எதிர் பாலினத்தவர் (ஆண்) மீது ஒரு பெண்னின் ஆடை ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிப்படையாக விவாதித்து, எல்லாக் காரியங்களிலும் தேவனைப் பிரியப்படுத்த வேண்டுமென்று விரும்புவோருக்கு உதவியாக இருக்கக்கூடிய தெய்வீக ஆலோசனைகளையும், நாம் கொண்டிருக்கவேண்டிய புரிதலையும் இந்தக் கட்டுரை விரிவாக முன்வைக்கிறது. ஒரு பெண்ணின் அழகின் மீது ஆண் இச்சைகொள்வது விபசாரம் என்று நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்குக் கற்பித்தார். “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.” (மத்தேயு 5:28). அதாவது ஓர் ஆண் ஒரு பெண்ணின் உடலைத் தொடாமலேயே, அவள்மீது கொண்டிருக்கிற இச்சையினால் அவளைக் குறித்து தவறான நோக்கில் தன் சிந்தனையில் அசைபோட்டுக் கொண்டிருந்தாலே அது விபாசாரம் ஆகிவிடும் என்பதே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கருத்தாகும். ஓர் ஆண் தனது இருதயத்தில் ஒரு பெண்ணின் மீது இச்சைகொண்டு செய்கிற பாவத்துக்கு அந்தப் பெண் அணிந்திருக்கிற ஆடை ஒரு காரணமாக இருக்கிறது. இத்தகைய பாவத்திற்கு பெண்ணின் அரைகுறையான ஆடை மட்டுமே காரணம் என்று கூறுவது முற்றிலும் உண்மையல்ல தாயினும், பொதுவாக இருக்கக்கூடிய பல காரணங்களில் இதுவும் ஒன்றாகும். விபசார மயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடைய ஆண்கள் (2 பேதுரு 2:14) இந்தப் பூமியிலேயே மிகவும் அடக்கமான பெண்ணின் மீதும் தனது காமப் பார்வையை வீசுவர் என்பதில் சந்தேகமில்லை.
இருப்பினும், கிறிஸ்தவ விசுவாசத்தில் நிலைகொண்டிருப்பதற்காக பாவத்திற்கு எதிராகப் போராடி, தனது பாவ உணர்ச்சிகளுக்கு எதிராக ஒரு நல்ல போராட்டத்தை நடத்துகிற ஒரு மனிதன், மோசமான ஆடை அணிந்த பெண்ணின் பார்வையைச் சமாளிப்பதற்காகக் கூடுதலான சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இவ்வாறு இந்த மனிதன் அடிக்கடியாக இவ்விதமான சோதனைக்கு ஆளாகும் போது அவர் இதில் வெற்றிகொள்ள முடியாமல், தோல்வியுற்று விழுந்துவிடுகிறார். மிகச் சிறந்த பரிசுத்தவான்கள்கூட இத்தகைய சோதனைகள் வரும்போது எப்போதும் வெற்றிகொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது என்பதே யதார்த்தமான உண்மையாகும். ஓர் ஆண் பெண்ணின் மீது இச்சை கொள்வது அவனுடைய சொந்த விருப்பப் பாவமேயன்றி, இதற்காக எதிர்பாலராகிய ஒரு பெண்ணைக் குற்றம் சொல்லக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். அதேவேளையில், ஓர் ஆணின் தடுமாற்றத்திற்கும் அவனது வீழ்ச்சிக்கும் ஒரு பெண்ணின் நாகரீகமற்ற உடைகளும், அவளுடைய இச்சையான பேச்சுகளும், அவளுடைய விகற்பமான நடத்தைகளும் காரணமாக இருந்தால், தேவனுக்கு முன்பாக அவள் அந்த நடத்தையைக் குறித்து கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதையும் ஒவ்வொரு பெண்களும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
“இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் (அது பெண்ணாயிருந்தாலும்) இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!” *(மத்தேயு. 18:7) என்று ஆண்டவர் கூறியது மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.
இந்தக் கட்டுரையில் ஆசிரியர் தனது பெயரை வெளிப்படுத்தவில்லை. இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைப் பிரயோகங்களும், சொல்லப்பட்டிருக்கிற முறைகளும் ஆசிரியர் தனது அடையாளத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் என்னும் கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கலாம். இருப்பினும், இதன் ஆசிரியர் எதையும் தவறான முறையில் எழுதாமல், பொதுவாக எல்லா எழுத்தாளர்களும் தங்களது கட்டுரையில் நடைமுறையில் என்ன வார்த்தைகளைக் கொண்டு எழுதுவார்களோ அவற்றைப் பயன்டுத்தியே இவரும் எழுதியுள்ளார். பாவத்தை அதன் அசலான பெயரில் குறிப்பிட்டு அம்பலப்படுத்துவது எந்த வகையிலும் பாவமாகக் கருத முடியாது என்று வெளியீட்டாளர்களாகிய நாங்களும் நினைக்கிறோம். ஆகவே இதன் ஆசிரியரின் கருத்தை நாங்கள் எவ்விதத்திலும் மாற்றி எழுதாமல், அவர் என்ன சொல்ல வருகிறாரோ அதன் கருத்தை நீர்த்துப் போகச் செய்யாத அளவிற்கு அதன் அசல் வடியிலேயே கொடுத்திருக்கிறோம்.
சில விஷயங்களை இங்கே குறிப்பிடுவது ஆட்சேபனைக்குரியது என்று எந்த வாசகராவது கருதினால், அதன் நடைமுறைகளை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் கண்டிக்க வேண்டும் என்று வருந்தி உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். நடைமுறையில் இருக்கிற ஓர் அநாகரிகமான செயலைத் திருத்துவதற்காகவும், கண்டிப்பதற்காகவும் சற்றுக் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது எந்த வகையிலும் அந்த தவறைக் காட்டிலும் மோசமானது ஆகாது என்பதைக் கூறிக்கொள்கிறோம். சொல்வதற்குச் சங்கடமான காரியங்களை எவ்விதத்திலும் பூசிமெழுகாமல், உள்ளதை உள்ளபடியே நாங்கள் இங்கே குறிப்பிடுவதற்காக கிறிஸ்துவின் நாமத்தில் உங்களிடத்தில் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறோம். கர்த்தருக்குள் இருக்கிற ஒவ்வொரு சகோதரியும் சரியான கிறிஸ்தவ நற்பண்புகளை வெளிப்படுத்தி, ஆடை அணியும் காரியத்திலும் கர்த்தரைக் கனப்படுத்த வேண்டும் என்னும் தூய நோக்கத்துடன் இக்கட்டுரையை நாங்கள் வெளியிடுகிறோம்.