கல்வினிசம் (Calvinism) என்பது பாரம்பரியப் புராட்டஸ்டண்ட் (Orthodox Protestantism) மதத்திற்குள் உருவான ஒரு முக்கிய இயக்கமாகும். இதற்கு ‘சீர்திருத்தப்பட்ட இறையியல்’ (Reformed Theology) என்ற மற்றொரு பெயரும் உண்டு. இது ஜான் கால்வின் (1509-1564) என்ற பிரெஞ்சு இறையியலாளரால் உருவாக்கப்பட்டது. மார்ட்டின் லூதர் கத்தோலிக்க மதத்தின் மீது தனது 95 தீர்மானங்களை வெளியிட்டபோது, ஜான் கால்வின் எட்டு வயதுடையவராக இருந்தார். கால்வினும் லூதரும் ஒருபோதும் நேரில் சந்தித்ததில்லை.
கால்வின் ஆரம்பத்தில் ஒரு வழக்கறிஞராக இருந்தார்; பின்னர் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா மாகாணத்தில் ஒரு திருச்சபையின் போதகரானார். அவர் 1539-ல் திருமணம் செய்து கொண்டார். கால்வின் வேதாகமத்தில் உள்ள பல புத்தகங்களுக்கு விளக்கவுரைகளை எழுதியவர். அவரது மிகவும் புகழ்பெற்ற படைப்பு "இன்ஸ்டிட்யூட்ஸ் ஆஃப் தி கிறிஸ்டியன் ரிலிஜன்" (The Institutes of the Christian Religion) என்பதாகும். இது அவர் 26 வயதில் வெளியிட்ட மிக முக்கியமான ஒரு இறையியல் நூலாகும்.
கல்வினிசத்தின் அடிப்படைகள்
கல்வினிசம் வேதாகமத்தின் மீது மிக உயர்ந்த பார்வையைக் கொண்டுள்ளது. இறையியல் கோட்பாடுகளை வேதத்தின் அடிப்படையில் மட்டுமே உருவாக்க இது முயல்கிறது. இது தேவனின் இறையாண்மையை மையமாகக் கொண்டது. தேவன் தனது எல்லையற்ற அறிவு, எங்கும் நிறைந்துள்ள தன்மை மற்றும் தன்னுடைய வல்லமையால், தன்னுடைய படைப்பில் தான் விரும்பியவற்றைச் செய்ய வல்லவர் என்று இது கூறுகிறது.
கல்வினிசம் வேதாகமம் பின்வரும் கோட்பாடுகளை உள்ளடக்கியதாகக் கருதுகிறது:
-
தேவன் தன்னுடைய இறையாண்மையுள்ள கிருபையால் மக்களை இரட்சிப்பிற்கு முன்குறித்துத் தெரிந்தெடுக்கிறார்.
-
இயேசு பிதாவால் முன்குறித்துத் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களுக்காக மட்டுமே மரித்தார்.
-
தேவன் மனிதனுக்கு மறுபிறப்பை அளிக்கின்றார்; இதனால் அவன் தேவனை விசுவாசிப்பதற்கான திறனைப் பெறுகிறான்.
-
இப்படியாக இரட்சிக்கப்பட்டவர்கள் தங்கள் இரட்சிப்பை ஒருநாளும் இழக்க மாட்டார்கள்.
ஆர்மீனியனிசமும் கால்வினிசமும்
ஆர்மீனியனிசம், தேவன் முன்குறித்துத் தெரிந்தெடுத்தார் என்று கூறினாலும், அதை முழுமையான அர்த்தத்தில் நம்பவில்லை. மாறாக, தேவன் எதிர்காலத்தைப் பார்த்து, தன்னைத் தேர்ந்தெடுப்பவர்களைத் தேர்ந்தெடுத்தார் என்று அது கூறுகிறது. இயேசுகிறிஸ்து தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக மட்டுமல்லாமல், உலகில் வாழ்ந்த மற்றும் வாழப்போகும் அனைவரின் பாவங்களுக்காகவும் மரித்தார் என்றும் கூறுகிறது. மனிதன் தன்னுடைய சுய விருப்பத்தின் அடிப்படையில் இரட்சிப்பைத் தேர்ந்தெடுக்கிறான் என்று ஆர்மீனியனிசம் நம்புகிறது. மேலும், சில ஆர்மீனியர்களின் கருத்துப்படி, இரட்சிப்பைப் பெற்ற மனிதன் அதை இழக்க முடியும் என்றும் நம்புகிறார்கள் (எனினும், சில ஆர்மீனியனிஸ்டுகள் இரட்சிப்பை இழக்க முடியாது என்றும் நம்புகிறார்கள்).
மாறாக, கால்வினிசம் தேவனின் இறையாண்மையையும், அவர் முன்குறித்துத் தீர்மானித்த அனைத்தும் நிறைவேறும் என்பதையும் வலியுறுத்துகிறது. கால்வினிஸ்டுகள் வேதத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, அதன் அனைத்துக் கருத்துகளையும் ஒத்திசைக்க முயற்சிக்கிறார்கள். இதுவே மோனர்ஜிசம் (Monergism) எனப்படும் கோட்பாட்டை வலியுறுத்துகிறது. அதாவது, மனிதனின் இரட்சிப்பு தேவனின் செயலால் மட்டுமே நிறைவேறுகிறது (யோவான் 6:28-29; பிலிப்பியர் 1:29). மேலும், தேவன் அனுமதி அளிக்காத வரை உலகில் எதுவும் நடக்காது (எபேசியர் 1:11).
கல்வினிசம் தேவனைத் தீமையின் காரணகர்த்தாவாக (Author of Evil) ஆக்குகிறது என்று சிலர் விமர்சித்தாலும், கால்வினிஸ்டுகள் இதை விரைவாக மறுக்கின்றனர். தேவன் தீமையின் மீதும் இறையாண்மையைக் கொண்டிருப்பதாகவும், தனது நித்தியத் திட்டத்தில் தீமையைப் பயன்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
“அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன் குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.” (அப்போஸ்தலர் 4:27-28).
TULIP – கால்வினிசத்தின் ஐந்து முக்கியக் கோட்பாடுகள்
TULIP என்பது கால்வினிசத்தின் ஐந்து முக்கியக் கொள்கைகளைக் குறிக்கும் ஒரு சுருக்கமாகும்:
-
Total Depravity - மனிதனின் முழுமையான சீர்குலைவு (மனிதனின் இயலாமை அல்லது மூல பாவம் என்றும் அழைக்கப்படுகிறது).
-
Unconditional Election - நிபந்தனையற்றத் தெரிந்துகொள்ளுதல்.
-
Limited Atonement - வரையறுக்கப்பட்ட பாவநிவாரணம் (முன்குறிக்கப்பட்டவர்களுக்கான மரணம்).
-
Irresistible Grace - தவிர்க்கமுடியாத கிருபை.
-
Perseverance of the Saints - விசுவாசிகளின் விடாமுயற்சி (ஒருமுறை இரட்சிக்கப்பட்டவர் எப்போதும் இரட்சிக்கப்பட்டவர்).
இந்த ஐந்து கொள்கைகள் மட்டுமே கால்வினிசம் கிடையாது; ஆனால் அதன் சில முக்கியக் கொள்கைகளை இவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இப்போது இவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
1. மனிதனின் முழுமையான சீர்குலைவு (Total Depravity)
பாவம் மனிதனின் அனைத்துப் பகுதிகளையும் பாதித்துள்ளது. இதயம், உணர்ச்சிகள், இச்சை, மனம் மற்றும் உடல் என மனிதனில் உள்ள அனைத்தும் பாவத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நாம் முற்றிலும் பாவத்தில் வீழ்ந்தவர்கள். இதற்குப் பொருள் ‘நாம் முடிந்த அளவு பாவிகள்’ (as bad as we could be) என்பதல்ல, மாறாக ‘நாம் முழுமையாகப் பாவத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம்’ என்பதாகும்.
மனித இயல்பை வெளிப்படுத்தும் வேதவசனங்களிலிருந்து இக்கோட்பாடு பெறப்பட்டது:
-
மனிதனின் இதயம் தீயது (மாற்கு 7:21-23), நோயுற்றது (எரேமியா 17:9).
-
அவன் பாவத்தின் அடிமை (ரோமர் 6:14-20).
-
அவன் தேவனைத் தேட மாட்டான் (ரோமர் 3:11).
-
அவனால் ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாது (1 கொரிந்தியர் 2:14).
-
அவன் தேவனுக்கு எதிரி (எபேசியர் 2:15) மற்றும் இயற்கையாகவே கோபத்தின் பிள்ளை (எபேசியர் 2:3).
கால்வினிஸ்டுகள் கேட்கும் முக்கியக் கேள்வி: "மனிதனின் உண்மையான இயல்பை முற்றிலும் கெட்டுப்போனதாகச் சொல்லும் வேதவசனங்களின் வெளிச்சத்தில், மனிதன் தேவனைச் சுயமாகத் தேர்ந்தெடுப்பது எப்படிச் சாத்தியமாகும்?" இதற்கான பதில்: "அவனால் முடியவே முடியாது. எனவே, தேவன் முன்னரே அவனைத் தெரிந்தெடுக்க வேண்டும்."
நமது வீழ்ச்சியடைந்த நிலையின் காரணமாக, நாம் நமது சொந்த விருப்பத்தால் அல்ல, தேவனின் இரக்கத்தால் மீண்டும் பிறக்கிறோம் (யோவான் 1:12-13). நாம் விசுவாசிப்பதற்குத் தேவையான வல்லமையைத் தேவனே வழங்குகிறார் (பிலிப்பியர் 1:29); விசுவாசம் என்பது தேவனின் கிருபை (யோவான் 6:28-29); தேவன் மக்களை நித்திய ஜீவனுக்காக நியமிக்கிறார் (அப்போஸ்தலர் 13:48); மேலும் தேவன் முன்னரே மக்களை முன்குறித்துத் தீர்மானிக்கிறார் (எபேசியர் 1:1-11; ரோமர் 8:29; ரோமர் 9:9-23).
2. நிபந்தனையற்றத் தெரிந்துகொள்ளுதல் (Unconditional Election)
தேவன் தனது முன்குறித்தலைத் தனிநபரில் அவர் காணும் எந்த நன்மையையும் அடிப்படையாகக் கொண்டு செய்யவில்லை. அவர் தனது இறையாண்மையான விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார் (எபேசியர் 1:4-8; ரோமர் 9:9-11). தனிநபருக்குள் இருக்கும் எந்தத் தகுதியையும் அவர் கருத்தில் கொண்டோ, அல்லது வரும் காலத்தில் இவர்கள் என்னைத் தேடுவார்கள் என்றோ தேவன் அவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. அவர்கள் முற்றிலும் தேவனின் இறையாண்மையுள்ள கிருபையின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும், சிலர் இரட்சிப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், மற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை (ரோமர் 9:15, 21).
3. வரையறுக்கப்பட்ட பாவநிவாரணம் (Limited Atonement)
இயேசு கிறிஸ்து தெரிந்தெடுக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே மரித்தார். அவரது சிலுவை மரணத்தால் ஏற்பட்ட கோபநிவாரணப் பலி உலக மக்களின் அனைத்துப் பாவங்களையும் போக்குவதற்குப் போதுமானதாக இருந்தாலும், அவர் அதைத் தெரிந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக்குகிறார். இயேசு தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் பாவங்களை மட்டுமே சுமந்தார்.
இந்தச் சத்தியத்திற்கு ஆதரவாகப் பின்வரும் வேதவாக்கியங்கள் மேற்கோளாகக் கொடுக்கப்படுகின்றன:
-
இயேசு கிறிஸ்து “பலருக்காக” மரணமடைந்தார் எனக் கூறப்படுகிறது (மத்தேயு 26:28).
-
யோவான் 10:11, 15-ன் படி, இயேசு ஆடுகளுக்காகவே (வெள்ளாடுகளுக்காக அல்ல - மத்தேயு 25:32-33) இறந்தார்.
-
யோவான் 17:9 – இயேசு ஜெபிக்கும்போது, தம்மிடம் கொடுக்கப்பட்டவர்களுக்காகவே பரிந்துரை ஜெபம் செய்கிறார்; உலகமெங்கும் உள்ள அனைவருக்காகவும் அல்ல.
-
அப்போஸ்தலர் 20:28 மற்றும் எபேசியர் 5:25-27 – கிறிஸ்து தம்மைத் திருச்சபைக்காகவே கொடுத்தார்.
-
எசாயா 53:12 – இயேசுவின் சிலுவை மரணத்தைப் பற்றிய தீர்க்கதரிசனம், அவர் “பலரின்” பாவங்களைத் தாங்குவார் எனக் கூறுகிறது; அனைவருடையதையும் அல்ல.
4. தவிர்க்கமுடியாத கிருபை (Irresistible Grace)
தேவன் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை இரட்சிப்பிற்கு அழைக்கும்போது, அவர்களால் அதை எதிர்க்க முடியாது. தேவன் அனைத்து மக்களுக்கும் சுவிசேஷ செய்தியை வழங்குகிறார்; இது ‘வெளிப்புற அழைப்பு’ என்று அழைக்கப்படுகிறது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு (இரட்சிப்பை உறுதியாக ஏற்படுத்தும்) உண்மையான ‘உள்மன அழைப்பை’ வழங்குகிறார். இந்த அழைப்பு பரிசுத்த ஆவியால் மறுபிறப்பையும், மனந்திரும்புதலையும் அவனுக்குள் கொண்டுவருகிறது. இதன் மூலம் அவர்கள் விருப்பத்தோடும் சுதந்திரமாகவும் தேவனிடம் வருகிறார்கள்.
ஆதார வசனங்கள்:
-
ரோமர் 9:16: ”ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.”
-
பிலிப்பியர் 2:12-13: தேவன் தனிநபரில் மீட்பைச் செயல்படுத்துகிறார்.
-
யோவான் 6:28-29: விசுவாசம் தேவனின் செயல் என்று அறிவிக்கப்படுகிறது.
-
அப்போஸ்தலர் 13:48: தேவன் மக்களை நித்திய ஜீவனுக்கு நியமிக்கிறார்.
-
யோவான் 1:12-13: ஒருவன் மறுபிறப்பை அடைவது அவனது விருப்பத்தினால் அல்ல, தேவனின் கிருபையால் என்கிறது.
5. விசுவாசிகளின் விடாமுயற்சி (Perseverance of the Saints)
இரட்சிக்கப்பட்டவர்கள் தங்கள் இரட்சிப்பை இழந்து போக முடியாது. பிதா தேர்ந்தெடுத்து, குமாரன் மீட்டு, பரிசுத்த ஆவி இரட்சிப்பைச் செயல்படுத்தியதால், இரட்சிக்கப்பட்டவர்கள் நித்தியமாகப் பாதுகாக்கப்படுகிறார்கள். அவர்கள் கிறிஸ்துவில் நித்திய பாதுகாப்பில் உள்ளனர்.
ஆதார வசனங்கள்:
-
யோவான் 10:27-28: இயேசு தன் ஆடுகள் ஒருபோதும் அழியாது என்று சொல்கிறார்.
-
யோவான் 6:47: இரட்சிப்பு நித்திய ஜீவன் என்று விவரிக்கப்படுகிறது.
-
ரோமர் 8:1: நாம் நியாயத்தீர்ப்பிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
-
1 கொரிந்தியர் 10:13: தேவன் நம்மை நாம் தாங்கக்கூடியதை விட அதிகமாகச் சோதிக்க மாட்டார் என்று வாக்குறுதி அளிக்கிறது.
-
பிலிப்பியர் 1:6: “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.”
ஹைப்பர்-கால்வினிசம் (Hyper-Calvinism)
ஹைப்பர்-கால்வினிசம் என்பது தேவனின் இறையாண்மையை அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தி, மனிதனின் பொறுப்பை நிராகரிப்பதாகும். இது வரலாற்றில் உள்ள உண்மையான கால்வினிசக் கொள்கைகளுக்கு எதிரானது. ஹைப்பர்-கால்வினிசம்:
-
சுவிசேஷ அழைப்பு அனைவருக்குமானது என்பதை மறுக்கிறது.
-
இயேசுவை மனம்திரும்பி விசுவாசிப்பது ஒவ்வொரு பாவியின் கடமை என்பதை மறுக்கிறது.
-
தேர்ந்தெடுக்கப்படாதவர்களுக்கு சுவிசேஷத்தை மறுக்கிறது.
-
தேவனின் இரட்சிக்கும் கிருபை பொதுவானது மற்றும் இலவசமானது என்பதை மறுக்கிறது.
உண்மையான கால்வினிஸ்டுகள் ஹைப்பர்-கால்வினிஸ்டுகளுடன் உடன்படுவதில்லை.
முடிவுரை (Conclusion)
இறுதியாக, TULIP என்பது கால்வினிசத்தின் ஐந்து முக்கியக் கோட்பாடுகளைச் சுருக்கமாக விளக்கும் வார்த்தையாகும்: மனிதனின் முழுமையான சீர்குலைவு, நிபந்தனையற்றத் தெரிந்துகொள்ளுதல், வரையறுக்கப்பட்ட பாவநிவாரணம், தவிர்க்கமுடியாத கிருபை மற்றும் விசுவாசிகளின் விடாமுயற்சி. இவை கால்வினிசத்தின் முக்கியமான ஐந்து புள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன.