இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார். இப்படிச் சொல்லி ஜீவனை விட்டார் லூக்கா 23:46.

"இயேசு: பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சென்னார். இப்படிச் சொல்லி ஜீவனை விட்டார்." லூக்கா 23:46. இரட்சகர் இயேசு கிறிஸ்து மரிக்கும் முன்னதாகச் செய்த கடைசிச் செயலை, இந்த வார்த்தைகள் நம் முன் கொண்டு வருகின்றன. இந்தக் கடைசிச் செயலானது. மனநிறைவின் செயல், விசுவாசத்தின் செயல், நம்பிக்கையின் செயல், அன்பின் செயல், விலைமதிப்பற்ற பொக்கிஷமாகிய தன்னுடைய ஆவியை, சொந்தப் பிதாவின் கைகளிலே ஒப்புவிக்கிறார். பிதா என்ற உறவு, ஊக்கமும், உறுதியான நம்பிக்கையும் தரும் உறவு. தனக்கு அருமையான எதையும் பிதாவின் கைகளிலே குமாரன் ஒப்புக்கொடுப்பார் என்றால், சிறப்பான இந்தத் தெய்வ மைந்தன், தன் பிதாவின் கைகளில் ஒப்புக்கொடுக்கிறார். எதைக் கொடுக்கிறார்? தன்னுடைய சரீரத்திலிருந்து பிரிந்து கொண்டிருக்கும் தன்னுடைய ‘ஆவியை' பிதாவின் கைகளில் ஒப்புக்கொடுக்கிறார். மனிதன், ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற மூன்று தன்மைகளை அல்லது திருத்து வத்தைக் கொண்டவன் (1 தெசலோனிக்கேயர் 5:23) என்று வேதம் வெளிப்படுத்துகிறது. ஆத்துமாவுக்கும் ஆவிக்கும் வித்தியாசம் உண்டு. ஆனால் அவை எப்படி வேறுபட்டவை என்பதை விளக்குவது கடினமான காரியம். மனிதனின் மூன்று தன்மைகளிலே, சிறந்ததாகக் தோன்றுவது ஆவியே. மிருகங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்தி, தேவனோடு அவனை இணைப்பது இந்த ஆவிதான். 'மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர்' (சகரியா 12:1) என்றும், 'மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவன் (எண்ணாகமம் 16:22) என்றும், ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு போகும் (பிரசங்கி 12:7) என்றும், வேதம் திட்டமாகச் சொல்கிறது. இரட்சகர் இயேசு தன்னுடைய ஆவியை 'நான் ஒப்புவிக்கிறேன்' என்று சொல்லி பிதாவின் கைகளில் ஒப்புவித்தது, ஒரு விசுவாசத்தின் செயல் ஆகும். தன்னுடைய மக்களுக்கு முன்மாதிரியாகச் செய்யப்பட்ட ஓர் ஆசீர்வாதமான செயல். கிறிஸ்து இந்தச் செயலைச் செய்த போது, நாம் கவனிக்க வேண்டிய கடைசிக் குறிப்பு, அவர் இதைச் செய்தவிதம், இந்த வார்த்தைகளை அவர் 'மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்' கூடியிருந்த எல்லோரும் கேட்கும்படியாகச் சொன்னார். கடவுளால் தள்ளப்பட்டு, புறக்கணிக்கப் பட்டவர் என்று நினைத்து, இவரை நியாயந்தீர்த்த, இவருடைய பகைவர் எல்லாரும் இதைக் கேட்கும்படியாகவும், கடவுளால் இவர் இப்போது கைவிடப்படவில்லை, மாறாக, இவருடைய பிதாவுக்கு இன்னும் அருமையான குமாரனாக இருக்கிறார்; பிதாவினுடைய கைகளிலே தன்னுடைய ஆவியை நம்பிக்கையோடே ஒப்புவிக்க முடிந்தது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்படியாகவும் சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்.

'பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.' மரிக்கும் முன்னதாக, இரட்சகர் இயேசு பேசிய கடைசி வார்த்தைகள் இவை. சிலுவையில் தொங்கும்பொழுது, ஏழுதடவை அவர் வாயைத் திறந்து பேசினார். ஏழு என்ற எண்ணானது, முழுமையை அல்லது பூரணத்தை குறிக்கும். எல்லா இடங்களிலேயும் இயேசு பூரணராயிருந்தது போல, கல்வாரிச் சிலுவையிலும் அவரது பூரணத்துவம் வெளிப்பட்டது மட்டுமல்ல, ஏழு என்பது வேலையை முடித்து விட்டு, ஓய்வெடுப்பதைக் குறிக்கும் எண்ணாகும். தேவன் ஆறுநாட்களிலே வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்து, தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்து, மிகவும் நன்றாயி ருந்தது என்று கண்டு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். அதைப்போலவே கிறிஸ்துவும், தனக்குக் கொடுக்ககப்பட்ட வேலையை முடித்துவிட்டார். ஆறாவது நாள் படைப்பின் வேலையையும், புத்தமைப்பின் வேலையையும் முடிந்ததைப்போல், இரட்சகரின் ஆறாவது வார்த்தை 'எல்லாம் முடிந்தது' என்று இருந்தது. ஏழாவது நாள் ஓய்வும், மனநிறைவும், நிறைந்த நாளாய் இருந்தது போல, இரட்சகரின் ஏழாவது வார்த்தையும், அவரை இளைப்பாறும் இடத்துக்கு, அதாவது பிதாவின் கைகளில் கொண்டு சேர்ப்பதாய் இருக்கிறது. 

மரித்துக்கொண்டிருந்த இரட்சகர் இயேசு, ஏழு தடவை பேசினார். மூன்று வார்த்தைகள், மனிதன் மேல் அவருக்கிருந்த கரிசனையைக் காட்டுவதாக உள்ளன; மரித்துக் கொண்டிருந்த கள்ளனுக்கு, அன்றைக்கு அவன் அவருடனே பரதீசில் இருப்பான் என்று உறுதியளித்தார்; அவருடைய தாயாரை இன்னொரு சீஷனிடம் ஒப்படைத்தார். கூடிநின்று வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டத்தினரிடம் தன்னுடைய தாகத்தை வெளிப்படுத்தினார். மூன்று வார்த்தைகள் தேவனை நோக்கிக் கூப்பிடுவதாக இருந்தன. தன்னைச் சிலுவையில் அறைந்த கொலையாளிகளுக்காக பிதாவிடம் ஜெபித்தார். துக்கம் நிறைந்தவராய், "ஏன் என்னைக் கைவிட்டீர்" என்று தேவனிடம் கதறினார்; இப்போது தன்னுடைய ஆவியை பிதாவின் கைகளில் ஒப்புக்கொடுக்கிறார். தேவனுக்கும், எல்லா மனிதருக்கும், தேவதூதர் களுக்கும் பிசாசுக்கும் கேட்கும்படியாக 'எல்லாம் முடிந்தது' என்று வெற்றி முழக்கமிட்டார்.

'பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.' இரட்சகர் இயேசுவின் இந்தக் கடைசி முழக்கம், தேவன் மனித சாயலாய் அவதரிப்பதற்கு அநேக நூற்றாண்டுகள் முன்னதாகவே தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்டது. சங்கீதக்காரனாகிய தாவீது, முப்பத்தி ஒன்றாம் சங்கீதத்திலே தீர்க்கதரிசனமாகச் சொல்கிறான். 'கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன். நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும். உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும். உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும் நீர் எனக்குப் பலத்த துருகமும் எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும். என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும். அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கி விடும். தேவரீரே எனக்கு அரண் உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன். சத்திய பரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்' (சங்கீதம் 31:1-5).

நம் இரட்சகர் சிலுவையில் மொழிந்த ஒவ்வொரு வார்த்தையிலும், ஒரு தீர்க்கதரிசனம் நிறைவேறியது. முதல் வார்த்தையான 'பிதாவே இவர்களுக்கு மன்னியும்' தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே' என்ற வசனம் ‘அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம்' என்று ஏசாயா 53:12 இல் சொல்லப்பட்டதை நிறைவேற்றியது. இரண்டாவ தாக கள்ளனுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியான 'இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய்' என்ற வார்த்தையில் மத்தேயு 1:21 இல் தேவதூதன் யோசேப்பிடம் சொன்ன 'அவருக்கு இயேசு என்று பேரிடுவா யாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்' என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று. மூன்றாவது தனது தாயாரிடம் அவர் சொன்ன "ஸ்திரீயே அதோ உன் மகன்”என்ற வார்த்தை யின் மூலம் சிமியோனின், 'உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் ஊடுருவிப் போகும்' (லூக்கா 2:35) என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று."என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?' என்ற நான்காவது வார்த்தை, சங்கீதம் 22:1 இல் கூறப்பட்டுள்ளது. ஐந்தாவதாகச் சொல்லப்பட்ட 'தாகமாயிருக்கிறேன்' என்ற வார்த்தை, 'என் தாகத்துக்கு காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள் என்று சங்கீதம் 69:21 இல் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. ஆறாவதாக 'முடிந்தது' என்று வெற்றி முழக்கமிட்டார். சங்கீதம் 22 இல் கடைசி வசனம் சொல்கிறபடி, அவரே இவைகளைச் செய்தார்' அல்லது அவர் தனது வேலையை, மனுக்குலத்தின் பாவத்தினை நீக்கும் பணியை முடித்துவிட்டார் என்பதைக் குறிக்கும் வகையில் முடிந்தது என்றார். கடைசியாக, 'பிதாவே உம்முடைய கைகளில், என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்ற அவருடைய ஜெபம், சங்கீதம் 31:5 இல் அவரைக்குறித்து எழுதப்பட்டிருப் பதையே குறிப்பிடுகிறது. என்னே சிலுவையின் அற்புதங்கள்! அவற்றின் முடிவின் எல்லையை நாம் இன்னும் எட்டவில்லை.

பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்''

1 பிதாவோடு உள்ள உறவை மீண்டும் பெற்றுக்கொண்ட இரட்சகர்.

இது மிகவும் அருமையான அனுபவம், தேவனின் பரிசுத்தமான முகத்தின் ஒளியானது, உலகத்தின் பாவங்களைச் சுமந்து கொண்ட இரட்சகரிடமிருந்து, மறைக்கப்பட்ட பொழுது, மிகக்குறுகிய நேரத்திற்கு, பிதா-குமாரன் என்ற உறவு மேலோட்டமாக முறிக்கப்பட்டது. ஆனால், இப்போது பாவ அகோரம் என்ற இருள் அகன்றது மட்டுமல்ல, முற்றிலுமாய் முடிந்து போனது. முழுமையான, முறியாத உறவு, பிதா, குமாரன் இடையிலே சிலுவையிலே காணப்பட்டது. யோவான் 18:11 இல் சொல்லப்பட்ட "பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனா?" வசனத்தின்படி, துக்கம் நிறைந்த அந்தப்பாத்திரத்தை, பிதாவின் கைகளில் இருந்து பெற்றுக்கொண்டது எத்தனை அருமையான அனுபவம். சிலுவை, மரணத்தின் ஆரம்பத்திலே, இயேசு பிதாவாகிய தேவனோடு உறவாடினதாலேயே பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்ற முதல் வார்த்தையும், பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்ற கடைசி வார்த்தையும் சொல்ல முடிந்தது, ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளுக்கிடையே ஆறு மணி நேரம் இயேசு சிலுவையிலே தொங்கினார்; மூன்று மணி நேரம் மனிதனின் கைகளிலும் பிசாசின் கைகளிலும் பாடுபட்டார்; யெகோவாவுக்குச் சமமான மனுஷகுமாரனுக்கு எதிராக தேவனுடைய நீதி செயல்பட்டதால், தேவனுடைய கைகளில் மூன்று மணி நேரம் பாடனுபவித்தார். அந்தக் கடைசி மூன்று மணி நேரத்தில், தேவன் இரட்சகரைத் தனியே விட்டுவிட்டதால், "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று கதறினார்.ஆனால் இப்பொழுதோ,எல்லாம் முடிந்துவிட்டது பிதா கொடுத்த பாத்திரத்தில் பானம் பண்ணி முடிந்தது; தேவ கோபம் என்னும் புயல் ஓய்ந்து விட்டது; இருள் கடந்து சென்று விட்டது. மீண்டும் ஒருமுறை, பிதாவோடு உள்ள உறவுக்குள் வந்துவிட்ட இரட்சகர், இனி அவரிடமிருந்து பிரிக்கப்படுவ தேயில்லை.

பிதா என்ற இந்த வார்த்தையை எத்தனை முறை இரட்சகர் சொல்லி யிருக்கிறார்! முதன்முதலாக அவர் சொன்னது, 'என் பிதாவுக்கடுத்தவை களில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா?' ஒருவேளை அவருடைய முதலாவது பிரசங்கமான மலைப்பிரசங்கத்தில், தன்னுடைய பிதாவைக் குறித்து பதினேழு முறை குறிப்பிடுகிறார். கடைசியாக அவர் தம்முடைய சீஷர்களுடன் பஸ்காவை ஆசரித்தபோது அவர்களிடம், யோவான் 14:16 இல் காணப்படுவது போல, பேசிய அநேக காரியங்களில் 'பிதா' என்ற வார்த்தையை நாற்பத்தைந்து முறை பயன்படுத்தியுள்ளார். யோவான் 17 ஆம் அதிகாரத்திலே இயேசுகிறிஸ்து ஒரு பிரதான ஆசாரியனைப் போலத் தன்னுடைய ஜெபத்தை ஏறெடுத்த போது, அதில் பிதாவிடமும், பிதாவைக்குறித்தும் மேலும் ஆறுமுறை பேசியுள்ளார். கடைசியாக, தன்னுடைய ஜீவனை விடுவதற்கு முன்பாக, பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்' என்று திரும்பவும் பிதாவிடம் பேசுகிறார்.

அவருடைய பிதாவே நம்முடைய பிதா என்பது எவ்வளவு பெரிய பாக்கியம்! அவருடையவர்களாக நாம் இருப்பதால், பிதா நம்முடையவர் என்ன அதிசயமான உறவு! என்றும் ஜீவிக்கிற மிகப்பெரிய தேவனை நான் நோக்கிப் பார்த்து, 'பிதாவே! என்னுடைய பிதாவே! என்று கூப்பிடுவது, சொல்ல முடியாத அற்புதம். பிதாவே என்று கூப்பிடுவதிலே எத்தனை ஆறுதல்! அது எனக்கு எத்தனை நிச்சயமான உறவு! தேவன் என்னுடைய பிதா; அவர் என்னை நேசிக்கிறார். அவர் கிறிஸ்துவில் அன்பாயிருக்கிறது. போல, என்னிலும் அன்பாய் இருக்கிறார் (யோவான் 17:23). தேவன் என்னுடைய பிதா, என்னை நேசிக்கிறார்; என்னை விசாரிக்கிறார். தேவன் என் பிதாவாயிருந்து, என்னை விசாரிப்பதோடு, என் குறைவையெல்லாம் முற்றிலும் மாற்றி நிறைவாக்குவார் (பிலிப்பியர் 4:19). தேவன் என் பிதா எந்தத் தீங்கும் என்னை அணுகாதபடி பார்த்துக் கொள்வார்; சகலமும் நன்மைக்கேதுவாக நடக்க உதவி செய்வார். தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், இன்னும் அதிகமாய் அந்த உறவுக்குள் கடந்து சென்று, அந்த உறவின் பாக்கியத்தை அனுபவித்தால், அப்போஸ்தலனாகிய யோவானோடு சேர்ந்து நாமும், “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே, பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்" (யோவான் 3:1) என்று மகிழ்ச்சியோடு சொல்லலாமே!

2 முன்குறிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட வேறுபாடு.

பன்னிரண்டு மணிநேரத்துக்கும் மேலாக, கிறிஸ்து, மனிதர்களின் கைகளிலே பாடனுபவித்தார். இதைக் குறித்து முன்னதாகவே தன்னுடைய சீஷர்களுக்கு முன்எச்சரிக்கையாக, "மனுஷகுமாரன், மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார். அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்" (மத்தேயு 17:22,23) என்று சொன்னார். கெத்சமனே தோட்டத்திலே துக்கம் நிறைந்தவராய் சொன்னார். 'பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து, இனி நித்திரை பண்ணி இளைப்பாறுங்கள். இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய, கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளை வந்தது (மத்.26:45) என்றார். இதையே, இயேசுகிறிஸ்து உயிர்தெழுந்த காலை வேளையிலே, தேவதூதர்கள், ஸ்திரீகளிடம், அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்; மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக, அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்கு சொன்னதை நினைவு கூறுங்கள் என்றார்கள் (லூக்கா 24:6-7). இது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கெத்சமனே தோட்டத்தில் தன்னைப் பிடிக்க வந்தவர்களிடம், தன்னைத்தானே ஒப்புக்கொடுத்த பொழுது, நிறைவேறிற்று. நாம் முந்தைய அதிகாரங்களில் பார்த்தது போல, கிறிஸ்து தன்னைப் பிடிக்க வந்தவர்களிடருந்து தப்பியிருக்கலாம். தன்னைப் பிடிக்க வந்த ஆசாரியனின் அதிகாரிகளைத் தரையிலே தள்ளி விட்டு, அமைதியாக நடந்து சென்றிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.

குறிக்கப்பட்ட வேளை வந்தது. கொலையுண்ணப்போகிற ஆட்டுக்குட்டியைப் போலத் தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டிய வேளை வந்தது. பாவிகளுடைய கைகளில் தன்னை ஒப்புக்கொடுத்தார். அவரை அவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்கள். தேவன் மேல் தங்களுக்கிருந்த மனுஷீக வெறுப்பு முழுவதையும் அவர்மேல் காட்டினார்கள் அப்போஸ்தலர் 2:23 இல் கூறப்பட்டபடி அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித் துக்கொலை செய்தீர்கள். ஆனால், இப்போது, எல்லாம் முடிந்தது. மனிதர்கள் கொடூரமாய் அவரைக் கொன்றுவிட்டனர்; சிலுவை சுமக்கப்பட்டு முடிந்தது. குறிக்கப்பட்ட வேலையும் செய்து முடிக்கப்பட்டது.

பாவிகளுடைய கைகளிலே தானாகவே, தன்னை ஒப்புக்கொடுத்த இரட்சகர், இப்போது தானாகவே தன்னுடைய ஆவியைப் பிதாவின் கைகளில் ஒப்புவிக்கிறார். என்ன ஒரு வேறுபாடு! இனி ஒருபோதும் அவர் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை; இனி ஒருபோதும் அவர் நிந்தையடைவதில்லை. தன்னைத்தானே பிதாவின் கைகளில் ஒப்புவித்து விட்டார்; இனி இவருடைய விருப்பங்கள் எல்லாவற்றையும் பிதா பார்த்துக் கொள்வார். இந்த ஆசீர்வாதமான விளைவுகளைக் குறித்து நாம் நீண்ட விளக்கமளிக்கத் தேவையில்லை.

மூன்று நாட்களுக்குப் பிறகு, பிதா அவரை மரித்தோரிடத்திலிருந்து எழுப்பினார். அதற்குப்பின் நாற்பது நாட்கள் கழித்து, பிதா அவரை எல்லாத் துரைத்தனங்களுக்கும், அதிகாரங்களுக்கும் மேலாக உயர்த்தி, எல்லா நாமங்களுக்கும் மேலாக அவருடைய நாமத்தை உயர்த்தி, பரலோகத்திலே தன்னுடைய வலது பாரிசத்தில் அமர்த்தினார். அவருடைய பகைவர்களை அவருக்குப் பாதபடியாக்கும் வரை, பிதாவினுடைய சிங்காசனத்திலே உட்கார்ந்திருக்கிறார் (வெளிப்படுத்தல் 3:21). சீக்கிரத்திலே, எல்லாம் தலைகீழாய் மாறும். உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட அவரை பிதாவானவர் வல்லமை யோடும் மகிமையோடும் திரும்ப அனுப்பி இரும்புக் கோலால் பூமி முழுவதையும் ஆட்சி செய்யும்படி அனுப்பி வைப்பார். அப்பொழுது, சூழ்நிலைகள் முற்றிலும் மாறும். அவர் பூமியிலிருந்த பொழுது, அவரை நியாயந்தீர்க்கத் துணிந்தவர்களை, அவர் நியாயாதிபதியாக அமர்ந்து, நியாயந்தீர்ப்பார். முன்பு அவர் அவர்கள் கைகளில் விடப்பட்டார்; இப்போது அவர்கள் அவர் கைகளில் விடப்பட்டிருப்பார்கள். முன்பு 'இவனை அகற்றும்' என்று அவர்கள் கூக்குரலிட்டார்கள்; அவர் அவர்களைப் பார்த்து, 'என்னை விட்டு அகன்று போங்கள்' என்று சொல்லுவார். இடைப்பட்ட காலத்தில், அவர் பிதாவின் கைகளில், பிதாவின் சிங்காசனத்தில் அமர்ந்து, தன்னுடைய மகிழ்ச்சியை எதிர்பார்த்திருப்பார்.

'பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று சொல்லித் தன் ஜீவனை விட்டார்.

  1. இயேசுகிறிஸ்து தேவனிடம், தன்னை முற்றுமாய் சமர்ப்பித்தார்:

தன்னுடைய வாழ்க்கை முழுவதிலும், பிதாவிற்குத் தம்மை சமர்ப்பிக்கும் தன்மையை எவ்வளவாய்க் கடைப்பிடித்தார் என்பது ஆதாரங்களோடுள்ள வைகள். அவைகள் எவ்வளவு பெரிய ஆசீர்வாதங்கள். அவர் பன்னிரெண்டு வயதுப் பையனாய் எருசலேமிலே இருந்துவிட்டபோது, அவரது தாயார் அவரைத் தேடினார்கள். அதற்கு அவர், என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா? என்றார். வனாந்தரத்திலே,நாற்பது நாட்கள் உபவாசமாயிருந்த பின்பு பிசாசு அவரிடம் கல்லுகளை அப்பமாக் கும்படி சொன்னான். ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையின்படியும் ஜீவித்தார். அவரது பலத்த செய்கைகளும் அவருடைய உபதேசங்களும் அந்த மக்களிலே கிரியை செய்யாதபோது, அவர் தம்மை அனுப்பின பிதாவிடம் தன்னை சமர்ப்பித்துச் சொன்னார். பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானி களுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தின படியால், உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்' (மத்தேயு 11:25). லாசருவின் சகோதரிகள், லாசரு வியாதியாயிருக்கிறான் என்று அவருக்கு செய்தி அனுப்பியபோது, அவர் விரைந்து பெத்தானியாவுக்கு வராமல், அவர் இருந்த இடத்திலேயே இரண்டு நாட்கள் தங்கினார். 'இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல், தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது' என்றார் (யோவான் 11:4). லாசரு மேல்வைத்த அன்பினால் அவர் செயல்படவில்லை; தேவனுடைய மகிமை விளங்குவதற்காக அவர் செயல்பட்டார். தன்னை அனுப்பினவருடைய சித்தம் செய்வதே அவரது போஜனம். எல்லாவற்றிலும் அவர் தன்னைப் பிதாவுக்கு சமர்ப்பித்தார். அவர் அதிகாலையில் இருட்டோடே எழுந்து, பிதாவின் சமுகத்தைத் தேடி ஜெபித்ததைப் பாருங்கள். தான் படப்போகும் எல்லாப் பாடுகளையும் அறிந்து, அதை எதிர்பார்த்து தன்னுடைய இருதயத்தை ஜெபத்தில் ஊற்றி, தன்னை ஆயத்தம் செய்து கொண்டதைப் பாருங்கள். தன்னைப் பிடிப்பதற்கு முன்பாக கடைசி நேரத்தைத் தேவனோடு செலவிட்டதைப் பாருங்கள். 'என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் சாந்தமும், மனத்தாழ்மையு மாயிருக்கிறேன்' என்று எவ்வளவு பொருத்தமாகச் சொல்கிறார். பிதாவின் கைகளிலே, தன்னைக் கொடுத்து, எப்படி வாழ்ந்தாரோ, அப்படியே மரித்தார். மரித்துக் கொண்டிருக்கும் இரட்சகரின் கடைசி செயல் இது. இச்செயல் எவ்வளவு அழகானது! தன்னுடைய வாழ்க்கை முழுவதிலும், முற்றிலுமாய் கடைப்பிடித்த சமர்ப்பணம். அது, பிதாவின்மேல் அவர் வைத்த பூரண நம்பிக்கையின் வெளிப்பாடு, அவருக்கும் பிதாவுக்கும் இருந்த நெருங்கிய உறவினை வெளிப்படுத்துகிறது. தேவன் மேல் அவர் எவ்வளவாய் முற்றிலும் சார்ந்திருந்தார் என்பதை காட்டுகிறது.

உண்மையிலேயே, எல்லாவற்றிலும் அவர் நமக்கு முன்மாதிரியை விட்டுச் சென்றுள்ளார். அவருடைய வாழ்க்கை முழுவதிலுமே, பிதாவின் கைகளில் அவருடைய ஆவி இருந்தபடியால், மரணத்திலும், பிதாவின் கைகளில் ஆவியை ஒப்புவிக்கிறார். இதை வாசிக்கிற உங்கள் வாழ்க்கையில், இது உண்மையா? ஒரு பாவியாக, உங்கள் ஆவியை தேவன் கைகளில் ஒப்புவித் திருக்கிறீர்களா? அப்படியானால், ஆவி பத்திரமாயிருக்கும். அப்போஸ்த லனாகிய பவுலோடுகூட, நீங்களும் 'நான் விசுவாசித் திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன். நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை, அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள, வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்' (2 தீமோத்தேயு 1:12) என்று சொல்ல முடியுமா? ஒரு கிறிஸ்தவனாக, உங்களை முற்றிலும் தேவனுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறீர்களா? 'சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை' ரோமர் 12:1 என்ற வார்த்தைக்கு செவிகொடுத்திருக்கிறீர்களா? உங்களை நேசித்து, உங்களுக்காகத் தன்னைக் கொடுத்தவருடைய மகிமைக்காக நீங்கள் வாழ்கிறீர்களா? "என்னையல்லாமல், உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது" (யோவான் 15:5) என்பதையும் 'என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு' (பிலிபியர் 4:13) என்பதையும் அறிந்து, தேவனைச் சார்ந்து, அனுதினமும் நடக்கிறீர்களா? உங்களுடைய முழுவாழ்க்கையும் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தால், இரட்சகர் தன்னுடைய மக்களைச் சேர்த்துக்கொள்ள திரும்ப வருவதற்கு முன்னாக, உங்கள் மரணம் இருந்தாலும் 'பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்' என்று சொல்வது எளிதாக இருக்கும். பாலாக், 'நீதிமான் மரிப்பது போல் நான் மரிப்பேனாக' (எண்ணாகமம் 23:10) என்று சொன்னான். நீதிமானைப்போல மரிக்க வேண்டுமானால், நீதிமானைப் போல, வாழ வேண்டும்; தேவனைச் சார்ந்தும், தேவனுக்கு முற்றிலும் சமர்ப்பித்தும் வாழவேண்டும்.

பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்'

  1. இரட்சகரின் இணையற்றத் தனித்தன்மை:

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மரணம் மற்ற யாருடைய மரணத்தைப் போலல்ல; அவரது ஜீவன் அவரிடமிருந்து எடுக்கப்படவில்லை; அவர்தாமே ஜீவனைக் கொடுத்தார். 'நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்து கொள்ளும்படிக்கு, அதைக் கொடுக்கிறபடியால், பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ள மாட்டான். நானே அதைக் கொடுக்கிறேன். அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும், எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு' யோவான் 10:17,18 என்கிறார். கிறிஸ்துவின் ஜீவன் அவரிடமிருந்து எடுக்கப்படவில்லை என்பதற்கான பல்வேறு காரணங்கள் இப்புத்தகத்தின் முன்னுரையில் தரப்பட்டுள்ளன. அவர் தம்முடைய ஆவியைப் பிதாவின் கரங்களில் ஒப்புவித்தத் தன்மை அவரது பூரண சமர்ப்பணத்திற்கு மிகச்சிறந்த ஆதாரமாகும். ஆண்டவராகிய இயேசு தாமே "பிதாவே உம்முடைய கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் " என்றார். ஆனால் பரிசுத்த ஆவியானவர் இயேசு தமது ஜீவனை ஒப்புவித்த இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் சுவிசேஷங்களில் பயன்படுத்திருக்கும் சொற்களின் ஆழங்களைக் கொண்டு முன்று வெவ்வேறு வகைகளில் வெளிப்படுத்துகிறார்.

மத்தேயு 27:50 இல், இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்' என்று வாசிக்கிறோம். இந்த மொழிபெயர்ப்பிலே மூலபாஷை யிலுள்ள அதே ஆழத்தை வெளிப்படுத்தவில்லை. கிரேக்க மொழியிலே "அவர் ஆவியை விட்டார்" என்றிருக்கிறது. கர்த்தரை, தாவீதின் குமாரன் என்றும் யூதரின் ராஜா என்றும் குறிப்பிடுகிற மத்தேயு சுவிசேஷம், அவரை ராஜாவின் நிலையில் வைத்துப் பார்க்கும் ராஜரீக சுவிசேஷம். இதிலே "ஜீவனை விட்டார்" என்ற வார்த்தைகள் ஓர் ராஜா தன் ஊழியக்காரனை வேலையிலிருந்து நீக்கி அனுப்பும் அதிகார தோரணையில் குறிப்பிடப் பட்டுள்ளன.

மாற்கு சுவிசேஷம் நம்முடைய கர்த்தரை ஊழியக்காரனாகப் பார்க்கும் சுவிசேஷம். லூக்கா, கிறிஸ்துவின் பூரண மனுஷீகத்தன்மையைக் குறிக்கும். சுவிசேஷம். இவற்றில் தன்னுடைய "ஜீவனை விட்டார்" என்பது மரணத்தை ஏற்றுக்கொண்டதாகக் குறிக்கிறது.

கிறிஸ்துவின் தெய்வீக மகிமையைக் கூறும் யோவான் சுவிசேஷத்திலே, பரிசுத்த ஆவியானவர், 'தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். (யோவான் 19:30) என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். ஆவியை தாமாகக் கொடுத்தார் என்பது மிகச்சரியானது. மனுஷீகத்தை குறிக்கும் லூக்கா சுவிசேஷத்திலே பிதாவின் கைகளில் ஆவியை ஒப்புக்கொடுத்தார் என்றிருக்கிறது. ஆனால் தெய்வீக மகிமையைக் குறிக்கும் சுவிசேஷம், அவர் எல்லா வல்லமையும் உடையவராய், தன் ஆவியைத் தானே கொடுத்ததாகக் குறிப்பிடுகிறது.

பாவநிவிர்த்திக்காக பலியிடும் பொழுது, இரண்டு காரியங்கள் தேவை. முதலாவது தேவனின் பரிசுத்தத்திற்கும், நீதிக்கும் திருப்தியளிக்கத் தக்கதாக பலி இருக்கவேண்டும். நமக்காகப் பலியான இயேசு, ஊற்றப்பட்ட தேவ கோபத்தினை அனுபவித்தார்; பாடுகளைச் சகித்துவிட்டார். இரண்டாவது, இரட்சகர் மரணத்தை ருசிபார்க்க வேண்டும். ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப் பட்டிருக்கிறது (எபிரேயர் 9:27). பாவியைப் பொறுத்தமட்டில், மரணம் முதலாவது; அதன்பின் நியாயத்தீர்ப்பு இரட்சகரைப் பொறுத்தமட்டில், இந்த நிலை தலைகீழாகியது. நமது பாவங்களுக்கான தேவனின் நியாயத்தீர்ப்பை முதலில் அனுபவித்தார்; பின்பு மரணத்தை சந்தித்தார்.

இப்போது முடிவு வந்துவிட்டது மரணத்தால் மேற்கொள்ள முடியாத, மிகச்சிறந்த எஜமானாகிய அவர், தன்னுடைய வற்றாத வல்லமையுடன், மகாசத்தமாய்க் கூப்பிட்டு, தன் ஆவியை பிதாவின் கைகளில் ஒப்படைப் பதில், அவருடைய இணையற்றத் தனித்தன்மை வெளிப்படுத்துகிறது. வேறு எவரும் இதைப்போல செய்தது இல்லை; மரணமடைந்ததுமில்லை. அவரது பிறப்பு, வாழ்க்கை, ஏன் மரணமும்கூட தனித்தன்மை உடையது. தன்னுடைய ஜீவனை ஒப்புக்கொடுத்ததில், மற்றவர்களுடைய மரணத்தைவிட, இவரது மரணம் வித்தியாசமானது. தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே அவர் மரித்தார். ஒரு தெய்வீக மனிதரைத் தவிர, வேறு யார் இதை செய்யக் கூடும்? சாதாரண மனிதனாக இருந்தால், இச்செயல் தற்கொலையாகும். ஆனால், இயேசுவிலே அவருடைய முழுமைக்கும், தனித்தன்மைக்கும் இது அடையாளமாகும். ஜீவாதிபதியாக அவர் மரணமடைந்தார்.

'பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்'

  1. நித்தியமான பாதுகாப்பான இடத்தைக் காண்கிறோம்.

திரும்பத்திரும்ப, இரட்சகர் தனக்குப் கொடுக்கப்பட்ட மக்களைப் பற்றியே பேசுகிறார் (யோவான் 6:37). அவரைப் பிடிக்க வந்தபோது, நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்து போகவில்லை (யோவான் 18:9). தம்முடைய மரணத்தின் போது, இரட்சகர், அவர்களை பிதாவின் கைகளில் பத்திரமாக ஒப்புக்கொடுப்பது அருமையான செயலல் லவா? தம்முடைய மக்களின் பிரதிநிதியாக, கிறிஸ்து சிலுவையில் தொங்கினார்; எனவே அவருடைய கடைசிச் செயலையும் நமக்காகச் செய்த செயலாகப் பார்க்கிறோம். கர்த்தராகிய இயேசு தம்முடைய ஆவியை பிதாவின் கைகளில், ஒப்புக்கொடுத்த போது, தம்முடைய ஆவியோடுகூட நம் எல்லோருடைய ஆவியையும் பிதாவிடத்தில் ஒப்புக்கொடுத்தார். இயேசுகிறிஸ்து தமக்காக வாழவோ, சாகவோ இல்லை. அவர் தம்மை விசுவாசிக்கிறவர்களுக்காகவே வாழ்ந்தார்; மரித்தார். கடைசியில் அவர் செய்த செயல் அவருக்கும் விசுவாசிகளுக்கும் உரியது. கிறிஸ்து, தெரிந்து கொள்ளப்பட்ட எல்லா ஆத்துமாக்களையும் ஒன்று சேர்த்து, தன்னுடைய ஆவியோடுகூட, அவர்களையும் அமைதியாக ஒப்புக்கொடுக்கிறார்.

பிதாவின் கைகள் நித்தியமான பாதுகாப்பின் இடம். அந்தக் கைகளில், தம்முடைய மக்களை, எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்படி ஒப்புக் கொடுத்தார். தெரிந்தெடுக்கப்பட்டவர்களைக் குறித்து, கிறிஸ்து, அவை களை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள, ஒருவனாலும் கூடாது' (யோவான் 10:29) என்று சொல்கிறார். விசுவாசிகளின் நம்பிக்கையின் அடிப்படை இதுதான். நம்முடைய உறுதியின் அடிப்படையும் இதுவே. யெகோவாவின் கைகள் பேழையின் கதவைப் பாதுகாத்தபோது, நோவாவுக்கு எந்த சேதமும் வரவில்லை. எனவே சர்வவல்லவரின் கைகளில் இருக்கும் நம்முடைய ஆவியை எதுவும் தொடமுடியாது. அங்கிருந்து யாரும் நம்மைப் பறிக்கமுடியாது. நம்மில் நாம் பலவீனர்; ஆனால் தேவனின் வல்லமையால் காக்கப்படும்போது, வேத வார்த்தை சொல்கிறது, 'தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு, அந்தச் சுதந்திரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது (1 பேதுரு 1:5). பந்தயத்தில் நன்றாக ஓடுவதைப் போல காணப்படும் உலகப்பிரகாரமான மக்கள். கொஞ்ச நாட்களில் சோர்வடைந்து, ஒட்டத்தினின்று விலகி விடுகிறார்கள். எழுப்புதல் கூட்டங்களில், சரீரப்பிரகாரமாக உணர்ச்சிவசப்படுகிறவர்கள், அவர்களுக்குள்ளே வேர் கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலம் மாத்திரம் நிலைத்திருப்பார்கள். தங்கள் சுயசித்தத்தையும், சொந்தத் தீர்மானங்களையும் நம்புபவர்கள், தாமாகவே மாறி இன்னும் சிறப்பாக செயல்பட உறுதிமொழி எடுப்பவர்கள், அதில் தவறி விடுவர். அவர்களுடைய பின்னிலைமை, முன்னிலைமையைப் பார்க்கிலும் மோசமாகி விடும். தேவாலயத்துக்கு வரச்சொல்லியோ, கிறிஸ்தவ வாழ்க்கை வாழும்படி சொல்லியோ வழிநடத்தும், நல்லெண்ணம் கொண்ட, ஆனால் அறியாமை நிறைந்த ஆலோசகர்களின் ஆலோசனையைக் கேட்பவர்கள் அடிக்கடி உண்மையை விட்டு வழிவிலகிச் செல்வார்கள். மறுபடியும் பிறந்த ஒவ்வொரு ஆவியும், பிதாவின் கைகளில் நித்தியமாக பத்திரமாயிருக்கும்.

பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்'

  1. தேவனோடு உறவைப் பெற்றுக்கொள்ளும் பாக்கியம்.

நாம் குறிப்பிடுவதெல்லாம், தேவனோடு உறவு என்பது இடத்தையோ சூழ்நிலையையோ பற்றி கவலைப்படாமல், சுதந்திரமாக அனுபவிக்கின்ற ஒன்று. சிலுவையில் தொங்கிய இரட்சகரைச் சுற்றிலும் தாக்குகின்ற மக்கள் கூட்டமும் தாங்கொண்ணா வேதனையே சகித்த சரீரமும் இருந்தும் அவர் பிதாவோடு ஐக்கியம் கொள்ள முடிந்தது. நம்முடைய வேதம், கற்றுத்தரும் இனிமையான உண்மைகளில் இதுவும் ஒன்று. வெளியிலுள்ள சூழ்நிலைகள், நிபந்தனைகள், மத்தியில்,எல்லா நேரத்திலும் தேவ பிரசன்னத்தை அனுபவிப்பது நமக்குக் கிடைத்த பெரிய சிலாக்கியம். தேவனோடு உள்ள உறவு, விசுவாசத்தினாலே வருவது; விசுவாசம், காண்கிற பொருள் களினாலே பாதிக்கப்படுவதில்லை. வெளியிலுள்ள சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், வாசகரே, அதன் மத்தியிலும் தேவனோடு உறவு கொள்வது சொல்லமுடியாத சிலாக்கியம். எரிகிற அக்கினிச் சூளையின் நடுவிலே, தேவனுடைய உறவை அனுபவித்த மூன்று எபிரெய வாலிபர்களைப் போல, சிங்கக்கெபியிலே தானியேலைப் போல, பிலிப்பியச் சிறையிலே பவுலும் சீலாவும் போல சிலுவையில் இரட்சகரைப்போல நாமும் எங்கிருந்தாலும் தேவனோடு உறவுகொள்ள முடியும். கிறிஸ்துவின் தலை முள்முடியில் சாய்ந்திருந்தாலும், அதனடியில் பிதாவின் கைகள் இருந்தன.

மரிக்கும் வேளையிலே தேவனோடு கொள்ளும் உறவு பற்றிய உண்மை யையும், அந்த பாக்கியமான சத்தியத்தையும் வேதம் குறிப்பாக நமக்குக் கற்பிக்கவில்லையா? கிறிஸ்தவ சகோதரரே, பின் ஏன் அதைக்குறித்து பயப்பட வேண்டும்? பழைய ஏற்பாட்டுக் காலத்திலே தாவீது 'நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்' (சங்.23:4) என்றும் சொல்லும்போது, கிறிஸ்து சாவின் கூரை ஒடித்த பிறகும், விசுவாசிகளான நாம் ஏன் பயப்படவேண்டும்? இரட்சிக்கப்படாதவர்களுக்கு மரணம் என்பது பயங்கரத்தின் ராஜாவாயிருக்கலாம். ஆனால் கிறிஸ்தவர்களுக்கு, மரணம் என்பது நம்மை நேசித்தவர்களின் சமுகத்திற்கு நம்மை வழிநடத்தும் வாசலாகும். உயிரோடிருந்தபோது போலவே, மரணமடையும்போது, ஆத்துமாவின் அசைவுகள் அனைத்தும் தேவனிடம் திரும்புகின்றன. நாம் உணர்வுள்ளவர்களாய் இருந்தால், நாமும் 'பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று உரக்கக் கூறுவோம். இங்கே இந்தக் கூடாரத்திலே வசிக்கும்போது, தேவனின் கரங்களினாலன்றி நமக்கு இளைப்பாறுதல் இல்லை. நாம் அங்கே செல்லும்போது, நம்முடைய எதிர்பார்ப்பும், உண்மையான ஆவலும் அவருடன் இருக்கவேண்டும் என்பதே. நாம் பரலோகத்தை நோக்கி ஏக்கப் பார்வையுடன் இருக்கிறோம். இரட்சிக்கப்பட்டவர்களின் ஆத்துமா பிரியும் வேளை வரும்போது, தன்னைத்தானே தேவனின் அன்புக்கரங்களில் ஒப்படைக்கிறது.பல திருப்பங்களையும் வளைவுகளையும் கடந்து கடலில் சங்கமிக்கும் ஆறுபோல, ஆத்துமாவும் தேவனைச் சந்திக்கிறது. இந்த உலகத்தில் தேவனைத்தவிர எதுவும் நம் ஆத்துமாவை திருப்தி செய்ய முடியாது; அங்கு செல்லும்போதும் அவரைத்தவிர யாரும் நம்மை திருப்திப்படுத்து முடியாது.

ஆனால், வாசகரே, விசுவாசிகள் மட்டுமே தங்கள் மரணநேரத்தில், ஆவியை பிதாவின் கைகளில் ஒப்புக்கொடுக்க உரிமையும் அதிகாரமும் பெற்றவர்கள் அப்படியானால், மரணமடையும் அவிசுவாசிகளின் நிலைமை எவ்வளவு பரிதாபமானது. அவர்கள் ஆவிகளும் பிதாவின் கைகளிலே, பாக்கியத்திற்கல்ல பரிதாபமான முடிவுக்கேதுவாக சென்று சேரும். ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே (எபி.10:31). ஆம், அன்புள்ள கரங்களில் விழுவதற்கு பதிலாக, நியாயத் தீர்ப்பின் கரங்களில் விழவேண்டியிருக்குமே.

"பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்'

  1. இருதயத்தின் உண்மையான இளைப்பாறுதல்.

இரட்சகரின் கடைசி வார்த்தைகள் மரிக்கும் கிறிஸ்தவர்களின் ஜெபமாயிருக்குமானால், எவ்வளவாய் அவர்கள் தங்கள் ஆவிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. ஆவி என்பது விலைமதிப்பற்ற பொக்கிஷம், அது பாதுகாப்பான கரங்களில் பத்திரமாகச் சேரவேண்டும் என்பதே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் இந்த வார்த்தைகள், ஒரு விசுவாசி தன் சரீரத்துக்கு என்ன நேர்ந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், தன் ஆத்துமா பாதுகாக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறான் என்பதை தெரிவிக்கிறது. தேவனின் பரிசுத்தவான்கள், சாவுக்கு அருகாமையில் வரும்போது தன்னுடைய சரீரத்தை குறித்து, அதை எங்கே வைக்கவேண்டும், எப்படி அடக்கம் பண்ணவேண்டும். என்பதற்கெல்லாம், தன்னுடைய நண்பர்களை நம்புகிறார்கள். ஆனால் தன்னுடைய ஆத்துமாவைக் குறித்தோ அவன் கரிசனையுடன் கடைசி மூச்சு தேவனின் பாதுகாப்பில் சேர வேண்டும் என்பதில் கவனமாயிருக்கிறார்கள். இயேசு தாமே கர்த்தாவே, என் சரீரத்தைப் பெற்றுக் கொள்ளும்; என்றோ "மண்ணான என் சரீரத்தைப் பொறுப்பெடுத்துக் கொள்ளும்" என்றோ சொல்லாமல், கர்த்தாவே என் ஆவியை ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே, ஆவி என்னும் ஆபரணம் வைத்திருந்த ஆபரணப்பெட்டி உடைக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது ஆபரணத்தைப் பாதுகாப்பாக ஏற்றுக்கொள்ளும்' என்று சொல்லுகிறார்.

கடைசியாக, ஒரு சுருக்கமான வேண்டுகோள். என்னுடைய நண்பரே, துன்பங்கள் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்க்கையில் உங்களை கவனித்துக்கொள்ள உங்களால் முடியாது. அதைப்போலவே மரணத்திலும் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. வாழ்க்கையில் அநேக கஷ்டங்களும் சோதனைகளும் உண்டு. உங்கள் ஆத்துமா எல்லாப் பக்கங்களிலும் நெருக்கப்படுகிறது. ஒவ்வொரு இடத்திலும் ஆபத்தும் சோதனைகளும் உண்டு. உலகம், மாமிசம், பிசாசு மூன்றும் உங்களுக்கு எதிராக கூட்டாக நிற்கும். அவை உங்கள் பெலத்திற்கு மிஞ்சியவை. இதோ, இங்கே இருளுக்கிடையே ஒரு வெளிச்சம். எல்லாப் புயலுக்கும் அடைக்கலமாக ஒரு துறைமுகம். பிசாசின் எல்லா தந்திரங்களுக்கும் உங்களை மறைத்து பாதுகாக்கும் அடைக்கலக்கோட்டை வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளுக்கும், சாவின் பயங்கரங்களுக்கும் விலக்கிக் காக்கும் அடைக்கலமாகிய பிதாவின் கைகள் இருதயத்தின் உண்மையான இளைப்பாறுதல்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.