“எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன் என்றார்”. யோவான் 19:28.
"நான் தாகமாயிருக்கிறேன்." இந்த வார்த்தைகள் சிலுவையில் பாடுபட்டுக்கொண்டிருக்கும் இரட்சகர் தம் தலையைச் சாய்த்து தன் ஆவியை ஒப்புக்கொடுப்பதற்கு சற்று முன் கூறிய வார்த்தைகள். இவைகள் சுவிசேஷகனாகிய யோவானால் மாத்திரமே எழுதப்பட்டுள்ளன. மேலும் நாம் காணப்போவதைப் போல இவ்வார்த்தைகள் இயேசுவின் மனுஷீகத்தை குறிப்பதற்கு சான்றாக அமையும் வார்த்தைகளாக மட்டுமின்றி, அவரது தெய்வீக மகிமையை விளங்கச் செய்யும் வார்த்தைகளாக இவைகள் சுவிசேஷத்தில் இடம் பெற்றிருப்பது பொருத்தமானதே.
"நான் தாகமாயிருக்கிறேன்" பிரசங்கிக்க என்ன அருமையான வாக்கியம்! இவ்வாக்கியம் மிகச்சிறியது என்பது உண்மையே. இருப்பினும், எவ்வளவு பரந்த கருத்துடையது! எவ்வளவு சொற்திறமிக்கது! மேலும் எவ்வளவு துயரமிக்கது! வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவர் உலர்ந்த உதடுகளுடன் காணப்படுகிறார்! மகிமையின் கர்த்தருக்கு குடிப்பதற்கு ஒரு பானம் தேவை! பிதாவின் அன்பிற்குரியவர் துயர ஒலி எழுப்புகிறார். "நான் தாகமாயிருக்கிறேன். என்ன காட்சி! என்ன வார்த்தை இது! எளிதாக இவ்வார்த்தை விளங்கக்கூற வேண்டுமாயின், தேவனால் ஞான உணர்வு பெறாத எந்த ஒரு எழுத்தாளனாலும் இத்தகைய ஒரு காட்சியை வர்ணிக்க இயலாது.
முன்னர், பழைய ஏற்பாட்டில் தேவ ஆவியானவரால் ஏவப்பட்ட தாவீது மேசியாவைப்பற்றி, "என் ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள். என் தாகத்துக்கு காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்" என்று கூறுகிறான். (தீர்க்கதரிசியின் பார்வை எவ்வளவு ஆச்சரியப்படத்தக்க விதமாய் முன்னறிவதாக உள்ளது) எவ்வளவு பூர்ணமான தீர்க்கத்தரிசனமாய் கண்ட காட்சி! எந்த முக்கியமான அம்சமும் விடப்படவில்லை. அவரது மிகப்பெரிய துயரத்தின் ஒவ்வொரு முக்கிய விவரங்களும் முன்கூட்டியே எழுதப் பட்டுள்ளன. மிக நெருக்கமான நண்பன் காட்டிக்கொடுத்தல் (சங்.41:9), அவரால் இடறலடைந்த சீடர்களால் கைவிடப்படல் (சங்கீதம் 37:11) பொய்யான குற்றச்சாட்டு (சங்கீதம் 35:11), அவருடைய நியாயாதிபதிகளுக்கு முன்னர் மௌனமாயிருத்தல் (ஏசாயா 53:7), குற்றமற்றவராய் நிரூபிக்கப்படல் (ஏசாயா 53:9), அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்படல் (ஏசாயா 53:12), சிலுவையில் அறையப்படல் (சங்.22:16), காண்பவர்களால் நிந்திக்கப்படல் (சங்கீதம் 109:25), விடுவிப்பாரின்மையால் இகழப்படல் (சங்கீதம் 22:7-8), அவரது உடையின் பேரில் சீட்டுப்போடப்படல் (சங்கீதம் 22:18), சத்ருக்களுக்காக ஜெபித்தல் (ஏசாயா 53:12), தேவனால் கைவிடப்படல் (சங்கீதம் 22:1), தாகமாயிருத்தல் (சங்கீதம் 69:21), பிதாவின் கரங்களில் தம்முடைய ஆவியை ஒப்புக்கொடுத்தல் (சங்கீதம் 31:5), எலும்புகள் முறிக்கப்படாமல் இருந்தல் (சங்கீதம் 34:20), ஒரு ஐசுவரியவானின் கல்லறையில் அடக்கம் பண்ணப்படுதல் (ஏசாயா 53:8) ஆகிய அனைத்துமே, நிறைவேறுவதற்கு முன்னமே மிகத் தெளிவாக முன்னுரைக்கப்பட்டுள்ளன. வேதாகமம் எவ்வளவு நம்பிக்கை யூட்டும் சான்றினைக் கொண்டுள்ளது! ஆம், கர்த்தரின் பரிசுத்தவான்களே, எவ்வளவு திடமான அஸ்திவாரம் உங்கள் விசுவாசத்திற்காக அவரது மிகச்சிறந்த வார்த்தையில் இடப்பட்டுள்ளது!
“நான் தாகமாயிருக்கிறேன்" ஆண்டவர் அருளிய ஏழு வார்த்தைகளில் ஒன்றாக இச்சொற்கள் சுவிசேஷத்தில் எழுதப்பட்டது. விலையேறப்பெற்ற பொருள் பொதிந்ததாகவும், இதயங்களில் பொக்கிஷமாக காக்கத்தக்க தாகவும், நீண்ட தியானத்திற்கு பொருத்தமான விஷயங்களையும் கொண்ட மெய்யான நிகழ்வாய் அமைந்துள்ளது. இதற்கு முன்னர், சிலுவையில் இரட்சகர் அருளிய வார்த்தைகள் அனைத்துமே நமக்கு அதிகமாக போதிக்கத்தக்கதாக அமைந்துள்ளதைப் போன்றே, "நான் தாகமா யிருக்கிறேன்" என்பதும் நிச்சயமாக விதிவிலக்கான ஒன்றல்ல. அப்படியாயின் இதனின்று நாம் எதைப் பெறபோகிறோம்? இந்த சிலுவையில் கூறிய ஐந்தாம் வார்த்தை எப்பாடங்களை நமக்கு கற்றுத்தரப் போகிறது?
நாம் நமது கவனத்தை இவ்வார்த்தையில் பதிக்க முயலும்போது சத்திய ஆவியானவர் நமது புரிந்துகொள்ளும் ஆற்றலை பிரகாசிக்கச் செய்வாராக. "நான் தாகமாயிருக்கிறேன்"
1 கிறிஸ்துவின் மனுஷீகத்திற்கு (அவர் மனிதனாக இருந்தார் என்பதற்கான) சான்றினை இங்கு (இவ்வார்த்தையில்) பெறுகிறோம்.
ஆண்டவர் இயேசு தேவன் எனக்கூறின் அவர் தேவன் என்று சொல்லும் படியாக இருந்தார். ஆனால் மனிதன் எனக்கூறின் மனிதன் எனப்படும்படி யாகவும் இருந்தார். அவரது இத்தகையதன்மை அவசியம் நம்பப்படவும் வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. அது மனுஷீக பெருமை மிகுந்த காரணகாரியங்களைக் கொண்டு ஊகிக்கக் கூடிய ஒன்றல்ல. நமது ஆராதனைக்குரிய இரட்சகரின் ஆள்தத்துவம் (Person) மனித அறிவு சார்ந்த ஆய்விற்கானதும் புலனால் அறியக்கூடியதானதும் அல்ல. மாறாக வழிபாட்டில் அவர் முன்பாக கட்டாயம் தலைவணங்கியாக வேண்டும் என்பதாக இருக்கிறது. "பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்" " (மத்தேயு 12:27) என்று அவரே நம்மை எச்சரித்துள்ளார். மேலும் அப்போஸ் தலனாகிய பவுல் தேவ ஆவியின் மூலமாக, மீண்டும் ஒருமுறை "தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்." என்று அறிவிக்கின்றார். (1 தீமோத்தேயு 3:16). அதே வேளையில், மேலும் கூறினால் இயேசு என்னும் ஆள்தத்துவத்தில் நம்முடைய சொந்த புரிந்து கொள்ளும் திறனால், ஆழ்ந்தறியக்கூடாத அனேக காரியங்கள் உண்டு. இருப்பினும், அவரைப் பற்றிய ஒவ்வொன்றும் வியந்து பாரட்டக்கூடியதாகவும், போற்றி வழிபடத்தக்கதாகவும் உள்ளது. அவரது தேவதத்துவமும் மனிதத்தன்மையும் மிகவும் முக்கியமான ஒன்றாகவும், ஒரே ஆளில் பூரணமாய் இசைவான ஒன்றாகவும் உள்ளது. ஆண்டவராகிய இயேசு தெய்வீகப் பண்புகளைக் கொண்ட ஒரு மனிதனும் அல்ல மனிதனாக்கப்பட்ட ஒரு தேவனும் அல்ல. அவர் தேவன் மனிதன் என்று காணப்பட்டார். என்னென்றுமாக தேவனாகவும், மேலும், இப்பொழுதும் என்றென்றுமாகவும் மனிதனைப் போன்றும் உள்ளார். பிதாவின் நேசத்திற்குரியவர் மனித உருக்கொண்ட போது அவர் தேவன் எனப்படுவதை முடிவுக்கு கொண்டுவராமலும் அவரது தெய்வீகப் பண்புகளை கைவிடாமலும் இருந்தார். உலக தோற்றத்திற்கு முன் தம்முடைய பிதாவினோடு கொண்டிருந்த மகிமையை தாமே விலக்கிவிட்ட நிலையிலும் அவர் அவ்வாறே காணப்பட்டார். ஆனால் அவரது திருஅவதாரத்தில் வார்த்தை மாமிசமாகி மனிதரிடையே வாசமாய் இருந்தது. தாம் முன்னர் பெற்றிருந்த அனைத்தையும் முடிவுக்கு அவர் கொண்டுவர வில்லை. ஆனால் முன்னர் பெற்றிராத ஒன்றினை பூர்ணமான மனுஷீகத்தை (மனித உருவை, மனிதனுக்குரிய இயல்பை) விருப்பத்தோடு தாமே ஏற்றுக்கொண்டார்.
மேசீயாவை குறித்த முன் அறிவித்தலில் அவரது தேவத்துவமும் மனுஷீகமும் ஒவ்வொன்றாக ஆழ்ந்து ஆராயப்பட்டுள்ளது. தீர்க்கத்தரிசன மானது சில சமயங்களில் பின் வருகிற ஒருவரை (இயேசுவை) தெய்வீகமான வராகவும், சிலசமயங்களில் மனிதனாகவும் குறிக்கின்றது. அவர் கர்த்தரின் கிளை' (ஏசாயா 4:2) அவர் அதிசயமான ஆலோசகர், சர்வ வல்லமையுள்ள தேவன், சதாகாலங்களுக்கும் பிதாவானவர் (The Father of the Ages) சமாதானப்பிரபுமாவார் (ஏசாயா 9:6). இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவரது புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது (மீகா 5:2). ஆலயத்திற்கு வரவிருந்தவர் யேகோவா தேவனுக்கு ஒன்றிலும் குறைவில்லாதவரான அவரே (மல்க்கியா 3:1). இருப்பினும், வேறுவிதமாகக் கூறின் அவர் ஸ்தீரியின் வித்தாக இருந்தார் (ஆதி.3:15). மோசேயைப் போன்ற ஓர் தீர்க்கத்தரிசி (உபாகாமம் 18:18); தாவீதின் வம்சத்தில் வந்தவர் (2 சாமுவேல் 7:12-13); அவர் யேகோவாவின் "தாசர்" (ஏசாயா 42:1); அவர் துக்கமிகுந்தவர் (ஏசாயா 53:3). புதிய ஏற்பாட்டிலே இந்த இரண்டு விதமான தீர்க்கத்தரிசன கருத்துகளின் தொகுப்புகளும் ஒன்றுக்கொன்று பொருள்பட இணைந்துள்ளன.
பெத்லகேமில் பிறந்த அவர் தேவனாயிருந்த வார்த்தை ஆவார். அவரது வருகை தேவன் மனிதனாக தோன்றினார் என்ற பொருள்படாது. வார்த்தை மாமிசமாகியது. அவர் முன்னர் தாம் பெற்றிருந்த அனைத்தையும் விடாதிருந்தும் அவர் தாம் முன்பிராத ஒன்றாக ஆனார். அவர் தேவனுடைய ரூவமாயிருந்தும், தேவனுக்கு சமமாய் இருப்பதைக் கொள்ளையாடின பொருளாய் எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார் (பிலிப்பியர் 2:6-7). பெத்லகேமில் பிறந்த அந்த குழந்தை இம்மானுவேல், தேவன் நம்மோடிருக்கிறார் என்ற பொருள் உடைய பெயரோடு வந்தவராவார் அவர் தேவனின் வெளிப்பாடான ஒருவர் என்பதற்கு மேலாக, மாமிசத்தில் வெளிப்பட்ட தேவனாவார். அவர் தேவகுமாரனும் மனித குமாரனும் ஆவார். இருவேறு ஆள்தத்துவங்களை கொண்டிராமல் ஒரே மனிதரில் இரண்டு சுபாவங்களை தேவனுடையதையும் மனிதனுடையதையும் கொண்டவராவார்.
இங்கு பூமியில் இருக்கின்றபோது அவரது தெய்வீகத்தன்மைக்கு முழு நிரூபணம் அளித்தார். அவர் தேவ ஞானத்தோடு பேசினார். தெய்வீகப் பரிசுத்தத்தோடு நடந்து கொண்டார். தனது தெய்வீக வல்லமையை வெளிப்படுத்தினார், மேலும் தெய்வீக அன்பைக் காட்டினார். அவர் மனிதர்களின் இருதயங்களில் உள்ளவற்றை அறிந்தார், மனிதர்களின் இருதயங்களை அசையச் செய்தார், மேலும் மனிதர்களின் சித்தங்களை கட்டாயப்படுத்தினார். அவர் தமது வல்லமையை வெளிப்படுத்த முயலுகையில், முழு இயற்கையும் அவர் கட்டளைக்குப் பணிந்தது. அவரது ஒரே வார்த்தையில் பிணி பறந்தது, புயல்அமைதியானது, பிசாசு புறப்பட்டுச் சென்றது, மரித்தோரை உயிர்தெழச் செய்தார். அவ்வளவு மெய்யாக அவர் தேவனை மாமிசத்தில் வெளிப்படுத்தினார். "என்னைக் கண்டவன். பிதாவைக் கண்டான்" என அவரால் சொல்ல முடிந்தது.
அதைப்போன்றே அவர் மனிதரிடையே வாசமாயிருக்கையில், தமது மனுஷீகத் தன்மையைக் குறித்து முழு நிரூபணம் அளித்தார். அவர் மனுஷீகத்தில் பாவமென்பதில்லை. அவர் கந்தையில் பொதியப்பட்ட பாலகனாக இப்பூமியில் வந்தார் (லூக்கா 2:7) ஒரு குழந்தையாக அவர் "ஞானத்திலும் வளர்த்தியிலும் அவர் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்" (லூக்கா 2:52) என்று நமக்குச் சொல்லப்பட்டுள்ளது. அவர் சிறுவனாக இருக்கையில் போதகர்களை கேள்விகள் கேட்பவராகக் காண்கிறோம் (லூக்கா 2:46). அவர் ஒரு மனிதனாக இருக்கையில், சரீரத்தில் இளைப் படைந்த வராகக் காண்கிறோம் (யோவான் 4:6). அவர் பசியுற்றவரானார் (மத்தேயு 4:2). அவர் தூங்கினார் (மாற்கு 4:38). அவர் ஆச்சரியப்பட்டார் (மாற்கு 6:6). அவர் கண்ணீர் விட்டார் (யோவான் 11:35). அவர் ஜெபித்தார் (மாற்கு 1:35). அவர் ஆவியிலே களிகூர்ந்தார் (லூக்கா 10:21). அவர் ஆவியில் கலங்கி துயரமடைந்தார் (யோவான் 11:33). மேலும், நாம் தியானிக்கும் வாக்கியத்தில் நான் தாகமாயிருக்கிறேன் என்று துயர ஒலி எழுப்புகிறார். அது அவரது மனுஷீகத்தின் சான்றாக அமைகிறது. தேவன் தாகமாயிருப்பதில்லை. தேவதூதர்களும் தாகமடைவதில்லை. நாம் மகிமையில் பிரவேசித்த பின், "இவர்கள் இனி பசியடைவதில்லை, இனி தாகமடைவதுமில்லை" என்ற வேத வாக்கியத்தின்படி (வெளிப்படுத்தல் 7:16) நாம் தாகமடைய மாட்டோம். நாம் இப்பொழுது மனிதர்களாய் இருப்பதினால் தாகமடைகிறோம். நாம் துக்கமிகுந்த உலகினில் வசித்துக் கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவும் மனிதனாக உலகில் வசித்தபடியால் தாகமுற்றார்.
“எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டுமென்று" அவர் தம்மை தாழ்த்தி தகுதி ஆனார்.
2 இங்கு நாம் கிறிஸ்து அடைந்த கொடுமையான பாடுகளைக் காண்கிறோம்.
முதலில், கிறிஸ்து எழுப்பிய துயர ஒலி (துன்பக்குரல்) அவரின் சரீரபாடுகளின் வெளிப்பாடு என்பதை கருத்தோடு ஆய்வோம். இந்த சொற்களுக்குப் பின்னால் என்ன பொருள் அமைந்துள்ளது என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமாயின், இவ்வார்த்தைகளை கூறியதற்கு முன் நடந்தவற்றையும் நாம் கட்டாயமாக மீண்டும் நினைவிற்கு கொண்டு வரவும், அவற்றை ஆராய்ந்து பார்க்கவும் வேண்டும். மேலறையில் பஸ்கா போஜனத்தை துவங்கி வைத்து பஸ்காவைக் குறித்து சீடர்களுக்கு போதித்தபின், இரட்சகர் கெத்சமனேக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு ஒரு மணிநேரம் கடுமையான சொல்லொண்ணா வேதனைக்குள்ளானார். அவரது ஆத்துமா மிகுந்த துக்கத்தால் நிறைந்திருந்தது. அவர் பெறப்போகிற அச்சமூட்டக்கூடிய பாடுகளின் பாத்திரத்தை எண்ணுகையில் அவர் வியர்வை முத்துக்களைச் சிந்தவில்லை. மாறாக இரத்தத் துளிகளையே சிந்தினார். தோட்டத்தில் அவருக்கு நேரிட்ட போராட்டம் அவரை கைது செய்யும்படியாக துரோகி ஒரு கூட்டத்துடன் வந்தபோது முடிவுற்றது. அதன் பின் அவர் காய்பாவின் முன்கொண்டு செல்லப்பட்டார். அந்த நடுநிசி வேளையிலும் அவர் விசாரிக்கப்பட்டார்; குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டார். இரட்சகர் அதிகாலை வரையில் அவர் காவலில் வைக்கப்பட்டார். சோர்வடையச் செய்யும் அந்த நீண்ட நேரம் காத்திருந்தலைத் தொடர்ந்து. அவர் பிலாத்துவின் முன் கொண்டு வரப்பட்டார். நீண்டநேர விசாரணைக்குப் பின் அவரை சவுக்கால் அடிக்கும் படியாக உத்தரவிட்டனர். பின்னர் ஏரோதின் நியாய ஸ்தலத்திற்கு கொண்டுவரப்பட்டார். ஒருவேளை அவர் நகரத்தின் ஊடே அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம். ஒரு குறுகிய காலம் ரோம மதகுருவுக்கு முன்னர் நின்ற பின்னர், கொடூரமான சேவகர்களின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்ட அவர் மீண்டுமாய் பரிகசிக்கப்பட்டு, சவுக்கால் அடிக்கப்பட்டு மீண்டும் நகர வழியாய் பிலாத்துவிடம் அழைத்துச் செல்லப்பட்டார். மீண்டுமாக ஒரு சோர்வுறச் செய்யும் காத்துக் கிடத்தலுக்குப் பின், கேலிக்கூத்தான ஒரு விசாரணை சடங்கிற்கு பின், மரண ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்பட்டார். பின்னர் இரத்தம் வடிகின்ற முதுகுடன், நண்பகல் சூரியனின் வெப்பத்தால் தாக்கப்பட்டு, தமது சிலுவையைச் சுமந்து கொண்டு, அந்த கரடுமுரடான கொல்கோதாவின் உச்சிக்குப் பயணம் செய்தார். குறிக்கப்பட்ட ஆக்கினை ஸ்தலத்தை அடைந்த பின்னர், அவரது கரங்களும் பாதங்களும் மரத்தில் அறையப்பட்டன. மூன்று மணிநேரம் சூரியனின் இரக்கமற்ற கதிர்கள், முள் முடி சூடிய தலையில் தாக்கிக்கொண்டிருக்க, அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட மூன்று மணிநேர காரிருள் இப்பொழுது முடிவடைந்தது. அந்த இரவு மற்றும் பகலின் நேரங்கள் (காலங்கள்) நித்தியமே குறுக்கப்பட்டதைப்போன்று தோன்றியது. எனினும் அந்த வேளையில் எந்த ஒரு முணுமுணுப்பின் சொல்லும் பிறக்கவில்லை. அவர் முறையிடவும் இல்லை, இரக்கத்திற்காக வேண்டுதல் செய்யவுமில்லை. அவர் பாடுகள் அனைத்துமே கம்பீரமான மௌனத்தில் நிகழ்ந்தது. மயிர் கத்திரிப்பவனுக்கு முன்பாக சப்தமிடா திருக்கிற ஆட்டுக்குட்டியைப் போன்று, அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். ஆயின் இந்த முடிவு வேளையிலே அவரது சரீரம் வேதனையில் துடித்தது, அவரது உதடுகள் உலர்ந்தன. 'நான் தாகமாய் இருக்கிறேன்' என்று துயரதொனியுடன் கூறினார். இது இரக்கத்தை வேண்டும் முறையிடுதலும் அல்ல, வேதனை பாடுகளிலிருந்து விடுவிக்கும்படியான வேண்டுகோளும் அல்ல. அது அவர் அடைந்த கடும் வேதனையில் வெளிப்பட்ட ஒன்று.
"நான் தாகமாயிருக்கிறேன். இது சாதாரண தாகத்திற்கும் பெரிதான ஒன்று. சரீர பாடுகளைக்காட்டிலும் ஆழமான ஒன்று அதன் பின்னால் உள்ளது.
மத்தேயு 27:48 இல் உள்ள வசனத்துடன் இவ்வாக்கியத்தை கவனத்துடன் ஒப்பிடுகையில், 'நான் தாகமாயிருக்கிறேன்' என்ற சொற்கள் நான்காவது சிலுவை வார்த்தைகளான 'ஏலி, ஏலிலாமா சபக்தானி என்பதை தொடர்ந்து வருவதைக் காட்டுகிறது. கடற்காளானில் காடியைத் தோய்த்து பாடுபடும் நேசரின் உதடுகளில் திணிக்கும் போது, பார்வையாளரில் சிலர், 'பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ பார்ப்போம் என்றார்கள் (மத்தேயு 27:49). அவருக்கு ஏற்பட்ட உள்ளான சோதனைகள் சரீரத்தில் கிரியை செய்வதை "முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்" (நீதிமொழிகள் 17:22) என்ற வசனத்திற்கொப்ப அவரது நரம்புகளை கிழித்து அவரை வலிமை இழக்கச் செய்ததன் மூலம் அறியலாம். “நான் அடக்கி வைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்து போயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டு போயிற்று.'' (சங்கீதம் 32:3-4). இப்பொழுது அவரது சரீரமும் ஆவியும் ஒன்றின்மேல் பரிவு (இரக்கம்) கொள்கின்றன.
தேவன் இயேசுவைப் பாராது தம் முகத்தைத் திருப்பிக் கொண்டார். அப்போது தேவ கோபாக்கினியின் கொடுங்சீற்றத்தை அவர் தாங்கிக் கொண்டிருந்தார். அநத் அந்தகாரம் சூழ்ந்த மூன்று மணிநேரத்தை இயேசு கடந்து வந்தார். அவரது சரீர பாடுகளினால் உண்டான துயரக்குரல் அவர் இப்பொழுது கடந்து வந்த ஆவிக்குரிய போராட்டத்தின் கொடூரத்தினால் விளைந்த ஒன்று.
இந்த வேளையைக் குறித்து அவர் (இயேசு) கூறுவதாக எரேமியா முன்னுரைத்தாவது: "வழியில் நடந்து போகிற சகல ஜனங்களே, இதைக் குறித்து உங்களுக்கு கவலையில்லையா? கர்த்தர் தம்முடைய உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னை சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்கு சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப் பாருங்கள்.
உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னை பின்னிட்டு விழப்பண்ணினார், என்னை பாழாக்கினார். நித்தம் நாள் பலச்சயப்பட்டு போகிறேன்” (புலம்பல் 1:12-13). அவரது தாகம் அவரது ஆத்துமாவில் தேவ கோபாக்கினியால் விளைந்த ஒன்று.
ஜீவ தேவன் வாசம் பண்ணாத பூமியின் வறட்சியை அது எடுத்துரைக் கிறது. மேலும், மூன்று மணிநேரம் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்ட பின்னர் மீண்டுமாய் அவரோடு ஐக்கியம் கொள்ள அவர் கொண்ட பெரும் விருப்பதினை இவ்வார்த்தைகள் தெளிவாய் காட்டுகின்றன. "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன் மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?" இவ்வார்த்தைகள் இயேசு தாமே தீர்க்கத் தரிசன ஆவியினால் அவர் காரிருளின்று வெளிவந்த உடன்தனே உரைத் ததைக் குறிக்கிறது. அதைப் பின் தொடர்ந்த வார்த்தைகள் அதை உரைத்தவரின் கதறுதலையும் அவர் இன்னார் இயேசு என்பதையும் அவரது பாடுபட்ட நேரத்தையும் இனம் காட்டவில்லையா? - "என் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று" (சங். 42:1-3). என்று கதறியவர் இயேசுவே என்பதை இவ்வேத வாக்கியம் நிரூபிக்கிறது.
- இங்கு ஆண்டவரது வேதத்தைக் குறித்த பயபக்தியைக் காண்கிறோம்.
பரிசுத்தமான வேத வார்த்தைகளைக் குறித்து இரட்சகரின் மனம் எவ்வளவு மாறாத நாட்டம் கொண்டிருக்கிறது! மெய்யாகவே தேவனின் வாயிலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையின்படியே அவர் வாழ்ந்தார். "கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" இவ்வாக்கியத்தில் குறிக்கப்பட்டது அவரே. எழுதப்பட்ட வார்த்தையே அவருடைய சிந்தனை களை உருவாக்கியது, இதயத்தை நிரப்பியது அவரது வழிகளை சீர்படுத் தியது. வேதமென்பது பிதாவின் சித்தத்தின் எழுத்துவடிவம். அது அவரது நித்திய மகிழ்ச்சியாய் இருந்தது. சோதனை வேளையில் வேதத்தில் எழுதப் பட்டவை அவரது தற்காப்பாய் இருந்தது. அவரது போதனையில் கர்த்தரின் நியாயவிதிகளே அவரது அதிகாரமாய் அமைந்தது. சதுசேயர் மற்றும் பரிசேயருடன் வாக்குவாதம் ஏற்படுகையில் (Appeal) நியாயப்பிரமாணத் தையும் சாட்சிகளையும் நோக்கியே அவரது வாதம் (Appeal) அமைந்தது. இப்பொழுது சாவுவேளையிலும் சத்திய வார்த்தையைக் குறித்தே அவர் அதிகமாக எண்ணினார்.
ஐந்தாவது சிலுவை வார்த்தையின் முதன்மையான முக்கியவத்தினை அறிய வேண்டுமாயின் அதன் பின்னணியினையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதைக்குறித்து "எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேற தக்கதாக: தாகமாயிருக்கிறேன்" (யோவான் 19:28) என்ற வேதவாக்கியத்தால் அறியலாம். 69 ஆம் சங்கீதம் மேசியாவின் பாடுகளையும் மரணத்தையும் குறித்து சரியான விளக்கம் அளிப்பதான மற்றொரு குறிப்பாக உள்ளது. "என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியை குடிக்கக் கொடுத்தார்கள் (சங்.69:21)."தாகமாயிருக்கிறேன்" என்று அவர் உரைத்த பின்னர் அத்தீர்க்கதரிசனம் துல்லிதமாக நிறைவேறியது. இதற்கு முந்தைய முன்னுரைத்தல் ஏற்கனவே நிறைவேறிய ஒன்றாகும். அவர் ஆழமான உளையிலே' அமிழ்ந்திருந்தார் (வச.2); அவர் நிமித்தமில்லாமல் பகைக்கப்பட்டார் (வச.4). அவர் நிந்தையையும் அவமானத்தையும் சகித்தார் (வசனம் 7). அவர் "தம்முடைய சகோதரருக்கு வேற்றுமனுஷன் ஆனார்" (வசனம் 8). தம்மை “நிந்திப்பவர்களுக்கு பழமொழியானர்; மதுபானம் பண்ணுகிறவர் களின் பாடலானார்" (வசனம் 11-12). தம்முடைய வியாகுலத்திலே அவர் தேவனை நோக்கி கதறினார் (வசனம் 17-20). இப்பொழுது அவருக்கு கசப்பான காடியை குடிக்கக் கொடுப்பதைத் தவிர நிறைவேற வேண்டியது வேறொன்று மில்லை. ஆதலால் அதனை நிறைவேற்றும்படியாக நான் தாகமாயிருக் கிறேன் என்றார்.
“எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறை வேற்றத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்" எவ்வளவு முழுமையாக தம் காரியத்தை நிறைவேற்ற, தன் உணர்வுகளையும் செயல்களையும் கட்டுப்படுத்தி கொள்பவராக அவர் உள்ளார். அவர் அந்த சிலுவையில் ஆறுமணிநேரம் தொங்கிக் கொண்டிருந்தார். இணையற்ற பாடுகளின் வழியாகச் சென்றார். அவ்வாறு இருந்தபோதும் தெளிவான மனதும் பழுதற்ற நினைவாற்றலும் உடையவராய் இருந்தார். அவர் எப்போதும் பூரணமான தெளிவான பார்வையோடு தேவனுடைய சத்தியத்தை தம் முன் வைத்தார். மேசியாவைக் குறித்து முன் உரைக்கப்பட்ட விஷயங்களின் நோக்கத்தை நன்கு ஆய்ந்து அறிந்திருந்தார். ஒரு தீர்க்கதரிசன வாக்கியம் நிறை வேறாததை நினைவு கூர்ந்தார். அவர் எதையும் கவனிக்க தவறவில்லை. அவர் எல்லா சூழ்நிலைகளிலும் நம் தெய்வீகத் தன்மையினால் தம்மை மேம்பட்டவராக நிரூபித்தது எத்தகைய ஆச்சரியம்!
மேலே கடந்து போகும்முன் உங்களுக்கு நீங்களே ஒருவேண்டுகளை (கேள்வியை) வையுங்கள். வேதத்தின் அதிகாரத்திற்கு வாழ்விலும் சாவிலும் நமது இரட்சகர் தலை வணங்கினார் என்பதை நாம் குறிப்பிட்டோம். கிறிஸ்துவ வாசகரே உங்கள் நிலைமை எவ்வாறு உள்ளது? இந்த தெய்வீக புத்தகம் நீங்கள் முறையிடுகின்ற இறுதியான நீதிமன்றமாக உள்ளதா? அது உங்கள் பாதங்களுக்கு தீபமாக உள்ளதா? அதாவது நீங்கள் அதன் வெளிச்சத்தில் நடக்கின்றீர்களா? அதன் கட்டளைகள் உங்களை பிணைத்து வைத்திருக்கிறதா? நீங்கள் மெய்யாகவே அதற்கு கீழ்படிகிறீர்களா? நீங்கள் தாவீதுடன் சேர்ந்து “மெய்வழியை நான் தெரிந்து கொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்... என் வழிகளை சிந்தித்துக் கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத்திருப் பினேன். உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதி யாமல் தீவிரித்தேன்.” என்று உங்களால் சொல்ல முடியுமா? நமது இரட்சகரைப் போன்று, நீங்கள் வேதவாக்கியங்களை நிறைவேற்ற கவலை கொண்டவர்களாய் இருக்கிறீர்களா? இதை எழுதியவனும் படிப்பவனும் இதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபிப்பார்களாக!
"உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாய் இருக்கிறேன்; என் இருதயம் உமது சாட்சிகளை சாரும்படி செய்யும்... உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்" (சங்கீதம் 119:35,36,133).
"நான் தாகமாயிருக்கிறேன்.''
- இங்கு நாம் பிதாவின் சித்தத்திற்கு இரட்சகர் கீழ்படிவதைக் காண்கிறோம்.
இரட்சகர் தாகமாயிருந்தார். தாகமாயிருந்த அவர் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் படைத்தவர் என்பதை நினைவில் கொள்வோமாக. அவர் தம்முடைய சர்வவல்லமையைப் பயன்படுத்தி இருப்பின் தம்முடைய தேவையை உடனடியாக பூர்த்தி செய்திருக்க முடியும். முன்னர் வனாந்தரத்திலே இஸ்ரவேலின் தாகம் தீர்க்கும்படியாக கன்மலையை அடித்து தண்ணீரை புறப்படச் செய்தவர், தம்முடைய எல்லையற்ற வல்லமையை இப்பொழுதும் தம்மகத்தே கொண்டுள்ளார். தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய அவர் அந்த வல்லமையின் வார்த்தையைச் சொல்லி தம் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்கக்கூடும்.
ஆனால் ஒருமுறைகூட தன் சொந்த நன்மைக்காகவோ அல்லது வசதிக்காகவோ எந்த அற்புதமும் அவர் செய்ததில்லை. அதைச் செய்யும்படியாகச் சாத்தான் தூண்டியபோது, அவர் செய்ய மறுத்தார். இப்பொழுது தம்மை நெருக்கிக் கொண்டிருந்த தேவையை பூர்த்தி செய்ய ஏன் மறுத்தார்? உலர்ந்த உதடுகளுடன் ஏன் அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்? ஏனெனில், தேவசித்தம் வெளிப்படுத்தப்பட்ட புஸ்தகத் தொகுப்பிலே, அவர் தாகமாயிருக்க வேண்டும் என்றும், அத்தாகம் தீர்க்க அவருக்கு காடி தரப்படவேண்டும் என்றும் எழுதியிருக்கிறது. தேவசித்தத்தை நிறைவேற்றவே அவர் இங்கு வந்தார். ஆகவே அதற்கு அவர் கீழ்ப்படிந்தார்.
வாழ்க்கையில் கைக்கொண்டதைப் போலவே சாவினிலும் ஜீவ தேவனுடைய அதிகாரமுள்ள வார்த்தையை அவர் கைக்கொண்டார். அவர் கைக்கொண்ட வார்த்தையின்படியே அன்றி, சோதனைவேளையில் தன் தேவைக்காக செயல்படுவதை மறுத்தார். இப்பொழுது அவர் தம் தேவையை தெரிவிப்பது, அது நிறைவேற்றப்பட வேண்டும் என்று அல்லாமல் வேதவாக்கியம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே. அவர் தமது தேவையைத் தானே பூர்த்திசெய்து கொள்ளவில்லை என்பதை கவனியுங்கள். அதை கவனித்துக் கொள்ளும்படியாக தேவன் நம்பத்தகுந்த வராய் இருக்கிறார் என்பதை அறிந்திருந்தார். ஆகவே, தம் தேவையை நிறைவேற்றும் படியாக, ஒரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி, தன் துயரத்தினை வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். வேறொருவர் கூறியதைப்போல "சிலுவையில் அறையப்பட்டதினால் கொடிய துன்பம் அவர் மீது வந்தது. ஆனால், அது அவரது உலர்ந்த உதடுகளை பலவந்தப்படுத்தி பேசவைக்க போதுமானதாக இல்லை. ஆனால் வேதத்தில் “எனது தாகத்திலே எனக்கு குடிப்பதற்கு காடியை கொடுத்தார்கள்" என்ற முன்னுரைக்கப்பட்ட அவ்வேதவாக்கியம் அவர் வாயைத்திறக்கச் செய்தது. பின்னர், எப்பொழுதும் போலவே தேவசித்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற செயல்திறன்மிக்க கீழ்படிதலைக் காண்பிக்கிறார்.
மிக எளிமையாய் நான் தாகமாய் இருக்கிறேன் என்றுரைக்கிறார்.காடி வழங்கப்பட்டது; வேதவாக்கியம் நிறைவேறியது. பிதாவின் சித்தம் செய்வதில்தான் அவருக்கு எத்தகைய ஈடுபாடு!
மீண்டுமாய் நம்மை நாமே சோதித்தறியும் படியாக இரு அர்த்தங்களைக் கொண்ட கேள்வி ஒன்றினை கேட்டுக் கொள்வோம். முதலாவதாக, மிகுந்த தாகம் அடைந்து பாடுறும் போதும் அவர் பிதாவின் சித்தம் செய்வதில் மகிழ்ச்சியாய் இருந்தார். நாம் அத்தகைய எதிர்ப்பற்ற கீழ்படிதல் பிதாவிடம் கொண்டுள்ளோமா? "என் சித்தமல்ல உம் சித்தமே ஆகக்கடவது" எனக்கூறி அவரின் கிருபையை தேடி இருக்கிறோமா? "அவ்வாறாயினும் அது உமது பார்வைக்கு நலமாய் தோன்றுகிறது என வியந்து கூறுகிறோமா? நாம் எந்த நிலையில் இருந்தாலும் மனரம்மியமாய் இருக்கக் கற்றுக் கொண்டோமா? (பிலி.4:11). ஆனால் நாம் இப்பொழுது ஒரு வேற்றுமையை குறிப்பிட்டாகவேண்டும். தேவ குமாரனுக்கு வேதனையைக் குறைக்கும் படியாக ஒருகவளம் நீர்கூட மறுக்கப்பட்டது. நாம் எவ்வளவு வித்தியாசமான நிலையில் காணப்படுகிறோம்? நமது அயர்வை அவர் நீக்கும்படியாக தேவன் நமக்கு நானாவிதமான உணவுவகைகளைத் தந்திருக்கிறார். இருந்த போதிலும் நாம் எவ்வளவு நன்றியற்றவர்களாய் இருக்கிறோம்." நம்மை மகிழ்ச்சியூட்டும்படியாக ஒரு கோப்பை நீரைக்காட்டிலும் மேலானதை நாம் பெற்றிருக்கிறோம். இருந்தபோதிலும் நாம் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோமா? கிறிஸ்துவின் இந்த துயரக்குரலை, கதறலை நாம் விசுவாசத்தோடு யோசித்துப் பார்போமாயின், அது நம் அறியாமையில், நாம் பெற்றவற்றில் இழிவாகக் கருதியவற்றுக்காகக்கூட தேவனை ஸ்தோத்தரிப்ப வர்களாக மாறுவோம். அவரது சாதாரண வழக்கமான நன்மைகளுக்காகவும் திருப்தி அடைகிற விளைவினை (தன்மையினை) அது நம்மில் ஏற்படுத்தும் மகிமையின் ஆண்டவர் தம்முடைய நிர்பந்த நிலையிலே தம்மை தேற்றும் படியாக ஒன்றும் பெறவில்லை. அப்படியிருக்க, ஆயிரம் மடங்கு இம்மைக்குரிய மற்றும் ஆவிக்குரிய இரக்கங்களை பெறும் உரிமையை இழந்தோர் தேவன் முன்பு பொதுவான தயாளமான நன்மைகளை மரியாதைக் குறைவாக கருதக்கூடுமோ? என்ன! ஒரு கோப்பை நீருக்காகக் குறைபட்டவனும் அவரது கோபாக்கினையின் பாத்திரத்திற்கு ஏதுவாக இருக்கிறான். நீங்கள் பெற்றுக் கொண்டவைகள் வாழ்வின் மிகக்குறைவானத் தேவைகளை மட்டுமே பூர்த்திசெய்யக் கூடியதாக இருப்பினும் அதற்காக திருப்தியாகஇருக்க வேண்டும் என்ற கருத்தினை மனதில் பதித்திருங்கள். நீங்கள் வசிக்குமிடம் அருவருக்கத்தக்கதாக இருப்பினும் அதற்காக முறுமுறுக்காதிருங்கள். ஏனெனில் நம் இரட்சகர் தலைசாய்க்க இடமின்றி இருந்தாரே. உங்களுக்கு உண்பதற்கு அப்பம் (ரொட்டி,) தவிர வேறொன்றும் இல்லாதிருப்பினும் முறுமுறுக்காதிருங்கள். ஏனெனில் நம் இரட்சகர் நாற்பது நாட்கள் அதுவுமின்றி இருந்தாரே! நீங்கள் பருகுவதற்கு நீரைத்தவிர வேறொன்றும் இல்லாதிருப்பினும் முறுமுறுக்காதிருங்கள். ஏனெனில் உங்கள் இரட்ச கருக்கு மரணவேளையில் அதுவும் மறுக்கப்பட்டதே!
''நான் தாகமாயிருக்கிறேன்''
- இங்கு எவ்வாறு இரட்சகர் தம்முடைய துயருறும் மக்களுக்கு இரங்குகிறார் என்பதைக் காண்கிறோம்.
'ஏன் உபத்திரவப்படுகிறோம்' என்பது என்றுமே குழப்பம் ஏற்படுத்துகிற ஒரு பிரச்சினையாக உள்ளது. உத்தம தேவனால் ஆளப்படுகின்ற இவ்வுலகில் ஏன் பிரச்சினை அவசியமான ஒன்றாக இருக்கிறது? தீமையைத் தடைசெய்ய வல்ல ஒரு தேவன் இருந்தும், அவர் அன்பானவராய் இருந்தும் ஏன் பாடுகள் அவசியம்? ஏன் வேதனைகளும், பரிதாபங்களும், வியாதிகளும், சாவும் இருக்கின்றன? இவ்வுலகம் எத்தகையது என ஆராய்ந்து பார்க்கும்போது, அதன் எண்ணற்ற துயருறுவோரை பற்றிய அறிவினைப் பெறும்போது நாம் குழப்பமே அடைகிறோம். இந்த உலகம் கண்ணீரின் பள்ளத்தாக்காக உள்ளது. மிக லேசான மகிழ்ச்சி வாழ்வின் சலிப்புண்டாக் கும் உண்மைகளை மறைக்க முயலுவதில் மிக அரிதான வெற்றியையே பெறுகின்றது. பாடுகளால் உண்டாகும் பிரச்சினைகளை வேதாந்தப்படுத்து வது மிகக்குறைந்த அளவு விடுதலையையே தருகின்றது. நாம் பகுத்தாய்ந் தறிய முயன்ற பின்னரும், இவற்றை தேவன் பார்க்கிறாரா? உன்னதமான வரிடத்தில் அறிவுண்டோ? மெய்யாகவே அவர் கவலைப்படுகிறாரா? என்ற கேள்விகள் எழுகின்றன. எல்லா கேள்விகளையும் சிலுவையண்டை எடுத்துச்செல்ல வேண்டும். இவற்றிற்கு முழுமையான விடைபெற இயலவில்லையாயினும், கவலையுற்றோர் இதயம் திருப்தியாகும்படியாக விடைகளை அவர்கள் பெறுவார்கள். பாடுகளின் பிரச்சினைகளை முற்றிலும் தீர்க்க இயலாதெனினும், சிலுவை பாடுகளால் உண்டாகும் மனஇறுக்கத் தினை நீக்க போதுமான வெளிச்சம் அது தரக்கூடியதாய் இருக்கிறது. தேவன் நமது துக்கங்களை அறியாதவர் அல்ல என்பதைக் காட்டுகிறது. ஏனெனில் தம்மகன் (இயேசு) என்ற நபரின் மூலமாக அவரே "நம் பாடுகளை ஏற்றுக்கொண்டு, நமது துக்கங்களைச் சுமந்தார். நமது மனக்கவலை களையும் தாங்கொண்ணா வேதனைகளையும் குறித்து அவர் மனதற்று இருக்கிறார் என எண்ண இயலாது. ஏனெனில், அவதரித்தவரும் அவரே, நமது பாடுகளை சுமந்தவரும் அவரே. வேதனையைக் குறித்து தேவன் உதாசீனமாக உள்ளவர் அல்ல; ஏனெனில் நம் இரட்சகரே அதனை அனுபவித்தார்.
இந்த உண்மைகளின் மதிப்புதான் என்ன? அது : "நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கிருக்கிறார்" (எபி.4:15). நமது மீட்பர் நமது துக்கங்களில் இரக்கத்துடன் பிரவேசிக்கக்கூடாமல் விலகினவராய் இராமல் அவரே துக்கம் மிகுந்த மனிதரானார். இங்கு வேதனையுரும் இதயத்திற்கு ஆறுதல் உண்டு. நீங்கள் எவ்வளவு மனச்சோர்வு உற்றவராய் இருப்பினும், உங்கள் பாதை எவ்வளவு கரடுமுரடானதாக இருப்பினும் உங்களுக்கு தேவன் அமைத்துக்கொடுத்த வாழ்க்கைமுறை எவ்வளவு துன்பமிக்கதாயினும், அவற்றை இயேசுவின் முன்வைக்கும்படியாக அழைக்கப்படுகிறீர்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் "அவர்மீது உங்கள் கவலைகளை வைத்து விடுங்கள். உங்கள் சரீரம் வேதனையினால் வாதிக்கப்படுகிறதா? அவர் அவ்வாறே வாதிக்கப்பட்டார். நீங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டும் நியாயந்தீர்க்கப்பட்டும், தவறான நபராக காட்டப்பட்டும் இருக்கிறீர்களா? அவருக்கும் அவ்வாறே செய்யப்பட்டது. உங்களுக்கு மிகவும் நெருக்கமான வர்களும் அன்புக்குரியவர்களும் உங்களை விட்டு விலகிச் சென்றனறோ? அவருக்கும் அவ்வாறே செய்யப்பட்டது. நீங்கள் அந்தகாரத்தில் இருக்கிறீர்களோ? அவரும் மூன்று மணிநேரம் அவ்வாறு இருந்தார். "அன்றியும் அவர் ஜனத்தின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்கேதுவான தேவகாரியங்களைக் குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதாருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்தது (எபிரேயர் 2:17).
"நான் தாகமாயிருக்கிறேன்"
- இங்கு நாம் உலகலாவியதும் அனைவருக்கும் தேவையான ஒன்றைக் குறித்துக் காணப்போகிறோம்.
உலகெங்குமுள்ள சுபாவமனிதன் தெளிவாக "நான் தாகமாயிருக் கிறேன்" என்று கூறினானோ இல்லையோ, அவ்வார்த்தைகள் அவனது அலறுதலின் ஒலியாக நிச்சயமாக உள்ளது. முயன்று செல்வம் சேர்க்க வேண்டுமென்ற பட்சிக்கின்ற ஆசை எதற்கு? உலக கௌரவங்களுக்காகவும், மற்றவர் மெச்சிக்கொள்ளும் கைதட்டலைப் பெறவேண்டும் என்பதற்காகவும் ஏக்கம் எதற்கு? தொடர்ந்து களைப்பின்றி, தளரா உழைப்புடன், உலக இன்பங்களின் (களியாட்டங்களின்) ஒரு தோற்றத்திலிருந்து மறுதோற்றத் தின் பின்னே பைத்தியமாக பாய்ந்து செல்வது ஏன்?
அறிவியல் சார்ந்த ஆய்வுகள், தத்துவ ஆராய்ச்சிகள், முன்னோர்களின் நூல்களை நுணுக்கமாக ஆராய்தல், இடைவிடாத சோதனைகள் போன்ற நவீன மனிதனின் ஞானம்பெற மேற்கொள்ளும் தேடுதல்கள் எதற்காக? புதுமையானவற்றின் மேல் பித்துப்பிடித்தாற்போல் பைத்தியமாக இருப்பது ஏன்? இவையெல்லாம் ஏன்? ஏனெனில், அவனுக்குள்ளே வேதனையூட்டு கின்ற ஒரு வெறுமை காணப்படுகிறது. ஏனெனில், ஒவ்வொரு சுபாவ மனிதனுக்குள்ளும் திருப்தியாக்கக்கூடாத ஒன்று மீதமிருக்கிறது.
கோடீஸ்வரனுக்கும் பரம ஏழைக்கும் இந்த உண்மை சமஅளவாக தோன்றுகிறது. முன்னர் உரைக்கப்பட்டவனுக்கு (கோடீஸ்வரனுக்கு) அவனது செல்வங்களால் மெய்யான மனநிறைவு இல்லை. இவ்வுண்மை உலகெங்கும் சுற்றித்திரிபவனுக்கும் தன் நாட்டின் எல்லையைத் தாண்டிராத நாட்டுப்புறத் தானுக்கும் பொருந்துவதாக உள்ளது. உலகின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு சென்று வருபவனும் சமாதானத்தை பெறும் இரகசியத்தைக் கண்டறிய தவறிவிடுகிறான்.
“இந்த தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ மறுபடியும் தாகமுண்டாகும் (யோவான் 4:13) என்ற வேதவசனம் உலகின் அனைத்து நீர்த்தொட்டிகளிலும் எழுதிவைக்கப்படுகின்றது. கிறிஸ்துவை தெய்வமாகக் கொண்டிராத பக்தி உள்ள மனுஷனுக்கும் மனுஷிக்கும் இவ்வார்த்தைகள் பொருந்துவதாக உள்ளது. தங்களின் ஆழமான தேவை சந்திக்கப்பட தேவையான ஒன்றை காணாமல், எத்தனை பேர் சோர்வுறச் செய்யும் மதச்சடங்குகளை முழுமையாக முடித்துவிட கடந்து செல்கின்றனர்!
ஒழுங்காக சபைக்கு செல்வோரும், தான் பெற்ற பணத்திலும் வருமானத்திலும் பாஸ்டரைத் தாங்குவோரும், அவ்வப்போது வேதம் வாசிப்போரும், சிலசமயங்களில் ஜெபிப்போரும், ஜெபப்புத்தகம் பயன்படுவ தாயின் ஒவ்வொரு இரவிலும் தம் ஜெபத்தினை சொல்லுகிறதுமான சுவிசேஷ மறிவிக்கின்ற பிரிவினைச் சார்ந்த அங்கத்தினர்களாய் இருப்பினும், அவர்கள் செய்கின்ற எல்லாவற்றிற்குப் பின்னும் அவர் நேர்மையுடையோராய் இருப்பார்கள் என்றால் அவர்களின் கூக்குரல், "நான் தாகமாயிருக்கிறேன்" என்றே இருக்கும். இந்த தாகம் ஆவிக்குரிய ஒன்றாக இருக்கிறது. ஆகவே, இயற்கையில் காணப்படுபவை இதைத் தணிக்க இயலாது. அவர்கள் அறியாமலேயே அவர்களின் ஆத்துமாக்கள் "தேவன் மேல் தாகமாயிருக் கிறது" (சங்கீதம் 42:2). தேவன் நம்மை சிருஷ்டித்தார். அவர் மாத்திரமே நம்மை திருப்தியாக்கக்கூடும். "நான் கொடுக்கும் தண்ணீரை குடிக்கிறவனுக்கோ "ஒருக்காலும் தாகமுண்டாகாது" என்று இயேசு கூறினார் (யோவான் 4:14). கிறிஸ்துவால் மாத்திரமே நம்முடைய தாகத்தை தணிக்க இயலும். அவரால் நம் இதயங்களின் ஆழமான தேவையை சந்திக்க இயலும். அவரால் மாத்திரமே இவ்வுலகம் அறியாத, தரக்கூடாத, நம்மைவிட்டு எடுத்துப் போடமுடியாத சமாதானத்தைத் தரமுடியும். ஓ, வாசகரே! மீண்டும் ஒருமுறை நானே உங்களது மனசாட்சியினை அன்புடன் கேட்கிறேன். அது உங்களிடத்து எவ்வாறு இருக்கிறது? சூரியனின் கீழ் காணப்படுகின்ற ஒவ்வொன்றும் மாயையும் மனசஞ்சலம் அளிக்கக் கூடியது என்பதை நீங்கள் கண்டுபிடித்தீர்களா? இந்த உலகத்தில் உள்ளவை உங்கள் இதயத்தை திருப்திபடுத்தாது என்பதை நீங்கள் கண்டுபிடித்தீர்களா? உங்கள் ஆத்துமாவின் கதறுதல் "நான் தாகமாயிருக்கிறேன்” என்பதாக உள்ளதா? அப்பொழுது, உங்களை திருப்தியாக்க ஒருவரால் கூடும் என்பது நீங்கள் கேட்கவேண்டிய ஓர் நற்செய்தி இல்லையா? அந்த ஒருவர் எந்த மதக்கோட் பாட்டையோ (பிரிவையோ), மத அமைப்புகளையோ சார்ந்திராத ஜீவனுள்ள தெய்வீக நபராக உள்ளார். "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று அவரே கூறுகிறார் (மத்தேயு 11:28). அந்த இனிய அழைப்பினை உங்கள் சிந்தனையில் இறுத்துங்கள் நீங்கள் இருக்கும்வண்ணமாகவே இப்பொழுது அவரிடத்தில் வாருங்கள். அவர் உங்களை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு விசுவாசத்தோடு வாருங்கள். அப்பொழுது நீங்கள் பாடும் பாட்டு:
தளர்ந்தேன், களைந்தேன், கவலைமிகக் கொண்டேன்
வந்தேன் இயேசுவிடன் நானிருந்த வண்ணமே
கண்டேன் அவரில் இளைப்பாரும் இடமதை
மகிழ்ச்சி மிகக்கொண்டேன் அவரில் தானே.
கோடிக்கணக்கான ஆண்டுகள் கடந்த போதும், இன்னும் பத்துக்கோடி ஆண்டுகள் முன் உள்ளது என்றால் உங்கள் நிலை எத்துணை பரிதாபத்திற் குரியது. விடுதலையே இல்லாத நரகத்திலே நித்தியமான தாகம் உண்டு. அந்த ஐஸ்வர்யவான் கூறிய அந்த அச்சமூட்டுகின்ற வார்த்தைகளை நினைவு கூறுங்கள்.
"அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவை குளிரப் பண்ணும்படி அவனை அனுப்ப வேண்டும். இந்த அக்கினி ஜூவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்" (லூக்கா 16:24).
வாசகரே! இதனை சிந்தித்துப் பாருங்கள். சில மணிகள் மாத்திரமே உள்ள சரீர தாகம் தன் உச்ச அளவில் இப்பொழுது தாங்க இயலாத ஒன்றாக இருந்தால், என்றுமே தணிக்க முடியாத, அந்த நித்தியதாகம் தற்போதைய தாகத்தைக் காட்டிலும் எவ்வளவு கொடியதாய் இருக்கும். தன்னுடைய தவறு செய்கின்ற படைப்புகளிடத்திலே அது தேவன் செய்யும் குரூரமான கொடுமை என்று சொல்லாதிருங்கள்.
ஓ! வாருங்கள் இயேசுவிடம்! தாமதியாதீர்கள்! நீங்கள் தாகமாயிருக் கிறீர்களோ? அப்பொழுது அவர் தேடுகின்ற நபர் நீங்களாய்தான் இருப்பீர் கள். "நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்” (மத்தேயு 5:6) என்றுரைக்கப்பட்டுள்ளதே.
இரட்சிக்கபடாத வாசகரே. இரட்சகரை வேண்டாமென்று ஒதுக்கி விடாதீர்கள். நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்றால் உங்கள் நித்திய கூக்குரல் "நான் தாகமாயிருக்கிறேன்" என்பதே. இது நித்திய ஆக்கினைக்குள்ளானோரின் வேதனைக்குரல் ஆகும். இரட்சிப்பை இழந்தோர் அக்கினிக்கடலில் தேவனின் கோபாக்கினையின் அக்கினிப் பிழம்பின் நடுவிலே என்னென்றுமாக துன்புறுவீர்கள். கிறிஸ்து “நான் தாகமாயிருக்கிறேன் ” என்று கதறினார் என்றால் அவர் தேவனின் கடுங்கோபத்தால் அவர் துன்புற்ற அந்த மூன்று மணிநேரங்கள் மாத்திரமே. தேவனின் கடுங்கோபத்தை நித்தியமாய் தாங்கிக் கொள்ளப்போவோரின் நிலை எத்தகையதாய் இருக்கும்!
பாவம் சுமத்தப்பட்ட தேவன் சொந்த குமாரன் எவ்வாறு வேதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை நினைவு கூறுங்கள். நிச்சயமாகவே இயேசுவை அலட்சியம் பண்ணுகிறவனும் நிந்திப்பவனும் மிகவும் கொடிய அனலுள்ள நரகிலே இடம் பெறுவான். நாங்கள் மீண்டுமாய் கூறுகிறோம், “இப்பொழுது அவரை உங்களுக்கு சொந்தமானவராய் ஏற்றுக்கொள்ளுங்கள். அவரை, உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவரை உங்கள் ஆண்டவர் என பணிவுடன் சொல்லுங்கள்.
"நான் தாகமாயிருக்கிறேன் ''
- இங்கு ஒரு நிலையான தெளிவுரையைக் காண்கிறோம்.
இயேசு இன்னமும் தாகமாயிருக்கிறார் என்ற கூற்று ஒரு ஆழ்ந்த அர்த்தம் கொண்டது. அது உண்மை என ஏற்றுக் கொள்ளத்தக்கது. அவருக்கு சொந்தமானவர்களின் அன்பிற்காகவும் பக்திக்காகவும் அவர் தாகமுள்ள வராய் இருக்கிறார். அவர் தம்முடைய இரத்தத்தினால் கிரயத்திற்கு கொள்ளப்பட்டோரிடம் ஐக்கியம் கொள்ள ஆழ்ந்த விருப்ப முடையவராய் இருக்கிறார். இங்கு கிருபையின் ஒரு வியக்கத்தக்க சிறந்த தன்மையினைக் காண்கிறோம். ஒரு மீட்கப்பட்ட பாவியால் இயேசுவின் இதயத்தை திருப்திப்படுத்துகின்ற ஒன்றைத்தர இயலும்! நான் அவரது அன்பை எவ்வளவாய் மதிக்க வேண்டும் என புரிந்துகொள்கிறேன். ஆனால் எல்லாவற்றிற்கும் போதுமானவராய் உள்ள அவர் என் அன்பை மதித்தாக வேண்டும் என்பது எத்தகைய ஆச்சரியமான ஒன்று. அவரோடு கொண்டுள்ள ஐக்கியம் எனக்கு ஆசீர்வாதமான ஒன்று என நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னோடு உள்ள ஐக்கியம் கிறிஸ்துவுக்கு ஆசீர்வாதமான ஒன்று என்று எவ்வாறு கருதி இருக்கக்கூடும்! ஆம் அது அவ்வாறே இருக்கிறது. அதற்காக அவர் இன்னமும் தாகமுடையவராக இருக்கிறார். அவரை இளைப்பாரச் செய்யும் ஒன்றைத் தரும்படியாக கிருபை நம்மைத் தகுதிப்படுத்துகின்றது. என்ன ஆச்சரியமான சிந்தனை!
இயேசு பிரயாணத்தினாலும் பகலின் வெப்பத்தினாலும் களைப்புற்ற வராய் யாக்கோபின் கிணற்றருகே வந்தார். அங்கு வந்த சமாரிய ஸ்திரியிடம் “தாகத்துக்குதா" எனக் கேட்டபோதும் அவர் நீரைக் குடிக்கவில்லை என்பதை எப்பொழுதாவது நீங்கள் யோவான் 4 -ம் அதிகாரத்தில் கவனித்தீர்களா? அந்த சமாரியப் பெண்ணின் இரட்சிப்பிலும் விசுவாசத் திலும் தம் இதயத்தை இளைப்பாறச் செய்யும் ஒன்றை அவர் கண்டார். அன்பிற்கு மறுமொழி பதிலுக்கு அன்பு கூறுதல் ஆகும். அது இல்லையாயின் அன்பு என்றுமே திருப்தியாவதில்லை.
வெளிப்படுத்தின சுவிஷேசம் 3:20 க்கான விடை இதுவே -"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தை கேட்டு, கதவை திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்." இது இரட்சிக்கப்படாதவர்களுக்கு, பயன்படுத்தும் வேதவாக்கியமாய் இருந் தாலும், அது முக்கியமாய் குறிப்பது சபையையே. கிறிஸ்து தமக்கு சொந்தமானவர்களின் ஐக்கியத்தை நாடுவதை அது படம் பிடித்துக் காட்டுகிறது. போஜனம் செய்வதைக்குறித்து அவர் பேசுகிறார். போஜனம் என்பது ஐக்கியத்தைக் குறிக்கும் அடையாளமாக உள்ளது. அதைப் போன்றே, கர்த்தரின் பந்தி என்பது இரட்சகருக்கும் இரட்சிக்கப்பட் டோருக்கும் இடையில் உள்ள விசேஷமான ஐக்கியத்தைக் குறிக்கிறது. இந்தப்பகுதியிலே இரட்டிப்பான போஜனத்தைக் குறித்து இயேசு பேசுகிறார் என்பதை உற்று கவனியுங்கள். "அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்." அவருடன் போஜனம் செய்வது சொல்லி முடியாத சிலாக்கியமாகும். அவருடன் ஐக்கியம் கொள்வது நாம் அவரில் மகிழ்வதைக் குறிக்கிறது. ஆனால் அவர் நம்முடன் போஜனம் செய்கிறார். நம்முடைய அன்பிலும், பக்தியிலும், அவருடைய இதயத்தை போஷிக்கக்கூடிய ஒன்றையும், அவர் இளைப்பாறக்கூடிய ஒன்றையும் காண்கிறார். நம்முடைய ஐக்கியத்தில் அதை அவர் காண்கிறார். ஆம், தேவனுடைய கிறிஸ்து இன்னும் தாகமாகவே இருக்கிறார். தமக்கு சொந்தமானவர்களின் நேசத்திற்காக அவர் தாகம் கொண்டிருக்கிறார். அவரை திருப்தியாக்கக் கூடிய அதை நீங்கள் தரமாட்டீர்களா? "நீர் என்னை உமது இருதயத்தின் மேல் முத்திரையைப் போல வைத்துக்கொள்ளும்" என்பது அவரது சொந்த அழைப்பாகும். அதற்கு நீங்கள் பதிலளியுங்கள்.