நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் என்று ரோமர் 12:2ல் நமக்கு சொல்லப்படிருக்கிறது. தேவனுடைய சித்தத்தை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற கற்பனையை நாம் இங்குக் காண்கிறோம். கற்பனை மட்டுமல்ல, தேவனுடைய சித்தத்தை செய்பவர்களுக்கு, தேவனுடைய வாக்குத்தத்தத்தையும் நாம் காண்கிறோம்.
தேவனுடைய சித்தத்தை செய்பவன் என்றென்றைக்கும் நிலைத்திருப்பான் என்று 1யோவான் 2:17ல் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வாக்குத்தத்தம் மட்டுமல்ல, தேவனுடைய சித்தத்தை செய்வது மிகவும் பாக்கியமும் ஆகும். இயேசு சொன்னார், தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் (மாற் 3:35). நீங்கள் தேவனுடைய சித்தத்தை செய்யும்பொழுது, இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்திருக்கிறீர்கள் என்பதைக் கண்டுக்கொள்ளுவீர்கள். ஏனென்றால் இயேசு அவருடைய வருகையைக்குறித்து எபி 10:9ல், தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். சொன்னதுமட்டுமல்ல தன் வாழ்க்கை முழுவதும் அதையே அவர் செய்தார். தன்னுடைய வாழ்க்கையின் முடிவிலேயும் கெத்செமனே தோட்டத்தில் ஜெபித்தபொழுதும், என் சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின் படியே ஆகக் கடவது என்று ஜெபித்தார். பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல, பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று நாம் ஜெபிக்க வேண்டும் என்றும் நமக்குக் கற்றுக்கொடுத்தார். நாம் தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ளுவதை முக்கியப்படுத்தும் பல வேதவசனங்களை நாம் வேதத்தில் காணலாம். ஆனாலும், ஒவ்வொரு விசுவாசியின் மனதிலும் எழும் கேள்வி, தேவனுடைய சித்தத்தை எப்படி அறிந்துக்கொள்ளுவது?
நம்முடைய வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் அல்லது முடிவும் தேவனுடைய சித்தத்தின்படி அமைய வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஏனென்றால் தேவனுடைய சித்தத்தை செய்வதில் ஒரு பாதுகாப்பு இருக்கிறது. ஒரு திட்டம் அல்லது செயல் எத்தனை கவர்ச்சிகரமாக இருப்பினும் அது தேவனுடைய சித்தத்தம் இல்லை என்றால் நாம் அதிலிருந்து விலகியிருக்க வேண்டும். இதுவே ஒவ்வொரு உண்மையான தேவனுடைய பிள்ளையின் மனப்போக்கு. இதைக்குறித்து அவன் தெளிவான எண்ணம் கொண்டிருக்கிறான். அவன் தேவனுடைய சித்தத்தை தான் செய்கிறான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள விரும்புகிறான்.
கிறிஸ்தவ வட்டாரத்தில், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்றும் வரம்பெற்ற பெரிய ஊழியர்கள் என்றும் அழைத்துக்கொள்ளும் இன்னுமொரு கும்பல் இருக்கிறது. ஒரு உண்மை விசுவாசியின் தேவனுடைய சித்தத்தின் படி வாழவேண்டும் என்ற தீர்மானத்தை தங்கள் சுய ஆதாயத்திற்காக வியாபார நோக்கில் பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள். அவர்கள் என்ன சொல்லுவார்கள் என்றால், எங்களிடத்தில் வாருங்கள், நாங்கள் உங்கள் மீது கைகளை வைத்து ஜெபம் செய்வோம், நாங்கள் தரிசங்களைக் காண்போம், தேவனுடைய சத்தத்தை கேட்போம், உங்களைக் குறித்து தன்னுடைய சித்தம் என்ன என்பதை தேவன் எங்களுக்கு வெளிப்படுத்துவார், நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம் என்கிறார்கள். மிக மோசமான செய்தி என்னவென்றால், பெருங்கூட்ட கிறிஸ்தவர்கள் அவர்கள் பின்னால் சென்றுக்கொண்டிருக்கிறார்கள். இதில் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், முதலாவது இவர்கள் உங்கள் பணத்தையும் பிறகு உங்கள் ஆத்துமாக்களையும் வாரிக்கொள்ளுவார்கள்!
நான் ஒரு சவாலான கேள்வியை இவர்களுக்கு முன் வைக்கிறேன். ஒருவரும் அதற்கு இன்னும் பதில் சொல்லவில்லை. சாத்தானும் ஒளியின் தூதனைப்போல வந்து உங்களை ஏமாற்றுகிறான் என்று வேத வசனமும் சொல்லுகிறது, அதை விசுவாசிக்கிறீர்களா? ஆகவே எப்பொழுது தேவன் பேசுகிறார் எப்பொழுது சாத்தான் பேசுகிறான் அல்லது எப்பொழுது உங்கள் சொந்த இருதயமே உங்களை வஞ்சிக்கிறது என்பதை தெளிவாக உங்களால் கூற முடியுமா? என்ற கேள்வியை அந்த ஏமாற்றுக்காரர்களிடம் கேட்டு முயற்சித்துப்பாருங்கள். அவர்களிடமிருந்து எந்த ஒரு திருப்திகரமான பதிலும் வராது. அகவே இவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள இது மிகவும் தவறான வழி. நற்செய்தி வட்டாரங்களில் இது நன்றாக அறியப்பட்டுள்ளது. தேவன் என்னைக்குறித்து ஒரு சித்தம் வைத்திருப்பாரென்றால், அதை அவர் என்னிடம் தான் வெளிப்படுத்த வேண்டும், வேறொருவர் மூலமாக அல்ல. ஆனால் பிரச்சனை என்ன வென்றால் தேவனுடைய சித்தத்தை அறிய நாமாகவே சில வழிமுறைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம். ஆகவே இச்செய்தியை பின்வரும் தலைப்புகளில் பிரித்திருக்கிறேன். தேவனுடைய சித்தத்தை அறிய தவறான வழிமுறைகள், சரியான வழிமுறைகள், வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தம் மற்றும் என்னுடைய வாழ்க்கையில் தேவ சித்தம்.
நாம் எவ்வாறு தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள முயற்சி செய்யக்கூடாது என்பதை முதலில் சிந்தித்துவிட்டு, சரியான வழிமுறைகள் என்ன என்பதை சிந்திதால் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
காலையில் அமைதிவேளையின்போது நமது மனதில் வருகிற சிந்தனைகள் தேவனுடைய சித்தமல்ல! நீங்கள் கிறிஸ்தவராக இருந்து, அமைதிவேளைய சில காலங்களாக கடைபிடிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இது தெரிந்திருக்கும். உங்கள் அமைதிவேளையின்போது பல தெளிவற்ற சிந்தனைகள் உங்கள் மனதில் ஓடும். இவைகளை நீங்கள் தேவனுடைய சித்தம் என்று சொல்ல முடியுமா? உங்கள் மனதில் எழுகின்ற ஆழ்ந்த அல்லது அழுத்தமான சிந்தனை தேவனுடைய சித்தம் என்று சொல்ல இயலாது. ஏனென்றால் உங்கள் மனதில் எழுகின்ற உறுதியான சிந்தனை தேவனுடைய சித்தம் என்று வேத வாக்கியங்களில் எங்குமே சொல்லப்படவில்லை. சற்று நீங்கள் கவனிப்பீர்களென்றால், அவிசுவாசிகளுக்கும் மனசாட்சி உண்டு. தன்னுடைய விக்கிரகங்களுக்கு எதையாகிலும் நேர்ந்துக்கொண்டால் அதை மனசாட்சியின் படி சரியாக நிறைவேற்றிவிடுகிறார்கள். ஆகவே நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபித்துவிட்ட படியினால் உங்கள் மனசாட்சி ஏற்படுத்திய சிந்தனை எல்லாம் தேவனுடைய சித்தம் ஆகிவிடாது.
சிலர் சீட்டுப்போட்டு தேவனுடைய சித்தம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள்! அவர்கள் என்ன தெரிந்தெடுப்புகளை தங்கள் மனதில் வைத்திருக்கிறார்களோ அவைகளை தனித்தனி துண்டு சீட்டுகளில் எழுதி, ஜெபம் செய்துவிட்டு கண்ணை மூடி ஏதேனும் ஒன்றை எடுப்பார்கள். அது என்ன வருகிறதோ அது தேவனுடைய சித்தம் என்று முடிவு செய்துவிடுவார்கள். நீங்கள் வேதவாக்கியங்களை கவனித்துப்பார்த்தால், சீஷர்கள் மத்தியாஸ் என்பவரை சீட்டுப்போட்டு அப்போஸ்தல ஊழியத்திற்கு தெரிந்தெடுதார்கள். ஆனால் உண்மையில் தேவன் பவுலையே அப்போஸ்தல ஊழியத்திற்கு தெரிந்தெடுத்தார். ஆகவே சீட்டுப்போடுதலைவிட, தேவனை அண்டிக்கொள்ளுவதே சிறந்ததல்லவா!
சிலர் இப்படிச் சொல்ல கேட்டிருக்கிறேன், நான் வேத புத்தகத்தை திறக்கும்பொழுது எந்த வசனம் என் கண்முன் வருகிறதோ, அந்த வசனம் மூலம் தேவன் என்னோடு பேசுகிறார், அது தான் தேவனுடைய சித்தம். வேதப்புத்தகம் அந்த நோக்கத்துடன் ஒருபோதும் எழுதப்படவில்லை. அது தோல் சுருள்களில் எழுதப்பட்டது, வசனங்கள் கூட பிரிக்கப்பட்டிருக்க வில்லை. ஆகவே இந்த விதம் தேவனுடைய சித்தத்தை அறிய சரியான முறை என்று விசுவாசிக்கிறீர்களோ? அப்படியானால் நாம் பின்வரும் கருத்தை நம்ப வேண்டும். அச்சு இயந்திரங்களும், தாள்களும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தேவன் இந்த முறையை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார் என்று சொல்ல வேண்டும். இந்த முறைகளெல்லாம் தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள சரியான முறைகள் அல்ல.
தேவன் என்னைக்குறித்து ஒரு சித்தம் வைத்திருப்பாரென்றால் அதை அவர் நிச்சயமாக ஒளித்து வைக்கப்போவதில்லை! நான் அதை எளிதாகக் கண்டுக்கொள்ளும் வகையில் அவரே வழிகளை ஏற்படுத்தி வைத்திருப்பார். 2பேது 1:19ம் வசனத்திற்கு உங்கள் கவனத்தை திருப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். அதிக உறுதியான தீர்க்கதரிசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும். இங்கே பேதுரு குறிப்பிடும் தீர்க்கதரிசனம் எது? அவர் முழு வேத வாக்கியங்களைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் (இந்நாட்களில் கள்ள தீர்க்கதரிசிகள் சொல்லும் கள்ள தீர்க்கதரிசனத்தைப்பற்றி அல்ல!) ஆகவே வேதத்தை முழுமையாக ஆராய்ந்தால் மட்டுமே நீங்கள் அதைக் கண்டுக்கொள்ள முடியும்.
தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள இதுவே மிகச்சரியான வழி. நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள வேண்டுமென்றால் அவர் அதை எங்கே வெளிப்படுத்தியிருக்கிறாரோ அங்கே தான் நீங்கள் அதைக் கண்டுக்கொள்ள வேண்டும். தேவன் தன்னுடைய வார்த்தையைவிட வேறு எங்கும் அவருடைய சித்தத்தை வெளிப்படையாக, தெளிவாக வெளிப்படுத்தவில்லை! இப்பொழுது நீங்கள் சொல்லலாம், வேதப்புத்தகத்தில் என்னைப்பற்றி தனியாக ஒரு அதிகாரம் இல்லை. நான் யாரை திருமணம் செய்ய வேண்டும், கல்லூரியில் எந்த படிப்பை படிக்க வேண்டும், எந்த நிறுவனத்தில் அல்லது எந்த வேலையில் நான் சேரவேண்டும் என்பதைப்பற்றி வேதப்புத்தகம் எதுவுமே எனக்கு சொல்லவில்லையே என்று நீங்கள் சொல்லலாம். இவைகளைக் குறித்து நான் வேதப்புத்தகத்தில் எப்படி கண்டுபிடிப்பது என்று நீங்கள் கேட்கலாம். தொடர்ந்து வாசியுங்கள், அதை நீங்கள் சீக்கிரம் கண்டுக்கொள்ளுவீர்கள்.
நாம் மேலும் தொடர்வதற்கு முன்பாக, உபாகமம் 29:29ஐ வாசிக்கலாம். மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள். இந்த வசனத்தை நீங்கள் கவனித்தால் தேவனுடைய சித்தம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது மறைவான தேவனுடைய சித்தம், இரண்டாவது வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தம். முதல் பகுதியானது தேவனுக்கு சொந்தமானது, அதை அறிந்துக்கொள்ள முயற்சிப்பதும் செய்வதும் என்னுடைய வேலை அல்ல. அது தேவன் செய்ய வேண்டிய பணி. என்னுடைய வேலையெல்லாம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற தேவனுடைய சித்தத்தை ஒழுங்காக செய்வது தான். நம்முடைய வாழ்க்கையில் நாம் நிறைவேற்ற வேண்டிய தேவனுடைய சித்தம் இதுவே. நாம் அடிக்கடி செய்யும் தவறு என்னவென்றால், வெளிப்படுத்தப்பட்டிருக்கும் தேவனுடைய சித்தத்தை செய்யாமல், மறைக்கப்பட்டிருக்கும் தேவனுடைய சித்தம் என்ன என்பதைக் கண்டுக்கொள்ள நாம் ஆர்வம் காட்டுகிறோம். நம்முடைய பணியை நாம் செய்யாமல், தேவன் செய்ய வேண்டிய பணியில் கவனம் செலுத்துகிறோம். தேவன் வெளிப்படுத்தியிருக்கிற அவருடைய சித்தத்தை நீங்கள் செய்யவில்லை என்றால், தேவன் அவருடைய பணியை செய்ய வேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆகவே நமக்கு சொந்தமானது என்ன என்றால் வேதப்புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற தேவனுடைய சித்தமே.
இப்பொழுது வேதவாக்கியங்கள் மூலம் தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ளுவது எப்படி என்பதைக்குறித்து சொல்லப்போகிறேன். நீங்கள் யாரை திருமணம் செய்ய வேண்டும், என்ன படிக்க வேண்டும் என்பதைக்குறித்து நேரடியாக சொல்லாவிட்டாலும், அவைகளைக்குறித்தும் நீங்கள் எப்படி தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள முடியும் என்பதை முடிவில் கண்டுக்கொள்ளுவீர்கள்.
முதலாவது பொதுவான, வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தத்தைக் குறித்துப் பார்ப்போம். 2பேதுரு 3:9ல் ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்பதே தேவனுடைய சித்தம் என்று வாசிக்கிறோம். ஆகவே ஒவ்வொரு மனிதரைக்குறித்தும் முதன்மையான தேவனுடைய சித்தம், அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்பதே. நாம் அழிந்துபோகாமல் மனந்திரும்ப வேண்டுமென்பதே தேவனுடைய சித்தம். ஆகவே தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள முற்படுமுன் உங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி, நான் இரட்சிக்கப்பட்டிருகிறேனா? என்பதே. ஏனெனில் தேவனுடனான உறவில் இது முதல் படி. இரட்சிக்கப்படாத ஒவ்வொருவரும் தேவனுக்கு பகைஞராயிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து மூலமாக தேவனிடத்தில் நீங்கள் சமாதானமாகவில்லை என்றால், உங்களுக்கும் தேவனுக்கும் எந்த உறவும் இல்லை, நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ளத் தேவையும் இல்லை. அது ராஜாதி ராஜாவாகிய தேவனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் சொந்தமானது, இரட்சிக்கப்படாதவர்களுக்கல்ல. நீங்கள் உங்கள் வாழ்க்கையை தேவனின் ஆளுகைக்கு முழுமையாக அற்பணிக்கவில்லை என்றால், அவருடைய சித்தத்தை கேட்பதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆகவே நீங்கள் உங்களைக் கேட்க வேண்டிய முதலாவது கேள்வி, இரட்சிக்கப்படவேண்டும் என்ற தேவனுடைய சித்தத்திற்கு நீங்கள் கீழ்படிந்திருக்கிறீர்களா? உங்கள் பதில் ஆம் என்றால், அந்த பதில் வேதவாக்கியங்களின் அடிப்படையில் இருக்குமென்றால், உங்கள் கனிகளினால் அது உறுதிப்படுமென்றால், இரட்சிப்பை பொறுத்தமட்டில் நீங்கள் தேவனுடைய சித்தத்திற்கு கீழ்ப்படிந்திருக்கிறீர்கள்.
இரண்டாவதாக, ஒவ்வொரு மனிதரைக்குறித்தும் பொதுவான தேவனுடைய சித்தம் என்னவென்றால், ஆவியில் நிறைந்திருப்பது. எபே 5:17-18 வசனங்களில், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்தவர்களாயிருங்கள் என்று வாசிக்கிறோம். எனக்குப் பிரியமான சகோதர சகோதரிகளே, நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ளவில்லை என்றால் வேதப்புத்தகம் உங்களை மதியற்றவர்கள் என்று அழைக்கிறது. ஆகவே ஒரு தேவனுடைய பிள்ளை, இயல்பாகவே தேவனுடைய சித்தத்தை அறிந்தவனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் தேவனுடைய சித்தம் 18ம் வசனத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆவியில் நிறைந்திருங்கள் என்றால் என்ன அர்த்தம்? இன்று பெந்தேக்கோஸ்தே வட்டாரங்களில் சொல்லப்படுவதுபோல், ஆவியில் நிறைதல் என்றால், அந்நியபாஷை என்ற பெயரில் கத்தி உருண்டு பிரண்டு அமர்களப்படுத்துவதல்ல! ஏனென்றால் நீங்கள் விசுவாசிகளானபோதே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் முத்திரைபோடப்பட்டீர்கள் என்றும், பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாழ்கிறார் என்றும் நீங்களே பரிசுத்த ஆலயம் என்றும் வேத வசனம் சொல்லுகிறது. அப்படியானால் ஏற்கனவே விசுவாசிகளாயிருக்கிற எபேசியர்களுக்கு பவுல் ஏன் ஆவியில் நிறைந்தவர்களாயிருங்கள் என்று சொல்லுகிறார்? எபேசியர்கள் அவிசுவாசிகளாயிருந்த நாட்களில் குடித்து வெறித்து மதுபான வெறிக்கொண்டிருக்கையில் தங்கள் தேவதையான டயானாவில் ஆலயத்தில் பிரவேசித்து, தங்கள் தேவதையை ஆராதித்தார்கள். அப்பொழுது அவர்கள் மதுபானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். இப்பொழுது இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். குடித்து வெறிகாமல் பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பட்டின் கீழ் வாருங்கள் என்று சொல்லுகிறார். ஆவியில் நிறைதல் என்றால் முழுமையாக பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதைக் குறிக்கிறது.
அப்படியானால் பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படுத்தப்படுதல் அல்லது வழி நடத்தப்படுதல் என்றால் என்ன? வேதவாக்கியங்களெல்லாம் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடு என்பதை அறிந்திருக்கிறோம். ஆகவே பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்படுதல், கட்டுப்படுத்தப்படுதல் அல்லது பரிசுத்த ஆவியால் நிறைதல் என்பது தேவனுடைய வார்த்தையினால், வேதவசனத்தினால் நடத்தப்படுதல் என்பதையே குறிக்கிறது. பரிசுத்த ஆவியால் நிறைந்திருக்கும்பொழுது என்ன நடக்கிறது? அதே அதிகாரத்தை தொடர்ந்து வாசித்தால், ஆவியின் கனிகள் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுவதை நீங்களும் காணலாம் மற்றவர்களும் காண்பார்கள். மற்றவர்களுடனான உங்கள் உறவு மேம்படும், உங்கள் குடும்பத்தினருடன் உங்கள் உறவு மேம்படும். தேவனுடனான உங்கள் உறவு புதிய பரிமாணத்தை பெறும். உங்கள் கனிகளினால் அநேகரை ஆத்தும ஆதாயம் செய்வீர்கள். இவைகளெல்லாம் ஆவியில் நிறைந்திருப்பதற்கான ஆதாரங்கள். ஆவியின் கனிகளை கொலோ 3:16ம் வசனமுதல், கலாத் 5:22,23ம் வசனங்களில் காணலாம். இதுவே உங்களைக்குறித்த தேவனின் வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தமாயிருக்கிறது. ஆகவே இத்தருணத்தில் நீங்கள் கெட்க வேண்டிய முக்கியமான கேள்வி, உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துவது எது? தேவனுடைய வார்த்தையா அல்லது உங்கள் சொந்த விருப்பங்களா? நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் வேத வசனத்தின் அடிப்படையில் சோதித்துப்பார்த்து, இதை தேவன் அனுமதிக்கிறாரா என்பதை உறுதி செய்கிறீர்களா? நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் தேவனின் வார்த்தைக்கு ஒத்துப்போகவில்லை என்றால் அது தேவனுடைய சித்தமல்ல. இந்தக் கேள்விகள் நீங்கள் மற்றவர்களுக்கு பதிலளிக்க வேண்டியவைகல்ல. உங்களுக்கு நீங்களே பதிலளித்துக்கொள்ள வேண்டியவை. நீங்கள் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியால் நிறைந்திருப்பீர்கள் என்றால், நீங்கள் தேவனுடைய சித்தத்தின் அடிப்படையில் வாழ்கிறீர்கள்.
மூன்றாவதாக, நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல், உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும் என்று 1தெச 4:3-5ல் வாசிக்கிறோம். நீங்கள் உலகத்திலுள்ள எல்லாவிதமான துன்மார்க்க இச்சைகளுக்கும் ஆசைகளுக்கும் விலகி தேவனை உண்மையும் உத்தமமும், பரிசுத்ததுடன் ஆராதிக்க வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. உண்மையாகவே நீங்கள் தேவனுடைய சித்தம் செய்ய வாஞ்சிப்பீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையின் பரிசுத்தத்திற்காக நீங்கள் சிரத்தையுடன் முயற்சி செய்வீர்கள். நீங்கள் தேவனின் பரிசுத்த ஆலயமாயிருக்கிறீர்கள். எங்கெல்லாம் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிறாரோ, அங்கெல்லாம் அவர் பரிசுத்தத்தை ஏற்படுத்துகிறார். நீதியின் மீது வாஞ்சையையும், பாவத்தின் மீது வெறுப்பையும் ஏற்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவரின் இந்த செயல் உங்கள் வாழ்க்கையில் நடைமுறையில் இருக்கிறதா? நான் இயேசுவை விசுவாசிக்கிறேன் என்று நீங்கள் சொல்லுவீர்கள் என்றால், அந்த விசுவாசம் உண்மையானது என்றால், அது செத்த விசுவாசமாயிருக்காது. அது தொடர்ந்து தன்னுடைய பணியை செய்யும். அது உங்கள் வாழ்க்கையை பரிசுத்தத்திற்கு நேராய் மாற்றும். இது உங்கள் வாழ்க்கையின் அனுபவமாயிராவிட்டால் உங்கள் அடிப்படை இரட்சிப்பிலேயே பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். ஏனென்றால் பணி செய்யாத விசுவாசம் செத்த விசுவாசம். ஆகவே உங்கள் வாழ்க்கையின் பரிசுத்தத்தைக்குறித்து இதுவே தேவனுடைய சித்தம்.
நான்காவது, உங்கள் சொந்த சாட்சியுள்ள வாழ்க்கை. நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்று1பேது 2:15ல் வாசிக்கிறோம். இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள ‘நன்மை செய்தல்’ என்றால் என்ன என்பதை அறிந்துக்கொள்ள 12ம் வசனத்தில் இருந்து நீங்கள் படிக்க வேண்டும். அவிசுவாசிகளுக்கு முன்பாக பரிசுத்தமாக பேசுங்கள், அரசாங்கத்திற்கு கீழ்ப்படியுங்கள், அரசு அதிகாரிகளுக்கு கீழ்ப்படியுங்கள், மற்றவர்களை கனம்பண்ணுங்கள், சகோதரரை சினேகியுங்கள், இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்க்கையில் வெளிப்படுத்திய மன்னிப்பு, உங்கள் வாழ்க்கையின் மூலமாக வெளிப்பட வேண்டும். இவைகளெல்லாம் மற்றவர்களுக்கு முன்பாக உங்கள் சாட்சியுடன் சம்மந்தப்பட்டது. இந்த நற்செயல்களினால் நீங்கள் புத்தியீன மனிதருடைய அறியாமையை அடக்க வேண்டும். இது உங்களைக்குறித்த தேவனுடைய சித்தமாயிருக்கிறது. உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? உங்கள் வாழ்க்கையைப்பார்த்து மற்றவர்கள் தேவனை தூஷிக்கிறார்களா? அல்லது துதிக்கிறார்களா?
ஐந்தாவது, உங்கள் இருதயத்தின் எண்ணப்போக்கு. எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது (2தெச 5:16-18). எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் என்பது, தேவனுடைய கரத்திலிருந்து வரும் எந்த ஒன்றையும் நீங்கள் மகிழ்ச்சியாய் பெற்றுக்கொள்ளுகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. உங்கள் வெளிபுற சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தேவனுடனான உறவில் உங்கள் இருதயம் மகிழும். இது உங்கள் இருதயத்தின் மனப்போக்குடன் நேரடியாக தொடர்புள்ளது. இடைவிடாமல் ஜெபம்பண்ணுதல் என்பது என் சுய புத்தியின் மேல் சாராமல், என் முழு இருதயத்தோடும் நான் தேவனை விசுவாசிக்கிறேன் என்று நீங்கள் சொல்லுவதைக் குறிக்கிறது. என் வழிகள் எல்லாவற்றையும் நான் தேவனிடத்தில் ஒப்புவிக்கிறேன், அவர் என் பாதைகளை செவ்வைப்படுத்துவார். எல்லாவற்றிலும் ஸ்தோதிரம் செய்தல் என்பதும் தேவனுடனான உங்கள் இருதயத்தின் மனப்போக்கை குறிக்கிறது. ஏனென்றால் சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக இருக்கும்பொழுது, நீங்கள் விரும்பியவை கிடைக்காமல் இருக்கும்பொழுது, உங்களுக்கு பிரியமானவர்கள் தேவனுடைய சித்தத்தினால் எடுத்துக்கொள்ளப்பட்டபொழுது, முறுமுறுப்பதும் தேவனிடத்தில் கோபித்துக்கொள்ளுவதும் இயற்கையானதே. ஆனால் கர்த்தர் கொடுத்தார்; கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்; என்று சொல்லுவது முற்றிலும் இயற்கைக்கு அப்பாற்பட்டது. ஆனால் இதுவே உங்களைக்குறித்த தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
இப்பொழுது நாம் வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தத்தைக்குறித்து 5 காரியங்களைப் பார்த்திருக்கிறோம். இரட்சிக்கப்படுதல், ஆவியில் நிறைந்திருத்தல், பரிசுத்தமுள்ள வாழ்க்கை, சாட்சியுள்ள வாழ்க்கை மற்றும் உங்கள் இருதயத்தின் மனப்போக்கு. இவைகள் வேதவசனத்தில் அடிப்படையில் சரியாக இருக்குமென்றால் நீங்கள் தேவனுடைய சித்தத்தின் படி வாழ்கிறீர்கள். இதெல்லாம் சரிதான். இவைகளெல்லாம் மற்றவர்கள் சொன்னதுதான். ஆனால் என்னைப்பற்றி நீங்கள் பேசவே இல்லையே. என்னுடைய கேள்வியான யாரை திருமணம் செய்வது, எந்த கல்லூரியில் எந்த படிப்பை படிப்பது, எந்த நிறுவனத்தில் எந்த வேலையில் சேருவது போன்ற கேள்விகளுக்கு இது பதில் தரவில்லையே என்று நீங்கள் கேட்கலாம். அதைத்தான் இப்பொழுது நாம் பார்க்கப்போகிறோம். இதை நிச்சயம் நீங்கள் விரும்புவீர்கள்.
நீங்கள் உண்மையாகவே இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் உண்மையாகவே ஆவியில் நிறைந்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் உண்மையாகவே பரிசுத்தமாய் வாழ்கிறீர்கள் என்றால், நீங்கள் உண்மையாகவே சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்றால், தேவனைக்குறித்த உங்கள் இருதயத்தின் போக்கு உண்மையாகவே சரியாக இருக்கிறது என்றால் (இவைகளில் உண்மையாக என்ற வார்த்தையை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள்), இப்பொழுது உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துகிறது பரிசுத்த ஆவியானவர். வாழ்வது நீங்களல்ல, கிறிஸ்துவே உங்களில் வாழ்கிறார். அப்படியானால் உங்கள் விருப்பங்களும் தெரிந்தெடுப்புகளும் பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஏனென்றால் தேவனுடைய வார்த்தைக்கு எதிராக உள்ள எந்த ஒன்றையும் நீங்கள் விரும்பப்போவதில்லை! அப்புறம் என்ன? நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்திருக்கிறீர்கள்! இந்த 5 காரியங்களும் உங்கள் வாழ்க்கையில் உண்மை என்றால், எதையெல்லாம் நீங்கள் விரும்புகிறீர்களோ அவைகளே தேவனுடைய சித்தம்!
இங்கே உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். எதை யார் விரும்பினாலும் அதுவே தேவனுடைய சித்தம் என்று நான் சொல்லவில்லை. இந்த 5 வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தத்தின் மீதும் உங்கள் கண்களை வையுங்கள். அவைகள் உங்கள் வாழ்க்கையில் செயல்பாட்டில் இருக்கும்பொழுது, உங்கள் விருப்பங்கள் உண்மையாகவே இந்த 5 காரியங்களின் அடிப்படையில் இருக்கும்பொழுது, உங்களுடைய அந்த மனதின் விருப்பங்களே தேவனுடைய சித்தம். இது என்னுடைய வேத விளக்கமா? இல்லை. சங்கீதம் 37:4 மற்றும் 5 ஐ வாசியுங்கள். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருத்தல் என்றால் என்ன? நாம் குறிப்பிட்ட இந்த 5 காரியங்களுமே கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருத்தல் என்பதின் விளக்கம். இந்த 5 காரியங்களிலேயும் நீங்கள் உறுதியாயும் உண்மையாயும் இருப்பீர்கள் என்றால், உங்களுக்கான தேவனுடைய வாக்குத்தத்தம், அவர் உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை அருளிச்செய்வார் என்பதே! தேவன் தன்னுடைய விருப்பத்தை நிச்சயம் நிறைவேற்றுவார். இந்த தேவனுடைய வார்த்தையின்படி நீங்கள் தேவனிடத்தில் மன மகிழ்ச்சியாயிருப்பீர்களென்றால், அவர் தன்னுடைய விருப்பத்தையே உங்கள் மனதில் வைக்கிறார். அதையே அவர் நிறைவேற்றுகிறார். தேவனுடைய சித்தத்தை அறிய இதுவே உறுதியான மற்றும் சரியான வழி.
இப்பொழுது சில உதாரணங்களை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
உதாரணம் 1: ஒரு மனிதன் தன்னைக் கிறிஸ்தவன் என்று சொல்லுகிறார். நாம் குறிப்பிட்ட அந்த 5 அம்சங்களும் தன்னிடம் உண்மையாகவே இருப்பதாக் சொல்கிறார். ஆனால் தான் ஒரு அவிசுவாசியை நேசிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாகவும் சொல்கிறார். இந்த நபரைக்குறித்து நாம் என்ன சொல்லாம்? தேவனிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்க தேவையான அந்த 5 அம்சங்களும் உண்மையாகவே அவரிடத்தில் இல்லை. அந்நிய நுகத்தில் பிணைக்கப்படாதிருங்கள், ஒரு விசுவாசி, அவிசுவாசியை எந்த சூழ்நிலையிலும் திருமணம் செய்யக் கூடாது என்ற தேவனுடைய நியமத்திற்கு அவர் கீழ்ப்படிய வில்லை. அவருடைய இந்த விருப்பம் தேவனுடைய சித்தத்தின்படி அமைந்ததல்ல.
உதாரணம் 2: ஒரு மனிதன் தன்னைக் கிறிஸ்தவன் என்று சொல்லுகிறார். நாம் குறிப்பிட்ட அந்த 5 அம்சங்களும் தன்னிடம் உண்மையாகவே இருப்பதாக் சொல்கிறார். தனக்கு அமெரிக்க தேசத்தில் ஒரு நல்ல வேலைக் கிடைத்திருப்பதாகவும், அதற்காக தனது மனைவி மற்றும் பிள்ளைகளைவிட்டு அமெரிக்காவிற்கு 5 ஆண்டுகள் செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார். இதுவும் தேவனுடைய சித்தமல்ல. தேவன் குடும்பம் என்ற அமைப்பை ஏற்படுத்தியது கணவனும் மனைவியும் இணைந்து பிள்ளைகளை கர்த்தருக்கு பயப்படும் பயத்தில் வளர்த்தெடுத்து சாட்சியுள்ள குடும்ப வாழ்க்கை வாழ்வதற்காகவே. கணவன் மட்டும் தனியாக வெளி நாட்டிற்கு சென்று பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. 1 கொரி 7ம் அதிகாரத்தை வாசியுங்கள், கணவனும் மனைவியும் எத்தனை நாட்கள் அதிகபட்சம் பிரிந்திருக்கலாம் என்பதைக் கண்டுக்கொள்ளுவீர்கள்.
உதாரணம் 3: நீங்கள் ஒரு நல்ல வேலையில் இருக்கிறீர்கள், உங்களுக்கு ஒரு சொந்தவீடு இருக்கிறது. இன்னுமொரு வீடோ அல்லது இடமோ குறைந்த விலைக்கு வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் சில ஆண்டுகளில் அது நல்ல விலைக்குபோகும் என்று நினைக்கிறீர்கள். இப்பொழுது அந்த வீட்டையோ அல்லது இடத்தையோ வாங்குவது தேவனுடைய சித்தமல்ல. ஏனென்றால் உங்கள் அடிப்படை தேவைகள் சந்திக்கப்பட்ட பிறகு, உங்கள் சக கிறிஸ்தவ சகோதரனுடைய தேவையை சந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். உங்கள் எதிர்காலத்திற்காக எதையுமே சேர்த்து வைக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. மாறாக, பூமியில் சொத்துக்களை சேர்த்து வைப்பது தேவனுடைய சித்தமல்ல என்று சொல்லுகிறேன். அந்த பணத்தை ஆத்தும ஆதாயம் செய்யவும், சக விசுவாசியினுடைய தேவைகளை சந்த்திக்கவும் செலவிடுங்கள். ஆதித் திருச்சபை விசுவாசிகள் எப்படி தங்களுடையதை பகிர்ந்துக்கொண்டார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.
இதேப்போன்று உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்திலேயும் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தை மீறாமல், அது தேவனைப் பிரியப்படுத்துகிறதாக இருக்கிறதா என்பதில் கவனத்தை செலுத்துங்கள். உங்களுக்காக ஜெபம்பண்ணி தேவனுடைய சித்தத்தை அறிய வேறொரு (கள்ள) தீர்க்கதரிசியை நாடி ஓட அவசியமில்லை. உங்கள் தெரிந்தெடுப்புகளைக் குறித்து சீட்டுப்போட வேண்டிய அவசியமில்லை. வேதப்புத்தகத்தை குலுக்கு சீட்டுபோல பயன்படுத்த அவசியமில்லை. நீங்கள் வலது இடதுபுறம் சாயும்பொழுது வழி இதுவே, இதில் நடவுங்கள் என்று சொல்லும் தேவனுடைய சத்தத்தை உங்கள் காதுகள் கேட்கும். நீ நடக்க வேண்டிய வழியில் உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே என்று அவர் சொல்லியிருக்கிறார். மறைவானவைகள் தேவனுக்கே உரியவைகள், அதை அவர் ஏற்ற நேரத்தில் சரியாக செயல்படுத்துவார்.
பிரியமானவர்களே, இந்த உண்மையை நான் தெரிந்துக்கொண்டபொழுது ஒரு மிகப்பெரும் விடுதலையை அடைந்தேன். வேத வாக்கியங்கள் சொல்லுகிறது, சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும். குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். தேவனுடைய சித்தத்தை அறிவதில் இதுவே சத்தியமாகும். உங்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய சித்தத்தை செய்ய, கர்த்தர்தாமே கிருபையளிப்பாராக.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.