புத்தகங்கள்

       ஜெபத்தை நாம் எப்படி உபயோகிப்பது என்பதை பற்றி சில காரியங்களை கவனிப்போம். ஜெப வாழ்க்கையைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய சில கருத்துக்களையும் ஒருசில உற்சாகப்படுத்தும் வார்த்தைகளையும், சில எச்சரிப்புகளைப் பற்றியும் கூற விழைகின்றேன்.

சில உண்மைகள் அல்லது கருத்துக்கள்

ஜெபமானது தேவனின் ஒரு கட்டளை. அதன் மூலம் தேவனுக்குப் பக்கத்தில் செல்ல முடியும். எனவே, ஒவ்வொரு ஆத்துமாவும், ஜெபிக்கும் பொழுது, அவருடைய உன்னத பிரசன்னத்தை உணருகின்ற வகையில், அவருடைய இரக்கத்தின் உதவியை நாடி, ஜெபிக்க வேண்டும். ஒருவன் ஒரு ராஜாவுக்கு முன்பு மரியாதையின்றி நடப்பானாகில், அது அம்மனிதனுக்கு கேவலம் ஆனால், கடவுளுக்கு முன்பு அப்படி நடந்துகொண்டால் அது பாவமாகும். ஒரு ஞானமுள்ள ராஜாவுக்கு, எப்படி மரியாதையற்ற செயல்களும், சொற்களும் எரிச்சலை உண்டுபண்ணுமோ, அப்படியே தேவனும், மூடரிலும், அவர்கள் பலியிலும் பிரியப்படுவதில்லை. (பிரசங்கி 5:1,4) தேவன் நீண்ட, திறமையான பேச்சில் பிரியப்படுவதில்லை. நொறுங்குண்ட, நறுங்குண்ட இருதயத்திலும், பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் பிரியமாயிருக்கிறார் (சங்கீதம் 51:17) (ஏசாயா 57:15). எனவே, ஐந்து காரியங்கள், ஜெபத்திற்கு தடைகளாக இருக்கக்கூடும். அவற்றைக் கீழே காண்போம்.

முதலாவது

முதலாவதாக, நம் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தோமானால், தேவன் நம் ஜெபத்தை கேட்கமாட்டார். (சங்கீதம் 66:18) நாம் எதை வெறுத்து விட்டுவிட வேண்டுமென்று ஜெபிக்கிறோமோ, அதையே நம் இருதயம் வாஞ்சிக்கும். இதுதான் இருதயத்தின் அக்கிரம சிந்தையாகும். எனவே. "தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்: அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;'' (ஏசாயா 29:13) (எசேக்கேயல் 33:31) என்று சொல்லப்பட்டுள்ளது. ஒருவன் நம்மிடம் பிச்சைக் கேட்டு வாங்கி, அதை நாய்களுக்குப் போட்டால் நமக்கு எவ்வளவு எரிச்சலாயிருக்கும். ஒரு சமயத்தில் எனக்குக் கொடு என்று கேட்டு. அடுத்த நிமிஷம் அது எனக்கு வேண்டாமென்று சொன்னால். அப்படிப்பட்ட மனிதனிடம் நாம் எவ்வளவு கோபப்படுவோம்! இப்படிப்பட்ட மனிதரையே நாம் ஜெபிக்கிறவர்களாக பார்க்கிறோம். அவர்கள் 'உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உமது சித்தம் செய்யப்படுவதாக என்று ஜெபித்து விட்டு, தங்கள் செயல்களாலும், இருதயத்தாலும், நாள் முழுவதும் அதற்கு மாறாக நடக்கின்றார்கள். அவர்கள் 'ஜெபம் பாவமாகும்' (சங்கீதம் 109:7). 'அவர்களுக்கு தேவன் உத்தரவு கொடுப்பதில்லை' (2 சாமுவேல் 22:42).

இரண்டாவது

மேலும், வெளித்தோற்றத்திற்கென்று ஜெபிக்கிறவர்களுடைய ஜெபத்தை, தேவன் ஏற்றுக்கொள்ளமாட்டார். அதற்கு பதிலளிக்கவுமாட்டார். இதில் இரண்டு வகை மனிதர்களுண்டு.

1) இதில் சில போதகமாரும் அடங்கியிருப்பார்கள். தேவனை வழிபடுவது போல் காட்டினாலும் உண்மையில் அவர்களது முழுக்கவனமும், தங்கள் வயிற்றின் மீதே இருக்கும். இவர்களை ஆகாபின் தீர்க்கதரிசிகளும் நேபுகாத்நேச்சாரின் தீர்க்கதரிசிகளும் போன்றவர்களில் பார்க்கிறோம். அவர்கள் பக்தியுள்ளவர்களைப் போல காட்சியளித்தாலும், உண்மையில், எல்லா ஜெபங்களிலும், லௌகீக காரியங்களையே பெற்றுக்கொள்ள வாஞ்சிக்கிறார்கள்.

2) மற்றொரு வகையான ஜெபிக்கிறவர்கள், சுயமேன்மையும், பாராட்டுகளையும் எதிர்பார்க்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று சொல்லப்பட்டிருக்கிறது (மத்தேயு 6:5). இவர்களை இதன் மூலம் அறியலாம். (1) சத்தமாய் ஜெபிப்பார்கள் (2) முடிந்த பின்பு, பாராட்டுகளை எதிர்பார்க்கின்றனர். (3) மற்றவர்களுடைய பாராட்டுகளைப் பொறுத்து, அவர்களது இருதயம் பூரிக்கிறது. (4) நீண்ட ஜெபம் செய்ய விரும்புகிறார்கள். ஜெபத்தை நீட்டவேண்டுமென்றே, அதே வார்த்தைகளை மறுபடியும், மறுபடியும் சொல்லுகிறார்கள். (மத்தேயு 6:7) நீண்ட ஜெபத்தையே வாஞ்சிக்கிறார்களே ஒழிய, அது எவ்வகை இருதயத்திலிருந்து வருகிறது என்பதை நினைப்பதே கிடையாது. மனிதருடைய புகழ்ச்சியாகிய பலனை எதிர்பார்க்கிறார்கள். எனவே, தங்கள் அறையில் ஜெபிப்பதை விட, தெருக்களில் ஜெபிக்கவே பிரியப்படுகிறார்கள். ஏதோ ஒரு சமயம் அறையில் ஜெபித்தாலும், பேசிமுடித்துவிட்டு போய்விடுகிறார்கள். தேவன் பேசுவதைக் கேட்க விரும்புவதேயில்லை. (சங்கீதம் 85:8)

மூன்றாவது

கேட்கப்படாத, மூன்றாவது வகை ஜெபமானது, ஒன்று தவறான காரியங்களுக்காக அல்லது, சரியான காரியங்களை தவறான வகையில் பயன்படுத்துவதற்காக ஜெபிப்பதாகும். "நீங்கள் விண்ணப்பம் பண்ணியும் பெற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்கள்" (யாக்கோபு 4:2-4), ஜெபத்தில் நம்முடைய நோக்கம், தேவனின் சித்தத்துக்கு மாறாகவிருந்தால், அதுவே, நம் ஜெபங்கள் தள்ளப்படுவதற்கு காரணமாகவும் அமைகின்றது. எனவே நம்மில் அநேகர் பல காரியங்களுக்காக ஜெபித்தும் பெற்றுக் கொள்ளாமலிருக்கிறோம். தேவன் அப்படிப்பட்ட ஜெபங்களுக்கு பதிலளிக்காமல் அமைதியாக இருந்துவிடுகிறார்.

கேள்வி : சில சமயங்களில் அவர்கள் இருதயம், தவறான நோக்கத்தோடு ஜெபித்தாலும் கொடுத்துவிடுகிறாரே. இஸ்ரவேல் ஜனங்களுக்கு வனாந்தரத்தில் காடைகளைக் கொடுத்தாரே. அது எப்படி? (சங்கீதம் 106:14).

விடை : அப்படிக்கொடுத்தால், அவர்களை நியாயந்தீர்க்கின்ற வகையில் கொடுத்தார் என்று அறியவேண்டும். தமது இரக்கத்தில் அதைக் கொடுக்கவில்லை. அதே சமயம் அதைக்கொடுத்துவிட்டு அவர்கள் 'ஆத்துமாக்களில் இளைப்பை அனுப்பினார்' (சங்கீதம் 106:15) என்று வாசிக்கிறோம். அப்படிப்பட்டதான விடை நமக்கு கிடைத்தால் நாம் பரிதபிக்கப்படத்தக்கவர்கள்!

நான்காவது

கேட்கப்படாத மற்றொருவகை ஜெபமானது, இயேசுவின் பெயரில் அனுப்பப்படாத ஜெபமாகும். கடவுளே ஜெபத்தைக் கட்டளையிட்டிருந்தாலும், ஜெபத்திற்கு அவர் விடையளிப்பதாக வாக்குக் கொடுத்திருந்தாலும், கிறிஸ்தவின் மூலம் ஜெபம் ஏறெடுக்கப்படாவிட்டால், அது நிச்சயம் கேட்கப்படமாட்டாது (யோவான் 14:13-14; 15:16; 16:23-26) எதைச்செய்தாலும், கிறிஸ்துவின் நாமத்திலே செய்ய ஏவப்பட்டிருக்கிறோம் (1 கொரிந்தியர் 10:31) நம்மில் அநேகருக்கு, கிறிஸ்துவின்மூலம், தேவனிடம் வருவது என்ன என்றே தெரியாது. ஆகவே, இன்னும் பலர் தங்கள் பாவ வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் பாவ ஜெபத்தை செய்து கொண்டிருக்கிறார்கள், தங்கள் பாவத்திலே மரித்தும் போகிறார்கள்.

ஐந்தாவது

இறுதியாக, ஜெபத்திற்குத் தடையாக உள்ள காரியம், ஜெபத்தின் வல்லமையின்றி, வெறுமையான ஜெபத்தை ஜெபிப்பதாகும். எழுதப்பட்ட ஜெபங்களை ஏறெடுக்க நாம் எப்பொழுதும் கருத்துள்ளவர்களாய் இருக்கிறோம். ஆனால், வல்லமையோடு ஜெபிக்க மறந்துவிடுகிறோம். ஜெபிக்கும் பொழுது ஆவியோடும். வல்லமையோடும் ஜெபிக்கிறோமா என்று நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அவர்கள் ஜெபம் எனக்கு அருவருப்பானது என்று கர்த்தர் சொல்லுகிறார். (நீதி. 28:9) அவர்கள் 'என்னை நோக்கி கூப்பிடுகிறதில்லை. என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்' என்று கர்த்தர் சொல்லுகிறார். (ஓசியா 7:14)

எனவே, தேவனிடம் ஜெபிப்பதற்கு முன்பு எதற்காக விண்ணப்பிக்கப் போகிறோமென்று நிச்சயித்துக் கொள்ள வேண்டும். அநேகர் தங்கள் வார்த்தைகளால் வீணாக அலப்புகிறார்கள். தங்களுக்கு தேவையானதென்று அவர்கள் அறியாதிருக்கிறார்கள். முதலாவது நமக்குத் தேவையானதென்ன தென்று நிச்சயித்துக்கொண்டு, அதற்காகவே திட்டமாக ஜெபிக்க வேண்டும்.

  1. தடை: எதற்காக ஜெபிக்க வேண்டுமென்று தெரியாவிட்டால், நான் ஜெபிக்கக்கூடாதா?

விடை : நன்றாய் ஜெபிக்கலாம். தேவனிடம் எதற்காக ஜெபிக்க வேண்டுமென்று அவரிடமே கேட்கலாம். சீஷர் அவ்வாறு கேட்டார்கள் (லூக்கா 8:9). பரிசுத்தவான்கள் தங்களையேத் தங்களுக்குக் காண்பிக்கும்படி தேவனிடம் ஜெபிக்கிறார்கள் (சங்கீதம் 39:4) அப்படி ஜெபிக்கிற சமயம், தேவன் நமக்கு உத்தரவு கொடுத்து, நாம் அறியாததும், நமக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை நமக்கு அறிவிப்பார். (எரேமியா 33:3)

மேலும் தேவனிடம் ஜெபிக்கும் பொழுது, நம்முடைய இருதயமும், வார்த்தையும் ஒன்றுபட்டு இருக்கவேண்டும். எந்த அளவுக்கு இருதயத்தை ஈடுபடுத்த முடியுமோ, அந்த அளவுக்குத்தான் வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். மற்றபடி ஜெபம் வெறும் வார்த்தைகளாகவே போய்விடும்.

எச்சரிப்பு : 1 நமக்குப் பரிசுத்தாவியின் உதவியில்லை. ஆகவே, நாங்கள் ஜெபிப்பதில்லை என்று நம்மில் சிலர் சொல்லிவிடக்கூடும். சாத்தான் பொதுவாக நம் அருமையான ஜெபங்களைத் தடை செய்ய தன்னால் ஆனதைச் செய்யப் பார்ப்பான். மாய்மாலக்காரரை நல்லவர்கள் போலவும், தேவனால் அங்கீகாரம் பெற்றவர்கள் போலவும் நமக்கு காண்பிப்பான். உண்மையில், தேவனுக்கு அவர்கள் ஜெபம் அருவருப்பானது. யோசுவாவிடம் செய்ததுபோல, நம் செய்கைகளை தேவன் அங்கீகரிக்கவில்லை என்று கூறுவான். (ஏசாயா 65:5; சகரியா 3:1) ஆனால் நாம் அவன் வஞ்சகத்தால் விழுந்துப்போகக்கூடாது.

எச்சரிப்பு : 2 நமக்கு ஏற்படுகின்ற சோதனைகளாலும், நம் இருதயத்தின் சர்ப்பனைகளாலும் மனம் தளர்ந்து போய் ஜெபத்தை நிறுத்திவிடக்கூடாது. தடைகள் ஏற்படலாம். அவைகளுக்கு எதிராக நின்று தேவனிடம் ஜெபிக்க வேண்டும். தீழ்ப்பான நிலையினின்று விடுவிக்க, ஊக்கமாய் ஜெபிக்க வேண்டும். ஜெபிப்பதை விட்டுவிடவே கூடாது. தாவீதைப் போல, என் அக்கிரமம் பெரிது. அதை மன்னித்தருளும் என்று ஜெபிக்க வேண்டும்.

சில உற்சாகமூட்டும் வார்த்தைகள்

எளிமையான, சோதனைக்குட்பட்டு மனமடிவாயிருக்கிற மக்களுக்கு சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். நித்திய ஜீவனுக்கென்று பண்ணுகிற ஜெபம் ஆவியோடு ஏறெடுக்கப்பட வேண்டும். ஏனெனில் ஆவியானவர் மட்டுமே தேவ சித்தப்படி ஜெபிக்க நமக்குக் கற்றுக்கொடுப்பார். (ரோமர் 8:27) ஆனாலும் அநேக ஆத்துமாக்களை ஆவியானவரே ஜெபிக்கும்படி ஏவினாலும், தாங்கள் தேவ மக்களென்று நம்புவதற்கு அவர்களுக்கு போதுமான விசுவாசம் இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்களை வழி நடத்துவதற்காக சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன்.

1) லூக்கா 11:8 -ல் உள்ள வேத பகுதியானது, இயேசு கிறிஸ்து மீது வாஞ்சையாயிருக்கின்ற ஆத்துமாவுக்கு மிகவும் பொருத்தமானது. அந்த உவமையில், இயேசு, மூன்று அப்பங்களைக் கேட்டு தன் நண்பனிடம் சென்ற ஒரு மனிதனைப் பற்றிப் பேசுகிறார். முதலாவது அந்த நண்பன் மறுத்து விட்டாலும், அவன் வருந்திக் கேட்டதினிமித்தம் இவனுக்கு கேட்டதைக் கொடுப்பான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வாறே சில ஆத்துமாக்கள், தங்கள் அவிசுவாசத்தால் தேவனிடம் கேட்கத் துணிவதில்லை. தாங்கள் தேவனின் நண்பரென்று உணர முடிவதில்லை. ஆனால் அவர்கள் தட்டுவதையும், தேடுவதையும், கேட்பதையும் விட்டுவிடக் கூடாது. கிறிஸ்து கவனிக்க சொல்வதை வேண்டும்."அவன் சிநேகிதனாய் இருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடா விட்டாலும் தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினின் நிமித்தமாவது எழுந்திருந்து அவனுக்கு தேவையானதைக் கொடுப்பான்".

ஏழை ஆத்துமாவே! நீயும், தேவனைப்பற்றி அவ்வாறே நினைக்கலாம். தேவன் என் ஜெபத்தைக் கேதக மாட்டார், என்னை அவர் நண்பனென்று கருதுவதில்லை, என் துர்ச் செய்கையால் நான் தேவனுக்கு விரோதி என்றெல்லாம் நினைக்கலாம் (கொலோ.1:21). ஒரு வேளை கடவுள், அந்த நண்பன் உவமையில் சொன்னது போல, என்னை தொந்தரவு செய்யாதே என்று சொல்லுகிறாரென்று நீ நினைக்கலாம். ஆனால் நான் சொல்லுகிறேன், நீ தட்டிக்கொண்டே, அழுதுகொண்டே மனமுடைந்த நிலையில் நின்று கொண்டேயிருந்தால், அவர் உனக்கு நண்பனாயிருப்பதால், உதவி செய்யாவிட்டாலும், நீ வருந்திக் கேட்பதனால் உனக்கு தேவையானதைக் கொடுப்பார். இதையே அநீதியான நியாயாதிபதியும், ஏழை விதவையுமான மற்ற உவமையில் காண்கிறோம். (லூக்கா 18). என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து சொல்லக்கூடும். தேவனை வருந்திக் கேட்பதன் மூலம், நாம் ஜெபத்திற்கு விடையைப் பெற்றுக் கொள்ளலாம். இப்படியே நம் வாசற்படிக்கு வருகிற பிச்சைக்காரரிடமும் நடந்தது கொள்ளுகிறோமல்லவா? வருந்திக் கேட்கிறவர்கள் பிச்சை வாங்காமல் போவதில்லை. நாமும் கொடுத்து விடுகிறோமல்லவா! ஜெபத்திலும் நாம் அப்படியே செய்யவேண்டும். விடாப்பிடியாக ஜெபித்தால், தேவன் நாம் கேட்பதை நிச்சயம் கொடுப்பார். (லூக்கா 11:8)

2) தேவன், தம்மை நோக்கிக் கூப்பிடுகிற ஆத்துமாக்களின் ஜெபத்தைக் கேட்பதற்காக தமது ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அதுதான் கிருபாசனம் (எரேமியா 4:16; யாத்திராகமம் 25:22) சுவிசேஷத்தின் காலத்தில், தேவன், இக் கிருபாசனத்தில், இரக்கத்தையும் மன்னிப்பையும் காண்பிக்கக் காத்திருக்கிறார். அங்கிருந்துகொண்டு பாவியோடு பேசவும், உறவாடவும் காத்திருக்கிறார். 'அங்கே நான் உன்னை சந்திப்பேன்; அங்கே உன்னோடு சொல்லுவேன்' என்று கர்த்தர் சொல்லுகிறார். நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது. 'கிருபாசனத்திலிருந்து' என்பதைத்தான். இது எதைக் காட்டுகிறதென்றால், நாம் பாவிகளாகவே அவரிடம் இரக்கத்திற்காக தைரியமாகப் போகலாம். அவர் நம் ஜெபத்தைக் கேட்பார். ஒருவேளை அவர் நம்மிடம் 'உன்னை நியாயாசனத்திலிருந்து சந்திப்பேன் என்று சொல்லியிருந்தால், நாம் பயப்பட இடமுண்டு. அவ்வாறு சொல்லப்படவில்லை. அதனால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் உதவி பெற அவருடைய கிருபையை அடையவும். தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்' (எபி. 4:16)

3) நாம் தேவனிடம் ஜெபிக்க இன்னொரு காரணத்திற்காகவும் ஏவப்படுகிறோம். தேவன் கிருபாசனத்தின் மீதிருந்துகொண்டு நம்மோடு பேசக் காத்திருக்கிறார் என்பது மட்டுமல்ல, அதனருகில் இயேசுகிறிஸ்து இருந்து கொண்டு தமது விலையேறப்பெற்ற இரத்தத்தை அதன்மேல் தெளித்துக் கொண்டிருக்கிறார். எனவே 'தெளிக்கப்பட்ட இரத்தத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்' (எபிரேயர் 12:24) என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிரதான ஆசாரியன், சட்டப்படி, பரிசுத்த ஸ்தலத்திற்குள் இரத்தத்தோடே பிரவேசிக்கிறான். (எபிரேயர் 9:7) எதற்காக இப்படிச் செய்யவேண்டும்? தேவன் இரக்கமும் அதே சமயம் நீதியுமுள்ளவர். இரத்தமானது, இரக்கத்திற்காக வருகிற மக்கள் மீது நீதி செலுத்தப்பட்டது என்பதற்காக தெளிக்கப்படுகிறது. (லேவியராகம் 16:13-17)

அதாவது நமது தகுதியின்மை, பாவத்தன்மை, இவற்றோடு கிறிஸ்துவின் மூலம் தேவனிடம் இரக்கத்திற்காக நாம் வருவதற்கு தடையாயிருக்கக்கூடாது என்பதற்காக இரத்தம் தெளிக்கப் பட்டிருக்கிறது. பாவிகளாயிருப்பதால். தேவனிடம் வரத் தடைபட்டிருக்கிறோம் என்று சிலர் கூறலாம். பாவிகளாயிருந்து, தேவனிடம் மாய்மாலத்தோடு வருவதாயிருந்தால் அது தவறாகும். ஆனால் பாவத்தினால் மனம் உடைந்து. நம்முடைய பாவ அழுக்கிலிருந்து, கேட்டிலிருந்து விடுதலை பெற விரும்பி தேவனிடம் வரும்பொழுது நாம் நம்முடைய நிலையைப் பற்றி வருத்தப்பட வேண்டியதில்லை. அவர் கேளாமல் இருக்கமாட்டார். தெளிக்கப்பட்ட இரத்தம் விலையேறப்பெற்ற மதிப்புள்ளது. அதனால் நம் மீது நீதி செய்யப்படுவது நிறுத்தப்படுகிறது. அதே சமயம் தேவனின் இரக்கம் நம்மேல் தாராளமாய் இறங்க உதவுகிறது. ஆகவே 'பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்க அவருடைய இரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கிறது ' (எபிரேயர் 10:19,20) கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்படுகிறது மட்டுமல்ல, அந்த இரத்தம் பேசுகிறதாய் இருக்கிறது. "அந்த இரத்தத்தைக் கண்டு கடந்துபோவேன், வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்'' (யாத்திராகமம் 12:13)

எனவே நாம் தெளிந்த புத்தியோடும், தாழ்மையோடும். நடந்துகொள்ளவேண்டும். கடவுளிடம், அவருடைய குமாரனுடைய நாமத்தில் போய் அவரோடு பேசலாம். பரிசுத்த ஆவியானவர் ஒத்தாசையோடு இதைச் செய்தால் ஆவியோடும், உண்மையோடும் ஜெபிப்பது என்ன என்று அறிந்துகொள்வோம்.

சில கழந்துகொள்ளும் வார்த்தைகள்

அ) பொதுவாக, இப்பகுதியை, ஜெபமே செய்யாதவர் விரும்பமாட்டார்கள். 'நான் ஜெபம் செய்வேன்' என்று அப்போஸ்தலன் சொல்லுகிறார். கிறிஸ்தவர்களும் அப்படியே சொல்லுவார்கள். 'பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான்' (சங்கீதம் 32:6) ஜெபிக்காவிட்டால் நாம் உண்மையில் நிர்ப்பந்தராயிருப்போம்! யாக்கோபு ஜெபித்து. இஸ்ரவேல் என்று பெயரைப் பெற்றுக் கொண்டான். (ஆதியாகமம் 32:28) நாமுங்கூட அவர் மூலமாக அந்தப் பெயரைப் பெற்றிருக்கிறோம். (கலாத்தியர் 6:16). அநேகர் நம்மில் ஜெபிக்காமலே, மற்ற பிராணிகளைப் போல, படுக்கைக்குச் செல்லுகிறோம், அவ்வாறே எழுந்திருக்கிறோம். என்ன பரிதாபம்! அப்படிப்பட்ட நீங்கள் இரக்கத்தைப் பெற வாஞ்சிக்கவில்லையா? மற்றப் பிராணிகளும் பறவைகளுங்கூட, நியாயத்தீர்ப்பு நாளிலே, நம்மீது குற்றஞ்சாட்டும்! அவைகளுங்கூட ஏதோ குரலை எழுப்புகின்றன. பரலோகத்திற்கு செல்ல வேண்டுமென்று வாஞ்சித்துக் கேட்காவிட்டால், நரகத்தில் நித்தியத்தைக் கழிக்கப் போகிறோமென்பது நிச்சயம்.

ஆ) ஜெபிக்காமலிருப்பதால், பரிசுத்த ஆவியையும் அவர் மூலம் செய்யப்படுகிற ஜெபத்தையும் நாம் அவமதிக்கிறோம் என்று அர்த்தமாகும். தேவனை அவமதிக்க பயப்படுகிறோம். ஆனால் அவர் கொடுத்துள்ள பரிசுத்த ஆவியானவரைப் பற்றி நாம் நினைப்பதே கிடையாது. இதற்காகவா, தேவன் நம் இருதயங்களில் பரிசுத்த ஆவியைக் கொடுத்திருக்கிறார்? இதுவா தேவனுக்கு நாம் செய்கின்ற பணி? பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக நாம் கிரியை செய்தால். கோராகுக்கும் அவன் ஆட்களுக்கும் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக பேசின போது நடந்ததுப் போல நமக்கும் நடக்கலாம். (எண்ணாகமம் 16:31-35; எபிரேயர் 10:29). பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பொய் சொன்ன அனனியா, சப்பீராளுக்கு நடந்ததை நாம் அறிவோம். (அப்போஸ்தலர் 5:1-8) அதேபோல் பரிசுத்த ஆவியை ஏளனமாக நினைத்த சீமோனுக்கு சொல்லப்பட்டதை நாம் அறிவோம் (அப்போஸ்தலர் 8:18-22). பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக நாம் செய்கின்ற பாவம் நமக்கு மன்னிக்கப் படமாட்டாது என்று நமது இரட்சகர் இயேசு கூறியுள்ளார் (மத்தேயு 12:31; மாற்கு. 3:29).

அதேபோல் யெரொபெயாம், ஜனங்களை, கன்றுகுட்டிகளை வணங்கும்படி செய்து, தேவனுக்கு விரோதமாய் பாவஞ்செய்து. அருவருப்பானதையும் செய்தான் என்று பார்க்கிறோம். (1 இராஜாக்கள் 12:26-33). எனவே, நாம் இங்கே எச்சரிக்கப்படுகிறோம். தேவனுக்கு விரோதமான காரியங்களை நாம் செய்யத் துணியக்கூடாது. வேதத்தில் கூறப்படாத காரியங்களை செய்யத் துணியக் கூடாது. நமக்கு செம்மையாய்த் தோன்றுகின்ற காரியங்களை மட்டும் செய்யத் துணியக்கூடாது. 'தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு' (2 தீமோத்தேயு 3:5) என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேவனே, நம் இருதயங்களை ஆண்டு, ஜெபத்தின் 'ஆவியையும்' அதன் பெலத்தையும் பெற்று தேவனுக்கு முன்பு நம் ஆத்துமாக்களை ஜெபத்தில் ஊற்றக் கற்றுக் கொடுப்பாராக.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.