ஜெபம் தேவன் ஏற்படுத்திய நியமங்களில் ஒன்றாகும். நாம் தனிப்பட்ட முறையிலும், பொதுக் கூடுகைகளிலும் ஜெபிக்க வேண்டும். ஆவியில் நிறைந்த மன்றாட்டு ஜெபத்தை ஏறெடுப்பவர்கள் தேவனுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக மாறுகிறார்கள். ஜெபம் காரியங்களைச் சாதிக்கும் வல்லமை கொண்டது. ஜெபிக்கிறவர்களும், யாருக்காக ஜெபிக்கிறார்களோ அவர்களும் தேவனிடமிருந்து பெரிய காரியங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
ஜெபமே தேவனின் இருதயத்தைத் திறக்கும் வழியாகவும், ஜெபிக்கிறவர்களின் வெறுமையான ஆத்துமா நன்மைகளால் நிரப்பப்படும் வாய்க்காலாகவும் விளங்குகிறது. ஜெபத்தின் வாயிலாக, ஒரு கிறிஸ்தவர் தனது இருதயத்தை ஒரு நம்பிக்கைக்குரிய நண்பரிடம் திறந்து காட்டுவதைப் போலத் தேவனிடம் வெளிப்படுத்த முடியும். மேலும், அவருடன் நெருங்கி உறவாடி, ஒரு புதிய சாட்சியாகத் திகழ முடியும்.
ஜெபம் என்பது மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஒருவிதமான மந்திரச் சொல் அல்ல; எனவே, நாம் தனிப்பட்ட முறையில் ஜெபிக்கும்போதும், பொது வெளியில் ஜெபிக்கும்போதும் வெவ்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். அவ்வாறே, ஜெபிக்கும் முறையிலும் நாம் வேறுபாட்டைக் காட்டமுடியும்; அதாவது, உரத்த சத்தத்தோடும் ஜெபிக்கலாம், வெளியே சத்தம் கேட்காமல் மனதுக்குள்ளும் ஜெபிக்கலாம். நமது தாலந்துகளைப் பயன்படுத்தி சத்தமாகவும் ஜெபிக்கலாம்; தேவ கிருபையைப் பயன்படுத்தி அமைதியாகவும் ஜெபிக்கலாம்.
எவ்வாறாயினும், கைகளைக் கூப்பி, கண்களை மூடி, உதடுகளை அசைத்துச் ஜெபிக்கும்போது, நமது இருதயம் அதனுடன் இசைந்து செல்லாவிட்டால் அதனால் எவ்விதப் பயனும் இல்லை. நாம் ஆவியோடும் ஜெபிக்க வேண்டும்; அதே வேளையில் கருத்தோடும் ஜெபிக்க வேண்டும். ஜெபம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விளக்கும் நான்கு காரியங்களை உங்கள் முன் வைக்கிறேன்:
ஜெபம் உண்மையானதாக இருக்க வேண்டும்.
ஜெபம் ஆவியானவரோடு இணைந்து (ஆவியில் ஜெபித்தல்) ஏறெடுக்கப்பட வேண்டும்.
ஆவியோடும் கருத்தோடும் ஜெபிக்க வேண்டும்.
நாம் எதற்காக ஜெபிக்கிறோமோ, அந்தக் காரியத்தைக் குறித்துச் சுருக்கமாக ஜெபிக்க வேண்டும்.
ஜெபம் என்பது அறிவோடும், உண்மையோடும், அன்போடும், தேவனிடம், கிறிஸ்துவின் மூலம், பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு, அவர் வாக்குப்பண்ணின காரியங்களுக்காக, தேவனின் வார்த்தைப்படி, திருச்சபையின் நன்மைக்காக, விசுவாசத்தில் நம் சித்தத்தை தேவனது சித்தத்திற்கு கீழ்ப்படுத்தி, நம் இருதயத்தை அல்லது ஆத்துமாவை அவரிடத்தில் ஊற்றிவிடுவதாகும்.
மேற்கூறிய இலக்கண விதியில் ஏழு காரியங்களைக் கவனிக்கலாம்:
உண்மையான ஜெபம்
அறிவோடு (உணர்வோடு) ஊற்றிவிடுதல்
அன்பான தேவனிடம் கிறிஸ்துவின் மூலம் ஊற்றிவிடுதல்
பரிசுத்த ஆவியானவரின் உதவி அல்லது பெலத்தினால் ஜெபித்தல்
தேவன் வாக்குப்பண்ணின காரியங்களுக்காக அல்லது அவரது வார்த்தையின்படி ஜெபித்தல்
திருச்சபையின் நல்வாழ்வுக்காக ஜெபித்தல்
விசுவாசத்தில் தேவனுடைய சித்தத்திற்கு நம்மை கீழ்ப்படுத்துதல்.
உண்மையான ஜெபம் எது?
முதலாவது உத்தமத்தோடு தேவனிடம் நம் ஆத்துமாவை ஊற்றிவிடுதல்: உத்தமம் என்பது ஒரு கிருபை. கிறிஸ்தவனின் வாழ்க்கையில் வெளிப்பட வேண்டிய ஒரு குணம். அது இல்லாவிட்டால் தேவன் நம் செயல்களை ஏற்கவே மாட்டார். "அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார். என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்" என்று தாவீது கூறுகிறார் (சங்கீதம் 66:17, 18).
உத்தமம் என்பது ஜெபத்தின் ஒரு முக்கியப் பங்கு; அதில்லாமல் தேவன் நம் ஜெபத்தைக் கேட்க மாட்டார். “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்" (எரேமியா 29:13). எனவேதான் ஓசியா 7:14-ல், "தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட ஜெபத்தைத் தேவன் வெறுக்கிறார். ஏனெனில் அப்படிப்பட்ட ஜெபம் உத்தமத்திற்கு மாறானது; ஏமாற்றுவதற்குச் சமம். வெளிப்படையான வேஷம் தரித்து, மனுஷரால் காணப்படுவதற்கும் புகழப்படுவதற்கும் மட்டுமே இது செய்யப்படுகின்றது. நாத்தான்வேல் அத்திமரத்தின் கீழ் இருந்தபோது அவரிடமிருந்த உத்தமத்தைக் கிறிஸ்து கண்டு அதை மதித்தார் (யோவான் 1:47). ஒருவேளை இந்த நல்ல மனிதன் தேவனிடம் தன் இருதயத்தை ஊற்றிக் கொண்டிருந்திருக்கலாம். உத்தமத்தோடும், எவ்வித ஏமாற்றுதலும் இல்லாமலும் தேவனிடம் ஜெபம் செய்திருக்கலாம். இவ்வகை உத்தமமான ஜெபத்தைத் தேவன் மதிக்கின்றார். 'செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்' (நீதிமொழிகள் 15:8).
ஜெபத்திற்கு உத்தமம் ஏன் அவசியம் என்பதைப் பார்ப்போம். உத்தமம் என்பது, நம் இருதயத்தை எளிமையான நிலையில் தேவனிடம் எடுத்துக்காட்டுகிறது. நம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்கவும் உதவுகின்றது. நம்மைப் பற்றி மேன்மையாக எண்ணாமல், முழு அளவில் நம் உண்மையான நிலையைக் காட்டுகின்றது. "நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன். என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்" (எரேமியா 31:18).
உத்தமம் என்பது நம் சொந்த நிலையை ஒரே சீராய் காண்கின்றது. நாம் ஒரு தனி அறையில் நின்றாலும் சரி, உலக மக்களுக்கு முன்பாக நின்றாலும் சரி, இரண்டு முகமூடிகளைப் போட்டுக்கொள்ள அது விரும்புவதில்லை. ஒன்று மனிதருக்கு முன்பாக உபயோகப்படுத்துவதற்கும், மற்றொன்று தேவனிடம் உபயோகப்படுத்துவதற்கும் என அது இருப்பதில்லை. நமது கடமையாகிய ஜெபத்தில் அது நம்மோடு ஒன்றிணைந்திருக்கும். உதட்டளவில் அது மகிழ்கின்ற ஒன்றல்ல. தேவனைப் போலவே, உத்தமமும் இருதயத்தைப் பார்க்கின்றது. இருதயத்திலிருந்துதான் உண்மை ஜெபம் வருகின்றது.
அறிவான ஜெபம் எது?
இரண்டாவது, அறிவாற்றலோடு செய்யப்படுகின்ற ஒன்றே உண்மை ஜெபமாகும். அது அநேகர் எண்ணுகின்றபடி, தேவனைப் புகழக்கூடிய அல்லது அர்த்தமற்ற சில வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வதைக் குறிக்காது. மாறாக, அறிவாற்றலோடு கூடிய இருதயத்தின் உணர்வுகளைக் குறிக்கும். அப்படிப்பட்ட உணர்வுகள் சில சமயங்களில் பாவத்தைக் குறித்ததாக இருக்கலாம்; சில சமயங்களில் நாம் பெற்ற நன்மைகளை நினைப்பதாக அமையலாம்; அல்லது தேவன் மன்னிக்க ஆயத்தமுள்ளவர் என்பதைக் காட்டுவதாக அமையலாம்.
பாவத்தின் அகோரத்தால் மன்னிப்பையும் இரக்கத்தையும் பெற விரும்பும் நிலை: ஆத்துமா உணர்வுள்ள நிலையில் காணப்படுகின்றது. ஏக்கத்தோடும் அழுகையோடும் உணர்வுகள் எழும்பி, அவை இருதயத்தை உடையச் செய்கின்றன. இருதயம் கவலையோடு இருக்கின்ற சமயம், உண்மை ஜெபம் அப்பாரத்தைக் கிழித்துக்கொண்டு வெளிவருகின்றது. இதை அன்னாளின் ஜெபத்தில் பார்க்கிறோம் (1 சாமுவேல் 1:10). தாவீது ராஜா (சங்கீதம் 69:3, 38:8-10) ஆண்டவரிடம் எவ்வளவு உணர்வுகளோடு விண்ணப்பிக்கிறார் என்பதைப் பார்க்கிறோம். அதேபோல் எசேக்கியா புறாவைப் போல் புலம்புகிறார். எப்பிராயீம் தன்னைப் பற்றியே புலம்புகிறார் (எரேமியா 31:18,19). பேதுரு மனங்கசந்து அழுதார் (மத்தேயு 26:75). கிறிஸ்துவும் "தேவனை நோக்கிப் பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணினார்" (எபிரேயர் 5:7). மேலும், சங்கீதம் 116:3,4; 77:2; 38:6 போன்ற வசனங்களில் தாவீது ராஜா, பாவத்திற்காக அழுது கெஞ்சி மன்றாடுவதைப் பார்க்கிறோம்.
இரக்கத்தைப் பெற்றதற்கான நன்றி: சில சமயங்களில் இவ்வித இரக்கத்தைத் தாவீது பெற்றுக்கொண்டு பெலனடைந்து, ஆறுதலடைந்ததைப் பார்க்கிறோம். தேவனிடம் அவர் மன்னிப்பைப் பெற்றிருப்பதைப் பற்றி வாசிக்கிறோம் (சங்கீதம் 103:1-4). பெற்ற இரக்கத்திற்காக நன்றி செலுத்துகின்ற ஜெபம் மிகவும் வல்லமையுள்ளது. இதைப் பிலிப்பியர் 4:6, 7-ல் தெளிவாகப் பார்க்கிறோம்.
வாக்குத்தத்தங்களை நினைவுகூருதல்: சில சமயங்களில், தேவன் வாக்குப்பண்ணி நாம் பெறவேண்டிய இரக்கங்களைச் சொல்லியும் ஜெபிக்கலாம். இதற்கு உதாரணமாக, தாவீது ராஜாவைப் பார்க்கலாம் (2 சாமுவேல் 7:27). மேலும், ஆதியாகமம் 32:10,11 மற்றும் தானியேல் 9:3,4-ல் இதைக் குறித்து வாசிக்கிறோம்.
அன்பான தேவனிடம் கிறிஸ்துவின் மூலம் ஜெபிப்பது
அடுத்தபடியாக ஜெபம் என்பது வாஞ்சையோடும், அன்போடும், பிரியத்தோடும் தேவனிடம் நம் ஆன்மாவை ஊற்றிவிடுவதாகும். இதைச் சங்கீதம் 42:1-ல், "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" என்று பார்க்கிறோம்.
சங்கீதம் 84:2-ல், "என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப் பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், "இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்" (சங்கீதம் 119:40) எனவும், "உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்துபோகிறது" (சங்கீதம் 119:20) எனவும் வாசிக்கிறோம்.
தானியேல் 9:19-ல், "ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும்; என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே என்றேன்" என்று காண்கிறோம்.
லூக்கா 22:44-ல், "இயேசு மிகுந்த வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார்" என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆனால், இன்றைக்கு அநேகர் ஜெபிக்கும் பழக்கமில்லாதவர்களாக நம்மிடையே காணப்படுகிறார்கள். அவர்கள் ஜெபத்திற்கு அந்நியர்; சரீரப்பிரகாரமாக முழங்கால் படியிடுவதும், உதட்டை அசைப்பதுமாகவே காணப்படுகிறார்கள். நம்முடைய வாஞ்சைகளும் பிரியமும் அதில் சேரும்பொழுதுதான், நாம் முழு மனிதனாக ஜெபிக்க முடியும். அப்படி ஜெபிக்கும்பொழுது மட்டுமே, கேட்ட காரியத்தை நிச்சயமாகப் பெற்றுக்கொள்ளுவோம். அதோடு கிறிஸ்துவின் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்வோம். ஆகவேதான் பரிசுத்தவான்கள் தங்கள் முழுப் பலத்தோடு ஜெபிக்கிறார்கள்; அதற்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்து, கேட்ட காரியம் கிடையாமல் திரும்பிப்போவதே கிடையாது.
இன்று அநேகர் தேவ பயமில்லாமல், பொறாமையால் தூண்டப்பட்டு, பலனற்ற ஜெபத்தைச் செய்வதனால் ஜெபத்தின் உண்மையான வல்லமையை அறிந்துகொள்ள முடிவதில்லை. அவர்களில் அநேகருக்கு, மறுபடியும் பிறத்தல், குமாரன் மூலமாய்த் தேவனோடு தொடர்பு கொள்ளுதல், கிருபையின் சக்தியால் பாவம் கழுவப்படுதல் போன்றவற்றை உணரமுடியாமல் போய்விடுகிறது. எனவேதான், அவர்கள் ஜெபம் செய்தும் தங்கள் பாவமான, கேடான, விபசார, குடிகார வாழ்க்கையிலிருந்து விடுபட முடியாமல் போய்விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்கள் பொறாமை மற்றும் கெட்ட குணத்தால் தேவ மக்களையும் துன்புறுத்துகின்றார்கள். ஆ! எவ்வளவு பெரிய நியாயத்தீர்ப்பு அவர்கள்மேல் வந்துகொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஆக்கினையிலிருந்து, அவர்களுடைய மாய்மாலமான ஜெபங்களும், எண்ணங்களும், திட்டங்களும் அவர்களை விடுவிக்கவே மாட்டாது.
ஒரு மனிதனின் உண்மை ஜெபமானது, தன் இருதயத்தை முழுவதுமாக தேவனிடம் திறந்து காட்டுவதாகும் (சங்கீதம் 38:9). "என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடேகூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது" (சங்கீதம் 42:2,4). என் உருகிய உள்ளத்தை தேவனிடம் ஊற்றிவிடுகிறேன் என்பதுபோல் தாவீது கூறுகிறார்.
அதாவது ஜெபம் என்பது நமது முழுப் பலத்தோடும் ஜீவனோடும் ஜெபிப்பதாகும் என்று அறிகிறோம். மேலும், "எக்காலத்திலும் அவரை நம்புங்கள், அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்" (சங்கீதம் 62:8). இப்படிப்பட்ட ஜெபத்தில் ஒரு வாக்குத்தத்தம் இருக்கிறது. இது நம்மை அடிமைத்தனத்தினின்று விடுவிக்கும் ஜெபம். "அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் தேடும்பொழுது அவரைக் கண்டடைவாய்" (உபாகமம் 4:29).
மேலும் ஜெபம் என்பது நம் இருதயத்தை தேவனிடம் ஊற்றிவிடுவதாகும். இது ஜெபத்தின் உன்னத நோக்கத்தைக் காண்பிக்கிறது. வல்லமையுள்ள தேவனிடத்திற்கு அது செல்லுகிறது. "எப்பொழுது நான் உமது சந்நிதியில் வந்து நிற்பேன்" என்று ஜெபிக்கிற உள்ளம், உலகத்தின் திருப்தியல்ல, தேவனிடம் மட்டுமே உண்மையான இளைப்பாறுதலும் மனத்திருப்தியும் இருப்பதைக் காண்கிறது. 1 தீமோத்தேயு 5:5-ல், "உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்" என்று கூறப்பட்டிருக்கின்றது.
மேலும் தாவீது சொல்கிறார்: "கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும். உமது நீதியினிமித்தம் என்னைத் தப்புவித்து என்னை இரட்சியும்; உமது செவியெனக்குச் சாய்த்து என்னை இரட்சியும். நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே, நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாயிருக்கிறீர். என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும். கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயதுதொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்" (சங்கீதம் 71:1-5).
அநேகர் தேவனைப்பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் சரியான ஜெபம் என்பது தேவனைத் தன் நம்பிக்கையாய்க் கொண்டிருக்கிறது. உண்மை ஜெபம் தேவனைத் தவிர வேறெதையும் முக்கியமானதாகக் காண்பதில்லை. நாம் ஏற்கனவே சொன்னதுபோல, அதுதான் உண்மை உணர்வோடு, அறிவாற்றலோடு, உள்ளான அன்போடு செய்யப்படுகிற ஜெபமாகும்.
அடுத்தபடியாக, இப்படிப்பட்ட ஜெபம் கிறிஸ்துவின் மூலம் தேவனிடம் செல்லவேண்டும் என்று பார்க்கிறோம். ஏனெனில் கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே ஆத்துமா தேவனிடம் சேரமுடியும். "நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்" (யோவான் 14:14). இதைப்போலவே தானியேலும் ஜனங்களுக்காகக் கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபித்தார். "இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க்கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்" (தானியேல் 9:17). அப்படியே தாவீதும் ஜெபித்தார்: "கர்த்தாவே, உமது நாமத்தினிமித்தம் (அதாவது கிறிஸ்துவுக்காக) மன்னித்தருளும்" (சங்கீதம் 25:11).
ஆனால், தேவனிடம் கிறிஸ்துவின் மூலமாக ஜெபத்தில் வருவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒரு மனிதன் அறிவாற்றலோடும் அன்போடும் வந்தாலும், கிறிஸ்துவின் மூலமாக வருவதற்கு அவரைப் பற்றி அவன் முழுமையாக அறிந்திருக்க வேண்டும். "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்" (எபிரேயர் 11:6). மோசேயும் இப்படியே ஜெபிக்கிறார் (யாத்திராகமம் 32:13).
இந்தக் கிறிஸ்துவைப் பிதா ஒருவர் மட்டுமே நமக்குக் காண்பிக்க முடியும் (மத்தேயு 16:16, 17). கிறிஸ்துவின் மூலம் வருவதென்றால், தேவனின் ஒத்தாசையினால் கிறிஸ்துவின் நிழலில் தங்குவதற்குச் சமானமாகக் கூறலாம்.
எனவே தாவீது அவரைப் பற்றி, "கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்" (சங்கீதம் 18:2) என்று கூறுகிறார். அவரால் சத்துருக்களை மேற்கொண்டது மாத்திரமல்ல, அவர் மூலமாகப் பிதாவாகிய தேவனிடம் ஒத்தாசையைப் பெற்றார். தேவன் ஆபிரகாமிடம் "நான் உனக்குக் கேடகம்" என்று கூறுகிறார் (ஆதியாகமம் 15:1).
கிறிஸ்துவின் மூலம் தேவனிடம் வருகிற மனிதனுக்கு விசுவாசம் தேவை. விசுவாசம் உடையவன் தேவனால் பிறந்து, தேவனுடைய பிள்ளையாய் மாறுகிறான். இதனால் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு கிறிஸ்துவின் அவயமாகின்றான் (யோவான் 1:12; 3:5,7). அவன் கிறிஸ்துவின் அவயமாக வரும்பொழுது, தேவன் அவனைக் கிறிஸ்துவின் அங்கமாகவும், அவரது சரீரமாகவும், மாம்சமாகவும், எலும்பாகவும் ஏற்றுக்கொள்கிறார்; பிரித்தெடுத்தல், மனமாறுதல், உயிர்ப்பிக்கப்படுதல் ஆகியவற்றின் மூலம் அவனோடு உறவாடுகிறார். பரிசுத்த ஆவியானவரையும் அவன் உள்ளத்தில் வைக்கிறார். ஆகவே, இப்பொழுது அவன் கிறிஸ்துவின் புண்ணியங்களினால், அவரது இரத்தம், நீதி, வெற்றி, பரிந்துபேசுதல் ஆகியவற்றின் மூலம் தேவனிடம் வருகிறான். அவன் தேவனிடம் குமாரன் மூலம் ஏற்றுக்கொள்ளப்படுகிறான். பரிசுத்த ஆவியானவர் அவனுக்குள் இருப்பதனால், தன் இருதயத்தைத் தயக்கமின்றி தேவனிடம் ஊற்றிவிட முடிகிறது.
பரிசுத்த ஆவியானவரின் உதவி அல்லது பெலத்தினால் ஜெபிப்பது
அதுமட்டுமல்ல, ஆவியானவரின் துணைகொண்டும், பெலன்கொண்டும் ஜெபிப்பதுதான் உண்மை ஜெபமாகும். மேற்கூறப்பட்டுள்ள காரியங்களோடு, ஆவியானவரின் பெலத்தைச் சேர்த்து ஜெபிக்கவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், ஆரோனின் குமாரர் அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்து அதன் விளைவாக மரித்தது போலாகிவிடும் (லேவியராகமம் 10:1,2). மேலும் ஆவியானவரின் துணையின்றி செய்யும் ஜெபம், தேவ சித்தத்திற்கு ஏற்றதாயிராது என்று பார்க்கிறோம் (ரோமர் 8:26,27).
தேவன் வாக்குப்பண்ணின காரியங்களுக்காக அல்லது அவரது வார்த்தையின்படி ஜெபிப்பது
அடுத்தபடியாக நாம் கவனிக்க வேண்டியது, நம் ஜெபம் தேவ சித்தத்திற்கும் வேத வசனத்திற்கும் ஒத்ததாக அமையவேண்டும். தேவ வசனத்திற்கு ஒத்திருக்கும்பொழுதுதான் அது உண்மை ஜெபமாக விளங்க முடியும். தேவ வசனத்திற்கு மாறுபட்டிருந்தால், அது தேவதூஷணமாக, அர்த்தமற்ற வார்த்தைகளாகவே இருக்கும். எனவேதான் தாவீது தமது ஜெபத்தில் எப்பொழுதும் தன் கண்களை வேத வசனத்தின்மேல் வைத்திருந்தார். "என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும். சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்" (சங்கீதம் 119:25, 28). இதே சங்கீதத்தில் உள்ள 41, 42, 49, 58, 65, 74, 81, 82, 107, 147, 154, 169, 170 ஆகிய வசனங்களிலும் இதைப் பார்க்கலாம். முக்கியமாக "நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை நினைத்தருளும்" (வசனம் 49) என்று ஜெபிக்கிறார்.
பரிசுத்த ஆவியானவர் வேத வசனத்தைக் கொண்டே நம் இருதயத்தை உணர்த்துகின்றார். எனவே, நாம் அவரது வசனத்தைக் கொண்டே தேவனிடம் விண்ணப்பம் செய்யப் போகின்றோம். இதைப் போலவே தேவனது வல்லமையுள்ள தீர்க்கதரிசியாகிய தானியேலிடமும் காண்கிறோம். அவர் புஸ்தகங்களின் மூலம், இஸ்ரவேலின் சிறையிருப்பின் வருஷங்கள் முடியப்போகிறது என்று அறிந்துகொண்டார். தேவன் நம் ஜெபங்களுக்குப் பதிலளிப்பார் என்று நாமும் நிச்சயம் நம்பவேண்டும்.
நீதிமான்கள் தேவனுடைய சித்தத்திற்குத் தங்களைக் கீழ்ப்படுத்தி ஜெபிக்கும்பொழுது, தேவனுடைய அன்பைச் சந்தேகிக்கவோ அதை வினவவோ வேண்டிய அவசியமில்லை. அவர்கள் எல்லாச் சமயங்களிலும் ஞானத்தோடு நடந்துகொள்ள முடியாத காரணத்தால், சாத்தான் அவர்களை மேற்கொள்ளக் கூடும். அவர்களைத் தவறாக ஜெபிக்கவும் தூண்டலாம்; தங்கள் நன்மைக்கும் தேவனின் மகிமைக்கும் மாறாகவும் ஜெபிக்கத் தூண்டலாம். "நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்" (1 யோவான் 5:14,15). நாம் ஏற்கனவே கவனித்தபடி, பரிசுத்த ஆவியானவரின் துணையின்றி ஜெபிக்கின்ற ஜெபத்திற்கு விடை கிடைப்பதில்லை; ஏனெனில் அது தேவ சித்தத்திற்கு முரண்பட்டுக் காணப்படுகிறது.
ஆவியோடு விண்ணப்பித்தல் என்பது ஜெபிக்கின்ற மனிதனைக் குறிக்கிறது. தேவன் தம்மை அங்கீகரிக்கின்ற வகையில் அவரிடத்தில் கிறிஸ்துவின் மூலம் நாம் வரவேண்டும். தேவனிடம் நாம் உண்மையோடும், அன்போடும், அறிவாற்றலோடும் வருவது என்பது தேவ ஆவியானவராலே நடைபெறக்கூடிய ஒரு காரியமாகும்.
உலகத்தில் ஒரு மனிதனாவது, ஒரு சபையாவது பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையின்றி ஜெபத்தில் தேவனிடம் வரவே முடியாது. 'ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை கிறிஸ்துவின் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்' (எபேசியர் 2:18). மேலும், "அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியது இன்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்'' (ரோமர் 8:26,27). வேதத்தில் விண்ணப்பத்தின் ஆவியைப் பற்றி இவ்வளவு கூறப்பட்டிருப்பதாலும், அவர் இல்லாமல் மனிதன் ஜெபிக்க முடியாததாலும், அதைப் பற்றிய சில கருத்துக்களைக் கீழே பார்ப்போம்.
முதலாவது நாம் கவனிக்க வேண்டியது: அப்போஸ்தலராகிய பவுலடியார், முக்கியஸ்தராயும், ஆதி சபையைக் கட்டுகிறவர்களாயும், மூன்றாம் வானம் வரை சென்றவர்களாயிருந்த போதிலும், நாம் இன்னின்ன காரியத்திற்காக ஜெபிக்க வேண்டுமென்று அறியாதவர்களாயிருக்கிறோம் என்று கூறியுள்ளதைத்தான்.
பரிசுத்த ஆவியானவரின் துணையின்றி நாம் எக்காரியங்களுக்காக, யாரிடம், யார் மூலம் ஜெபிக்க வேண்டுமென்று அறிந்துகொள்ளவே முடியாது. கிறிஸ்துவின் மூலம் தேவனோடு நாம் ஐக்கியப்பட முயற்சிப்பதா? விசுவாசத்திற்காகவா, கிருபையினால் அங்கீகாரம் பெறுவதற்காகவா, இருதய சுத்திகரிப்பிற்காகவா, எதற்காக ஜெபிப்பது? இதற்கு விடையைத் தெரிந்துகொள்ளவே முடியாது. ஏனெனில், "மனுஷனிலுள்ள ஆவியேயன்றி எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படியே, தேவனுடைய ஆவியேயன்றி ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்" (1 கொரிந்தியர் 2:11). இவ்விடத்தில் அப்போஸ்தலர் உலகம் அறியாத உள்ளானவற்றையும் ஆவிக்குரியவைகளையும் பற்றிப் பேசுகிறார் (ஏசாயா 29:11).
மேலும், ஆவியானவரின் உதவியின்றி, ஜெபத்தின் உண்மைக் கருத்தை நாம் புரிந்துகொள்ள முடியாது. எனவேதான், நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியது இன்னதென்று அறியாமல் இருக்கிறோம் என்று அப். பவுல் கூறுகிறார். ஆனால், ஆவியானவர் வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ஆவியானவர் உதவிசெய்யும் பொழுது, அப்போஸ்தலரால் வல்லமையோடு ஜெபிக்கவும் ஊழியம் செய்யவும் முடிந்தது.
நமக
"நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்" (யாக்கோபு 4:3). நாம் ஜெபித்துக்கொண்டிருக்கும் பொழுது, ஆண்டவர் நம் இருதயத்தையும் அதன் ஆழத்தையும் ஆராய்ந்து பார்க்கிறார் (1 யோவான் 5:14). அப்படிப் பார்க்கிறவர் ஆவியானவர் எடுத்துரைப்பதை மட்டுமே ஏற்றுக்கொள்ளுகிறார். ஏனெனில், ஆவியானவர் மட்டுமே பரிசுத்தவான்களுக்காக தேவ சித்தப்படி வேண்டிக்கொள்ளுகிறார் என்று அவருக்குத் தெரியும். தேவ சித்தப்படி இருப்பதை மட்டும் அவர் ஏற்றுக்கொள்ளுகிறார். ஆவியானவர் மட்டுமே அதை நமக்கு வெளிப்படுத்தக் கூடும்.
நமக்கு எத்தனை ஜெபப் புத்தகங்கள் இருந்தாலும், ஆவியானவர் ஒருவர் தவிர உண்மையாக ஜெபிக்க அவை உதவி செய்யமுடியாது. ஏனெனில், நமது பலவீனங்களே நமக்குத் தடையாக உள்ளன. அவை எவையென்று பார்ப்போம்.
முதலாவது பலவீனம்
ஆவியானவரின் துணையின்றி, கடவுளைப் பற்றியோ, கிறிஸ்துவைப் பற்றியோ, நற்பேறுகளைப் பற்றியோ ஒரு சரியான எண்ணம் ஒருவனுக்கு உண்டாகாது. 'ஏனெனில் துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே' (சங்கீதம் 10:4). மேலும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் கூறப்பட்டிருக்கிறது (ஆதியாகமம் 6:5; 8:21). நாம் கடவுளைப் பற்றிச் சரியான எண்ணம் கொள்ள இயலாமையால் யாரிடம், யார் மூலம், எதற்காக ஜெபிக்க வேண்டுமென்று அறியமுடியாது இருக்கின்றோம். ஆவியானவரின் துணையோடு மட்டுமே அதை அறிந்துகொள்ள முடியும்.
ஆவியானவரே இக்காரியங்களை ஆத்துமாக்களுக்கு வெளிப்படுத்துகின்றார். கிறிஸ்து தமது சீஷர்களுக்கு ஆவியானவரைத் தாம் அனுப்பப்போவதைப் பற்றிச் சொல்லும்பொழுது, "அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்" என்றார் (யோவான் 16:14). அவர் இப்படிச் சொல்வது போல் நமக்குத் தெரிகிறது: "இயற்கையாக நீங்கள் இருளாயிருப்பதனால், என் காரியங்களை அறிந்துகொள்ள முடியாது. நீங்கள் இப்படி அல்லது அப்படி என்று முயற்சித்தாலும், உங்கள் அறியாமை நீங்குவதில்லை. உங்கள் இருதயத்தை ஒரு திரை மூடியிருக்கிறது. அதை யாருமே எடுத்துப்போட முடியாது. ஆவியானவர் மட்டுமே ஆவிக்குரிய அறிவைப் புகட்ட முடியும்".
சரியான ஜெபம் என்பது ஆவியானவரின் வெளிச்சத்தில் ஆத்துமா காண்கிற ஒரு காட்சியாகும்; மற்ற ஜெபங்கள் எல்லாம் பகட்டாகவோ அல்லது கீழானவையாகவோ காணப்படுகின்றன. ஏனெனில், அவற்றில் இருதயமும் நாவும் ஒரே திசையில் செல்வதில்லை. ஆவியானவர் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்யாவிடில் அவை ஒரே திசையில் செல்லவும் முடியாது (மாற்கு 7-ம் அதிகாரம்; நீதிமொழிகள் 28:9; ஏசாயா 29:13). எனவேதான் தாவீது தேவனது சமூகத்தில் அவரைத் தொழுதுகொள்ள வரும் பொழுது, "ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உமது புகழை அறிவிக்கும்" என்று சொல்லுகிறார். ஆவியானவரின் உதவியின்றி ஒரு புகழ் வார்த்தை கூடப் பேச முடிவதில்லை. எனவேதான், 'நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியது இன்னதென்று அறியாமலிருக்கிறோம்' என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது பலவீனம்
ஆவியோடு ஜெபிக்கும் பொழுதுதான் நம்முடைய ஜெபம் பலனுள்ளதாயிருக்கும். இல்லையெனில், மக்கள் பார்வைக்கு அறிவாளிகளாகக் காணப்படுவதுப் போல, மாய்மாலமாயும் அனலற்றவர்களாயும் ஜெபத்தில் மிகக் கேவலமாய்க் காணப்படுகிறார்கள். எனவே அவர்களும், அவர்கள் ஜெபங்களும் தேவனுடைய பார்வையில் அருவருப்பானவைகளாகக் காணப்படுகின்றன (மத்தேயு 23:14; மாற்கு 12:40; லூக்கா 18:11,12; ஏசாயா 58:2,3).
ஜெபத்தின் தொனி அல்லது சத்தத்தை வைத்து, அல்லது ஜெபிக்கிறவனுடைய பிரியம், ஆர்வம் ஆகியவற்றை வைத்து ஜெபத்தை தேவன் மதிப்பதில்லை. தனது ஒரு வார்த்தையைக் கூடக் காப்பாற்ற முடியாத பொல்லாங்கு நிறைந்த மனிதனிடமிருந்து தேவனுக்கு உகந்த ஜெபம் ஏறெடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. எனவே, பரிசேயரும் அவர்களது ஜெபங்களும் நிராகரிக்கப்பட்டன. அவர்களால் திறமையாகவும், நீண்ட நேரமும்கூட ஜெபிக்க முடியும். ஆனால் அவர்களுக்குக் கிறிஸ்துவினுடைய ஆவியானவரின் உதவி கிடைப்பதில்லை. எனவே, தங்கள் சொந்த பலவீனங்களோடு செய்கின்ற ஜெபம், தேவனோடு உள்ள உண்மையோடும், அறிவாற்றலோடும், அன்போடும் செய்யப்படுகின்ற ஜெபத்தைப் போன்று ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பரலோகத்திற்குப் போய்ச் சேருகின்ற ஜெபம், ஆவியானவரின் பெலத்தோடு அனுப்பப்பட வேண்டும்.
மூன்றாவது பலவீனம்
ஆவியானவர் மட்டுமே நம்முடைய உண்மையான, உள்ளான இழிவான நிலையை நமக்குக் காட்டமுடியும். 'பேசும் வெறும் பேச்சுத்தான்' என்ற கூற்றுக்கிணங்க, நம்முடைய இழிவான நிலையை உணராத மனதில் எழுகின்ற ஜெபம் ஒரு வாய்ச் ஜெபமாகவே அமையும். அநேக ஜெபிக்கும் மக்களின் உள்ளங்களில் சாபத்திற்குரிய மாய்மாலமே காணப்படுகிறது. ஏனெனில், தங்கள் பாவத் தன்மையை உணருகின்ற மனநிலை இன்னும் அவர்களில் உருவாகவில்லை. ஆவியானவர் கிரியை செய்தால், நமது பாசமான தன்மையை மிக அழகாக, தெளிவாக, அது எங்கே இருக்கிறது, அதற்கு மாற்று என்ன, அது நாம் தாங்க முடியாத நிலை என்றெல்லாம் எடுத்துக்காட்டுவார். நம் பாவத்தையும் இழிவான தன்மையையும் திறம்படச் சுட்டிக்காட்டக் கூடியவர் ஆவியானவரே. அதன் மூலம் நம் ஆத்துமா தேவனிடம் பரிவோடும், உணர்வோடும், ஆற்றலோடும் அவர் வார்த்தைக்கிணங்க ஜெபிக்கக் கூடிய நிலையை அடைகின்றது (யோவான் 16:7-9).
நான்காவது பலவீனம்
மக்கள் தங்கள் பாவங்களை ஆவியானவரின் துணையின்றிப் பார்க்கும்பொழுது, நம்மை மீட்ட கிறிஸ்துவிடம் ஜெபிக்க முன்வர மாட்டார்கள். ஆவியானவரின் உதவி இல்லாதிருந்தால், அவர்கள் காயீன், யூதாஸ் காரியோத்தைப் போலக் கடவுள் சமூகத்திலிருந்து ஓடிவிடுவார்கள். ஒரு மனிதன் தன் பாவ நிலையையும், தேவ சாபத்தையும் உணரும் பொழுதுகூட ஜெபிக்க முன்வரமாட்டான். அவனுடைய இருதயம் அவனிடம், "நம்பிக்கை இல்லை, தேவனைத் தேடுவது வீண்" என்று சொல்லும் (எரேமியா 2:25; 18:12). நான் மிகவும் இழிவானவன், கேவலமானவன், மதிப்பிட முடியாத அளவுக்குச் சாபத்திற்குரியவன் என்று அவன் நினைக்கலாம்! அந்நேரத்தில்தான் ஆவியானவர் நம்மிடம் வருகிறார். ஆத்துமாவை அமைதிப்படுத்தி, நம் முகத்தை ஆண்டவருக்கு நேராகத் திருப்புகிறார். கடவுளிடமிருந்து சிறிதளவு இரக்கத்தை நமது இருதயத்தில் வரப்பண்ணி, தேவனிடம் நாம் தைரியமாக நெருங்கி வர நம்மை ஏவுகிறார். எனவேதான் ஆவியானவருக்கு 'தேற்றரவாளன்' என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது (யோவான் 14:26).
ஐந்தாவது பலவீனம்
'ஆவியானவருக்குள்' அல்லது 'ஆவியானவரோடு' என்ற நிலை நமக்கு ஏற்பட வேண்டும். ஏனெனில் அவரின்றி, ஒருவருக்கும் தேவனிடம் வருவதற்கு வழி தெரிவதில்லை. நாம் குமாரன் மூலமாகத் தேவனிடம் வந்திருக்கிறோம் என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் ஆவியானவரின் உதவியின்றித் தேவனிடம் வருவது என்பது ஆயிரத்தில் ஒன்று என்று சொல்லக்கூடிய அளவுக்கு, சாத்தியமற்ற காரியம் என்று கூறலாம். "அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்" (1 கொரிந்தியர் 2:10). தேவனிடம் வருகிற வழியை மட்டுமல்ல, அவரிடம் எதை வாஞ்சிக்க வேண்டுமென்றும் ஆவியானவர் நமக்குக் காண்பிக்கிறார். ஆகையால்தான் மோசே, ''நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்" என்று சொல்லுகிறார் (யாத்திராகமம் 33:13). ஆவியானவர் 'என்னுடையதிலிருந்து எடுத்து உங்களுக்கு அறிவிப்பார்' என்று இயேசு கூறியுள்ளார் (யோவான் 16:14).
ஆறாவது பலவீனம்
ஆவியானவரின் துணையின்றி ஒருவன் தன் இழிவான நிலையை அறிந்தாலும், அவரிடம் வருகிறதற்கான வழியை அறிந்திருந்தாலும், தேவன், கிறிஸ்து, இரக்கம் இவற்றில் அவனுக்குப் பங்கில்லை. ஒரு பாவத்திற்குரிய மனிதன், தன் பாவ உணர்வோடு, கடவுளது கோபத்தை உணர்ந்தவனாக, அவரிடம் வந்து 'பிதாவே' என்று அழைப்பது உலகிலேயே மிகப் பெரிய கடினமான காரியமாகும். அதோடு மாய்மாலமான கிறிஸ்தவனுக்கு இது மிகக் கடினமான காரியம். கடவுள் தனது தந்தை என்று அவனால் கூற முடிவதில்லை. அவ்வாறு கடவுளைத் தன்னால் அழைக்கத் தைரியமில்லை என்று கூறலாம். எனவேதான் ஆவியானவர் மக்கள் இருதயங்களில் அனுப்பப்பட்டு, தேவனை 'அப்பா, பிதாவே' என்று கூப்பிடப் பண்ணவேண்டும்.
மனித சக்தியால் செய்ய முடியாத ஒன்றை ஆவியானவரின் உதவியால் நாம் செய்ய முடிகின்றது (கலாத்தியர் 4:6). ஆவியானவரின் உதவிகொண்டுதான் நாம் தேவனது பிள்ளைகளென்றும், மறுபிறப்பின் அனுபவத்தையும் அறிந்துகொள்ள முடியும். ஆவியானவரின் துணை கொண்டுதான், இரக்கத்தின் கிரியை தன்னில் செய்யப்பட்டிருக்கிறது என்று ஆத்துமா நம்பிக்கையோடு அறிந்துகொள்ளுகிறது. இதுதான் கடவுளை நாம் சரியாக அறிந்து கொண்டிருப்பதற்கு அடையாளம்.
ஏதோ கர்த்தரின் ஜெபத்தைப் பாராமல் படிப்பது, சொல்வது என்பது ஒரு அர்த்தமற்ற காரியமாகும். ஜெபத்தின் ஜீவன் இதில்தான் இருக்கிறது. அதாவது 'ஆவியானவரில்' அல்லது 'ஆவியானவரோடு' என்றிருத்தலாகும். அப்படி இருக்கும்பொழுதுதான் அவன் பாவ உணர்வோடு தேவனிடம் வந்து இரக்கத்திற்காக, ஆவியானவரின் பெலத்தோடு, 'பிதாவே' என்று கதற முடிகின்றது. அந்த 'பிதாவே' என்ற ஒரு வார்த்தை, விசுவாசத்தோடு சொல்லப்படும்பொழுது, மக்கள் சொல்லுகின்ற அர்த்தமற்ற, அனலற்ற ஆயிரம் ஜெபங்களை விட மிக விலையுயர்ந்ததாக அமைகின்றது.
இதைப் பற்றி நாம் நினைப்பதே கிடையாது. பிள்ளைகளுக்குக் கர்த்தரின் ஜெபம், விசுவாசப் பிரமாணம் இவற்றைக் கற்றுக்கொடுக்கிறோம். ஆனால் அவற்றின் உண்மை அர்த்தத்தை அவர்கள் உணர்வதில்லை. தங்கள் பாவ நிலையையும், கிறிஸ்துவின் மூலம் கடவுளிடம் வருவது இன்னதென்பதையும் உணராமல் இருக்கிறார்கள்.
ஆ! உன்னுடைய அவல நிலையை, பாவத்தின் தன்மையை முதலில் உணர்ந்துகொள்! உன்னுடைய குருட்டாட்டத்தையும், அறிவின்மையையும் காட்டும்படி அவரிடம் கதறி அழு. அவரை 'பிதாவே' என்றழைப்பதற்கு முன் இதைச் செய். பாவ உணர்வடைவதற்கு முன், கடவுளைப் பிதாவே என்றழைப்பது நாம் நமக்குச் சொந்தமல்லாத ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வது போலாகும். நீங்கள் 'பிதாவே' என்றழைக்கிறீர்கள். ஆனால், கடவுள் நீங்கள் தேவ தூஷணம் சொல்வதாகச் சொல்கிறார். கடவுள் சொல்கிறார்: "யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்றும் பொய்சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில்..." (வெளிப்படுத்தல் 3:9; 2:9).
ஒரு பாவி, தன்னைப் பரிசுத்தவானைப் போல நடிக்கும் பொழுது அவனை அதிக சாபம் சேரும். யூதர் இயேசுவிடம் யோவான் 8-ல் சொன்னது போல இருக்கும். அவர்களது மாய்மாலத்தை இயேசு அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார் (யோவான் 8:41-45). இன்றைக்கும்கூட விபசாரக்காரர், திருடர், குடிகாரர், தவறாய் ஆணையிடுகிறவர், பொய்யர் போன்றவர்கள் ஆலயத்திற்கு வந்து தங்கள் தேவதூஷணத் தொண்டைகளினாலும், மாய்மால இருதயங்களினாலும், 'பிதாவே!' என்று அழைக்கும்பொழுது நீதிமான்களைப் போல் காட்சியளிக்கின்றனர். ஒவ்வொரு தடவையும் இவ்வாறு செய்யும்பொழுது தேவதூஷணம் சொல்லுகிறார்கள். அதே சமயம் நேர்மையாக நடக்கிறவர்களை நாம் மதிப்பதில்லை. ஆனால் மாய்மாலங்களோடு இருப்பவர்களை நேர்மையானவர்கள், தேவ மக்களென்று நாம் தவறாக நினைக்கிறோம். உண்மையான தேவ மக்களை, 'சண்டைக்காரர்கள், எதிர்க்கின்றவர்கள், கோபிக்கிறவர்கள்' என்றும் நினைக்கிறோம்.
நான் அதைச் சற்று விளக்கமாகக் கூற விரும்புகிறேன்:
i) நம்முடைய முக்கிய ஜெபம், கர்த்தருடைய ஜெபமாக இருக்கலாம். அதன் முதல் வார்த்தைகளாகிய 'பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே' என்பதின் உண்மை அர்த்தம் நமக்குத் தெரியுமா? மற்ற பரிசுத்தவான்களோடு சேர்ந்து நீ, ‘எங்கள் பிதாவே' என்று கூப்பிட முடிகிறதா? உனக்கு உண்மையில் மறுபிறப்பின் அனுபவம் உண்டா? புத்திர சுவிகாரத்தின் ஆவியை நீ பெற்றிருக்கிறாயா? கிறிஸ்துவில் நீ உன்னைப் பார்த்து, கிறிஸ்துவின் அவயமாகத் தேவனிடம் வர முடிகின்றதா? இதையெல்லாம் அறியாதவாறு 'எங்கள் பிதாவே' என்று சொல்லுகிறாயா? உன் தகப்பன் பிசாசானவன் அல்லவா? (யோவான் 8:44). மாம்சத்தின் கிரியைகளை நீ நிறைவேற்றவில்லையா? ஆனாலும் தேவனைப் பார்த்து 'எங்கள் பிதாவே' என்று சொல்லுகிறாய். தேவ பிள்ளைகளை நீ துன்பப்படுத்துகிறவன் அல்லவா? அநேக தடவைகளில் நீ அவர்களைத் துன்புறுத்தவில்லையா? இருந்தபோதிலும் உன்னுடைய இழிவான தொண்டையிலிருந்து 'எங்கள் பிதாவே' என்று கூப்பிடுகிறாய். நீ துன்புறுத்துகிற, வெறுக்கிற மக்களின் தகப்பன் அவர். சாத்தானும் தேவ சமூகத்தில் வந்து நிற்பதற்குச் சமானமாக இது காணப்படுகிறது (யோபு 1:6-7).
ii) மேலும், உன் இருதயத்தில் 'உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக' என்று சொல்லுகிறாயா? உண்மையோடும் நேர்மையோடும் அவருடைய நாமம், பரிசுத்தம், மகிமை இவற்றின் முன்னேற்றத்திற்காக முயற்சிக்கிறாயா? உன் இருதயமும், பேச்சும் இதற்கு ஒத்திருக்கிறதா? தேவன் கட்டளையிட்டு உணர்த்துகிற எல்லாவற்றிலும், நீதியோடு கிறிஸ்துவைப் பின்பற்ற முயற்சிக்கிறாயா? கடவுளுடைய அங்கீகாரம் பெற்று அவரைப் பிதாவே என்றழைக்கும்பொழுது, உன் வாழ்க்கை இவ்வாறு அமையும். மற்றபடி தேவனைப் பற்றிய எண்ணங்கள் உன் இருதயத்தில் இடம் பெறாது. உன் நாவினால் சொல்வதை உன் செய்கையில் மறுதலிப்பதனால், நீயே உன்னை ஒரு சபிக்கப்பட்ட, மாய்மாலமான மனிதன் என்பதை உணர்ந்துகொள்வாய்.
iii) மேலும், 'உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக' என்று நீ சொல்லுகிறாயா? இல்லை. வெளிப்படையாக நீ அப்படிச் சொன்னபோதிலும், உண்மையில் அவர் வானத்தில் வரும்பொழுது, எக்காளம் தொனிக்கும்பொழுது, மரித்தோர் எழுந்திருக்கும்பொழுது, நீ உன் கிரியைகளுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியபொழுது, நீ ஓடி ஒளிந்துகொள்ள முயற்சிப்பாய் அல்லவா? இவ்விதமான எண்ணங்கள் கூட உனக்கு வெறுப்பாயிருக்கிறது அல்லவா? தேவனுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போலப் பூமியிலே செய்யப்பட்டால், நீ பிழைப்பது எப்படி?
பரலோகத்தில் தேவனுக்கு எதிர்ப்பே கிடையாது. அவ்வாறே பூலோகத்தில் ஏற்பட்டால், நீ நரகத்திற்கல்லவா அனுப்பப்பட வேண்டும்? இதைப் போலவே கர்த்தருடைய ஜெபத்தின் மற்ற பகுதிகளைக் கூட நீ வாசித்துப் புரிந்துகொள்ளலாம். வெளிப்படையாக மட்டும் அதை அறிக்கை செய்து, தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளாமல், மாய்மாலமாக ஜீவித்துக் கொண்டிருக்கிற மக்களின் நிலையைச் சிந்தித்துப் பார். அப்படிப்பட்டவர்களில் நீயும் ஒருவனா? தேவனே இதை உனக்குத் தெளிவாக்கிப் போதிக்க வேண்டுகிறேன். எதையும் அவசரப்பட்டு, புத்தியில்லாமல் செய்ய வேண்டாம்; முக்கியமாக உன் வார்த்தைகளைக் குறித்து எச்சரிக்கையாயிரு. எனவேதான், ஞானி இவ்வாறு சொல்லுகிறார்: "நீ மனம் பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு" (பிரசங்கி 5:2).
ஏழாவது பலவீனம்
ஆவியானவரோடு சேர்ந்து ஜெபித்தால்தான் நம் ஜெபம் கேட்கப்படும். ஏனெனில், ஆவியானவர்தாம் ஆத்துமாவை அல்லது இருதயத்தைத் தேவனிடம் உயர்த்திக் காட்ட முடியும். ''மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்" (நீதிமொழிகள் 16:1). தேவ சம்பந்தப்பட்ட எந்தக் காரியத்திலும், குறிப்பாக ஜெபத்தில், இருதயமும் நாவும் ஒரே திசையில் செல்ல வேண்டுமானால், அது தூய ஆவியானவரால் பக்குவப்படுத்தப்பட வேண்டும். நாவானது தானாகச் செயல்படக் கூடியது. பயமின்றி அல்லது ஞானமின்றிகூடப் பேசத் துணிந்துவிடும். தூய ஆவியானவரால் ஆளப்படுகின்ற இருதயத்தோடு இணைந்து செயல்படும்பொழுது தேவன் விரும்புகிற, கட்டளையிடுகின்ற காரியங்களையே நாவானது பேசும்.
தாவீது ராஜா, 'கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்' என்று கூறுகிறார் (சங்கீதம் 25:1). பரிசுத்த ஆவியின் ஒத்தாசையின்றி ஒருவன் தேவனிடம் வந்து விண்ணப்பிக்க முடியாது. எனவேதான் தேவனது ஆவியானவர் 'விண்ணப்பங்களின் ஆவி' என்று அழைக்கப்படுகிறார் (சகரியா 12:10). ஆவியானவர் விண்ணப்பம் செய்ய நமக்கு உதவி செய்கிறார். எனவே பவுல், "வேண்டுதலோடும், விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணி" என்று கூறுகிறார் (எபேசியர் 6:18). எனவேதான், 'ஆவியோடு ஜெபித்தல்' என்ற தலைப்பு கொடுத்துள்ளேன்.
நம் முழு இருதயமும் ஜெபத்தில் இராவிட்டால், அது உயிரில்லாத வெறும் சத்தமாகவே இருக்கும்; ஆவியினால் உயர்த்தப்படாத எந்த இருதயமும் கடவுளிடம் ஜெபிக்க முன்வராது.
எட்டாவது பலவீனம்
எவ்வாறு இருதயமானது ஆவியானவரால் ஜெபத்தில் உயர்த்தப்பட வேண்டுமோ, அப்படியே அங்கே ஆவியானரால் நிறுத்திவைக்கப்படவும் வேண்டும். அதுதான் சரியாக ஜெபிக்கும் முறையாகும். முதலாவது நான் நினைப்பது என்னவெனில், ஜெபப் புத்தகங்கள் மூலம் நம் இருதயத்தைச் சரியான நிலையில் வைத்துக்கொள்ள இயலாது. ஏனெனில் அது கடவுளின் வேலை. இரண்டாவது, அவை இருதயத்தை அதே நிலையில் வைத்திருக்கவும் இயலாது. மோசேயினால் தனது கையை நீண்ட நேரம் ஏறெடுக்க இயலாதிருந்தது என்று வாசிக்கிறோம் (யாத்திராகமம் 17:12). அப்படியானால் இருதயத்தை அதே நிலையில் வைத்திருப்பது எத்தனை கடினம் என்று நினைத்துப் பாருங்கள்!
இவ்வாறான மேலெழுந்தவாரியான, கவலையீனமான ஜெபத்தைப் பார்த்து ஆண்டவர் மிகவும் வருத்தப்படுகிறார். "வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது" (ஏசாயா 29:13). மேலும், "மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாய்ப் போதித்து" என்று அப்படிப்பட்டவர்களைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது (மத்தேயு 15:9). நான் ஜெபத்தைப் பற்றி என் சொந்த அனுபவத்தைச் சொல்ல விழைகின்றேன். ஒருவேளை அக்கருத்துக்களை வைத்து நீங்கள் என்னைப் பற்றி விபரீதமாகக்கூட நினைக்கலாம். ஆனால் நான் சொல்பவை முற்றிலும் உண்மையென்று அறிவேன்.
நான் ஜெபம் செய்ய ஆரம்பிக்கும்பொழுது என் இருதயம் தேவனிடம் வர மறுக்கின்றது, அங்கே தன் கவனத்தைச் செலுத்த மறுக்கின்றது. ஆகையால் நான் முதலில் செய்வது, கிறிஸ்துவின் மூலமாகத் தம்மிடத்தில் என் இருதயத்தைக் கொண்டுவரும்படி தேவனிடம் ஜெபிப்பேன். அதன்பிறகு அவ்விடத்திலே என் இருதயத்தை வைத்திருக்குமாறு தேவனைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வேன். அநேக தடவைகளில் எனக்கு எவற்றிற்காக ஜெபிக்க வேண்டுமென்றே தெரியாதிருந்தது. அப்படிப்பட்ட குருடனாய், அறிவீனனாய் இருந்திருக்கிறேன். ஆனால், அவர் கிருபை எத்தனை அளவிறந்தது! அவரே நமக்குப் போதிக்கிறவர் (சங்கீதம் 86:11).
ஜெப நேரத்தில் நமது இருதயங்களில் அநேக கவனச்சிதறல்களும் குறைகளும் இருப்பதை நாம் உணருகிறோம். தேவனுடைய சமூகத்திலிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ள இருதயத்தில் அநேக பக்கவழிகளும், பிரிந்து செல்லும் பாதைகளும் இருக்கின்றன என்பதை நாம் அறிந்துகொள்ளவே முடியாது. எவ்வளவு பெருமை, எத்தனை மாய்மாலம் இருதயத்தில் இருக்கின்றது என்று நாம் அறிந்துகொள்ளவே முடியாது. ஆவியானவரின் துணையில்லாவிட்டால், ஆத்துமாவுக்கும் தேவனுக்கும் ஜெபத்தில் சரியான உறவு இருக்க முடியாது. ஆனால், ஆத்துமாவில் ஆவியானவர் வரும்பொழுது மட்டுமே ஜெபம் உண்மை ஜெபமாக மாறுகின்றது. மற்றபடி அப்படி இருப்பதில்லை.
ஒன்பதாவது பலவீனம்
மேலும், நாம் ஆவியானவரின் உதவியோடும் பெலத்தோடும் ஜெபித்தால்தான், நாம் முறையான வகையில் ஜெபிக்கிறோம் என்று அறிந்துகொள்ளலாம். ஆவியானவரின் துணையின்றி, இருதயம் உத்தமத்தோடும் பிரியத்தோடும் ஜெபிக்க இயலாது; பெருமூச்சுகளோடும், ஏக்கத்தோடும் தனது இருதயத்தைக் கடவுளிடம் ஊற்றிவிட இயலாது. ஜெபத்தில் ஒருவனுடைய வாய் முக்கியமல்ல. அவனுடைய இருதயம் பிரியத்தோடு, வாஞ்சையோடு இருந்தாலும், தன்னுடைய விருப்பத்தை வெளிக்கொணர முடிவதில்லை. அவனுடைய விருப்பங்கள் பலவாறாக, பெலமுள்ளவையாக, வல்லமையுள்ளவையாக இருந்தாலும், இருதயத்திலிருந்து வருகிற வார்த்தைகளாலும், கண்ணீராலும், பெருமூச்சுகளாலும் அவ்விருப்பங்களைச் சரிவர வெளிக்கொணர முடிவதில்லை. ஏனெனில், "அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். அவரே நமக்காக வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார்" (ரோமர் 8:26).
வெறும் வார்த்தைகளாலான ஜெபம் ஒரு பரிதாபமான ஜெபம். உண்மையாகத் தேவனிடம் ஜெபிக்கிற மனிதன் எவனும் தன் விருப்பத்தை, பிரியத்தை, தன் வாஞ்சையை, வார்த்தையின் மூலமோ அல்லது எழுத்தின் மூலமோ வெளியிட முடிவதில்லை.
மிக அருமையான ஜெபங்கள் வார்த்தைகளல்ல, வெறும் பெருமூச்சுகளாகவே இருக்கும். ஜெபத்தில் அடங்கியிருக்கின்ற இருதயத்தை, ஜீவனை, ஆவியை, வார்த்தையில் வெளிப்படுத்தும்பொழுது ஜெபம் ஆழமற்ற, சக்தியற்றதாகக் காணப்படுகிறது. மோசே எகிப்தை விட்டு வெளியேறி வந்து, பார்வோனால் விரட்டப்பட்டும் இஸ்ரவேலரால் நிந்திக்கப்பட்டும் இருந்த சமயம், அவன் தேவனை நோக்கி முறையிட்டான் (யாத்திராகமம் 14:15). உண்மையிலே, அவர் தன் ஆத்துமாவில் பெருமூச்சுகளோடும், அழுகையோடும், ஆவியிலே விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். மேலும், 'தேவன் ஆவிகளுக்குத் தேவனாயிருக்கிறார்' என்று பார்க்கிறோம் (எண்ணாகமம் 16:22). அதோடு, தேவன் இருதயத்தைப் பார்க்கிறார் என்றும் நாம் அறியவேண்டும் (1 சாமுவேல் 16:7).
தேவன் நமக்குக் காட்டுகின்ற ஏதாவது ஒரு வேலையை நாம் செய்ய ஆரம்பிக்கும் கட்டத்தில், அதிகக் கடினமாகவே இருப்பதைக் காண்கிறோம். ஏனெனில் மனிதராக நமது சுய பெலத்தில் அதைச் செய்ய முடிவதில்லை. ஆனால் மேற்கூறிய ஜெபம் என்பது ஒரு கடமை மட்டுமல்ல, அது மிகத் தலையாய கடமையாக இருக்கின்றது. ஆகையால்தான் பவுலடியார் 'நான் ஆவியோடு விண்ணப்பம் செய்வேன்' என்று சொல்லும்பொழுது, ஆவியானவரின் துணையின்றி நாம் ஜெபிக்க முடியாது என்பதை நன்றாக உணர்ந்திருந்தார். மற்ற மனிதர் எழுதினதையோ, பேசினதை வைத்தோ நாம் ஜெபித்தல் என்பது கூடாத காரியம் என்பதை அவர் அறிந்திருந்தார்.
பத்தாவது பலவீனம்
ஆவியானவரின் துணையில்லாவிட்டால், நாம் ஜெபிக்கின்ற கடமையில் தவறிவிடுவோம். அதைச் செய்தாலும்கூட இடையில் சோர்ந்துவிடுவோம். ஜெபம் என்பது தேவனின் சட்டமும்கூட என்று அறிதல் அவசியம். இவ்வுலக வாழ்க்கை முழுவதும் தவறாது அதை நாம் கடைப்பிடித்தல் தேவை. ஏற்கனவே நாம் பார்த்ததுபோல, ஒருவனுடைய இருதயத்தை ஜெபத்தில் கொண்டுவருவதும், அதை அங்கேயே நிறுத்திவைப்பதும் ஆவியானவரின் துணையின்றி மிகக் கடினம் என்று கவனித்தோம்.
எனவே இயேசு, 'சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும்' (லூக்கா 18:1) என்று கூறியுள்ளார். மேலும் 'மாயக்காரன் எப்பொழுதும் தொழுதுகொண்டிருப்பானோ' என்று (யோபு 27:10)-ல் பார்க்கிறோம். அப்படி அவன் ஜெபித்தாலும் நீண்ட ஜெபம் செய்து, தான் ஒரு மாய்மாலக்காரன் என்று காட்டுவான் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 23:14).
உண்மை ஜெபத்தின் வல்லமையை விட்டுவிட்டு அதை வெறும் சடங்காச்சாரமாகச் செய்வது அநேகருக்கு மிக எளிதாக இருக்கும். ஆனால் ஜெபத்தை ஜீவனோடு, ஆவியோடு, ஆவியானவரின் துணையின்றி ஏறெடுப்பது ஒரு மனிதனுக்கு மிகக் கடினமாயிருக்கும். தேவன் காதுகள் கேட்கத்தக்கதாக ஜெபிப்பது ஒரு மனிதனுக்கு மிகக் கடினமாயிருக்கும். யாக்கோபு ஜெபிக்க ஆரம்பித்தது மட்டுமல்ல, பிடிவாதமாகத் தொடர்ந்து அதில் நிலைத்து நின்றார் என்று (ஆதியாகமம் 32:26)-ல் பார்க்கிறோம். 'ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்' என்று (எபேசியர் 2:18)-ல் கூறப்பட்டிருக்கிறது.
யூதா நிருபத்தில், கெட்ட மனிதர் மீது தேவனது நியாயத்தீர்ப்பு வரும்பொழுது, பரிசுத்தவான்கள் எங்ஙனம் சுவிசேஷத்தின் மீதுள்ள விசுவாசத்தில் உறுதியாய்ப் பற்றிக்கொண்டு நிற்கவேண்டுமென்பதைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. "உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி" (யூதா 20) என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படி நிலைநிற்பவர்களுக்கு மட்டுமே நித்திய பரலோக வாழ்வு உண்டு என்று நாம் அறியவேண்டும். நிலைநிற்க வேண்டுமானால், ஆவியில் ஜெபிக்க வேண்டும்.
சாத்தானும், அந்திக்கிறிஸ்துவும் உலகத்தை ஏமாற்றுவது எப்படியெனில், மக்கள் தமது கடமைகளை, ஜெபத்தை, பிரசங்கத்தை செய்வதை, கேட்பதை, ஒரு வேஷமாக, ஒரு சடங்காச்சாரமாகவே செய்யத் தூண்டுவதன் மூலமேயாகும். எனவேதான் பவுலடியார் தீமோத்தேயுவுக்கு எழுதும்பொழுது, 'கடைசிக் காலத்தில் மக்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு' (2 தீமோத்தேயு 3:5) என்று கூறுகிறார்.
அப்போஸ்தலனாகிய பவுல், ஆவியோடு விண்ணப்பித்தலுக்கும், கருத்தோடும் விண்ணப்பித்தலுக்குமுள்ள வித்தியாசத்தை அறிந்திருந்தார். எனவேதான், "நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், நான் கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன்" என்று கூறுகிறார். இதற்குக் காரணம், கொரிந்து சபையில் மக்கள் தங்கள் நன்மைக்கென்று மட்டும் காரியங்களை (ஜெபத்தை) செய்தார்களேயொழிய, மற்றவர்கள் நன்மையைப்பற்றிக் கருதவேயில்லை. எனவேதான், நான் இதைப்பற்றி எழுத விரும்புகிறேன். அநேகருக்குப் பல பாஷை வரங்கள் இருந்தும், சுயமேன்மைக்காக அல்லாமல் சபையின் பக்திவிருத்திக்காகத் தங்கள் வரங்களை மக்கள் உபயோகிக்க முன்வர வேண்டுமென்று வலியுறுத்துவதற்காகவே இவ்வதிகாரத்தைப் பவுலடியார் எழுதியுள்ளார். புரியாத ஒரு பாஷையில் நான் ஜெபித்தால், அதனால் எனக்கும் மற்றவர்களுக்கும் பிரயோஜனம் இருக்காது (1 கொரிந்தியர் 14:3, 4, 12, 19, 24, 25). எனவே, "நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன்" என்று அப். பவுல் கூறுகிறார்.
இருதயம் ஜெபத்தில் சேர்ந்தே செயல்பட வேண்டியதன் அவசியத்தைப் போலவே, நமது கருத்தும் அதில் சேரவேண்டும். கருத்தோடு செய்யப்படுகின்ற ஜெபமானது, அது இல்லாமல் செய்யப்படுகின்ற ஜெபத்தைவிட அதிக ஆற்றலோடும், பயனுள்ளதாயும் அமையும் என்பது நிச்சயம். எனவேதான், அப். பவுல் கொலோசெயருக்கு எழுதும்பொழுது, "நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும் ஜெபம் பண்ணுகிறோம்" என்று கூறுகிறார் (கொலோசெயர் 1:9). மேலும் எபேசியருக்கு அப். பவுல் எழுதும்பொழுது, "தேவனை அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும், தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்கு அளிக்கத்தக்கதாக" என்று கூறுகிறார் (எபேசியர் 1:17). மேலும், பிலிப்பியருக்கு அவர் எழுதும்பொழுது, "உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும்" (பிலிப்பியர் 1:9) என்று கூறியுள்ளார். சரியான அறிவு, உணர்வு என்பது நம் எல்லா சரீர மற்றும் ஆவிக்குரிய காரியங்களில் நன்மையாகவே அமையும் என்பது நிச்சயம். ஆகவே, இவ்வாறான அறிவு நமக்கு நம் ஜெபத்திலும் மிகத் தேவையானதாக இருக்கின்றது. கருத்தோடு ஜெபித்தல் என்றால் என்ன என்று கீழே பார்ப்போம்.
'கருத்தோடு' என்று கூறும்பொழுது, நம் தாய் மொழியில் ஜெபிப்பதைக் குறிப்பதோடு, நடைமுறையில் அது எவ்வாறு அமைய வேண்டுமென்பதைக் காட்டுவதாகவும் இருத்தல் வேண்டும். பொருத்தமான ஜெபங்களைத் தேவனிடம் ஏறெடுக்க நமக்கு ஆவிக்குரிய அறிவு இருத்தல் வேண்டும்.
அ. கருத்தோடு ஜெபித்தல், ஆவியானவர் நமக்குக் கொடுக்கின்ற அறிவிலிருந்து உண்டாகின்றது. ஒரு மனிதனுக்குப் பாவமன்னிப்பின் அவசியமோ அல்லது நியாயத்தீர்ப்பின் ஆக்கினையிலிருந்து விடுதலையோ வேண்டுமானால், அதை இவ்வகை ஆவிக்குரிய அறிவிலிருந்துதான் நாம் பெற்றுக்கொள்ள முடியும். மற்றபடி, ஒன்று அதை வாஞ்சிக்க மாட்டோம், அல்லது அதைக் குறித்துக் கவலைப்படாமலே இருந்துவிடுவோம். இப்படித்தான் லவோதிக்கேயா சபை காணப்பட்டது என்று வெளிப்படுத்தல் 3:14-ல் வாசிக்கிறோம். அவர்களுக்கு ஆவிக்குரிய கருத்து (அறிவு) இல்லாதிருந்தது. தாங்கள் நிர்ப்பாக்கியரும், பரிதபிக்கப்படத்தக்கவரும், குருடரும், நிர்வாணியுமாயிருப்பதை உணராதிருந்தார்கள். அதனால் அவர்களது ஆராதனை கிறிஸ்துவுக்கு வெறுப்பாயிருந்தது. எனவே, "நான் உன்னை வாந்திபண்ணிப்போடுவேன்" என்று கூறுகிறார் (வெளிப்படுத்தல் 3:16,17). ஆவிக்குரிய அறிவில்லாதவர்களும், மற்றவர்களைப் போல வார்த்தைகளைச் சொல்லலாம். ஆனால், இரண்டிற்கும் எத்தனை வேறுபாடு உள்ளது! ஒருவர் தான் விரும்புவதை ஆவிக்குரிய அறிவோடு சொல்கிறார்; மற்றவர் வெறும் வார்த்தைகளைச் சொல்லுகிறார் என்று அறிதல் வேண்டும்.
ஆ. ஆவிக்குரிய அறிவு, கடவுளது இருதயம் நம் ஆத்துமாவுக்குத் தேவையான காரியங்களைக் கொடுக்கக் காத்திருப்பதை உணர்கிறது. தாவீது, தேவன் தன் மீது கொண்டுள்ள எண்ணங்களை உணர்ந்துகொள்ளுகிறார் (சங்கீதம் 40:5). அதைப்போலவே அந்தக் கானானிய ஸ்திரீயைக் கூடச் சொல்லலாம். அவளுடைய ஆவிக்குரிய அறிவினாலும், விசுவாசத்தினாலும், கிறிஸ்து கூறிய சில வெளிப்படையான கோப வார்த்தைகளுக்குப் பின்னால் மறைந்திருந்த அவருடைய இரக்கத்தையும், சம்மதத்தையும் அறிந்துகொள்ள முடிந்தது. அவளும் கோபமடையக்கூடிய வார்த்தையைக் கேட்டாலும், தான் பெறவிரும்பிய இரக்கத்தைப் பெறும் வரை அங்கிருந்து போகவில்லை (மத்தேயு 15:22-28).
தேவனது இருதயத்தில் இருக்கின்ற, பாவிகளை இரட்சிக்க வேண்டுமென்ற ஆவலை நாம் காணும்பொழுதுதான் நம் ஆத்துமா அவரிடம் வந்து அவரது மன்னிப்பிற்காகக் கெஞ்ச வேண்டி வரும். ஒரு மனிதன் ஒரு சாக்கடையில் நூறு பவுன் மதிப்புள்ள ஒரு முத்தைப் பார்த்தும் அதனுடைய மதிப்பை உணராதிருந்தால், அதை அப்படியே எடுக்காமல் விட்டுவிடுவான். ஆனால், அதன் மதிப்பை அறிந்திருந்தால், எப்படியாவது அதை எடுத்துவிடுவான். இதைப்போலவே ஆத்துமாவும் கடவுளுடைய காரியங்களின் மதிப்பை அறிந்திருந்தால், அதைப் பெற்றுக்கொள்ளாமல் விட்டுவிடவே மாட்டாது. தேவனது காரியங்களின் மதிப்பு ஒருவனுக்குத் தெரிந்திருந்தால், அதற்காகத் தன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் முயற்சி செய்து, அழுது அதைப் பெற்றுக்கொள்ளும் வரை விட்டுவிட மாட்டான். சுவிசேஷத்தில் கூறப்பட்டுள்ள அந்த இரு குருடர்களும், இயேசுவால் தமது வியாதிகளைச் சுகமாக்க முடியுமென்று அறிந்திருந்தபடியால், அழுது கூப்பிட்டார்கள். மற்றவர்கள் அதட்டினாலும் அதிகமதிகமாக அழுது கூப்பிட்டார்கள் (மத்தேயு 20:29-31) என்று பார்க்கிறோம்.
இ. நமது அறிவு ஆவியானவரால் தெளிவாக்கப்படும்பொழுது, ஆத்துமா தேவனிடம் வருவதற்காக வழிகாட்டப்படும். ஆத்துமாவுக்கு நல்ல ஊக்கமும் அளிக்கப்படுகிறது. அவ்வாறு வழிகாட்டப்படாத ஒரு ஆத்துமா மிகவும் சஞ்சலப்பட்டும் வழியைக் கண்டுகொள்ள முடியாது. அப்படிப்பட்ட ஆத்துமாவுக்கு எப்படி ஆரம்பிப்பது, எப்படிச் சொல்வது என்று அறியாமல், மனம் சோர்ந்து, ஆபத்தான நிலையில் இருப்பதாக நாம் அறியலாம்.
ஈ. ஆவியானவரால் தெளிவாக்கப்பட்ட அறிவானது, தேவனது வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொள்ளுகின்ற தைரியத்தை அடைகிறது. அதனால் பெலன்மேல் பெலன் பெற்றுக்கொள்ளுகிறது. சாதாரணமாக, மனிதர் நமக்குச் சில காரியங்களைக் கொடுக்கப்போகிறோமென்று சொன்னாலே, நம் இருதயம் எவ்வளவு ஆவலோடு பொங்கி நிற்கிறது என்பதை அறிவோம்.
உ. ஆவியானவரால் தெளிவாக்கப்பட்ட அறிவோடு தேவனிடம் வரும்பொழுது, சில சமயங்களில் தேவன் நமக்குக் கடந்த காலங்களில் பாராட்டின நன்மைகளை அவரிடமே எடுத்துச் சொல்லிக் கெஞ்சி ஜெபிக்கலாம். யாக்கோபு அவ்வாறு செய்தார் (ஆதியாகமம் 32:9). எப்பிராயீம் தன் குற்றங்களைக் குறித்து வெட்கப்பட்டு, அதற்காக மனஸ்தாபப்பட்டு, துக்கப்பட்டுப் புலம்பிக் கொண்டிருப்பதை நாம் அறிகிறோம் (எரேமியா 31:18-20). அப்படிச் செய்யும்பொழுது எப்பிராயீம் தன்னைத் தேவனுக்கு உகந்தவனாக மாற்றிக்கொண்டு அவரது மன்னிப்பையும் பெற்றுக்கொள்வதைப் பார்க்கிறோம். எப்பிராயீம் தன்னைப்பற்றி வருத்தப்படும்பொழுது பின்வருமாறு கூறுவதைப் பார்க்கிறோம்: "தேவனே, நீரே என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நான் மனஸ்தாபப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் என்னை விலாவில் அடித்துக் கொண்டிருக்கிறேன், நாணிக்கொண்டுமிருக்கிறேன். என் இளவயதின் நிந்தையைச் சுமந்து வருகிறேன்." இப்புலம்பலைக் கேட்ட தேவன் தன் உடனடி பதிலடிச் சொல்லுகிறார்: "எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாகப் பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது, அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன்." எனவே, ஆவியோடு மட்டுமல்ல, கருத்தோடும் ஜெபிக்க வேண்டுமென்பதை உணருகிறோம்.
ஓர் உதாரணத்தை வைத்து விளக்கலாம். நம்முடைய வாசலில் இரண்டு பேர் பிச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையிலும், பசியோடும், காலில் காயத்தோடு நடக்க முடியாமலும்; அதேசமயம் மற்றொருவன் நல்ல சுகத்தோடும், பலத்தோடும் காணப்படுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், இருவரும் ஒரே வார்த்தைகளைச் சொல்லி நம்மிடம் பிச்சை கேட்கிறார்கள் என்றும் வைத்துக்கொள்வோம். இருந்தபோதிலும், உண்மையாகவே வறுமையிலும், பசியிலும் இருக்கிறவனுடைய வேண்டுதல், சுகமாயிருக்கிறவனுடைய வேண்டுதலை விட அதிக உருக்கமாயும், நம் இரக்கத்தைத் தூண்டுகிறதாயும் அமையுமல்லவா? இதைப் போலவே நம்மில் சிலர் தேவனிடம் பழக்கத்தின் பேரிலும், சடங்காச்சாரமாகவும் ஜெபிக்கிறோம். சிலர் மனக்கிலேசத்தில் போய் ஜெபிக்கிறோம். முதல் தரத்தார் தங்கள் மூளை அறிவையும், எண்ணங்களையும் வைத்து ஜெபிக்கிறார்கள். ஆனால், "சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்" (ஏசாயா 66:2) என்று கர்த்தர் கூறுகிறார்.
ஊ. நாம் தெளிவாக்கப்பட்ட கருத்தோடு ஜெபிக்கும்பொழுது, ஜெபத்தின் அர்த்தமும் அதன் முறையும் மிகவும் உபயோகமானதாக அமையும் என்பது உறுதி. ஒருவன் தனது கருத்தைத் தெளிவாக வைத்திருக்கும்பொழுது நன்மை தீமை எதுவென்று எளிதாகப் புரிந்துகொள்ளவும், அதோடு மனிதனின் அபாத்திரத் தன்மையையும், கடவுளின் இரக்கத்தையும் புரிந்துகொள்ளவும் முடிகின்றது. அதனால் அவனுடைய ஆத்துமாவுக்கு, மற்றவர்களால் எழுதப்பட்ட ஜெபங்களின் போதனை அவசியப்படாது. அப்படிப்பட்டவனுக்கு வேதனை ஏற்படும்பொழுது, ஜெபிக்க வேண்டுமென்று யாருமே சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை. தானாகவே ஜெபிக்க ஆரம்பிப்பான். தனது ஆவியில் ஏற்படுகின்ற நெருக்கம், உணர்வு இவைகளால் தூண்டப்பட்டு அவ்வாறு செய்வான். கடவுளிடம் ஜெபத்தில் அழுது தன்னை விடுவிக்கும்படிக் கெஞ்சுவான். இவ்வாறு தாவீது ராஜா செய்தார் என்று வாசிக்கிறோம் (சங்கீதம் 116:3,4). மேலும், சங்கீதம் 38:1-12-ல் தாவீது ராஜா, தமது துன்பத்தில் தேவனிடத்தில் முறையிடுவதை வாசிக்கிறோம்.
எ. நம்முடைய தெளிவாக்கப்பட்ட கருத்து, நம்மைக் கடைசி வரை நமது கடமையாகிய ஜெபத்தில் நிலைத்திருக்கப் பண்ண வேண்டும். தேவனுடைய மக்கள் சாத்தானுடைய தந்திரம், ஏமாற்றும் வகை இவற்றையெல்லாம் நன்கு அறிந்திருக்கிறார்கள். சாத்தான் நம்முடைய காத்திருத்தலின் மூலம் நம்மை ஆயாசப்படுத்தி, நம்மேல் தேவனுக்குப் பிரியமில்லை என்பதுபோல் காட்டிவிடுவான். "நீ ஜெபித்துக் கொண்டேயிருந்தாலும், அதற்குப் பதிலொன்றுமில்லையே!" என்று நம்மிடம் சாத்தான் சொல்லுவான். "உன்னுடைய இருதயம் கடினப்பட்டு, குளிர்ந்து இறந்துவிட்டது. நீ ஆவியோடு ஜெபிப்பதில்லை. ஆர்வத்தோடு ஜெபிப்பதில்லை. மற்ற காரியங்களைப்பற்றி அதிகக் கவலைப்படுகிறாய், ஜெபிப்பதுபோல் நடிக்கிறாய். எனவே, மாய்மாலக்காரனே நீ ஜெபிப்பதில் பயனில்லை, அதை விட்டுவிடு" என்று அவன் சொல்லுவான்.
இப்படிப்பட்ட சமயத்தில், நீ சரியான கருத்தோடு இராவிட்டால், ஒருவேளை நீ "கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார்" என்று சொல்லலாம் (ஏசாயா 49:14). ஆனால் உண்மையில் கருத்தோடு இருந்தால், "நான் ஆண்டவரைத் தேடி, அவருக்காகக் காத்திருப்பேன், அவர் மௌனமாயிருந்தாலும் ஆறுதல் அளிக்காவிட்டாலும், அவரை நான் விடமாட்டேன்" என்று சொல்லுவோம் (ஏசாயா 40:27). தேவன் யாக்கோபைச் சிநேகித்தார், ஆனாலும் அவனை ஆசீர்வதிக்குமுன்பு அவனைத் தன்னோடு போராட வைத்தார் (ஆதியாகமம் 32:25-27). தாமதிப்பதினால் நம் மேல் அவருக்குப் பிரியமில்லை என்று நினைக்காமல், சில சமயங்களில் தம்மைத் தமது பரிசுத்தவான்களின் கண்களுக்கு மறைத்துக்கொள்ளுகிறார் (ஏசாயா 8:17) என்று அறிதல் அவசியம். தமது பிள்ளைகள் ஜெபித்துக் கொண்டேயிருப்பது அவருக்குப் பிரியம். நாம் பரலோகக் கதவுகளைத் தட்டிக்கொண்டிருப்பதைப் பார்ப்பது அவருக்குப் பிரியம். ஒருவேளை நம் ஆத்துமா, "என்னைச் சோதிப்பது அவருக்குப் பிரியமோ, நான் அழுவதை ஏன் அவர் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்?" என்று கூட நினைக்கலாம்.
இயேசு சொன்ன உவமையில், அந்த விதவை, நியாயாதிபதி தாமதம் செய்தாலும் தனக்கு நீதி எப்படியாவது கிடைக்குமென்று நம்பினாள் என்று கூறப்பட்டிருக்கிறது (லூக்கா 18:1-6). நாம் கடவுளுக்குக் காத்திருப்பதை விட அவர் நமக்காக அதிக நாட்கள் காத்திருக்கின்றார் என்பதை உணரவேண்டும். எனவே, தாவீது "கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து என் கூப்பிடுதலைக் கேட்டார்" என்று சொல்லுகிறார் (சங்கீதம் 40:1). இப்படிச் சொல்வதற்கு, நமது கருத்து தெளிவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்றைய உலகில் அநேகக் கடவுளுக்குப் பயந்த விசுவாசிகள், தங்களது கருத்து ஆவியானவரால் தெளிவாக்கப்படாததால் சாத்தானின் சோதனை ஏற்படும்பொழுது தங்கள் விசுவாசத்தை, ஜெபத்தை விட்டு விடுகிறார்கள். தேவன் அவர்கள் மீது இரக்கப்பட்டு, அவர்கள் ஆவியோடும் கருத்தோடும் ஜெபிக்க உதவி செய்வாராக.
இதைப்பற்றி எனது அனுபவத்தைக் கூற விரும்புகிறேன். தேவன் எப்படிப்பட்ட பெரிய பாவிகள் மீதும் இரங்கக்கூடும் என்று நான் அறிந்தேன். சுகமாயிருக்கிறவர்கள் மீதல்ல, வியாதியஸ்தர்கள் மீதே; நீதிமான்கள் மீதல்ல, பாவிகள் மீதே; நிறைவுள்ளவர்கள் மீதல்ல, குறைவுள்ளவர்கள் மீதே தேவன் தமது கிருபையையும், இரக்கத்தையும் பொழிகிறார் என்று அறிந்தேன். பரிசுத்த ஆவியானவர் உதவியால், அவர் மீது அண்டிக்கொண்டேன். அவர் கரத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டேன். அவர் உடனே பதில் கொடுக்காவிட்டாலும், அவரிடம் சென்று அழக் கற்றுக்கொண்டேன். இப்படிப்பட்ட சோதனையில், துன்பத்தில் இருக்கின்ற தமது ஏழை மக்களைத் தேவன் தாமே விடுவிப்பாராக. "குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை" (ஆபகூக் 2:3). தேவன் நமக்கு ஆவியோடும், கருத்தோடும் ஜெபிக்க உதவி செய்வாராக.
கேள்வி: 'எதற்காக, எப்படி ஜெபிப்பது என்று நமக்குத் தெரியாது என்பது தேவனுக்குத் தெரியும். அப்படியிருக்கும்பொழுது தேவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?'
விடை: 'நமக்கு ஜெபிக்கத் தெரியாது' என்று சொல்லுகிறோம். உண்மைதான், ஆனால் நம் கீழான (பாவ) நிலையை நம்மால் உணர முடிகிறதா? நியாயப்பிரமாணத்தின் தண்டனைக்குள்ளாக வாழ்கிறோம் என்று தேவன் நமக்குக் காட்டியிருக்கிறாரா? அப்படியிருக்குமானால் நீ கவலைப்பட வேண்டியதில்லை. உன் இருதயத்தில் தேவன் கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்று நினைக்க இடமுண்டு. ஜெபம் உன் வாழ்வில் கண்டிப்பாகப் பலமாக வெளிப்படும். உன் பெருமூச்சுகள் உன் வீட்டின் பல பாகங்களிலிருந்து பரலோகத்திற்குச் சென்றிருக்கிறது (ரோமர் 8:26). உன் இருதயம் உன் கண்ணீரை நன்கு அறியும். உன் இருதயம் இன்னொரு உலகத்தின் காரியங்களை வாஞ்சித்து, இவ்வுலகக் காரியங்களை மறக்கும்படி செய்திருக்கிறதா? வசனத்தை வாசித்துப் பார்: "குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய்சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை" (ஆபகூக் 2:3).
கேள்வி: நான் ஒரு தனி இடத்தை நாடிச் சென்று, என் இருதயத்தை தேவனுக்கு முன்பாக ஊற்ற வேண்டும் என்று விரும்பினாலும், என்னால் ஒரு வார்த்தைகூட சொல்ல முடிவதில்லை. ஏன்?
விடை: தேவன், ஜெபத்தில் நீ சொல்லும் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், உன் இருதயத்தின் நொறுங்குண்ட தன்மையை உற்றுக் கவனிக்கிறார். அது மட்டுமே அவருடைய இரக்கத்தை நமக்குக் கொண்டுவரும். 'தேவனே, நொறுங்குண்டதும் நறுங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்' (சங்கீதம் 51:17).
சில சமயங்களில், நமது பேசமுடியாத நிலை மிகுந்த துன்பத்தால் ஏற்படக்கூடும். 'நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன்' (சங். 77:4). இதனால் துன்பப்படுகிற ஆத்துமாக்களுக்கு ஆறுதல் ஏற்படக்கூடும். நம்முடைய வாயின் வார்த்தைகள் வராவிட்டாலும், ஆவியானவர் நம் உள்ளங்களில் பெருமூச்சுகளோடு விண்ணப்பம் செய்ய உதவுகிறார்.
தேவனுக்கு முன்பாக நாம் நின்று பேச வேண்டுமானால், முதலாவது நமது கீழான பாவ நிலையை உணர வேண்டும். இரண்டாவது, தேவனது வாக்குத்தத்தங்களை நினைவுகூர வேண்டும். மூன்றாவது, கிறிஸ்துவின் இருதயத்தை நோக்கிப் பார்க்க வேண்டும். அவர் நம்முடைய பாவநிலையை உணர்ந்து சுத்திகரிப்பார் என்று நம்ப வேண்டும். நம்மைப் போன்ற பாவிகளுக்குக் கிறிஸ்து உதவியிருக்கிறார் என்று அறிய வேண்டும். அவர் இரக்கத்தின் ஐசுவரியத்தை நம் இருதயத்தில் நினைவுகூர வேண்டும். வார்த்தைகளால் மட்டும் தேவனிடம் ஜெபிக்கக் கூடாது; அவ்வார்த்தைகளோடு நம் முழு இருதயமும் சேர்ந்திருக்க வேண்டும். அப்படியிருக்குமானால், நிச்சயம் ஜெபிக்கும்பொழுது தேவனைக் கண்டுகொள்வோம் (எரேமியா 29:13).
தடை: ஆவியானவரின் உதவி இல்லாமல் வேறு எந்த வகையிலும் நாம் ஜெபிக்க முடியாது என்று சொல்லும்பொழுது, எப்படி ஜெபிக்க வேண்டும் என்று ஏதாவது ஆலோசனை கூற முடியுமா?
விடை: நாம் ஒருவரையொருவர் ஜெபிக்க உற்சாகப்படுத்த வேண்டும். ஆனால், இப்படித்தான் ஜெபிக்க வேண்டும் என்று வலியுறுத்த அவசியமில்லை. பொதுவாகக் கிறிஸ்தவர்கள் ஜெபிக்க வேண்டும் என்று சொல்லலாமேயொழிய, ஒரு குறிப்பிட்ட ஜெபங்களை மட்டும் ஜெபிக்க வேண்டும் என்று சொல்லுவது தவறு. பவுல் அப்போஸ்தலன், பொதுவாக கிறிஸ்தவர்கள் ஜெபிக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லுகிறார் (எபேசியர் 6:18, ரோமர் 15:30-32).
தடை: ஆனால், சில எழுதப்பட்ட ஜெபங்களை நாம் உபயோகிக்காவிட்டால், நம் பிள்ளைகளுக்கு எப்படி ஜெபிக்கக் கற்றுக்கொடுப்பது?
விடை: நாம் சிலவேளைகளில் நமது பிள்ளைகளுக்கு ஜெபிப்பதற்குத் தவறான முறைகளைக் கற்றுக்கொடுக்கிறோம். ஆனால், பிள்ளைகளுக்குத் தங்களுடைய பாவ நிலையை உணரும்படி செய்ய வேண்டும். ஆதி பாவத்தினாலும், செயல் பாவத்தினாலும் அவர்கள் தேவ கோபாக்கினையின் கீழ் இருக்கிறார்கள் என்று எடுத்துக்காட்ட வேண்டும். இதன்மூலம் நம் பிள்ளைகள் விரைவில் தாங்களே ஜெபிக்கக் கற்றுக்கொள்வார்கள். இதற்குப் பதிலாக, அவர்கள் பாவ நிலையை அவர்களுக்கு எடுத்துக்காட்டாமல், சில எழுதப்பட்ட ஜெபங்களை மட்டும் கற்றுக்கொடுத்தால், அவர்களை நாமே சபிக்கப்பட்ட மாய்மாலக்காரர்களாகப் பெருமையோடு சுற்றித்திரியத் தூண்டுவதுபோலக் காணப்படும். எனவே பிள்ளைகளுக்கு அவர்களுடைய அவலநிலையை எடுத்துக்காட்ட வேண்டும். பாவத்தினால் ஆக்கினைக்குள்ளாகி நரகத்திற்குப் போக வேண்டும் என்பதையும், அதேசமயம் எப்படி மன்னிப்புப் பெற்று வெற்றியோடு வாழ முடியும் என்பதையும் அவர்களிடம் சொல்ல வேண்டும். அப்படிச் செய்யும்பொழுது அவர்கள் கண்களில் கண்ணீர் வரும்; இருதயத்தில் பெருமூச்சும் ஏற்படும். மேலும் யாரிடம், யார்மூலம் ஜெபிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். தேவனுடைய வாக்குத்தத்தங்களையும், அவருடைய கிருபையையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
தேவனே அவர்கள் கண்களைத் திறக்க வேண்டும். எனவேதான் தாவீது, 'பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்' என்று சொல்லுகிறார் (சங்கீதம் 34:11). 'உங்களுக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுப்பேன்' என்று சொல்லாமல், 'கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்' என்று சொல்வதை நாம் கவனிக்க வேண்டும். அதாவது, கர்த்தருக்குப் பயப்படுவதன் மூலம், நாம் நம்முடைய பாவநிலையை உணர்ந்து சுவிசேஷத்தில் நம்பிக்கை வைக்க முடியும். அந்த நம்பிக்கையின் மூலம், ஆவியானவர் நமக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கிறார். இவ்வகைப் போதனையினால் அவர்கள் தேவனிடம் ஜெபிக்கும்படி பழகிக்கொள்வார்கள். அப். பவுல் மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பும்வரை, தேவன் அவரை ஒரு ஜெபிக்கின்ற மனிதனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று பார்க்கிறோம். அதேபோல்தான் நாமும்கூட (அப்போஸ்தலர் 9:11).
தடை: ஆனால், சீஷர்கள் தங்களுக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கக் கேட்டபொழுது, கிறிஸ்து கர்த்தருடைய ஜெபத்தைச் சொல்லிக் கொடுத்தாரல்லவா?
விடை: அவர்கள் மட்டுமல்ல, நாமுங்கூட கிறிஸ்துவால் போதிக்கப்பட விரும்புவோம். தற்சமயம் அவர் சரீரத்தில் இல்லாததால், தமது வார்த்தையாலும் ஆவியானவர் மூலமாயும் கற்றுக்கொடுக்கிறார். நமக்கு போதிக்க ஆவியானவரை அனுப்ப வேண்டும் என்று சொன்னதற்கு இணங்க, அவரை நம்மிடையே அனுப்பி இன்றும் போதிக்கிறார் (யோவான் 14:16; 16:7).
மேலும், பரமண்டல ஜெபம் மத்தேயு 6-ல் இருப்பதைவிட லூக்கா 11-ல் வித்தியாசப்படுவதைப் பார்க்கலாம். மேலும், நாமெல்லாரும் ஒரே வகை ஜெபத்தைத்தான் செய்ய வேண்டும் என்று சீஷர்கள் சொல்லவில்லை; அவர்களும் அப்படிச் செய்யவில்லை. மேலும் நிருபங்களிலும், நாம் விசுவாசத்துடனேயே ஜெபிக்க முயற்சிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.
மேலும், கிறிஸ்து பரமண்டல ஜெபத்தின் மூலம், நாம் ஜெபத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும், பரலோகத்திலிருக்கிற தேவனிடம், விசுவாசத்தோடு, அவருடைய சித்தத்திற்கு உகந்த காரியங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 'அந்த ஜெபத்தையே ஏறெடுங்கள்' அல்லது 'அந்த மாதிரியில் ஜெபியுங்கள்' என்று கூறியுள்ளார் என அறியலாம்.
தடை: கிறிஸ்து, தமது சீஷர்களைப் பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்கச் சொல்லுகிறார். அதாவது பரிசுத்த ஆவியைப் பெறாமலே ஒருவர் ஜெபிக்க முடியும் என்று அர்த்தப்படும். அது சரியா? (லூக்கா 11:9-13 பார்க்கவும்)
விடை: பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்கிறவர்களுக்கு தேவன் அதைக் கொடுப்பார் என்று கிறிஸ்து சொன்னார். அதாவது, அதிக அளவு பரிசுத்த ஆவியைக் கொடுப்பார் என்று அர்த்தப்படும். அவர்கள் ஏற்கனவே ஓரளவு பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தார்கள். கிறிஸ்தவர்களாகிய நாமும்கூட அதிக அளவு பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஓரளவு பரிசுத்த ஆவியை நாமும் பெற்றிருக்கிறோம்.
கேள்வி: கிறிஸ்துவின் சீடர்கள் என்று தங்களை அறிந்தவர்கள் மட்டும்தான் ஜெபிக்க முடியுமா?
விடை: இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்ற யாராயிருந்தாலும் சரி, அவர்கள் ஜெபிக்கலாம். ஆனால் ஜெபிக்க ஆரம்பித்தவுடன், தன்னைத் தேவனுடைய பிள்ளை என்று நினைத்துவிட முடியாது. தேவனுடைய இரக்கம் உனக்குக் காட்டப்பட்டால், இயற்கையாகவே ஜெபிக்க ஆரம்பிக்கலாம். ஒருவன் கிறிஸ்தவன் என்பதற்கு முதல் அடையாளம் அவன் ஜெபிக்கிறவனாயிருப்பான் (அப்போஸ்தலர் 9:11). அவன் தேவனை கிறிஸ்துவின் வழியாய் அறிய முற்படுகின்றான்.
அ. கிறிஸ்துவை அவரது பரிசுத்தம், அன்பு, ஞானம், வல்லமை இவற்றிற்காகத் தேடுகின்றான். சரியான ஜெபம், கிறிஸ்துவின் மூலமாகத்தான் தேவனிடம் செல்ல வேண்டும். எனவே, ஜெபம் கிறிஸ்துவையே மையமாகக் கொண்டிருக்க வேண்டும். 'பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? பூலோகத்தில் உம்மைத்தவிர வேறே விருப்பமில்லை' (சங்கீதம் 73:25).
ஆ. நம் ஆத்துமா கடவுளோடு தொடர்ந்து தொடர்பில் ஈடுபட வேண்டும். 'நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்' (சங்கீதம் 17:15). 'நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்' (2 கொரிந்தியர் 5:2).
இ. சரியான ஜெபம், ஜெபிக்கப்படுகின்ற காரியத்துக்காகக் காத்திருக்க நம்மைத் தூண்டுகிறது. 'எப்பொழுது விடியுமென்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப் பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது' (சங்கீதம் 130:6). 'நான் எழுந்து, என் ஆத்தும நேசரைத் தேடினேன்' (உன்னதப்பாட்டு 3:2).
இங்கே நம்மை ஜெபத்திற்குத் தூண்டுகிற இரு காரியங்களைப் பார்க்கிறோம். ஒன்று, இவ்வுலகக் காரியங்களிலும் பாவத்தின்மேலும் வெறுப்பு; மற்றொன்று, பரிசுத்த நிலையில் தேவனோடு தொடர்புகொள்ள ஓர் அடக்கமுடியாத ஆவல். இவற்றோடு, மக்கள் பொதுவாக ஏறெடுக்கின்ற ஜெபங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், அவை கேலி ஜெபங்களாகவும், வெறுக்கப்படத்தக்க ஆவியின் பெருமூச்சாகவும் காணப்படுகின்றன. அநேகர் ஏறெடுக்கின்ற ஜெபங்கள் ஜெபங்களே அல்ல; அவை கடவுளையும் உலகத்தையும் ஏமாற்றுவதுபோல் அமைகின்றன. அவர்கள் வாழ்க்கையையும் அவர்கள் ஜெபத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்கள் ஜெபிக்கிற காரியங்களுக்காக வாழ்க்கையில் அவர்கள் வாஞ்சிப்பதில்லை. அவர்களது மாய்மாலம் இதில் விளங்குகிறது.
ஜெபத்தை நாம் எப்படி ஏறெடுப்பது என்பதைப் பற்றிச் சில காரியங்களைக் கவனிப்போம். ஜெப வாழ்க்கையைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய சில கருத்துக்களையும், ஒருசில உற்சாகப்படுத்தும் வார்த்தைகளையும், சில எச்சரிப்புகளைப் பற்றியும் கூற விழைகிறேன்.
சில உண்மைகள் அல்லது கருத்துக்கள்
ஜெபமானது தேவனின் ஒரு கட்டளை. அதன் மூலம் தேவனுக்குப் பக்கத்தில் செல்ல முடியும். எனவே, ஒவ்வொரு ஆத்துமாவும் ஜெபிக்கும்பொழுது, அவருடைய உன்னத பிரசன்னத்தை உணருகின்ற வகையில், அவருடைய இரக்கத்தின் உதவியை நாடி ஜெபிக்க வேண்டும். ஒருவன் ஒரு ராஜாவுக்கு முன்பு மரியாதையின்றி நடப்பானாகில் அது அம்மனிதனுக்குக் கேவலம்; ஆனால், கடவுளுக்கு முன்பு அப்படி நடந்துகொண்டால் அது பாவமாகும். ஒரு ஞானமுள்ள ராஜாவுக்கு, எப்படி மரியாதையற்ற செயல்களும் சொற்களும் எரிச்சலை உண்டுபண்ணுமோ, அப்படியே தேவனும் மூடரிலும் அவர்கள் பலியிலும் பிரியப்படுவதில்லை (பிரசங்கி 5:1,4). தேவன் நீண்ட, திறமையான பேச்சில் பிரியப்படுவதில்லை; நொறுங்குண்ட, நருங்குண்ட இருதயத்திலும், பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் பிரியமாயிருக்கிறார் (சங்கீதம் 51:17; ஏசாயா 57:15). எனவே, ஐந்து காரியங்கள் ஜெபத்திற்குத் தடைகளாக இருக்கக்கூடும். அவற்றைக் கீழே காண்போம்.
முதலாவது தடை முதலாவதாக, நம் இருதயத்தில் அக்கிரமச் சிந்தை கொண்டிருந்தோமானால், தேவன் நம் ஜெபத்தைக் கேட்கமாட்டார் (சங்கீதம் 66:18). நாம் எதை வெறுத்து விட்டுவிட வேண்டுமென்று ஜெபிக்கிறோமோ, அதையே நம் இருதயம் வாஞ்சிக்கும். இதுதான் இருதயத்தின் அக்கிரமச் சிந்தையாகும். எனவே, "தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது" (ஏசாயா 29:13; எசேக்கியேல் 33:31) என்று சொல்லப்பட்டுள்ளது. ஒருவன் நம்மிடம் பிச்சை கேட்டு வாங்கி, அதை நாய்களுக்குப் போட்டால் நமக்கு எவ்வளவு எரிச்சலாயிருக்கும். ஒரு சமயத்தில் எனக்குக் கொடு என்று கேட்டு, அடுத்த நிமிஷம் அது எனக்கு வேண்டாமென்று சொன்னால், அப்படிப்பட்ட மனிதனிடம் நாம் எவ்வளவு கோபப்படுவோம்! இப்படிப்பட்ட மனிதரையே நாம் ஜெபிக்கிறவர்களாகப் பார்க்கிறோம். அவர்கள், 'உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உமது சித்தம் செய்யப்படுவதாக' என்று ஜெபித்துவிட்டு, தங்கள் செயல்களாலும் இருதயத்தாலும் நாள் முழுவதும் அதற்கு மாறாக நடக்கின்றார்கள். அவர்கள் 'ஜெபம் பாவமாகும்' (சங்கீதம் 109:7). 'அவர்களுக்கு தேவன் உத்தரவு கொடுப்பதில்லை' (2 சாமுவேல் 22:42).
இரண்டாவது தடை மேலும், வெளித்தோற்றத்திற்கென்று ஜெபிக்கிறவர்களுடைய ஜெபத்தை தேவன் ஏற்றுக்கொள்ள மாட்டார்; அதற்குப் பதிலளிக்கவுமாட்டார். இதில் இரண்டு வகை மனிதர்களுண்டு:
இதில் சில போதகர்களும் அடங்கியிருப்பார்கள். தேவனை வழிபடுவது போல் காட்டினாலும், உண்மையில் அவர்களது முழுக்கவனமும் தங்கள் வயிற்றின் மீதே இருக்கும். இவர்களை ஆகாபின் தீர்க்கதரிசிகளும், நேபுகாத்நேச்சாரின் தீர்க்கதரிசிகளும் போன்றவர்களிடம் பார்க்கிறோம். அவர்கள் பக்தியுள்ளவர்களைப் போலக் காட்சியளித்தாலும், உண்மையில் எல்லா ஜெபங்களிலும் லௌகீக காரியங்களையே பெற்றுக்கொள்ள வாஞ்சிக்கிறார்கள்.
மற்றொரு வகையான ஜெபிக்கிறவர்கள், சுயமேன்மையையும் பாராட்டுகளையும் எதிர்பார்க்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று சொல்லப்பட்டிருக்கிறது (மத்தேயு 6:5). இவர்களை இதன் மூலம் அறியலாம்: (1) சத்தமாய் ஜெபிப்பார்கள். (2) முடிந்த பின்பு பாராட்டுகளை எதிர்பார்க்கின்றனர். (3) மற்றவர்களுடைய பாராட்டுகளைப் பொறுத்து அவர்களது இருதயம் பூரிக்கிறது. (4) நீண்ட ஜெபம் செய்ய விரும்புகிறார்கள். ஜெபத்தை நீட்டவேண்டுமென்றே அதே வார்த்தைகளை மறுபடியும் மறுபடியும் சொல்லுகிறார்கள் (மத்தேயு 6:7). நீண்ட ஜெபத்தையே வாஞ்சிக்கிறார்களே ஒழிய, அது எவ்வகை இருதயத்திலிருந்து வருகிறது என்பதை நினைப்பதே கிடையாது. மனிதருடைய புகழ்ச்சியாகிய பலனை எதிர்பார்க்கிறார்கள். எனவே, தங்கள் அறையில் ஜெபிப்பதை விட, தெருக்களில் ஜெபிக்கவே பிரியப்படுகிறார்கள். ஏதோ ஒரு சமயம் அறையில் ஜெபித்தாலும், பேசிமுடித்துவிட்டுப் போய்விடுகிறார்கள். தேவன் பேசுவதைக் கேட்க விரும்புவதேயில்லை (சங்கீதம் 85:8).
மூன்றாவது தடை கேட்கப்படாத மூன்றாவது வகை ஜெபமானது, தவறான காரியங்களுக்காக அல்லது சரியான காரியங்களைத் தவறான வகையில் பயன்படுத்துவதற்காக ஜெபிப்பதாகும். "நீங்கள் விண்ணப்பம் பண்ணியும் பெற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்கள்" (யாக்கோபு 4:3). ஜெபத்தில் நம்முடைய நோக்கம் தேவனின் சித்தத்துக்கு மாறாகவிருந்தால், அதுவே நம் ஜெபங்கள் தள்ளப்படுவதற்கு காரணமாகவும் அமைகின்றது. எனவே நம்மில் அநேகர் பல காரியங்களுக்காக ஜெபித்தும் பெற்றுக்கொள்ளாமலிருக்கிறோம். தேவன் அப்படிப்பட்ட ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் அமைதியாக இருந்துவிடுகிறார்.
கேள்வி: சில சமயங்களில் அவர்கள் இருதயம் தவறான நோக்கத்தோடு ஜெபித்தாலும் கொடுத்துவிடுகிறாரே? இஸ்ரவேல் ஜனங்களுக்கு வனாந்தரத்தில் காடைகளைக் கொடுத்தாரே, அது எப்படி? (சங்கீதம் 106:14).
விடை: அப்படிக்கொடுத்தால், அவர்களை நியாயந்தீர்க்கும் வகையில் கொடுத்தார் என்று அறியவேண்டும். தமது இரக்கத்தில் அதைக் கொடுக்கவில்லை. அதே சமயம், அதைக் கொடுத்துவிட்டு அவர்கள் 'ஆத்துமாக்களில் இளைப்பை அனுப்பினார்' (சங்கீதம் 106:15) என்று வாசிக்கிறோம். அப்படிப்பட்டதான விடை நமக்குக் கிடைத்தால் நாம் பரிதபிக்கப்படத்தக்கவர்கள்!
நான்காவது தடை கேட்கப்படாத மற்றொருவகை ஜெபமானது, இயேசுவின் பெயரில் அனுப்பப்படாத ஜெபமாகும். கடவுளே ஜெபத்தைக் கட்டளையிட்டிருந்தாலும், ஜெபத்திற்கு அவர் விடையளிப்பதாக வாக்குக் கொடுத்திருந்தாலும், கிறிஸ்துவின் மூலம் ஜெபம் ஏறெடுக்கப்படாவிட்டால் அது நிச்சயம் கேட்கப்படமாட்டாது (யோவான் 14:13-14; 15:16; 16:23-26). எதைச் செய்தாலும், கிறிஸ்துவின் நாமத்திலே செய்ய ஏவப்பட்டிருக்கிறோம் (1 கொரிந்தியர் 10:31). நம்மில் அநேகருக்கு, கிறிஸ்துவின் மூலம் தேவனிடம் வருவது என்ன என்றே தெரியாது. ஆகவே, இன்னும் பலர் தங்கள் பாவ வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்; தங்கள் பாவ ஜெபத்தைச் செய்துகொண்டிருக்கிறார்கள்; தங்கள் பாவத்திலே மரித்தும் போகிறார்கள்.
ஐந்தாவது தடை இறுதியாக, ஜெபத்திற்குத் தடையாக உள்ள காரியம், ஜெபத்தின் வல்லமையின்றி வெறுமையான ஜெபத்தை ஜெபிப்பதாகும். எழுதப்பட்ட ஜெபங்களை ஏறெடுக்க நாம் எப்பொழுதும் கருத்துள்ளவர்களாய் இருக்கிறோம்; ஆனால், வல்லமையோடு ஜெபிக்க மறந்துவிடுகிறோம். ஜெபிக்கும்பொழுது ஆவியோடும் வல்லமையோடும் ஜெபிக்கிறோமா என்று நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அவர்கள் ஜெபம் எனக்கு அருவருப்பானது என்று கர்த்தர் சொல்லுகிறார் (நீதிமொழிகள் 28:9). அவர்கள் 'என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை, என்னை விட்டு விலகிப்போகிறார்கள்' என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஓசியா 7:14).
எனவே, தேவனிடம் ஜெபிப்பதற்கு முன்பு எதற்காக விண்ணப்பிக்கப் போகிறோமென்று நிச்சயித்துக் கொள்ள வேண்டும். அநேகர் தங்கள் வார்த்தைகளால் வீணாக அலப்புகிறார்கள். தங்களுக்குத் தேவையானதென்று அவர்கள் அறியாதிருக்கிறார்கள். முதலாவது நமக்குத் தேவையானதென்னவென்று நிச்சயித்துக்கொண்டு, அதற்காகவே திட்டமாக ஜெபிக்க வேண்டும்.
தடை: எதற்காக ஜெபிக்க வேண்டுமென்று தெரியாவிட்டால், நான் ஜெபிக்கக்கூடாதா?
விடை: நன்றாய் ஜெபிக்கலாம். தேவனிடம் எதற்காக ஜெபிக்க வேண்டுமென்று அவரிடமே கேட்கலாம். சீஷர் அவ்வாறு கேட்டார்கள் (லூக்கா 11:1). பரிசுத்தவான்கள் தங்களையே தங்களுக்குக் காண்பிக்கும்படி தேவனிடம் ஜெபிக்கிறார்கள் (சங்கீதம் 39:4). அப்படி ஜெபிக்கிற சமயம், தேவன் நமக்கு உத்தரவு கொடுத்து, நாம் அறியாததும் நமக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை நமக்கு அறிவிப்பார் (எரேமியா 33:3).
மேலும் தேவனிடம் ஜெபிக்கும்பொழுது, நம்முடைய இருதயமும் வார்த்தையும் ஒன்றுபட்டு இருக்கவேண்டும். எந்த அளவுக்கு இருதயத்தை ஈடுபடுத்த முடியுமோ, அந்த அளவுக்குத்தான் வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். மற்றபடி ஜெபம் வெறும் வார்த்தைகளாகவே போய்விடும்.
எச்சரிப்பு 1: நமக்குப் பரிசுத்தாவியின் உதவியில்லை, ஆகவே நாங்கள் ஜெபிப்பதில்லை என்று நம்மில் சிலர் சொல்லிவிடக்கூடும். சாத்தான் பொதுவாக நம் அருமையான ஜெபங்களைத் தடை செய்யத் தன்னாலானதைச் செய்யப் பார்ப்பான். மாய்மாலக்காரரை நல்லவர்கள் போலவும், தேவனால் அங்கீகாரம் பெற்றவர்கள் போலவும் நமக்குக் காண்பிப்பான். உண்மையில், தேவனுக்கு அவர்கள் ஜெபம் அருவருப்பானது. யோசுவாவிடம் செய்ததுபோல, நம் செய்கைகளை தேவன் அங்கீகரிக்கவில்லை என்று கூறுவான் (ஏசாயா 65:5; சகரியா 3:1). ஆனால் நாம் அவன் வஞ்சகத்தால் விழுந்துபோகக் கூடாது.
எச்சரிப்பு 2: நமக்கு ஏற்படுகின்ற சோதனைகளாலும், நம் இருதயத்தின் சர்ப்பனைகளாலும் மனந்தளர்ந்து போய் ஜெபத்தை நிறுத்திவிடக்கூடாது. தடைகள் ஏற்படலாம்; அவைகளுக்கு எதிராக நின்று தேவனிடம் ஜெபிக்க வேண்டும். தாழ்வான நிலையினின்று விடுவிக்க ஊக்கமாய் ஜெபிக்க வேண்டும். ஜெபிப்பதை விட்டுவிடவே கூடாது. தாவீதைப் போல, 'என் அக்கிரமம் பெரிது, அதை மன்னித்தருளும்' என்று ஜெபிக்க வேண்டும்.
சில உற்சாகமூட்டும் வார்த்தைகள்
எளிமையான, சோதனைக்குட்பட்டு மனமடிவாயிருக்கிற மக்களுக்குச் சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். நித்திய ஜீவனுக்கென்று பண்ணுகிற ஜெபம் ஆவியோடு ஏறெடுக்கப்பட வேண்டும். ஏனெனில், ஆவியானவர் மட்டுமே தேவ சித்தப்படி ஜெபிக்க நமக்குக் கற்றுக்கொடுப்பார் (ரோமர் 8:27). ஆனாலும் அநேக ஆத்துமாக்களை ஆவியானவரே ஜெபிக்கும்படி ஏவினாலும், தாங்கள் தேவ மக்களென்று நம்புவதற்கு அவர்களுக்குப் போதுமான விசுவாசம் இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்களை வழிநடத்துவதற்காகச் சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன்.
லூக்கா 11:8-ல் உள்ள வேதப்பகுதியானது, இயேசு கிறிஸ்துவின் மீது வாஞ்சையாயிருக்கின்ற ஆத்துமாவுக்கு மிகவும் பொருத்தமானது. அந்த உவமையில், இயேசு, மூன்று அப்பங்களைக் கேட்டுத் தன் நண்பனிடம் சென்ற ஒரு மனிதனைப் பற்றிப் பேசுகிறார். முதலாவது அந்த நண்பன் மறுத்துவிட்டாலும், அவன் வருந்திக் கேட்டதினிமித்தம் அவனுக்குக் கேட்டதைக் கொடுப்பான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வாறே சில ஆத்துமாக்கள், தங்கள் அவிசுவாசத்தால் தேவனிடம் கேட்கத் துணிவதில்லை. தாங்கள் தேவனின் நண்பரென்று உணர முடிவதில்லை. ஆனால் அவர்கள் தட்டுவதையும், தேடுவதையும், கேட்பதையும் விட்டுவிடக் கூடாது. கிறிஸ்து கவனிக்கச் சொல்வதைக் கவனிக்க வேண்டும்: "அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான்".
ஏழை ஆத்துமாவே! நீயும் தேவனைப் பற்றி அவ்வாறே நினைக்கலாம். தேவன் என் ஜெபத்தைக் கேட்க மாட்டார், என்னை அவர் நண்பனென்று கருதுவதில்லை, என் துர்ச்செய்கையால் நான் தேவனுக்கு விரோதி என்றெல்லாம் நினைக்கலாம் (கொலோசெயர் 1:21). ஒருவேளை கடவுள், அந்த நண்பன் உவமையில் சொன்னது போல, 'என்னைத் தொந்தரவு செய்யாதே' என்று சொல்லுகிறாரென்று நீ நினைக்கலாம். ஆனால் நான் சொல்லுகிறேன், நீ தட்டிக்கொண்டே, அழுதுகொண்டே மனமுடைந்த நிலையில் நின்றுகொண்டேயிருந்தால், அவர் உனக்கு நண்பனாயிருப்பதால் உதவி செய்யாவிட்டாலும், நீ வருந்திக் கேட்பதனால் உனக்குத் தேவையானதைக் கொடுப்பார். இதையே அநீதியான நியாயாதிபதியும் ஏழை விதவையுமான மற்றொரு உவமையில் காண்கிறோம் (லூக்கா 18). என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து சொல்லக்கூடும்: தேவனை வருந்திக் கேட்பதன் மூலம் நாம் ஜெபத்திற்கு விடையைப் பெற்றுக்கொள்ளலாம். இப்படியே நம் வாசற்படிக்கு வருகிற பிச்சைக்காரரிடமும் நடந்துகொள்ளுகிறோமல்லவா? வருந்திக் கேட்கிறவர்கள் பிச்சை வாங்காமல் போவதில்லை; நாமும் கொடுத்துவிடுகிறோமல்லவா! ஜெபத்திலும் நாம் அப்படியே செய்யவேண்டும். விடாப்பிடியாக ஜெபித்தால் தேவன் நாம் கேட்பதை நிச்சயம் கொடுப்பார் (லூக்கா 11:8).
தேவன், தம்மை நோக்கிக் கூப்பிடுகிற ஆத்துமாக்களின் ஜெபத்தைக் கேட்பதற்காகத் தமது ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அதுதான் கிருபாசனம் (எரேமியா 3:16; யாத்திராகமம் 25:22). சுவிசேஷத்தின் காலத்தில், தேவன் இக்கிருபாசனத்தில் இரக்கத்தையும் மன்னிப்பையும் காண்பிக்கக் காத்திருக்கிறார். அங்கிருந்துகொண்டு பாவியோடு பேசவும், உறவாடவும் காத்திருக்கிறார். 'அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; அங்கே உன்னோடு சொல்லுவேன்' என்று கர்த்தர் சொல்லுகிறார். நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது 'கிருபாசனத்திலிருந்து' என்பதைத்தான். இது எதைக் காட்டுகிறதென்றால், நாம் பாவிகளாகவே அவரிடம் இரக்கத்திற்காகத் தைரியமாகப் போகலாம்; அவர் நம் ஜெபத்தைக் கேட்பார். ஒருவேளை அவர் நம்மிடம் 'உன்னை நியாயாசனத்திலிருந்து சந்திப்பேன்' என்று சொல்லியிருந்தால், நாம் பயப்பட இடமுண்டு. அவ்வாறு சொல்லப்படவில்லை. அதனால், 'நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும் தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்' (எபிரெயர் 4:16).
நாம் தேவனிடம் ஜெபிக்க இன்னொரு காரணத்திற்காகவும் ஏவப்படுகிறோம். தேவன் கிருபாசனத்தின் மீதிருந்துகொண்டு நம்மோடு பேசக் காத்திருக்கிறார் என்பது மட்டுமல்ல; அதனருகில் இயேசுகிறிஸ்து இருந்து கொண்டு, தமது விலையேறப்பெற்ற இரத்தத்தை அதன்மேல் தெளித்துக்கொண்டிருக்கிறார். எனவே 'தெளிக்கப்பட்ட இரத்தத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்' (எபிரெயர் 12:24) என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிரதான ஆசாரியன் சட்டப்படி பரிசுத்த ஸ்தலத்திற்குள் இரத்தத்தோடே பிரவேசிக்கிறான் (எபிரெயர் 9:7). எதற்காக இப்படிச் செய்யவேண்டும்? தேவன் இரக்கமும் அதே சமயம் நீதியுமுள்ளவர். இரத்தமானது, இரக்கத்திற்காக வருகிற மக்கள் மீது நீதி செலுத்தப்பட்டுவிட்டது என்பதற்காகத் தெளிக்கப்படுகிறது (லேவியராகம் 16:13-17).
அதாவது, நமது தகுதியின்மை, பாவத்தன்மை இவற்றோடு கிறிஸ்துவின் மூலம் தேவனிடம் இரக்கத்திற்காக நாம் வருவதற்குத் தடையாயிருக்கக்கூடாது என்பதற்காக இரத்தம் தெளிக்கப்பட்டிருக்கிறது. பாவிகளாயிருப்பதால் தேவனிடம் வரத் தடைபட்டிருக்கிறோம் என்று சிலர் கூறலாம். பாவிகளாயிருந்து, தேவனிடம் மாய்மாலத்தோடு வருவதாயிருந்தால் அது தவறாகும். ஆனால், பாவத்தினால் மனமுடைந்து, நம்முடைய பாவ அழுக்கிலிருந்தும் கேட்டிலிருந்தும் விடுதலை பெற விரும்பி தேவனிடம் வரும்பொழுது, நாம் நம்முடைய நிலையைப் பற்றி வருத்தப்பட வேண்டியதில்லை. அவர் கேளாமல் இருக்கமாட்டார். தெளிக்கப்பட்ட இரத்தம் விலையேறப்பெற்ற மதிப்புள்ளது. அதனால் நம் மீது நீதி செலுத்தப்படுவது நிறுத்தப்படுகிறது; அதே சமயம் தேவனின் இரக்கம் நம்மேல் தாராளமாய் இறங்க உதவுகிறது. ஆகவே 'பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்க அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறது' (எபிரெயர் 10:19,20). கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்படுகிறது மட்டுமல்ல, அந்த இரத்தம் பேசுகிறதாயும் இருக்கிறது. "அந்த இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்துபோவேன், வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்" (யாத்திராகமம் 12:13).
எனவே, நாம் தெளிந்த புத்தியோடும் தாழ்மையோடும் நடந்துகொள்ளவேண்டும். கடவுளிடம், அவருடைய குமாரனுடைய நாமத்தில் போய் அவரோடு பேசலாம். பரிசுத்த ஆவியானவர் ஒத்தாசையோடு இதைச் செய்தால், ஆவியோடும் உண்மையோடும் ஜெபிப்பது என்ன என்று அறிந்துகொள்வோம்.
கருத்தில் கொள்ள வேண்டிய சில நிறைவு வார்த்தைகள்
அ) பொதுவாக, இப்பகுதியை ஜெபமே செய்யாதவர் விரும்பமாட்டார்கள். 'நான் ஜெபம் செய்வேன்' என்று அப்போஸ்தலன் சொல்லுகிறார். கிறிஸ்தவர்களும் அப்படியே சொல்லுவார்கள். 'பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான்' (சங்கீதம் 32:6). ஜெபிக்காவிட்டால் நாம் உண்மையில் நிர்ப்பாக்கியர்களாயிருப்போம்! யாக்கோபு ஜெபித்து இஸ்ரவேல் என்று பெயரைப் பெற்றுக்கொண்டான் (ஆதியாகமம் 32:28). நாமுங்கூட அவர் மூலமாக அந்தப் பெயரைப் பெற்றிருக்கிறோம் (கலாத்தியர் 6:16). நம்மில் அநேகர் ஜெபிக்காமலே, மற்ற பிராணிகளைப் போல படுக்கைக்குச் செல்லுகிறோம்; அவ்வாறே எழுந்திருக்கிறோம். என்ன பரிதாபம்! அப்படிப்பட்ட நீங்கள் இரக்கத்தைப் பெற வாஞ்சிக்கவில்லையா? மற்றப் பிராணிகளும் பறவைகளுங்கூட நியாயத்தீர்ப்பு நாளிலே நம்மீது குற்றஞ்சாட்டும்! அவைகளுங்கூட ஏதோ குரலை எழுப்புகின்றன. பரலோகத்திற்குச் செல்ல வேண்டுமென்று வாஞ்சித்துக் கேட்காவிட்டால், நரகத்தில் நித்தியத்தைக் கழிக்கப் போகிறோமென்பது நிச்சயம்.
ஆ) ஜெபிக்காமலிருப்பதால், பரிசுத்த ஆவியையும் அவர் மூலம் செய்யப்படுகிற ஜெபத்தையும் நாம் அவமதிக்கிறோம் என்று அர்த்தமாகும். தேவனை அவமதிக்கப் பயப்படுகிறோம்; ஆனால் அவர் கொடுத்துள்ள பரிசுத்த ஆவியானவரைப் பற்றி நாம் நினைப்பதே கிடையாது. இதற்காகவா தேவன் நம் இருதயங்களில் பரிசுத்த ஆவியைக் கொடுத்திருக்கிறார்? இதுவா தேவனுக்கு நாம் செய்கின்ற பணி? பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக நாம் கிரியை செய்தால், கோராகுக்கும் அவன் ஆட்களுக்கும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகப் பேசினபோது நடந்ததுப் போல நமக்கும் நடக்கலாம் (எண்ணாகமம் 16:31-35; எபிரெயர் 10:29). பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பொய் சொன்ன அனனியா, சப்பீராளுக்கு நடந்ததை நாம் அறிவோம் (அப்போஸ்தலர் 5:1-8). அதேபோல் பரிசுத்த ஆவியை ஏளனமாக நினைத்த சீமோனுக்குச் சொல்லப்பட்டதை நாம் அறிவோம் (அப்போஸ்தலர் 8:18-22). பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக நாம் செய்கின்ற பாவம் நமக்கு மன்னிக்கப்படமாட்டாது என்று நமது இரட்சகர் இயேசு கூறியுள்ளார் (மத்தேயு 12:31; மாற்கு 3:29).
அதேபோல் யெரொபெயாம் ஜனங்களை கன்றுகுட்டிகளை வணங்கும்படி செய்து, தேவனுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து அருவருப்பானதையும் செய்தான் என்று பார்க்கிறோம் (1 இராஜாக்கள் 12:26-33). எனவே, நாம் இங்கே எச்சரிக்கப்படுகிறோம். தேவனுக்கு விரோதமான காரியங்களை நாம் செய்யத் துணியக்கூடாது. வேதத்தில் கூறப்படாத காரியங்களைச் செய்யத் துணியக் கூடாது. நமக்குச் செம்மையாய்த் தோன்றுகின்ற காரியங்களை மட்டும் செய்யத் துணியக்கூடாது. 'தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு' (2 தீமோத்தேயு 3:5) என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேவனே நம் இருதயங்களை ஆண்டு, ஜெபத்தின் ஆவியையும் அதன் பெலத்தையும் தந்து, தேவனுக்கு முன்பு நம் ஆத்துமாக்களை ஜெபத்தில் ஊற்றக் கற்றுக்கொடுப்பாராக.
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.