணீரோடும் கவலையோடும் சொன்னபோது நீ சொல்வதெல்லாம் உண்மை. இப்போது நான் உன்னை நம்புகிறேன் என்று டிமாஸ்தனிஸ் சொன்னார்.
ஜெபிக்கும்போது விசுவாசத்துடன் ஜெபிக்கும்படி உங்களை அறிவுறுத்துகிறேன். நாம் ஏறெடுக்கும் ஜெபங்கள் கர்த்தருடைய சமூகத்தில் கேட்கப்பட வேண்டும் என்று விசுவாசிக்க வேண்டும். நாம் கர்த்தருடைய சித்தத்திற்கு உட்பட்டு விண்ணப்பம் செய்யும்போது அந்த விண்ணப்பங்கள் பதிலை பெறுகிறது. இயேசு கிறிஸ்து இந்த கட்டளையை வெளிப்படையாக கொடுத்திருக்கிறார். "நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்." மாற்கு 11:24. அம்பு தன்னுடைய இலக்கை நோக்கி செல்வதற்கு அதன் முனையில் பறவையின் இறகை வைப்பதுபோல், ஜெபம் அதன் இலக்கை அடைவதற்கு விசுவாசம் அவசியமாகிறது. விசுவாசம் இல்லாத ஜெபம் அடைய வேண்டிய இலக்கை அடையாது.
ஜெபிக்கும்போது வாக்குத்ததங்களை சொல்லி ஜெபிக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். ஜெபிக்க முழங்கால் இடும்போது நாம் ஒரு சில வாக்குதத்தங்களை தயார் செய்து கொண்டு செல்ல வேண்டும். ஆண்டவரே நீர் எங்களுக்கு வாக்களித்திருக்கிறீர். நீர் சொல்லியபடியே எங்களுக்கு செய்யும். இதுதான் யாக்கோபு மோசே தாவீது போன்றவர்களின் பழக்கமாய் இருந்தது. சங்கீதம் 119-ம் அதிகாரம் முழுவதும் வேண்டுதலாய் இருக்கிறது. உம்முடைய வார்த்தையின்படி செய்தருளும் என்று கேட்டிருக்கிறார். இதற்குமேல் நம்முடைய வேண்டுதல்கள் பதிலை பெற்றுதரும்படியாக நாம் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். ஒரு வணிகன் தன்னுடைய கப்பலை கடலில் அனுப்பிவிட்டு அந்த கப்பல் திரும்ப பொருட்களுடன் வரும்வரை திருப்தி அடையாதிருக்கிறது போல நாமும் நம்முடைய ஜெபங்கள் பதிலை பெற்றுதர எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் இந்த காரியம் இல்லாமல் இருக்கிறது. பேதுரு சிறையில் இருந்தபோது எருசலேம் சபையில் மக்கள் இடைவிடாமல் ஜெபித்தார்கள். ஆனால் அந்த ஜெபத்திற்கு பதில் கிடைத்தபோது அதை அவர்கள் நம்புவதற்கு அரிதாயிருந்தது அப்போஸ்தலர் 12:15. ராபர்ட் டிராயில் என்பவர் அவருடைய இருதயத்திலிருந்து ஒரு வாக்கியம் சொல்லுகிறார். அதாவது "மனிதன் ஜெபத்தில் எதையாவது பெற்றுகொள்ள வேண்டுமென்று கவனமற்று ஜெபிக்கும்போது அந்த ஜெபம் போய் சேரவேண்டிய இடத்தை போய்ச் சேராது.
நான் ஜெபிக்கும்போது நம்பிக்கையுடன் ஜெபிக்கும்படி அறிவுறுத்துகிறேன். ஒரு சிலரின் ஜெபங்கள் ஏனோதானோ என்று இருக்கும். ஆனால் ஒரு சிலரின் ஜெபங்களில் ஒரு சிறப்பான நம்பிக்கை காணப்படும். அந்த ஜெபம் மிகவும் விரும்பத்தக்கதாய் இருக்கும். நான் குறிப்பிடுகிற இந்த நம்பிக்கை எதுவென்றால் இஸ்ரவேல் மக்களை அழிக்காமல் இருக்கம்படி மோசே ஏறெடுத்த ஜெபத்தில் இருந்தது. "மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி கர்த்தாவே தேவரீர் மகாபலத்தினாலும், வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட பண்ணின உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?" யாத்திரகமம் 32:11. இஸ்ரவேல் ஜனங்கள் ஆயியின் மக்களுக்கு முன்பாக முறியடிக்கபட்ட போது யோசுவா ஏறெடுத்த ஜெபத்தில் அந்த நம்பிக்கை காணப்பட்டது. “உமது மகத்தான நாமத்திற்கு என்ன செய்வீர்?" யோசுவா 7:9. இந்த நம்பிக்கை மார்டின் லூத்தரிடமும் இருந்தது. அவர் ஜெபத்தை கேட்ட ஒரு மனிதர் பின்வருமாறு சொல்லுகிறார். அவர் ஜெபிக்கும்போது அவரிடம் சிறப்பான ஆவியும் சிறப்பான நம்பிக்கையும் காணப்பட்டது. கடவுள் நிச்சயமாக தருவார் என்ற எதிர்பார்ப்பில் ஒரு பிச்சை கேட்பதைபோல மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தது. ஒரு அன்பான தகப்பனிடமோ அல்லது நண்பனிடமோ கெஞ்சுவதை போல இருந்தது அவரின் ஜெபம். 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகவும் சிறந்த ஸ்காட்டிஸ்சை சேர்ந்த புருஸ் என்பவரிடம் இந்த நம்பிக்கை காணப்பட்டது. அவருடைய ஜெபங்களை பற்றி குறிப்பிடுகையில் "பரலோகத்தை நோக்கி குறிவைத்து சுடப்பட்ட துப்பாக்கி குண்டைபோல் இருந்தது” என்று சொல்லுகிறார்கள். இந்த ஒரு காரியத்தில் நம்முடைய நிலைமையை குறித்து மிகவும் பயப்படுகிறேன். ஒரு விசுவாசிக்கு இருக்கிற முழுமையான உரிமைகளை நாம் முழுமையாக சிந்தித்து பார்ப்பதில்லை. உண்மையாக நாம் தேவனிடம் நம்பிக்கையுடன் பேசுகிறதில்லை. தேவனே நாங்கள் உம்முடைய பிள்ளைகள் அல்லவா? நாங்கள் பரிசுத்தமாக வாழ்ந்தால் அது உமக்கு மகிமையை தராதா? சுவிசேஷம் பரம்பி மக்கள் ஆசிர்வதிக்கப்பட்டால் அது உமக்கு கனத்தை கொண்டுவந்து சேர்க்காதா? போன்று நம்பிக்கையுடன் நாம் ஜெபிப்பதில்லை.
அடுத்ததாக ஜெபிக்கும்போது முழுமையாக ஜெபிக்கும்படி அறிவுறுத்துகிறேன். பார்வைக்காக நீண்ட ஜெபம் செய்கிற பரிசேயர்களை வைத்து நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எச்சரித்த எச்சரிக்கையை நான் மறந்துபோகவில்லை. அதுபோல வீண் விண்ணப்பங்களை ஏறெடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறேன். ஆனால் இன்னுமொரு பக்கம் அவரே முழு இரவும் கடவுளிடம் தொடர்ச்சியான ஜெபத்தில் தரித்திருந்து நமக்கு மாதிரியை வைத்துவிட்டு போயிருக்கிறார். நாம் இந்த நாட்களில் அப்படி ஜெபிக்கிறதில்லை. நம்முடைய ஜெபங்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் குறுகியதாக இருக்கிறது. தங்களுடைய முழுமையான நேரங்களில் மக்கள் ஜெபத்திற்கு தரவேண்டிய நேரங்களை தருகிறார்களா? என்று கேட்டால் மக்களிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைப்பதில்லை. அநேக மக்களின் தனிஜெபங்கள் மிகவும் வலிமையற்றதாகவும், குறுகியதாகவும் இருப்பதை பார்த்து பயப்படுகிறேன். அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்பதை நிருபிப்பதற்கு அந்த ஜெபங்கள் போதுமானவையாக இல்லை. அவர்கள் தேவனிடம் கேட்பது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. அவர்கள் தேவனிடம் அறிக்கையிடுவது குறைவு, கேட்பது குறைவு, அவருக்கு நன்றி செலுத்துவதும் குறைவாகத்தான் இருக்கிறது. ஐயோ! இது முற்றிலும் தவறு. விசுவாசிகள் தங்களால் கிறிஸ்தவத்தில் முன்னேறி செல்ல முடியவில்லை என்று சொல்கிறது பொதுவாக காணப்படுகிறது. அவர்கள் விரும்புகிற அளவிற்கு அவர்களால் கிருபையில் வளரமுடியவில்லை என்று எங்களிடம் சொல்லுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் உண்மையாக தேவனிடம் அதிகமான கிருபைகளை கேட்பதில்லை. அவர்கள் தேவனிடம் கேட்பதும் குறைவு, தேவனிடமிருந்து பெற்று கொண்டதும் குறைவு. இவர்களின் இந்த நிலைமைக்கு காரணம் அவர்களின் பலவீனமான, வளர்ச்சி குறைந்த, முதுகெழும்பில்லாத அவசரம் அவசரமான சிறிய குறுகிய ஜெபமே. தேவன் சொல்கிறார்: "உன் வாயை விரிவாய் திற நான் அதை நிரப்புவேன்" (சங்கீதம் 81:10) என்று. ஆனால் நாம் எலிசாவை சந்தித்த இஸ்ரவேலின் இராஜாவை போல ஐந்து அல்லது ஆறு முறை அம்பு எய்வதற்கு பதிலாக மூன்று முறை அம்பு எய்துவிட்டு அமைதியாக இருக்கிறோம்.
ஜெபிக்க தேவையான விண்ணப்பங்களை தயார் செய்துவிட்டு ஜெபிக்கும்படியாக நான் அறிவுறுத்துகிறேன். நாம் எப்போதும் பொதுவான காரியங்களை சொல்லியே ஜெபிக்கக்கூடாது. நமது சரியான தேவைகளை கிருபையின் அரியாசணை முன்பு விளக்கப்படுத்த வேண்டும். நாம் பாவிகள் என்று அறிக்கையிட்டால் போதாது. நமது மனசாட்சி சொல்லுகிற நம்முடைய அனைத்து பாவங்களையும் தேவன் முன்பாக அறிக்கையிட வேண்டும். எங்களை பரிசுத்தப்படுத்தும் என்று சொல்லிமட்டும் ஜெபித்தால் போதாது. எந்தெந்த கிருபைகளில் நாம் குறைவாக இருக்கிறோம் என்பதை அறிந்து அதற்காக ஜெபிக்க வேண்டும். நாம் பிரச்சனையில் இருக்கிறோம் என்று தேவனிடம் சொன்னால் மட்டும் போதாது. நம்முடைய பிரச்சனையை முறையாக விளக்கப்படுத்த வேண்டும். தனது சகோதரனாகிய ஏசாவுக்கு யாக்கோபு பயந்தபோது அவர் செய்த ஜெபம் இப்படித்தான் இருந்தது. அவர் எதற்காக பயப்படுகிறார் என்று சரியாக தேவனிடம் விளக்கப்படுத்தினார். (ஆதியாகமம் 32:11). தன்னுடைய எஜமானாகிய ஆபிரகாமின் மகனுக்கு பெண் தேட சென்றபோது எலெயாசார் செய்த காரியமும் இதுதான். தன்னுடைய தேவை எது என்பதை மிகவும் துல்லியமாக தேவனிடம் விளக்கினார். (ஆதியாகமம் 24:12). பவுலின் சரீரத்திலே ஒரு முள் ஏற்பட்டபோது பவுல் செய்ததும் இதுதான். அவர் கர்த்தரிடத்தில் வேண்டிகொண்டார். (2 கொரிந்தியர் 12:8). இதுதான் உண்மையான விசுவாசமும் நம்பிக்கையும். தேவனுக்கு எந்த ஒரு காரியமும் எளிது என்று நாம் விசுவாசிக்க வேண்டும். ஒரு நோய்வாய்ப்பட்ட மனிதன் தன்னுடைய நோயின் தன்மையை சரியான முறையில் மருத்துவரிடம் விளக்கப்படுத்தும்போது அவனைப்பற்றிய நம்முடைய எண்ணம் எப்படி இருக்கும்? தன்னுடைய கணவனிடம் நான் கவலையாக இருக்கிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு ஏன் கவலையாக இருக்கிறேன் என்பதை விளக்கப்படுத்தாத மனைவியைப்பற்றி நம்முடைய எண்ணம் என்னவாக இருக்கும்? நான் பிரச்சனையில் இருக்கிறேன் என்று தகப்பனிடம் சொல்லிவிட்டு என்ன பிரச்சனை என்பதை விளக்கப்படுத்தாத குழந்தையை பற்றிய நம்முடைய எண்ணம் எப்படி இருக்கும்? கிறிஸ்துவே நம்முடைய மணவாளன். நம்முடைய இருதயத்தின் மருத்துவர். அவருடைய பிள்ளைகளின் உண்மையான தகப்பன். நாம் எந்த தயக்கமும் இல்லாமல் நம்முடைய நிலைமையை அவரிடம் காட்டவேண்டும். நாம் எந்த இரகசியத்தையும் அவரிடம் இருந்து மறைக்கக்கூடாது. நம்முடைய முழு இருதயத்தோடு அவரிடம் சொல்லவேண்டும்.
மற்றவர்களுக்காகவும் ஜெபிக்கும்படி நான் உங்களை அறிவுறுத்துகிறேன். சுபாவமாகவே நாம் மிகவும் சுயநலவாதிகளாய் இருக்கிறோம். நாம் இரட்சிகக்ப்பட்டு மனந்திரும்பியபோதும் கூட நம்முடைய சுயநலம் என்பது நம்மை பிரிய மறுக்கிறது. நம்முடைய சொந்த ஆத்துமாவை பற்றியும், நம்முடைய சொந்த முன்னேற்றத்தை பற்றியும் மட்டுமே சிந்திக்கிற மனநிலையில் இருக்கிறோம். மற்றவர்களை மறந்து போய்விடுகிறோம். இந்த மனநிலையில் இருந்து விடுபட்டு மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஒரு பொதுவான ஆவியில் இருந்து சிந்தித்து பழக வேண்டும். நம்முடைய விண்ணப்பங்கள் மத்தியில் மற்றவர்களின் பெயர்களும் நம்முடைய ஜெபத்தில் இடம்பெற வேண்டும். நம்முடைய இருதயத்திலே முழு உலகத்தையும், புறஜாதி மக்களையும், யூதர்களையும், ரோமன் கத்தோலிக்கர்களையும், மெய்யான கிறிஸ்தவர்களின் சரீரமான சபையையும், நாம் வாழ்கிற இந்த தேசத்தையும், நாம் சார்ந்து இருக்கிற சபையையும், நாம் தங்கியிருக்கிற வீட்டில் உள்ளவர்களையும், நமது தொடர்பில் உள்ள நண்பர்களையும், சொந்தக்காரர்களையும் சுமந்து பழக வேண்டும். ஒவ்வொருவருக்காகவும் நம்முடைய விண்ணப்பங்களை ஏறெடுக்க வேண்டும். இது மிக உயர்ந்த பொதுச்சேவை. யார் எனக்கென ஜெபத்தை ஏறெடுக்கிறார்களோ அவர்களே என்மீது மெய்யான அன்பு வைத்திருப்பவர்கள். இது நம்முடைய ஆத்துமாவின் நலனை பெரிதும் பாதுகாக்கும். இப்படி ஜெபிப்பதின் மூலமாக நம்முடைய இரக்ககுணம் மிகவும் விரிவடைகிறது. அது நம்முடைய இருதயத்தை விசாலமாக்குகிறது. இதுதான் சபைக்கும் நலனை கொண்டுவரும். சுவிசேஷத்தின் அனைத்து சக்கரமும் ஜெபிப்பதின் மூலமாகவே நகர்கிறது. இப்படி ஜெபிப்பவர்களே கர்த்தருக்கென்று பெரிதான காரியங்களை செய்த மக்களுக்காக சீனாய் மலையில் பேசின மோசேயைபோலவும், அருமையான யுத்தங்களை நடப்பித்த யோசுவாவைப்போலவும் இருக்கிறார்கள். இதுதான் கிறிஸ்துவைப் போலாகுதல். அவர் தன்னுடைய மக்களுக்காக பிதாவின் முன்பு பிரதான ஆசாரியராக நிற்கிறார். கிறிஸ்துவை போல மற்றவர்களின் நலனை பார்ப்பது எவ்வளவு பெரிய சிறப்பான காரியம். இவர்களே பிரசங்கிங்களுக்கு மெய்யான உதவிகளை செய்வார்கள். ஒருவேளை நான் ஒரு கிறிஸ்தவ கூட்டத்தை உருவாக்கினால் அதில் இப்படி ஜெபிக்கிற மக்கள் இருந்தால் அது எவ்வளவு சிறப்பாக இருக்கும்.
ஜெபிக்கும்போது தேவனுக்கு நன்றி செலுத்தும்படிக்கு நான் உங்களை அறிவுறுத்துகிறேன். தேவனிடம் தேவைகளை கேட்பது எப்படியோ, அதுபோல ஜெபத்தில் நன்றி செலுத்துவதும் ஒரு பகுதி என்பது எனக்கு நன்றாக தெரியும். வேதத்தை கவனிக்கும்போது அதில் ஜெபமும், நன்றி செலுத்துதலும் இணைந்து காணப்படுகிறது. தேவனுக்கு நன்றி செலுத்தாமல் ஏறெடுக்கிற ஜெபத்தை நான் மெய்யான ஜெபமாக கருத மாட்டேன். பவுல் சொல்லுகிறார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள்." (பிலிப்பியர் 4:6). "இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். ஸ்தோத்திரத்தோடே ஜெபத்தில் விழித்திருங்கள்." (கொலோசேயர் 4:2). தேவனின் இரக்கத்தினாலே நாம் இன்னும் நரகத்தில் இல்லாமல் இருக்கிறோம். அவருடைய இரக்கத்தினாலே இன்று நமக்கு பரலோகத்தை பற்றிய நம்பிக்கை இருக்கிறது. அவருடைய இரக்கத்தினாலே நாம் தேவனை பற்றி அறிந்து கொள்ளுகிற தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவருடைய இரக்கத்தினாலே நாம் பரிசுத்த ஆவியினாலே அழைக்கப்பட்டு, நம்முடைய பாவங்களுக்கு தக்க தண்டனையை இன்னும் பெறாமல் இருக்கிறோம். அவருடைய இரக்கத்தினாலே நாம் இன்றுவரை உயிர்வாழ்ந்து, அவருடைய நாமத்தை மகிமைபடுத்தும்படியான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது அவருடைய இலவசமான கிருபையினாலே கிடைத்தது. என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற அவருடைய அன்பினாலே இதெல்லாம் நமக்கு கிடைத்தது. முழுமையாக தேவனுக்கு நன்றி செலுத்தாதவர்கள் சிறப்பான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ முடியாது. அப்போஸ்தலனாகிய பவுல் தேவனுக்கு நன்றி செலுத்தாமல் ஒரு நிருபத்தைகூட எழுத ஆரம்பிக்கவில்லை. பீக்கர்ஸ்டித் போன்றோரின் ஜெபங்களில் தேவனுக்கு நன்றி செலுத்துதல் பெரும்பகுதியாய் இருந்திருக்கிறது. இதை வாசிக்கிறவர்களே இவர்களை போல நீங்களும் தற்போதைய காலத்தில் எரிந்து பிரகாசிக்கிற ஒளியாய் இருக்க வேண்டுமா? அப்படியென்றால் மனதார தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். இனி நமது ஜெபங்கள் தேவனுக்கு நன்றி செலுத்தும் ஜெபங்களாய் இருக்கட்டும்.
ஜெபிக்கும்போது மிக விழிப்புடன் கவனமாக ஜெபிக்கும்படி அறிவுறுத்துகிறேன். கிறிஸ்தவத்தில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டிய ஒரு காரியம் ஜெபம். ஏனென்றால் அங்கேதான் உண்மையான கிறிஸ்தவம் ஆரம்பமாகிறது. இங்கேதான் கிறிஸ்தவனின் எழுச்சியும், வீழ்ச்சியும் இருக்கிறது. ஜெபத்தில் என்னென்ன காரியங்களை விண்ணப்பங்களை ஏறெடுக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். நான் உடனே உங்கள் ஆத்துமாவின் நிலைமையை சொல்லுகிறேன். ஜெபமே ஆத்துமாவின் உயிர்நாடியாய் இருக்கிறது. இங்கேதான் ஆத்துமாவின் நலன் சோதிக்கப்படுகிறது. ஜெபமே நம்முடைய ஆவிக்குரிய நிலையை அளவிடும் கருவி. இந்த கருவியை கொண்டு நம்முடைய ஆவிக்குரிய நிலைமை நன்றாக இருக்கிறதா என்பதை நம்முடைய இருதயத்தில் உணரமுடியும். இனி நம்முடைய முழுகவனத்தை தனிப்பட்ட ஜெபத்தின்மீது வைப்போமாக. நடைமுறை கிறிஸ்தவனுக்கு இதுவே முதுகெழும்பாய் இருக்கிறது. பிரசங்கங்கள், புத்தகங்கள், கைப்பிரதிகள், கிறிஸ்தவ மக்களின் நட்பு இவையனைத்தும் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ மிகவும் உதவி செய்கிறவை. ஆனால் இவை தனிஜெபத்தை ஒதுக்கி வைப்பதால் வரும் இழப்பை சரிசெய்யாது. உங்களை தனிஜெபம் செய்ய முடியாமல் தடுக்கிற மக்கள் மத்தியிலும், சூழ்நிலைகள் மத்தியிலும், இடங்களிலும் இருந்து விலகி கொள்ளுங்கள். உங்களை ஆவிக்குரிய நிலைமையில் வளரச்செய்கிற, தேவனிடம் பேசுவதற்கு எப்போதும் தடங்கள் இல்லாத வேலையையும் நண்பர்கள் கூட்டத்தையும் கவனமாக தேடி கண்டுபிடித்து கொள்ளுங்கள். இந்த காரியங்களில் மிகவும் கறாராய் இருங்கள். நீங்கள் உங்கள் ஜெபங்களை பாதுகாத்து கொண்டால் உங்கள் ஆத்துமாவுக்கு எந்த தீங்கும் வராது.
நான் மிகுந்த பணிவுடன் இந்த காரியங்களை உங்களிடம் தருகிறேன். சற்று இதை நிதானமாக சிந்தித்து பாருங்கள். ஜெபத்தைப்பற்றிய இந்த காரியங்கள் என்னுடைய சொந்த ஆவிக்குரிய நலனுக்கு மிகவும் பிரயோஜனமாய் இருந்தது. மேலே விளக்கிய அனைத்தும் தேவனுடைய சத்தியங்கள் என முழுநிச்சயமாய் நம்புகிறேன். நானும் நான் மிகவும் விரும்புகிற நீங்களும் இந்த சத்தியங்களை அதிக அதிகமாய் உணரும்படியாய் வேண்டுகிறேன்.
நாம் வாழ்கிற இந்த காலம் ஜெபிக்கிற காலமாய் இருக்க வேண்டும். இந்த நாட்களில் வாழ்கிற கிறிஸ்தவர்கள் ஜெபிக்கிற கிறிஸ்தவர்களாய் இருக்கவேண்டும். மேலும் சபைகள் ஜெபிக்கிற சபைகளாய் இருக்க வேண்டும். இந்த ஆக்கத்தை எழுதி அனுப்புகிற வேளையில் என்னுடைய இருதயத்தின் விருப்பமும் என்னுடைய ஜெபமும் என்னவென்றால் ஜெபிக்கிற ஆவி விருத்தியடைய வேண்டும். இன்றுவரை ஜெபிக்காத மக்கள் இன்றே கர்த்தரை நோக்கி கூப்பிட வேண்டும். ஜெபிக்கிற மக்கள் கவனுத்துடன் ஜெபிக்க வேண்டும் என்பதே.
"சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணுங்கள்" (லூக்கா 18:1).