“கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்... புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்... ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது..." (எரேமியா 10:1-3).
கிறிஸ்துமஸ் வருகிறது! ஆனால் "கிறிஸ்துமஸ்" என்றால் என்ன? அதன் பெயரே அதன் மூலத்தைக் குறிக்கவில்லையா? "கிறிஸ்து-மாஸ்" என்பது புறதெய்வ வழிபாடுகளிலிருந்து, அதாவது ரோமன் கத்தோலிக்க மூலத்திலிருந்து உருவானது. ஆனால், சிலர் கிறிஸ்துமஸ் என்பது இரட்சகரின் பிறப்பை நினைவுகூரும் நேரம் என்று கூறுகின்றனர். அது உண்மையா? அத்தகைய நினைவுகூருதலுக்கு யார் அனுமதி அளித்தது? நிச்சயமாக தேவன் இல்லை. நம்முடைய இரட்சகர் தம்முடைய சீஷர்களைத் தமது மரணத்தை நினைவுகூரும்படி கட்டளையிட்டார்; ஆனால், ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை வேதத்தில் அவருடைய பிறப்பைக் கொண்டாடச் சொல்லும் ஒரு வசனம் கூட இல்லை. மேலும், இயேசு கிறிஸ்து எந்த மாதத்தில், எப்போது பிறந்தார் என்பது யாருக்குத் தெரியும்? அந்த காரியத்தில் வேதம் அமைதியாகவே இருக்கிறது. தேவனுடைய வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இரண்டு மட்டுமே; அவை பார்வோன் மற்றும் ஏரோது ஆகியோருடையது (ஆதியாகமம் 40:20, மத்தேயு 14:6). அதற்கும் ஒரு காரணம் உண்டு. இது "நம்முடைய படிப்பினைக்காக" பதிவு செய்யப்பட்டுள்ளதா? அப்படியானால், நாம் அந்தப் படிப்பினையை ஜெபத்துடன் நம் மனதில் ஏற்றுக்கொண்டோமா?
மேலும், "கிறிஸ்துமஸை" கொண்டாடுவது யார்? முழு "நாகரிக உலகமுமே" கொண்டாடுகிறது. ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தின் மீதுள்ள விசுவாசத்தை அறிக்கையிடாத பல்லாயிரக்கணக்கானவர்களும், தங்களை அவரைப் பின்பற்றுபவர்கள் என்று கூறிக்கொண்டு, தங்கள் செயல்களினால் அவரை மறுதலித்து, கர்த்தராகிய இயேசுவின் பிறப்பைக் கௌரவிப்பதாகப் பாசாங்கு செய்து களியாட்டங்களில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கானவர்களுமே இதைக் கொண்டாடுகிறார்கள். அதன் அடிப்படையை ஆராய்ந்து நாங்கள் கேட்கிறோம்: அவருடைய நண்பர்கள், அவருடைய எதிரிகளுடன் இணைந்து மாம்சமான, உலகப்பிரகாரமான களியாட்டங்களில் ஒன்றுபடுவது பொருத்தமானதா? உலகத்தின் களியாட்டங்களில் அப்படிப் பங்கேற்பதன் மூலம், இந்த உலகம் புறக்கணித்த அவர் பிரியப்படுவார் அல்லது மகிமைப்படுவார் என்று, உண்மையிலேயே மறுபடியும் பிறந்த எந்தவொரு ஆத்துமாவாவது நினைக்க முடியுமா? நிச்சயமாகவே ஜனங்களின் பழக்கவழக்கங்கள் வீணானவை; மேலும், "தீமைசெய்யத் திரளான பேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக" (யாத்திராகமம் 23:2) என்று எழுதப்பட்டுள்ளது.
"பிள்ளைகளை மகிழ்விப்பதற்காகவே" அல்லது அவர்களுக்கு "நல்லதொரு நேரத்தை அளிப்பதற்காகவே" நாங்கள் கிறிஸ்துமஸை ஆசரிக்கிறோம் என்று சிலர் வாதிடலாம். ஆனால், நம்முடைய இரட்சகரின் பிறப்பைக் கௌரவிப்பதாகக் கூறிக்கொண்டு, ஒரு போர்வையின் கீழ் இதைச் செய்வது ஏன்? பண்டிகைக் காலத்தின் மாம்ச களியாட்டங்களோடு அவருடைய பரிசுத்த நாமத்தைத் தொடர்புபடுத்துவது ஏன் அவசியமானது? உலகத்தின் அடையாளமான "எகிப்திலிருந்து" உங்கள் பிள்ளைகளை உங்களோடு அழைத்துச் செல்லும் விதம் இதுதானா? (யாத்திராகமம் 10:9-10). அல்லது இது இன்றைய எகிப்தியர்களோடு அவர்களின் "அநித்தியமான பாவ இன்பங்களில்" (எபிரேயர் 11:25) அவர்களைக் கலக்கச் செய்வதா? "பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (நீதிமொழிகள் 22:6) என்று வேதம் கூறுகிறது. தேவனுடைய மக்கள் தங்கள் பிள்ளைகளைக் "கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதகத்திலும்" (எபேசியர் 6:4) வளர்க்கும்படி வேதம் கட்டளையிடுகிறது. ஆனால், பிள்ளைகளுக்கு "நல்ல நேரத்தை" அளிப்பதுதான் நம்முடைய கடமை என்று வேதம் எங்கே குறிப்பிடுகிறது? தேவனுடைய ஆசீர்வாதத்தை உரிமையோடு கேட்க முடியாத ஒரு காரியத்தில் ஈடுபடும்போது, நாம் எப்படிப் பிள்ளைகளுக்கு உண்மையான "நல்ல நேரத்தை" கொடுக்க முடியும்?
"பண்டிகைக் காலத்தின்" சில மோசமான காரியங்களைத் தவிர்ப்பவர்களும் உளர்; ஆயினும்கூட, அவர்கள் பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளும் "கிறிஸ்துமஸ்" வழக்கத்திற்குக் கடுமையாக அடிமைப்பட்டிருக்கிறார்கள். இதை "பரிமாற்றம்” என்று நாம் கூறினாலும், இது பெரும்பாலும் பதிலுக்குப் பதில் செய்யும் ஒரு சம்பிரதாயமாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு யார் யாரெல்லாம் பரிசு கொடுத்தார்கள் என்ற பட்டியல், இந்த ஆண்டு அவர்களுக்குத் திரும்பக் கொடுப்பதற்காகக் காகிதத்திலோ அல்லது நினைவிலோ வைக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, ஒரு நண்பருக்கு வழங்கப்படும் "பரிசு", அவரிடமிருந்து திரும்பப் பெற எதிர்பார்க்கும் பரிசின் அதே மதிப்புடையதாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதனால், இதை வாங்க வசதி இல்லாத பலர் சிரமப்படுகிறார்கள். இப்படி வீணடிக்கப்படும் ஒவ்வொரு காசும், வீணாக்கப்படும் ஒவ்வொரு மணிநேரமும் தேவனால் கணக்குக் கேட்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்! இந்த ஆண்டின் இறுதி நாட்கள் நெருங்கும்போது நாம் இன்னும் பூமியில் இருப்போமானால், எழுத்தாளராகிய நானும், வாசகர்களாகிய நீங்களும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போம் என்ற உணர்வோடு வாழவும் செயல்படவும் அவருடைய கிருபையை ஊக்கமாகத் தேடுவோமாக. "நன்றாகச் செய்தாய்" என்று அவரிடமிருந்து நாம் பெறும் பாராட்டு, இந்த உலகத்தின் எண்ணற்ற மனிதர்களிடமிருந்து நாம் பெறும் ஏளனங்களுக்கும் கேலிகளுக்கும் போதுமான ஈடாக இருக்கும்.
எந்தவொரு கிறிஸ்தவ விசுவாசியும் பரிசுத்த ஆண்டவருக்கு முன்பாக நிற்கும் அந்த நாளில், தாம் பூமியில் "மிகவும் கண்டிப்புடன்" (பரிசுத்தமாக) வாழ்ந்துவிட்டோமே என்று வருத்தப்படுவார்கள் என உங்களால் ஒரு கணமேனும் சிந்தித்துப் பார்க்க முடியுமா? "ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளைவிட்டு விலகியிருப்பதில்" (1 பேதுரு 2:11) "மிகவும் தீவிரமாக" இருந்ததற்காக, தேவன் தம்முடைய பிள்ளைகள் யாரையாவது கண்டிப்பார் என்று சிறிதளவேனும் ஆபத்து இருக்கிறதா? நாம் "சிறிய காரியங்களில்" சமரசம் செய்துகொள்வதன் மூலம், இன்று உலக மதவாதிகளின் நன்மதிப்பையும் நல்ல வார்த்தையையும் பெறலாம்; ஆனால், நியாயத்தீர்ப்பின் நாளில் அவருடைய ஒப்புதலின் புன்னகையை நாம் பெற முடியுமா? ஓ..! தேவன் என்ன நினைப்பார் என்பதைப் பற்றி அதிகம் கவலைப்பட்டு, அழிந்துபோகும் மனிதர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படுவதை விடுவோமாக!
"தீமைசெய்யத் திரளான பேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக” (யாத்திராகமம் 23:2). பிரபலமான கருத்துக்களின் அலையோடு சேர்ந்து மிதந்து செல்வது மிகவும் எளிதான காரியம்; ஆனால், அந்த அலைக்கு எதிர்த்து நீந்துவதற்கு, தேவனுடைய அதிகக் கிருபையும், விடாமுயற்சியும், அவரைச் சார்ந்திருக்கும் தன்மையும் தேவைப்படுகிறது. இருப்பினும், பரலோகத்தின் சுதந்தரவாளிகள் அதைச் செய்யவே அழைக்கப்பட்டுள்ளனர். "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்" (ரோமர் 12:2), உங்களை மறுதலித்து, சிலுவையை எடுத்துக்கொண்டு, உலகத்தால் நிராகரிக்கப்பட்ட கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும்.
"இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு" (வெளிப்படுத்தல் 3:11) என்னும் இரட்சகரின் அந்த வார்த்தைக்கு, எழுத்தாளரும் வாசகரும் எவ்வளவு கவனத்துடன் செவிசாய்க்க வேண்டும்! ஓ! அப்படிச் செய்தால் மட்டுமே நம் ஒவ்வொருவராலும், “உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்" (சங்கீதம் 119:101) என்று உண்மையாகச் சொல்ல முடியும்.
எங்கள் இறுதி வார்த்தை போதகர்களுக்கானது. உங்களுக்கான கர்த்தருடைய வார்த்தை இதுவே: "வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு" (1 தீமோத்தேயு 4:12). விசுவாசத்தின் அடிப்படைகள் அனைத்தையும் மறுதலிக்கும் உலகப்பிரகாரமான "சபைகள்" என்று உங்களுக்குத் தெரிந்த இடங்களில் "கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்” தவறாமல் நடைபெறும் அல்லவா? நீங்களும் அவர்களைப் பின்பற்றுவீர்களா? வேதப்பூர்வமற்ற "பணம் திரட்டும்" முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நீங்கள், வேதப்பூர்வமற்ற "கிறிஸ்துமஸ் ஆராதனைகளுக்கு" அனுமதி வழங்கினால் அது எப்படிச் சரியாக இருக்கும்? உங்கள் சபைக்கு முன்பாக இதில் உள்ள தேவனுடைய சத்தியத்தை உறுதியாகவும், அதேசமயம் அன்போடும் எடுத்துரைக்கக் கிருபையைத் தேடுங்கள். மேலும், புறமத, ரோமன் கத்தோலிக்க மற்றும் உலகப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதில் உங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதைத் தெளிவாக அறிவியுங்கள்.
பின்வரும் பகுதி, சார்லஸ் எச். ஸ்பர்ஜன் அவர்கள் 81-ஆம் சங்கீதத்திற்கு எழுதிய "தாவீதின் கருவூலம்" (The Treasury of David) என்னும் விளக்கவுரையிலிருந்து தரப்படுகிறது:
"மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்” (வசனம் 3). கீழ்ப்படிதலே நமது ஆராதனையை ஒழுங்குபடுத்த வேண்டுமே தவிர, மனித ஆசையும் உணர்ச்சியும் அல்ல. தேவன் நியமித்த கட்டளைகளே ஆராதனைக்கும் காலங்களுக்கும் ஆழ்ந்த புனிதத்தன்மையைக் கொடுக்கின்றன; எந்தவொரு ஆடம்பரச் சடங்குகளோ, மனிதனால் உருவாக்கப்பட்ட படிநிலை ஒழுங்குமுறைகளோ அத்தகைய புனிதத்தன்மையைக் கொடுக்க முடியாது. யூதர்கள் நியமிக்கப்பட்ட மாதத்தை மட்டும் அல்ல, அந்த மாதத்தின் தெய்வீகமாகப் பிரிக்கப்பட்ட பகுதியையும் அப்படியே கடைப்பிடித்தனர். முற்காலத்தில் கர்த்தருடைய மக்கள் ஆராதனைக்காக நியமிக்கப்பட்ட நேரங்களை மனமகிழ்ச்சியோடு வரவேற்றனர்; நாமும் அதே மனப்பான்மையைப் பின்பற்றுவோம். மேலும் கர்த்தருடைய நாளைப் பற்றி "மகிழ்ச்சி" மற்றும் "கௌரவம்" என்பதைத் தவிர வேறெதுவும் பேசாமலிருப்போம். வேதத்தின் இந்தப் பகுதியை, மனிதனால் நியமிக்கப்பட்ட பண்டிகைகளுக்கும் விரதங்களுக்கும் தகுந்த ஆதாரமாகக் காட்டுபவர்கள் நிச்சயம் மதிகெட்டவர்களாகத்தான் இருக்க வேண்டும். நாமோ ரோம் சபையோ அல்லது பேராயர்களோ நியமிக்கும் பண்டிகைகளை அல்ல, மாறாக, கர்த்தர் நியமித்த கட்டளைகளையே கைக்கொள்வோம்.
“(ஏனெனில்) இது இஸ்ரவேலுக்குப் பிரமாணமும், யாக்கோபின் தேவன் விதித்த நியாயமுமாயிருக்கிறது' (வசனம் 4). கர்த்தரின் இரக்கத்தை நினைவுகூருவதற்காக, ஒரு குறிப்பிட்ட புனித பருவம் தனியாகப் பிரித்துவைக்கப்பட வேண்டும் என்பது அனைத்து கோத்திரத்தாரையும் கட்டுப்படுத்தும் பிரமாணமாக இருந்தது; மெய்யாகவே அது தேவனுக்குரியது. அத்தகைய சிறப்பு மரியாதையைக் கோருவதற்கு அவருக்கு மட்டுமே உரிமை உண்டு. கிறிஸ்துமஸ் மற்றும் பிற போப்பாண்டவரின் விழாக்கள், தெய்வீகச் சட்டத்தால் நிறுவப்பட்டவை என்று என்றைக்கு நிரூபிக்கப்படுகிறதோ, அன்று நாமும் அவற்றில் கலந்துகொள்வோம்; ஆனால் அதுவரை கலந்துகொள்ள மாட்டோம். கர்த்தரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல மனிதர்களின் பாரம்பரியங்களை நிராகரிப்பதும் நமது கடமையாகும்.