இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாய்.. நின்று கொண்டிருந்தார். அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி, ஸ்திரீயே, அதோ உன் மகன் என்றார்! பின்பு அந்த சீஷனை நோக்கி, அதோ உன் தாய் என்றார்! யோவான் 19:25-27.
“இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாய் நின்று கொண்டிருந் தார் (யோவான் 19:25). தனது குமாரனைப் போலவே, மரியாள் துக்கத்தைப் பற்றித் தெரியாதவரல்ல. ஆரம்பத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது" அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப் பட்டவள் என்றான். அவளோ அவனைக் கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக் கொண்டிருந் தாள்" (லூக்கா 1:28-29) இவ்வாழ்த்துதல், பல வேதனைகளுக்கு ஒரு முன்னறிவிப்பாக உள்ளது. காபிரியேல் தூதன் மரியாளின் அற்புதமான கருத்தரித்தலைப்பற்றி அறிவிக்க வந்திருக்கிறார், ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால், முற்றிலும் விளங்காத கேள்விப்படாத முறையில்,நம் ஆண்டவராகிய இயேசுவுக்கு தாயாராகுவது மரியாளுக்கு எளிதான விஷயமல்ல. அது தொலைநோக்கில் சந்தேகமில்லாமல் மரியாளுக்கு பெரிய கெளரவத்தைக் கொண்டு வருகிறது; ஆனால் தற்சமயம் மரியாளின் மரியாதைக்கு பெரிய அபாயத்தையும், அவரது விசுவாசத்திற்கு பெரிய சோதனையையும் கொண்டு வந்துள்ளது. தேவனின் சித்தத்திற்கு, அமைந்த மரியாளின் பணிவு, கவனிப்பதற்கு இனிமையாக உள்ளது. “அதற்கு மரியாள்: இதோ நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்" (லூக்கா 1:38). இது அருமையான, எதிர்ப்பு தெரிவிக்காத கீழ்ப்படிதல் ஆகும். எனினும் காபிரியேல் தூதன் மரியாளிடம் இயேசுவின் பிறப்பை உணர்த்தியபோது கலக்கமுற்றிருந்தார்கள் ஏற்கனவே கூறியதின்படி இது பல சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் முன்னறிவிப்பாக உள்ளது.
சத்திரத்தில் இடமில்லாததால், புதிதாகப் பிறந்த பாலகனை முன்னணையில் கிடத்தியது மரியாளுக்கு எவ்வளவு வேதனை அளித்திருக்கும்! தன் குழந்தையைக் கொல்லுவதற்கான ஏரோதின் திட்டத்தை அறிந்து எவ்வளவு தாங்கொண்ணா மனவேதனை அடைந்திருப்பார்கள்! குழந்தையினிமித்தம் எகிப்திற்கு ஓடிப்போய், பல ஆண்டுகள் அங்கு தங்கியிருக்கும்போது எவ்வளவு கலக்க முற்றிருப்பார்கள்! அவர்களது மகன், மனிதர்களால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டதைக் கண்ணுற்று, ஆத்துமா எவ்வளவு துயருற்றிருக்கும்! தனது சொந்த தேசத்தினரால் அவர் வெறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதைக் கண்டு அவர்களது இதயம் எவ்வளவு கலக்கமுற்றிருக்கும்! சிலுவையினருகே நின்ற போது அவர்கள் கடந்து வந்த வேதனையை யாரால் மதிப்பிட முடியும்? கிறிஸ்து வேதனையின் மனிதர் என்றால் மரியாள் வேதனையின் பெண்மணியன்றோ?
“அங்கே இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாய் நின்று கொண்டிருந்தார்" (யோவான் 19:25).
1. இங்கே நாம் சிமியோனின் தீர்க்கதரிசன நிறைவேறுதலைக் காண்கிறோம்
மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, பாலகன் இயேசுவின் பெற்றோர், அவரை எருசலேம் ஆலயத்திற்குக் கொண்டு சென்றனர். இஸ்ரவேலில் ஆறுதல் வரக்காத்திருந்த முதியவர் சிமியோன், பிள்ளையைத் தன் கைகளில் ஏந்தி தேவனை ஸ்தோத்திரித்தார். "ஆண்டவரே உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது" என்றான் (லூக்கா 2:29-32). பின்னும் சிமியோன் மரியாளை நோக்கி, "இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத் தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும் இவர் நியமிக்கப்பட்டிருக் கிறார். உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும்" என்றான். வியப்பான வார்த்தை அல்லவா அது! மரியாளுடைய மிகப்பெரிய சிறப்புரிமை அதனோடேகூட மிகப்பெரிய வேதனையையும் கொண்டு வந்ததா? சிமியோன் கூறும்போது அது முற்றிலும் நேரிடக்கூடாததாக இருந்தது. இருப்பினும் எவ்வளவு உண்மையாகவும் எவ்வளவு துயரம் நிறைந்ததாகவும் நிகழ்ந்தது! இங்கே சிலுவையில் சிமியோனின் தீர்க்கதரிசனம் நிறை வேறியது.
"அங்கே இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாய் நின்று கொண்டிருந்தார் (யோவான் 19:25). அவரது குழந்தைப் பருவத்திற்குப் பிறகு, கிறிஸ்துவின் ஊழியக்காலங்களில் மரியாளை நாம் பார்க்கவோ அவர்களைப் பற்றி கேள்விப்படவோ இல்லை. அவர்களது வாழ்க்கை, நிழல்களின் நடுவில் அமைந்த பின்புறக்காட்சியாக உள்ளது. ஆனால் இப்போது, தனது குமாரனின் வேதனையின் உச்சக்கட்டத்தில், உலகம் தூக்கி எறிந்து, ஒதுக்கிய தன் மகனின் சிலுவையினருகில் நிற்கிறார்கள். இதை யாரால் விளக்கமாக சித்தரிக்க முடியும்? மரியாள் கொடூரமான சிலுவை மரத்தினருகில் நின்றார்கள். அனைத்து நம்பிக்கையையும் இழந்து, எல்லா நியாயங்களுக்கும் மாறான காட்சியைக் கண்டு குழம்பித் திணறி, செயலற்றுப்போன நிலையில் இருப்பினும், மரணத் தருவாயிலிருக்கும் தன் மகனோடு அன்பின் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அங்கே நிற்கிறார்கள்! அந்தத் தாயின் உள்ளத்தின் சிந்தனைகளையும் உணர்வுகளையும் அறிய முயலுங்கள்! ஓ! எப்படிப்பட்ட வாள் அவர்கள் ஆத்துமாவை ஊடுருவிப் பாய்ந்துள்ளது! அவர் மனிதனாக அவதரித்த பொழுது, அப்படிப்பட்ட பேரானந்தம் இருந்ததில்லை, அந்தக் குரூரமான மரணத்தில் அவ்விதமான வேதனையும் இருந்ததில்லை.
இங்கே நாம் திறந்து காட்டப்பட்ட தாயின் உள்ளத்தைக் காண்கிறோம். அவர்கள் மரிக்கும் மனிதனின் தாயார். சிலுவையில் அகோர வேதனைப் படுபவர் அவர்களது மகன். அவர்கள் முதன்முதலில் முத்தம் பதித்த நெற்றியில் இப்பொழுது முட்கிரீடம் சூட்டப்பட்டுள்ளது. குழந்தைப்பருவத்தில் அந்தக் கரங்களையும் கால்களையும் வழிநடத்திச் சென்றிருக்கிறார்கள். அவர்களைப் போல எந்தத்தாயும் வேதனையடைந்ததில்லை. அவருடைய சீஷர்கள் அவரை விட்டு விட்டு ஓடலாம், அவருடைய நண்பர்கள் அவரைக் கைவிடலாம், அவருடைய தேசத்தார் அவரை வெறுத்து ஒதுக்கலாம் ஆனால் அவருடைய தாய் அவருடைய சிலுவையினடியில் நிற்கிறார்கள். ஓ! யாரால் அந்தத் தாயின் உள்ளத்தை ஆழ்ந்தறிந்து ஆராய முடியும்!
மரியாளின் ஆத்துமாவில் பட்டயம் மெதுவாக ஊடுருவும் போது, அந்த வேதனையின் காலத்தையும், துயரத்தையும் யாரால் அளவிட முடியும்! அவர்களது துயரம் உணர்ச்சிவசப்பட்டு, வெளியில் காட்டும் துயரமல்ல. அங்கே பெண்மைக்குரிய பலவீனம் காணப்படவில்லை, தாங்கமுடியாத துயரத்தால் சத்தமிடும் கூக்குரல் இல்லை, மயக்கமடைந்து உணர்விழக்க வில்லை. நான்கு சுவிசேஷகர்களில் யாரேனும் ஒருவராவது எழுதக்கூடிய எந்த ஒரு வார்த்தையும் அவர்கள் வாயிலிருந்து வரவில்லை: பிரத்தியட்சமாக அவர்கள் தொடர்ந்து அடக்க இயலாத அமைதியில் துயருற்றார்கள். இருப்பினும் கடுமையான வேதனையிலிருந்தார்கள். நிறைகுடம் ததும்பாது. அவரது நெற்றி கொடூரமான முட்களால் குத்தி துளையிடப்பட்டதைக் கண்டார்கள். ஆனால் அதை மென்மையாகத் தொட்டு மிருதுவாக்க முடியவில்லை. அவருடைய துளையிடப்பட்ட கரங்கள் வெளீரிய நீல நிறத்துடன் மரத்துப் போவதைக் கண்ணுற்றார்கள். ஆனால் அவற்றைத் தொட்டுத் தேய்க்க இயலவில்லை. அவருக்குத் தாகத்திற்குப் பானம் தேவை என்பதைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அவரது தாகத்தைத் தணிக்க அனுமதியில்லை. மிக ஆழ்ந்த தனிமையான ஆறுதலற்ற மனநிலையில் அவர்கள் துயறுற்றார்கள்.
"அங்கே இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாய் நின்று கொண்டிருந்தார்" யோவான் 19:25.
அந்தக்கூட்டத்தினர் இயேசுவைக் கேலி செய்தனர், திருடர்கள் ஏளனமாய்ச் பேசினார்கள், வேதபாரகர் இகழ்ந்தனர், போர்வீரர்கள் உணர்வற்று, அக்கறையற்றவர்களாய் இருந்தார்கள், நம் இரட்சகர் இரத்தம் சிந்தி, மரிக்கும் தருவாயில் இருந்தார். அங்கே அவரது தாயார். அவர்கள் கொடுமையாக கேலி செய்ததைக் கண்ணுற்றிருந்தார்கள். இப்படிப்பட்ட கோரமான காட்சியைக் கண்டு தாயார் மயக்கமுறாமல் இருந்தது விந்தையே! இப்படிப்பட்ட கொடூரக்காட்சியைக் காணாது விலகிச் செல்லாதது அற்புதமே! இப்பேர்ப்பட்ட காட்சியைக் கண்டு அங்கிருந்து ஓடாமலிருப்பது ஆச்சரியமே! ஆனால் இல்லை! அங்கே இருக்கிறார்கள்: பயத்தில் பதுங்கவில்லை, மயக்கமுறவில்லை, கீழே தரையில் மிகுந்த வேதனையில் மூழ்கவில்லை. அவர்கள் நிற்கிறார்கள். அவர்களது செய்கையும், மனப்பான்மையும் இணையற்றது. ஆண்டுதோறும் எழுதப்பட்டு வரும் வரலாற்றுக் குறிப்புகளிலும் ஈடு இணையில்லை. என்னே! மனித வலிமையின் எல்லைகளை எல்லாம் கடந்த சென்ற மன வலிமை! இயேசுவின் சிலுவையினருகே நின்றார்கள் - எவ்வளவு அற்புதமான மனவலிமை. தனது துயரத்தை அடக்கி வைத்து, அங்கே அமைதியாக நின்றார்கள். இறுதி வேளையில் அவரது அமைதியைக் குலைக்காமல் இருந்தது, ஆண்டவராகிய இயேசுவின் மீது அவர்கள் வைத்திருந்த பயபக்தி அல்லவா?
"அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார் பின்பு அந்த சீஷனை நோக்கி: அதோ உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்" யோவான் 19:26-27.
2 இங்கே, பெற்றோருக்கு பிள்ளைகள் மரியாதை செலுத்தவேண்டும் என்று முன் மாதிரி வைத்துப்போன குறைவற்ற முழுமையான மனிதனைக் காண்கிறோம்.
கர்த்தராகிய இயேசு, தேவனுக்கும் மனிதனுக்கும் தனக்கிருந்த கடமைப் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றினார். சிலுவையில், இயேசுவிற்கு தன் தாயின் மீதிருந்த மென்மையான பொறுப்பினையும் அக்கறையினையும் காண்கிறோம், பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை இயற்கை விதிப்படியும் அன்பினாலும் திறம்பட நடத்துவதற்கான மாதிரியை இயேசுகிறிஸ்து எல்லோருக்கும் அளித்துள்ளார்.
கர்த்தரின் விரல்களால் இரு கற்பலகைகளில் எழுதப்பட்டு சீனாய் மலையில் மோசேக்குக் கொடுக்கப்பட்ட வார்த்தைகள் இன்றும் இரத்து செய்யப்படவில்லை. பூமி உள்ளவரை அவை நிலைத்துநிற்கும். அவற்றில் ஒவ்வொன்றும் புதிய ஏற்பாட்டில் உள்ள கண்டுணர்தல் சார்ந்தவற்றை உள்ளடக்கியுள்ளது. யாத்திராகமம் 20:12 இல் உள்ள வார்த்தைகள் எபேசியர் 6:1-3 இல் திரும்பச் சொல்லப்பட்டுள்ளது."பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம் உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்பதே. வாக்குத்தத்த முள்ள முதலாவது கற்பனையாயிருக்கிறது"
பெற்றோருக்குப் பிள்ளைகள் மரியாதை செலுத்த வேண்டும் என்ற கற்பனையானது வெறுமையான கீழ்ப்படிதலுக்கு அப்பாற்பட்டு, வெளிப் படுத்தப்படும் விருப்பமாயுள்ளது. அது அன்பினையும், நன்றியறிதலையும் மரியாதையையும் உள்ளடக்கியுள்ளது. பொதுவாக ஐந்தாம் கற்பனையானது இளைஞர்களுக்கு எழுதப்பட்டுள்ளது என எடுத்துக்கொள்ளப்படுகிறது. உண்மைக்கு அப்பால் எதுவும் இருக்கமுடியாது. இயற்கையாகவே பிள்ளைகள் முதலில் இளையவர்களாய் இருப்பதால், சந்தேகமில்லாமல் பிள்ளைகளுக்காக கூறப்படுகிறது. ஆனால் முடிவாக குழந்தைப் பருவத்தைக் கடந்தவுடன் இந்தக் கற்பனை அதன் பாதியளவு முக்கியத்துவத்தை இழக்கிறது. தெரிவிக்கப்பட்டபடி 'மரியாதை' என்ற வார்த்தை கீழ்ப்படிதலுக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றுகிறது. காலப்போக்கில் பிள்ளைகள் வளர்ந்து முழுமையான சொந்தப் பொறுப்புள்ள ஆண், பெண் பருவத்தை அடையும்போது அவர்கள் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இல்லை, இருப்பினும் பெற்றோருக்கு அவர்களது கடமை நிறுத்தப்படாமலிருக்கிறதா? முழுமையாகக் கொடுத்துத் தீர்க்க முடியாமல் அவர்கள் அவர்களது பெற்றோருக்குக் கடன்பட்டிருக்கிறார்கள். தங்கள் பெற்றோரை உயர்ந்த மதிப்பில் வைத்து அவர்களிடம் பயபக்தியுடன் இருப்பது மட்டுமே மிகச்சிறிய அளவில் பிள்ளைகளால் செய்ய முடிகிறது. குறைவற்ற முழுமையான முன்மாதிரியான இயேசுவிடம் கீழ்ப்படிதல் மற்றும் மதிப்பு மரியாதை கொடுத்தல் ஆகிய இருபண்புகளும் தெளிவாகக் காட்டப்படுகிறது.
மெய்யாகவே பிந்திய ஆதாம் இவ்வுலகிற்கு வந்தார். முந்திய ஆதாமைப் போல் - மனித இனத்தின் மேலான மகிமை பொருந்தினவராய் அல்ல: உடலும் உள்ளமும் முழு வளர்ச்சியடைந்தவராக அல்ல - ஆனால் குழந்தைப் பருவத்தைக் கடக்க வேண்டிய சிறு குழந்தையாக வந்தார். ஐந்தாம் கற்பனையினைச் சார்ந்த அவரது குழந்தைப்பருவம் மிக முக்கியத்துவமும் மதிப்பும் வாய்ந்தது. குழந்தைப்பருவத்தில் இயேசுவானவர் அவரது தாய் மரியாள் மற்றும் சட்டப்படி தகப்பன் யோசேப்பு ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருந்தார். லூக்கா இரண்டாம் அதிகாரத்தில் இது அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளது. அவருக்குப் பன்னிரண்டு வயதான போது பஸ்கா பண்டிகை முறைமையின்படி எருச்லேமுக்குப் போனார். இங்கு கொடுக்கப்பட்டுள்ள விவரம், உரிய கவனம் செலுத்தினால், ஆழ்ந்த குறிப்பினைத் தெரிவிக்கிற. தாய் உள்ளது. பண்டிகை முடிந்தவுடன், யோசேப்பும் மரியாளும், இயேசு தங்களோடு வருகிறார் என்று நினைத்து, நண்பர்களுடன் நாசரேத்திற்கு திரும்பினார்கள். ஆனால் இயேசு எருசலேமில் இருந்துவிட்டார். ஒருநாள் பிரயாணம் வந்தபின்பு, அவர் வராததைக் கண்டுபிடித்தனர். உடனே அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே அவரைத் தேவாலயத்தில் கண்டனர். அவருடைய தாயார் அவரை நோக்கி: “மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே" என்றாள் (லூக்கா 2:48).
"விசாரத்தோடே" என்ற வார்த்தை, அவர் தாயாரின் உடனடி எல்லையை விட்டு வெளியே சென்றதில்லை என்னும் உண்மையினை உணர்த்துகிறது. தேடிய போது உடனடியாகக் காணமுடியவில்லையே என்பது அவர்களுக்குப் புதிய, விநோதமான அனுபவமாயிருந்தது. மேலும் யோசேப்பும், மரியாளுடனிருந்து ''விசாரத்தோடே" தேடினார் என்பது நாசரேத்து வீட்டில் அவர்களிடையேய இனிய உறவினை வெளிப் படுத்துகிறது. அவர்கள் வினவியதற்கு இயேசு கொடுத்த பதிலைச் சரியாகப் புரிந்து கொண்டால், அவர் தனது தாயார் மீது வைத்திருந்த மரியாதையை வெளிப்படுத்துகிறது. இயேசுவானவர் தன் தாயைக் கடிந்து கொள்ளவில்லை என்ற Dr. காம்பெல் மார்கனின் கூற்றை நாம் ஒத்துக் கொள்கிறோம். "என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா?" என்பதில் "தாயே, நிச்சயமாக என்னை உங்களுக்கு நன்றாகவே தெரியும் மேலும் பிதாவுக்கடுத்தவைகளிலிருந்து தடுத்து நிறுத்த எதாலும் முடியாது என்பதும் உங்களுக்குத் தெரியும்" என்று கூறுவதுபோல் உள்ளது என ஏற்கனவே விவரித்தவர் நன்றாகக் கூறுகிறார். "பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்" என்ற பின்தொடர்ச்சியை வாசிக்கும்போது இன்னும் அருமையாக உள்ளது. இவ்வாறு எல்லா வேளைகளிலும் கிறிஸ்துவானவர் பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற முன்மாதிரியை வைத்துப் போயிருக்கிறார்.
மேலும் மரியாள் யோசேப்பிடம் இருந்த கிறிஸ்துவின் கீழ்ப்படிதலின் வருடங்கள் முடிவடைந்தன. ஆனால் 'மரியாதை 'யின் வருடங்கள் அவ்வாறில்லை. சிலுவையின் அகோர வேதனைகளுக்கு மத்தியில், மனித வாழ்க்கையின் பயங்கரமான இறுதி மணிவேளையில், ஆண்டவராகிய இயேசு, தன்னை நேசித்த மரியாளையும் தான் நேசித்தவரையும் எண்ணிப் பார்க்கிறார். மரியாளது தற்சமயத் தேவையினை எண்ணி, எதிர்காலத் தேவையினைக் கவனிக்க தனது அன்பை ஆழமாக அறிந்திருந்த தன் சீஷனிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அந்த நேரத்தில் மரியாளை நினைத்து, அவர்களுக்கு மரியாதை கொடுத்தது, அவருக்கு வேதனையின் மேலுள்ள வெற்றியைக் காண்பிக்கிறது.
மரியாளை 'ஸ்திரீயே' என்று ஆண்டவர் கூறியதற்கு ஒருவேளை விளக்கம் தேவைப்படுகிறது. நான்கு சுவிசேஷங்களிலும் எழுதப்பட்டபடி ஒருமுறை கூட அவர் 'தாயே' என்று கூறவில்லை. இன்றைய நாட்களில் வாழும் நமக்கு இதற்கான காரணத்தை உணர்ந்து கொள்வது கடினமல்ல. சர்வ ஞானமுள்ள நம் ஆண்டவர் பல நூற்றாண்டின் நிகழ்வுகளையும், எதிர்காலத்தில் கன்னிமரியாள் வழிபாடு கட்டி எழுப்பப்படுவதையும் வெறுப்புடன் கணித்து தேவகுமாரனுக்கே உரிய கனத்தை, "ஆண்டவரின் தாயார்" என்று மரியாளின் உருவ வழிபாட்டிற்கு செலுத்துவார்கள் என்ற காரணத்தாலேயே 'தாயார்' என்று கூப்பிடுவதைத் தவிர்த்து 'ஸ்திரியே' என்றார்.
சுவிசேஷங்களில் இருமுறை நம் ஆண்டவர் மரியாளை 'ஸ்திரியே என்று அழைத்ததைக் காண்கிறோம். இந்த இரு முறையும் யோவான் சுவிசேஷத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக எழுதுபவர்கள் அவரை மனித உறவுகளில் முன் வைக்கிறார்கள். ஆனால் நான்காம் சுவிசேஷத்தில் அவ்வாறில்லை. யோவான் சுவிசேஷம் கிறிஸ்துவை தேவகுமாரனாக காட்டியுள்ளது. தேவ குமாரனாக அவர் அனைத்து மனித உறவுகளுக்கும் அப்பாற்பட்டுள்ளார். எனவே மரியாளை ஆண்டவராகிய இயேசு 'ஸ்திரீயே' என்று அழைப்பது முற்றிலும் இசைவாக உள்ளது.
சிலுவையிலிருந்த நம் ஆண்டவர், மரியாளைத் தனக்கு மிகவும் அன்பாயிருந்த அப்போஸ்தலனின் பராமரிப்பில் விட்ட அந்தச் செய்கை யானது, மரியாளின் விதவையிருப்பைக் காணும் பொழுது, நன்கு புரிகிறது. யோசேப்பின் மரணத்தை சுவிசேஷங்கள் திட்டவட்டமாகப் பதியாவிட்டாலும், ஆண்டவராகிய இயேசு தன் பொது ஊழியத்தைத் துவங்கும் சிறிது காலத்திற்கு முன்னதாக யோசேப்பு மரித்தார் என்பதில் சந்தேகமில்லை. கிறிஸ்துவானவர் பன்னிரண்டு வயதாயிருக்கும் போது, லூக்கா இரண்டாம் அதிகாரத்தில் கூறப்பட்ட சம்பவத்திற்குப்பிறகு, மரியாளின் கணவர் யோசேப்பைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை. யோவான் இரண்டாம் அதிகாரத்தில் மரியாள் கானாவூர் கலியாணத்தில் இருக்கிறார்கள். ஆனால் யோசேப்பு அங்கிருந்தாரா என்பது பற்றி மிகச் சிறிய குறிப்புகூட இல்லை. மரியாளின் விதவையிருப்பைக் கருத்தில் கொண்டும், தான் உடலளவில் இருந்து மரியாளுக்கு ஆறுதலாய் இருக்கமுடியாத வேளை வந்தது என்பதைக் கருத்தில் கொண்டும் அவரது அன்பின் பராமரிப்பு வெளிப்படுத்தப்படுகிறது.
புத்திமதியாக ஒரு சுருக்கமான வார்த்தை கூற அனுமதியுங்கள். அநேகமாக இந்த வரிகள், உயிருடன் தங்கள் தகப்பன், தாய் உள்ள பெரியவர்கள் வாசிக்கக்கூடும். நீங்கள் எவ்வாறு அவர்களை நடத்துகிறீர்கள்? நீங்கள் உண்மையாக அவர்களுக்கு மரியாதை செய்கிறீர்களா? கிறிஸ்து சிலுவையில் காட்டிய முன்மாதிரி உங்களை வெட்கமடையச் செய்கிறதா? நீங்கள் ஒருவேளை இளைஞராகவும் திடகாத்திரமாகவும் இருக்கலாம். உங்கள் பெற்றோர் நரைத்த தலையுடன், உடல் மனவலிமை குன்றியிருக்கலாம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் கூறுகிறார் "உன் தாய் வயது சென்றவளாகும் போது அவளை அசட்டை பண்ணாதே" நீதிமொழிகள் 23:22. நீங்கள் பணம் படைத்தவர்களாகவும் அவர்கள் ஏழ்மை நிலையிலும் இருக்கலாம். அப்பொழுது அவர்களுக்குத் தேவையான பொருட்களை அளிக்கத் தவறிவிடாதீர்கள். அவர்கள் தொலைவிலுள்ள மாநிலத்திலோ, தூர தேசத்திலோ வசிக்கலாம் அப்பொழுது அவர்களது கடைசிநாட்களில் அவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய இனிமையான பாராட்டும் வார்த்தைகளை எழுதாமலிருந்து விடாதீர்கள். இவைகள் புனிதமான கடமைகள். "உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணு."
3. இங்கே நாம் யோவான் இரட்சகரின் பக்கம் திரும்பியிருப்பதைக் காண்கிறோம்.
பிதாவின் கரத்தில் கிறிஸ்து சிலுவையில் பட்டபாடுகளைத்தவிர, ஒருவேளை அப்போஸ்தலர்களால் அவர் கைவிடப்பட்டது, அவர் பருகிய பானத்தின் மிகக் கசப்பான துகள்களாக இருந்திருக்கும். அவருடைய சொந்த ஜனங்களாகிய யூதர்களே அவரை வெறுத்து, ஏற்றுக்கொள்ள மறுத்தது மிகக் கொடுமையானதாகவும், மிக வேதனை நிறைந்ததாகவும் இருந்திருக்கும். இதைவிட மோசமானது என்னவென்றால், அவருடனே இருந்த பதினொருவர் ஆண்டவரின் நெருக்கடியான நேரத்தில் அவரை விட்டு நீங்கியதாகும். அவர்களது விசுவாசமும் ஆண்டவரிடம் உள்ள அன்பும் எந்த அதிர்ச்சியிலும் மாறுதலின்றி ஒரே சீராக இருக்கும் என ஒருவர் எண்ணியிருக்கலாம். ஆனால் அது அவ்வாறன்று, "சீஷர்களெல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள்" (மத்தேயு 26:56) என்று பரிசுத்த வேதாக மத்தில் வாசிக்கிறோம். சொல்லமுடியாத துயர நிகழ்வு. கெத்செமெனே தோட்டத்தில் ஒரு மணிநேரமாவது அவரோடு “விழித்திருக்கத் தவறியது நம் மனதைச் செயலிழக்கச் செய்கிறது, மேலும் அவரைக் கைது செய்தபோது, அவரை விட்டுச் சென்றது ஏறக்குறைய புரிந்து கொள்ள முடியாமல் நம்மைக் குழப்புகிறது. கசப்பான அனுபவங்களிலிருந்து, நம் இருதயம் எவ்வளவு வஞ்சகம் நிறைந்தது என்பதையும், நம் விசுவாசம் எவ்வளவு வலுக்குறைந்தது என்பதையும், சோதனை நேரத்தில் நாம் எவ்வளவு பரிதபிக்கப்படும் விதமாய் பலவீனமானவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளவில்லையா! ஆண்டவரின் கிருபை இல்லாவிடில் மிகச்சிறிய துயரமும் நம்மை வீழ்த்துவதற்குப் போதுமானதாகும். நம்மைக் கட்டுப்படுத்துகிற, தாங்குகிற ஆண்டவரின் வலிமை நம்மை விட்டு விலகினால் எவ்வளவு காலம் நாம் நிலைத்து நிற்க முடியும்?
ஆண்டவராகிய இயேசு தம் சீஷர்களிடம், நெருங்கி வரும் ஆபத்தை எதிர்கொள்ளும் மன உறுதியின்மையினை, முறையாக எச்சரித்திருக்கிறார். "அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி : மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்" (மத்தேயு 26:31). பேதுரு மட்டுமல்ல மற்ற அப்போஸ்தலர்கள் அனைவரும், தாங்கள் இயேசுவின் பக்கம் நிலைத்து நிற்போம் என்ற தங்கள் தீர்மானத்தை உறுதியாகக் கூறினார்கள். "அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்க வேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்க மாட்டேன் என்றான். சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள்" (மத்தேயு 26:35). இருந்தபோதிலும் அவருடைய வார்த்தை மெய்யாகவே நிரூபிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் இழிவாக அவரை விட்டு ஓடிவிட்டனர். அவருடைய மகிமையின் மேல் எவ்வாறு இது பிரதிபலித்தது! அவர்களுடைய பாவமான நிலையினால் ஆண்டவராகிய இயேசுவை அவருடைய பகைவர்களின் அவமதிப்பிற்கும் ஏளனத்திற்கும் ஒப்புக்கொடுத்தார்கள். ஏனென்றால் "பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக் குறித்தும் போதகத்தைக் குறித்தும் விசாரித்தான்" (யோவான் 18:19) என்று வாசிக்கிறோம். காலியிடங்களை நிரப்புவது கடினமல்ல. சந்தேகமில்லாமல், காய்பா இயேசுவிடம் எத்தனை சீஷர்கள் இருந்தனர்? இப்பொழுது அவர்களுக்கு நடந்தது என்ன? ஆபத்து நேரிட்ட போது அவரை விட்டுவிட்டுச் சென்றதன் காரணம் என்ன? என்று வினவினான். ஆனால் கவனியுங்கள். இந்தக் கேள்விக்கு இரட்சகர் பதில் ஒன்றும் கூறவில்லை. அவர்கள் அவரை விட்டு விட்டுச் சென்றாலும், அவர்களுக்குப் பொதுவான விரோதியிடம் அவர்களைக் குற்றஞ்சாட்ட மாட்டார்.
சீஷர்கள் அவரிடம் இடறலடைந்ததால் அவர்கள் அவரைக் கைவிட்டுச் சென்றனர். "இந்த இராத்திரியிலே, நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்." மத்தேயு 26:31. இங்கே கிரேக்க வார்த்தையை மொழிபெயர்க்கும் போது "இடறலடைதல்" என்ற வார்த்தையை "அவதூறு செய்து ஒருவர் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தல்" என்றும் ஈடாகச் சொல்லலாம். அவரோடுகூட இருப்பதற்கு அவர்கள் வெட்கப்பட்டனர். அவரோடு இருப்பது தங்களுக்குப் பாதுகாப்பல்ல என்றும் கருதினார்கள். அவர் தன்னையே ஒப்புக்கொடுத்தால், அவரை மேற்கொண்ட கொந்தளிப் பிலிருந்து தங்களுக்கு எங்காவது புகலிடம் தேடிக்கொள்வது சிறந்தது என்று கருதினார்கள். இது மனுஷீகத்திலிருந்து வந்தது.
தெய்வீகத்திலிருந்து பார்த்தால், பிதாவின் பாதுகாக்கும் மற்றும் ஆதரவளிக்கும் கிருபை விலகியதால் கிறிஸ்து சீஷர்களால் கைவிடப்பட்ட நிலையில் இருந்தார். அவரைக் கைவிடும் பழக்கம் அவர்களுக்கு இருந்ததில்லை. பரத்திலிருந்து செயல்திறன், ஆர்வம், மற்றும் அன்பு அவர்கள் மீது இறங்கியிருந்தால் அவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆனால் கிறிஸ்து எவ்வாறு பாரத்தைச் சுமந்து அந்நாளின் வெப்பத்தைத் தாங்கியிருக்க முடியும்? தன்னைப் பிழிந்தெடுக்கும் இடத்திற்கு எவ்வாறு தனியாகச் சென்றிருக்க முடியும்? அவர்கள் விசுவாசத்தோடு அவரில் நிலைத்திருந்தால் அவருடைய துயரம் எவ்வாறு கடுமை குறையாததாக இருந்திருக்கும்? இல்லை, இல்லை அவ்வாறில்லை. எந்த ஒரு சிருஷ்டியாலும் கிறிஸ்துவிற்கு விடுதலையோ ஆறுதலோ கிடைக்காது. எனவே பிதாவின் கோபாக்கினை இறுகப் பற்றிப்பிடிக்க அவர் தனியாக விடப்பட வேண்டும். பிதா சற்று நேரம் அவருடைய தெய்வீக பலத்தையும் வல்லமையையும் நிறுத்தி வைத்தார்; அப்போது சிம்சோனின் தலைமயிர் சிரைக்கப்பட்டதும், அவன் பலம் இழந்தது போன்று இருந்தது. "கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பெலப்படுங்கள்" என்று அப்போஸ்தலர் கூறுகிறார். அவருடைய வல்லமை நிறுத்திவைக்கப்பட்டால், நம் நோக்கங்களும் தீர்மானங்களும் சோதனையின் முன்பு சூரியனைக்கண்ட பனிபோல உருகிப்போகும்.
அப்போஸ்தலரின் கோழைத்தனமும் நம்பிக்கைத் துரோகமும் தற்காலிகமானது. பிறகு பதினொரு சீஷர்களும் இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள் (மத்தேயு 28:6). ஆனால் பதினொரு வரில் ஒருவன், அவர் கல்லறையிலிருந்து வெற்றி சிறக்க எழுந்திருக்கும் முன்னமே அவரைத் தேடினான் என்பது மகிழ்ச்சி அளிக்கவில்லையா? ஆம் அவர் வெட்கத்தின் சிலுவையில் தொங்கும்போதே அவரைத் தேடினான். இந்த நபர் யாராயிருந்திருக்கக்கூடும்? அவருடைய உன்னதமான அன்பினை அப்போஸ்தலர் குழுவில் யாரால் விளக்கிக் காட்ட முடியும்? புனித திருமறையில், அவருடைய அடையாளத்தை மறைத்தாலும், அவருடைய பெயரைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. நாம் படிக்கும் திருமறையில் யோவான் சிலுவையினடியில் நின்றான் என்பது திருமறையின் தெய்வீகத் தூண்டு தலுக்கு அமைதியான மற்றும் போதுமான சாட்சியாக உள்ளது. திட்டமிடப் படாமல் இவ்வார்த்தையின் ஊடாக இணைந்து செயல்படும் தன்மை, நம் வேதாகமத்தின் ஆரம்ப மனித ஆற்றலுக்கும் மேற்பட்டதென்பதற்கு முக்கிய சான்றாகும். பதினொருவரில் வேறு எவரேனும் சிலுவையினருகில் இருந்தாரா என்பதற்கு சிறுகுறிப்பு ஒன்றுமில்லை. ஆனால் சிந்தனையாற்றல் உள்ள வாசகர் அங்கு இயேசு நேசித்த சீஷனை எதிர்பார்ப்பார்கள். அங்கே யோவான் இருந்தார். இரட்சகரின் பக்கம் யோவான் திரும்பி வந்தார். அவரிடமிருந்து ஆசீர்வாதமான பொறுப்பை ஏற்றுக் கொண்டார். வேதாகமத்தில் அமைதியாக இசைந்து செயல்படும் தன்மை எவ்வளவு எளிமையாகவும் குறைவற்றதாகவும் உள்ளது!
மீண்டும் ஒரு சுருக்கமான உணர்த்தும் வார்த்தைகள். இதை வாசிப்பவரில் எவராவது ஆண்டவரிடம் இனிமையான தொடர்பு இல்லாமல், நம்பிக்கையைத் துறந்து, விசுவாசத்தை விட்டு விலகி, இரட்சகரின் பக்கமிருந்து அலைந்து திரிவது உண்டா? ஒருவேளை வேதனையின் நேரம் அவரை மறுதலித்திருக்கலாம்! ஒருவேளை சோதனையின் நேரம் நீங்கள் தவறியிருக்கலாம்! அவருடைய விருப்பத்தைவிட உங்கள் விருப்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
நீங்கள் சுமந்திருக்கிற அவருடைய நாமத்திற்கு மரியாதை கொடுக்கத் தவறியிருக்கலாம். குற்ற உணர்வாகிய அம்பு உங்கள் மனசாட்சியில் நுழையட்டும். தெய்வீக கிருபை உங்கள் இருதயத்தை இளகப் பண்ணட்டும். தேவனின் வல்லமை உங்களை கிறிஸ்து பக்கம் மீண்டும் இழுக்கட்டும் ஏனென்றால் அவரிடம் மட்டுமே உங்கள் ஆத்துமாவிற்கு திருப்தியும் சமாதானமும் கிடைக்கும். இங்கே உங்களுக்கு உற்சாகமூட்டுதல் உள்ளது. யோவான் திரும்பியபோது, கிறிஸ்து அவரை கடிந்து கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக அவரது அதிசயமான கிருபை அவனுக்கு சொல்லமுடியாத சிறப்புரிமையைக் கொடுத்தது. நீங்கள் அலைந்து திரிவதை விட்டுவிட்டு உடனடியாக கிறிஸ்துவிடம் திரும்புங்கள். அவர் உங்களை உற்சாகத்துடன் வரவேற்பார். யாருக்குத் தெரியும், மதிப்பிற்குரிய பொறுப்பு உங்களுக்காகக் காத்திருக்கும்!
4. இங்கே கிறிஸ்துவின் விவேகத்திற்கான விளக்கத்தைக் காண்கிறோம்.
மரியாளை சீஷனிடம் ஒப்படைப்பது இயேசுவின் மென்மையான அன்பையும், எதிர்காலத்தை முன்னறியும் திறனையும் வெளிப்படுத்துகிறது என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். யோவான் நமது இரட்சகரின் விதவைத் தாயாரின் பொறுப்பை எடுப்பது என்பது ஒரு ஆசீர்வாதமான பொறுப்பு ஆகும். இருப்பினும் அது ஒரு மதிப்பு மிக்க பரம்பரைச் சொத்து ஆகும். கிறிஸ்து யோவானிடம் ''இதோ உன் தாய்" என்பது, மரியாள் உனக்கு சொந்தத் தாயாக இருக்கட்டும்; என் மீது உள்ள உன் அன்பு அவர்களிடம் மென்மையான மரியாதையாக விளங்கட்டும் என்பது போல் இருந்தது.
முற்காலத்தில் இயேசுகிறிஸ்து ஞானமாகவும் விவேகமாகவும் நடப்பார் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. ஏசாயா தீர்க்கதரிசி மூலம் "இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார்," என்று கூறப்பட்டுள்ளது. தனக்கு அன்பான சீஷனிடம் மரியாளை ஒப்படைத்ததில் இரட்சகர் தனது ஞானமாக பகுத்தறிந்து செயலாற்றும் தன்மையினை வெளிப்படுத்தியுள்ளார். ஒருவேளை இயேசுவை நன்கு புரிந்து கொண்டவர் அவருடைய தாயாரைத் தவிர வேறொருவரும் இல்லை. மேலும் அவருடைய அன்பைப் புரிந்து கொண்டவர் யோவானைத் தவிர எவரும் இல்லை. எனவே பொதுவாக பிறர் உணர்வுகளை உணரும் திறன் கொண்ட இருவரும் நெருங்கிய ஒப்பந்தத்தில் பிணைக்கப்பட்டு, கிறிஸ்துவோடும் இணைந்திருக்கின்றனர். இவ்வாறு மரியாளைப் பராமரிப்பதற்கு யோவானைத் தவிர பொருத்தமானவர் எவருமில்லை. அதேபோன்று யோவானும் மரியாளின் தோழமையில் அதிகம் மகிழ்ச்சியடைவார்.
மேலும் யோவானுக்கு அதிசயமான, பெரும் மரியாதைக்குரிய ஒருவேலை காத்திருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
வருடங்களுக்கு பிறகு இயேசுவானவர் யோவானுக்கு இவ்வுலகு முடியும்போது என்ன நடக்கும் என்ற வெளிப்பாட்டை காண்பிக்கிறார். முப்பது ஆண்டுளாக நம் இரட்சகரோடு நெருங்கிய உறவில் இருந்த மரியாளைப் பராமரிப்பதோடு இன்னும் சிறப்பாக ஆண்டவரின் வேலை ஆரம்பமாகும் நேரத்திற்காக தன்னைத் தகுதிப்படுத்திக் காத்திருந்தான். எனவே மரியாளையும் யோவானையும் ஒன்றாகக் கூட்டிச் சேர்த்தது தனிச்சிறப்புள்ள பொருத்தமானதாகும். மரியாளுக்கு பொருத்தமான வீட்டைத் தேர்ந்தெடுத்ததும், தனக்கு அன்பாயிருந்த சீஷனுடனிருக்க மரியாளை ஒழுங்கு படுத்தியதுமான கிறிஸ்துவின் விவேகம் வியந்து பாராட்டப்பட வேண்டியதே.
அடுத்த குறிப்பிற்குச் செல்லுமுன்னதாக, மரியாளை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பிறகு உள்ள நிகழ்வுகள் யோவான் சுவிசேஷம் 20 ஆம் அதிகாரத்தில் உள்ளது. அதில் பேதுருவும் யோவானும் வெறுமையான கல்லறைக்குச் சென்றனர். யோவான் பேதுருவைப் பார்க்கிலும் துரிதமாய் ஓடி முந்திக் கல்லறையிடம் வந்து, உள்ளே போகவில்லை; தனிப்பட்ட தன்மையுள்ள பேதுரு, கல்லறைக்குள்ளே பிரவேசித்து, சீலைகள் சுற்றி வைக்கப்பட்டிருப்பதையும் கண்டான். பிறகு யோவானும் பிரவேசித்து, கண்டு "விசுவாசித்தான்" ஏனெனில் இந்த நேரம்வரை கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்திருப்பார் என்ற வேதவாக்கியத்தை உணராதிருந்தார்கள். மேலும் யோவான் விசுவாசித்ததன் விளைவாக "பின்பு அந்த சீஷர்கள் தங்களுடைய வீட்டிற்குத் திரும்பிப் போனார்கள்" என்று யோவான் 20:10 இல் வாசிக்கிறோம். ஏன் இவ்வாறு செய்தார்கள் என்று கூறப்படவில்லை. ஆனால் யோவான் 19:27 இன்படி அதன் விளக்கம் தெளிவாக உள்ளது. அங்கே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. "அந்த நேரத்திலிருந்து அந்த சீஷன் மரியாளைத் தன் சொந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.'' இப்பொழுது இரட்சகர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அறிந்தவுடன், அந்த நல்ல செய்தியை மரியாளிடம் கூற "வீட்டிற்கு " விரைந்தான். இந்த சந்தோஷ செய்தியைக் கேட்டு மரியாளைவிட யாரால் அதிகக் களிப்பாயிருக்கக்கூடும்! இது வேதாகமத்தில் அமைதியாக மறைந்து முரண்பாடற்று செயல்படும் தன்மைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாகும்.
5. இங்கே நாம் ஆவிக்குரிய உறவுகள் மற்றும் இயற்கையான பொறுப்புகளைப் புறக்கணிக்கக்கூடாது என்று பார்க்கிறோம்.
ஆண்டவராகிய இயேசு பாவிகளுக்காக இரட்சகராக மரித்தார். இப்பூவுலகில் என்றுமே கண்டிராத பெரும் முக்கியத்துவம் வாய்ந்த, வியக்கத்தக்க வேலையில் ஈடுபட்டிருந்தார்.
உலகம் எதற்காக உண்டாக்கப்பட்டதோ, எதற்காக மனித இனம் சிருஷ்டிக்கப்பட்டதோ, எதற்காக எல்லாக்காலங்களும் காத்திருக்கிறதோ மேலும் எதற்காக ஆதி அந்தமுமில்லாத என்றும் நிலைத்திருக்கும் வார்த்தை மனுஉருவெடுத்ததோ அதற்காசு அந்தப் பணியினைச் செய்ய முற்பட்டார். எனினும் இயற்கையான பிணைப்புகளின் பொறுப்புகளை கவனிக்கத் தவறவில்லை. மாம்சத்தின்படி தன் தாய்க்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்து வைக்கத் தவறவில்லை.
இந்நாட்களில், அநேகர் தங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொள்ளத் தேவையான பாடம் இங்கு உள்ளது. கடமையோ, வேலையோ எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், உறவினர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளிலிருந்தோ, உரிமை கோருபவர்களை கவனியாமலோ இருக்க முடியாது. தங்கள் குழந்தைகளை விட்டுவிட்டு, அல்லது அவர்களைச் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி அந்நியர் பராமரிப்பில் விட்டுவிட்டு புறமதத்தினர் நாடுகளுக்கு ஊழியஞ் செய்யச் செல்பவர்கள் நம் இரட்சகரின் வழியை பின்பற்றாதவர்களாகும். பொதுக்கூட்டங்களில் அதிக நேரம் செலவழிப்பவர்கள் அது ஆவிக்குரிய கூட்டங்களாக இருந்தாலும், அல்லது சேரிகளுக்குச் சென்று ஏழைகள் மற்றும் தேவைபடுபவருக்கு ஊழியம் செய்தாலும், தன் சொந்தக் குடும்பத்தை விசாரிக்காமல் இருந்தால் கிறிஸ்துவின் பெயருக்கு அவதூறு கொண்டுவருபவர்களாய் இருப்பார்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் கிறிஸ்தவப் பணியில் முன்னணியில் இருந்தாலும், பிரசங்கிப்பதிலும், கற்றுக்கொடுப்பதிலும் மிக சுறுசுறுப்பாயிருந்து, தன் சொந்த மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தனது பொறுப்பைச் செய்யாதவர்கள், சிலுவையில் கிறிஸ்து காட்டிய முன்மாதிரியை படித்து கடைபிடிக்க வேண்டும்.
6. உலகளாவிய தேவை முன்மாதிரியாக எடுத்துக்காட்டப்படுவதை இங்கு காண்கிறோம்.
திருமறையில் சொல்லப்பட்டிருக்கும் மரியாள் மூடநம்பிக்கையாய் பின்பற்றப்படுகிற மரியாளிலிருந்து எவ்வளவு வேறுபட்டவர்! அவர்கள் பெருமையுள்ள மெடோனாவாக அல்ல ஆனால் நம்மைப் போன்று வீழ்ச்சியடைந்த இனத்தின் ஒரு அங்கத்தினர், இயற்கையாகவும் பயிற்சியினாலும் ஒரு பாவி. கிறிஸ்து பிறக்கும் முன்பு "என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது" லூக்கா 1:46,47 என்று அறிவிக்கிறார்கள். இப்பொழுது ஆண்டவராகிய இயேசு மரிக்கும்போது அவர்கள் சிலுவையின் முன்பாக நிற்கிறார்கள். கர்த்தருடைய வார்த்தை இயேசுவின் தாயாரை தேவதை களின் ராணியாக அல்லாமல் இரட்சகரில் களிகூருபவராக அறிமுகப்படுத்து கிறார். அவர்கள் "ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள்ஆனால் ஸ்திரீகளுக்கு மேல் அல்ல; மீட்பரின் தாய் என்ற உயர்ந்த மதிப்புடையவராக இருப்பினும் அவர்கள் வீழ்ச்சியடைந்த மனித இனத்தின் உண்மையான அங்கத்தினர், இரட்சகர் தேவைப்படும் ஒரு பாவி.
மரியாள் சிலுவையண்டையில் நின்றார்கள். அவர்கள் அங்கே நிற்கையில் நம் இரட்சகர் "ஸ்திரீயே, அதோ உன் மகன்" என்றார் (யோவா.19:26), உலகத்தையும் சுயத்தையும் விட்டுத்திரும்பி, பாவிகளுக்காக மரித்த இரட்சகரை விசுவாசத்தால் நோக்கிப் பார்ப்பதே, ஆதாமின் வழிவந்த ஒவ்வொருவரின் தேவை என்று சுருக்கமாக ஒருவார்த்தையில் வெளிப் படுத்தப்படுகிறது. இரட்சிப்பின் வழிக்கான தெய்வீகச் சுருக்கம் அங்கே உள்ளது. வருங்கோபாக்கினையிலிருந்து விடுதலை, பாவமன்னிப்பு மற்றும் ஆண்டவரோடு ஏற்றுக்கொள்ளப்படுதல் ஆகியவை, சிறப்பான செய்கை யாலோ, நன்னடத்தையாலோ அல்லது மதசம்பந்தமான கட்டளைகளாலோ கிடைப்பதில்லை. இல்லை, இரட்சிப்பு நோக்கிப் பார்ப்பதன் மூலம் வருகிறது "உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டியை நோக்கிப்பார்" வனாந்தரத்தில் சர்ப்பத்தால் கடிக்கப்பட்ட இஸ்ரவேலர், யெகோவா நியமித்த அவர்கள் விசுவாசத்தின் பொருளைப் பார்த்த ஒரு பார்வையால் குணமடைந்தார்கள் எனவே இன்று குற்றத்திலிருந்தும், பாவ வலிமையி லிருந்தும் மீட்பு, உடைந்த சட்டத்தின் சாபத்திலிருந்தும், சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை, ஆகியவை கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தினால் மட்டுமே கிடைக்கிறது. "சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு உயர்த்தப்பட வேண்டும்" (யோவான் 3:14-15). ஒரு பார்வையில் ஜீவன் இருக்கிறது. இதை வாசிப்பவர்களே, அந்த தெய்வீக துயருற்றவரை நீங்கள் இவ்வாறு நோக்கிப் பார்த்ததுண்டா? நம்மைத் தேவனிடம் கூட்டிச் சேர்ப்பதற்காக, அநீதியுள்ளவர்களுக்காக நீதிமான் சிலுவையில் மரித்ததை நீங்கள் பார்த்ததுண்டா? கிறிஸ்துவின் தாய் மரியாள் அவரை நோக்கிப் பார்க்க வேண்டியிருந்தது. நீங்களும் அவ்வாறு தானே கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து இரட்சிப்படையுங்கள்.
7. கிறிஸ்துவின் முழுநிறைவின் அற்புதமான ஒத்திசைவை இங்கே நாம் காண்கிறோம்.
முழுநிறைவான மனித அன்பும் அவருடைய தெய்வீக மகிமையும் ஒருங்கிணைந்திருப்பது, அவரது ஆள்தத்துவத்தின் அற்புதங்களில் ஒன்றாகும். எல்லாவற்றிற்கும் மேலாக அவரை ஆண்டவரராகக் காண்பிக்கும் சுவிசேஷம், வார்த்தை மாம்சமானது என்று அவரை மனிதனாகக் காட்டவும் கவனமாயுள்ளது. தெய்வீக நடத்துதலில் ஈடுபடுதல், அவருடைய அனைத்து மக்களின் எல்லாப் பாவங்களுக்கும் பரிகாரம் செய்தல், அந்தகார சக்திகளை இறுகப்பற்றிப் போரிடுதல் ஆகியவற்றில் ஈடுபட்ட போதிலும், இவையெல்லாவற்றிற்கு நடுவிலும் அவர் இன்னமும் மனித மென்மையான உணர்வுடனிருந்தது, இயேசுகிறிஸ்துவின் ஆள்தத்து வத்தின் முழுநிறை வினைக் காட்டுகிறது. மரணத் தருவாயிலும், அவருடைய தாயின் மீதிருந்த அக்கறை, அவருடைய குணாதிசயத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. ஒவ்வொன்றும் இயற்கையாகவும் முழுமையாகவும் இருந்தது. இயற்கையாகவே தோன்றும் அவருடைய எளிமை மிகவும் குறிப்பிடத்தக்கது. அங்கே பகட்டாரவாரமோ அல்லது ஆடம்பரமோ இல்லை. அநேகமாக அவருடைய வல்லமையான ஊழியங்கள் நெடுஞ்சாலையிலும், குடிசையிலும், துயரப்படுகிற சிறுகூட்டத்தின் மத்தியிலுமே நடைபெற்றது. இன்று இன்னமும் புரிந்து கொள்ளமுடியாத, அளவிடமுடியாத, அநேகமான அவருடைய வார்த்தைகள், சாதாரணமாக சில நண்பர்களுடன் அவர் நடந்து போகையில் சொல்லப்பட்டவையே ஆகும். சிலுவையிலும் அதே போன்று தான். வரலாறு எல்லாவற்றிலும் அவர் மிக வல்லமையான காரியங்களைச் செய்து கொண்டிருந்தார். அவர் ஈடுபட்டிருந்த கிரியைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவருடைய சிருஷ்டிப்பின் மகிமை, முற்றிலும் அற்பமானதாக மங்கிப்போகிறது. இருந்தபோதிலும் நாசரேத்து வீட்டில் தாயோடு ஒன்றாக இருந்திருந்தால் என்ன ஏற்பாடுகள் செய்திருப்பாரோ, அவ்வாறு தன் தாய்க்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்ய அவர் மறக்கவில்லை. பழைய ஏற்பாட்டில் சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. “அவர் நாமம் அதிசயமானவர் என்னப்படும்" (ஏசாயா 9:6). அவர் செய்ததெல்லாவற்றிலும் அவர் அதிசயமானவர். அவர் தாங்கிய எல்லா உறவுகளிலும் அவர் அதிசயமானவர். ஆள்தத்துவத்தில் அவர் அதிசயமானவர். மேலும் அவர் கிரியைகளெல்லா வற்றிலும் அவர் பரிசுத்தர். வாழ்விலும் அவர் பரிசுத்தர், சாவிலும் அவர் பரிசுத்தர், நாம் அவரை வியந்து போற்றுவோம்!