“அப்பொழுது இயேசு: "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்” (லூக்கா 23:34).

மனிதன் கொடூரமான அக்கிரமத்தை செய்திருந்தான். உலகை சிருஷ்டித்தவர் உலகிற்கு வந்தார். ஆனால் உலகம் அவரை அறியவில்லை. மகிமையின் தேவன் மனிதர்களின் மத்தியில் வாசம் பண்ணினார். ஆனால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களின் கண்களை பாவம் குருடாக்கியதினால் அவர்களுக்கு அவரில் சௌந்தரியம் ஏதொன்று மில்லை, விரும்பப்படத்தக்க ரூபம் அவருக்கு இல்லை, என்றுதான் காண முடிந்தது. மனிதர்கள் அவரை எவ்வாறு நடத்தப்போகிறார்கள் என்பதை அவர் பிறப்பில் அவருக்கு சத்திரத்தில் இடம் கிடைக்கக் கூடாதிருந்தது முன்னோட்டமாகக் காட்டுகிறது. அவர் பிறந்த உடனே ஏரோது அவரைக் கொலை செய்ய வழி தேடினான். அவர் மேல் விரோதம் எழும்பியதை அறிவிப்பதோடு, உச்சகட்டத்தில் மனிதனின் பகை அவரை சிலுவைக்கு தள்ளியதை எடுத்துரைக்கிறது. மாறி மாறி அவருடைய பகைவர்கள் அவரை அழிப்பதற்கு முயற்சி எடுத்தார்கள். இப்பொழுது அவர்களுடைய இழிவான விருப்பங்கள் நிறைவேறியது. தேவ குமாரன் அவர்கள் கையில் தன்னைத் தானே ஒப்புக்கொடுத்தார். ஒரு போலி விசாரணை நடத்தி அவரை நியாயம் விசாரித்தவர்கள் யாதொரு குற்றமும் அவரிடத்தில் காணவில்லை யென்றாலும், அவனைச் "சிலுவையில் அறையும்" என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திய மக்களின் கூக்குரலுக்கு இணங்கினார். அவர்களது ஈவு இரக்கமற்றத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அமைதிப்படுத்த முடியாத எதிரிகளுக்கு அவர் சாதாரணமாக மரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மிகுந்த அவமானமான, வேதனையும், துயரமும் நிறைந்த மரணதண்டனையைத் தீர்மானித்தார்கள். ஒரு சிலுவையை வாங்கினார்கள். அதிலே இரட்சகர் அறையப்பட்டார். அதிலே அவர் அமைதியாகத் தொங்குகிறார். ஆனால் இப்பொழுது அவருடைய வெளிறிய உதடுகள் அசைகின்றன. பரிதாபத்திற்காக அழுகிறாரா? இல்லை. அப்படியானால்? அவரைச் சிலுவையில் அறைந்தவர்களின் மேல் சாபங் களைக்கூறுகிறாரா? இல்லை. அவர் ஜெபிக்கிறார், அவருடைய விரோதிகளுக்காக ஜெபிக்கிறார்.

"அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்" (லூக்கா 23:34).

நமது கர்த்தர் சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகளில் முதல் வசனம் ஜெபத்தில் மன்றாடும் அவரின் மனப்பான்மையைக் காண்பிக்கிறது. அது எத்தனை சிறப்பானது? நமக்கு எவ்வளவு கற்றுத்தருகிறதாக இருக்கிறது! அவரின் ஊழியம் ஜெபத்தில் ஆரம்பித்து (லூக்கா 3:21) ஜெபத்தில் முடிவடைகிறது. நிச்சயமாகவே நமக்கு அவர் ஒரு எடுத்துக்காட்டை விட்டுச் சென்றிருக்கிறார். சிலுவையில் அறையப்பட்ட அந்த கரங்கள் இனிமேல் வியாதியஸ்தரைத்தொட்டு குணப்படுத்த இயலாது. அந்த பாதங்கள் கொடூர மரத்தில் அறையப் பட்டிருப்பதினால் மனதுருக்கத்தின் அழைப்புகளை நிறைவேற்ற அவரை சுமந்து செல்லாது. அப்போஸ்தலர்களை அறிவுறுத்தலில் அவர் இனி தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இயலாது. ஏனெனில் அவர்கள் அவரை கைவிட்டு ஓடிவிட்டார்கள். அப்படியென்றால் எந்தக் காரியத்தில் தன்னை நியமித்து கொண்டார்? ஜெப ஊழியத்திலே! நமக்கு என்ன ஒரு பாடம்!

வயதானதினாலோ, வியாதியினாலோ கர்த்தரின் திராட்சத் தோட்டத்திலே முன்பு போல சுறுசுறுப்பாக செயல்பட முடியாமல் நீங்கள் வருந்திக் கொண்டிருக்கலாம். கடந்த நாட்களிலே ஒருவேளை நீங்கள் போதகராகவோ, பிரசங்கியாராகவோ, ஞாயிறு பள்ளி ஆசிரியையாகவோ, கைப்பிரதி கொடுக்கிறவர்களாகவோ செயல்பட்டு விட்டு இப்பொழுது படுத்த படுக்கையில் இருக்கலாம். ஆம்! ஆனாலும் நீங்கள் இன்னும் இந்த பூமியில்தான் இருக்கிறீர்கள்! தேவன் இன்னும் ஒரு சில நாட்கள் உங்களுக்குத் தந்திருப்பது ஜெப ஊழியத்திலே செலவழிக்க வேண்டுமென இருக்கலாம். யாருக்குத் தெரியும். உங்களுடைய கடந்த விறுவிறுப்பான சேவையைக் காட்டிலும் ஒருவேளை நீங்கள் இப்பொழுது முன்பைவிட ஜெபத்தினால் அதிகம் சாதிக்கலாம். இப்படிப்பட்ட ஒரு ஊழியத்தை நீங்கள் இகழ்ச்சியாகக் கருதுவீர்களானால், உங்கள் இரட்சகரை நினைவு கூறுங்கள். அவர் ஜெபித்தார், மற்றவர்களுக்காக ஜெபித்தார். பாவிகளுக்காக ஜெபித்தார். தன்னுடைய கடைசி வேளையில்கூட அவர் ஜெபித்தார்.

தன்னுடைய பகைவர்களுக்காக ஜெபித்தது, நமக்கு தீங்கிழைத்து வெறுக்கிறவர்களை நாம் எவ்வாறு நடத்தவேண்டும் என்பதற்கு முன் மாதிரியை வைத்ததோடு, ஜெபத்தால் எட்டமுடியாத, ஜெபத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் எந்த நபரும் இல்லை என்பதை நமக்கு கற்றுத் தந்துள்ளார். கிறிஸ்து அவருடைய கொலைக்காரர்களுக்கு ஜெபித்தது, நாம் பிரதான பாவிகளுக்காக ஜெபிக்க நம்மை உற்சாகப்படுத்தித் தூண்டுவதாயிருக்கிறது. அன்பான கிறிஸ்தவ வாசகரே, ஒருபோதும் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். குறிப்பிட்ட மனிதனுக்காக, குறிப்பிட்டப் பெண்ணுக்காக, உங்களுடைய ஊதாரிப் பிள்ளைக்காக தொடர்ந்து ஜெபிப்பது காலத்தை வீணடிப்பது போல் தோன்றுகிறதா? ஒவ்வொரு நாளும் அவர்களுடைய நிலைமை மோசமடைவதாகத் தோன்றுகிறதா? தெய்வீக இரக்கத்தின் அப்பாற்பட்ட நிலைக்குள் கடந்து விட்டது போலத் தெரிகிறதா? ஒருவேளை நீங்கள் நீண்ட நாட்களாக யாருக்காக ஜெபித்தீர்களோ அந்த நபர் இப்பொழுது சாத்தானின் வழிபாட்டு மரபுக்குள் அகப்பட்டு, அப்பட்டமான ஒரு தேவனை நம்பாதவராக, வேறுவிதமாகச் சொன்னால் கிறிஸ்துவுக்கு வெளிப்படையான எதிரியாக மாறிவிட்டாரா? சிலுவையை நினைவு கூறுங்கள். கிறிஸ்து அவருடைய பகைவர்களுக்காக ஜெபித்தார். அப்படியானால் எவரும் ஜெபத்தின் தொடுதலுக்கு மீறின எல்லையில் இருக்கிறது போல பார்க்கக்கூடாது என கற்றுக்கொள்ளுங்கள்.

கிறிஸ்துவின் ஜெபத்தைக் குறித்து சிந்திக்க மற்றுமொரு கருத்து. ஜெபத்தின் வல்லமையைக் குறித்து நாம் பார்க்கிறோம். தன்னுடைய எதிரிகளுக்காக சிலுவையில் கிறிஸ்து ஏறெடுத்த மன்றாட்டு ஜெபம் குறிப்பிட்ட நிச்சயமான பதிலை கொண்டு வந்தது. இந்தப் பதிலை பெந்தகோஸ்தே நாளில் 3000 பேர் மனந்திரும்பதியதிலே காண்கிறோம். அப்போஸ்தலர் நடபடிகள் 3:17 இன் அடிப்படையில் இந்த முடிவைக் கூறுகிறேன். அங்கே அப்போஸ்தலராகிய பேதுரு கூறுகிறார். "சகோதரரே நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்." பேதுரு "அறியாமை” என்ற பதத்தை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. அது நமது கர்த்தர் "தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்பதோடு ஒப்பிடத்தக்கதாய் இருக்கிறது. அப்படியென்றால் இங்கே ஒரே பிரசங்கத்தில் 3000 பேர் மனந்திரும்பியதற்கு ஒரு தெய்வீக விளக்கத்தை அறிந்து கொள்ளுகிறோம். பேதுருவின் பேச்சாற்றலினால் இல்லாமல் கிறிஸ்துவின் ஜெபமே காரணமாக உள்ளது. கிறிஸ்தவ வாசகரே, நம்மைக் குறித்தும் அதுவே உண்மையாக இருக்கிறது. நாம் அவரில் விசுவாசம் வைப்பதற்கு முன் உங்களுக்காகவும் எனக்காகவும் கிறிஸ்து ஜெபித்தார். இதற்கு ஆதாரமாக யோவான் 17:20 -ம் வசனத்தைப் பார்க்கலாம். "நான் இவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறது மல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்." என்று சொல்லுகிறார். மறுபடியுமாக நமது பூரண மாதிரியானவரை நோக்கிப் பார்த்துக் கற்றுப் பயனடைவோம். தேவனின் விரோதிகளுக்காக நாமும் மன்றாடுவோம். தவறிப்போன பாவிகளின் இரட்சிப்புக்காக விசுவாசத்தோடு ஊக்கமாய் ஜெபிப்போம்.

நேரடியாக நமது வசனத்திற்கு மீண்டும் வருவோம்: "அப்பொழுது இயேசு : பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்."

  1. இங்கே தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறுகிறதைக் காண்கிறோம்

முன்குறிக்கப்பட்ட அந்த நாளன்று நடக்கவிருக்கின்றதை எவ்வளவாய் நமது தேவன் முன்னதாகவே தெரியப்படுத்தியிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் ஆண்டவரின் பாடுகளையும் அதனுடன்கூட உள்ள சூழ்நிலைகளையும் குறித்து எவ்வளவு முழுமையான படத்தை நமக்கு தந்துள்ளார். மற்ற எல்லாக்காரியங்களிலேயும் இரட்சகர் "அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொள்வது" (ஏசாயா 53:12) ஏற்கனவே முன்குறிக்கப் பட்டதாக இருக்கிறது. தேவனின் வலது பாரிசத்தில் கிறிஸ்து அமர்ந்திருந்து செய்யும் ஊழியத்தை இது குறிப்பிடவில்லை. "தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்று முடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்' (எபிரேயர் 7:25). இது உண்மைதான்.

ஆனால் இந்த ஊழியம் அவரின்மேல் விசுவாசம் வைத்தவர்களுக்கு இப்பொழுது அவர் செய்கிறதைக் குறிப்பிடுகிறது. ஆனால் கல்வாரிச் சிலுவையிலே அவர் செய்த தயை மிகுந்த காரியத்தை சுட்டிக்காட்டுகிறது. அக்கிரமக்காரருக்காக அவர் மன்றாடியது "அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார் அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம்" (ஏசாயா 53:12) என்பதோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

கிறிஸ்து அவருடைய விரோதிகளுக்காக மன்றாட வேண்டுமென்று ஏசாயா 53 ஆம் அதிகாரத்தில் காண்பது ஆச்சரியத்துக்குரிய தீர்க்கதரிசனங்களில் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது. இந்த அதிகாரம் நமது மீட்பரின் வேதனையையும், அவமானத்தையும் குறித்து பத்துக்காரியங் களையாவது குறிப்பிடுகிறது. மனிதரால் புறக்கணிக்கப் பட்டவரும் அசட்டை பண்ணப்பட்டவருமாயிருந்தார்; துக்கம் நிறைந்த மனிதராகவும் பாடு அனுபவித்தவருமாயிருந்தார்; அவர் காயப்பட்டு, நொறுக்கப்பட்டு வாதிக்கப்பட்டார்; கொலை செய்யப்படப்போகிறபோது எந்தவித எதிர்ப்புமின்றி சென்றார்; மயிர்கத்தரிக்கிறவர்களுக்கு முன்பாக சத்தமிடாத ஆட்டைப் போலிருந்தார்; மனிதர்கள் கையில் பாடுபடுவதோடு கர்த்தரால் நொறுக்கப்பட்டுமிருந்தார்; மரணத்திலே தன் ஆத்துமாவை ஊற்றினார்; ஐசுவரியவானின் கல்லறையிலே அவர் அடக்கம் பண்ணப்பட்டார்; இதோடுகூட அக்கரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்; இறுதியாக "அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொள்வார்" என்ற தீர்க்கதரிசனம் "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என்று ஜெபித்த போது நிறைவேறிற்று. அவரைக் கொலை செய்தவர்களை அவர் நினைவு கூர்ந்தார்; சிலுவையில் அறைந்தவர்களுக்காக அவர் கெஞ்சினார்; அவர்களுடைய மன்னிப்புக்காக அவர் மன்றாடினார்.

"அப்பொழுது இயேசு பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்."

2 கிறிஸ்து தன் மக்களோடு தன்னை ஐக்கியப்படுத்துதல்

"பிதாவே இவர்களுக்கு மன்னியும்." இதற்கு முன்பாக எந்தச் சமயத்திலும் கிறிஸ்து பிதாவினிடத்தில் இப்படி ஒரு வேண்டுதல் செய்யவில்லை. மற்றவர்களுக்காக பிதாவின் மன்னிப்பை கேட்டு இதற்கு முன்பாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இதுவரைக்கும் அவரே மன்னித்தார். திமிர்வாதக்காரனிடத்தில் "மகனே, திடன் கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்” (மத்தேயு 9:2). சிமியோனின் வீட்டில் தன் பாதத்தை கண்ணீரால் கழுவிய பெண்ணிடம் "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது" என்றார் (லூக்கா 7:48). அப்படியென்றால், தானாக நேரடியாக மன்னிப்பை அருளுவதற்குப் பதிலாக, ஏன் பிதாவினிடத்தில் மன்னிக்கும்படி அவர் கேட்க வேண்டும்?

பாவத்தை மன்னிப்பது என்பது தெய்வீக சிலாக்கியம்."தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்" (மாற்கு 2:7) என்று யூத வேதபாரகர் காரணம் காட்டியது செம்மையே. ஆனால் கிறிஸ்து தேவனாயிருந்தார் என்று நீங்கள் சொல்வீர்கள். உண்மை! ஆனால் அவர் மனிதனுமாயிருந்த ஒரு தேவமனிதன். பாவத்துக்குப் பதிலாக தன்னை ஒப்புக்கொடுப்பதற்காக தேவனின் குமாரனாய் இருந்தவர் மனுப்புத்திரனாய் உருவெடுத்தார். "பிதாவே, இவர்களுக்கு மன்னியும்" என்று ஆண்டவராகிய இயேசு கதறியபோது, அவர் சிலுவையிலே தொங்கிக் கொண்டிருந்தார். அங்கே அவர் தன்னுடைய தெய்வீக உரிமைகளை செயல்படுத்தாமல் இருந்திருக்கலாம். அவருடைய வார்த்தைகளைக் கவனியுங்கள் அதன்பின்பு வேதத்தின் ஆச்சரியமான துல்லிதத்தைப் பார்க்கலாம். ''பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று சொல்லியிருக்கிறார் (மத்தேயு 9:6). "பூமியிலே" என்ற வார்த்தை வலியுறுத்தப்படுவதைக் கவனியுங்கள். ஆனால் அவர் பூமியிலே இல்லை! அவர் "பூமியிலிருந்து உயர்த்தப்பட்டார்" (யோவான் 12:32). மேலும், சிலுவையிலே அவர் நமக்குப் பதிலாளாக அவர் தொங்கிக் கொண்டிருந்தார். தன்னுடைய தெய்வீக உரிமைகளைப் பயன்படுத்தும் அதிகார ஸ்தானத்தில் அவர் இல்லை. ஆகையால் பிதாவினிடத்தில் மன்றாடுகிற ஒரு ஸ்தானத்தை எடுத்துள்ளார். ஆதலால் பரிசுத்த ஆண்டவராகிய இயேசு "பிதாவே, இவர்களுக்கு மன்னியும்" என்று கதறியபோது, அவர் தன் மக்களோடு முற்றிலும் ஐக்கியப்பட்டவராக காணப்படுகிறார். இந்தப் பூமியிலே "பாவத்தை மன்னிக்க வல்லமையும்" உரிமையும் உடையவராய் இருந்த ஸ்தானத்தில் இப்பொழுது அவர் இல்லை. மாறாக, பாவிகளுக்காக அவர் மன்றாடுகிறார். நாமும் அதைத்தான் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். ''அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக் கிறார்களே என்றார்."

  1. பாவத்தைக் குறித்த தெய்வீக மதிப்பீடும், பாவத்தின் விளைவாகிய குற்றமும்

அறியாமையினால் செய்கிற பாவங்களுக்கும் குற்ற நிவாரணபலி செலுத்த வேண்டிய தேவையை லேவியராகமத்திலே தேவன் குறிப்பிட்டுள்ளார். "ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன் மேல் சுமத்தும் அபதாரம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, பரிசுத்தமானதைக் குறித்துத் தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதனோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்ற நிவாரண பலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்" (லேவிராகமம் 5:15-16). "அறியாமையினால் செய்த பாவம்" என்பதை வலியுறுத்திக் கூறப்படுவதைக் கவனியுங்கள். மேலும் வாசிக்கிறோம். ''கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும், கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளை கொடுத்த நாள்முதற்கெண்டு அவர் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின் படியேயும் நீங்கள் செய்யாமல், அறியாமல் தவறி நடந்தாலும் சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லாரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், முறைமைப்படி அதற்கேற்ற போஜன பலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்த வேண்டும். அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அது அறியாமையினால் செய்யப்பட்ட படியாலும், அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரண பலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு வந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்" (எண்ணாகமம் 15:22-25). 'அறியாமையினால்' என்பதை வலியுறுத்தப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். இந்த வேதவசனங்களின் அடிப்படையில் தாவீது "மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்" (சங்கீதம் 19:12) என்று ஜெபிப்பதைக் காண்கிறோம்.

நாம் பாவத்தை அறிந்திருக்கிறோமோ இல்லையோ, கர்த்தரின் பார்வையில் பாவம் எப்பொழுதும் பாவம்தான். அறிந்து செய்கிற பாவத்தைப் போலவே அறியாமையில் செய்கிற பாவங்களுக்கும் குற்ற நிவாரணபலி தேவையாயிருக்கிறது. தேவன் பரிசுத்தர். நம்முடைய அறியாமைக்கேற்றவாறு அவர் நீதியின் விதியைத் தளர்த்துவது கிடையாது. அறியாமை என்பது மாசற்ற தன்மையன்று. மோசேயின் காலத்தில் இருந்ததைக்காட்டிலும் இந்தக் காலக்கட்டத்தில் அறியாமை இன்னும் அதிகபொறுப்பு நிலையிலிருக்கிறது. அறியாமைக்கு எந்தவித சாக்குபோக்கும் சொல்ல முடியாது. தேவன் தெளிவாகவும், முழுவதுமாகவும் தன் சித்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். வேதப்புத்தகம் நம் கையில் இருக்கிறது. அதன் உட்பொருளை அறியாமலிருந்தால் நமது சோம்பேறித்தனத்தின்மேல் தான் குறைகூற வேண்டியுள்ளது. தேவன் வேதத்தின்மூலம் பேசியுள்ளார். நாம் அவர் வார்த்தைகளினாலே நியாயந்தீர்க்கப்படுவோம்.

ஆனாலும், அநேக காரியங்களைக்குறித்து நாம் அறியாதிருக்கிறோம் என்பது உண்மை. குற்றமும், தவறும் நம்மேலே இருக்கிறது. அதனால் குற்றத்தின் பயங்கர நிலையைக் குறைக்க முடியாது. அறியாமையின் பாவங்கள் தெய்வீக மன்னிப்பை அடைய வேண்டியிருக்கிறது என்பது மிகவும் தெளிவாகிறது. அப்படியெனில் தேவனின் தரம் எவ்வளவு உயர்ந்தது; நம்முடைய தேவை எவ்வளவு பெரியதாயிருக்கிறது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மைக் சுத்திகரிக்கிற எல்லையில்லா, போதுமான குற்ற நிவாரணபலிக்காக தேவனைத் துதிப்போம்.

"அப்பொழுது பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்."

  1. மனித இருதயத்தின் குருட்டுத்தன்மை

"தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.'" சிலுவை மரணத்தின் உண்மையை கிறிஸ்துவின் எதிரிகள் அறியாதிருந்தார்கள் என்ற பொருள் அல்ல. "சிலுவையில் அறையும்" என்று அவர்கள் கூக்குரலிட்ட போது அவர்கள் தாங்கள் செய்வதை முற்றிலும் அறிந்திருந்தார்கள். பிலாத்துவினால் அவர்களின் இழிவான வேண்டுகோள் அவர்கள் கேட்டபடி அளிக்கப்பட்டது என்பதையும் அறிந்திருந்தார்கள். அவர் மரத்தில் ஆணிகளைக்கொண்டு அறையப்பட்ட போது நன்றாக அறிந்திருந்தார்கள்.

ஏனெனில் அவர்கள் அந்த குற்றத்திற்கு கண்கூடான சாட்சியாய் இருந்தார்கள். அப்படியெனில் "தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என்று அவர் கூறியதின் பொருள் என்ன? அந்தக் குற்றத்தின் மிகப்பெரிய தன்மையை அறியாதிருந்தார்கள் என்பதைக் கூறுகிறது. மகிமையின் தேவனை கொலை செய்கிறோம் என்பதை "அறியாதிருந்தார்கள்." "அறியாதிருந்தார்கள்" என்பதை வலியுறுத்தாமல் "தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள்" என்பதே மிகமுக்கியமானது.

ஆனாலும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அவர்களுடைய கண்மூடித்தனத்தைக் காரணம் காட்டி குற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது.பழைய ஏற்பாடு தீர்க்கதரிசனங்கள் அவரில் நிறைவேறுவதே அவர் தேவனின் பரிசுத்தர் என அடையாளம் கண்டு கொள்ள போதுமானதா யிருந்தது. அவருடைய உபதேசம் தன்னிகரற்றதாயிருந்ததை அவரைக் குறை கண்டுபிடிப்பவர்களே "அந்த மனுஷன் பேசுகிறது போல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை" என்று சொல்லி ஏற்றுக் கொண்டார்கள். அவருடைய பூரணமான வாழ்க்கையைக் குறித்து என்ன? பூமியிலே எங்கும் வாழ்ந்திராத ஒரு வாழ்க்கையை அவர் மனிதர்கள் முன்பாக வாழ்ந்தார். அவர் தன்னைத்தானே பிரியப்படுத்திக் கொள்ளவில்லை. அவர் நன்மை செய்து கொண்டே சுற்றித் திரிந்தார். அவர் எப்பொழுதும் மற்றவர்களுக்காகவே வாழ்ந்தார். சுய காரியத்தை தேடுகிறது அவரிடத்தில் இல்லை. துவக்கத்திலிருந்து முடிவு வரை தன்னைத் தியாகம் செய்த வாழ்க்கை அவருடையது. அவருடைய வாழ்க்கை தேவ மகிமைக்கே வாழ்ந்த ஒன்று. அவருடைய வாழ்க்கையை பரலோகம் அங்கிகரித்து முத்திரை போட்டது. ஏனெனில் பிதாவின் சத்தம் "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்" என்று காதுகள் கேட்கும் வண்ணமாக சாட்சி பகர்ந்தது. இல்லை, அவர்களுடைய அறியாமைக்கு ஏதுவான காரணங்கள் இல்லை. அது அவர்களின் இருதயம் குருடாயிருப்பதையே வெளிப் படுத்துகிறது. தேவ குமாரனை அவர்கள் ஒதுக்கித் தள்ளியது, மாம்சசிந்தை "தேவனுக்கு விரோதமான பகை" என்பதற்கு சாட்சி பகறுகிறது.

இந்த கொடூரமான அவல நிகழ்ச்சியை மீண்டும் செய்து கொண்டிருக்கிறோம் என்பது எத்தனை துக்ககரமானது! பாவியான மனுஷனே, தேவனின் மகாப்பெரிய இரட்சிப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளாததினால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நீங்களே அறியாதிருக்கிறீர்கள். தேவனின் கிறிஸ்துவை நீங்கள் அவமதித்து, அவருடைய இரக்கத்தின் அழைப்பை புறக்கணிப்பது எத்தனை கொடூரமான பாவம் என்பதை சிறிதும் அறியாதிருக்கிறீர்கள். உங்கள் பாவத்திலிருந்து உங்களை விடுதலையாக்க அவரால் மாத்திரமே முடியும். அவரை நீங்கள் புறக்கணிப்பதினால் உண்டாகிற குற்றம் எத்தனை ஆழமானது என்பதை சற்றும் அறியாதிருக்கிறீர்கள். "இந்த மனிதன் எங்களை ஆளுகை செய்யக்கூடாது என்பதினால் உண்டாகிற பயங்கரமான குற்றத்தை நீங்கள் அறிந்து கொள்ளாதிருக்கிறீர்கள். அந்த நாட்களில் உண்டானது போலவே இந்த நாட்களிலும் "கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும்" என்ற கேள்வி உங்களை நோக்கி வருகிறது. ஏனெனில் நீங்கள் அவரோடுகூட ஒன்று செய்யவேண்டியதாயிருக்கிறது. ஒன்று அவரை அசட்டைபண்ணி புறக்கணிக்க வேண்டும். இல்லையெனில், அவரை உங்கள் ஆத்துமாவின் இரட்சகராக உங்கள் வாழ்க்கையின் ஆண்டவராக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் செய்வது ஒரு முக்கியத்துவம் இல்லாத அற்ப காரியமாக உங்களுக்குத் தோன்றுகிறது. அவருடைய பரிசுத்த ஆவியானவரின் முயற்சிகளை பல ஆண்டுகளாக எதிர்த்து நிற்கிறீர்கள். முக்கியத்துவம் வாய்ந்த காரியத்தை ஆண்டுகளாக தள்ளி வைத்துள்ளீர்கள். பல ஆண்டுகளாக அவருடைய அப்பாற்பட்ட அழகுக்கு உங்களுடைய கண்களை மூடிக் கொண்டீர்கள். அவருடைய அழைக்கும் குரலுக்கு உங்களுடைய செவிகளை மூடிக்கொண்டீர்கள். அவருக்கு எதிராக உங்கள் இருதயத்தை கடினப்படுத்திக் கொண்டீர்கள்.

ஆ! நீங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறீர்கள். உங்களுடைய மதிகேட்டைக் கண்டுகொள்ளக்கூடாதபடி நீங்கள் குருடாய் இருக்கிறீர்கள். பயங்கரமான பாவத்துக்கு குருடாயிருக்கிறீர்கள். ஆனாலும் மன்னிக்கமுடியாத நிலையில் நீங்கள் இல்லை. நீங்கள் சித்தம் கொண்டால் இப்பொழுதே நீங்கள் இரட்சிக்கப்படலாம். "கர்த்தராகிய இயேசுவை விசுவாசி. அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்." கர்த்தாவே, நான் பார்வையடைய வேண்டும் என்று சொல்லுங்கள்.

"அப்போது இயேசு பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்."

  1. தமது உபதேசத்தை வாழ்ந்து காட்டிய அழகான முன் மாதிரி

மலைப்பிரசங்கத்திலே தன்னுடைய சீஷர்களுக்கு இயேசு கற்றுக் கொடுத்தார்: "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்” (மத். 5:44). எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்து எதை பிரசங்கித்தாரோ அதை வாழ்ந்து காட்டினார். சத்தியமும் கிருபையும் இயேசு கிறிஸ்துவினாலே வந்தது.

அவர் சத்தியத்தை மாத்திரம் கற்றுக்கொடுக்கவில்லை. அவரே சத்தியத்தின் அவதாரமாக இருந்தார். "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயுமிருக்கிறேன்" (யோவான் 14:6) என்று அவர் சொன்னார். மலையிலே கற்றுக்கொடுத்ததை அவர் இங்கே சிலுவையிலே நிரூபித்துக் காட்டினார். எல்லாவற்றிலும் அவர் நமக்கு ஒரு மாதிரியை விட்டுச் சென்றிருக்கிறார்.

கிறிஸ்து சுயமாக தன்னுடைய பகைவர்களை மன்னிக்கவில்லை என்பதை கவனியுங்கள். ஆகையால் மத்தேயு 5:44 -ல், தன்னுடைய சீஷர்களை அவர்களுடைய பகைவர்களை மன்னியுங்கள் என்று அறிவுறுத்தாமல் அவர்களுக்காக "ஜெபம் பண்ணுங்கள்" என அறிவுரை கூறினார். நமக்கு தீங்கிழைக்கிறவர்களை நாம் மன்னிக்க வேண்டாமா? அதிக விளக்கம் தேவைப்படுகிற ஒரு கருத்துக்கு இது நம்மை இழுத்துச் செல்லுகிறது. எல்லா சூழ்நிலையிலும் எப்பொழுதும் நாம் அவர்களை மன்னிக்க வேண்டுமென வேதம் சொல்லுகிறதா? இல்லை என்று நான் வலியுறுத்திக் கூறுகிறேன். தேவனின் வார்த்தை சொல்லுகிறது: "உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்து கொள்; அவன் மனஸ்தாப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒரு நாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்" (லூக்கா 17:3-4). 'மனஸ்தாபம் என்பது வலியுறுத்தப்படுவதைக் கவனியுங்கள். மன்னிப்பை நாம் கூறுவதற்கு முன்பாக குற்றவாளி ஒரு நிபந்தனையை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது என நமக்கு சுற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. தீங்கு செய்த மனிதன் தான் செய்த தவற்றிற்கு தன்னை நியாயம் தீர்த்து அதற்கு “மனஸ்தாபப்பட்டு" அப்படி வருந்துவதற்கு அடையாளம் காண்பிக்க வேண்டும். ஒருவேளை தவறு செய்தவர் மனஸ்தாபடவில்லையென்றால் என்ன? அப்பொழுது அவனை நான் மன்னிக்க வேண்டியதில்லை. ஆனால் நாம் இங்கு குறிப்பிடுகிற அர்த்தத்தை தவறாக புரிந்து கொள்ளாமல் இருக்கட்டும். எனக்கு விரோதமாக செயல்பட்டவர் தான் செய்ததற்கு வருந்தவில்லை யென்றாலும்கூட நான் அவருக்கு எதிராக பகையுணர்வு கொள்ளக்கூடாது. இருதயத்தில் வெறுப்போ அல்லது வன்மமோ இருக்ககூடாது. அதே சமயத்தில் தவறு செய்தவனை எதுவுமே செய்யாதவனைப் போல நடத்தக்கூடாது. அது குற்றத்தை மன்னிப்பதாகும். அப்படி செய்தால் நீதியின் நெறிகளை பின்பற்ற தவறியவனாவேன். ஒரு விசுவாசி எப்பொழுதும் நீதியின் நெறிகளை உயர்த்தவேண்டும். எங்கே மனஸ்தாபப்படவில்லையோ அங்கே தேவன் மன்னிப்பாரா? இல்லை. ஏனெனில் வேதம் சொல்லுகிறது "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளரவாயிருக்கிறார்" (1 யோவான் 1:9). 'அறிக்கை யிட்டால்' என்பது வலியுறுத்தப்படுவதைக் கவனியுங்கள். இன்னுமொரு காரியம். ஒருவன் என்னைக் காயப்படுத்தி அதற்கு மனம் வருந்தவில்லை யென்றால் நான் அவனை மன்னிக்க முடியாது. அவன் தவறு செய்யாதவன் போல அவனை நடத்தவும் முடியாது. ஆனால் என் இருதயத்தில் பழியுணர்வு இல்லாமலிருப்பதோடு அவனுக்காக நான் கட்டாயம் ஜெபிக்க வேண்டும். இதிலேதான் கிறிஸ்துவின் பூரணமான மாதிரியின் உயர் நிலையுள்ளது. நாம் மன்னிக்க முடியாத நிலையில் அவர்களை மன்னிக்கும்படி நாம் தேவனிடத்தில் ஜெபிக்கலாம்.

"அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்"

  1. மனிதனின் மிக முக்கியமான பெரிய தேவை

நாம் எல்லாரும் பாவிகள்; அந்த நிலையில் பரிசுத்த தேவனின் பிரச்சன்னத்தில் நிற்க தகுதியற்றவர்கள் என்பதே எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் முக்கியமான பாடம். பாவப்பிரச்சனையை சீர் செய்யாவிட்டால் சீரிய கருத்துக்களை தேர்ந்தெடுப்பது, நல்ல தீர்மானங்கள் எடுப்பது, வாழ்வதற்கு உயர்ந்த கொள்கைகளை பின்பற்றுவது போன்ற காரியங்கள் எல்லாம் வீண். தேவனுக்கும் நம் ஆத்துமாவுக்கு மிடையில் பாவம் இருக்கும்போது, தேவனின் அங்கீகாரம் பெறுவதற்கு நேர்மையான குணாதிசயம் உடையவராக நம்மை வளர்த்துக் கொள்வது பிரயோஜனமற்றது. நம்முடைய பாதங்கள் முடக்குவாதத்தால் பாதிக்கப் பட்டிருக்கும்போது, செருப்பு எப்படி பயன்படும்? குருடர்களாய் நாம் இருந்தோமென்றால் கண்ணாடியினால் என்ன பயன்? பாவ மன்னிப்பு என்பது அடிப்படையானது, அத்யாவசமானது, இன்றியமையாதது. நான் பாவத்திலே வாழ்ந்து கொண்டிருக்கும்போது அநேக நண்பர்களால் மிகவும் மதிக்கப்பபட்டவனாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. தேவனின் பார்வையில் பாவ மன்னிப்படையாத ஒரு பாவி, தன் வணிகம் வளர்ச்சியடைந்தாலும் அதினால் அவனுக்கு என்ன லாபம்? என்னுடைய மரணநேரத்தில் எது மிகவும் முக்கியமானது என்றால் என்னுடைய பாவங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டிருக்கிறதா என்பதே.

பாவமன்னிப்பை எப்படி அடைந்து கொள்வது என்பது இரண்டாவதாக எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். எப்படி பரிசுத்த தேவன் பாவத்தை மன்னிப்பார்? தேவ மன்னிப்புக்கும் மனிதன் மன்னிப்பதற்குமுள்ள முக்கியமான வித்தியாசத்தை இங்கே குறிப்பிடுவது அவசியம். கண்டிப்புக் குறைவையும், கண்டிப்பில்லாததையுமே மனித மன்னிப்புக் காண்பிக்கிறது என்பது பொதுவான விதி. நியாயத்தையும் நீதியையும் கிரயம் வைத்தே மன்னிப்பு வழங்கப்படுகிறது. மனிதர்களின் நீதிமன்றத்தில் நியாயாதிபதி இரண்டு தீர்மானங்களுக்கிடையே ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். குற்றவாளிக் கூண்டில் நிற்பவர் குற்றவாளி என தீர்ப்பிடப்படும் போது, நியாயாதிபதி சட்டத்தின் மூலம் தண்டனையை கொடுக்க வேண்டும். இல்லையெனில், சட்டத்தின் நியதிகளை ஒதுக்கித் தள்ளவேண்டும். ஒன்று நீதி மற்றொன்று இரக்கம். குற்றம் செய்தவர்க்கு இரக்கமும் காண்பித்து சட்டத்தையும் நிறைவேற்ற வேண்டுமெனில், குற்றவாளி எனத் தீர்ப்பிடப்பட்டவரின் தண்டனையை மூன்றாவது நபர் ஒருவர் அவருக்குப்பதிலாக ஏற்றுக்கொள்ள முன்வந்தால் நியாயாதிபதி சட்டத்தின் நியாயங்களை நிறைவேற்றுவதோடு, குற்றவாளிக்கு இரக்கமும் காண்பிக்க இயலும். நீதியை விலைக்கிரயமாக வைத்து தேவன் இரக்கம் காண்பிக்க மாட்டார் என்பது தெய்வீக ஆலோசனையில் இருந்தது. இந்த பூமியனைத்திற்கும் நியாயாதிபதியாயிருக்கிற தேவன் பரிசுத்த சட்டத்தின் தேவைகளை புறம்பே தள்ளமாட்டார். ஆனாலும் தேவன் இரக்கம் காண்பிப்பார், எப்படி? சீரழிக்கப்பட்ட குலைத்துப்போடப்பட்ட அவருடைய சட்டத்தை முழுத் திருப்திக்கு நிறைவேற்றுகிற ஒருவராலே, அவர் நிறைவேற்றுவார். அவருடைய சொந்தக்குமாரன் அவர்மேல் விசுவாசிக்கிற ஜனங்களின் ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டு அவர்களுடைய பாவங்களை தன் சரீரத்திலே சிலுவை மரத்திலே சுமந்து அந்த நீதியை நிறைவேற்றினார். தேவன் ஒருவரே நீதிபரராயிருந்து இரக்கமாயும், இரக்கமாயிருந்து நீதியாயும் செயல்படமுடியும். எனவே "நீதியின் வழியாக கிருபை ஆளுகை செய்யும்."

அவரை விசுவாசிக்கிறவர்களை நீதியுள்ளவர்களாக்கும்படி ஏற்கனவே ஒரு நீதியின் ஸ்தலம் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது. எனவே இவ்வாறாக நமக்கு உரைக்கப்பட்டுள்ளது, "எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது" (லூக்கா 24:46-47). மீண்டுமாக "ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப் படுகிறதென்றும், மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக் கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்கு தெரிந்திருக்கக்கடவது" (அப்போஸ்தலர் 13:38-39). இரட்சகர் தாம் சிந்திய இரத்தத்தினாலே, "பிதாவே, இவர்களுக்கு மன்னியும்" என்றார். அவர் செலுத்திய குற்ற நிவாரணப்பலியினாலே, "இரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பு உண்டாகாது" என்று கூறமுடியும்.

தன்னுடைய பகைவர்களுக்கு ஜெபித்ததினாலே, கிறிஸ்து அவர்களின் தேவையின் அடிவேரைத் தொட்டார். அவருடைய தேவை ஆதாமின் ஒவ்வொரு குழந்தையின் தேவையுமாயிருக்கிறது. வாசகரே, உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதா? அதற்கு வேண்டிய கிரயம் செலுத்தி நீக்கப்பட்டதா? "(குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத் தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது" " (கொலோசியர் 1:14) என்று சொல்லுகிறவர்களின் கூட்டத்தில் நீங்களும் ஒருவரா?

"அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்."

  1. மீட்டுக் கொள்கிற அன்பின் வெற்றி

எந்த வார்த்தையோடு இந்தப்பகுதி ஆரம்பிக்கிறது என்பதை கவனியுங்கள்; "அப்பொழுது”. அதற்கு முந்திய வசனம் "சுபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்த பொழுது, அங்கே அவரையும், அவருடைய வலது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்" (லூக்கா 23:33), அப்பொழுது பிதாவே இவர்களை மன்னியும் என்றார். "அப்பொழுது" - மனிதன் மிகவும் மோசமான காரியத்தை செய்திருந்த போது; "அப்பொழுது" - மனித இருதயத்தின் பொல்லாப்பு உச்சகட்டத்தில் வெளியரங்கமானபோது; "அப்பொழுது" - சிருஷ்டிக்கப்பட்ட மனிதனின் கரங்கள் மகிமையின் தேவனை சிலுவையில் அறைய துணிந்தபோது; கொடூரமான சாபங்களை அவர்கள்மேல் அவர் சொல்லியிருக்கலாம். நீதியின் கோபத்தினால் இடிமுழக்கங்களை கட்டவிழ்த்து அவர்களை சாகடித்திருக்கலாம். பூமியின் வாயைத் திறந்து, அதன் பாதாளத்துக்கு அவர்களை உயிரோடு அனுப்பியிருந்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. சொல்ல முடியாத அவமானத்துக்கு உட்படுத்தப்பட்டு, தாங்க இயலாத வேதனையை அனுபவித்து, அசட்டை பண்ணப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, வெறுக்கப்பட்டு இருந்த நிலையில் இயேசு "பிதாவே, இவர்களுக்கு மன்னியும்" என்று கதறினார். மீட்டுக்கொள்ளும் வல்லமையுடைய அன்பின் வெற்றி அதுவே. அன்பு "நீடிய சாந்தமும், தயவுமுள்ளது... சகலத்தையும் சகிக்கும்" (1 கொரிந்தியர் 13:4,7). சிலுவையிலே இந்த அன்பு வெளிப்பட்டது.

சிம்சோன் தன்னுடைய மரண நேரத்தில், அவனுடைய எதிரிகள் எல்லோரையும் அழிக்கும்படி தன்னுடைய சரீர பலத்தை பயன்படுத்தினார்; ஆனால் பூரணமான கிறிஸ்து தன்னுடைய எதிரிகளுக்கு ஜெபிப்பதின்மூலம் தன்னுடைய அன்பின் வலிமையை வெளிப்படுத்தினார். நிகரற்ற கிருபை! தன்னிகரில்லாதது என்று சொல்லுகிறோம். ஏனெனில் நமது இரட்சகர் விட்டுச் சென்ற பாக்யமான இந்த முன்மாதிரியை ஸ்தேவான் கூட முழுவதுமாக பின்பற்ற இயலவில்லை. வாசகர் அப்போஸ்தலர் நடபடிகள் 7 ஆம் அதிகாரத்திற்கு திருப்பினால், முதலாவது ஸ்தேவான் தன்னைக்குறித்து நினைத்ததையும், பின்பு தன்னுடைய பகைவர்களுக்காக ஜெபித்ததையும் காணலாம் - ''அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுது கொள்ளுகையில், அவனை கல்லெறிந்தார்கள். அவனோ, முழங்காற்படியிட்டு : ஆண்டவரே, இவர்கள் மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்" (அப்போஸ்தலர் 7:59-60). ஆனால் கிறிஸ்துவோடு இந்தக் கிரமம் மாறியுள்ளது. முதலாவது தன்னுடைய பகைவர்களுக்காகவும் பின்பு தனக்காகவும் ஜெபம் பண்ணினார். எல்லாவற்றிலும் அவர் முதற்பேறானவர்.

புத்தி சொல்லவும் விண்ணப்பிக்கவும் இறுதியான வார்த்தை. இரட்சிக்கப்படாத ஒருவர் இந்த அதிகாரத்தை வாசிக்க நேர்ந்தால், அடுத்து வருகிற வாக்கியத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமாறு கேட்கிறோம். அறிந்திருந்தும் கிறிஸ்துவையும் அவருடைய சத்தியத்தையும் எதிர்த்து நிற்பது எத்துணை பயங்கரத்துக்குரியது! இரட்சகரை சிலுவையில் அறைந்தவர்கள் "தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள்." ஆனால், அருமையான வாசகரே, உங்களைப் பொறுத்தவரையில் இது உண்மையல்ல. கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிந்திருக்கிறீர்கள்; அவரை உங்கள் வாழ்க்கையின் கர்த்தராக நீங்கள் முடிசூட்ட வேண்டும்; முதலும் முடிவுமான உங்களது நோக்கம் அவரைப் பிரியப்படுத்தி மகிமைப்படுத்த வேண்டும் என்பதே. அப்படியெனில் எச்சரிப்படையுங்கள் : உங்கள் அபாயம் பெரிது. வேண்டுமென்றே நீங்கள் அவரிடமிருந்து விலகினால், உங்கள் பாவத்திலிருந்து விடுதலையாக்கக் கூடிய ஒரே ஒருவரிடமிருந்து விலகுகிறீர்கள். இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்" (எபிரேயர் 10:26-27).

தெய்வீக மன்னிப்பின் பாக்கியமான நிறைவைக் குறித்து ஒரு சில வார்த்தைகளை மட்டும் கூறவேண்டியிருக்கிறது. அநேக தேவ மக்கள் இந்தக் கருத்தை குறித்து சஞ்சலத்துக்குள்ளாகிறார்கள். கிறிஸ்துவை அவர் களுடைய இரட்சகராக ஏற்றுக் கொள்வதற்கு முன்பு செய்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்திருக்கிறார்கள்; ஆனால் அநேக வேளையில் அவர்கள் மறுபடியும் பிறந்த அனுபவத்துக்குள் வந்தபின் செய்கிற பாவங்களைக் குறித்து அவர்களுக்கு தெளிவில்லை. தேவன் அவர்களுக்கு வழங்கிய மன்னிப்பை பாவத்திலே நஷ்டப்படுத்தி விடுகிறோம் என்று எண்ணுகிறார்கள். கிறிஸ்துவின் இரத்தம் அவர்களின் பழைய வாழ்க்கைக்கு மாத்திரமே என்றும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் அவர்களே சமாளிக்க வேண்டும் என்று யூகிக்கிறார்கள். எந்த நேரத்திலும் என்னிடத்திலிருந்து மன்னிப்பு எடுக்கப்படுமென்றால் அதினால் பிரயோஜனம் என்ன? என்னுடைய கீழ்ப்படிதலினாலும், உண்மையினாலும் அல்லது நான் கிறிஸ்துவை தொடர்ந்து பற்றிக் கொண்டிருப்பதினாலும் நான் பரலோகம் செல்ல முடியுமென்றால் ஒரு நிலைவரமான சமாதானம் நிச்சயமாகவே ஏற்படாது.

பரிசுத்த தேவனாலே அவர் அருளுகிற மன்னிப்பு கடந்தகாலம், நிகழ்காலம் எதிர்காலம் ஆகிய எல்லாக் காலங்களிலுள்ள பாவங்களையும் மூடுகிறது. உடன் விசுவாசியே, கிறிஸ்து நம்முடைய எல்லா "பாவங்களையும்" அவருடைய சரீரத்தில் சிலுவை மரத்தில் சுமக்கவில்லையா? நிச்சயமாகவே, நீங்கள் அந்தக்காலக்கட்டத்தில் பிறக்கவில்லை; அதினால் ஒரு சிறிய பாவம்கூட செய்யவில்லை. நன்று. கிறிஸ்து உங்கள் பழைய பாவத்தையும் எதிர்காலத்திலுள்ள பாவத்தையும் சுமந்தார். தேவனின் வார்த்தை நமக்கு கற்றுக்கொடுக்கிறது: விசுவாசிக்காத ஆத்துமாக்கள் மன்னிப்பில்லாத இடத்திலிருந்து மன்னிப்புக்குரிய இடத்திற்கு கொண்டுவரப் படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் மன்னிக்கப்பட்ட மக்கள். பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார்: "எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்" (ரோமர் 4:8). 'எண்ணாதிருக் கிறார்' என்பதைக் கவனித்துப் பாருங்கள். விசுவாசிக்கிறவன் கிறிஸ்துவுக்குள் இருக்கிறான். அந்த இடத்திலே நமக்கு பாவம் எண்ணப்பட மாட்டாது. தேவனின் முன்னால் இது தான் நமது ஸ்தானமாயிருக்கிறது. நம்மைத் தேவன் கிறிஸ்துவுக்குள் பார்க்கிறார். நான் கிறிஸ்துவுக்குள் இருப்பதினால், நான் முழுவதுமாக நித்தியமாக மன்னிக்கப்பட்டுள்ளேன். நான் இந்த பூமியில் நூறு வருடங்கள் வாழ்ந்தாலும் என்னுடைய இரட்சிப்பைத் தொடும்படியாக பாவம் எனக்கு எதிராக சாற்றப்படாது. வேதத்தில் உள்ள சாட்சியைக் கேளுங்கள்: "உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடே (கிறிஸ்து) கூட உயிர்ப்பித்து, அக்கிரமங்க ளெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;" (கொலோசியர் 2:13); இங்கே இரண்டு காரியங்கள் இணைக்கப்பட்டுள்ளதை கவனியுங்கள். (தேவன்) இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன்) கிறிஸ்துவுக்குள் நான் இருப்பது என்னுடைய மன்னிப்போடு இணைந்துள்ளது! என்னுடைய வாழ்க்கை "கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது'' (கொலோசியர் 3:3) என்றால் பாவம் எனக்கு எதிராக எண்ணப்படக்கூடிய இடத்திலிருந்து விலகி இருக்கிறேன். எனவே இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர் களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை" (ரோமர் 8:1). எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டதென்றால் ஆக்கினைத் தீர்ப்பு எப்படி வரும்? "தேவன் தெரிந்து கொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்?" (ரோமர் 8:33). கிறிஸ்தவ வாசகரே, இதை எழுதியிருக்கிறவருடன் சேர்ந்து தேவனைக் துதியுங்கள். ஏனெனில் நாம் நித்தியமாக மன்னிக்கப் பட்டுள்ளோம்”.

(நீதிக்குரிய ரீதியிலே உள்ள காரியங்களை நாம் விளக்கி உள்ளோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். பாவம் செய்கிற விசுவாசியை மீண்டுமாக தேவ ஐக்கியத்துக்குள் கொண்டு வருகிற புதுப்பிக்கிற மன்னிப்பு (1 யோவான் 1:9) -ல் விளக்கப்பட்டுள்ளபடி வேறு ஒரு பார்வையில் காண வேண்டும்.)

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.