“ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின் மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரியவதியாயிருந்தாள்” (2 சாமுவேல் 11:2)
தாவீதின் பாவத்தைப் பற்றி நாம் அடிக்கடியாகவும் அதிகமாகவும் பேசுகிறோம். ஆனால் பத்சேபாளின் பாவத்தைப் பற்றி நாம் பேசுவதோ அல்லது அதைக் குறித்துக் கேள்விப்படுவதோ கூட மிகவும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது. தாவீதின் பாவம் மிகப் பெரியது, பத்சேபாளின் பாவமோ மிகச் சிறியது என்பது நிதர்சனமாக உண்மை. தாவீதின் பாவம் வேண்டுமென்றே செய்யப்பட்டது மற்றும் யார் நம்மைக் கேள்வி கேட்பார்கள் என்னும் அகந்தையில் செய்யப்பட்டது. ஆனால் பத்சேபாளின் பாவமோ கவனக்குறைவால் மட்டுமே நடைபெற்றது. தாவீது வேண்டுமென்றே பத்சேபாளுடன் விபச்சாரம் செய்தார் மேலும் அவனுடைய கணவனை திட்டமிட்டுக் கொலை செய்தார். ஆனால் பத்சேபாளின் வாழ்விலே இது ஏதேச்சையாக நடந்த ஒன்று, மேலும் தாவீதின் கண்களுக்கு முன்பாகத் தன்னை எதிர்பாராத வகையில் வெளிப்படுத்திக் காட்டினாள். எனவே தாவீதின் பாவம் பெரியது என்பதிலும் பத்சேபாளின் பாவம் சிறியது என்பதிலும் நமக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
ஆயினும் பத்சேபாளின் சிறிய பாவமே, தாவீதின் பெரிய பாவத்திற்குக் காரணமாக அமைந்து விட்டது என்பதும் உண்மையாகவே உள்ளது. பத்சேபாளுடைய அறியாமையின் சிறிய பாவமானது, சிந்தனையற்றதும் கவனக்குறைவாகவும் தாவீதுக்கு முன்பாகத் தன்னை வெளிப்படுத்திக் காட்டிய அவளுடைய சிறிய செயலானது, “சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!” (யாக். 3:5) என்னும் யாக்கோபின் வார்த்தைகளுக்கு ஏற்ப, ஒரு பெரிய தீப்பிழம்பை உண்டாக்கி காட்டையே எரித்த தீப்பொறியைப் போல மாறிவிட்டது. ஒரு பக்கம் பார்த்தால், பத்சேபாளைப் பொருத்தவரை அது தாவீதின் கண்களுக்கு முன்பாக கொஞ்சம் கவனக்குறைவாக நடந்துகொண்ட செயலாகவும், கொஞ்சம் சிந்தனையற்ற செயலாகவும் மற்றும் ஏதேச்சையாகவும் தற்செயலாகவும் நடைபெற்ற ஒரு செயலாகவும் இருக்கிறது. ஆனால் மறுபக்கம் பார்த்தால், தாவீதைப் பொருத்தவரை அது விபச்சாரமாகவும், மனசாட்சியின் குற்ற உணர்வை உண்டாக்கிய செயலாகவும் மாறிவிட்டது. மேலும் இது கொலைக்கும், அவளுடைய கணவனின் இழப்புக்கும், ஏதுவும் அறியாத போர் வீரர்களின் மரணத்திற்கும் வழிவகுத்துக் கொடுத்துவிட்டது. இவை மட்டுமின்றி, தேவனின் எதிரிகள் அவரைத் தூஷிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டதாகவும், முறையற்ற கர்ப்பம் தரித்த அவமானத்திற்கும், ஒன்றும் அறியாத குழந்தையின் மரணத்திற்கு ஏதுவாகவும், பின்னாட்களில் அப்சலோம் தவறான முறையில் தந்தையை எதிர்த்துக் கலகம் செய்வதற்கும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட போரில் அவன் மரணமடைவதற்கும் காரணமாக அமைந்துவிட்டது. மேலும் இஸ்ரவேல் மக்கள் அனைவருடைய பார்வையில் படும்படி தாவீதின் மனைவிகளைத் தீட்டுப்படுத்திய தவறான செயலுக்கும், தாவீதின் குடும்பத்தார் ஒருவரையொருவர் வெட்டிக் கொலை செய்யப்படுவதற்கு ஏதுவான சூழலை உண்டாக்கியதற்கும் பத்சேபாளின் ஒரு சிறிய பாவம் காணமாக அமைந்துவிட்டது. (2 சாமு. 12:11-18)