நீங்கள் மரித்த பின்னர் அடுத்த கனமே சந்தோஷமும் சமாதானமும் நிறைந்த இடமாகிய பரலோகத்தில் இருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். இனி ஒரு போதும் கவலைகளோ, கண்ணீர்களோ, வலியோ, பாவமோ, துன்பமோ, வியாதியோ இருக்கப்போவது இல்லை. நீங்கள் உங்கள் பாவ சரீரத்தில் இருந்து விடுதலையாகி விட்டீர்கள். அதற்குப் பதிலாக மகிமையான ஒன்றைப் பெற்றுக் கொண்டீர்கள். நீங்கள் பரலோகத்திற்குள் நுழைந்த தருணத்தில் தானே, முற்றிலும் வித்தியாசமான உலகைக் கண்டீர்கள். பரவசமூட்டும் அழகான உலகம் அது. தங்கத்தால் ஆன தெருக்கள், எண்ண முடியாத அளவிலான மகிமையான தேவதூதர்கள் இன்னும் பல அதிசயங்கள் நிறைந்த இடம் அது. ஆனால் நீங்கள் பரலோகத்தைச் சுற்றி வலம் வரும்போது, நீங்கள் திரியேக தேவனுடைய வெளிப்படையான பிரசன்னம் இல்லாத நிலையில் ஒரு சமாதானமான வாழ்க்கை வாழப்போகிறீர்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். அவருடைய பிரசன்னமும் மகிமையும் இல்லாமல், ஒரே மெய்யான தேவனை ஆராதிக்கிற பரலோக ஜீவன்கள் இல்லாத இடத்தை நினைத்துப் பாருங்கள்.
நீங்கள் இதை எப்படி உணருவீர்கள்? பரலோகத்தில் உங்களுக்கு மற்ற எல்லாம் இருந்தும் தேவனுடைய வெளிப்படையான பிரசன்னம் இல்லை. அது எதாவது வித்தியாசத்தை உண்டாக்குமா? அல்லது நீங்கள் மகிமையான தேவனைத் தரிசியாமல் நித்தியத்தைச் செலவிடப் போகிறீர்கள் என்கிற எண்ணம் உங்களை நிலை குலையச் செய்யுமா?
சுகவீனம், கவலை, கண்ணீர் அல்லது வேதனையின்மை என்கிற நிலை இருக்கும் வரை அநேகர் தேவன் என்கிற பெயரைச் சொல்லாமல் சந்தோஷமாகவே இருப்பர். ஏனெனில் இவைகளைப் பெறும்படியாகவே பெரும்பாலானோர் தேவனைத் தேடுகிறார்கள்.
இன்றைய காலத்தில் தேடுவோரின் நலனை முக்கியப்படுத்தும் கிறிஸ்தவம் பெருகிக் கொண்டே இருக்கிறது. ஏனைய காரியங்களுக்காக அநேகர் தேவனைத் தேடுகிறார்கள். அவர்களுடைய மையமாக தேவன் இருப்பதில்லை. அவர்கள் தேவனுடைய மகிமையினால் ஈர்க்கப்படவில்லை. ஆகவே அவர்கள் தேவனைத் தேட வேண்டிய சரியான காரணங்களுக்காக அவரைத் தேடுவதில்லை.
நான் பரலோகத்தைக் குறித்துச் சொன்னேன். ஆனால் பரலோகத்தின் இருப்பிடமே தேவன் தான். தேவன் இல்லாத பரலோகம் பரலோகமே அல்ல. தேவன் இல்லாமல் கவலைகள், கண்ணீர்கள், வேதனை, பாவம், பாடு, மற்றும் சுகவீனம் ஆகியவை ஒருபோதும் இல்லாத இடத்தை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது. பரலோகத்தின் மையமே தேவன் தான். அவரே சகல துதி, ஆராதனை மற்றும் மகிமைக்குப் பாத்திரராய் வீற்றிருக்கிறவர். பரலோக சேனைகள் தேவனுடைய மகத்துவத்தினால் ஆச்சரியம் நிறைந்தவர்களாய் அவரை மகிழ்ச்சியுடன் ஆராதிக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய மகத்துவத்தை உணர்ந்தவர்களாய் ஒருவரை ஒருவர் நோக்கி, “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர். பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” என்று கூப்பிட்டுச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் (ஏசாயா 6:3). பரிசுத்தம் என்கிற வார்த்தைக்கு பிரித்தெடுக்கப்பட்ட அல்லது பிரித்து வைக்கப்பட்ட என்பது பொருள். பரலோக சேனைகள் பரிசுத்தர் என்று சத்தமிட்டுச் சொல்லும்போது, தேவன் ஏனைய சிருஷ்டிகளில் இருந்து தனித்துவம் வாய்ந்தவர் என்று அர்த்தம் கொள்கின்றனர். அவர் ஏனைய அனைத்து சிருஷ்டிகளிலும் மேலானவர். எல்லாப் படைப்பும் அவருடைய கரத்தின் கிரியைகளே. அவரைப்போல இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை. தேவன் ஒருவர் மட்டுமே கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரர் என்பதை அவர்கள் உணர்ந்ததால் தான், பரலோக சேனைகள் அவருடைய தெய்வீக மகிமையின்பால் ஆச்சரியமான விதத்தில் வயப்பட்டு, அவருடைய பிரசன்னத்தில் சந்தோஷமுடன் வாழ்ந்து அவரைப் பணிகிறார்கள்.
நீங்கள் எப்படி? தேவனைக் குறித்த வாஞ்சை உங்களில் காணப்படுகிறதா? தேவன் தேவனாய் இருப்பதால் அவரைத் தேடுகிறீர்களா? தேவனுடைய மகிமையைக் குறித்த பரவசத்தால் நீங்கள் இம்மைக்குரிய இந்த உலக வாழ்வில் வயப்படவில்லை என்றால், பரலோகம் உங்களுக்கான இடம் அல்ல. ஏனெனில் தேவனுடைய மாட்சிமையால் பிரமித்து நிற்பவர்களுக்கான இடம் தான் அது. அப்படிப்பட்ட மக்கள் பூமியில் வாழ்ந்து வரும் போதே, தேவன் எல்லா கனத்திற்கும் மகிமைக்கும் ஆராதனைக்கும் பாத்திரர் என்று காண்கிறார்கள்.
ஒரு தெய்வீக அழைப்பு
தேவனுடனான நமது உறவு சுவிசேஷத்துடன் துவங்குகிறது. சுவிசேஷம் என்பது நற்செய்தி. மாபெரும் ஆச்சரியத்திற்குரிய தேவன் பாவம் நிறைந்த, கீழ்ப்படியாத, அருகதையற்ற, தகுதியில்லாத மனிதர்களை மீட்டெடுக்கும்படியாக தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்பிய நற்செய்தி அது. நித்திய தேவன் மனிதனாக இந்த உலகத்திற்குள் பிரவேசித்தார். கன்னியின் வயிற்றில் பிறந்து, நீதியான வாழ்க்கை வாழ்ந்து, நமக்கான பூரணமான பலியாக அவர் தன்னைத் தந்தார். அவர் நமது இடத்தை எடுத்துக் கொண்டு, நம் பாவங்களைச் சுமந்தார், நமது பாவங்களுக்கான தண்டனை அவர் மேல் விழுந்தது. நம்முடைய பாவங்களுக்காக தேவன் இயேசுவை நொறுக்கச் சித்தமானார். பாவத்தின் மீதான தேவ கோபாக்கினை அவர் மேல் ஊற்றப்பட்டது. நமது பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்ய இயேசுவின் இரத்தம் சிந்தப்பட்டது. அவர் மரித்து, தமது மகிமைக்காகவும் நமது இரட்சிப்பிற்காகவும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்.
தேவன் இழந்து போன தம் மக்களை அவருடைய நற்செய்தி வழியாக அழைத்து அவர்களைத் தமக்காக இரட்சித்துக் கொள்கிறார். அதைத் தொடர்ந்து பரிசுத்த ஆவியானவரின் செயலின் விளைவாக இந்த அழைப்பை விசுவாசித்து மனந்திரும்புகிறவர்களுக்கும் ஆண்டவருக்கும் இடையே ஒரு உறவு உண்டாகிறது. இந்த அழைப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் தேவனுடைய மக்கள் ஆகிறார்கள்.
இந்தச் செயலின் விளைவாக, மெய்யாக இரட்சிக்கப்பட்ட ஒரு நபர் சிலுவையிலே செய்து காண்பித்த தேவனுடைய மகிமையைக் குறித்து பிரமித்து நிற்கிறார். இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் வழியாக தேவன் ஏற்படுத்திய இரட்சிப்பின் திட்டத்தைப் பார்க்கும் விசுவாசிகள் அதன் மூலம் தேவனுடைய அன்பையும் அவருடைய ஞானத்தையும் அறிகிறார்கள். இரட்சிக்கப்பட்ட நபர் நமது பாவத்திற்காக தண்டிக்கப்பட்ட கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதியையும் அவருடைய நியாயத்தையும் காண்கிறார். ஆத்துமாக்களின் இரட்சிப்பு போன்ற தேவனுடைய செயல்களில் வெளிப்படும் ஆண்டவருடைய கிருபை மற்றும் இரக்கங்களால் விசுவாசிகள் ஆச்சரியம் அடைகிறார்கள்.
வார்த்தையால் ஆதரிக்கப்படும் ஒரு உறவு
சிலுவையில் துவங்கிய நற்செய்தியின் உறவு என்றும் தொடர்கிறது. தேவனுடனான அந்த உறவு தமது வார்த்தையின் வழியாக மனிதனுக்கு அளிக்கப்பட்ட வெளிப்பாடின் வழியாக நிலை நிற்கிறது. தேவன்மீது நாம் வைத்துள்ள விசுவாசம் தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாடைச் சார்ந்தது. அவருடைய வார்த்தையின் மூலமாகவே நாம் தொடர்ச்சியாக நம்முடைய தேவனை அறிகிறோம். தேவனுடனான நமது உறவு உணர்ச்சிகளைச் சார்ந்த ஒன்று அல்ல, நமது கற்பனைகளின் அடிப்படையில் ஆனதும் அல்ல. மாறாக தேவனுடைய வார்த்தையில் துவங்கின இந்த உறவு அதே வார்த்தையின் வழியாகவே தொடரும்படி செய்கிறது. தேவன் தமது வார்த்தையின் வழியாக மட்டுமே தம்மை வெளிப்படுத்துகிறார். நாமும் தேவனைத் தேடும் முயற்சியை வேத வசனத்தின் வழியாகவே செய்ய வேண்டும். ஆகவே, தேவனுடைய வசனத்தை கவனமாய்ப் படிக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. இந்த ஒழுங்கின் நோக்கம் தேவனை அறிந்து கொள்வதற்காகவே. ஆச்சரியம் தரும் வகையில் சொல்வோமானால், விசுவாசிகளில் அநேகருக்கு வேதாதகமத்தின் மேல் ஆர்வமில்லை. ஆகவே அவர்கள் அதில் ஆழமாகச் செல்வதில்லை. ஒரு முறை ஒருவர் என்னிடம் இவ்விதமாகக் கேட்டார், “பிரதர், பைபிள் ஏன் ரெம்ப (போரிங்) சலிப்படையச் செய்கிற புத்தமாக இருக்கிறது? நாம் எப்படி ஒரே புத்தகத்தைத் திரும்பத் திரும்ப படிப்பது?” மக்கள் தேவனுடைய வசனத்தைத் தவறான முறையில் அணுகுவது தான் இதுபோன்ற அனுபவங்களுக்குக் காரணமாக அமைகிறது. நாம் தேவனுடைய வசனத்தைச் சரியான விதத்தில் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
தேவனுடைய வார்த்தையைச் சரியாகப் படிப்பதற்கு நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய சில அணுகுமுறைகள் இங்கே நாம் பட்டியலிடுவோம்.
1) தேவனை அறிந்து கொள்ளும் படியாக தேவனுடைய வார்த்தையை படியுங்கள்.
அநேகர் தேவனுடைய வார்த்தையை மேலோட்டமாகப் வாசிக்கிறார்கள். சில தகவல்களைப் பெறும் வகையில் வாசிக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் வாசித்த பிறகு அவர்களுக்கு வேத புத்தக்தின் மீது சலிப்புத் தட்டி விடுகிறது. நாம் முதலாவதாகக் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில் நாம் வேதத்தை மற்ற புத்தகத்தைப் போல வாசிக்கக் கூடாது. இது தேவனுடைய வார்த்தை. இது நமக்காக எழுதப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வைக்கப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தை. நாம் அவருடைய மகிமையால் கவரப்படும்படி தேவன் ஏற்படுத்திய மார்க்கம் அவரால் எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தை மட்டுமே. அதன் வழியாகவே நாம் அவருடைய நோக்கங்களுக்காக வாழ வேண்டும் என்பது ஆண்டவருடைய ஏற்பாடு.
நமது சிறிய மனதைக் கொண்டு அளவில்லாத தேவனை குறைந்த பட்சம் ஓரளவிற்கு புரிந்துகொள்ள வேண்டும் எனபதற்காக தேவன் நியமித்திருக்கிற ஒரே வழிமுறை இதுதான். ஆகவே நாம் தேவனுடைய வழிக்கு நம்மை அர்ப்பணிப்போம். நாம் தேவனை அறிந்து கொள்ளும்படியாக அவர் நமக்கு அருளிய இரக்கங்கள் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய சிலாக்கியமும் கனமுமாகும்.
ஆகவே, சகோதரரே, தேவனை அறிந்து அவருடைய மகிமையால் பிரமிப்படைந்து அவரைப் போற்ற இது மட்டுமே ஒரே வழி என்றால், நாம் எவ்வளவு அதிக அக்கறையுடன் வேத வசனத்தைப் படிக்க வேண்டும் என்பதை நினைத்துப் பாருங்கள். இதுபோன்ற எத்துணை ஆச்சரியமான தருணங்களை நாம் இழந்திருக்கிறோம்?
2) சரியான மனநிலையுடன் தேவனுடைய வசனத்தைப் படியுங்கள்
அநேக நேரங்களில் நமக்கு எல்லாம் தெரியும் அல்லது நாம் தேறி விட்டோம் என்கிற மனநிலை நமக்கு வந்து விடலாம். இந்த எண்ணம் நம்மை ஆளத் துவங்கி விட்டால், நாம் சீக்கிரத்தில் தேவனுடைய வசனத்தைப் புரிந்துகொள்ள நமது புரிந்து கொள்ளும் திறமையைச் சார்ந்து கொள்ள ஆரம்பித்து விடுவோம். ஆனால் நம் சுய பலத்தால் தேவனுடைய சத்தியங்களைப் புரிந்துகொள்ள இயலாது என்கிற உண்மை நிலையை உணர வேண்டும். நமது மனதைப் பிரகாசிப்பிக்கும் தேவ ஆவியானவருடைய உதவியால் மட்டுமே நமது சிந்தையால் தெய்வீக சத்தியங்களை விளங்கிக் கொள்ள முடியும்.
வேதாகமம் சொல்கிறது, “எழுதியிருக்கிறபடி: ‘தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.’ நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார். அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார். மனுஷனில் உள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்” (1 கொரிந்தியர் 2:9–12).
“என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (யோவான் 14: 26).
பரிசுத்த ஆவியானவர் நம்மில் வசிப்பதால், நாம் வேத வசனங்களை விளங்கிக்கொள்ள உதவி செய்கிறார். நம் மனதைப் பிரகாசிக்கிப்பிக்கும்படியாகவும் தேவனுடைய மகத்துவத்தை உணரும்படியாகவும் கிரியை செய்கிறார். அது மட்டுமல்லாமல், அவர் நம்மை பெலப்படுத்தி, நாம் இந்த உலகில் இருக்கும் வரை அவருக்கு உண்மையாக இருக்க உதவி செய்கிறார். அவரே நம்மைப் பரிசுத்தமாக்கி, நம்மை கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாற உதவி செய்கிறார். ஆகவே, நாம் தேவனுடைய வசனத்தை ஜெபசிந்தையுடன் தேவ ஆவியானவரின் சார்புடன் வாசிக்க வேண்டும்.
3) தேவனுடைய வசனத்தைச் சரியாகப் படியுங்கள்
“வேதாகமம் சோம்பேறிகளுக்கு இணக்கமாக செயல்படாது” என்று ஒருவர் சொன்னார். உண்மையில் அது சரியான கூற்று தான். வேதத்தைப் வாசிப்பது என்பது கடின உழைப்புடன் கூடிய ஒன்று. மேலோட்டமாக வேதத்தை நாம் வாசித்து, அதன் வழியாக ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சி அடையலாம் என்று நாம் நினைக்கக் கூடாது. வேதம் முழுவதும் வாசிப்பது உதவிகரமானது என்றாலும், நமக்கு இன்னும் அதிகம் தேவை இருக்கிறது. நாம் அமர்ந்து வேதாகமத்தை ஒழுங்காக, கிரமமாகப் படிக்க முற்பட வேண்டும். நமது தனிப்பட்ட வேத படிப்பை முறையான நடத்துதல்களின் வழியாக செயல்படுத்தினால் நமக்கு மிகவும் ஊக்கம் தருவதாகவே இருக்கும்.
வேதத்தை நாம் சரியான விதத்தில் வாசிக்கும் படியாக, நாம் அதற்காக சரியான அளவில் நேரம் ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு நாளிலும் தரமான அளவில் நேரத்தைக் கொடுக்காமல் நமது வேதாகம பாடத்திலிருந்து அதிகம் பெற்றுக்கொள்ள இயலாது. வேதத்தின் ஆழத்தில் செல்ல, நமக்கு நேரம் அவசியம். சரியான உபகரணங்களைப் பயன்படுத்தி நாம் வேதத்தின் ஆழத்திற்குள் செல்ல வேண்டும்.
வேதத்தைப் புரிந்து கொள்ள மிக முக்கியமான மற்றும் சரியான படி விளங்கிக்கொள்வதே எனலாம். சரியான வேத வியாக்கியானத்திற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை நாம் பயன்படுத்தி, வேத புத்தகத்தை எழுதிய ஆசிரியர் என்ன பொருள் கொள்கிறார் என்று விளங்க முயற்சி செய்ய வேண்டும். குறிப்பிட்ட புத்தகத்தின் ஆசிரியர் என்ன அர்த்தம் கொள்கிறார் என்பது தான் நமது கவனத்தில் எடுத்துக்கொள்ளும் வேத பகுதியின் அர்த்தமாக இருக்க முடியும். இந்த வகையில் நாம் தேவனைப் புரிந்து கொள்ளவும், அவருடைய மகிமையையும் அவரது நோக்கங்களையும் அறிந்து கொள்ளவும் முடியும்.
முடிவுரை
தேவனை அறிந்துகொள்ள ஒரே வழி தேவனுடைய வார்த்தை மட்டுமே. ஆகவே, நாம் உண்மையாய், முழு மனதுடன் வேதத்தைப் வாசிக்கவும் வேண்டும். பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்து கொண்டு ஜெப சிந்தையுடன் வேதத்தினை ஆராயும் போது, நாம் அவருடைய மகிமையால் கவரப்பட்டு இந்த பூமியில் அவருக்காக வாழ முடியும். தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வசனத்தை அல்லாமல், தேவனை அறியவும் புரிந்து கொள்ளவும் நமக்கு வேறு வழி இல்லை. ஆகவே, நாம் அவருடைய வசனத்தின் வழியாக ஆர்வமாகப் பின் தொடரவில்லை என்றால், நாம் தேவனை அவமதிக்கிறோம்.
“தேவனுக்குத் தகுதியானது என்று நீங்கள் எதைக் குறித்துச் சொல்லக் கூடும்? அவர் எல்லா மேன்மையிலும் மேன்மையானவர். உயரங்களுக்கு எல்லாம் மேலான உயரமுள்ளவர். வெளிச்சத்திற்கும் அதிகமான தெளிவுடையவர். பிரகாரசத்திற்கும் அதிக பிரகாசம் உடையவர். வல்லமையிலும் அதிக வல்லமை கொண்டவர். எல்லா அழகைப் பார்க்கிலும் அதிக சவுந்தரியம் உள்ளவர். எல்லா சத்தியத்தை விட அதிக சத்தியமானவர். எல்லாப் பொறுமையிலும் மேலானவர், அதிகாரம் மிக்க அனைவரை விட அதிக பலம் வாய்ந்தவர். அனைத்து செல்வங்களைவிட அதிக ஐசுவரியம் வாய்ந்தவர். அனைத்து ஞானத்தினை விட அதிக ஞானி. கனிவுகளுக்கெல்லாம் அதிக கனிவானவர். எல்லா நன்ைமியிலும் சிறந்தவர், நியாயங்களுக்கும் மேலான நியாயம் உள்ளவர். அனைத்து இரக்கங்களுக்கும் மேலான இரக்கம் படைத்தவர். நாம் விரும்பத்தக்க அனைத்து நற்குணங்களும் தேவன் யார் என்பதை விட மிகக் குறைந்ததாகவே இருக்கிறது. ஏனெனில் அவரே அனைத்து நற்குணங்களுக்கும் ஆதாரமானவர்” என்கிறர் டக்ளஸ் கெல்லி.
ஆகவே, தேவனுடைய வசனத்தை ஜாக்கிரதையுடன் ஆய்வு செய்து படிப்பதற்காக உங்களை தேவனுக்கு அர்ப்பணிக்க உங்களை ஊக்கப்படுத்துகிறேன். இந்த ஜாக்கிரதையின் விளைவாக பரிசுத்த ஆவியானவர் நமது மனதைப் பிரகாசம் அடையச் செய்வதுடன் நிறுத்துவதில்லை. பாவமும் பயபக்தியில்லாத வாழ்க்கை முறையும் நம்மைச் சூழந்து இருந்தாலும், ஆவியானவர் தேவனைப் பற்றிய மெய்யான அறிவை நம் இருதயத்தில் வைத்து, நமது வாழ்வில் அர்த்தமும் பக்தியும் உள்ள வாழ்க்கை வாழ நமக்கு உதவியும் செய்வார்.