ஆசிரியர்: ஹோரேக்ஷியஸ் போனர் 1808-1889
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 13 நிமிடங்கள்

 

“இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறாா; இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்;” (எரேமியா 18:6)

தற்போதைய பல சர்ச்சைக்குரிய விவாதங்கள் தேவனுடைய சித்தத்தைப் பற்றியே உள்ளன. இந்த விஷயத்தில் பல கேள்விகள் எழுந்துள்ளன. இதில் முக்கியமானது தேவனின் சித்தத்திற்கும் மனிதனின் சித்தத்திற்கும் இடையிலான தொடர்பைப் பற்றியது. இவற்றுக்கிடையேயான உறவு என்ன? அவை ஒன்றுக்கொன்று எந்த வரிசையில் நிற்கின்றன? எது முதலில் வரும்? இந்த இரண்டு தனித்தனி சித்தங்கள் இருக்கின்றது என்பதை குறித்து எந்த சர்ச்சையும் இல்லை. தேவனிடத்தில் ஒரு சித்தம் உள்ளது, மனிதனிடத்திலும் ஒரு சித்தம் உள்ளது. இவை இரண்டும் தொடர்ந்து செயல்படுகின்றன; தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார், மனிதன் தாம் விரும்பியதைச் செய்ய ஆசைப்படுகிறான். அண்டசராசாத்தில் தேவனுடைய சித்தமின்றி எதுவும் நடக்காது. இது ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஆனால் தேவனின் சித்தமே எல்லாவற்றிலும் முதன்மையாக உள்ளதா என்று கேள்வி கேட்கப்படுகிறது.

நான் ஆம் என்று பதிலளிக்கிறேன். தேவன் விரும்பாத எந்த நல்லதும் இருக்க முடியாது, அதேபோல் தேவன் அனுமதிக்க விரும்பாத எந்த தீமையும் நிலைத்திருக்க முடியாது. தேவனின் சித்தமே மற்ற எல்லா சித்தங்களுக்கும் முன்பாக செல்கிறது. தேவனின் சித்தம் எதையும் சார்ந்தது அல்ல, ஆனால் மற்ற அனைத்து சித்தங்களும் தேவனின் சித்தத்தையேச் சார்ந்துள்ளன. அவரின் சித்தத்தின் இயக்கமே மற்றவற்றை ஒழுங்குபடுத்துகின்றன. "நான் விரும்புகிறேன்" என்ற யெகோவாவின் சித்தமே, விண்ணுலகிலும், மண்ணுலகிலும் உள்ள அனைத்தையும் இயக்குகிறது. "நான் விரும்புகிறேன்" என்ற தேவனின் சித்தமே, அகிலத்தில் நிகழும் அனைத்திற்கும் - பெரியதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும், உயிருள்ளவையாக இருந்தாலும் உயிரற்றவையாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் ஆதாரமும் மூலமுமாகும். இந்த "நான் விரும்புகிறேன்" என்ற சித்தமே தேவதூதர்களை உண்டாக்கியது, இன்றும் அவர்களை நிலைநிறுத்துகிறது. இந்த "நான் விரும்புகிறேன்" என்ற சித்தமே, கெட்டுப்போன இந்த உலகத்திற்கு இரட்சிப்பின் ஆரம்பமாயிற்று. இந்த "நான் விரும்புகிறேன்" என்ற சித்தமே ஒரு மீட்பரை ஏற்பாடு செய்தது, மீட்பை நிறைவேற்றியது. இந்த "நான் விரும்புகிறேன்" என்ற சித்தமே ஒவ்வொரு இரட்சிக்கப்பட்ட ஆத்துமாவிலும் இரட்சிப்பைத் தொடங்குகிறது, நடத்துகிறது, முடிக்கிறது. இந்த "நான் விரும்புகிறேன்" என்ற சித்தமே குருடனின் கண்களை திறக்கிறது, செவிடனின் செவியைக் கேட்கச் செய்கிறது. இந்த "நான் விரும்புகிறேன்" என்ற சித்தமே தூங்குபவனை எழுப்புகிறது, இறந்தவரை உயிர்ப்பிக்கிறது.

நான் இவற்றைப் பொதுவாகக் கூறவில்லை - அதாவது, தேவன் இவற்றைக் குறித்து தன்னுடையச் சித்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்று மட்டுமல்ல. மாறாக, ஒவ்வொரு தனிப்பட்ட மனமாற்றமும், அதைச் சேர்ந்த ஒவ்வொரு சிறிய இயக்கமும், இந்த உன்னதமான "நான் விரும்புகிறேன்" என்ற சித்தத்திலிருந்தே உருவாகிறது.

இயேசு குஷ்டரோகியைக் குணமாக்கியபோது, "எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமாகு" என்று சொன்னார். அதுபோல, ஒரு ஆத்துமா மனமாறும்போது, அதே தனித்துவமான, சிறப்பான தெய்வீக சித்தம் வெளிப்படுகிறது: "நான் விரும்புகிறேன், நீ மனமாறுவாயாக!". மனிதனிடத்திலோ, உலகத்திலோ நல்லது என்று சொல்லப்படும் எல்லாமே யெகோவாவின் "நான் விரும்புகிறேன்" என்ற சித்தத்திலிருந்தே உருவாகிறது.

மனமாற்றத்தை மனிதன் தானாகவே விரும்புகிறான் (சித்தப்படுதல்) என்பதை நான் மறுக்கவில்லை. அவன் செய்யும், நினைக்கும், உணரும் ஒவ்வொன்றிலும் அவன் சித்தமுடையவனாக இருக்க வேண்டியது அவசியம். அவன் இயேசுவை நம்புவதை விரும்புகிறான்; மனந்திரும்புவதில் அவன் விரும்புகிறான்; தீய வழிகளை விட்டுத் திரும்புவதில் அவன் விரும்புகிறான். இவை அனைத்தும் உண்மை. இதற்கு எதிரான கருத்து பொய்யானதும் அபத்தமானதுமாகும்.

ஆனால், இதை முழுமையாக ஒப்புக்கொண்டாலும், அதன் பின்னால் மிகவும் ஆழமான, முக்கியமான ஒரு கேள்வி உள்ளது: மனிதனுடைய சித்தத்தின் இந்த நல்ல இயக்கங்கள், தேவனுடைய சித்தம் வெளிப்படுவதன் விளைவுகளா? அல்லது தானாகவே மனிதன் சித்தப்படுகிறானா? அல்லது தேவன் அவனை அவ்வாறு ஆக்கியதால் விரும்புகிறானா? அவன் விசுவாசிப்பது முற்றிலும் தன் சொந்த விருப்பத்தின் செயலாலா? அல்லது யாதொரு காரணமுமின்றி (தற்செயலாக) நடந்ததாலா? அல்லது தார்மீக தூண்டுதலாலா? அல்லது படைப்பின் வெளி காரணங்களாலும் தாக்கங்களாலும் உந்தப்பட்டதாலா?

நான் தயங்காமல் பதிலளிக்கிறேன். அவன் சித்தமுள்ளவனாக மாறுகிறான், ஏனென்றால் மற்றொரு  உயர்ந்த சித்தம், அதாவது தேவனின் சித்தம், அவனுடைய சித்தத்தோடு தொடர்புபட்டு அவனுடைய சித்தத்தின் தன்மை மற்றும் இயக்கத்தை மாற்றுகிறது. இந்த புதிய இயக்கம், அனைத்து உயிரினங்களிலும் உரிமை உள்ளவரான, அனைத்து நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் மேல் கட்டுப்பாடு கொண்ட "நான் செய்வேன் அல்லது எனக்கு சித்தமுண்டு” என்று சொல்லபவரால் மனித சித்தத்தின் மேல் உருவாக்கப்பட்ட மாற்றத்தின் விளைவாகும். மனிதனின் சித்தம் தெய்வீக சித்தத்தின் இயக்கத்தைப் பின்பற்றுகிறது. தேவன் அவனை சித்தமுள்ளவனாக ஆக்கியுள்ளார். தேவனின் சித்தம் இயக்கத்தில் முதலாவதாக உள்ளது, இரண்டாவதாக இல்லை. ஒரு பரிசுத்தமான மற்றும் சரியான காரியம் கூட வழிநடத்துதலுக்காக  தேவனின் சித்தத்தை சார்ந்துள்ளது. அது புதுப்பிக்கப்பட்டாலும் கூட, அது வழிநடத்தப்படுகிறது. எவ்வளவு அதிகமாக தேவனின் சித்தம் ஒரு பரிசுத்தமற்ற சித்தத்திற்கு தேவை, ஏனெனில் அதன் இயக்கம் முதலில் மாற்றப்பட வேண்டும்; தேவன் தனது கையையும் சக்தியையும் தலையிடாவிட்டால் இது எப்படி முடியும்?

ஆனால், இது பாவத்திற்கு தேவனை காரணமாக்குகிறதா? இல்லை. தேவனின் சித்தம் மனிதனில் நல்லதைத் தோற்றுவிப்பதால், தீமையானதையும் இதுவே தோற்றுவிப்பதாக அர்த்தப்படுத்த முடியாது. ஒரு பரிசுத்தமான, மகிழ்ச்சியான உலகம் இருப்பது தேவன் அதை தனது சொந்தக் கையால் படைத்தார் என்பதை நிரூபிக்கிறது. ஒரு பரிசுத்தமற்ற, துயரமான உலகம் இருப்பது தேவன் அதை அந்த நிலைக்கு விழ அனுமதித்தார் என்பதை தவிர வேறு எதையும் நிரூபிக்கவில்லை. இயேசு "நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின் படியேயும்;" ஒப்புக்கொடுக்கப்பட்டார் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. தேவனின் சித்தம் அங்கே இருந்தது. அந்த இருளின் செயலைச் செய்ய தேவன் அனுமதியளித்தார். அது அவர் "நிர்ணயித்திருந்த ஆலோசனையின்" விளைவாகும். ஆனால் இது யூதாஸ் அல்லது ஏரோதுவின் பாவத்தின் ஆசிரியர் தேவன் என்பதை நிரூபிக்கிறதா? இது தேவன் யூதாஸைக் காட்டிக்கொடுக்கும்படி கட்டாயப்படுத்தினார், அல்லது ஏரோதை கேலி செய்யும்படி கட்டாயப்படுத்தினார், அல்லது தண்டனை விதிப்பதற்கு கட்டாயப்படுத்தினார் என்பதை நிரூபிக்கிறதா? இல்லை! யெகோவாவின் நித்திய "நான் செய்வேன் அல்லது எனக்கு சித்தமுண்டு” இல்லாவிட்டால், கிறிஸ்து ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்க மாட்டார். ஆனால், இது தேவன் அந்த தீய செயல்களை வலுக்கட்டாயமாக நடக்கச் செய்தார் என்றும் அர்த்தமல்ல! மேலும், மற்றொரு இடத்தில், "அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, ஏரோதும் பொந்தியுபிலாத்தும்; புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்." இந்த வசனத்தை தவறாகப் புரிந்துகொண்டு, இது முன்னரே தீர்மானிக்கப்பட்டதைக் குறிக்காது என்று சொல்ல முடியுமா? இது தேவனை அந்தப் பாவச் செயலின் ஆசிரியராக்குகிறதா? நமது எதிரிகள் அத்தகைய ஒரு பகுதியை விளக்க முயற்சிக்கட்டும், மேலும் அவர்களின் கோட்பாட்டுடன் இதை எவ்வாறு ஒத்திசைக்க முடியும் என்பதை எங்களுக்கு விளக்கட்டும்.

தேவன் மனித சித்தத்தை மாற்றுவதில் சாதனங்களைப் பயன்படுத்துகிறார் என்று சிலர் வாதிடலாம். தேவனின் சித்தம் நேரடியாக மனித சித்தத்தை மாற்றுவதில்லை. அவர் தன் வார்த்தையையும், சுவிசேஷத்தையும் ஏற்பாடு செய்துள்ளார் - இந்த சாதனங்கள் மூலமே மாற்றத்தை உண்டாக்குகிறார். அவருடைய சித்தம் நேரடியாக நம்முடைய சித்தத்தை தொடாமல், இந்த கருவிகளுக்கே மாற்றம் செய்யும் பணியை விட்டுவிடுகிறார். இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது? பார்ப்போம்.

மனிதனுடைய சித்தம் சுவிஷேத்தை நிராகரிக்கும் போது, சுவிசேஷம் எப்படி மனிதனின் சித்தத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும். மருந்து எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், அது உட்கொள்ளப்படாவிட்டால் பலன் தராது. அதுபோல, மனித சித்தம் சுவிசேஷத்தை நிராகரிக்கிறது. அது தேவனுடைய சத்தியத்தை எதிர்க்கிறது. அப்படியானால் கேள்வி என்னவென்றால், பிறகு அது எப்படி தேவனுடைய சித்தத்தை ஏற்கத் தயாராகிறது? நோயின் கொடுமையான காரியம் என்னவென்றால் நோய்க்கான மருந்தைத் தொடவோ அல்லது ருசிக்கவோ கூடாது என்ற உறுதிப்பாடுதான்; இதை எவ்வாறு சமாளிப்பது? இந்த எதிர்ப்பை வாதங்களால் முறியடிக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், சுவிசேஷமே மிகப் பெரிய வாதம் அல்லவா? அதைத்தான் மனிதன் மறுக்கிறான். அவன் சுவிசேஷத்தையே ஏற்க மறுக்கும்போது, வேறு எந்த வாதம் அவனை மாற்றும்? அவன் எல்லா வாதங்களையும் வெறுக்கிறான், எல்லா அறிவுரைகளையும் தள்ளுகிறான். அப்படியானால் இந்த எதிர்ப்பு எப்படி உடைக்கப்படுகிறது? அவனுடைய சித்தத்தைக் காட்டிலும் ஒரு உயர்ந்த சித்தம், அவனால் மீற முடியாத ஒரு வல்லமை தலையீடு செய்ய வேண்டும். அதாவது: "வெளிச்சம் உண்டாகக்கடவது, வெளிச்சம் உண்டாயிறறு" என்று கட்டளையிட்ட சித்தம் போன்ற ஒரு கட்டளை பிறப்பிக்கப்படவேண்டும். மனித சித்தம் தானாகவே மாறாது. அது தேவனுடைய விரலால் அதிசயமாக மாற்றப்பட வேண்டும்.

"மனிதன் சுவிசேஷத்தை நிராகரிப்பதற்குக் காரணம், அவன் அதைத் தவறாகப் புரிந்துகொள்வதுதான். அதை சரியாக விளக்கினால், அவன் உடனே ஏற்றுக்கொள்வான்" என்று சிலர் கூறலாம். ஆனால் இதை நான் நம்பவில்லை. இந்த வாதத்தில் பெரிய குறைபாடு இருக்கிறது. இந்த வாதம் முதலில் பாவத்தின் கொடூரத்தை குறைத்து மதிப்பிடுகிறது. அதுபோல மனிதனின் இயற்கை நிலையை தவறாக விளக்குகிறது. மனிதன் சத்தியத்தை ஒருபோதும் நிராகரிப்பதில்லை அவன் தவறுகளை மட்டுமே நிராகரிக்கிறான் என்றால்: அவன் சத்தியத்தைக் கண்டால் உடனே ஏற்றுக்கொள்வான் என்பது அர்த்தம். ஆனால் வேதாகமம் கூறுவது மாறானது: "ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்." (1 கொரிந்தியர் 2:14). அவனுடைய சத்தியத்தை மறுப்பு வெறும் அவனுடைய தவறான புரிதலால் என்றால்: அவனுடைய இருதயம் சத்தியத்தை வெறுக்கவில்லை, தவறுகளை மட்டுமே வெறுக்கிறது என்று ஆகும். ஆனால் வேதாகமம் கூறுகிறது: "மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது" (ரோமர் 8:7). சத்தியம் தெளிவாக்கப்படும்போது மனிதன் உடனே அதை ஏற்றுக்கொள்கிறான் என்ற கருத்து மனிதனின் இயற்கையான பாவ நிலைக்கு முற்றிலும் எதிராக இருக்கிறது. ஆனால் உண்மை என்னவெனில் பாவி சத்தியத்தைத் நன்றாக தெரிந்தும் அதை வெறுக்கிறான். அவனது சித்தம் பாவத்திற்கு அடிமைப்பட்டுள்ளது. எனவே, சுவிசேஷத்தை நிராகரிப்பது வெறும் அறியாமை அல்ல அது பாவத்தின் ஆழமான எதிர்ப்பு!

மனிதனின் இதயம் சுவிசேஷத்தில் வெளிப்படுத்தப்பட்ட கிருபையின் தேவனுக்கு எதிராக உள்ளது. பாவிகளுக்கு அவநம்பிக்கையும், அவர்கள் ஆத்துமத்தில் இருளும் அவர்கள் தேவனை கிருபையின் தேவனாகக் காணாததால் ஏற்படுகிறது என்ற கூற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது. பெரும்பாலும் இப்படியாகதான் உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். கிறிஸ்துவின் சிலுவையில் காணப்படும் தேவனின் இரக்கமான இயல்பை தவறாகப் புரிந்துகொள்வதே, கவலையடைந்த ஆத்தூமாவிற்கு இருட்டை ஏற்படுத்தும் முக்கிய காரணமாக இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். தேவனுடைய மிகுந்த கிருபையின் செழுமையை எளிமையாகக் காண்பிப்பது இந்த இருட்டை நீக்கக் கூடியதாக இருக்கும். ஆனால், இது தேவனுடைய ஆவியின் புதுப்பிக்கும் வல்லமை இல்லாமல், சத்தியத்திற்கு விரோதமான மனிதனின் மனநிலையை நம்பிக்கைகுரியதாகவும், அன்பானதாகவும் மாற்றலாம் என்று கூறுவது முற்றிலும் தவறானது. ஏனெனில், மறுபிறப்படையாத  இருதயம் சுவிசேஷத்திற்கு எதிராக அமைந்துள்ளது; அது தேவனுக்கும் அவருடைய சத்தியத்திற்கும் விரோதமாக உள்ளது. சத்தியம் எவ்வளவு தெளிவாகவும் வலிமையாகவும் முன்வைக்கப்பட்டாலும், அதற்கான வெறுப்பு மட்டுமே அதிகரிக்கிறது. தேவனின் கிருபை என்ற சத்தியம் கூட, தெளிவாக முன்வைக்கப்படும்போது, மறுபிறப்படையாத மனிதனை அது மேலும் கோபப்படுத்துகிறது. அவன் சுவிசேஷத்தை வெறுக்கிறான்; அது தெளிவாக முன்வைக்கப்படும்போது, அவன் அதனை மேலும் வெறுக்கிறான். அவன் தேவனை வெறுக்கிறான்; தேவன் அவனிடம் நெருக்கமாக வரும்போது, தேவன் தெளிவாக அவனுக்கு வெளிப்படும்போது, அவன் விரோதம் மேலும் எழுகிறது, மேலும் அதிகரிக்கிறது. அப்படியிருக்க, மனிதனுக்குள் இருக்கும் தேவனுக்கு எதிரான விரோதத்தை தூண்டுதலை நீக்க முடியாது. அவன் எவ்வளவு வலிமையான முயற்சிகளை செய்தாலும் அவை பயனற்றவை. இப்படியிருக்கும்போது மனித சித்தத்தின் மாற்றம் எப்படி வரும்? தேவனுடைய ஆவியானவரே நேரடியாக அதை மாற்ற வேண்டும். ஏனெனில் அதை உருவாக்கிய தேவனே அதை மறுபடியும் புதுப்பிக்க முடியும். அதை முதலில் உருவாக்கியது சர்வவல்லமையுள்ள தேவன்; மறுபடியும் உருவாக்குவதும் அதே வல்லமையின் செயல்தான். வேறு எந்த வழியிலும் அதன் தீய சித்தத்தை மாற்ற முடியாது. தேவனின் சித்தம் மனிதனின் சித்தத்தை நேரடியாகத் தொட வேண்டும்; அப்போதுதான் இந்த மாற்றம் நிகழும். இப்படியிருக்க, தேவனின் சித்தமே ஒவ்வொரு ஆத்மீக செயலிலும் முதலில் இருக்க வேண்டியதல்லவா? மனிதனின் சித்தம் தேவனின் சித்தத்திற்குப் பின்வருகிறது; அது முன்னின்று வழிகாட்ட முடியாது.

இது கடினமான புரிந்துகொள்ள முடியாத போதனையா? இன்றைய காலத்தில் சிலர் நம்மை இதை நம்பவைக்க முயலுகிறார்கள். ஆனால் இதில் என்ன புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது என்று நாம் கேட்கலாம். தேவனுடைய சித்தம் மனிதனின் சித்தத்திற்கு முன்னால் நிற்க வேண்டும் என்பது கடினமானதா? பெரியவையாக இருந்தாலும் சிறியவையாக இருந்தாலும், எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தமே முன்னோடியாகவும், மனிதனுடைய சித்தம் பின்தொடர்பவனாகவும் இருக்க வேண்டும் என்பது கடினமானதா? நன்மையை நோக்கிய மனிதனின் ஒவ்வொரு இயக்கத்தின் ஆரம்பத்தையும், சர்வ வல்லவராகிய யெகோவாவின் சித்தத்திற்கே சொந்தமாக்க வேண்டும் என்பது கடினமானதா?

இந்த உண்மை ஏன் கடினமாக இருக்கிறதென்றால், அது மனிதனிடமுள்ள சிறிய நன்மைத் துணுக்குகளை, நன்மையை நோக்கி சிறிய விருப்பத்தை கூட தகர்த்துவிடுகிறது. இந்தக் கோட்பாட்டுக்கு எதிரான புகாரின் மறைமுக காரணம் இதுவாக இருக்கலாம். இது மனிதனின் சித்தத்தை தகர்க்கும் ஒரு கோட்பாடு. நன்மைக்கான எந்த தன்னம்பிக்கையும் வைத்துக்கொள்ள விடாமல் அவனை வெறுமையாக்குகிறது. அவனிடம் நன்மைக்கான மிகச் சிறிய போக்குகூட இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. அவனை ஒரு பாவியாக மட்டுமே காட்டுகிறது. தேவனுடைய நீதிக்கு எதிரான, அவருடைய கிருபைக்கு எதிரான, முழுமையான பகைமையுள்ள இருதயத்துடன், தேவனுடைய சித்தத்திற்கு முற்றிலும் எதிராக வளைந்த சித்தத்துடன், நல்லதும் பரிசுத்தமாவற்றிற்கான ஒரு சிறிய விருப்பம் கூட இல்லாமல் இருப்பதையேக்  காட்டுகிறது. இதை மனிதனால் சகிக்க முடியவில்லை. இதை ஏற்றுக்கொள்வது ஏன் கடினமாக இருக்கிறதென்றால்  மனிதன் தன்னை ஒன்றும் இல்லை என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறான். மேலும், தான் ஒன்றும் இல்லாததை விட மோசமானவன் என்ற உண்மையை அவனால் ஏற்க முடியவில்லை.

இது உண்மையில் கடினமானதாக இல்லை. தேவனுடைய பரிசுத்தமான சித்தம், நமது பரிதாபகரமான, பரிசுத்தமற்ற சித்தங்களுக்கு முன்னால் செல்வது கடினமானதா? இல்லை! இது கிருபையின் அடையாளம்! தங்களிடம் எதுவும் இல்லாதவர்கள், எல்லாவற்றிற்கும் தேவனுக்கு கடமைப்பட்டிருக்க வேண்டும் என்பது கடினமானதா? இல்லை! இது விடுதலையின் உண்மை! என் சித்தத்தின் ஒவ்வொரு இயக்கமும் பூமியை நோக்கி இழுக்கும்போது, தேவனின் வல்லமையான சித்தம் வந்து, அதை பரலோகத்தை நோக்கி உயர்த்துவது கடினமானதா? இல்லை! இது உயிர்ப்பின் அதிசயம்!

எல்லாவற்றையும் நடத்துவது தேவனுடைய சித்தம் நான் ஒப்புக்கொள்கிறேன். தேவனுடைய சித்தம் இந்த பிரபஞ்சத்தின் பெரிய இயக்கங்களை ஒழுங்குபடுத்துகிறது என்றால், அதேபோல் சிறியவற்றையும் ஒழுங்குபடுத்துகிறது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பெரியவை அனைத்தும் சிறியவற்றின் மீது சார்ந்துள்ளன. என் சித்தத்தின் மிகச் சிறிய இயக்கம் கூட தேவனுடைய சித்தத்தால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. இதில்தான் நான் மகிழ்கிறேன். அது இல்லையென்றால், என் நிலை மிகவும் துயரமானதாக இருக்கும். நான் இந்த எல்லையற்ற கட்டுப்பாட்டையும், வழிகாட்டுதலையும் ஏற்க மறுக்கிறேன் என்றால், நான் முழுமையாக தேவனுடைய வசத்தில் இருப்பதை விரும்பவில்லை என்பதுதான் தெளிவாகிறது. நான் ஒரு பகுதியிலாவது என் வசத்தில் இருக்க விரும்புகிறேன். என் சித்தத்தின் சிறிய இயக்கங்களை நான் கட்டுப்படுத்த விரும்புகிறேன், ஆனால் பெரியவற்றை தேவனுக்கே ஒப்படைக்கிறேன். இதனால் என்ன வெளிப்படுகிறது என்றால், நான் எனக்கே ஒரு தேவனாக இருக்க விரும்புகிறேன். நான் என் சித்தத்தை முழுமையாக தேவன் நிர்ணயிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விரும்பவில்லை. தேவன் தன் சித்தத்தை நிறைவேற்றினால், என் சித்தம் நிறைவேறாது என நான் பயப்படுகிறேன். மேலும், நான் அன்பாகப் பேசிய தேவனிடம், என்னை நித்தியத்திற்காக முழுமையாக ஒப்படைக்க நம்பிக்கை இல்லாதவனாக இருக்கிறேன். ஆம், இதுவே உண்மை. மனிதன் தேவனுடைய அதிகாரத்தை வெறுப்பது, தேவனுடைய இருதயத்தை சந்தேகிப்பதிலிருந்து வருகிறது. இன்றைய காலத்தில், தேவனுடைய முழுமையான ஆளுகையை மறுக்கும் மனிதர்களே, தேவனுடைய அன்பில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறுகிறார்கள். தேவனில் அன்பு தவிர வேறு எதுவும் இல்லை என்று பேசுகிறார்கள்! ஆனால் வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்ட அன்பானவர் மட்டுமல்ல. அவர் நீதியும், பரிசுத்தமும், முழு அதிகாரமும் உள்ளவர். வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய குணத்தை நான் அதிகமாகப் புரிந்துகொள்ளும்போது, அவர் ஆளுகிறவராக (Sovereign) இருக்க வேண்டும் என்பதை அதிகமாக உணர்கிறேன். அவர் அப்படி இருப்பதில், என் ஆத்துமாவின் ஆழத்தில் இருந்து மகிழ்ச்சியடைகிறேன்!

தேவனுடைய இறையாண்மையுள்ள சித்தமே எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. என்னுடைய பிறந்த நாளையும் தேவனுடைய இறையாண்மையான சித்தமே நிர்ணயித்தது. என் மரண நாளையும் அதே சித்தமே நிர்ணயிக்கிறது. அப்படியானால், என் மனம்திரும்புதலின் நாளும் அதே சித்தத்தால் நிச்சயமாக நிர்ணயிக்கப்படவில்லையா? முட்டாள் தவிர வேறு யாரும் மனமாற்றம் நிகழும் நாளை மனிதன் தன் சித்தத்தால் தீர்மானிக்க முடியும் என்று சொல்லமாட்டான். மனமாற்றம் நிகழும் நாள் தேவனால் நிர்ணயிக்கப்பட்டதானால், அது மனிதனுடைய சித்தத்தால் தீர்மானிக்கப்பட முடியாது. தேவன் எங்கே, எப்போது, எப்படி நாம் பிறக்க வேண்டும் என்பதை தீர்மானித்ததுபோல, நாம் எங்கே, எப்போது, எப்படி மறுபிறப்பு அடைய வேண்டும் என்பதையும் தீர்மானித்துள்ளார். அப்படியானால், நம்முடைய நம்பிக்கையில் தேவனுடைய சித்தம் மனிதனுடைய சித்தத்திற்கு முன்னதாக இருக்க வேண்டும். தேவனுடைய சித்தம் முன்னதாக இருக்கிறதால்தான் நாம் நம்போவதற்கு & விசுவாசிக்கிறதற்கு விரும்புகிறோம். இல்லையென்றால், நாம் ஒருபோதும் நம்பியிருக்க மாட்டோம்!

மனிதனுடைய சித்தம் தேவனுடைய சித்தத்திற்கு முன்னதாக செயல்படுகிறது என்றால், தேவனுடைய திட்டங்கள் எதுவும் நிறைவேற முடியாது. மனிதன் உலகத்தை தன் விருப்பப்படி நடத்த வேண்டியதாகிவிடும். தேவன் மனமாற்றம் நிகழும் நேரத்தை நிர்ணயிக்க கூடாது; அது மனிதனுடைய பொறுப்பில் தலையீடு செய்வதாகும். மேலும், அவர் ஒருவருக்கு மனமாற்றம் நிகழ வேண்டும் என்று தீர்மானிக்க கூடாது; அது மனிதனுடைய சித்தத்திற்கே விட்டுவிடப்பட வேண்டும். எத்தனை பேர் மனமாற்றம் பெற வேண்டும் என்பதையும் அவர் தீர்மானிக்க கூடாது; அப்படி தீர்மானித்தால் அது தேவனின் அழைப்பை உண்மையாகவும், மனிதனுடைய பொறுப்பை ஒரு போலியாகவும் மாற்றிவிடும்!

தவறாகச் சென்ற ஒரு நட்சத்திரத்தை தனது வார்த்தையால் தேவன் திருப்பி அதன் பாதையில் மீண்டும் கொண்டு வர தேவன் தலையீடு செய்தால், இயற்கையின் சட்டங்களில் தலையீடு செய்ததாக தேவனை யாரும் குற்றம் சாட்ட மாட்டார்கள். ஆனால், ஒரு மனிதனுடைய சித்தத்தை தேவன் மாற்றி அவனை பரிசுத்தத்திற்குத் திருப்புவதற்காக தேவன் தன் கரத்தை நீட்டினார், அது  அவரது அதிகாரத்தின் தவறான பயன்பாடாகவும், மனிதனுடைய சுதந்திரத்தில் தலையீடாகவும் கருதப்படுகிறது!

என்ன ஒரு கிறுக்குத்தனமான உலகம் இது! மனிதன் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறான், தேவன் தலையீடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. உலகத்திலும் திருச்சபையிலும் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் மனிதனுடைய சித்தத்தால் மட்டுமே வடிவமைக்கப்படுகிறது, இயக்கப்படுகிறது. தேவனுடைய சித்தம் இரண்டாம் நிலை ஒன்றாகவே இருக்கிறது. அவர் மனிதனின் செயல்களைப் பார்த்துக்கொண்டு, மனிதனின் பாதையைப் பின்தொடர வேண்டும். மனிதன் விரும்புவதற்கு  தேவன் "ஆமென்" சொல்ல வேண்டும்.

தேவனுடைய முழுமையான சித்தத்திற்கு எதிரான எதிர்ப்பு இந்த கடைசி நாட்களில் தெளிவாகத் தெரிகிறது. இன்று மனிதனுடைய சுயசித்தம் தெளிவாகக் காணப்படுகிறது. மனிதன் ஆரம்பத்தில் தேவனாக இருக்க விரும்பினான்; அந்த போராட்டத்தை கடைசி வரை தொடர்கிறான். தேவனுடைய சித்தத்திற்கு முன்னதாக தன் சித்தம் நிலைநிறைவடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அந்திக்கிறிஸ்துவின் சுயசித்தம் முழுமையாக வெளிப்படுகிறது. அவன் “தன் சித்தப்படி செய்யும் அரசன்” என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இன்று மனிதனின் சுயாதீன சித்தம் பற்றிய விவாதத்திலும், அதே ஆவியை நாம் காண்கிறோம். இந்த அந்திக்கிறிஸ்து நம்மிடம் பேசி நம்முடைய பெருமைமிகுந்த சுதந்திரத்திற்காக நம்மை தூண்டுகிறான். சுயாதீனசித்தமே அந்திக்கிறிஸ்துவின் சாரம்சம். சுயாதீனசித்தமே இன்றைய திருச்சபைகளில் முளைக்கின்ற கசப்பின் வேர். இது மேலிருந்து வருவதல்ல, கீழிருந்து வருகிறது. இது பூமிக்குரியது, மாம்சப்பிரகாரமானது, பிசாசுத்தனமானது.

கர்த்தர் இவ்வாறு சொல்கிறார்:

"எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன்" (யாத்திராகமம் 33:19, ரோமர் 9:8-24-ஐயும் பார்க்க).

“நான் நானே தேவன், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை” (உபாகமம் 32:39).

“இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது” (யோபு 12:14).

“பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்” (தானியேல் 4:35).

“அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்” (2 தீமோத்தேயு 1:9).

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.