வேத சத்தியத்தை ஜெபசிந்தையோடு வாசிக்கும் யாவருக்கும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மரணத்தைக்குறித்த காரியங்கள் அல்லது படைப்புகள் என்றும் வற்றாத ஆர்வத்தை கொடுப்பவைகளாகும். ஏனென்றால் கிறிஸ்துவின் மரணமே விசுவாசிகளின் இம்மைக்கும், நித்தியத்திற்கும், எல்லாவற்றிலும் எல்லாமுமாயிருக்கிறது. மேலும் இது நமது சிந்தனைக்கும் எட்டாத தனித்தன்மை வாய்ந்த காரியமானாலும் நமது உள்ளுணர்வால் உணர்ந்து அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இரகசியங்களிலும் இரகசியம் எனக்கருதப்படும் இக்காரியத்தின் சிறப்பு அம்சங்களை நான்கு வார்த்தைகளைக் கொண்டு இதைத் தொகுத்து சொல்லலாம். கிறிஸ்துவின் மரணம் இயற்கையானது (Natural), இயற்கைக்குப் புறம்பானது (Un-Natural) இயற்கையைக் கடந்தது (Preter-Natural), வியக்கத்தக்க வகையில் இயற்கைக்கு அப்பாற்பட்டது (Super-Natural) இவைகள் ஏதோ புதிர்போல் தோன்றலாம். எனினும் இவற்றை விளக்கித் தெளிவுபடுத்த இயலும்.

முதலாவதாக கிறிஸ்துவின் மரணம் இயற்கையானது. இதன் மூலம் நாம் சொல்ல விரும்புகிற காரியம் என்னவெனில் கிறிஸ்துவின் மரணம் உண்மையானது. அவரது மரணம் தொடர்பான நிகழ்வுகள் யாவும் நாம் நன்கு அறிந்தவைகள் தான். ஆனாலும் இந்த நிகழ்வுகளின் பின்னணியில் அமைந்திருக்கும் ஆச்சரியமான காரியத்தைத்தான் உங்கள் ஆவிக்குரிய சிந்தையில் வைக்க விரும்புகிறேன். பொல்லாத மனிதர்களால் பிடிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டாரே, அவர் யார்? அவர் யாரோ ஒருவரல்ல, அவர் இம்மானுவேல். சிலுவையில் கொடூர மரணத்தைச் சந்தித்தவர் யாரோ ஒருவரல்ல. அவர் யெஹோவா எனும் தேவனோடிருந்தவர், தேவனாயிருந்தவர். சபிக்கப்பட்ட மரத்தில் இரத்தம் சிந்தினாரே! அந்த மரமே தெய்வீகமாக மாறியது. அங்கேதான் தமது சுயரத்தத்தினாலே தேவனுடைய சபையை சம்பாதித்து கொண்டார் (அப்போஸ்தலர் 20:28). தமது இரத்தத்தைச் சிந்தி தேவனுடைய சபையை உண்டாக்கினவர். தேவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்து அவர் சிந்திய இரத்தத்தினாலே உலகத்தைத் தமக்குள் ஒப்புரவாக்கிக் கொண்டார் (2 கொரிந்தியர் 5:19). அந்த தேவன் கிறிஸ்துவுக்குள் வாசம் பண்ணினார் என்றால் அவர் ஏன் இந்த கோரமான பாடுகளை அனுபவிக்கவேண்டும்? நித்தியமான அவர் எப்படி மரணத்தைத் தளுவ முடியும்? அவர் உலகத்தோற்ற முதல் இருந்தார் எனினும், தேவனோடிருந்தார், தேவனாய் இருந்தவர் எனினும் அவர் மாம்சமாக உருவெடுத்தார். அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் அடிமையின் ரூபம் எடுத்து மனித சாயலானார். "அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார்" (பிலிப்பியர் 2:8) என்று வாசிக்கிறோம். ஆகவே அவர் அவதாரமானார் என்பதை விளங்கிக் கொள்ளுகிறோம். அவ்வாறு அவதாரமான மகிமையின் தேவன் மரணப்பாடுகளை அனுபவிக்கவும் மரணத்தை ருசிபார்க்கவும் ஆயத்தமாயிருந்தார். "பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்" என்ற அவருடைய வார்த்தையைக் கவனித்துப் பாருங்கள். அவருடைய ஜீவனை யாரும் பறித்துவிடவில்லை, அவரே ஒப்புக்கொடுத்தார். ஆகவே அவருடைய மரணம் எவ்வளவு இயற்கையானது! எவ்வளவு உண்மையானது! மேலும் கல்லறையில் வைக்கப்பட்டாலும் மூன்று நாட்கள்தான் அவர் அங்கே இருந்தார்.

இரண்டாவதாக கிறிஸ்துவின் மரணம் இயற்கைக்குப் புறம்பானது. இதன் மூலம் நாம் சொல்ல விரும்புகிற காரியம் என்னவெனில் கிறிஸ்துவின் மரணம் அசாதாரணமானது. அவர் அவதாரமாக மாறியதின் காரணமாக மரணப்பாடுகளைச் சகிக்கவும், மரணத்தை ருசிபார்க்கவும் வல்லமையுள்ளவராய் இருந்தார். என்று முன்பு கண்டோம். ஆனாலும் அவர் மீது மரணத்திற்கு அதிகாரம் இருந்தது என்று யூகித்துக் கொள்ளக்கூடாது. அது உண்மை அல்ல. "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று காண்கிறோம். ஆனால் அவரில் அப்படி பாவம் ஒன்றுமில்லையே! இயேசுவின் பிறப்பிற்கு முன்பாக மரியாளிடம் "உன்னிடத்தில் பிறக்கும் (பிள்ளை) பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும்" (லூக்கா 1:35) என்று தேவதூதன் மூலமாகச் சொல்லப்பட்டதைக் காண்கிறோம். ஆகவே விழுந்துபோன மனிதனின் சுபாவம் அவரைத் தீட்டுப்படுத்தாதவண்ணம் அவர் இவ்வுலகத்திற்கு வந்தார். அவர் உலகில் வாழ்ந்த காலத்திலும் "அவர் பாவஞ்செய்யவில்லை" (1 பேதுரு 2:22) "அவரிடத்தில் பாவமில்லை” (1 யோவான் 3:5) "பாவம் அறியாத அவர்" (2 கொரிந்தியர் 5:21) என்றுதான் பரிசுத்த வேதத்தில் வாசிக்கிறோம். அவருடைய நடக்கையிலும் சரீரத்திலும் தேவனுடைய பரிசுத்தராகவே இருந்தார். "குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டி" (1 பேதுரு 1:19) என்றே அவரைக்குறித்து வாசிக்கிறோம். ஆகவே மரணத்திற்கு அவர் மீது அதிகாரம் இல்லை. இயேசு கிறிஸ்துவை விசாரித்த அதிகாரியான பிலாத்தும்கூட "இவனிடத்தில் குற்றம் காணவில்லை" (லூக்கா 23:15) என்றுதான் கூறினார். ஆகவே அவர் இயற்கைக்குப் புறம்பான மரணத்தைச் சந்தித்தார் என்று நாம் கூறுகிறோம்.

மூன்றாவதாக அவருடைய மரணம் இயற்கையைக் கடந்தது. கிறிஸ்துவின் மரணம் அவருக்கு உலகத்தோற்றத்தின் போதே முன்குறிக்கப்பட்டது என்பது முக்கியமான காரியம். "உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி" (வெளிப்படுத்தல் 13:8) என்று அவரைக்குறித்து வாசிக்கிறோம். ஆதாமின் சிருஷ்டிப்புக்கு முன்பாகவே அவனுடைய விழ்ச்சி எதிர் பார்க்கப்பட்டதுதான். பாவம் உலகத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவே தேவன் மனுக்குலத்தின் இரட்சிப்பைத் திட்டமிட்டு விட்டார். தேவத்துவத்தின் நித்திய ஆலோசனையின்படி பாவிகளுக்காக ஒரு இரட்சகர் முன் குறிக்கப்பட்டார். அநீதியுள்ளவர்களுக்காக நீதியுள்ள அந்த இரட்சகர் பாடுபட வேண்டும். நாம் ஜீவிப்பதற்காக அந்த இரட்சகர் ஜீவனைக் கொடுக்கவேண்டும் என்பது தேவனால் முன்குறிக்கப்பட்டதாகும். பாவத்தின் பரிகாரமாக ஒரு கிரயத்தைச் செலுத்த இயேசுகிறிஸ்துவைத் தவிர வேறு யாருமிருக்கமுடியாது. பிதா தம்முடைய ஒரே குமாரனை மனுக்குலத்தை மீட்கும்பொருளாக ஒப்புவித்தார்.

இயற்கையைக் கடந்த கிறிஸ்துவின் மரணத்தின் தன்மை சிலுவையைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது அதாவது சிலுவை மேன்மை பெற்றிருக்கிறது என்று சொல்லலாம். "தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்" (ரோமர் 3:25,26) என்ற வசனத்திலிருந்து கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் நோக்கத்தை விளங்கிக் கொள்ளுகிறோம். தேவன் இயேசுகிறிஸ்துவை கிருபாதார பலியாக முன்பே ஏற்படுத்தினார். உலகத்தோற்றத்திலிருந்தே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவை அவர் நியமிக்காமல் இருந்திருப்பாரானால் பழைய ஏற்பாட்டு காலத்திலுள்ளோரின் பாவங்களுக்கு அவ்வப்போது தண்டனையைப் பெற்றுக் படுகுழியில் இறங்கியிருப்பார்கள்.

நான்காவது கிறிஸ்துவின் மரணம் வியப்படியும் வகையில் இயற்கைக்கு அப்பாற்பட்டது. மற்ற எல்லா மரணத்தையும் விட கிறிஸ்துவின் மரணம் முற்றிலும் மாறானது. எல்லாவற்றிலும் மேலான மேன்மையை அவர் பெற்றிருந்தார். அவருடைய பிறப்பு மற்ற எல்லாருடைய பிறப்பைப் பார்க்கிலும் மாறுபட்டது. அதேபோல அவருடைய மரணமும் மற்ற எல்லாருடைய மரணத்தைவிட மாறுபட்டது. இதை அவருடைய வார்த்தையிலிருந்தே தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். "நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்து கொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ள மாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு" (யோவான் 10:17,18) என்று சொல்லுகிறார். சுவிசேஷ புத்தகங்களில் சொல்லப்பட்டவைகளைக் கவனமாக ஆராய்ந்து வாசித்தால் அவருடைய மரண வேளையில் சொன்ன வார்த்தைகளுக்கு வேதத்திலிருந்து ஏழு அம்ச நிரூபணங்கள் இருப்பதை நாம் காணமுடியும்.

  1. நமது ஆண்டவர் 'தம்முடைய ஜீவனை ஒப்புவித்தார்" என்பதால் தம்மைச் சந்தித்த எதிரிகளின் மீது அவருக்கு அதிகாரம் இல்லை என்பதால் அல்ல அதை யோவான் 18 ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டபடி, அவர் கைது செய்யப்பட்டச் சம்பவத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம். பிரதான ஆசாரியன், பரிசேயர்கள் ஆகியோர்களிடமிருந்து அனுப்பப்பட்டவர்களும், ஒரு கூட்டம் போர்ச் சேவகர்களும் யூதாசின் தலைமையின் கீழ் அவரைக் கைது செய்யச் கெத்சமேனே தோட்டத்திற்குச் சென்றனர். இதை அறிந்த ஆண்டவராகிய இயேசு "யாரைத் தேடுகிறீர்கள்?" என்றார். அவர்கள் 'நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம்" என்றார்கள். அப்பொழுது நமது ஆண்டவர், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத தெய்வத்துவத்தின் அந்தஸ்தின் பெயரைச் சொன்னார். அந்தப்பெயர் யெஹோவாகிய தேவன் எரிந்து கொண்டிருந்த முட்செடியில் தோன்றி மோசேக்குச் சொன்ன "இருக்கிறவராக இருக்கிறேன்" (I am that I am) என்ற பெயரையேச் சொன்னார். இயேசு "நான்தான்" (I am) என்று சொன்னார். அதைச் சொன்ன மாத்திரத்தில் அவரைக் கைது செய்ய வந்த அனைவரும் "பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்" பீதியடைந்தார்கள். தேவனாயிருந்த அவருக்கு முன்பாக அவர்களால் நிற்க முடியவில்லை. அவர்கள் தரையில் விழுந்த வேளையில் கைது செய்யப்படுவதற்கு இடங்கொடாமல் அந்த இடத்தைவிட்டுத் தப்பிப் போயிருக்கலாம். ஆனால் ஆண்டவராகிய நமது இரட்சகர் தம்மை தாமே அவர்களிடத்தில் ஒப்புவித்தார். அடிக்கப்பபடும்படி கொண்டு செல்லப்படுகிற ஆட்டுக்குட்டியைப் போல அவர் அவர்களுக்கு முன் சென்றார்.
  1. மத்தேயு 27:46 இல் சொல்லப்பட்டிருக்கும் வசனத்தை நமது கவனத்திற்கு கொண்டுவருவோம். "ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்." இதை சொல்லும்பொழுது "மிகுந்த சத்தமிட்டு” சொன்னார் என்று காண்கிறோம். "மிகுந்த சத்தமிட்டு" என்று ஏன் பரிசுத்த ஆவியானவர் நமக்குச் சொல்லவேண்டும்? நிச்சயமாக அதற்குக் காரணம் உண்டு. அதே அதிகாரத்தில் "இயேசு, மகா சத்தமாய் கூப்பிட்டு ஆவியை விட்டார்" (வசனம் 51) என்ற அதே சொற்றொடரை மீண்டும் கூறியதாக வாசிக்கிறோம். அப்படியானால் இந்த சொற்றொடர் எதைக் காட்டுகிறது. இதற்கு முந்திய பகுதில் சொல்லப்பட்டது போன்றே முன்னுரைத்தலின் நிறைவேறுதலாயிருக்கிறது (சங்கீதம் 22:1). ஆகவே அவர் கடந்து சென்றக் கொடிய பாதையினிமித்தமாக அவர் தொய்ந்து போய்விட்டார் என்று அர்த்தமல்ல. அவரது பலம் குன்றிப்போயிற்று என்று அர்த்தமல்ல. அந்தக்கொடிய சூழ்நிலைகள் மத்தியிலும் மரணம் அவரை மேற்கொள்ள இடங்கொடுக்கவில்லை. எல்லா சூழ்நிலைகளும் அவருடைய கட்டுப் பாடிலேயே இருந்தது. அவர் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். சர்வவல்லருக்குத் தம்மை ஒப்புக்கொடுத்தார் (சங்கீதம் 89:19).
  2. ஆண்டவராகிய இயேசு சிலுவையில் கூறிய நான்காவது வார்த்தைக்குப்பின் "தாகமாயிருக்கிறேன்" என்று சொன்னார். இந்த வார்த்தை கூறப்பட்டப் பின்னணியின் வெளிச்சத்தில் நாம் கவனிக்கும்போது, அவர் முற்றும் தம்முடைய கட்டுப்பாடிலேயே இருந்தார் என்பதற்குப் போதிய ஆச்சரியமான ஆதாரங்கள் உள்ளன. "அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்" (யோவான் 19:28) என்று வசனம் கூறுகிறது. இதைக்குறித்த முன்னுரைத்தலில் "என் ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்" (சங்கீதம் 69:21) என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே அந்த தீர்க்கதரிசனம் நிறைவேறும் பொருட்டு "தாகமாயிருக்கிறேன்” என்றார். அவர் தமது முழு கட்டுப்பாட்டிலேயே இருந்தார். கொடிய பாடுகள் மத்தியிலும் அவருடைய சிந்தையில் மிகத்தெளிவுள்ளவராகவே இருந்தார். அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும்போது ஆறாம் மணி நேர முடிவில் அவரைக் குறித்த எல்லா தீர்க்கதரிசினங்களையும் அவர் நினைவு கூர்ந்தார். அவரது வாஞ்சைகள் யாவுமே தமது மரணத்தைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேற்றப்படவேண்டும் என்பதுதான். ஆகவே தீர்க்கதரிசன நிறைவேறுதலாகவே "தாகமாயிருக்கிறேன்" என்று சொன்னார். தம்முடைய ஜீவனை தாமே ஒப்புக்கொடுத்தார்.
  3. பரிசுத்த ஆவியானவர் நமக்குத் தருகிற அடுத்த நிரூபணம் யோவான் 10:18 இல் இயேசு சொல்லிய காரியத்தின் அடிப்படையிலானது. அதே கருத்தில்தான் யோவான் 19:30 இல் சிலுவையில் கூறியதைக் காண்கிறோம். "இயேசு காடியை வாங்கினபின்பு முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்" என்று காண்கிறோம். இந்த வார்த்தைகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளப்போகிற காரியம் என்ன? நமது இரட்சகரின் இச்செயல் எதைக்காட்டுகிறது? இதற்கான பதிலுக்கு நாம் எங்கும் தேடித்திரிய வேண்டியதில்லை. வேதம் மிகத்தெளிவாக எல்லாவற்றையும் விளக்குகிறது. இதற்கு முன்பு நமது ஆண்டவரின் தலை நிமிர்ந்தே இருந்தது. கொடிய பாடுகளின் விளைவால் மயங்கிவிடும் நிலை ஏற்படுமானால் தலை தானாகவே நெஞ்சில் தொங்கிவிடும். நமது ஆண்டவரைப் பொருத்தவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. மயக்க நிலையில் இருந்திருப்பாரானால் தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுக்க முடியாது. இங்கே கையாளப்பட்டிருக்கும் வார்த்தையைக் கவனியுங்கள். "தலை சாய்ந்தது" என்றோ "தலை விழுந்தது" என்றோ சொல்லப்படாமல் "தலையை சாய்த்து" என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. அவருடைய சிந்தையில் அப்பொழுதும் எந்த பாதிப்புமின்றி தெளிவுள்ளவராகவே இருந்தார். அவரது சிந்தையும் செயலும் கடைசிவரை அவருடைய கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்பது தெளிவாகிறது. ஆகவே மிகுந்த தெளிவுடனும், பயபக்தியுடனும் 'தலையைச் சாய்த்து ஆவியை ஒப்புக் கொடுத்தார்" என்று காண்கிறோம். அந்த வேளையிலும் பதட்டமில்லாத மன அமைதி சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போதிலும் அவருடைய மேன்மையான அமைதியைப் பாருங்கள்! சிலுவையில் இந்த மேன்மையான மகத்துவத்தை நூற்றுக்கதிபதி கண்டு "மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்" (மத்தேயு 27:54) என்றான்.
  4. சிலுவையின் அவருடைய கடைசிப் செயலைப்பாருங்கள்! “இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்" (லூக்கா 23:46) என்று வாசிக்கிறோம். இதுவரை இப்படி யாரும் செய்ததில்லை, அல்லது இப்படி யாரும் மரித்ததில்லை. அவர் அடிக்கடிச் சொல்லுகிற அறிக்கைக்கு எவ்வளவு துல்லியமாக இது ஒத்திருக்கிறது என்பதைப் பாருங்கள். "ஒருவனும் அதை (ஜீவனை) என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன். அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரமுண்டு அதை மறுபடியும் எடுத்துக் கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு" (யோவான் 10:17-18). ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இச்செயலில் சிறப்புமிக்கத் தனித்தன்மையைக் காணமுடிகிறது. கிறிஸ்து சிலுவையில் கூறிய வார்த்தையை முதல் இரத்த சாட்சியாகிய ஸ்தேவானின் கடைசி வார்த்தையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஸ்தேவான் தனது மரணவேளையின் விளிம்பில் வந்தபோது "கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்'' (அப்போஸ்தலர் 7:59) என்று சொன்னான். இதற்கு முற்றிலும் மாறாக இயேசு "பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்" என்று சொன்னார். ஸ்தேவானின் ஆவி அவனிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் நமது இரட்சகரின் நிலை அப்படி அல்ல. அவருடைய ஜீவனை அவரிடத்திலிருந்து யாரும் எடுத்துக் கொள்ளமுடியாது. அவர் தம்முடைய ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
  5. இரண்டு கள்வர்கள் உட்பட மூன்று சிலுவைகளிலும் தொங்கிக் கொண்டிருப்போரின் கால்களின் எலும்பை போர்ச்சேவகர்கள் முறிக்க முற்படும் நிகழ்ச்சியிலும் கிறிஸ்துவின் மரணம் சிறப்புத்தன்மை பெற்றது என்பதை ஆதாரத்தோடு காணமுடியும். "அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்பு களையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை" (யோவான் 19:31-33) என்று வாசிக்கிறோம். ஆண்டவராகிய இயேசுவோடு இரண்டு கள்ளர்களும் சிலுவையில் அறையப்பட்டிருந்தனர். மூவரும் ஒரே நேரத்தில்தான் அறையப்பட்டனர். அவரவர்களுக்கான சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த நாளின் கடைசி நேரம் வந்தபோது அந்த இரண்டு கள்ளர்களும் உயிரோடுதானிந்தனர். சிலுவை மரணம் கொடிய வேதனை நிறைந்த மரணம் எனினும் மரணம் துரிதமாக ஏற்படுவதில்லை. மரணம் மெதுவாக தாமதமாகவே ஏற்படும். சிலவேளைகளில் மூன்று நான்கு நாட்கள் வரை உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும். இதை அறிந்திருந்த யூதர்கள் பிலாத்துவை அணுகி சிலுவையில் தொங்கிக் கொண்டிருப்போரின் மரணத்தை துரிதப்படுத்தும் பொருட்டு அவர்களுடைய கால்களின் எலும்பை முறிக்க அனுமதி பெற்றுக்கொண்டனர். போர்ச்சேவகர்கள் வந்து பார்த்தபோது இரண்டு கள்ளர்கள் உயிரோடிருந்தனர். அவர்களுடைய கால் எலும்புகளை முறித்தனர். ஆனால் இயேசுவினிடத்தில் வந்தபோதோ "அவர் மரித்திருந்ததைக்கண்டு அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை” ஆகவே ஆண்டவராகிய இயேசுவின் ஜீவன் அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவராகவே ஒப்புக்கொடுத்தார் என்பதற்கு இது ஒரு ஆதாரம் அல்லவா.
  6. கிறிஸ்துவின் மரணம் வியத்தகு வகையில் இயற்கைக்கு அப்பாற் பட்டது என்பதை விளக்கக் கடைசி எடுத்துக்காட்டாக அவருடைய மரணத்தைத் தொடர்ந்து நடந்த ஒரு ஆச்சரியமான நிகழ்ச்சியை நாம் கவனிக்கலாம். "அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. கல்லறைகளும் திறந்தது" (மத்தேயு 27:51,52) என்று வாசிக்கிறோம், கொல்கதாவின் கொடுமுடியில் கண்ட மரணம் சாதாரண மான மரணம் அல்ல. அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் சாதாரண காரியங்கள் அல்ல. முதலாவதாக தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது. மேலிருந்து கிழிந்தது என்பதால் பரலோகத்திலிருந்து வந்த கரம் அதைக் கிழித்து தேவாலயத்தில் பூமிக்குரிய தேவ சிங்காசனத்தை தொழுது கொள்வோர் காணாதவண்ணம் அமைந்திருந்த திரை கிழிக்கப்பட்டதின் மூலம் யாவரும் காணவகை செய்தது. பரலோகத்திலுள்ள மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் யாவரும் பிரவேசித்து தேவனைக் காணும் சிலாக்கியம் பெறும் வழி உண்டாயிற்று. தேவனுடைய குமாரனின் சரீரம் கிழிக்கப்பட்டதின் காரணமாக மகா பரிசுத்த ஸ்தலத்திற்குச் செல்லும் புதிய மார்க்கம் திறவுண்டது. அடுத்து பூமி அதிர்ந்தது என்று காண்கிறோம். ஏதோ குறிப்பிட்ட இடத்தில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி அல்ல. பெரிய அளவிலான பூமி அதிர்ச்சி அல்ல. பூமி முழுவதும் அதிர்ந்தது. அதனுடைய அஸ்திபாரங்களும் அதிர்ந்தன. மிகக் கொடூரமானவைகள் தேவ குமாரனுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே முழுபூமியும் அதிர்ந்தது. "கன்மலைகள் பிளந்தது" இயற்கையின் வல்லமை கிறிஸ்துவின் மகாபெரிய வல்லமையால் மேற்கொள்ளப்பட்டது. கடைசியாகக் "கல்லறைகள் திறந்தன " என்று காண்கிறோம். மரணமாகிய சாத்தானின் வல்லமை உடைத்து நொறுக்கப்பட்டதை இது காட்டுகிறது. பாவப்பரிகார மரணத்திற்கு முன்பாக வெளிப்படையான எந்த காரியமும் நிலைநிற்க முடியவில்லை.

தன்னைக் கைது செய்ய வந்தவர்களிடம் தன்னை ஒப்புக்கொடுத்தத் தன்மை, "மிகுந்த சத்தத்தோடு" கூப்பிட்டு தம்முடைய ஆவியை ஒப்புக் கொடுத்தத் தன்மை, கொடிய வேதனையை அனுபவித்த சூழ்நிலையின் மத்தியிலும் "எல்லாம் முடிந்தது என்று அறிந்து" என்று கூறியதிலிருந்து கடைசிவேளை வரை அவர் தம்முடைய சிந்தையின் தெளிவான கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருந்தார் என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன. "மேலும் தலையைச் சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார்" என்ற நிலை, போர்ச்சேவகர்கள் மரணத்தைத் துரித்தப்படுவதற்கு கால்களின் எலும்பை முறிப்பதற்கு வரும்போது அதற்கு முன்பாகவே மரித்திருந்த தன்மை இவை எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கும்பொழுது இவையாவும் அவருடைய ஜீவனை யாரும் எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்தார் என்பதற்கு நிரூபணங்களாக இருக்கின்றன. மேலும் அவர் மரித்த மாத்திரத்தில் தேவாலயத்தின் திரைச்சீலை கிழிந்த தன்மை, பூமி அதிர்ந்த நிலை, கன்மலை பிளந்த தன்மை, கல்லறைகள் திறந்த தன்மை போன்ற வெளிப்படையான ஆச்சரியமான நிகழ்ச்சிகள் யாவும் அவரது மரணம் வியத்தகு வகையில் இயற்கைக்கும் அப்பாற்பட்டது என்பதில் எந்த முரண்பாடுமில்லை. நூற்றுக்கதிபதி "மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்" என்று சொன்னதுபோலவே நாமும் சொல்ல முடியும். ஆகவே கிறிஸ்துவின் மரணம் தனித்துவம் வாய்ந்தது, ஆச்சரியமானது, இயற்கைக்கும் அப்பாற்பட்டது. தொடர்ந்து வரும் அதிகாரங்களில் அவர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த வேளையில் அவர் மொழிந்தருளிய வார்த்தைகளைக் கேட்போம். அந்த வார்த்தைகள் சிலுவையில் கொடிய பாடுகளை அனுபவித்த ஒருவரின் மகா மேன்மையை வெளிப்படுத்துகிறது. அந்த வார்த்தைகள் இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிக்கிறது. அவர் அனுபவித்த பாடுகள், அவற்றின் நோக்கங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அந்த தெய்வீக மரணம் எல்லாவற்றிற்கும் போதுமானதாக இருக்கிறது என்பதை அறிவித்துக் கொண்டேயிருக்கிறது.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.