இயேசு காடியை வாங்கியபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். (யோவான் 19:30).

கடந்த இரண்டு தியானங்களும், சிலுவையின் சோகயியல் நிகழ்வுகளால் நிறைந்திருந்தன; இப்பொழுது நாம் சிலுவையின் வெற்றியை நோக்கித் திரும்புவோம். "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்ற வார்த்தையில் நமது இரட்சகர் கைவிடப்பட்டுக் கதறுவதைக் கேட்கிறோம்; "நான் தாகமாயிருக்கிறேன்" என்ற வார்த்தையில், அவர் அழுது புலம்புவதைக் கேட்கிறோம்; இப்பொழுதோ, "முடிந்தது" என்று அவர் கூறும் வார்த்தையில், அவருடைய வெற்றிக்களிப்பின் குரல் நமது செவிகளிலே விழுகிறது. துயருறுபவராக பேசிய ஆண்டவரின் வார்த்தைகளிலிருந்து, வெற்றி வீரராக அவர் பேசும் வார்த்தைக்கு இப்பொழுது நம்மைத் திரும்புகிறது. 'ஒவ்வொரு மேகத்திற்கும் வெள்ளிக் கோடுகளுண்டு' (Every cloud has its silver lining) என்பது பழமொழி; எல்லாவற்றிற்கும் மேலான இருளாக இருந்த இந்த மேகத்திற்கும் அப்படியிருந்தது. கிறிஸ்துவின் சிலுவைக்கு, இரண்டு பக்கங்களுண்டு; இது ஆண்டவரடைந்த எல்லையற்ற அவமானத்தின் ஆழத்தைக் காட்டுகிறது. என்றாலும் அவர் இவ்வுலகில் அவதரித்ததின் நோக்கத்தை அது குறிப்பதாய் இருக்கிறது; மேலும், அவருடைய பணியின் குறிக்கோள் நிறைவாக நிறைவதையும் இது கூறுகிறது; இவ்வார்த்தைதான் நமது இரட்சிப்பின் அடிப்படையாகவும் அமைகிறது.

"முடிந்தது. "பண்டைய கிரேக்கர்கள், நிறைய செய்திகளைக் குறைவான வார்த்தைகளில் கூறுவதில் பெருமை கொண்டவர்களாக இருந்தார்கள் "கடலத்தனைச் செய்திகளைச் துளியளவு சொல்லில் கொடுப்பது" பேச்சுக் கலையின் சிறப்பாகக் கருதப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்த சிறப்பு இந்த வார்த்தையில் காணப்படுகிறது. "முடிந்தது” என்ற வார்த்தை, திருமறையின் மூலபாஷையான கிரேக்கமொழியிலும் ஒரே வார்த்தையாகத்தான் காணப் படுகிறது; ஆனாலும் தேவனுடைய நற்செய்தி முழுவதும் இந்த ஒரே வார்த்தையில் அடங்கியிருக்கிறது; இந்த வார்த்தை விசுவாசிகளுக்கு நம்பிக்கையூட்டும் ஆதாரமாக இருக்கிறது; இந்த வார்த்தையின்தான் முழுமையான மகிழ்ச்சியையும், உற்சாகமளிக்கும் தெய்வீக ஆறுதலையும் கண்டடைகிறோம்.

"முடிந்தது" இந்த வார்த்தை, வேறுவழியின்றி மனக்கசப்புடன் உயிர் துறக்கும் தியாகியின் வேதனைக் குரலல்ல; தன்னுடைய வேதனைகள் இத்துடன் முடிவிற்கு வந்துவிட்டது என்ற மனநிறைவை வெளிப்படுத்தும் வார்த்தையுமல்ல; கொடிய வன்முறைத் தாக்குதல்களினால், உயிர்வாழ இயலாது சாகுந்தறுவாயில் கூறிய வார்த்தையுமல்ல. மாறாக, தெய்வீக மீட்பர் பரத்திலிருந்து இப்பொழுது அவர் செவ்வனே முடித்துவிட்டார் என்பதற்கான பிரகடனம்; தேவனின் குணாதியங்களனைத்தையும் வெளிப் படுத்துவதற்காகத் தேவைப்பட்டவைகளையெல்லாம் செய்து முடித்த நிறைவேறுதல்; பாவிகள் மீட்படைவதற்கு முன்னதாக நியாயப்பிரமாணத் தின்படி செய்யத் தேவைப்பட்டதையெல்லாம் செய்துமுடித்த நிறைவேறுதல்: அதாவது, இப்பொழுது நம்முடைய மீட்பிற்கு முழுக்கிரையத்தையும் செலுத்தித்தீர்த்தாயிற்று.

"முடிந்தது" மானுட வரலாற்றிலே, தேவனுடைய மாபெரும் நோக்கம் இப்போது நிறைவேறிற்று - நியாயப்பிரமாணத்தின்படி நிறைவேறியிருக்கிற தேவனின் நோக்கம், இனிமேல்தான் உண்மையாகவே நிறைவேறவேண்டும். ஆரம்பத்திலிருந்தே, தேவனுடைய நோக்கம் எப்பொழுதும் பிரிக்க இயலாததாகவும், ஒன்றாகவுமே இருக்கிறது. அந்த நோக்கம், மானிடர் களுக்கு பல முறைகளிலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது: அடையாளங்களாகவும், மாதிரிகளாகவும், இரகசிய குறிப்புகளாகவும், தெளிவான அறிவிப்புகளாகவும், மேசியாவைக் குறித்த தீர்க்கதரிசனங்களாகவும், அறநெறி அறிவுரைகளாகவும் கூறப்பட்டுள்ளது. தேவனுடைய நோக்கத்தை இப்படிச் சுருக்கிக் கூறலாம்: தம்முடைய சாயலின்படியும் – மகிமையின்படியும் தம்முடைய பிள்ளைகளாகப் படைப்பதற்காக, தம்முடைய கிருபையையும், தம்முடைய குமாரனுடைய மகிமையையும் வெளிப்படுத்தினார். இந்த நோக்கத்தைச் சாத்தியமாக்குவதற்காகவும், மெய்யாக்குவதற்காகவுமே சிலுவையில் அடிப்படை போடப்பட்டுள்ளது.

"முடிந்தது." என்ன முடிந்தது? இந்தக் கேள்விக்கு நிறையவே பதில்கள் இருக்கின்றன. பல திறமையான திருமறை விரிவுரையாளர்கள், இந்த வார்த்தைக்கான விளக்கத்தைக் குறுகிய எல்லைக்குள் கட்டுப்படுத்தி, ஒரேயொரு பயன்பாட்டில் மட்டுமே பொருத்துகின்றனர். இந்த வார்த்தை மீட்பர் அனுபவித்த வேதனைகளைக்குறித்த தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி முடிந்ததைப்பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது என்று நமக்குச் சொல்லுகிறார் கள். அவர்கள் உடனே இந்த வார்த்தையை, மேசியாவைக் குறித்த முன்னறிவிப்புகளுடன் ஒப்பிட்டுக்கூறுகிறார்கள்.

ஆனால், ஆண்டவருடைய இந்த வார்த்தை அவருடைய வேதனை களைப் பற்றிய தீர்க்கதரிசனங்களோடு சம்பந்தப்பட்டதல்ல என்பதற்குப் போதுமான - சிறந்த காரணங்கள் காணப்படுகின்றன. ஆம், இந்த வார்த்தை கிறிஸ்துவினுடைய தன்னலமற்ற தியாக ஊழியத்தைக் (Sacrifi-cial Work) குறித்தது என்று தான் எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், அவர் இன்னமும் அனுபவிக்கவிருக்கிற வேதனைகளைக்குறித்தும், அவமானங்களைக் குறித்துமுள்ள தீர்க்கதரிசனங்கள் இனிதான் நிறைவேற வேண்டியவைகளாக இருக்கின்றன. பிதாவின் கரத்தில் தம்முடைய ஆவியை ஒப்புவிப்பதைக்குறித்த தீர்க்கதரிசனம் (சங்கீதம் 31:5) இனிமேல்தான் நிறைவேற வேண்டும்; விலாவிலே ஈட்டியால் குத்தப்படவேண்டியதும் இனிமேல்தான் நடைபெறவேண்டும் (சகரியா 12:10) இந்த வசனமும், சிலுவையில் அறையப் படுகையில் கால்களிலும் கைகளிலும் ஆணிகள் அறையப்படுவதைக் குறித் துக்கூறும் சங். 22:16 வசனமும் வெவ்வேறு சம்பவங்களைக் குறிப்பவைகள்); அவருடைய எலும்புகள் முறிக்கப்படாது என்ற தீர்க்கதரிசனமும் (சங்.34:20), அவருடைய சரீரம் ஒரு ஐசுவரியவான் கல்லறையில் அடக்கம் பண்ணப் படுவதைக் குறித்த தீர்க்கதரிசனமும் (ஏசாயா 53:9) இனிமேல்தான் நிறைவேற வேண்டியதிருந்தது.

"முடிந்தது" என்ன முடிந்தது? நமது பதில்: அவருடைய திருப்தியான ஊழியம். மானுட மீட்பிற்கு அவசியமான அவருடைய மரணம் இனிமேல்தான் நடந்தேற வேண்டியதிருந்தது. நாம் தியானிக்கும் வசனமிருக்கும் யோவான் நற்செய்தி நூலிலே, தன்னுடைய பணியின் நிறைவேறுதலை எதிர்நோக்குதலுடன் பல இடங்களில் பேசியுள்ளார். (எடுத்துக்காட்டுகள்: யோவான் 12:23,31; 13:31; 16:5; 17:4). மேலும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டிய வைகள் பல உள்ளன. மூன்றுமணிநேர காரிருள் கடந்து போயிற்று; அவரு டைய விலையேறப்பெற்ற இரத்தம் ஏற்கனவே சிந்தப்பட்டுவிட்டது; கர்த்தர் கொட்டிய கோபாக்கினையைச் சகித்தாயிற்று. பாவத்திற்குக் கிருபாதாரபலி (Propitiation) இவைகளெல்லாம் அத்தியாவசியமானவைகள். நம்முடைய மீட்பர் தம்மைப் பலியாக ஈந்த பணி, அதன்பின் உடனே தொடரவிருக்கிற அவருடைய மரணத்தையும் கருத்தில்கொண்டு நிறைவேறியதாக எடுத்துக் கொள்ளலாம். பலிசெலுத்தும் பணி முடிந்த வேளையில், இன்னும் அநேக காரியங்கள் முடிவுற்றன என்பதைப் பார்க்கிறோம். அவைகளைக்குறித்து கவனம் செலுத்துவோம்.

"முடிந்தது"

1 இந்த வார்த்தையில், அவர் மரித்தாகவேண்டும் என்று அவரைப்பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்து தீர்க்கதரிசனங்களும் நிறைவேறி முடிந்ததைக் காண்கிறோம்.

இந்த சந்தர்ப்பத்தில் நமது நினைவிற்கு வருவது இதுதான்: "இயேசு காடியை வாங்கினபின்பு முடிந்தது என்று சொன்னார்" (யோவா 19:30). பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே, மீட்பர் கடந்துசெல்லவேண்டிய அவமானங்களையும், வேதனைகளையும் தேவனுடைய தீர்க்கதரிசிகள் படிப்படியாக விவரித்துள்ளார்கள். இவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறின-அதிசயமாக நிறைவேறின எழுத்தாகிலும் ஒரு எழுத்தின் உருப்பாகிலும் பிறழாமல் நிறைவேறின. தீர்க்கதரிசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, அவர் ஸ்திரீயின் வித்தாக இருக்க வேண்டுமென்றுள்ளதல்லவா? (ஆதியாகமம் 3:15) எனவே அவர் ஸ்திரீயினிடத்தில் பிறந்தார் (கலாத்தியர் 4:40). தீர்க்கதரிசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, அவருடைய தாய் "கன்னிகையாக" இருக்கவேண்டு மல்லவா? (ஏசாயா 7:14) அதுவும் சொல்லுக்குச் சொல் துல்லியமாக நிறைவேறியது (மத்தேயு 1:18). அதுவும் சரியாக நிறைவேறியுள்ளதைக் குறித்துகொள்ளுங்கள் (மத்தேயு 1:1). தீர்க்கதரிசனம் அறிவித்துள்ளபடி அவர் தாவீதின் சந்ததியில் வந்தவராக இருக்கவேண்டுமல்லவா? (2 சாமுவேல் 7:12-13) அதுவும் அப்படியே நடந் தேறியது (ரோமர் 1:3). அவர் அவதரிக்குமுன்பே அவருக்குப் பெயரிடப்பட வேண்டும் என்ற தீர்க்கதரிசனம் உள்ளதல்லவா? (ஏசாயா 49:1), அதன்படியே நடந்தேறியது (லூக்கா 1:31). அவர் யூதேயாவிலுள்ள பெத்தலகேமிலே பிறப்பார் என்ற தீர்க்கதரிசனமுள்ளதல்லவா? (மீகா 5:2), அதன்படியே அவர் அந்த கிராமத்திலேயே எப்படிப் பிறந்தார் என்பதையும் ஒப்பிட்டுப்பாருங்கள். அவர் பிறக்குமிடத்தில் மற்றவர்களைச் சோகம் சூழும் என்று தீர்க்கதரிசனமாக முன்னெச்சரிக்கப்பட்டுள்ளதல்லவா? (எரேமியா 31:15), அதுபோலவே துன்ப நிகழ்ச்சி நிறைவேறியதைக் கவனித்துப்பாருங்கள் (மத்தேயு 2:16-18). மேசியா தோன்றுமளவும், செங்கோல் யூதா கோத்திரத்தைவிட்டு நீங்காதிருக்கும் என்று தீர்க்கதரிசனத்தில் முன்னுரைக்கப்பட்டுள்ளதல்லவா? (ஆதியாகமம் 49:10), அதன்படியே இஸ்ரவேலின் பத்துக்கோத்திரங்களும் சிறைப்பட்டுப் போனாலும், அவருடைய வருகையின்பொழுது யூதேயா பூமி பாதுகாக்கப் பட்டிருந்தது. அவர் எகிப்திற்கு ஓடிப்போவதையும், மறுபடி திரும்புவதையும் தீர்க்கதரிசனங்கள் குறிப்பிட்டுள்ளதல்லவா? (ஓசியா 11:1; ஏசாயா 49:3,6). அதன்படியே நடைபெற்றது (மத்தேயு 2:14-15).

கிறிஸ்து வருவதற்கு முன்பு, ஒருவன் பாதையைச் செம்மைபண்ண வருவான் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளதல்லவா? (மல்.3:1), அந்தத் தீர்க்கதரிசனம் யோவான் ஸ்நானகனில் நிறைவேறியதைக் காணலாம். மேசியா தோன்றும்பொழுது, "குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப் போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்" என்று தீர்க்கதரிசனம் அறிவிக்கிறதல்லவா? (ஏசாயா 35:5,6), இந்தக்காரியங்கள் எப்படி மகிமையாக நிறைவேறின என்பதை அறிந்துகொள்ள நான்கு நற்செய்தி நூல்களையும் வாசித்துப்பாருங்கள். அவர் "சிறுமையும் எளிமையுமானவர்" என்று அவரைப்பற்றி தீர்க்கதரிசனம் கூறுகிறதல்லவா? (சங்கீதம் 40:17 - இந்த சங்கீதத்தின் துவக்கத்தையும் பாருங்கள்). அதன்படியே மனுஷகுமாரன் தலைசாய்க்க இடமின்றி அவதியுற்றதைக் கவனித்துப்பாருங்கள். அவர் பேசும் வார்த்தைகள் உவமைகளால் நிறைந்திருக்கும் என்று தீர்க்கதரிசனம் அறிவிக்கிறதல்லவா? (சங்கீதம் 78:2), அதைப்போலவே அவருடைய உபதேசமுறைகள் பெரும்பாலும் இருந்தன. அவர் கொந்தளிப்பை அடக்குகிறவராக இருப்பார் என்று தீர்க்கதரிசனம் சித்தரிக்கிறதல்லவா? (சங்.107:29), இதைத்தான் சரியாக அவர் செய்தார். அவர் வெற்றிப் பவனியாக எருசலேம் நகருக்குள் பிரவேசிப்பதை தீர்க்கதரிசனம் முன்னறிவிக்கிறதல்லவா (சக. 9:9), அதுவும் அப்படியே நடந்தேறியது.

அவர் மனிதர்களால் புறக்கணிக்கப்படுவார் என்றும் (ஏசாயா 53:3), யூதர்களால் வெறுக்கப்படுவார் என்றும் (ஏசா.8:14), அவர் முகாந்திரமின்றி பகைக்கப்படுவார் என்றும் (சங்கீதம் 69:4) தீர்க்கதரிசனங்கள் அறிவிக்கின்றன. வல்லவா? இவைகள்யாவும் அப்படியே நடந்தன என்று வருத்தத்துடன் சொல்லவேண்டியதாக இருக்கிறது. அவர் அவமரியாதையாக நடத்தப் படுவதையும், சிலுவைப்பாடுகளையும் தீர்க்கதரிசிகள் சொல்லோவியங் களாக வரைந்துள்ளார்களல்லவா? அவைகளனைத்தும் சந்தேகத்திற்கிட மின்றி தெள்ளத்தெளிவாகவே நிகழ்ந்து முடிந்தன. நெருங்கிய நண்பன் அவருக்குத் துரோகமிழைத்தது, நெஞ்சார நேசித்த சீடர்கள் அவரைக் கைவிட்டோடியது, கொலைகளத்திற்கு அவரை இழுத்துச் சென்றது, நியாயவிசாரணைக்கு அவரை அழைத்துச்சென்றது. அவருக்கெதிராக பொய்சாட்சிகள் கூறியது, அவர் தன்னைத் தற்காத்துக்கொள்ள சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது, அவருடைய குற்றமின்மை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டது, அவர் நீதியின்றி குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டது, அவருடைய கால்களும் கரங்களும் நிஜமாகவே துளைக்கப்பட்டன. அவர் குற்றவாளிகளிலொருவராக எண்ணப்பட்டது, அவருடைய வஸ்திரத்தின்மீது சீட்டுப்போட்டது - யாவும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முன்னுரைக்கப்பட்டு, எழுத்துக்கெழுத்து அப்படியே நிறைவேறியது. கடைசியாக நிறைவேறவேண்டிய தீர்க்கதரிசனமான, பிதாவின் கரங்களில் தமது ஆவியை ஒப்புவிக்கும் தீர்க்கதரிசனமும் இன்னும் சிறிது நேரத்தில் நிறைவேறவுள்ளது.இந்த சமயத்தில், "நான் தாகமாயிருக்கிறேன்" என்ற உரத்த சத்தமாகக் கூறியபின், எல்லாவற்றையும் நிறைவேற்றினார்; ஆண்டவராகிய இயேசு, கடந்துசென்ற நிகழ்ச்சிகளனைத்தையும் தீர்க்க தரிசன வார்த்தைகளுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்து, அதன் முழுப்பரி மாணத்தையும் உணர்ந்தவராய், "முடிந்தது" என்று பெருஞ்சத்தமிட்டுக் கதறினார்.

ஆண்டவரின் முதலாம் வருகைக்கான (First Advent) முழுமையான தீர்க்கதரிசனத்தொகுப்பைப் போலவே, அவருடைய இரண்டாம் வருகைக்கும் முழுமையான - தீர்க்கதரிசனத்தொகுப்புகள் இருக்கின்றன; முதலாம் தொகுப்புத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியதுபோலவே, இரண்டாம் தொகுப்புத் தீர்க்கதரிசனங்களும் நிச்சயமாகவும், நிஜமாகவும், முழுமையாகவும் நிறைவேறும் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். ஆண்டவர் இந்த பூமிக்கு முதலாம்முறை வருவதைக்குறித்தவைகள் உண்மையாகவே நிறைவேறினதைக் கண்டதினால், அவருடைய இரண்டாம் வருகையைக்குறித்த தீர்க்கதரிசனங்களும் அப்படியே நிறைவேறும் என்பதில் நிச்சயமாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். முதலாம் தொகுப்புத் தீர்க்கதரிசனங்கள் உள்ளபடியே, உண்மையாகவே, எழுத்தின் படியே நிறைவேறியது போலவே, பிந்திய தீர்க்கதரிசனங்களும் நிச்சயமாக நிறைவேறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதுபோலவே பிந்திய தொகுப்பும் எழுத்தின்படியே நிறைவேறும். அப்படியிருக்க அதற்கு ஆவிக்குரிய வியாக்கியானம் அளிக்க முற்படுவதும் அவற்றை சந்கேதக் குறியீடுகள் என்றுரைப்பதும் முற்றிலும் முரணானதும், வாதத்திற்கு ஒவ்வாதது மட்டுமல்ல, அது நமக்குப் பெரிய ஆபத்தை விளைவிப்பதும், தேவனையும், அவருடைய வார்த்தையையும் அவமதிப்பதுமாகவும் இருக்கும்.

"முடிந்தது"

  1. இந்த வார்த்தையில், ஆண்டவருடைய முழுமையான வேதனையைக் காண்கிறோம்.

ஆண்டவருற்ற வேதனைகள் என்னவென்று நாவுகளோ, எழுதுகோல் களோ எடுத்தியம்ப இயலுமோ? உச்சரிக்க இயலாத வேதனையை சரீரத்திலும், மனதிலும், ஆவியிலும் - அவர் சகித்தார்! "துக்கம் நிறைந்தவர்" (The Man of Sorrows) என்ற பட்டப்பெயர் அவருக்குப் பொருத்தமானது தான்; மனிதர்களின் கரங்களிலும், சாத்தானின் கரங்களிலும், தேவனுடைய கரங்களிலும் அவர் துன்புறுத்தப்பட்டார்; பகைவர்களைப்போலவே நண்பர்களும் அவரைக் காயப்படுத்தினார்கள். ஆரம்பகாலம் முதலே, அவர் பாதையில் குறுக்கிட்ட சிலுவையின் நிழலின் பாதையின் மத்தியில் அவர் நடந்துகொண்டிருந்தார். இங்கே அவருடைய அங்கலாய்ப்பைக் கேளுங்கள்: "சிறுவயது முதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டு போகிறவனுமாயிருக்கிறேன்." (சங்கீதம் 88:15). இந்த வசனம், அவருடைய முந்தைய ஆண்டுகள் எப்படிப்பட்டதாயிருந்தது என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது. அந்த வார்த்தைகளில் எவ்வளவு பொருள் பொதிந்துள்ளது என்பதை யாரால் கூறமுடியும்? நம்மைப் பொருத்தவரை, எதிர்காலத்தை ஊடுருவிப் பார்க்க இயலாதவாறு ஒரு திரை மறைத்திருக்கிறது. ஆனால், ஆண்டவர் முடிவை ஆரம்பத்திலிருந்தே அறிந்தவர்! அவருக்கு முன்னால் பயங்கரமான சிலுவை எப்பொழுதும் நின்றுகொண்டிருந்தது என்பதை ஒருவர் அறியவேண்டுமானால் நற்செய்தி நூல்களை வாசிக்கவேண்டும். கானாவூர் கலியாண விருந்தில், மகிழ்ச்சியும் ஆரவாரமும் நிறைந்திருந்த வேளையில்கூட, “அவருடைய வேளை” இன்னமும் வரவில்லை என்ற ஆழ்ந்த கருத்துச்செறிந்த வார்த்தைகளைக் கூறுகிறார். ஆண்டவர், இரவுவேளையில் நிக்கோதேமுவுடன் உரையாடிக்கொண்டிருக்கையில், "மனுஷகுமாரன்" இவ்விதமாக உயர்த்தப்படவேண்டும்" என்று கூறுகிறார். யோவானும், யாக்கோபும், வரவிருக்கும் அவருடைய ராஜ்ஜியத்தில், இருவருக்கும் மகிமையான சிங்காசனங்கள் வேண்டுமென்று வேண்டுகோள்விடுத்தபொழுது, தான் பருகவேண்டிய “பாத்திரத்தைக்” குறித்தும், தான் முழுகவேண்டிய “ஞானஸ் நானத்தைக்" குறித்தும் கூறுகிறார். பேதுரு அவரை ஜீவனுள்ள தேவனு டைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிக்கையிட்டவுடன், அவர் தமது சீஷர்களை நோக்கித் திரும்பி, "தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தமது சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார் (மத்தேயு 16:21). மறுரூப மலையில், அவர் மோசேயுடனும் எலியாவுடனும் இருக்கையில், "அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள் (லூக்கா 9:31)

இந்த இடத்திலும், கிறிஸ்துவின் சிலுவை இன்னமும் எதிர்நோக்கிய நிகழ்ச்சியாக இருந்ததால், அவர் அனுபவித்த வேதனையின் கொடுமையை நம்மால் அனுமானிக்க இயலவில்லை என்பது உண்மைதான்; அது உண்மையாகவே நிகழ்வுற்றபோதும் அதனுடைய வேதனையை இன்னமும் அளவிட இயலவில்லை. சரீர வேதனை கொடுமையாக இருந்தது; ஆனால் அவருடைய ஆத்தும வேதனையுடன் ஒப்பிட்டால் இந்த வேதனை ஒன்றுமே யில்லை. அவருடைய சரீரவேதனைகளைக் குறித்துக் கருத்தோடு தியானிக்க முந்திய அத்தியாயத்தில் பல பத்திகளை ஒதுக்கினோம், ஆனால் மறுபடியும் அதைப்பற்றியே திரும்பிப் பார்ப்பதற்காக வருந்தப்போவதில்லை. நம்முடைய மீட்பிற்காக நமது ஆண்டவர் என்னென்ன பாடுகளை அனுபவித்தார் என்பது குறித்து நாம் அடிக்கடி தியானிப்பதில்லை. ஆனால், எவ்வளவுக்கெவ்வளவு நாம் நமது ஆண்டவர் அனுபவித்த பாடுகளைப்பற்றி அறிந்துகொள்ளுகிறோமோ, எந்த அளவிற்கு அடிக்கடி அவைகளைத் தியானிக்கிறோமோ, அந்த அளவிற்கு அவரிடம் நெருக்கமான அன்புள்ளவர்களாகவும், ஆழமிகுந்த நன்றியுணர்ச்சி உள்ளவர்களாகவும் இருப்போம்.

இறுதியில் முடிவு நேரம் வந்துவிட்டது. கெத்சமனேயில் சொல் லொண்ணா வேதனையை அனுபவித்தார். அதைத் தொடர்ந்து காய்பா முன்பும், பிலாத்து முன்பும், ஏரோது முன்பும், மறுபடியும் பிலாத்து முன்பும் விசாரிக்கப்பட்டார். கொடுமையான சேவகர்கள் அவரை இழுத்துச் சென்றார்கள். அங்கே கொடூர சிலுவைமரத்தில் அவருடைய கால்களையும் கைகளையும் பிணைத்தார்கள். ஆசாரியர்களும், மக்களும், அவருடன் அடிக்கப்பட்டிருந்த கள்ளர்களும் அவரை நிந்தித்தார்கள். இரக்கமற்ற இழியவர்கள் கூட்டம் அவரை அவமானப்படுத்தியது. ஆண்டவருக்காக இரக்கப்படவும், ஆறுதல் கூறவும் அவர்களிடையே யாருமில்லை (சங்.69:20). அவ்வமயம் திகிலூட்டும் மேகம் பிதாவின் முகத்தை மறைத்ததால்,"என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்ற வேதனை மிகுந்த பரிதாபமான குரலில் கதறினார். அவருடைய நாவரண்டு உதடுகள் வெடித்திருந்ததால், "நான் தாகமாயிருக்கிறேன்" என்ற வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டது. இருளின் அதிபதியோடு நடந்த பயங்கரமான யுத்தத்தில், அவருடைய பாதத்தைச் சாத்தான் நகக்கினான். ஒருவேளை பாடுபடும் ஆண்டவர், "வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவலையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதால் எனக்கு உண்டான என் துக்கத்திற்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப் பாருங்கள்" (புலம்பல் 1:12) என்று கேட்டிருப்பார்.

இப்பொழுது அவருடைய பாடுகள் முடிவிற்கு வந்துவிட்டன. அவருடைய பரிசுத்த ஆத்துமாவை அமிழ்த்தியிருந்த வேதனைகள் முடிந்தன. கர்த்தர் அவரை நொறுக்கிவிட்டார்; மனிதர்களும் சாத்தானும் தங்களால் இயன்ற அளவிற்கு அவரைக் கொடுமைப்படுத்திவிட்டார்கள். பாத்திரம் காலியா யிற்று. கர்த்தருடைய கோபாக்கினையின் புயல் ஓய்ந்து விட்டது. காரிருள் மறைத்துவிட்டது. தெய்வீக நீதியின் வாள் உறைக்குள் சென்றடங்கிவிட்டது. பாவத்திற்கான விலை செலுத்தியாயிற்று. அவருடைய பாடுகளைப்பற்றிக் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறி முடிந்தது. சிலுவையைச் சகித்தாயிற்று. தெய்வீக பரிசுத்தம் முழுமையாக நிறைவுற்று விட்டது. வெற்றி முழக்கத்துடன் - மகா சத்தமாக, அண்டசராசரங் களனைத்தும் எதிரோலிக்கும் குரலில் - நமதாண்டவர், "முடிந்தது" என்று கர்ஜித்தார். அவமதிப்பு, அவமானம், பாடுகள், வேதனை யாவும் கடந்து சென்றுவிட்டது. அந்தப்பாடுகளை அவர் மறுபடியும், அனுபவிக்கத் தேவையில்லை. பாவிகளுடன் தனக்குள்ள முரண்பாடுகளை இனி சகித்துக் கொண்டிருக்கமாட்டார். சாத்தானுடைய ஆதிக்கமிருக்கு மிடத்தில் இனி இருக்கமாட்டார். கர்த்தருடைய முகத்திலிருந்து ஒளிரும் ஒளி இனி அவருக்கு மறைவாக இருக்காது. இவைகளெல்லாம் முடிந்ததற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திமுண்டாவதாக.

முட்கிரீடம் சூடிய சிரசில், இப்போது மகிமையின் மகுடம். – ராஜ பொற்கிரீட அலங்கரிப்பு, வெற்றியுற்ற அவர் நெற்றியைச் சுற்றிலும். விண்ணின் உயர் ஸ்தலங்களின் உரிமை அவர் கையகமானதல்ல, விண்ணக ஒளிக்கு மன்னாதிமன்னனும் கர்த்தாதி கர்த்தாவுமானார் மேலே வசிப்போர் மகிழ, கீழுள்ளோர் எல்லாம் களிப்புற. தமதன்பை உணர்த்தி, தமது நாமத்தை அறியச்செய்கிறார்.

"முடிந்தது."

  1. இந்த வார்த்தையில், ஆண்டவர் அவதரித்த நோக்கம் ஈடேறியதைக் காண்கிறோம்.

தனியாளுமையுள்ள தெய்வீக நபர்கள் ஒவ்வொருவருக்கும், பிரத்தி யேகமான பணிகளுண்டு. அவர்களுடைய தனித்தன்மைகளில் வித்தியாசம் காண்பது எப்படிக் கடினமோ, அதைப்போலவே அவர்களுடைய பணிகளிலும் வேறுபடுத்திக்காட்டுவது கடினம். பிதாவாகிய கர்த்தர், இந்த உலகின் ஆளுகையிலே முக்கிய கரிசனையுள்ளவராக இருக்கிறார். அவருடைய கரங்களின் கிரியைகள் அனைத்தின்மேலும் ஆட்சிசெலுத்துகிறார். குமாரனாகிய கர்த்தர், மீட்புப் பணியிலே முக்கிய அக்கறையுள்ளவராக இருக்கிறார்: அவர்தான் பாவிகளை மீட்பதற்காக மரிக்க சித்தம்கொண்டு இவ்வுலகிற்கு வந்தார். பரிசுத்த ஆவியானவரான கர்த்தர் வேதத்திலே அதிகக் கவனஞ் செலுத்துகிறவராக இருக்கிறார்: அவர்தான் தேவனுடைய பரிசுத்தவான்களை ஏவி தேவனுடைய வார்த்தையைப் பேசச்செய்தார், இப்பொழுதும் அவரே ஆவியிலே தெளிவையும், புரிந்து கொள்ளுதலையும் அருளுகிறார், உண்மைக்கு வழிநடத்துகிறார். நாம் இப்போது குறிப்பாகக் குமாரனாகிய கர்த்தரின் பணியில்மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

நமதாண்டவர் பூலோகத்திற்கு வருமுன்பே அவருக்கென்று குறிப்பிட்ட பணி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இவரைக்குறித்து ஏற்கனவே வேதபுத்தகத் திலே எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னறிவிக்கப்பட்ட தேவனுடைய சித்தத்தைச் செய்துமுடிக்கவே அவர் வந்தார். அவர் பன்னிரெண்டு வயது சிறுவனாக இருந்தபொழுதே, தமது "பிதாவிற்கடுத்த காரியங்களே'' அவருடைய இருதயத்திற்கு முன்பாக இருந்தன, அவைகளே அவருடைய கவனத்தை முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தன. மறுபடியும், யோவான் 5:36-லே அவர், "யோவானுடைய சாட்சியைப் பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்து வருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறது" என்று கூறுவதைப் பார்க்கிறோம். அவர் மரிப்பதற்கு முந்தைய நாளிரவில், தனது அற்புதமான மகா பிரதான ஆசாரிய ஜெபத்திலே, ''பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்" என்று கூறுவதைக் காண்கிறோம்.

டாக்டர் ஆண்டர்சன் பெரி (Dr. Anderson Berry) தனது, "கிறிஸ்து சிலுவையிலிருந்து கூறிய ஏழு வார்த்தைகள்" (The Seven Saying of Christ on the Cross) என்ற புத்தகத்திலே, கிறிஸ்து நிறைவேற்றிய அவரது பணியின் பொருளையும், மகிமையையும் விளக்குவதற்குப் பொருத்தமாக, வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியிருக்கிறார். மக்களின் போற்றுதலுக்குரியவராகவும், நாகரீகத்தின் தலைவியாகவுமிருந்த இங்கிலாந்து நாட்டு மகாராணியான எலிசபெத் 1, தனது மரணப்படுக்கை யிலிருந்த வேளையில் தனதருகிலிருந்த தாதிப்பெண்ணிடம், "ஓ என் கர்த்தாவே! வாழ்க்கை முடிகிறது. நான் முடிவை நெருங்கிவிட்டேன் -முடிந்தது, முடிந்தது. ஒரேயொரு வாழ்க்கை, அதுவும் முடிந்துபோகிறதே! வாழ்வது, நேசிக்கப்படுவது, வெற்றிபெறுவது; இப்பொழுது எல்லாம் முடிந்தது என்பதைத் தெரிந்துகொள்வது! ஒருவன் எதைவேண்டுமானாலும் எதிர்த்து நிற்கலாம், மரணத்தைத் தவிர" என்று கூறினார்: இதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், அவரையே பார்த்துகொண்டிருந்தார்கள்; சிறிது நேரம் சென்றவுடன், ராணியின் மெல்லிய புன்னகையைக் கண்டு எழுந்த தாதிப்பெண்கள் ஜடமாக நின்றுவிட்டார்கள்; கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தாதியர்கள் பக்கம் திரும்பிய ராணியின் பார்வை வெற்றிடத்தை வெறித்து நோக்கி அப்படியே நின்றுபோனது. உலகில் பாதிபேருக்குமேல் பொறாமைப்படும்படியாக, எரிநட்சத்திரம் போன்று ஒளிர்ந்து கொண்டு சென்ற ஒரு மகாராணியின் வாழ்க்கை இப்படித்தான் முடிவிற்கு வந்தது. அவரால் எதையும் “முடிந்தது” என்று கூறமுடியவில்லை. ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை எல்லாமே "மாயையும் மனதிற்கு சஞ்சலமும்” நிறைந்தவைகளாகவே இருந்தன. நமதாண்டவருடைய முடிவு எப்படி மாறுபட்டதாக இருக்கிறது! - "பூமியிலே நான் உம்மை மகிமைப் படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்."

கர்த்தர் எந்தப் பணியை நிறைவேற்றுவதற்காகத் தமது குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினாரோ அந்தப்பணியை முடித்தாயிற்று. அவர் தமது இறுதி மூச்சை விடும்வரைக்கும் முற்றிலுமாக அந்தப்பணி முடிந்துவிட்டதாகக் கூறமுடியாது; ஆனால் மரணம் வெகு அருகில்தான் இருந்தது. அதுவும் சிறிது நேரத்தில் நிறைவுறும் என்பதை எதிர்நோக்கியவராகத்தான் "முடிந்தது" என்று சத்தமிட்டுக் கூறினார். கடினமான பணியைச் செய்து முடித்தாயிற்று. கொடுக்கப்பட்ட தெய்வீக வேலை நிறைவுற்றது. மனிதர்களுக்கோ அல்லது தேவதூதர்களுக்கோ எக்காலத்திலாகிலும் கொடுக்கப் பட்டதைவிட பெருமதிப்பிற்குரியதும், பெருஞ்சிறப்பிற்குரியதுமான பணி முற்றிலுமாக முடிவுற்றது. அவர் எதற்காகப் பரலோகத்தின் மகிமையை துறந்து வந்தாரோ, எதற்காக அவர் அடிமையின் ரூபமெடுத்தாரோ, எதற்காக இந்த பூமியில் முப்பத்தி மூன்றரையாண்டுகள் தரித்திருந்தாரோ அந்தப்பணி நிறைவாய் நிறைவேறி முடிந்தது. இனி முடிக்கவேண்டியது ஒன்றுமில்லை. அவர் அவதரித்துச் சென்றடையவேண்டிய இலக்கை எட்டினார். அவர் நிறைவேற்றும்படியாக ஒப்புவிக்கப்பட்டிருந்த கடினமான, விலைமதிப்பற்ற பணியை முழுவதுமாக நிறைவேற்றியதை எண்ணிப்பார்த்து எப்படி வெற்றிக்களிப்பில் திளைத்திருப்பார்!

"முடிந்தது." எந்தப்பணியை ஆற்றும்படிக்குக் கர்த்தர் தமது குமாரனை அனுப்பினாரோ அந்தப்பணியைச் செய்தாயிற்று. அநாதிகாலத்திலேயே தீட்டியிருந்த தேவனின் திட்டம் நடந்தேறியது. தேவனுடைய திட்டம் முழுமையாக நிறைவேறியது. ஆண்டவர் "அக்கிரமக்காரர்களின் கை களினாலே சிலுவையில் - கொலை செய்யப்பட்டார்" என்பது உண்மைதான், ஆனாலும் அவர், "தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவிப்பின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்டார்" (அப்போஸ்தலர் 2:23), பூலோகத்தின் ராஜாக்கள் எதிர்த்து நின்றதும், ஆட்சியாளர்கள் கர்த்தருக்கு விரோதமாகவும், அவருடைய மேசியாவிற்கு விரோதமாக ஒன்றுகூடியதும் உண்மைதான், இருந்தாலும் அவைகள் யாவும் கர்த்தருடைய "கரமும் அவருடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படிக்கே" (அப்போஸ்தலர் 2:47) அவ்வாறு நடந்தேறியது. ஏனென்றால், அவர் யாவற்றிற்கும்மேல் உயர்ந்தவராக இருக்கும் கர்த்தருடைய இரகசியங் களைத் தகர்ப்பது கூடாதகாரியம். அவர் உன்னதமானவராக இருப்பதால் அவருடைய ஆலோசனையே நிலைநிற்கும். அவர் சர்வ வல்லவராக இருப்பதால், கர்த்தருடைய நோக்கத்தை எடுத்தெறிவது இயலாதகாரியம். கர்த்தராகிய தேவனுடைய விருப்பங்கள் தடுக்க இயலாத வலிமைமிக் கவைகள் என்பதைக் கர்த்தருடைய வேதம் மறுபடியும் மறுபடியும் வலியுறுத்துகிறது. இந்த உண்மை இன்று சர்வசாதாரண கேள்விக்குறியாக இருப்பதால், இதை நிரூபிக்கும் எத்தனமாக ஏழு வேதாகப்பகுதிகளை எடுத்துக்காட்டியிருக்கிறேன்: "அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திரும்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்" (யோபு 23:13). "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்" (யோபு 42:2). "நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமானவை களையும் செய்கிறார்" (சங்கீதம் 115:3). "கர்த்தருக்கு விரோதமான ஞானமு மில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை" (நீதிமொழிகள் 21:30). "சேனை களின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார்: யார் அதை வியர்த்தமாக்கு வான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்?" (ஏசாயா 14:27). "முந்தி பூர்வகாலத்தில் தடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன்; எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப் படாதவைகளைப் பூர்வமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்" (ஏசாயா 46:9-10). "பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனைகளையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி : என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் धानं?" (क्र.4:35).

ஆண்டவரின் இந்த வெற்றிக்குரலில் - "முடிந்தது" - தீர்க்கதரி சனமும், தேவன் அருளியிருந்த உறுதிமொழியும், எந்த இடர்பாடுகளும் தடைசெய்ய வகையின்றி முழுமையாக நிறைவேறியது. இறுதியில், அனைத்தும் முடிவிற்கு வரும்பொழுது, தேவனுடைய குறிக்கோள் முழுமையாக நிறைவுறும் சமயத்தில், தாம் செய்துமுடிக்க வேண்டுமென்று விரும்பியிருந்த காரியங்களையெல்லாம் செய்துமுடித்த பின்னர், மறுபடியுமாக "முடிந்தது" என்று சொல்லப்படும்.

"முடிந்தது"

  1. இந்த வார்த்தையில், ஆண்டவர் பரிகாரம் நிறைவேற்றி முடித்ததைக் காண்கிறோம்.

இதுவரைக்கும், கிறிஸ்து தமது அவதாரத்தின் இலக்கை எட்டியதைக் குறித்தும், இந்த பூலோகத்தில் அவர் வந்த நோக்கத்தை நிறைவேற்றி முடித்ததைக்குறித்தும், அந்த இலக்கும், நோக்கமும் என்னவென்று வேதாகமம் தெளிவாக விளக்குகிறதைக்குறித்தும் தியானித்தோம். மனுஷகுமாரன் இந்த உலகத்திற்கு, "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே" வந்தார் (லூக்கா 19:10). கிறிஸ்து இயேசு பூலோகத்திற்கு, "பாவிகளை இரட்சிக்கவே" வந்தார் (1தீமோ. 1:15). ஸ்திரீயினிடத்தில் பிறந்த தமது குமாரனை, "நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்பட்டவர்களை மீட்டுக் கொள்ளத்தக்கதாக" அனுப்பிவைத்தார் (கலா.4:4).அவர், "நமது பாவங்களைச் சுமந்து தீர்க்கவே வெளிப்பட்டார்" (1 யோவான் 3:3,5). இவைகள் எல்லாவற்றிலும் சிலுவை சம்பந்தப்பட்டுள்ளது. “இழந்ததைக்" கண்டுபிடிக்க அவர் வந்தாரென்றால் - அது கர்த்தரின் தண்டனையைப்பெற்று மரணமுற்ற இடத்தில்தான் சாத்தியம். பாவிகளை "இரட்சிக்க" வேண்டுமென்றால், அவர்களுடைய இடத்தை வேறு யாராவதொருவர் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய பாவச்செயல்களைத் தம்மேல் ஏற்றுக்கொள்ளவேண்டும். நியாயப்பிரமாணங்களுக்குட்பட்டவர்கள் "மீட்கப்பட" வேண்டுமானால், வேறொருவர் நியாயப்பிரமாணத்தின் நிபந்தனைகளையும், சாபத்தின் வேதனையையும் நிறைவேற்றித் தீர்த்தாகவேண்டும். கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட்டால் மட்டுமே. நம்முடைய பாவங்கள் "நீக்கப்படும்."நீதி நிலைநாட்டத் தேவையானவைகள் பூர்த்தியாகவேண்டும்; தேவனுடைய பரிசுத்தம் காக்கப்படத் தேவையான வைகள் நிறைவேற்றப்படவேண்டும்; நம்மேல் விழுந்த மோசமான கடன் செலுத்தப்பட வேண்டும். இதைச் சிலுவையிலே செய்து முடித்தாயிற்று தேவகுமாரனே இதனை எவ்விதக் குறைவுமின்றி, இனி எக்காலத்திலும் செய்யவேண்டிய அவசியமின்றி, முழுமையாகச் செய்து முடித்தார்.

"முடிந்தது." எந்த ஒரு காரியத்தை ஆசரிப்புக் கூடாரமாகவும், பல நிழலாட்டமான சடங்காச்சாரங்களாலும், தேவனுடைய தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த வார்த்தைகளாலும், இன்னும் பலவிதமான மாதிரிகளைக் (Types) கொண்டும் எதிர்பார்த்தார்களோ, அந்தக் காரியம் இப்பொழுது நிறைவேறியது. பாவத்தையும் வெட்கத்தையும் "மூடும்படிக்கு" இப்பொழுது கொடுக்கப்படுவது, நம்முடைய ஆதிப்பெற்றோர்களுக்கு ஆட்டுத் தோலினால் தேவன் ஆடையணிவித்தது மாதிரியாக (Type) இருக்கிறது. இப்பொழுது கொடுக்கப்பட்டிருக்கிற சிறப்பான பலிக்கு, ஆபேலினுடைய ஆட்டுக்குட்டி மாதிரியாக இருக்கிறது. இப்பொழுது அடித்த தெய்வீக நீதித்தீர்ப்பின் புயலிலிருந்து காக்கப்பட கொடுக்கப்பட்ட பாதுகாப்பிடத் திற்கு, நோவாவின் பேழை மாதிரியாக இருக்கிறது. தாம் மிகவும் நேசிக்கும் தமது ஒரேபேறான குமாரனை, பலிபீடத்தின்மேல் நிறுத்தியிருப்பதற்கு, ஆபிரகாம் தனது மகனான ஈசாக்கைப் பலியிட முற்பட்டது மாதிரியாக இருக்கிறது. தண்டனையளிக்கும் தேவதூதனிலிருந்து தற்காத்துகொள்ள இப்போது அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு, (எகிப்தில்) பஸ்கா ஆட்டின் இரத்தத்தைத் தெளித்தது மாதிரியாக இருக்கிறது. இப்பொழுது பாவிகளுக் காக அளிக்கப்படத் தயாராக இருக்கும் குணம் (Cure), பாம்புகடியிலிருந்து குணமடைய மரத்திலே தூக்கப்பட்ட வெண்கல சர்ப்பம் மாதிரியாக இருக்கிறது. ஜீவனைக் கொடுக்கும் ஜீவஊற்று கொடுக்கப்படவிருப்பதற்கு, மோசே கற்பாறையை அடித்தது மாதிரியாக இருக்கிறது.

"முடிந்தது." இங்கே பயன்படுத்தியிருக்கிற "டெலோ" (Teleo) என்ற கிரேக்க வார்த்தை, புதிய ஏற்பாட்டில் பலவிதமாக மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையை ஆண்டவர் பயன்படுத்தியுள்ள வேறுசில பகுதிகளை மேலோட்டமாகப் பார்த்தால், இந்த வார்த்தை வெளிப்படுத்துகிற முழுமையான, சரியான செய்தியை அறிந்து கொள்ளப் பயனுள்ளதாக இருக்கும். மத்தேயு 17:24 இல் இந்தச் சொல் இப்படிப் பொருள்படும்படி பயன்படுத்தப்பட்டுள்ளது: "வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து, உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிற தில்லையா என்று கேட்டார்கள்" லூக்கா 2:39 இல் இப்படிப் பொருள் கொள்ளும்படி பயன்படுத்தப்பட்டுள்ளது: "கர்த்தருடைய நியாயப்பிரமாணத் தின்படி சகலத்தையும் அவர்கள் செய்துமுடித்தபின்பு - கலிலேயாவிற்குத் திரும்பிப் போனார்கள்." லூக்கா 18:31 இல் இவ்வாறு பொருள்கொள்ளும்படி சொல்லப்பட்டுள்ளது: "மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்." இவற்றையெல்லாம் ஒன்றிணைத்துப் பார்த்தால் ஆண்டவர் கூறிய ஆறாம் வார்த்தையின் பாப்பெல்லையை (Scope) அறிந்துகொள்ளலாம். “முடிந்தது” என்று அவர் கூறியதை இப்படியெல்லாம் பொருள்கொள்ளலாம் இது “முடிக்கப்பட்டு விட்டது"; இது "செலுத்தப்பட்டுவிட்டது” ; இது "செய்துமுடிக்கப்பட்டு விட்டது”; இது "நிறைவேற்றப்பட்டுவிட்டது. என்ன முடிக்கப்பட்டது? - நமது பாவங்களும், அவைகளினால் ஏற்பட்ட குற்ற உணர்வுகளும், என்ன செலுத்தப்பட்டது? - நமது மீட்பிற்கான கிரையம். என்ன முடிக்கப்பட்டது? நியாயப்பிரமாணத்தின் உச்சகட்ட நிபந்தனைகள். என்ன நிறைவேற்றப் பட்டது? - அவருடைய பிதா அவர் செய்யும்படிக்குக் கொடுத்த கிரியைகளில் என்ன “முடிந்தது"? - மிட்பிற்கான பரிகாரம்.

கர்த்தர் அவருக்குச் செய்யும்படி கொடுக்கப்பட்டிருந்த பணியைக் குறைவின்றி நிறைவுறச் செய்துவிட்டார் என்பதை நிரூபிக்கக் குறைந்தது நான்கு ஆதாரங்களை எடுத்துக்காட்டலாம். முதலாவது, தேவாலாலயத் திரைச்சீலை கிழிந்தது. தேவனிடத்திற்குச் செல்லும் பாதை திறந்துவிடப் பட்டுவிட்டதைக் காண்பிக்கிறது. இரண்டாவதாக, கிறிஸ்துவை மரணத்தி லிருந்து உயிர்த்தெழச் செய்தது, கர்த்தர் அவருடைய பலியை முற்றிலுமாய் ஏற்றுக்கொண்டுவிட்டதைச் சாட்சி பகருகிறது. கிறிஸ்துவைக் கர்த்தர் தனது வலது பாரிசத்திலே அமரச்செய்து பெருமைப்படுத்தியது, கிறிஸ்து செய்து முடித்த பணியின் விலைமதிப்பையும், பிதா தமது குமாரனின் கிரியையினாலே அடைந்த மகிழ்ச்சியையும் எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.நான்காவதாக, கிறிஸ்து செய்துமுடித்த பிராயச்சித்த பலியினால் நாம் நன்மைகளையும், ஆதாயங்களையும் அடையும்படிக்குப் பரிசுத்த ஆவியைப் பூலோகத்திற்கு அனுப்பினார்.

"முடிந்தது." என்ன முடிந்தது? பிராயசித்தப்பலிக்குறிய கிரியைகள் முடிந்தது. இதனால் நமக்கு என்ன பயன்? இதுதான் : பாவிக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் நற்செய்தி. பரிசுத்த கர்த்தர் செய்யுமாறு கோரியதெல்லாம் செய்தாயிற்று. பாவிகள் இனிமேல் செய்யும்படியாக விடப்பட்டது எதுவுமேயில்லை. நமது இரட்சிப்பின் கிரையமாக, நாம் செய்யும்படியாக எந்த கிரியையும் கேட்கப்படவில்லை. இப்பொழுது பாவிகள் செய்ய வேண்டிய தெல்லாம், கிறிஸ்து என்ன செய்து முடித்துள்ளாரோ அதை விசுவாசத் தினால் பற்றிக்கொள்ளவேண்டும். "தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்" (ரோமர் 6:23). தங்களுடைய பணியில் காணப்படும் குறைகளினாலும், நிறைவின்மையினாலும் சஞ்சலமுள்ள விசுவாசிகளுக்கு, கிறிஸ்து தன்னுடைய பரிகார கிரியையை முற்றிலும் முடித்துவிட்டார் என்று அறியும்பொழுது, அது விரும்பதக்க ஆறுதலாக இருக்கிறது. நாம் செய்வதில் "முடிந்தது" என்பதற்கு எதுவுமேயில்லை; நாம் செய்பவைகளெல்லாம் குறைவுள்ளவைகளே. நாம் முயற்சியெடுத்துச் செய்யக்கூடிய காரியங்களிலே கூட அதிகமான பாவமும், வீண் பெருமையுமே இருக்கிறது; ஆனால் நமக்கு பெரிய ஆறுதல் என்னவென்றால், நாம் கிறிஸ்துவில் "பரிபூரணமாக" இருக்கிறோம் (கொலோசியர் 2:10). நம்முடைய எல்லா நம்பிக்கைக்கும், கிறிஸ்துவும் அவருடைய அவர் செய்து முடித்துள்ள கிரியையுமே அடிப்படையாக இருக்கிறது.

ஒரு வாழ்க்கையின்மீது நான் வாழவில்லை, ஒரு மரணத்தின்மீது நான் மரிக்கவில்லை, வேறொருவரின் மரணம் - வேறொருவரின் வாழ்க்கை. அதிபயங்கரமான சாபத்திலிருந்தும், குற்றத்திலிருந்தும். நித்தியமாக என் ஆத்துமாவை ஒப்படைத்தேன்.

அந்த பெரிய நாளில் நான் நிற்பதைக் காணுங்கள், யார்மீது என்னுடைய குற்றங்களை வைப்பேன்? கிறிஸ்துவினால் நான் முற்றிலும் விடுவிக்கப்பட்டேன்,

"முடிந்தது"

  1. இந்த வார்த்தையில், பாவம் முடித்ததைக் காண்கிறோம்.

விசுவாசியின் பாவங்கள் எல்லாப் பாவங்களும் - ஆண்டவரிடம் மாற்றப்பட்டுவிட்டது. வேதம் சொல்லுகிறபடி, "கர்த்தாரோ நம்மெல்லா ருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்" (ஏசா.53:6). என்னுடைய குற்றங்களை கிறிஸ்துவின்மேல் வைத்துவிட்டா ரென்றால், அந்த குற்றங்கள் இப்போது என்னிடமில்லை. ஆனாலும் பாவம் இன்னமும் இருக்கிறது, ஏனென்றால் விசுவாசியின் மரணம் வரைக்குமோ, அல்லது நாம் மரிக்கும்முன் அவர் வந்தால், கிறிஸ்துவின் வருகை வரைக்குமோ, பழைய ஆதாமின் சுபாவம் இருந்துகொண்டேதான் இருக்கும். "மனுஷனிலுள்ள பாவத்திற்கும்" (Sin in), “மனுஷனின் மேலுள்ள பாவத்திற்கும்" (Sin on) மிக முக்கியமான வித்தியாசமுண்டு; இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது சிறிது கடினமாக இருக்கலாம். 'குற்றவாளியின் மேல் நீதிபதி தீர்ப்பு வழங்கினார் என்றோ' அல்லது 'அவன் இப்பொழுது மரணதண்டனை யின்கீழ் இருக்கிறான் என்றோ' நான் கூறினால், அதன் பொருளை எல்லோருமே புரிந்து கொள்வீர்கள். அவ்வாறே, கிறிஸ்துவிற்கு வெளியிலே இருப்பவர்கள் அனைவர் மேலும் கர்த்தரின் தண்டனை இருக்கிறது. ஆனால், ஒரு பாவி ஆண்டவராகிய இயேசுவை விசுவாசித்து, அவரைத் தன் ஆண்டவராகவும், எஜமானாகவும் ஏற்றுக்கொண்டால் அவன் இனிமேல் “தண்டனைக்குள்ளாக" இருப்பதில்லை - இனி அவன்மேல் பாவமில்லை, அதாவது, பாவத்தின் குற்றவுணர்வோ, தண்டனையோ, அபாரதமோ அவன்மேல் இனி இருப்பதில்லை. எதனால்? ஏனென்றால், "கிறிஸ்து தமது சொந்த சரீரத்திலே. நம்முடைய பாவங்களைச் சிலுவை மரத்தின்மேல் சுமந்தார்" (1 பேதுரு 2:24) - நம்முடைய பாவங்களின் குற்றவுணர்வும், தண்டனையும், அபராதமும், நம்முடைய பிணையாளியின்மேல் மாற்றப்பட்டு விட்டன. என்னுடைய பாவங்கள் கிறிஸ்துவின்மேல் மாற்றப்பட்டுவிட்ட தாகையால், அவைகள் என் மேல் இல்லாதுபோயிற்று.

இந்த அரிய உண்மை. பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேலர்கள் அனுசரித்த வருடாந்திர பாவ நிவிர்த்தி நாள் முறைமைகளில் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அந்த நாளில், பிரதான ஆசாரியனாகிய ஆரோன் (கிறிஸ்துவின் மாதிரி - Type), கடந்த ஆண்டில் இஸ்ரவேல் மக்கள் புரிந்த பாவங்களுக்காக கர்த்தருக்குப் பரிகாரம் செய்தான். இந்த முறைமைகள் எவ்வாறு நடைபெற்றது என்பதைக்குறித்து லேவியராகமம் 16 ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. இரண்டு வெள்ளாடுகள் தெரிந்து கொள்ளப்பட்டு, அவைகள் இரண்டும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கர்த்தருக்கு அர்பணிக்கப்படும்; அந்த வெள்ளாடுகளுக்கு எதுவும் செய்வதற்கு முன்னால் இது நடைபெறும்; இந்தக் காரியம், கிறிஸ்து, இந்த உலகத்திற்கு வருவதற்கு தன்னைக் கர்த்தரிடம் அர்ப்பணித்தலையும், அவர் பாவிகளின் மீட்பராகச் சம்மதித்ததையும் எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இரண்டில் ஒரு வெள்ளாடு கொல்லப்படும்; அதனுடைய இரத்தம் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் எடுத்துச்செல்லப்பட்டு, திரைச்சீலைகளுக்குள்ளே, மகா பரிசுத்த ஸ்தலத்தில், கிருபாசனத்தின் முன்னேயும், மேலேயும் தெளிக்கப்படும் இந்த சடங்கு, கர்த்தரின் நீதியை பூர்த்திசெய்யவும், அவருடைய பரிசுத்தத்தை நிறைவுசெய்யவும், கிறிஸ்து தம்மை கர்த்தரின் பலியாகத் தம்மை ஒப்புவித்தமைக்கு நிழலாட்டமாக இருக்கிறது. ஆரோன், ஆசரிப்புக் கூடாரத்தைவிட்டு வெளியே வந்தபின்பு, உயிரோடேயிருக்கிற மற்றொரு வெள்ளாட்டின் தலையின்மீது தனது இருகரங்களையும் வைப்பான் என்று வாசிக்கிறோம் - இந்த செயல் எதைக்காட்டுகிறதென்றால், நாட்டுமக்களின் பாவங்கள் தண்டிக்கப்படவே தகுதியுள்ளது என்பதை இஸ்ரவேல் நாட்டின் பிரதிநிதியாக ஆரோன் ஒப்புக்கொள்வதற்கு அடையாளமாக இருக்கிறது. இந்தச்செயல் இன்றைக்கு விசுவாச கரத்தினால் கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டு, அவருடைய மரணத்துடன் நம்மை இணைத்துக் கொள்வதற்கு ஒத்திருக்கிறது. ஆரோன், உயிருடனிருக்கும் வெள்ளாட்டின் தலைமீது தன் கரங்களை வைத்து, "இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும், அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டானவர்களுடைய சகல மீறுதல்களையும்" (லேவி. 16:21) அந்த வெள்ளாட்டின்மேல் சுமத்தி அறிக்கையிட்டான். இப்படியாக, இஸ்ரவேலர் களின் பாவங்கள் பிணையாளியாகிய வெள்ளாட்டின் மேல் மாற்றப்பட்டது. இறுதியில், “அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களை யெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு குடியில்லாத தேசத்திற்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போகவிடக்கடவன்" (லேவி.16:22) என்று சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்ரவேலர்களுடைய பாவங்களைச் சுமந்துகொண்டிருக்கும் அந்த வெள்ளாட்டுக்கடா, குடியில்லாத வனாந்தரத்திற்குக் கொண்டுசென்று விரட்டிவிடப்பட்டது; கர்த்தருடைய ஜனங்கள் அதைப் பார்த்தார்கள்; அவர்களுடைய பாவங்களும் இல்லாதுபோயிற்று! இதற்கு மாதிரியாக இருக்கிற கிறிஸ்துவும், நமது பாவங்களை, கர்த்தர் இல்லாத பாழான இடத்திற்கு எடுத்துச்சென்று, அவைகளை அங்கேயே சங்கரித்தார். எனவே, கிறிஸ்துவின் சிலுவை, நமது பாவங்களுக்குக் கல்லறையாக இருக்கிறது.

''முடிந்தது.'"

  1. இந்த வார்த்தையில், நியாயப்பிரமாணத்தின் நிபந்தனைகள் நிறைவேறுவதைக் காண்கிறோம்.

“நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ள துதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது" (ரோம.7:12). யெகோவா, தாமே உருவாக்கிக் கொடுத்தவைகள் எப்படிக் குறைச்சலாக இருக்கமுடியும்! குற்றங்கள் சட்டத்திலில்லை; சீர்கெட்ட, பாவம் நிறைந்த, கடைப்பிடிக்க இயலாத மனிதனிடமே குறைகளுள்ளது. என்றபோதிலும், சட்டங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும்; ஒரு மனிதன் கடைப்பிடித்தால்தான், சட்டங்களின் அருமை மதிக்கப்படும், புகழப்படும்; அதைக் கொடுத்தவரின் நேர்மையும் வெளிப்படும். ஆகையால்தான், "மாம்சத்தினாலே பலவீனமா யிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்" (ரோம.8:3-4). இந்த இடத்தில் “பலவீனம்” என்பது வீழ்ந்த மனிதனைக் (Fallen man) குறிப்பிடுகிறது. தேவனுடைய குமாரனை பாவமாம்சத்தின் சாயலாக அனுப்பினார் என்பது, கிரேக்க மொழியில் அவதாரத்தைக் (In-carnation) குறிக்கிறது. இது சம்பந்தப்பட்ட வேறொரு வசனத்தை வாசிப்போம்: "நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக் கொள்ளத்தக்கதாக - ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும், நியாயப்பிரமாணத் திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்” (கலாத்தியர் 4:4-5). ஆம், ஆண்டவர் "நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்பட்டவராக" பிறந்தார்; தமது நினைவாலும், வார்த்தையாலும், செயலாலும் பூரணமாகக் கடைப்பிடிக்கும்படிக்கே நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவராகப் பிறந்தார். "நியாயப்பிரமாணத்தையானாலும், தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள். அழிக்கிற தற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்" (மத்தேயு 5:17). இதுதான் கிறிஸ்துவின் தன்னைக்குறித்த வலியுறுத்தல் (Claim). ஆண்டவர் நியாயப்பிரமாணத்தின் விதிகளைக் கடைப்பிடித்த தோடல்லாமல், அதன்படி அவர் கொடுக்கப்பட்ட தண்டனையை ஏற்றார், சாபத்தைச் சகித்தார். நாம் நியாயப்பிரமாணத்தை முறித்தோம்; ஆனால் அவர் நம்முடைய இடத்தை ஏற்று, சாபத்தைச் சகித்தார், நியாயப் பிரமாணத்தின் நிபந்தனைகளைக் கடைப்பிடித்தார், நீதியை நிறைவேற் றினார். ஆகையால்தான் விசுவாசிகளைப் பற்றி, "கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்" (கலா.3:13) என்று எழுதப்பட்டுள்ளது. மறுபடியும், "விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாய பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார்." (ரோம. 10:4) மேலும் மறுபடியும், "நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்பட்டிருக்காமல், கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறீர்கள்" (கலாத்தியர் 6:14).

சட்டத்திற்கு விடுதலை, ஓ பெற்றோம் இனிய சூழலை!

ஈட்டினார் இயேசு, மீட்பைக் குருசினில் உதிரங்கொட்டி.

சட்டத்தால் சாபமுற்று, பாவவீழ்ச்சியில் மரணமுற்றோம்

மீட்பைப் பெற்றோம் கிருபையால், என்றென்றமாய்.

"முடிந்தது."

இந்த வார்த்தையில், சாத்தானின் சக்தி அழிந்ததைக் காண்கிறோம். சாத்தானின் சக்தி அழிந்ததை விசுவாசத்தினால் காணுங்கள். சிலுவையில், சாத்தானுக்கு விழுந்த மரண அடியின் சத்தம் கேட்கிறது. மனிதர்களின் பார்வையில் அவன் ஏதோ வெற்றிபெற்றுவிட்டது போலத் தோன்றுகிறது; ஆனால் உண்மையில், அது அவன் தழுவிய மிகப்பெரிய தோல்வியின் நேரம். சிலுவையை எதிர்நோக்கியவராக நமது ஆண்டவர் கூறுகிறார்: “இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்" (யோவான் 12:31). இன்னமும் சாத்தான் சங்கிலியால் கட்டப்பட்டு, சுகாதரமான பாதாளக்குழிக்குள் தள்ளப்படவில்லை என்பது உண்மைதான், ஆனாலும் அவன் மீது இப்பொழுதே (இன்னமும் நிறைவேற்றப்படா விட்டாலும்) தண்டனை விதித்தாயிற்று. அவனுடைய அழிவு நிச்சயம்; விசுவாசிகளைப் பொருத்தமட்டில் அவனுடைய அதிகாரம் முறிக்கப்பட்டு விட்டது.

கிறிஸ்தவனுக்கு, பிசாசு தோற்கடிக்கப்பட்டுவிட்ட ஒரு எதிரியாக இருக்கிறான். அவன் கிறிஸ்துவால் சிலுவையில் தோற்கடிக்கப்பட்டு விட்டான் - "மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழித்தார்" (எபிரேயர் 2:14). விசுவாசிகளனைவரையும், "இருளின் அந்தகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கித்" தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்குள் இடம்பெயரச் செய்தார் (கொலோ.1:13). ஆகவே, சாத்தான் தோற்கடிக்கப்பட்ட எதிரியாகக் கருதப்படவேண்டும். இனிமேல் சாத்தானுக்கு நம்மேல் சட்டரீதியான எந்த உரிமையுமில்லை. ஒருகாலத்தில் நாம் சட்டப்படி அவனால் "சிறைப்படுத்தப்பட்டவர்களாக" இருந்தோம், ஆனால் கிறிஸ்து நம்மை விடுதலை செய்துவிட்டார். ஒருகாலத்தில் நாம், 'ஆகாயத்துப் பிரபுவாகிய" சாத்தானின் வழிகளிலே நடந்தோம், ஆனால் இப்பொழுதோ நாம், கிறிஸ்து விட்டுச்சென்றுள்ள மாதிரியைப் பின்பற்றி நடக்கிறவர்களாக இருக்கிறோம். ஒருகாலத்தில் "சாத்தான் நம்மிலே கிரியை நடப்பித்தான்" ஆனால் இப்பொழுதோ தேவன் தமது சித்தத்தின்படியேயும் விருப்பத்தின்படியேயும், நம்மிலே கிரியை செய்கிறார். நாம் இப்போது செய்யவேண்டியதெல்லாம் "பிசாசை எதிர்த்து நிற்பதுதான்" ஏனென்றால், “அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்" என்று வாக்குறுதியளிக்கப்பட்டிருக்கிறது (யாக்கோப்பு 4:7).

"முடிந்தது” இதுதான் மனிதனின் வெறிக்கும், சாத்தானின் பகைக்கும் வெற்றி ஆரவாரத்துடன் அளிக்கப்பட்ட பதில். இந்த வார்த்தை,நீதி ஸ்தலத்தில் கிறிஸ்துவின் பூரணகிரியை பாவத்தை மேற்கொண்டதைக் கூறுகிறது. தேவன் எதிர்பார்த்தபடியும், தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த படியும், பழைய ஏற்பாட்டுச் சடங்காச்சரிய நிழலாட்டமானவைகளின்படியும், தெய்வீக பரிசுத்த நிபந்தனைகளின்படியும், பாவிகளுக்குத் தேவையுள்ள படியும் எல்லாம் பரிபூரணமாக நிறைவேறின. நமதாண்டவரின் ஆறாம் வார்த்தை, கவரும்விதத்தில் மிகச்சரியாக யோவான் நற்செய்தி நூலிலிருப் பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது -இந்த நற்செய்திநூல்தான் கிறிஸ்துவின் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அவர், இந்த இடத்தில் தம்முடைய கிரியைகளுக்குத் தேவனிடத்தில் ஒப்புதல் வாங்குவ தற்கு முற்படவில்லை; ஆனால் தம்முடைய கிரியைக்குத் தாமே முத்திரை யிட்டு உறுதிப்படுத்தி, அது பரிபூரணமானது என்று சான்றளித்து, அதற்குப் போதுமான எல்லா ஒப்புதலையும் தாமே அளிக்கிறார். வேறு யாருமல்ல, தேவனுடைய குமாரனே, "முடிந்தது" என்று சொல்லுகிறார் - பிறகு யாருக்கு இதைச் சந்தேகிப்பதற்கோ அல்லது கேள்வி கேட்பதற்கோ தைரியமுண்டு.

"முடிந்தது." வாசகரே, நீர் இதை நம்புகிறீரா? அல்லது தேவனுடைய சலுகையைப் பெறுவதற்கு, கிறிஸ்து செய்து முடித்துவிட்ட கிரியையுடன் வேறு ஏதையாவது சேர்த்துச் செய்யவேண்டுமென்று முயன்று கொண்டிருக் கிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், கிறிஸ்து பெற்றுத் தந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்வதுதான். கிறிஸ்துவின் கிரியையில் தேவன் திருப்தியடைந்துவிட்டார் நீங்கள் ஏன் திருப்தியுறக்கூடாது? பாவியே, தேவன் தமது மகனைக் குறித்து அளிக்கும் சாட்சியை எந்த வினாடியில் நீங்கள் விசுவாசிக்கிறீர்களோ, அந்த வினாடியே நீங்கள் புரிந்த எல்லா பாவங்களும் உங்களை விட்டு அகன்று போய்விடும்; நீங்களும் கிறிஸ்துவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக இருப்பீர்கள்! தேவனுக்கும், உங்களுடைய ஆத்துமாவிற்குமிடையே ஒன்றுமில்லை என்ற உறுதியை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளமாட்டீர்களா? ஒவ்வொரு பாவத்திற்கும் பரிகாரம் செய்தாயிற்று, பாவம் அகற்றப்பட்டுவிட்டது என்பதை அறிந்துகொள்ள மாட்டீர்களா? அப்படியானால் கிறிஸ்துவின் மரணத்தைக்குறித்து, தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறதோ அதை நம்புங்கள். உங்களுடைய உணர்வுகளையும், அனுபவத்தையும் சார்ந்திருக்காதீர்கள், எழுதப்பட்டுள்ள கர்த்தருடைய வேதத்திலேயே சார்ந்திருங்கள். சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள ஒரேயொரு வழிதானுண்டு, அந்த வழி, தேவனுடைய ஆட்டுக் குட்டியானவர் சிந்திய இரத்தத்தை விசுவாசிப்பதேயாகும்.

“முடிந்தது” இதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அல்லது தேவனிடம் நன்மை பெறும்படி தகுதியடையும்படிக்கு, உங்களிஷ்டப்படி ஏதாவதொன்றை இத்துடன் இணைப்பதற்கு நீங்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறீர்களா? சில ஆண்டுகளுக்கு முன்னதாக, ஒரு விவசாயி இரட்சிக்கப்படாத ஒரு தச்சனுக்காக (Carpenter) மிகவும் கவலைப்பட்டான். அந்த விவசாயி தன்னுடைய அயலகத்தானிடம், தேவனுடைய கிருபையின் நற்செய்தியை விவரித்துக் கூறினான்; அவனுடைய ஆத்துமா பயமின்றி இளைப்பாறு வதற்குக் கிறிஸ்து செய்துமுடித்த கிரியை போதுமானது என்று எடுத்துரைத் தான். ஆனால் அந்த தச்சன், இரட்சிக்கப்படுவதற்கு தான் ஏதாவது செய்தேயாகவேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தான். ஒருநாள் அந்த விவசாயி, தச்சனிடம் தனக்கு ஒரு வெளிக்கதவு (Gate) செய்துதரும்படி கூறினான்; அந்த வெளிக்கதவு தயாரானவுடன், அதை வண்டியில் எடுத்துச் சென்றான். ஏற்பாடு செய்திருந்தபடி மறுநாள் காலையில் விவசாயியைத் தச்சன் சந்திக்கச் சென்றான். அந்த கதவு வயல்வெளிக்குச் செல்லும் வாசலில் தொங்கியது. குறிப்பிட்ட நேரத்தில் தச்சன் அங்கு சென்றடைந்த பொழுது, அந்த விவசாயி தன்னுடைய கைகளிலே கூர்மையான கோடாரியைப் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து வியப்படைந்தான். “நீ என்ன செய்யப் போகிறாய்?" என்று தச்சன் கேட்டான். அதற்கு, “நீ செய்த இந்தக் கதவில் அங்குமிங்குமாகச் சில வெட்டுகளையும் கோடுகளையும் போடவேண்டும்" என்று பதிலளித்தான். உடனே அந்த தச்சன், “அதற்கு எந்த அவசியமுமில்லை, இப்போதுள்ளபடியே கதவு சரியாகத்தான் இருக்கிறது, செய்யவேண்டிய எல்லாவற்றையும் நானே செய்துவிட்டேன்" என்றான். விவசாயி அதைச் சட்டை செய்யாமல், கோடாரியால் ஓங்கி அந்தக் கதவு முற்றிலும் பாழாகும் வரைக்கும் வெட்டி நாசம் செய்து பயனற்றதாக்கி விட்டான். தச்சன், "என்ன செய்துவிட்டாய் பார், நான் முடித்துவைத்திருந்த என்னுடைய வேலையை பாழ்பண்ணிவிட்டாயே" என்று அலறினான். அதற்கு விவசாயி, “ஆம், நீ செய்துகொண்டிருப்பதும் இதற்கு ஒப்பாகத்தான் இருக்கிறது. கிறிஸ்து முற்றிலும் முடித்து வைத்துவிட்ட கிரியையில், உன்னுடைய இஷ்டத்திற்கு எதையாவது இணைத்து பயனற்றதாக்குகிறார்" என்று கூறினான். இந்தக் கடினமான கண்டுணரும் படிப்பினையினால் (Object Lesson) அந்தத் தச்சன், தன்னுடைய தவறைக் கண்டுகொள்ள கர்த்தர் பயன்படுத்தினார்; கிறிஸ்து பாவிகளுக்காகச் செய்துமுடித்துவிட்ட கிரியையில் விசுவாசம் கொள்ளும்படிக்கு அந்த தச்சன் வழிநடத்தப்பட்டான். வாசகரே, நீங்களும் அவ்வாறே வழிநடத்தப்பட சித்தமாக இருக்கிறீர்களா?

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.