இயேசுவை நோக்கி: ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: “இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்” (லூக்கா 23:42:43).

கிறிஸ்து சிலுவையில் அருளிய இரண்டாம் வார்த்தை, மரித்துக் கொண்டிருந்த கள்ளனின் விண்ணப்பத்திற்கு மறுமொழியாகச் சொல்லப் பட்டதாகும். இரட்சகரின் வார்த்தைகளை தியானிக்குமுன் அவைகளுக்குக் காரணமாயிருந்தவைகளை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.

நமது மகிமையின் தேவன் இரு கள்வர்களுக்கு மத்தியில் சிலுவையில் அறையப்பட்டது ஏதோ ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. ஆண்டவரால் ஆளுகை செய்யப்படும் உலகில் எதுவும் தற்செயலாய் நிகழ்வது அல்ல. உலக சரித்திரத்திற்கு மையமாக விளங்கும், எல்லா நாட்களுக்கும் மேலான அந்த நாளில் நடந்த, எல்லா நிகழ்ச்சிகளுக்கும் மேலான அந்த நிகழ்ச்சி நிச்சயமாக ஒரு தற்செயலான காரியமாக இருக்கமுடியாது. தேவன் தாமே தலைமையேற்று இந்நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். தம் குமாரன் எப்பொழுது, எங்கே, எப்படி, யாரோடு மரிக்க வேண்டுமென்பதை தேவன் நித்திய காலமாய் தீர்மானித்து வைத்திருந்தார். எதுவும், தற்செயல் நிகழ்வுக்கோ, மனிதனின் சலன புத்திக்கோ விட்டுவிடப்படவில்லை. தேவன் தீர்மானித்திருந்த அனைத்தும் அவர் திட்டம் பண்ணினபடி அப்படியே நடந்தது. அவர் நித்திய நோக்கத்தின்படி அன்றி ஒன்றும் நடைபெறவில்லை. மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியமும் ''உம்முடைய கரமும், உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள்” (அப்போஸ்தலர் 4:27).

நம் ஆண்டவராகிய இயேசுவை இரு குற்றவாளிகள் மத்தியில் சிலுவையில் அறையவேண்டும் என்று பிலாத்து உத்தரவிட்டபோது, தன்னை அறியாமலே தேவனின் நித்திய நியமத்தையும், தீர்க்கதரிசன வார்த்தையையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தான். இந்த ரோம அதிகாரி கட்டளை கொடுப்பதற்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேவன், ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக, தம் குமாரன் “அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப் பட்டார்" (ஏசாயா 53:12) என்று அறிவித்தார். தேவனின் பரிசுத்தர், அசுத்த மானவர்களோடு எண்ணப்படுவதும், சீனாய் மலையில் தன் விரலினால் கற்பலகைகளில் கற்பனைகளை எழுதியவர் கற்பனைகளைக் கைக் கொள்ளாத குற்றவாளிகளோடு நியமிக்கப்படுவதும் நிகழ முடியாத ஒரு காரியமாகவும், தேவகுமாரன் குற்றவாளிகளோடு தண்டனை அனுபவிப்பது சிந்தனைக்கு அப்பாற்பட்ட காரியமாகவும் தோன்றியது. ஆனால் அத்தனை காரியங்களும் அப்படியே நிறைவேறின. ஆண்டவரின் ஒரு வார்த்தையும் தரையிலே விழுந்து போவதில்லை. "கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது" (சங்கீதம் 119:89). கர்த்தர் திட்டம் பண்ணினபடியும், அவர் கூறி அறிவித்தபடியும் காரியங்கள் அப்படியே நிறைவேறின.

கர்த்தர் தம் அன்புக்குமாரன் இரு குற்றவாளிகள் மத்தியில் சிலுவையில் அறையப்பட வேண்டும் என ஏன் தீர்மானம் பண்ணினார்? நிச்சயமாகவே கர்த்தர் ஒரு நல்ல, சிறந்த காரணத்தோடு செயல்பட்டார். ஆனால் அதை நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். தேவன் ஒருபோதும் தன்னிச்சையாகச் செயல்படுபவர் அல்ல. அவர் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு நல்ல நோக்கம் உண்டு. ஏனெனில் அவரது அனைத்து கிரியைகளும் எல்லையில்லா ஞானத்தினால் செயல்படுத்தப்படுகின்றன. இக்குறிப்பிட்ட நிகழ்ச்சியின் அநேக காரியங்கள் நம் உள்ளத்தில் பல கேள்விகளை எழுப்புகின்றன. அளவிடமுடியாத அவமானத்தின் ஆழத்தில் இறங்கியதை முழுமையாக சித்தரிக்கும்படியாக நம் தேவன் இரு கள்வர்கள் மத்தியில் சிலுவையில் அறையப்படவில்லையா? பிறப்பின் போது மிருகங் களால் சூழப்பட்டிருந்தவர் தற்போது தன் இறப்பில் மனுக்குலத்தின் இழிவானவர்களோடு எண்ணப்பட்டிருக்கிறார். நாம் இருக்கவேண்டிய இடத்தைத் தான் நமக்குப் பதிலாக அவர் ஏற்றுக்கொண்டார் என்பதைக் காண்பிப்பதற்காக நம் மீட்பர் அக்கிரமக்காரரோடு எண்ணப்படவில்லையா? நமக்கு சோவேண்டிய இடத்தை அவர் ஏற்றுக்கொண்டார். அது, அவமானத்தின் இடம், அக்கிரமக்காரர்களின் இடம் மற்றும் குற்றவாளிகள் மரண தண்டனைக்கு ஒப்புவிக்கப்படும் இடம் என்பதைத் தவிர வேறு என்ன இடமாக இருக்க முடியும்? மேலும் நிகரேயில்லாத ஒருவர் மக்கள் பார்வையில் எவ்வாறாக அசட்டை பண்ணப்பட்டு, புறக்கணிக்கப்படுகிறார் என்பதைக் காண்பித்து பிலாத்து இவரை வேண்டுமென்றே இழிவுபடுத்தவில்லையா? மேலும் அந்த மூன்று சிலுவை, மற்றும் அதில் தொங்கினவர்களில் 'மீட்பு மற்றும் மனிதனின் எதிர்ச்செயல்' என்ற நாடகத்தின் தெளிவான, திடமான பிரதிபலிப்பான இரட்சகரின் மீட்பு, பாவியின் மனந்திரும்புதல், விசுவாசம் மற்றும் பாவியின் நிந்தனை, புறக்கணிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டு வதற்காக அவர் இருகள்வர்களோடு சிலுவையில் அறையப்படவில்லையா?

கிறிஸ்து இருவர்களுக்கு மத்தியில் சிலுவையில் அறையப்பட்டு, ஒருவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒருவனால் புறக்கணிக்கப்பட்ட செயலிலிருந்து, அவர் வல்லமையுள்ள இறைத்தன்மையுள்ள கர்த்தர் என்ற மேலான பாடத்தைக் கற்றுக்கொள்ளுகிறோம். இரு குற்றவாளிகள் ஒன்றாக சிலுவையில் அறையப்பட்டனர். இருவரும் கிறிஸ்துவிற்கு சம நெருக்கத்தில் இருந்தனர். இருவரும் அந்த பயங்கரமான ஆறுமணி நேரத்தில் நடந்த காரியங்களைக் கண்டனர், கேட்டனர். இருவரும் பிரபலமான குற்றவாளிகள். இருவரும் பயங்கர வேதனை அனுபவித்தனர். இருவரும் மரித்துக் கொண்டிருந்தனர். இருவருக்கும் உடனடியாக மன்னிப்பு தேவைப்பட்டது. ஒருவன் தான் வாழ்ந்த வண்ணமாகவே கடினப்பட்டு, மனந்திரும்பாதவனாய் தன் பாவத்திலே மரித்தான். மற்றவனோ தன் அக்கிரமத்திலிருந்து மனந்திரும்பினான், கிறிஸ்துவை விசுவாசித்தான், அவருடைய இரக்கத் திற்காக கெஞ்சினான். பரதீசிற்குச் சென்றான். இது கர்த்தரின் இறை வல்லமையால் நடந்தது என்பது தவிர வேறு என்ன விளக்கம் கொடுக்க இயலும்? இன்றும் இதே காரியம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரே விதமான சூழ்நிலை மற்றும் நிலைமைகளில் ஒருவர் மனம் உருகுகிறது மற்றவர் அசையாமல் இருக்கிறார். ஒரே பிரசங்கத்தை ஒருவர் அலட்சியமாகவும், மற்றவர் திறந்த கண்களோடு, தன் தேவையும், சித்தமும் தேவன் அருளும் இரக்கத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு முன்னேறிச் செல்லும் வண்ணமாகக் கூர்ந்து கவனிப்பார். ஒருவருக்கு சுவிசேஷம் வெளிப்படுத்தப்படுகிறது;

மற்றவருக்கு மறைக்கப்படுகிறது. ஏன்? நாம் சொல்லக்கூடியதெல்லாம் “ஆம். பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்திற்குப் பிரியமாயிருந்தது" என்பது மட்டுமே. கர்த்தரின் இறைவல்லமை மனிதனின் பொறுப்புகளை அழிக்க முற்படுவதில்லை. இவ்விரண்டையும் வேதம் தெளிவாகக் கற்றுத்தருகிறது. இவைகளைப் புரிந்து ஒன்றிணைத்துக் கூற இயலுமோ இயலாதோ ஆனால் அவற்றை விசுவாசித்து போதிப்பதே நமது கடமையாகும். இவைகளைப் போதிக்கும்போது நம்மைக் கேட்பவர்களுக்கு நாம் முரண்பாடான கருத்துக்களை கூறுவதுபோல் தோன்றலாம். ஆனால் அதினாலென்ன தவறு? காலம் சென்ற சி.எச்.ஸ்பர்ஜன், 1 தீமோத்தேயு 2:3-4 வசனங்கள் மீது பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்."வசனம் சொல்லுகிறது. நானும் விசுவாசிக்கிறேன்." எல்லா மனுஷரும் இரட்சிக்கப் படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராய் இருக்கிறார். ஆனால் ஒருவன் தன் குமாரனை விசுவாசித்து ஏற்றுக் கொள்ளாதபட்சத்தில் பிதா அவனை இரட்சிக்க சித்தம் கொள்ளமாட்டார். இவ்வாறு செய்யமாட்டேன் எனப் பலமுறை கூறியுள்ளார்.

ஒருவன் தன் பாவங்களை விட்டு முழுஇருதயத்தோடு அவரிடத்தில் திரும்பினாலன்றி அவனுக்கு இரட்சிப்பு இல்லை என்பது எனக்கும் தெரியும். தம் முடிவில்லாத அன்பினால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை மட்டுமே அவர் இரட்சித்து தம் நித்திய வல்லமையினால் மீட்டுக்கொள்ளுவார் என்பதும் எனக்குத் தெரியும். இவ்விரண்டு காரியங்களும் எவ்வாறு ஒன்றோடொன்று இசைந்து செல்லும் என்பது என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு காரியம்.'' பிரசங்கிகளின் அரசனான இவர் தொடர்ந்து கூறுகிறார். "ஒரு பகுதி யிலுள்ள தேவனுடைய வார்த்தையை இன்னொரு பகுதியில் உள்ள வார்த்தையோடு ஒத்துப்போகச் செய்ய முடியுமோ, முடியாதோ, தேவனுடைய வார்த்தையை அதில் இருக்கிறபடியே ஏற்றுக்கொண்டு இதுவரை பிரசிங்கித்தவைகளிலும், இனி பிரசிங்கிக்கப் போகிறவைகளிலும் உறுதியாயிருப்பேன்." கர்த்தரின் வல்லமை மனிதனின் பொறுப்புகளை அழிக்கும் ஒன்றல்ல என மறுபடியும் கூறுகிறேன். ஆத்தும இரட்சிப்பிற்காகக் கர்த்தர் ஏற்படுத்தியுள்ள எல்லா வழிமுறைகளையும் ஊக்கத்தோடு செயல்முறைப்படுத்தவேண்டும். 'சர்வ சிருஷ்டிக்கும்' சுவிசேஷத்தை அறிவிக்க நாம் கட்டளை பெற்றுள்ளோம். கிருபை இலவசமானது. கிறிஸ்து அவரண்டை வருகிற ஒருவனையும் புறம்பே தள்ளுவதில்லை. நாம் எல்லாவற்றையும் செய்தபின், நட்டு, நீர்ப்பாய்ச்சின பின் கர்த்தரே “விளையச்செய்கிறவர்” இதைத் தன் மகத்துவமான பிரியத்தின்படியும் சித்தத்தின்படியும் செய்கிறார்.

மரித்துக்கொண்டிருக்கும் கள்ளனின் இரட்சிப்பில் வேதத்தில் வேறெங்கும் காணக்கூடாத 'வெற்றியுள்ள கிருபை' யின் காட்சியைத் தெளிவாகக் காண்கிறோம். நம் தேவன் கிருபையின் தேவன். அவரின் கிருபையின் மூலமாகவே நமக்கு இரட்சிப்பு வந்தது. "கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்" (எபே.2:8) ஆரம்ப முதல் முடிவு வரை எல்லாம் கிருபையினாலே ஆயிற்று. நமது இரட்சிப்பைத் திட்டம் பண்ணியது கிருபை, இரட்சிப்பை அருளியது கிருபை, அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களில் செயல்பட்டு அவர்கள் இருதயக்கடினம், பிடிவாதமான விருப்பம், மனதின் பகைமை ஆகியவற்றை மேற்கொண்டு இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும் மனவிருப்பத்தை அளிப்பதும் கிருபையே. கிருபை ஆரம்பிக்கிறது, கிருபை தொடர்கிறது. கிருபை நம் இரட்சிப்பைப் பூரணப்படுத்துகிறது.

கிருபையின் மூலம் இரட்சிப்பு - உன்னதமான எதிர்க்கமுடியாத இலவச கிருபை, புதிய ஏற்பாட்டில் எடுத்துக்காட்டு மூலமாகவும், கொள்கை மூலமாகவும் விவரித்துக் காட்டப்பட்டுள்ளது. ஒருவேளை நம் உள்ளத்தைத் தாக்கக்கூடிய இருமுக்கியமான நபர்கள் தர்சுபட்டணத்தானாகிய சவுலும், மரித்துக்கொண்டிருக்கும் கள்ளனுமே. இரண்டாவதான நபரின் வாழ்க்கை நிகழ்வு முதல் மனிதனுடையதைக் காட்டிலும் குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் புறஜாதிகளின் அப்போஸ்தலனான பவுலாக மாறிய சவுலின் காரியத்தில் அவனுடைய ஆரம்பகாலம் எல்லாராலும் பின்பற்றப்படக்கூடிய சீரிய நன்னடத்தை உள்ளதாகக் காணப்பட்டது. அநேக ஆண்டுகளுக்குப் பின்பு இந்த அப்போஸ்தலன் தான் இரட்சிக்கப்படுமுன் இருந்த நிலையைப்பற்றிக் கூறும்பொழுது "நியாயப் பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன் (பிலிபியர் 3:6) எனக் கூறுகிறான். அவன் 'பரிசேயரில் பரிசேயன்' அப்பழுக்கற்ற நடவடிக்கையும் சரியான நடத்தையும் உடையவன். மனமாற்றத்திற்குப் பின்பு அவன் வாழ்க்கை சுவிசேஷத்திற்கேற்ற நீதியுடையதாய் மாறியது. கிறிஸ்துவின் அன்பினால் நெருக்கி ஏவப்பட்ட வனாய் பாவிகளுக்கு சுவிசேஷத்தைக் கூறி அறிவிப்பவனாகவும், நீதிமான்களைக் கட்டி எழுப்புகிறனாகவும் கடினமாய்ப் பிரயாசப்பட்டான்.

அப். பவுல் கிறிஸ்தவ வாழ்க்கையின் மிகச்சீரிய இலட்சியங்களின் உன்னத நிலைக்கு மிக அருகாமையில் வந்தவன் என்பதையும் மற்ற எல்லா பரிசுத்தவான்களைக் காட்டிலும் தன் தலைவரை மிக நெருக்கமாய் பின்பற்றினான் என்பதையும் வாசகர்கள் சந்தேகத்திற்கிடமின்றி ஒத்துக்கொள்வார்கள். மனமாற்றமடைந்த கள்வனின் நிலை முற்றிலும் மாறுபட்டது. மனமாற்றத்திற்கு முன்பு எந்த ஒரு ஒழுக்கமான வாழ்வோ, அல்லது மனமாற்றத்திற்குப் பின்பு எந்த ஒரு ஊழியமோ, செயல்பாடோ இல்லை. மனமாற்றத்திற்கு முன்பு அவன் மனிதசட்டத்தையோ, ஆண்டவரு டைய சட்டத்தையோ மதிக்கவில்லை. மனமாற்றமடைந்தபின் கிறிஸ்துவின் ஊழியத்தில் ஈடுபட எந்தவொரு வாய்ப்புமின்றி மரித்தான். இதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். ஏனெனில் அநேகர் இவ்விரண்டு காரியங்களும் இரட்சிப்பிற்கு ஏதுவானவை என எண்ணுகிறார்கள். தேவன் நம்மை அவர் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளும் முன்னதாக நாம் ஒரு சீரிய நடக்கையை மேற்கொண்டு நம்மைத் தகுதிப்படுத்த வேண்டும் எனவும், தற்காலிகமாக நம்மை அவர் ஏற்றுக்கொண்ட பிறகு தகுதி காண் பருவத்தில் வைக்கப்பட்டு நாம் குறித்த அளவு மற்றும் உயர்தன்மையுள்ள நற்காரியங்கள் செய்யாவிடில் கிருபையிலிருந்து விழுந்து அழிந்துபோவோம் எனவும் கருதப்படுகிறது. ஆனால் மரிக்கும் கள்ளனின் கணக்கில் மனமாறுதலுக்கு முன்பும், பின்பும் எந்த ஒரு நற்காரியமும் இல்லை. அவன் இரட்சிக்கப்பட்டிருப்பானானால் அது கர்த்தருடைய பெரிதான கிருபையால் மட்டுமே என்ற முடிவுக்கு நாம் வருகிறோம்.

மனுஷீக சிந்தையின் நீதியின் குறுக்கீட்டினால் ஆண்டவரின் கிருபைக்கு வரவேண்டிய மகிமை திருடப்படுகிறது என்ற நிலைபாட்டிற்கும் இந்த மரித்துக்கொண்டிருக்கும் கள்ளனின் இரட்சிப்பு முற்றுப்புள்ளி வைக்கிறது. காணாமற்போன பாவிகளை இரட்சிக்கும் செயலின் மகிமையை ஒப்பற்ற ஆண்டவரின் கிருபைக்குக் கொடாமல், கிறிஸ்தவர்கள் என சொல்லிக் கொள்ளும் அநேகர், மனித செல்வாக்கு, செயல்பாடு மற்றும் சூழ்நிலைகளைக் காரணம் காட்டுகின்றனர். பிரசங்கிமார், தெய்வாதீனம், சாதகமான சூழ்நிலைகள் அல்லது விசுவாசிகளின் ஜெபமே முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது. நாம் தப்பாகப்புரிந்து கொள்ளப்படக் கூடாது. ஆண்டவர் பாவியின் மனந்திரும்புதலுக்கு அநேக வழிமுறைகளைப் பயன்படுத்த விருப்பம் உள்ளவராக இருக்கிறார் என்பது உண்மையே. நமது ஜெபங்களையும்,முயற்சியையும் ஆசீர்வதித்து, அவை பாவிகளைக் கிறிஸ்துவிடம் வழிகாட்டுவதற்கு நமக்கு அருள்பாலிக்கிறார். அநேக முறை அவர் தம் தெய்வீகத்தன்மையின் மூலம் தேவனற்ற மனிதனை எழுப்பி, விழிப்படையச் செய்து தன் நிலையை உணர்ந்து கொள்ளச் செய்கிறார். இவைகளுக்கு எதிராக தேவன் தன்னை அடைத்துக்கொள்பவரல்ல. மனித செயல்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவரும் இல்லை. அவர் கிருபை சர்வ வல்லமையுள்ளது. மனித செயல்பாடுகள் இல்லாத நிலையிலும், பாதகமான சூழ்நிலை மத்தியிலும் அவர் விரும்பும் போது கிருபை இரட்சிப்பைக் கொண்டு வருகிறது. மனந்திரும்பிய கள்ளனின் வாழ்க்கையில் நடந்தது இதுவே. கவனமாய்ப் பார்ப்போம்.

கிறிஸ்து தன்னையும், மற்றவர்களையும் இரட்சிக்கும் வல்லமையை இழந்து விட்டாரோ என்று வெளிப்படையாகத் தோன்றின நேரத்தில் அவனுடைய மனமாற்றம் நிகழ்ந்தது. அந்தக் கள்வன் இரட்சகரோடு எருசலேம் வீதிகளில் நடந்து வந்தான். அவர் சிலுவையின் பாரத்தின் கீழ் அமிழ்ந்ததையும் கண்டான். திருடுவதையும், கொள்ளையடிப்பதையுமே தன் வேலையாகக் கொண்டிருந்த ஒருவன் ஆண்டவராகிய இயேசுவின்மீது தன் கண்களைப் பதிப்பது இதுவே முதல் தடவையாக இருப்பது சாத்தியம். தற்போது அவரைப் பலவீனம் மற்றும் அவமானத்தின் சூழ்நிலையின் கீழ் பார்க்கிறான். அவர் பகைஞர் அவர்மீது வெற்றி கொண்டனர். அநேகமாக அவரது நண்பர்கள் அனைவருமே அவரைக் கைவிட்டனர். பொது மக்களின் கருத்து ஒரேவிதமாக அவருக்கு விரோதமாயிருந்தது. அவர் சிலுவையி லறையப்படுவது அவருடைய மேசியா தன்மைக்கு முற்றிலும் மாறுபட்ட செயலாகவே கருதப்பட்டது. அவருடைய தாழ்மையான நிலை ஆரம்ப முதலே யூதருக்கு இடறுதலாகவே இருந்தது. தற்போது அவரது மரணத்தின் சூழ்நிலை எல்லோருக்கும், சிறப்பாக அவரை முதல்முதலாக இந்த நிலையில் பார்க்கும் ஒருவனுக்கும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும். அவரை விசுவாசித்தவர்களையே சிலுவைமரணம் சந்தேகிக்கச் செய்தது. அந்தக்கூட்டத்தில் விரிக்கப்பட்ட கரங்களோடு நின்று "இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" (யோவான் 1:29) என்று சத்தமிட்டுக் கூப்பிட ஒருவர் கூட இல்லை. ஆனால் தன் விசுவாசப் பாதையின் குறுக்கே வந்த தடைகள் மற்றும் கஷ்டங்களைப் பொருட்படுத் தாது அந்தக் கள்ளன் இயேசுவின் இறையாண்மை மற்றும் மீட்பின் தன்மையைக் கண்டுணர்ந்தான். இவ்விதமான சூழ்நிலையிலிருந்த ஒருவனுடைய விசுவாசம் மற்றும் ஆவிக்குரிய புரிந்து கொள்ளுதலுக்கு நம்மால் என்ன காரணம் காட்ட முடியும்? மரித்துக் கொண்டிருந்த கள்ளன், வேதனைப்பட்டு, இரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்ட மனிதனைத் தன் தேவனாக ஏற்றுக்கொண்டதை எவ்வாறு விவரிக்க இயலும்? தெய்வீக இடைபடுதலையும், இயற்கைக்கு அப்பாற்பட்ட செய்கையையும் தவிர வேறொன்றையும் காரணம் காட்டமுடியாது. கிறிஸ்துவின் மீதான அவன் விசுவாசம் கிருபையின் அதிசயமே!

கள்ளனின் மனமாற்றம் அந்தநாளின் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புத நிகழ்வுகள் நடப்பதற்கு முன்னால் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தகாரம் ஏற்படுமுன், "முடிந்தது” என்ற வெற்றி முழக்கம் கேட்குமுன் தேவாலயத்தின் திரைச்சீலை கிழியுமுன், பூமியதிர்ச்சியும், மலை அதிர்வும் ஏற்படுமுன், நூற்றுக்கு அதிபதி “இவர் மெய்யாகவே தேவனுடைய குமாரன்” என அறிக்கை பண்ணுமுன் அவன் "ஆண்டவரே என்னை நினைத்தருளும்" எனக்கதறுகிறான். ஆண்டவருடைய மகத்துவமான கிருபை உயர்த்தப்படவும், அவருடைய தெய்வீக வல்லமை கண்டறியப்படவும், ஒரு நோக்கத்தோடு அவனுடைய மனமாறுதல் இவைகளுக்கு முன்னதாக இருக்கும்படி திட்டம் பண்ணியிருந்தார். அவருடைய சமுகத்தில் எந்த ஒரு மாம்சீகமான காரியமும் மகிமையடையக் கூடாதென்பதற்காக ஆண்டவர் மிகவும் பாதகமான சூழ்நிலையிலிருந்த இந்தக்கள்ளனைத் தெரிந்தெடுத்து இரட்சிக்கத் தீர்மானித்தார். “இரட்சிப்பு கர்த்தருடையது" என்ற உண்மையையும், காரண கர்த்தாவாக செயல்படும் மனிதன் தெய்வீக செயல்பாட்டிற்கு மேலாகத் தன்னை உயர்த்தக்கூடாது என்பதையும், உண்மையான எந்த ஒரு மனமாற்றமும் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாட்டின் நேரடியான விளைவு என்பதையும் கற்றுக்கொடுக்கவே, ஆண்டவர் வேண்டுமென்றே அனுகூல மற்ற சூழ்நிலைகளையும், நிலைமைகளையும் ஒன்றிணைத்தார்.

தற்போது, கள்ளன், அவனுடைய வெவ்வேறு வார்த்தைகள், இரட்சகரிடம் வைத்த வேண்டுகோள் மற்றும் ஆண்டவரின் பதில் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஆராய்வோம். ''இயேசுவை நோக்கி : ஆண்டவரே, நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி, இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் (லூக்கா 23:42-43).

1 இங்கு பாவியின் ஒரு பிரதிநிதியைக் காண்கிறோம்.

இந்த மனிதனின் மனமாற்றத்தை ஒரு மாதிரிச் செயலாகவும், இந்தக்கள்வனை ஒரு மாதிரிப் பாத்திரமாக எடுத்துக் கொள்ளும்வரை இந்நிகழ்ச்சியின் மையப்பகுதியை சென்றடையமுடியாது. மனந்திரும்பும் கள்ளனின் பழைய சுபாவம் மனந்திருந்தாத பாவியைவிட மேலானதாகவும் சிறந்ததாகவும் இருந்ததாக சிலர் எடுத்துக்காட்ட முயற்சிக்கின்றனர். ஆனால் இது நிகழ்வின் உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்லாது, அவன் மனமாற்றத்தின் விநோதமான மகிமையை அகற்றி விடுவதாகவும் ஆண்டவரின் கிரியையின் அதிசயத்தை அழித்து விடுவதாகவும் இருக்கிறது. ஒருவன் மனந்திரும்பி விசுவாசித்தற்கு முன்பு இருந்த நாட்களில் அந்த இரு கள்ளர்களுக்குமிடையில் குறிப்பிடத்தக்க எந்த ஒரு வித்தியாசமுமில்லை என்பது மிக முக்கியமான காரியம். அவர்களுடைய சுபாவம், வரலாறு மற்றும் சூழ்நிலையில் ஒன்றாகவே இருந்தனர்.

வேதனை அனுபவித்துக் கொண்டிருந்த இரட்சகரை இருவருமே நிந்தித்தார்கள் என்று கூறுவதில் பரிசுத்த ஆவியானவர் மிக கவனமாயிருக்கிறார். "அப்படியே பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் மூப்பரும் பரியாசம் பண்ணி, மற்றவர்களை ரட்சித்தான். தன்னைத்தான் ரட்சித்துக் கொள்ளத் திராணியில்லை. இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே. அவர் இவன் மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள் (மத்தேயு 27:41-44).

இந்தக் கள்ளனின் நிலையும், செயலும் உண்மையாகவே மிகப் பயங்கரமானது. நித்தியத்தின் ஓரத்தில் நின்று கிறிஸ்துவின் பகைஞரோடு சேர்ந்து அவரைப் பரிகசிக்கும் மிகப்பெரிய பாவத்தை செய்கிறான். இது ஒப்பிடமுடியாத நீசத்தன்மை! நினைத்துப் பாருங்கள். ஒரு மனுஷன் தன் மரணத்தருவாயில் வேதனை அனுபவிக்கும் இரட்சகரைப் பரியாசம் செய்கிறான். இது எப்பேர்ப்பட்ட மனித சீரழிவையும், கர்த்தருக்கு விரோதமான மாம்ச சிந்தையின் பகையையும் வெளிக்காட்டுகிறது! வாசகரே சுபாவத்தின்படி இதே துன்மார்க்கம் உனக்குள்ளும் வாசமாயிருக்கிறது. தெய்வீகக் கிருபையின் அற்புதம் உன்னில் நிகழ்ந்தாலொழிய கர்த்தருக்கும் கிறிஸ்துவிற்கும் விரோதமான இதே பகை உன் இருதயத்திலும் தங்கியிருக்கும். நீ அப்படி நினைக்காமலிருக்கலாம், அப்படி உணராமலிருக் கலாம், அப்படி நம்பாமலிருக்கலாம். ஆனால் இது, உண்மை நிலையை மாற்றப்போவதில்லை. பொய்யுரையாத அவரின் வார்த்தை கூறுகிறது. "எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது'' (எரே.17:9). இந்தக்கூற்று உலகனைத்திற்கும் பொருந்தக்கூடியது. சுபாவப்படி பிறக்கும் ஒவ்வொரு இருதயத்தின் நிலையையும் இது விவரிக்கிறது. மறுபடியும் நம் சத்தியவேதம் கூறுகிறது.

"எப்படியென்றால், மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை. அது தேவனுடைய நியாயப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும் கீழ்ப்படியக் கூடாமலும் இருக்கிறது" (ரோமர் 8:7). இதுவும் ஆதாமின் சந்ததியின் நிலையைத் தெளிவாகக் கண்டறிகிறது. “வித்தியாசமே இல்லை. எல்லோரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களானோம்" (ரோமர் 3:22,23) உச்சரிக்கக்கூடாத அளவு பயபக்திக்குரிய காரியமாயிருந்தபோதிலும் அழுத்திக் கூறப்படவேண்டியுள்ளது. நமது நம்பிக்கையற்ற தன்மையை உணர்ந்து கொள்ளும் வரை நமக்கு ஒரு தெய்வீக இரட்சகர் தேவை என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. நாம் முழுவதுமாய் கெட்டுப்போய், வியாதியாய் இருப்பதைக் கண்டுகொண்டால் ஒழிய நாம் பெரிய வைத்தியரிடம் விரைந்து செல்லமாட்டோம். இந்தக் கள்ளனில் நம்முடைய வாழ்க்கை சித்தரிக்கப்பட்டிருக்கிறதைக் காணும்போது மட்டுமே அவனோடு சேர்ந்து, "ஆண்டவரே என்னை நினைத்தருளும்" என்று கூற முடியும்.

நாம் உயர்த்தப்படுமுன்னதாகத் தாழ்த்தப்பட வேண்டும். இரட்சிப்பின் வஸ்திரத்தை அணிந்து கொள்ளுமுன் சுயநீதியென்னும் அழுக்கும் கந்தையுமான வஸ்திரத்தைக் களைந்தெறிய வேண்டும். நித்திய வாழ்வு என்னும் பரிசைப் பெறுவதற்கு முன், பிச்சைக்காரரைப் போல வெறுங்கையாக ஆண்டவரிடம் வரவேண்டும். அவருக்கு முன் இழந்துபோன பாவியின் இடத்தில் இருக்கும்போது நாம் இரட்சிக்கப்படுவோம். ஆம், நாம் ஆண்டவரின் குடும்பத்தில் இடம் பெற்றுக்கொள்ளுமுன் நாம் கள்ளர் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். "ஆனால் நான் ஒரு கள்ளன் அல்ல. நான் இருக்கவேண்டியபடி இருக்கவில்லை என ஒத்துக்கொள்ளுகிறேன்.

நான் பூரணவானவனல்ல. நான் பாவி என்று ஒப்புக்கொள்ளும் இடம் வரை நான் செல்லுவேன். ஆனால் இந்தக் கள்ளனை என்னுடைய நிலையை சித்தரிக்கும் மாதிரியாக ஏற்றுக்கொள்ளவே முடியாது." என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஓ, நண்பனே உன் நிலைமை நீ நினைப்பதைக் காட்டிலும் மிக மோசமாக இருக்கிறது. நீ ஒரு கள்ளன். மிக மோசமானவன். நீ ஆண்டவரைத் திருடியிருக்கிறாய். கிழக்கு தேசத்திலுள்ள ஒரு நிறுவனம் தங்கள் பிரதிநிதியாக ஒரு காரியஸ்தனை மேற்கு தேசத்திற்கு அனுப்பி மாதாமாதம் சம்பளமும் அனுப்பி வைக்கிறது என வைத்துக் கொள்வோம். இந்த மனிதன் ஒழுங்காக சம்பளத்தை வாங்கி அனுபவித்துக்கொண்டு அங்கு வேறு ஒரு நிறுவனத்தில் வருட முழுவதும் வேலை செய்தான் என்று வருடக்கடைசியில் மேலதிகாரிகள் கண்டுபிடிக்கிறார்கள். அந்த காரியஸ்தன் திருடனல்லவோ? ஆம். இதுவே ஒவ்வொரு பாவியின் காரியமும், நிலைமையுமாய் இருக்கிறது. அவன் ஆண்டவரால் இந்த உலகிற்கு அனுப்பப்பட்டிருக்கிறான். ஆண்டவர் அவனுக்குத் திறமை களையும் தாலந்துகளையும் அளித்து அவற்றை பயன்படுத்தி விருத்தி செய்ய எதிர்பார்க்கிறார். ஆண்டவர் நல்ல சுகபெலன் கொடுத்து ஆசீர்வதித்திருக் கிறார். நம் குறைவையெல்லாம் நிறைவாக்கி, அவரைச் சேவித்து மகிமைப்படுத்த எண்ணிலடங்காத தருணங்களை அளித்திருக்கிறார். ஆனால் அதன் முடிவு என்ன? ஆண்டவர் கொடுத்த அத்தனை காரியங்களும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. பாவியான மனுஷன் வேறு அதிகாரிகளையும், ஏன் சாத்தானையும் சேவிக்கிறான். பாவ சிற்றின்பத்தில் தன் பலத்தை விரயம் செய்து காலத்தை வீணடித்துப் போடுகிறான். அவன் ஆண்டவரைத் திருடியிருக்கிறான். மீட்கப்படாத வாசகரே, பரலோகத்தின் பார்வையில், கள்ளனைப் போன்றே உங்கள் நிலை நம்பிக்கையற்றதாகவும் உங்கள் இருதயம் கேடுள்ளதாயும் இருக்கிறது. அவனில் உங்கள் படத்தைப் பாருங்கள்.

2 இரட்சிக்கப்படுமுன் மனிதன் வாழ்வின் கடைசிக்கட்டத்திற்கு வந்திருப்பதைப் பார்க்கிறோம்.

இதுவரை மரித்துக்கொண்டிருக்கும் கள்ளனை பாவியின் பிரதி நிதியாகவும், சுபாவத்தின்படியும் செயலின்படியும் அனைத்து மக்களின் அடையாள மாதிரியாகவும் ஆராய்ந்தோம். சுபாவத்தின்படி தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் பகைஞராகவும், செயலின்படி அவர் கொடுத்ததைத் தவறாகப் பயன்படுத்தி அவருக்குக் கொடுக்க வேண்டியவைகளைக் கொடுக்கத் தவறிய திருடர்களாகவும் பார்த்தோம். சிலுவையில் அறையப் பட்ட கள்ளன் தன் மனமாற்றத்திலும் ஒரு மாதிரியாக இருந்தான் எனப் பார்க்கிறோம். இவ்விஷயத்தில் அவன் உதவியற்ற நிலைக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்போம்.

நம்மை இழந்து போன பாவிகளாய் மாத்திரம் பார்ப்பது போதுமானதல்ல. நாம் சுபாவப்படி கறைப்பட்டவர்களாகவும், சீர்கெட்டவர்களாகவும் இருக்கிறோம் என்பதும் செயலின்படி பாவமீறுதல்களில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான முதல்பாடமாகும். நாம் முற்றிலுமாக விழுந்து போனவர்கள் என்பதும் நமக்கு உதவி செய்ய நம்மால் கூடாது என்பதும் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய அடுத்தபாடம். நம்முடைய நிலை எந்த மனுஷனாலும் சீர்ப்படுத்த முடியாத அளவு மோசமானது என்பதைக் கண்டுகொள்வதே இரட்சிப்பிற்கு வழிநடத்தும் இரண்டாவதுபடி இது மனித கண்ணோட்டம். ஆனால் தான் ஒரு பாவி என்றும் பரிசுத்த தேவனின் பிரசன்னத்திற்குத் தகுதியற்றவனென்றும் மெதுவாக உணர்வானானால், தன் மீட்பிற்கு தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்பதையும் தான் தன்னைச் சீர்ப்படுத்தி ஆண்டவருக்கு உகந்தவனாக முடியாது என்பதையும் புரிந்துகொள்ள இன்னும் தாமதமாகும். நாம் "பெலனற்றவர்கள்" (ரோமர் 5:6) சக்தியற்றவர்கள் மற்றும் நாம் செய்யும் நீதியின் கிரியைகளினிமித்தம் நம்மை இரட்சியாமல் தமது இரக்கத்தின் படியே நம்மை இரட்சிக்கிறார் (தீத்து 3:5) என்று நாம் உணரும் வரைக்கும் நாம் நம்மில் நம்பிக்கை இழந்தவர்களாய், நம்மைவிட்டு வெளியே நோக்கிப்பார்த்து நம்மை இரட்சிக்கக்கூடிய அந்த ஒருவரைக் காண இயலாது. வேதாகமத்தின் படியான மிகப்பெரிய வியாதி குஷ்டரோகம். குஷ்டரோகத்திற்கு மனிதன் எந்த மருந்தையும் கண்டுபிடிக்க முடியாது. ஆண்டவரால் மாத்திரமே இப்பயங்கர வியாதியில் இருந்து விடுவிக்க முடியும். பாவமும் இதைப்போன்றதே. நாம் சொன்னதுபோல் மனிதன் மிக மெதுவாகவே பாடங்களைக் கற்றுக்கொள்ளுகிறான். அவன், தூரதேசத் திற்குப் போய் துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப் போட்டு ''குறைவுபடத் தொடங்கி" நேராகத் தன் தகப்பனிடத்தில் திரும்பிப் போகாமல் "அந்தத் தேசத்துக்குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டு" (லூக்.15:15) பின் குடியானவனின் வயல்களில் பன்றிகளை மேய்க்கப் போன, அதாவது, வேலை செய்யப்போன கெட்ட குமாரனைப் போல் இருக்கிறான். இதேவிதமாகத் தன் தேவைக்கு நேராகத் தூண்டிவிடப்படும் பொழுது ஒரு பாவி உடனடியாக கிறிஸ்துவிடம் செல்லாமல் கர்த்தருக்கு உகந்தவனாகத் தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறான். ஆனால் கெட்ட குமாரனைக் காட்டிலும் மேலான யாதொன் றையும் சாதிக்க முடியாது. பன்றி தின்னும் தவிடே அவன் பங்காயிருக்கும். மேலும், பெரும்பாடுள்ள ஒரு பெண் அநேக ஆண்டுகளாக அவதிப்பட்டு, அநேக வைத்தியர்களிடம் சென்று முயற்சித்து பின்னர் பெரிய வைத்தியரை தேடி வந்ததைப் போல் இருக்கிறான். உணர்வடைந்த பாவி சிறிது மனஅமைதி அல்லது உதவி தேடி ஒவ்வொரு காரியமாக முயற்சி செய்து இவ்வாறாக மதசம்பந்தமான எல்லாச் சடங்காச்சாரங்களையும் முழுமையாக செய்து முடித்து “சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறதைக்” (மாற்கு 5:26) (மோசமடைகிறதை) கண்டு கொள்ளுகிறான். தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழிக்கும் வரை அவள் கிறிஸ்துவைத் தேடவில்லை. ஒரு பாவியும் தன் வாழ்வாதாரங்களின் எல்லைக்கோட்டைத் தொடும் நேரத்தில்தான் தன்னைத் தன் இரட்சகருக்கு நேராகத் திருப்புவான்.

ஒரு பாவி இரட்சிக்கப்படுமுன் தன் பலவீனத்தை உணரும் நிலைக்கு வரவேண்டும். இதைத்தான் மரித்துக்கொண்டிருக்கும் கள்ளனின் மனந்திரும்புதல் நமக்குக் காண்பிக்கின்றது. அவனால் என்ன செய்ய முடியும்? அவனால் நீதியின் பாதையில் நடக்கமுடியாது. ஏனெனில் அவன் இருபாதங்களும் ஆணிகளால் கடாவப்பட்டுள்ளன. எந்த நற்கிரியையும் செய்யமுடியாதபடி இரு கரங்களிலும் ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன. அவனால் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து நல்லதொரு வாழ்க்கை வாழமுடியாது ஏனெனில் அவன் மரித்துக்கொண்டிருக்கிறான். என் வாசகரே சுயநீதியை நடப்பிக்க விரைந்து செல்லும் உங்கள் கரங்களும், நியாயத்திற்குக் கீழ்ப்படிய விரைந்தோடும் உங்கள் கால்களும் சிலுவையில் அறையப்பட வேண்டும். ஒரு பாவி தன் சொந்த செயல்பாடுகளிலிருந்து வெட்டப்பட்டு கிறிஸ்துவால் இரட்சிக்கப்பட விருப்பம் உள்ளவனாய் இருக்க வேண்டும். ஒருவனின் பாவிநிலை மற்றும் இழந்துபோன உதவியற்ற நிலையை உணர்ந்துகொள்ளும் உணர்வு ஆதிகால முதலே பாவத்தைக் கண்டிந்துணர்த்தும் காரியமாகக் கருதப்படுகிறது. இன்றும் இதுமட்டுமே ஒரு பாவி இரட்சிக்கப்படும்படி இயேசுவிடம் வர ஒரே நிபந்தனையாய் இருக்கிறது. ஏனெனில் பாவிகளை இரட்சிக்கக் கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார்.

  1. இங்கு நாம் மனந்திரும்புதல் மற்றும் விசுவாசத்தின் பொருளைக் காண்கிறோம்.

மனந்திரும்புதலை அநேக கோணங்களில் ஆராயலாம். இதன் பொருள் மற்றும் வாய்ப்பெல்லையைக் கருத்தில் கொள்ளும்போது பாவத்தைக்குறித்து மனமாற்றம், பாவத்தைக்குறித்த வருத்தம் மற்றும் பாவத்தை விட்டொழிதல் இதில் அடங்கும். உண்மையாகவே மனமாற்றம் நமது இழந்துபோன நிலையை உணர்வது. நம் அழிவைக் கண்டுகொள்வது, நம்மையே நியாயந்தீர்ப்பது. நம் சொத்துரிமை இழப்பை ஒத்துக்கொள்வது. மனந்திரும்புதல் ஆண்டவருக்கு முன்பாக உயிருள்ள மனச்சாட்சியைச் சார்ந்ததேயன்றி அறிவுபூர்வமான செயல் அல்ல. இந்த கள்ளனுடைய காரியத்தில் நாம் இதைத்தான் காண்கிறோம். முதலில் தன் தோழனிடம் கூறுகிறான். "நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?” (லூக்கா 23:40). சிறிது நேரத்திற்கு முன்பு அவனுடைய சத்தம் இரட்சகரை நிந்திப்பவர்களின் சத்தத்தோடு கலந்திருக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவன் மேல் செயலாற்றிக் கொண்டிருந்தார். தற்போது கர்த்தர் முன்னிலையில் அவன் மனச்சாட்சி செயல்பட ஆரம்பித்தது. அவனது கேள்வி “தண்டனைக்குப் பயப்படுகிறதில்லையா?" என்பதல்ல ஆனால் "தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?" என்பதே, கர்த்தரை நியாயாதிபதியாக அறிந்து கொள்ளுகிறான். "நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்: நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்” (லூக்கா 23:41). இங்கு தன்னுடைய தவறையும், தனக்கு வரும் தண்டனையின் நியாயத்தையும் ஒத்துக்கொள்ளுகிறான். தன் மீதே தீர்ப்பு வழங்குகிறான். சாக்குப்போக்குச் சொல்லவோ, தன் குற்றத்தின் தன்மையைக் குறைத்துக்கூற முயற்சிக்கவோயில்லை. தான் பாவி என்பதையும், பாவத்திற்கான தண்டனை பெற முழுத்தகுதியுடையவன் என்பதையும், தன் பாவத்திற்குரிய தண்டனை மரணம் என்பதையும் உணர்ந்து கொண்டான். வாசகரே! நீங்கள் ஆண்டவருக்கு முன்னால் இந்த நிலையிலிருக்கிறீர்களா? வெளிப்படையாக உங்கள் பாவங்களை அவருக்கு அறிக்கையிட்டிருக்கிறீகளா? உங்களையும் உங்கள் வழிகளையும் நீங்களே நியாயந்தீர்த்திருக்கிறீர்களா? மரணமே உங்களுக்கு வரவேண்டியது என ஒத்துக்கொள்ளுகிறீர்களா? எப்பொழுதெல்லாம் பாவத்தின் தன்மையைக் குறைத்தோ, அலட்சியமாகவோ பேசுகிறீர்களோ அப்பொழுதெல்லாம் கிறிஸ்துவை விட்டு உங்களை அடைத்துக்கொள்ளுகிறீர்கள், கிறிஸ்து உலகிற்கு வந்தது பாவிகளை இரட்சிக்க - தன்னை அறிக்கை செய்த பாவிகள், ஆண்டவர் முன் பாவிகளுடைய இடத்தில் இருக்கும் பாவிகள் மற்றும் தாங்கள் இழந்து, அழிந்து போன பாவிகள் என்ற உணர்வுடையவர்கள்.

கள்வனின் "ஆண்டவருக்கு நேரான மனந்திரும்புதல்" கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு நேரான விசுவாசத்தைத் தொடர்ந்து வந்தது. அவனுடைய விசுவாசத்தைத் தியானிக்கும்போது முதலாவது அது புத்திசாலித்தனமான அறிவு சார்ந்த விசுவாசம் என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த அத்தியாயத்தின் முதல்பகுதியில் இந்தக்கள்வனின் மனமாற்றத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஆண்டவரின் உன்னத மகத்துவம் மற்றும் எதிர்க்க முடியாத வெற்றியுள்ள கிருபை ஆகியவற்றிற்கு நேராக நம் கவனம் திருப்பப்பட்டது. நாம் தற்போது சம முக்கியம் வாய்ந்த உண்மையின் மறுபக்கத்திற்குத் திரும்புகிறோம். இப்பக்கம் நாம் முன்பு கூறியதற்கு முரண்பாடானதல்ல ஆனால் இணைந்து முழுமையும் நிறைவும் அடையச் செய்வது, தேவன் ஒரு ஆத்துமாவை மீட்டுக் கொள்ளத் தீர்மானித்திருக்கும் போது அம்மனிதன் விசுவாசித்தாலும் விசுவாசிக்காவிட்டாலும் இரட்சிக்கப் படுவான் என வேதம் நமக்குக் கற்பிக்கவில்லை. இது சத்தியத்தைப் புறக்கணிப்பவர்களால் எடுக்கப்படும் ஒரு தப்பான முடிவாகும். முடிவை முன்குறித்த தேவன் செல்லவேண்டிய வழியையும் முன்குறித் திருக்கிறார். மரித்துக்கொண்டிருக்கும் கள்வனின் இரட்சிப்பை தீர்மானித் திருந்த தேவன், தன்னை நம்பத்தக்க விசுவாசத்தை அவனுக்குக் கொடுத்துத் தன் தீர்மானத்தை நிறைவேற்றினார். இதுவே (2 தெசலோனிகேயர் 2:13) ம் மற்ற வேதபகுதி களும் தரும் எளிதான பாடம் “நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படு கிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு ஆதி முதல் தேவன் உங்களைத் தெரிந்து கொண்ட படியினால்" இந்தக் கள்ளனுடைய வாழ்க்கையில் இதைத்தான் பார்க்கிறோம். அவன் "சத்தியத்தை விசுவாசித் தான்" அவன் விசுவாசம் ஆண்டவருடைய வார்த்தையை உறுதியாய்ப் பிடித்துக் கொண்டது. சிலுவையின் மீது ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. "இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு" பிலாத்து அவரைப் பரிகாசம் பண்ணும்படியாக அதை வைத்தான். ஆனால் எப்படியும் அது உண்மையாய் இருந்தது. அவன் அதை எழுதின பிறகு, அதை மாற்ற ஆண்டவர் அவனை அனுமதிக்கவில்லை. இவ்வாசகம் எழுதப்பட்ட பலகை எருசலேம் தெருக்கள் வழியே தூக்கிச் செல்லப்பட்டு சிலுவை மேட்டை அடைந்தது. கள்ளன் அதை வாசித்தான். தெய்வீக கிருபையும் வல்லமையும் அது சத்தியம் என்று கண்டுகொள்ளத்தக்கதாக அவன் கண்களைத் திறந்தது. அவனுடைய விசுவாசம் கிறிஸ்துவின் இராஜரீகத் தன்மையைப் பற்றிக் கொண்டதினி மித்தமே "நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்" எனக்கூற முடிந்தது. விசுவாசம் எப்பொழுதும் எழுதப்பட்ட ஆண்டவரின் வார்த்தையைச் சார்ந்தே இருக்கும்.

ஒரு மனிதன் இயேசுவே கிறிஸ்து என்று விசுவாசிக்கு முன்பு, இயேசுவே கிறிஸ்து என்பதற்கான சாட்சி அவன் முன் இருக்கவேண்டும். இருதயம் சார்ந்த விசுவாசத்திற்கும் அறிவு சார்ந்த விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் உண்மையும், முக்கியமானதாயும் இருப்பதால் அடிக்கடி அவை எடுத்துக்காட்டப்படுகிறது. சிலநேரங்களில் அறிவு சார்ந்த விசுவாசம் முக்கியத்துவம் இல்லாதது என்று வர்ணிக்கப்படுவது மதியீனமாகும். இருதயத்திற்கேதுவான விசுவாசத்திற்கு முன் அறிவுக்கேதுவான விசுவாசம் இருப்பது தேவையாகும். கர்த்தராகிய இயேசுவின் இரட்சிப்பை விசுவாசிக்கு முன்பு, அறிவு சார்ந்த விசுவாசம் இருக்கவேண்டும். புறமதஸ்தர்களைப் பொறுத்த விஷயத்தில் இதற்கான சான்றைக் காணலாம். அவர்களுக்கு அறிவு சார்ந்த விசுவாசம் இல்லாததால் இருதயம் சார்ந்த விசுவாசமும் இல்லாமல் போகிறது. இருதய சம்பந்தமான விசுவாசத்தோடுகூட செயல்படாவிட்டால், அறிவு சார்ந்த விசுவாசம் இரட்சிக்க முடியாது என அடித்துக்கூறுகிறோம். ஆனால் முதலாவது அறிவு சார்ந்த விசுவாசம் இல்லாவிட்டால் இருதயம் சார்ந்த விசுவாசம் இல்லை என்றும் வற்புறுத்திக் கூறுகிறோம். அவரைப்பற்றிக் கேள்விப்படாதிருந்தால் எப்படி விசுவாசிக்க முடியும்? உண்மையில் ஒருவன் அவரை விசுவாசிக்காமலேயே அவரைப்பற்றி விசுவாசிக்க முடியும். ஆனால் அவரைப்பற்றி விசுவாசிக்காமல் அவரை விசுவாசிக்க முடியாது. மரித்துக்கொண்டிருக்கும் கள்ளனுடைய வாழ்விலும் இப்படியே இருந்தது. மரிக்கும் இந்த நாளுக்கு முன்பதாக கிறிஸ்துவைப் பார்க்கும் சந்தர்ப்பமே இல்லாமலிருந்திருக்கும். ஆனால் அவருடைய இராஜரீகத் தன்மைக்குச் சான்றளிக்கும் எழுதப்பட்ட வாசகத்தைக் கண்டான். பரிசுத்த ஆவியானவர் இதையே அவனுடைய விசுவாசத்தின் அஸ்திபாரமாகப் பயன்படுத்தினார். இது ஒரு புத்திசாலித்தனமான விசுவாசம் என்று நாம் கூறலாம். முதலாவது அவனுக்கருளப்பட்ட, எழுதப்பட்ட சாட்சியை விசுவாசிக்கும் அறிவுபூர்வமான விசுவாசம். இரண்டாவது அது இருதயத்தில் உணர்ந்து அமரிக்கையோடு பாவிகளின் இரட்சகரான கிறிஸ்துவில் சார்ந்திருக்கும் விசுவாசமாக வெளிப்பட்டது.

ஆம், இந்த மரித்துக்கொண்டிருக்கும் கள்ளன் கிறிஸ்துவின் மீது பாதுகாப்பாகச் சார்ந்திருக்கும் இருதயம் சார்ந்த விசுவாசத்தை செயல் முறைப்படுத்துகிறான். நாம் மிக எளிமையாக இருக்க முயற்சிப்போம். ஒருமனிதன் ஆண்டவராகிய இயேசுவின் மீது அறிவு சார்ந்த விசுவாசம் கொண்டு, இழந்து போயிருக்கலாம். ஒரு மனிதன் வரலாற்றுக் கிறிஸ்துவைப் பற்றி விசுவாசிப்பது அவனுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது. அது வரலாற்று நெப்போலியனைப்பற்றி விசுவாசிப்பதிலும் எந்த விதத்திலும் மேலானதல்ல. வாசகரே நீங்கள் இரட்சகருடைய பூரண வாழ்க்கை, அவருடைய மகிமையான தியாகமான மரணம், அவருடைய வெற்றியுள்ள உயிர்த்தெழுதல், அவருடைய மகிமையான பரமேறுதல் மேலும் அவருடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வருகை ஆகிய எல்லாவற்றையும் விசுவாசிக் கலாம். ஆகிலும் இதைக்காட்டிலும் அதிகமானதைச் செய்யவேண்டும். சுவிசேஷ விசுவாசம் என்பது முற்றிலும் நம்பிச் செயலாற்றும் விசுவாசம், இரட்சிப்பின் விசுவாசம், சரியான கருத்து மற்றும் பகுத்தறிவுத் தொடர் ஆகியவற்றிற்கு மேலானது. இரட்சிப்பின் விசுவாசம் எல்லா விளக்கங் களையும் கடந்து மேலோங்கி நிற்கிறது. மரித்துக்கொண்டிருக்கும் கள்ளனைப் பாருங்கள். கிறிஸ்து அவனை உற்று நோக்கக் காரணம் ஏதாவது உண்டா? சிலுவையில் அறையப்பட்ட கள்ளன், தானாகவே அறிக்கை செய்த குற்றவாளி. மேலும் சில நிமிடங்களுக்கு முன்னதாக அவரையே நிந்தித்துக் கொண்டிருந்தவன். அவன் பாதாள விளிம்பிலிருந்து பரலோகத்திற்கு சுமந்து செல்லப்படுவான் என்று எதிர்பார்ப்பதற்கு எந்தவிதமான நியாயமும் உண்டா? என் வாசகரே அறிவு, காரணங்களை ஆராய்கிறது. ஆனால் இருதயம் அப்படிச் செய்வதில்லை. இந்த மனிதனின் விண்ணப்பம் அவன் இருதயத்திலிருந்து வந்தது. அவனது கை கால்கள் அவனுக்கு உபயோகப்படவில்லை. (அவை இரட்சிப்புக்குத் தேவையில்லை. மாறாக தடையாகவே இருக்கும்) அவனுக்கு இருதயம் மற்றும் நாவின் செயல்பாடு இருந்தது. அவை எந்தத் தடையுமின்றி விசுவாசித்து அறிக்கை பண்ண ஏதுவாயிருந்தது. "நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும். இரட்சிப்புண்டாக வாயினால் அறிக்கை பண்ணப்படும்" (ரோமர் 10:10).

அவனுடைய விசுவாசம் எளிமையானது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். தகுதிக்கேற்ற தாழ்மையோடு ஜெபித்தான். அது "ஆண்டவரே என்னைக் கனப்படுத்தும்" என்றல்ல: "ஆண்டவரே என்னை மகிமைப் படுத்தும்" என்றுமல்ல. ஆனால் "ஆண்டவரே என்னை நினைத்து மட்டும் பார்க்க சித்தம் கொள்வீரானால்", "என்னை நோக்கிப்பார்க்க சித்தம் கொள்வீரானால்" "ஆண்டவரே என்னை நினைத்தருளும்" என்பது அவனுடைய ஜெபம். "நினைத்தருளும்" என்பது, அற்புதமான முழுமையும், பொருத்தமுமான வார்த்தையாகும். அவன் “என்னை மன்னியும்" "என்னை இரட்சியும்" "என்னை ஆசீர்வதியும்" எனக் கூறியிருக்கலாம். ஆனால் "நினைத்தருளும்" இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகும். கிறிஸ்துவின் இருதயத்தின் மீதுள்ள விருப்பம் அவருடைய ஆசீர்வாதங்கள் அனைத்தையும் உள்ளடக்கும் விருப்பமாகும். மேலும் இந்த வார்த்தை அதைக் கூறியவனின் நிலைக்கு மிகப்பொருத்தமானது. அவன் சமுதாயத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவன். யார் அவனை நினைப்பார்கள்? பொதுமக்கள் அவனை இனி நினைக்கவே மாட்டார்கள். அவனுடைய நண்பர்கள் தங்களுடைய குடும்பத்திற்கு அவமானத்தைக்கொண்டு வந்தவனை மறக்க ஆவலாயிருப்பர். ஆனால் அங்குள்ள ஒருவர் முன்னால் தன் வேண்டுகோளை வைக்க தைரியம் கொள்ளுகிறான். "ஆண்டவரே என்னை நினைத்தருளும்.”

கடைசியாக அவனுடையது "துணிச்சலான விசுவாசம்" என்பதை நாம் கவனிக்கலாம். ஒருவேளை முதலாவது இது வெளிப்படையாகத் தோன்றாமலிருக்கலாம். ஆனால் சிறிது ஆராய்ந்து பார்க்கும்போது இது தெளிவாகிறது. நடுச்சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தவருக்கு நேராக எல்லாருடைய கண்களும் திரும்பின. மற்றும் அநாகரீகமான கூட்டத்தின் கேவலமான பரிகாசச் சொற்கள் அவருக்கு நேராகச் செலுத்தப்பட்டன. அக்கூட்டத்தின் ஒவ்வொரு சிறுபகுதியினரும் இரட்சகரைத் தூஷிப்பதில் இணைந்து கொண்டனர். “அந்த வழியாய் நடந்து போகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி" "பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம் பண்ணி" என்று மத்தேயு கூறுகிறார். "போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து... அவரைப் பரிகாசம் பண்ணினார்கள்" (லூக்கா 23:36,37) எனத்தெரிவிக்கிறார். ஆகவே கள்ளரும் ஏன் பரிகாசக்குரல் எழுப்பினர் என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. வேதபாரகரும் மூப்பரும், அவர்கள் அவ்வாறு செய்யும்போது அவர்களைப் பார்த்து பெருமிதப்புன்னகை பூத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் திடீரென ஒருமாற்றம் ஏற்பட்டது.மனந்திரும்பும் கள்ளன் தொடர்ந்து கிறிஸ்துவை பரியாசம் பண்ணுவதையும், ஏளனம் பண்ணுவதையும் விட்டுவிட்டு, சிலுவையைச் சுற்றியிருக்கும் அனைத்துப் பார்வையாளர்களும் கேட்கும்படி தன் தோழன் பக்கமாய் திரும்பி அவனை வெளிப்படையாய்க் கடிந்து கொள்ளுகிறான். "இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே" (லூக்கா 23:41). எனக் கதறுகிறான். இவ்வாறாக முழு யூதநாட்டையும் குற்றப்படுத்துகிறான். அது மாத்திரமல்ல. கிறிஸ்துவுடைய களங்கமற்ற நிலைக்கு சாட்சியாய் இருப்பதோடு அவருடைய அரசத்தன்மையையும் அறிக்கையிடுகிறான். இவ்வாறாக, ஒரே அடியில் தன் தோழன் மற்றும் கூட்டத்தார் அனைவரின் சாதகமான நிலையிலிருந்து முற்றிலுமாகப் பிரிக்கப்படுகிறான். இன்று கிறிஸ்துவிற்கு வெளிப்படையான சாட்சியாயிருக்கத் தேவையான துணிச்சலைக் குறித்துப் பேசுகிறோம். ஆனால் இந்தத் துணிச்சல் அந்த நாளில் மரித்துக்கொண்டிருக்கும் கள்ளனால் காட்டப்பட்ட துணிச்சலுக்கு முன், மிக அற்பமானதாக மறைந்துபோகிறது.

  1. இங்கு நாம் ஒரு விந்தையான ஆவிக்குரிய ஒழியூட்டல் நிலையைக் காண்கிறோம்.

மரித்துக்கொண்டிருக்கும் அந்த சில மணிநேரங்களில் அவனில் ஏற்பட்ட முன்னேற்றம் ஒரு முழுமையான விந்தையாகும். அவனுடைய கிருபையின் வளர்ச்சி மற்றும் ஆண்டவரைப்பற்றியதான அறிவு மிக அற்புதமானதாகும். அவன் உதடுகளிலிருந்து விழுந்த மிகக்குறுகிய பதிவுக் குறிப்பிலிருந்து அவன் பரிசுத்த ஆவியானவரின் தனிப்போதனையில் கற்றுக்கொண்ட ஏழு காரியங்களைக் கண்டுபிடிக்க முடியும்.

முதலாவது ஒரு எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கையும், நீதியும், பாவத்திற்குப் பழிவாங்கும் தேவன் பாவத்திற்கு ஏற்ற கடுந்தண்டனையை வழங்குவார் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறான். ஆகவேதான் "நீ தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?" என்று மற்ற கள்ளனைக் கேட்கிறான். அது அவனுடைய நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. "குற்ற மில்லாத ஒரு மனிதரை நிந்திப்பதற்கு உனக்கு எப்படித் துணிச்சல் வந்தது?" என்று அவனைக் கடிந்துரைத்தான். "வெகு சீக்கிரத்தில் நீ தேவனுக்கு முன்பாக நிற்கவேண்டும். உன்னைச் சிலுவையில் அறைய உத்தரவிட்டவரை விட நீ சந்திக்கிப்போகிற நீதிமன்றம் எல்லையற்ற புனிதத்திற்குரியது என்பதை நினைத்துக்கொள்" என்றும் அவனைக் கடிந்துரைத்தான். "ஆண்டவருக்கு பயப்படத்தக்கவர்களாயிருக்க வேண்டும். ஆகவே அமைதலாயிரு" என்றான்.

இரண்டாவதாக, நாம் பார்ப்பது போல், அவனுடைய சொந்த பாவத்தன்மையின் காட்சி அவனுக்குமுன் தெளிவாக நின்றது. "நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும்...." நாமோ நியாயப்படி தண்டிக்கப் படுகிறோம். நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்" (லூக்கா 23:40-41). தான் பாவி என்பதை உணருகிறான். தன் பாவம் தண்டனைக்கு ஏற்புடையது என்றும், தான் குற்றவாளி என்று தீர்க்கப்பட்டது நியாயமானது என்றும் கண்டான். மரணம் தனக்குக் கொடுக்கப்பட வேண்டியது என்று ஒத்துக்கொண்டான். இது அவன் தோழனால் அறிக்கையிடப்படாததும், உணர்ந்து கொள்ளாததுமான காரியமாகும்.

மூன்றாவதாக, அவன் கிறிஸ்துவின் பாவமில்லாத் தன்மைக்கு சாட்சி கூறினான். "இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே"(லூக்கா 23: 41) இங்கு ஆண்டவர் தன் குமாரனின் மாசற்ற பண்பினைப் பாதுகாக்க எத்தனை சிரத்தை எடுத்தார் எனப் பார்க்கிறோம். கடைசி நாட்களில் இதை அதிகமாகப் பார்க்கிறோம். யூதாஸ் "குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக்கொடுத்தேன்” என்று கூறும்படி அவன் மனம் மாறியது. “இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை” என்று பிலாத்து சாட்சி கொடுத்தான். "நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்" என்று பிலாத்தின் மனைவி கூறினாள். தற்போது சிலுவையில் தொங்குகிறார். தேவன் தம் அன்புக்குமாரனின் குற்றமில்லாமையைக் காணும்படி திருடனின் கண்களைத் திறக்கிறார். அவரது இராஜரீக மகத்துவத்திற்கு சாட்சி பகரும் வண்ணம் அவன் உதடுகளைத் திறக்கிறார்.

நான்காவதாக, பாவமில்லாத கிறிஸ்துவின் மானிடத் தன்மைக்கு சாட்சி கொடுத்ததோடு அவரது தெய்வீகத்தையும் அறிக்கையிடுகிறான். "ஆண்டவரே! என்னை நினைத்தருளும்! எனக் கூறினான். அது ஒரு அற்புதமான வார்த்தை. யூதர்களின் வெறுப்பின் மூல காரணத்தையும், அநாகரீகக் கூட்டத்தின் பரிகாசத்தின் முனையையும் இரட்சகர் மரத்தில் ஆணியடித்தார். பிரதான ஆசாரியரின் ஏளன அறைகூவல் அந்தக்கள் வனின் காதில் விழுகிறது. "நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையில் இருந்து இறங்கி வா" இதற்குப் பதில் எதுவும் கொடுக்கப்படவில்லை. கண்ட காட்சியினாலன்றி விசுவாசத்தால் அசைக்கப்பட்டவனாய், நடுவில் துன்பப்படுவோரைப் புரிந்துக்கொண்டு தெய்வமாக ஏற்றுக்கொள்ளுகிறான்.

ஐந்தாவதாக, ஆண்டவராகிய இயேசுவின் மீட்பின்தன்மையை விசு வாசித்தான். கிறிஸ்து பகைவர்களுக்காக செய்த ஜெபத்தைக் கேட்டான். "பிதாவே, இவர்களுக்கு மன்னியும்" ஆண்டவரால் இருதயம் திறக்கப்பட்ட ஒருவனுக்கு இந்த சின்ன வாக்கியம் ஒரு மீட்பின் செய்தியாக மாறியது. அவனுடைய சொந்த கூக்குரலான "ஆண்டவரே என்னை நினைத்தருளும்" என்ற வாசகம் "ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்" என்ற வார்த்தை களையும் தன் வரம்பிற்குள்ளடக்கி ஆண்டவராகிய இயேசுவை விசுவாசத் தால் இரட்சகராக ஏற்றுக்கொள்ள செய்தது. உண்மையாகவே அவன் இயேசு, பிரதான பாவிகளுக்கும் இரட்சகர் என்பதை விசுவாசித்திருக்க வேண்டும். இல்லையென்றால் கிறிஸ்து தன்னைப் போன்ற ஒருவனை "நினைக்கக்" கூடும் என்று எப்படி விசுவாசிக்க முடியும்?

ஆறாவது, கிறிஸ்துவின் இராஜரீகத்தன்மையின் மேலிருந்த தன் விசுவாசத்திற்கு சான்றளிக்கிறான் - "நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும்போது" இதுவும் ஒரு அற்புதமான வார்த்தை. வெளிப்படையான சூழ்நிலைகளெல்லாம் அவருடைய இராஜரீகத் தன்மையை மறுப்பதாகத் தோன்றியது. அரியணையில் அமர்ந்திருப்பதற்குப் பதிலாக சிலுவையில் தொங்கினார். ராஜகிரீடம் சூடப்படுவதற்குப்பதிலாக அவரது நெற்றி முட்களால் சூழப்பட்டிருந்தது. ஊழியர்களின் பரிவாரங்களால் கவனிக்கப் படுவதற்குப் பதிலாக அக்கிரமக்காரர்களோடு எண்ணப்பட்டார். ஆனாலும் அவர் யூதர்களின் இராஜா (மத்தேயு 2:2).

கடைசியாக அவன் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். “நீர் வரும் போது" நிகழ்காலத்தை விட்டு வருங்காலத்தை நோக்கிப்பார்த்தான். துன்பங்களுக்குப் பின்னால் உள்ள மகிமையைக் கண்டான். அவனுடைய விசுவாசக் கண்கள் சிலுவைக்கு மேலாக கிரீடத்தைக் கண்டுகொண்டன. இதில் அவன் அப்போஸ்தலரைக் காட்டிலும் மேலானவன் ஏனெனில் அவிசுவாசம் அவர்கள் கண்களை அடைத்து வைத்திருந்தது. ஆம் அவமானம் மிகுந்த முதலாம் வருகைக்குப் பின்னால் தோன்றும் இரண்டாம் வருகையின் வல்லமையையும் மகத்து வத்தையும் கண்டான்.

இந்த மரித்துக் கொண்டிருக்கும் கள்ளனின் ஆவிக்குரிய அறிவிற்கு என்ன காரணம் கொடுக்க முடியும்? கிறிஸ்துவுக்குள்ளான காரியங்களில் எப்போது இந்த வெளிப்பாடு பெற்றான்? எப்படி கிறிஸ்துவில் குழந்தையாய் இருக்கும் இவன் ஆண்டவர் பள்ளியில் வியத்தகு முன்னேற்றம் அடைந் தான்? தெய்வீக நடத்துதலை மட்டுமே காரணமாகக் கூறமுடியும். பரிசுத்த ஆவியானவரே அவனுடைய ஆசிரியர். மாம்சமும் இரத்தமும் இதை அவனுக்கு வெளிப்படுத்தாமல் பரலோகத்திலிருக்கிற பிதாவே வெளிப்படுத்தினார். தெய்வீகக் காரியங்கள் "ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும்'' மறைக்கப்பட்டு பாலகருக்கு வெளிப்படுத்தப்படுகிறது என்பதற்கான எத்தனை அற்புதமான விளக்கம்!

  1. இங்கு நாம் கிறிஸ்துவின் மீட்பின் தன்மையைப் பார்க்கிறோம்.

சிலுவைகளுக்கிடையே சில அடி தூரமே இருந்ததினால் மனந்திரும்பிய கள்ளனின் கூக்குரல் இரட்சகரிடம் வந்து சேர அதிக நேரம் எடுக்கவில்லை. அவருடைய பதில் என்ன? நீ இந்த முடிவிற்குத் தகுதிவுடையவன். நீ ஒரு பொல்லாத திருடன் ஆகையால் மரணம் உனக்கு நேரிட வேண்டியதே எனக்கூறியிருக்கலாம். அல்லது மிகத்தாமதமாக உன் பாவ வழியை விட்டிருக்கிறாய்; என்னை முன்னதாகவே தேடியிருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் “என்னண்டை வருகிற ஒருவனையும் நான் புறம்பே தள்ளுவதில்லை" என்ற கூற்று இங்கு நிறைவேறிற்று.

கூட்டத்தினரால் அவர் மீது வீசப்பட்ட வசைச்சொற்களை அவர் ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. சிலுவையிலிருந்து இறங்கி வருமாறு ஏளனமாக சவால் விடுத்த பிரதான ஆசாரியருக்குப் பிரதியுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் நொறுங்குண்ட இருதயத்திலிருந்து வந்த விசுவாசமுள்ள கள்ளனின் ஜெபம் அவர் கவனத்தை ஈர்த்தது. அந்தகார வல்லமைகளோடு போராடிக் கொண்டு, சர்வலோகத்தின் பாவங்களின் பயங்கரமான சுமையைத் தன்மேல் தாங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் ஒரு தனி மனிதனின் விண்ணப்பத்திற்கு செவி கொடுப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கலாம் என நாம் நினைத்திருப்போம். ஒரு பாவி, ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நேரத்தில் இயேசுவிடம் வரமுடியாது. அவனுக்கு ஒரு சமாதானத்தின் பதிலை உடனடியாகத் தாமதமின்றி கொடுக்கிறார்.

மனந்திரும்பி விசுவாசிக்கும் கள்ளனின் இரட்சிப்பு, கிறிஸ்து பாவிகளை இரட்சிக்க எப்பொழுதும் ஆயத்தமாயிருப்பது மட்டுமின்றி அவர்களை இரட்சிக்க வல்லமையுள்ளவராயும் இருக்கிறார் என்பதை இது அழகாக விளக்குகிறது. ஆண்டவராகிய இயேசு ஒரு பலவீனமான இரட்சகர் அல்ல. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் மூலமாய் ஆண்டவரிடத்தில் வருகிறவர் களை அவர் முற்று முடிய இரட்சிக்க வல்லவராய் இருக்கிறார். சிலுவையின் மீதிருக்கும் போது வெளிப்படுத்தப்பட்டதைவிட இச்செயல் வேறெங்கும் இவ்வளவு குறிப்பாகக் காணப்படவில்லை. இது மீட்பரின் "பலவீனமான" நேரம் (2 கொரிந்தியர் 13:4). "ஆண்டவரே என்னை நினைத்தருளும்" என்று அக்கள்ளன் கதறும் நேரத்தில் இரட்சகர் தாங்கொணா வேதனையோடு சபிக்கப்பட்ட மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். அந்த வேளையிலும், அந்த இடத்திலும் இந்த ஆத்துமாவை மரணத்திலிருந்து விடுவித்து பரதீசின் கதவுகளைத் திறந்துவிட அவருக்கு வல்லமை இருந்தது. ஆகவே அவருடைய முடிவில்லா தகுதியுடைமையைக் கேள்வி கேட்கவோ, சந்தேகிக்கவோ செய்யாதீர்கள். ஒரு மரிக்கும் இரட்சகரால் இரட்சிக்கக்கூடுமானால், இனி ஒருபோதும் மரிக்காதபடி கல்லறையிலிருந்து வெற்றியோடு உயிர்த் தெழுந்தவராய் எவ்வளவு அதிகமாய் செய்யக்கூடும். தன்னுடைய வல்லமை ஒருவேளை மறைக்கப்பட்டிருந்ததான அந்த வேளையில்தானே, அக்கள் வனை இரட்சித்ததன் மூலம் தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்தினார்.

தேவன் “தன்னிடம் வரும் எவரையும்” இரட்சிக்க வல்லமையுள்ள வராகவும், விருப்பமுடையவராகவும் இருக்கிறார் என்பதற்கு மரித்துக் கொண்டிருக்கும் கள்ளனின் இரட்சிப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கிறிஸ்து இந்த மனந்திரும்பி, விசுவாசித்த கள்ளனை ஏற்றுக்கொண்டாரா னால், கிறிஸ்துவிடம் மட்டும் வந்து விட்டால், வரவேற்பு எப்படியிருக்குமோ என்று ஒருவரும் நம்பிக்கையிழந்து காணப்படத் தேவையில்லை. மரித்துக் கொண்டிருந்த கள்வன் தேவகிருபையின் எல்லைக்கு அப்பாற்பட்டவன் இல்லையென்றால் தேவ கிருபையின் அழைப்பிற்கு செவிகொடுக்கும் எவரும் அப்படி இருக்க முடியாது. மனுஷகுமாரன் “இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே" வந்தார் (லூக்கா 19:10). இதற்குக் கீழான நிலையில் யாரும் இருக்க முடியாது. கிறிஸ்துவின் சுவிசேஷம் “விசுவாசிக்கிறவன் எவனோ?" அவனுக்கு தேவ பெலனாயிருக்கிறது (ரோமர் 1:16). ஆண்டவரின் கிருபையை ஒரு வரம்புக்குள் கொண்டுவராதே. பாவிகளில் பிரதான பாவி (1 தீமோத்தேயு 1:15) விசுவாசிக்க மட்டும் செய்வானானால் அவனுக்கு ஒரு இரட்சகர் அருளப் படுகிறார். இன்னும் பாவத்திலேயிருந்து மரணத்தின் கடைசி மணிநேரத்தில் பிரவேசிப்பவர்களும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவர்களல்ல என்னைப் பொறுத்தவரை மிகமிகச் சிலரே மரணப்படுக்கையில் இரட்சிக்கப்படுகிறார்கள் என நம்புகிறேன். எந்த ஒரு மனுஷனுக்கும் மரணபடுக்கை கிடைக்கும் என்ற உத்திரவாதம் இல்லாததால் இரட்சிப்பைக் கடைசி வரைத் தள்ளி வைப்பது அறிவீனத்தின் உச்சகட்டமாகும். அநேகருக்குப் படுக்கையில் படுத்து மரிக்கும் தருணம் கொடுக்கப்படாமல் அவர்கள் வாழ்க்கை சடுதியில் பறிக்கப்படுகிறது. ஆயினும் மரணப்படுக்கையிலிருக்கும் ஒருவர்கூட தேவகிருபையின் ஆளுகைக்கு அப்பாற்பட்டவரல்ல. தம்மை மிகப் பரிசுத்தராகக் கருதிய பிரிவினரில் ஒருவர் பின்வருமாறு கூறினார். "முற்றிலும் நம்பிக்கை அற்றுப் போகாதபடிக்கு வேதத்தில் ஒரு எடுத்துக் காட்டு இருக்கிறது. ஆனால் ஒன்றே ஒன்று என்பதால் அதனால் எச்சரிக்கப் படுகிறோம்.

ஆம் இங்கு கிறிஸ்துவை இரட்சகராகக் காண்கிறோம். பாவிகளை இரட்சிக்க இவ்வுலகத்திற்கு வந்தவர், இவ்வுலகை விட்டுக்கடந்து செல்லும்போது தம் மீட்கும் இரத்தத்தின் முதல் வெற்றிச்சின்னமாக, மீட்கப்பட்ட குற்றவாளியைத் தன்னோடு கூட்டிக்கொண்டு பரதீசுக்குச் சென்றார்.

  1. மீட்கப்பட்டவன் மரணத்தில் சென்றடையும் இடத்தை இங்கு பார்க்கிறோம்.

“கிறிஸ்து சிலுவையில் அருளிய ஏழு வார்த்தைகள்" என்ற அருமை யான புத்தகத்தில் டாக்டர். ஆன்டர்ஸன் பெரி என்பவர் ஜேம்ஸ் வேதாகம மொழிபெயர்ப்பில் “இன்று” என்ற வார்த்தை சரியான இடத்தில், வரவில்லை. என்றும், கள்ளனுடைய விண்ணப்பம் மற்றும் கிறிஸ்துவின் பதில் உள்ளடக்கி திட்டமிடப்பட்ட உரையாடல் வித்தியாசமான சொற்றொடர் கொண்டதா யிருக்கவேண்டும் என்றும் கூறுகிறார். கிறிஸ்துவுடைய பதிலின் அமைப்பு, கள்ளனுடைய விண்ணப்பத்தின் சிந்தனைக்கோர்வையோடு இசைந்து செயல்படுமாறு திட்டமிடப்பட்டிருக்கிறது. இவ்விரண்டையும், இணையான இரண்டடிச் செய்யுளைப் போல ஒழுங்குபடுத்திப் பார்த்தால் தெளிவாகப் புரியும்.

இயேசுவை நோக்கி இயேசு அவனை நோக்கி. ஆண்டவரே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். அடியேனை நினைத்தருளும் என்னுடனே கூட இருப்பாய். நீர் வரும் போது இன்று. உம்முடைய ராஜ்யத்தில் பரதீசில் இவ்விதமாக வார்த்தைகளை ஒழுங்கு பண்ணும்போது எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைக் கண்டு கொள்ளுகிறோம். அழுத்தம் கொடுக்கப்பட வேண்டிய வார்த்தை "இன்று" என்பதாகும். கள்ளனின் விண்ணப்பத்திற்கு நமது ஆண்டவர் அளித்த கிருபை நிறைந்த பதில், தெய்வீகக் கிருபை எவ்வாறு மனித எதிர்பார்ப்பையும் மிஞ்சுகிறது என்பதற்கு ஒரு ஆணித்தரமான எடுத்துக்காட்டு. ஆண்டவருடைய வரும் இராஜ்யத்தில் தன்னை நினைத்தருளும்படி அக்கள்வன் வேண்டினான். ஆனால் அந்த நாள் முடியுமுன்னதாக இரட்சகரோடு இருப்பான் என்று கிறிஸ்து உறுதியளித்தார். அந்தக்கள்ளன் இவ்வுலக இராஜ்யத்தில் நினைத்தருளப்படும்படி வேண்டினான். கிறிஸ்து அவனுக்குப் பரதீசில் இடத்தை உறுதிப்படுத்திக் கொடுத்தார். கள்வன் தன்னை "நினைத் தருளும்படி” மட்டுமே வேண்டினான். ஆனால் இரட்சகர் "நீ என்னோடு இருப்பாய்" என அறிவித்தார். இவ்விதமாக ஆண்டவர் நாம் நினைக்கிற தற்கும் எதிர்பார்க்கிறதற்கும் மிக அதிகமானவைகளை நமக்குச் செய்கிறார். கிறிஸ்துவின் பதில், சரீர மரணத்திற்குப்பின் ஆத்துமா உயிரோடிருக்கிறது என்ற உண்மையை நிரூபிப்பது மாத்திரமல்லாமல், மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பிரிக்கும் இடைபட்ட காலத்தில் விசுவாசி அவரோடிருப்பான் என்பதையும் கூறுகிறது. இதை இன்னும் வலியுறுத்தும் வண்ணமாகக் கிறிஸ்து தம்முடைய வாக்குத்தத்தத்தை "மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்ற பயபக்தியும், உறுதியுமான முன்னுரை யோடு கூறுகிறார். மரணத்தில் கிறிஸ்துவிடம் போவோம் என்ற உறுதியான நம்பிக்கையே இரத்தசாட்சியான ஸ்தேவானைக் கடைசிமணி நேரத்தில் உற்சாகப்படுத்திக் கர்த்தராகிய இயேசுவே என் ஆவியை ஏற்றுக் கொள்ளும்'' என்று வேண்டிக்கொள்ளச் செய்தது (அப்போஸ்தலர் 7:59). இந்த ஆசீர் வாதமான எதிர்பார்ப்பே, அப்போஸ்தலனாகிய பவுலை "கிறிஸ்துவுடனே இருக்க எனக்கு ஆசையுண்டு. அது அதிக நன்மையாயிருக்கும்." எனக் கூறச் செய்தது. மரணத்தின்பின் கல்லறையில் உணர்வற்ற நிலையில் இருப்பதல்ல ஆனால் பரதேசில் இயேசுவோடு இருப்பதே, விசுவாசிகள் எதிர்கொள்ளவிருக்கும் உண்மை நிலை. "விசுவாசிகள்" எனக் கூறுவது ஏனென்றால், லூக்கா 16 இல் உள்ள நமது ஆண்டவரின் போதனைப்படி அவிசுவாசிகளின் ஆத்துமாக்கள், பரதீசுக்குச் செல்வதற்குப் பதிலாக அழுகையும் பற்கடிப்புமான இடத்திற்குச் செல்லுகின்றன. வாசகரே, இந்த நொடியில் நீ மரித்துக்கொண்டிருந்தால் உன் ஆத்துமா எங்கு செல்லும்? ஆண்டவருடைய பரிசுத்தவான் களிடமிருந்து இந்த ஆசீர்வாதமான உண்மை நிலையை மறைக்க சாத்தான் எவ்வளவு கடினமாய் போராடிக் கொண்டிருக்கிறான்! அவன், ஒருபுறம், விசுவாசிகள் மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையில் உணர்வற்ற ஒரு நிலையில் இருக்கிறார்கள் என்ற ஆத்தும நித்திரையைப் பற்றியதான வருந்தக்தக்கக் கொள்கையைப் பரப்பிக் கொண்டிருக்கிறான். மறுபுறத்தில், விசுவாசிகளைப் பயமுறுத்தும் வண்ணமாக, அவர்கள் மரணத்தின்போது தீக்குள் கடந்து சென்று, தங்களைச் சுத்திகரித்துப் பரலோகத்திற்குத் தகுதிப்படுத்த பயங்கரமான உத்தரிக்கும் ஸ்தலம் (இறந்த பிறகு ஆத்துமாவைப் புனிதப்படுத்தும் இடம்) என்ற ஒரு இடத்தை கண்டுபிடித்து வைத்திருக்கிறான். கிறிஸ்து கள்ளனுக்கு அளித்த வார்த்தை, எவ்வளவு தெளிவாக, இந்த ஆண்டவரை அவமதிக்கும் ஏமாற்றுக் காரியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது! இந்தக் கள்ளன் சிலுவையிலிருந்து நேராகப் பரதீசுக்குச் சென்றான். ஒரு பாவி விசுவாசிக்கும் நேரத்தில், அந்த நொடிப் பொழுதில் தானே "ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு நம்மைத் தகுதியுள்ள வர்களாக்குகிறார் (கொலோசியர் 1:12) எனப்பார்க்கிறோம். "பரிசுத்தமாக்கப்படு கிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தி யிருக்கிறார்” (எபிரேயர் 10:14). கிறிஸ்துவின் சமூகத்திற்குச் செல்வதற்கான தகுதி யும், உரிமையும் அவர் சிந்தின இரத்தத்தை மாத்திரமே சார்ந்திருக்கிறது.

  1. இரட்சகர் ஐக்கியத்திற்காக ஏங்குவதை இங்கு காண்கிறோம்

அவருடைய ஐக்கியத்தில் நாம் கிருபை மற்றும் கிறிஸ்தவனின் ஒட்டு மொத்த உரிமையின் உச்சக்கட்டத்தை அடைகிறோம். இந்த ஐக்கியத்தைத் தாண்டி செல்லக்கூடியது ஒன்றுமில்லை. "இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு” (1 கொரிந்தியர் 1:9) நம்மை அழைத்திருக்கிறார். அடிக்கடி நாம் "ஊழியம் செய்வதற்கே இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்" எனக்கூறக் கேட்கிறோம். இது உண்மையாயினும், உண்மையின் ஒரு பகுதி மட்டுமே - ஆனாலும் இது அற்புதமான அல்லது ஆசீர்வாதமான பகுதி எனக் கூறமுடியாது. நாம் ஐக்கியத்திற்காக இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். இயேசு மரிப்பதற்காக இங்கு வருமுன்பு ஆண்டவருக்கு எண்ணிலடங்கா ஊழியக்காரர் இருந்தனர். அவர்கள் அவரது கட்டளையை நிறைவேற்றும் தேவதூதர்களே. கிறிஸ்து முக்கியமாக தேடி வந்தது ஊழியர்களை அல்ல தம்மோடு ஐக்கியம் கொள்ள விருப்பமுள்ளவர்களையே.

பரிசுத்தவான்களின் இருதயத்தைப் பரலோகம் அதிஉன்னத கவர்ச்சியுள்ள இடமாக ஈர்த்திழுப்பதற்கு காரணம், அது நம் கவலை கஷ்டங்களிலிருந்து மீட்கும் இடமாகவோ, நாம் கிறிஸ்துவில் அதிகமாய் அன்பு கூர்ந்தவர்களை மீண்டும் சந்திக்கும் இடமாகவோ, பொற்றள வீதி, முத்தாலான வாசல் வச்சிரக்கற்களாலான சுவர்களைக் கொண்ட இடமாகவோ இருப்பதால் அல்ல - இவைகளெல்லாம் ஆசீர்வாதமான காரியங்கள். ஆனால் கிறிஸ்து இல்லாத பரலோகம், பரலோகமாய் இருக்க முடியாது. விசுவாசியின் இருதயம் ஏங்கித் தவிப்பது கிறிஸ்துவிற்காக மட்டுமே."பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பம் இல்லை" (சங். 73:25). தம்மால் மீட்கப்பட்ட அனைவராலும் சூழப்பட்டிராவிட்டால் கிறிஸ்துவிற்குப் பரலோகம், பரலோகமாயிராது என்பது மிக விந்தையானதொரு காரியம்.

அவருடைய இருதயம் அவர் பரிசுத்தவான்களுக்காக ஏங்குகிறது. மறுபடியும் வந்து நம்மைத் “தம்மோடு அழைத்துக்கொள்ளுவது” அவருக்கு முன் வைக்கப்பட்டுள்ள மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு. ஆத்தும வருத்தத்தின் பலனைக் காணுமட்டாக அவரால் முற்றிலும் திருப்தி அடைய முடியாது.

இவைகள் ஆண்டவராகிய இயேசு மரித்துக் கொண்டிருந்த கள்ளனுக்குக் கூறப்பட்ட வார்த்தைகளை முன்னிலைப்படுத்தி உறுதி செய்யப்பட்ட கருத்துக்களாகும். "ஆண்டவரே என்னை நினைத்தருளும்" என்பது கள்ளனின் கூக்குரல். அதனுடைய பதில் என்ன? கூர்ந்து கவனியுங்கள். கிறிஸ்து, "மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன். இன்றைக்கு நீ பரதீசில் இருப்பாய்" என்று மாத்திரமே கூறியிருப்பாரானால் அது கள்ளனின் எல்லாப் பயங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கும். ஆனால் அது இரட்சகரை திருப்திப்படுத்த வில்லை. அவருடைய விலையேறப்பற்ற இரத்தத்தால் மீட்கப்பட்ட ஆத்துமா அந்த நாளில் தானே பரதீசில் அவரோடு இருக்கவேண்டும் என்று அவர் இருதயம் உறுதியாய் இருந்தது. இதுவே கிருபையின் உச்சகட்டமும், கிறிஸ்தவ ஆசீர்வாதத்தின் முழுமையுமாய் இருக்கிறது என்று மறுபடியும் சொல்லுகிறோம். அப்போஸ்தலர் "கிறிஸ்துவுடனே இருக்க எனக்கு ஆசை உண்டு" (பிலிபியர் 1:23) என்று கூறினார். பின்பு "தேகத்தை விட்டுப் பிரிந்து'' என்று எழுதினார் எல்லா வேதனைகள் கவலைகளிலிருந்து விடுதலை பெறவா? இல்லை. "தேகத்தை விட்டுப் பிரிந்து" மகிமையில் மறுரூபமடையவா? இல்லை. "இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும், கர்த்தரிடத்தில் குடியிருக்கவும்" (2 கொரிந்தியர் 5:8). கிறிஸ்துவிலும் இதையே காண்கிறோம். "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன். ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன்" என்று கூறினார். தொடர்ந்து கூறும்பொழுது "பிதாவின் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போவேன்" என்றோ "ஆயத்தம் பண்ணிய ஸ்தலத்திற்கு அழைத்துக் கொண்டுபோவேன்" என்றோ கூறாமல் "நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்" என்றார்."எப்பொழு தும் கர்த்தருடனேகூட இருப்போம்' (1 தெசலோனிகேயர் 4:17). என்பதுவே நமது முழுநம்பிக்கையின் இலக்காக இருக்கிறது. என்றென்றும் நம்மை அவருடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவருடைய இருதய வாஞ்சையும் ஆவலான எதிர்பார்ப்புமாயிருக்கிறது. நீ என்னோடுகூட பரதீசிலிருப்பாய்!

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.